Friday, 4 August 2017

காஞ்சி ஸ்ரீகாமாட்சி..!!


ப ஞ்சபூத சக்தி பீடங்களில், காஞ்சிபுரம் ஆகாயத் தலம். பஞ்சபூதத் தலங்களில் ‘ப்ருத்வி’ (மண்) தலம் இது. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து சுமார் 62 கி.மீ. தொலைவில் உள்ளது காஞ்சிபுரம். செங்கல்பட்டிலிருந்து சுமார் 35 கி.மீட்டர்; அரக்கோணத்திலிருந்து 28 கி.மீ. தொலைவு.
 ஒட்டியாண பீடமான காஞ்சி, சக்தி பீடங்களில் முக்கியமானது. இடுப்பில் அணியும் அணிகலனை ஒட்டியாணம், காஞ்சி, மேகலை என்பர். தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயணி, யாகத் தீயில் பாய்ந்து, தன் ஸ்தூல உடலை நீத்தாள். அவள் சரீரத்தைத் தலை மீது வைத்து சிவன் ஆடி னார். அப்போது அம்பிகையின் திருமேனி சிதறி விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. அதில் அன்னையின் நாபி விழுந்த இடம் காஞ்சி.
 காஞ்சிக்கு பிரம்மபுரம், காஞ்சினபுரம், விஷ்ணுபுரம், சிவபுரம், காமபீடம், கன்னிகாப்பு, ஆதி பீடம், மும்மூர்த்தி வாசம், தண்டீகபுரம், துண்டீரபுரம், புவனசாரம், கலிசித்து, லயசித்து, சகல ஸித்திபுரம், பிரளயசித்து, விண்டுபுரம், தபோமயம், கச்சி, சத்தியவிரத க்ஷேத்திரம் ஆகிய பெயர்களும் உண்டு. ஒரு காலத்தில் இங்கு செண்பக மரங்கள் நிறைந்திருந்ததால் இதை ‘செண்பக வனம்’ என்றும் அழைத்தனர்.
நீ ஆதிசங்கரர் காஞ்சியிலேயே தங்கியிருந்து இறுதிக் காலத்தில் அன்னை காமாட்சியின் திருவடியை அடைந்ததால், இது ‘மோட்சபுரி’ எனப்பட்டது.
 முக்தி தரும் திருத்தலங்களான அயோத்தி, மதுரா, காசி, மாயா, அவந்திகா, துவாரகை, காஞ்சி ஆகியவற்றுள் காஞ்சி மட்டுமே தென்னாட்டில் உள்ளது. இது, மற்ற தலங்களை விட மேன்மை பெற்றது.
 புஷ்பேஷ§ ஜாதி புருஷேஷ§ விஷ்ணு! நாரிஷ§ ரம்பா! நகரேஷ§ காஞ்சி! ‘நகரம் எனில், அது காஞ்சிதான்’ என்று காளி தாசனால் சிறப்பிக்கப்பட்ட ஊர்.
 கிருத யுகத்தில் அமிருத ரூபமாகவும், திரேதா யுகத்தில் பால் ரூபமாகவும், துவாபர யுகத்தில் நெய் ரூபமாகவும், கலி யுகத்தில் ஜல ரூபமாகவும் விளங்குவது இந்தத் தலம். புண்ணியம் தரும் பாலாறு இங்கு ஓடுகிறது.
 புண்ணிய கோட்டம், ருத்ர கோட்டம், குமர கோட்டம், காம கோட்டம் ஆகிய நான்கு பகுதிகளைக் கொண்டது காஞ்சி. புண்ணிய கோட்டத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாளும், ருத்ர கோட்டத்தில் ஏகாம்பரநாதரும், குமர கோட்டத்தில் சுப்பிரமணியரும் காம கோட்டத்தில் ஸ்ரீகாமாட்சியும் அருள் பாலிக்கின்றனர்
 சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள் ஆகியோர் அன்னையின் தனிப்பெருங் கருணையைப் போற்றிப் புகழ்ந்து பல பாடல்களை இயற்றியுள்ளனர்.
 சேலம் ஸ்கந்தாஸ்ரம சத்குரு ஸ்ரீசாந்தா னந்த ஸ்வாமிகள், ஞானத்தைத் தந்தருளி தம்மை உயர்த்தியது காமாட்சியின் பெருங்கருணையே என்று உளம் உருகிக் கூறியுள்ளார்.
 எல்லைதீர் காஞ்சியுள்ளார் யாவரும் முனிவர் அங்கண்கல்லெல்லாம் லிங்கம் சீதனப்புனலெல்லாம் கங்கை சொல்லும்சொல்லெல்லாம் மனுக்கள் கைகால் தொழிலெல்லாம் விடையோன் ஏவல்  செல்லாந்த கைத்தன் நம்ம தென்திசைக் கிழவற்கவ்வூர்
எனக் காஞ்சியின் மேன்மையைச் சொல்கிறது பழம் பாடல் ஒன்று. ‘காஞ்சி யில் உள்ளோர் முனிவர்களே. அதன் கற்களெல்லாம் லிங்கமே. நீரெல்லாம் கங்கையே. அங்கு சொற்களெல்லாம் மந்திரங்களே. தொழில்களெல்லாம் இறைப் பணியே! ஆகையால் காஞ்சி, எமன் நுழைவதற்கு உரித்தன்று’ என் கிறது இந்தப் பாடல்.
 காஞ்சியில் உள்ள அனைத்துக் கோயில்களும் காமாட்சியம்மன் கோயிலை நோக்கி அமைந்துள்ளன. இந்த ஆலயங்களின் உற்சவ மூர்த்திகள் விழாக்களின்போது, காமாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி வரும் வழக்கம் உள்ளது.
 ஒரு காலத்தில் சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி, புத்த காஞ்சி, ஜைன காஞ்சி என்று காஞ்சிபுரம் நான்காகப் பிரிக்கப்பட்டிருந்தது. சிவ காஞ்சிதான் இன்றைய பெரிய காஞ்சிபுரம்; விஷ்ணு காஞ்சி- இன்றைய சிறிய காஞ்சி; புத்த காஞ்சி என்று அழைக்கப்பட்ட பகுதி பெரிய காஞ்சியிலேயே அடங்கி விடுகிறது. காஞ்சியை அடுத்துள்ள திருப்பருத்திக் குன்றம் ஜைன காஞ்சி. அதன் அடையாளமாக, அங்கு ஜைனர்களின் கோயிலும் அதைச் சுற்றி ஜைனர்களின் இல்லங்களும் உள்ளன.
 ஸ்ரீகாமாட்சிதேவி, தேவர்களது பிரார்த் தனைக்கு இணங்க, பண்டாசுரனை அழிக்க பிலத் துவாரத்தில் (அம்பிகையின் கருவறை) இருந்து தோன்றினாள் என்கிறது தல புராணம். அது கிருத யுக ஆரம்பம்.
 பண்டாசுரன் வதத்துக் குப் பின், அம்பாளின் கட்டளைப் படி, காயத்ரி மண்டபத்தை நிர்மாணித்து, அம்பாளின் கன்யா ரூபமாகிய பிம்பத்தை பிரதிஷ்டை செய்தனர் தேவர்கள்.
பிறகு அந்த மண்டபத்தை அடைத்து, இரவு முழுவதும் அம்பிகையை ஸ்தோத்தரித்தபடி வெளியில் நின்றனர். அருணோதய காலத்தில் கதவைத் திறந்த தேவர்கள், கன்யா ரூபமான, பிம்பத்துக்கு பதில், அம்பிகை சகலாபரண பூஷிதையாக, மலர்ந்த முகம் மற்றும் சதுர்புஜங்களுடன் பத்மாசினியாக அமர்ந்திருப்பதைக் கண்டனர். இன்று நாம் தரிசிக்கும் ஸ்ரீகாமாட்சி, இப்படித் தோன்றி யவளே!
 இந்த க்ஷேத்திரத்தில் ஸ்ரீகாமாட்சியை நோக்கி தவம் இருந்த பிரம்மா, ஈசனுடன் அம்பிகையை தரிசிப்பதற்காக அவர்களுக்குத் திருக்கல்யாண மகோத்சவம் புரிய அருள் வேண்டினார். அதற்கு இணங்கி, தன் நெற்றிக் கண்ணிலிருந்து தேஜோ மய மாக ஏகாம்பிகையை ஆவிர்பவிக்கச் செய்தாள் ஸ்ரீகாமாட்சி. ஏகாம்பிகையை தரிசித்த பிரம்மன், அவளைப் போல் சொர்ண விக்கிரகம் செய்து, பங்குனி உத்திரத்தில் கல்யாண மகோற்சவம் நிகழ்த்தி காமகோடி பீடத்தில் எழுந்தருளச் செய்தார். அவள் பங்காரு காமாட்சி எனப்பட்டாள்.
கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் முகம்மதியர் படை எடுப்பிலிருந்து இந்தப் பங்காரு காமாட்சியைக் காப்பதற்காக, அப்போதைய பீடாதிபதி ஸ்ரீசந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், கோயில் அர்ச்சகர் துணையுடன் உடையார்பாளையம் ஜமீனுக்குக் கொண்டு சென்றார். அப்போது தஞ்சையை மன்னரான பிரதாப சிம்மனது விருப்பப்படி சில காலம் ஸ்வாமிகள் தஞ்சையில் தங்கியிருந்தார். பங்காரு காமாட்சி அம்மன் விக்கிரகத்தை தஞ்சையில் மன்னரால் கட்டப்பட்ட ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர். காஞ்சியில் பூஜித்த அர்ச்சகர்களில் ஒரு பிரிவினரே, இங்கும் குடியேறினார்கள். சியாமா சாஸ்திரிகள், இந்த மரபைச் சேர்ந்தவர். பங்காரு காமாட்சி சொக்கத் தங்கத்தால் ஆனவள்.
 ஈஸ்வர அவதாரமான ஸ்ரீஆதிசங்கரர், பாரத தேசம் முழுவதும் நடைபயணம் மூலம் மும்முறை யாத்திரை செய்து, ஷண்மதங்களை (ஆறு வகை வழிபாடு) ஸ்தாபித்து அத்வைதத்துக்குப் புத்துயிர் ஊட்டினார். நான்கு திக்குகளிலும், நான்கு மடங்களை ஸ்தாபித்தார் ஆதிசங்கரர். காஞ்சியில் காமாட்சியின் முன்பாக ஸ்ரீசக்ர யந்திர பிரதிஷ்டை செய்தார். காஞ்சியை ஆண்ட ராஜசேனன் என்ற சோழ அரசனது வேண்டுகோளின்படி சர்வக்ஞ (சகல கலைகளும் அறிந்தவர்) பீடம் ஏறினார் ஆதிசங்கரர். பின்னர் அவர், காஞ்சி அரசனிடம், அம்பாள் கோயிலை மத்தியில் வைத்து ஸ்ரீசக்ர வடிவில் காஞ்சியை புனர் நிர்மாணம் செய்யுமாறு சொன்னார்.
 ஸ்ரீகாமாட்சியை வழிபட்ட ஆதிசங்கரர் தனது 32-வது வயதில் ரக்தாக்ஷி வருஷம், வைகாசி மாதம், வளர்பிறை ஏகாதசியில், காஞ்சியில் முக்தி அடைந்தார். ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் ஆதிசங்கரருக்கு தனிச் சந்நிதியும் உற்சவர் சிலையும் உண்டு.
 முதல் பிராகாரத்தில் ஸ்ரீஆதி சங்கரர் யோகாசனத்தில் தியான நிலையில் அமர்ந்துள்ளார்.
 ஒரு முறை கம்பா நதிக் கரையில், மணலால் சிவலிங்கம் பிடித்து பூஜித்தாள் காமாட்சி. அப்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ‘சிவலிங்கத்தை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமோ!’ என்று திகைத்த காமாட்சி அம்மன் காரடை யான் நோன்பு இருந்து லிங்கத்தைக் காப்பாற்றினாள். லிங்கத்தில் இருந்து தோன்றி அம்பிகைக்குக் காட்சி கொடுத்த சிவமூர்த்தி, அவள் கரம் பற்றினார். இங்கு காரடையான் நோன்பு சிறப்பானது.
 ஆதி சக்தியை ராஜராஜேஸ்வரியாக, காஞ்சி யில் ஸ்தாபித்து பூஜித்தவன் பிரம்மன். கும்பாபிஷே கம் முடிந்ததும் மகிழ்ச்சியில் தாமரைப்பூ ஒன்றை வான் நோக்கி எறிந்தான். அது ஒரு மானுடனாகி பிரம்மனை வணங்கியது. ஆகாசத்தில் இருந்து பூமிக்கு வந்தவனுக்கு ‘ஆகாச பூபதி’ என்று பெயரிட்டான் பிரம்மன். அவனிடம் காஞ்சி மாநகர ஆட்சியைக் கொடுத்தான்.
அவன் குழந்தைப் பேறுக்காக வேண்ட, விநாயகரை அவனுக்கு மகவாக அளித்தாள் ஸ்ரீகாமாட்சி. அந்தக் குழந்தையின் தற்போதைய பெயர் துண்டீரன். அவனது நாமகரண விழாவின்போது சுமங்கலி போஜனத்தில் தேவியும் வந்து உணவு உண்டாள். விநாயகர் அவளை நோக்கித் தவழ அன்னை மறைந்தாள். ஆனால், பிரசாதமாகக் காஞ்சி நகர் முழுவதும் தங்க மழை பெய்வித்தாள். காரணம்: ஆகாசபூபதியின் மனைவி விருந்துக்கான பொருட்களின் தரத்தைச் சோதித்தபோது பயத்தம் பருப்பில் கை நுழைத்துத் துழாவினாள். அப்போது அவள் கை விரல் மோதிரத்தில் இருந்த ஒரு தங்க முத்து உள்ளே விழுந்து விட்டது. அது பயத்தம் பருப்பு மோதகத்தில் தங்கி, பராசக்தியின் வயிற்றில் போய் விட்டது. தனக்குத் தங்க முத்துக் கொடுத்த காஞ்சிக்கு தங்க மழை கொடுத்தாள் காமாட்சி. துண்டீரன் ஆட்சி புரிந்தமையால், இந்தப் பகுதி தொண்டை மண்டலம் எனப்பட்டது.
இந்தக் கோயிலில் உற்சவ காமாட்சி சந்நிதிக்கு எதிரே அவளைத் தொழுதபடி நின்ற கோலத்தில் துண்டீர மகாராஜா இடம் பெற்றுள்ளார். உற்சவ காமாட்சி சந்நிதியில் இருந்து துண்டீர மகாராஜா சந்நிதி வரை மௌனமாகச் செல்லா விட்டால் துண்டீரரின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது ஐதீகம்.
 ஒரு முறை காஞ்சி காமாட்சியை பூஜிக்க வந்த பிரம்மனுக்கு காயத்ரி மண்டபத்தில் பாதம் பதித்து நின்றதால் பார்வை மங்கியது. பிறகு, கலைவாணியின் ஆலோசனைப்படி கோயிலுக்குள் சென்று ஸ்ரீசக்ர பூஜை செய்து பார்வை பெற்றான். மேலும் அவன் வேண்டியபடி, ஸ்ரீசக்ரத்தை வணங்கும் பக்தர்கள் எந்த பாவத்துக்கும் ஆளாகாமல் இருக்கும் வரத்தையும் அன்னை காமாட்சி அளித்ததாகப் புராணம் கூறுகிறது.
 ஸ்ரீகாமாட்சி, பண்டாசுரனை சம்ஹரித்து அவன் பிரேதத்தை தேவர்களிடம் ஒப்படைத்து, அவனைப் புதைத்து அந்த இடத்தில் ஜய ஸ்தம்பம் ஒன்றை நட ஆணையிட்டாள். அதன்படி, தேவர்கள் தோண்டிய பள்ளத்தில் மல்லகன் எனும் அசுரன் தோன்றி எதிர்த்தான். அவனை சம்ஹரிக்க விஷ்ணுவை வேண்டினர். விஷ்ணு, மல்லகனுடன் போரிட, அவன் உடலிலிருந்து விழும் ரத்தத் துளிகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு அசுரனாக உருப்பெற்றதைக் கண்டு, திகைத்து ஈசனை வேண்டினார். உடனே அங்கு தோன்றிய ஈசன், தன் தலையிலிருந்து இரண்டு சடையை எடுத்து, தரையில் அடிக்க, அதிலிருந்து ஆண், பெண் என இரு பூத கணங்கள் தோன்றி, அசுர உடலிருந்து, வரும் ரத்தத்தைப் பருகின. இதனால் அசுர உற்பத்தி தடைப்பட்டதால், விஷ்ணு, மல்லகனை சம்ஹரித்தார். அதன் பிறகும் பூத கணங்கள் அடங்கவில்லை. விஷ்ணு அவற்றைக் கீழே தள்ளி, அவற்றின் மேல் ஏறி, நின்றும் அமர்ந்தும் பார்த்தார். இறுதியில் அவற்றின் மேல் சயனித்தார் மகாவிஷ்ணு. பூத கணங்கள் தெளிவடைந்து, தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கோரின.
விஷ்ணு, ‘‘அசுர ரத்தம் பருகியதால், அசுர குணத்தால் என்னை எதிர்த்தீர்கள். நானோ, ஈசன் அனுப்பிய உங்களை மிதித்து அபவாதம் செய்தேன். இதற்குப் பரிகாரத்தை ஈசனிடமே கேட்போம்’’ என்றார். அங்கு தோன்றிய ஈசன், தனது ஐந்து ஜடைகளைப் பிரித்துவிட்டு, கங்கையைப் பொழியச் செய்தார்.
அதுவே பஞ்ச தீர்த்தம். அதில் நீராடி விஷ்ணுவும், பூதங்களும் பாவம் நீங்கப் பெற்றனர். இந்தத் தீர்த்தத்தின் அருகில் நின்ற- அமர்ந்த- சயனித்த கோலங்களில் பூத நிக்ரஹ பெருமாளும், தீர்த்தத்துக்குக் காவலாக ஆண்- பெண் பூதங்கள் இரண்டும் இருக்கின்றன. இங்கு வெள்ளிக் கிழமைகளில் நீராடுதல் சிறப்பு.
 பிரகலாதன், விபீஷணன், பரசுராமன், அர்ஜு னன், அஸ்வத்தாமன் ஆகியோர் இங்குள்ள சர்வதீர்த்தக் குளத் தில் நீராடி பாவம் நீங்கப் பெற்றனர்.
 காஞ்சி ஸ்ரீகாமாட்சி திருக்கோயி லின் ஸ்தல விருட்சம்- காஞ்சி.
 காமாட்சி திருக்கோயிலை ‘திசை மயக்கும் கோயில்’ என்றும் கூறுவர். கோயிலின் உட்புறம் ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு திசையில் அமைத்துள்ளது. இங்கு நேர் கிழக்கில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் சந்நிதியை வைத்தே திசையை அறியலாம்.
 இந்தக் கோயிலின் சிறப்பு அம்சம், முக்கோண வடிவ கருவறையும் மூன்றரைச் சுற்றுப் பிராகாரமும்! ஸ்ரீசக்கரத்தில் பிந்து மண்டல வாசினி யாக முக்கோணத்தில் உறைபவள் என்ப தால் அவள் கருவறை முக்கோண வடிவமானது. குண்டலினி என்கிற ஜீவசக்தி உடம்பில் மூன்றரை அங்குலச் சுற்றுப் பாம்புபோல் கிடக்கிறது என்பதால், மூன்றரைச் சுற்றுப் பிரகாரம் அமைந்துள்ளது. அம்ம னின் கருவறையை வலம் வர இயலாது. நீ அம்மன் கோயிலின் இரு புறமும் வரதராஜரும், ஏகாம்பரநாதரும் கோயில் கொண்டுள்ளது, மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை நினைவுபடுத்துகிறது. இந்த இரு கோயில்களும் பெரிதாக இருந்தாலும் காமாட்சி கோயிலில் மட்டுமே நான்கு ராஜ கோபுரங்கள் இருக்கின்றன. அதேபோல், குமார கோட்டம் மற்றும் ஏகாம்பரநாதர் கோயில்களின் அமைப்பு ‘சோமாஸ்கந்த மூர்த்தி’யை நினைவுபடுத்துகிறது.
 காமாட்சி கோயில் அருகில் ஒரு பக்கம் வேகவதி ஆறு; சுமார் 2 கி.மீ. தூரத்தில் பாலாறு.
 ஆதிசங்கரர், அச்சுதராயர், பராக்கிரம பாண்டியன், சம்புவராயர், சதாசிவதேவமகா ராயர் ஆகியோர் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர்.
 காமாட்சி கோயில் மொத்தம் 4 ஏக்கர், 16 செண்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ஹரிஹரன் என்ற விஜய நகர மன்னர் கி.பி. 1392-ல் கோயில் விமானத்துக்கு தங்கத் தகடு வேய்ந்து கும்பாபிஷேகம் செய்வித்ததாகவும், அச்சுததேவ ராயர் என்ற மன்னர் இந்தக் கோயிலுக்கு சில கிராமங்களை மானியம் அளித்ததாகவும் கல்வெட்டுகள் கூறுகின்றன.
இந்தக் கோயிலில் தரிசிக்க வேண்டிய தெய்வங்கள்: பிள்ளையார், ஸ்ரீகாமாட்சி சந்நிதி, ஸ்ரீசக்கரம், தபஸ் காமாட்சி, பிலாகாசம், அரூப லட்சுமி, வராஹி, சந்தான ஸ்தம்பம், அர்த்தநாரீஸ்வரர், ரூப லட்சுமி, கள்வர் பெருமாள், அன்னபூரணி, சியாமளாதேவி, பூர்ணை- புஷ்கலையுடன் தர்மசாஸ்தா, ஆதிசங்கரர், துர்வாச முனிவர், உற்சவ காமாட்சி, துண்டீர மகாராஜா, மகா சரஸ்வதி, தர்மஸ்தம்பம், காசி கால பைரவர், துர்கை, காசி விஸ்வநாதர், பஞ்ச கங்கை, பூத நிக்ரஹ பெருமாள், அகத்தியர் மற்றும் ஹயக்ரீவர்.
 காஞ்சி ஆலய கோபுர வாயிலையட்டி உள்ள முன் மண்டபத்தில் நெமிலி குழந்தை பாலா திரிபுர சுந்தரியின் படம் உள்ளது.
 இந்தக் கோயிலில் உள்ள அஞ்சன காமாட்சி மற்றும் சௌந்தர்ய லட்சுமி ஆகியோர் சந்நிதிகள் சிறப்பானவை. ஒரு முறை வைகுந்தவாசனும் மகாலட்சுமியும் கிண்டலும் கேலியுமாக உற்சாகத் துடன் பேசிக் கொண்டிருந்தனர். ‘‘என்ன இருந்தா லும் நீங்கள் கறுப்புதானே? உங்கள் மீது யார் ஆசைப் படுவார்கள்?’’ என்றாள் லட்சுமி. மகாவிஷ்ணு கோபப்படவில்லை. ‘‘உண்மைதான். பிறகு ஏன் நீயாக வந்து, எனக்கு மணமாலை சூட்டினாய்?’’ என்று கேட்டார். ‘‘பாற்கடல் என் பொன்வண்ணம் பட்டு, ஜோதிமயமாகி விட்டது. அதில் உங்கள் உடம்பு தங்கமாக ஜொலித்தது. அதில் மதிமயங்கி, மாலை போட்டு விட்டேன்!’’ என்றாள் லட்சுமி. மகாவிஷ்ணுவுக்குக் கோபம் வந்தது. ‘‘லட்சுமி! நீ மதிமயக்கம் கொண்டது அன்றில்லை, இன்றுதான். உன் அழகல்லவா உன்னை இப்படி பேச வைத்தது! நீ இப்போதே அழகை இழந்து, பூவுலகில் திரியக் கடவாய்!’’ என்று சாபமிட்டார். மணவாளனிடம் மன்னிப்புக் கேட்ட மகாலட்சுமி, அவரிடம் சாப விமோசனம் வேண்டினாள்.
அவரோ, ‘‘காஞ்சி காமாட்சியை பூஜை செய். உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்!’’ என்றார். அதன்படி காஞ்சிக்கு வந்து காமாட்சியை எண்ணி, கடுந் தவத்தில் ஆழ்ந்தாள் திருமகள். அவள் முன் காட்சி தந்த காமாட்சி, கறுத்த நிறத்துடன் களையிழந்திருந்த லட்சுமியை, ‘அஞ்சன காமாட்சி’ என்று அழைத்தாள்.
மேலும், ‘‘நீ இந்த வடிவிலேயே எனக்கு இடப் பக்கம் இரு. பக்தர்கள், எனது குங்குமப் பிரசாதத்தை உடனே இட்டுக் கொள்ளாமல், உன் திருமேனி முழுவதும் தடவி விட்டு, பிறகு இட்டுக் கொள்வர். பழையபடி நீ மிகுந்த அழகாகி விடுவாய்! அந்த வடிவத்துடன் நீ என் வலப் பக்கம் இரு. பக்தர்கள் உன் திருமேனியைத் தீண்டி, உன் பாதத்தைத் தொடும் பாக்கியத்தையும் அடையட்டும். அவர்களுக்கு நீ சகல செல்வங்களையும் வழங்கு!’’ என்றாள் காமாட்சி.
அதன்படி சாப விமோசனம் பெற்று தங்க நிறம் பெற்றாள் லட்சுமி.
‘என்ன நடக்கிறது?’ என்று அறிய திருமால் அங்கு வந்தார். அம்பிகை, ‘‘வாராய் கள்ளா!’’ என்றாள். மாதவனும் லட்சுமியும் ஒன்று கூடினர். அஞ்சன காமாட்சி, சௌந்தர்ய லட்சுமி ஆகியோருடன் விஷ்ணுவையும் இங்கே தரிசிக்கலாம்.
 காமாட்சியம்மனின் கருவறை முன் மண்டபத்தின் தென்புறம் வராஹி அம்மன் எழுந்தருளியிருக்க, அவள் எதிரே சந்தான ஸ்தம்பம் உள்ளது. இதை வலம் வந்து வழிபாடு செய்யும் தம்பதிக்கு வம்ச விருத்தி ஏற்படும் என்பது நம்பிக்கை.
 108 திவ்ய தேசத்தில் ஒரு திவ்ய தேசம், அம்பாளின் வலப் புறத்தில் இருக்கும் கள்வர் பெருமாள். இந்தப் பெருமாளுக்கு திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
 தெற்கு கோபுரத்தின் அருகில் நவராத்திரி மண்டபம் உள்ளது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் இங்கு அம்பிகை வழிபாடு கோலாகலமாக நடைபெறும்.
 கோயிலின் மேற்கு மற்றும் வடக்கு கோபுரத்தின் இடையில் கணு மண்டபம் உள்ளது. அம்பாள் பொங்கல் திருநாளுக்கு முன் பத்து நாட்கள் கணு மண்டபத்தில் காட்சியளிப்பாள். காணும் பொங்கல் அன்று மண்டபத்தைச் சுற்றி காய்- கனிகளால் அலங்கரித்து அம்பாளுக்கு அபிஷேக- ஆராதனை செய்யப்படும். அன்றைய தினம் பாத வடிவில் பிரதிஷ்டை ஆகி இருக்கும் பங்காரு காமாட்சிக்கு முழுத் தேங்காயை நைவேத்யம் செய்வார்கள்.
 கோயிலுக்குள் நுழைந் ததும் கொடிமரம், சிம்மம் ஆகியவை உள்ளன. அபிஷேகத் தீர்த்தக் கிணறு ஒன்றும் உள்ளது. இதன் அருகில் சுக்ர வார மண்டபம் உள்ளது. அம்பாள் திருவீதி உலா அல்லது தங்க ரத உலா முடிந்ததும், இங்கு அமர்வது வழக்கம்.
 காம கோட்ட வெளி வாயிலுக்கு எதிரில் ‘ஞானக் கூபம்’ என்ற ஆழ்கிணறும் பஞ்சமூர்த்தி கள் உண்டாக்கிய உலகாணி தீர்த்தமும் உள்ளன.
நீமன்னன் அச்சுத ராயன் கி.பி. 1534-ல் பெற்ற வெற்றியை நினைவூட்டும் வண்ணம் காமாட்சியம்மன் திருக்கோயிலுக்கு எட்டு ஊர்களை நிவந்தம் அளித்ததாக இங்குள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
 அயோத்தி மன்னன் தசரத சக்ரவர்த்தி புத்திர பாக்கியம் வேண்டி, தீர்த்த யாத்திரை வரும்போது காஞ்சி காமாட்சியை வழிபட்டார். அப்போது இங்குள்ள சந்தான ஸ்தம்பத்திலிருந்து, அசரீரியாக ‘உனக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்!’ என்று அம்பாள் கூறினாளாம். இந்த சந்தான ஸ்தம் பத்தை பிரதட்சணம் செய்தால், வம்சம் தழைக்கும் என்பது ஐதீகம். இதற்கு எதிரே கணபதி சந்நிதி.
 இங்கு வந்த அகத்தியர், ஸ்ரீஹயக்ரீவரை குருவாக ஏற்றார். அகத்தியருக்கு ஸ்ரீலலிதாம்பிகை மந்திரத்தை உபதேசித்தார் ஸ்ரீஹயக்ரீவர். ராஜ கோபுரத்தில் இந்த இருவரும் குரு- சிஷ்ய பாவத்துடன் தியான நிலையில் உள்ளனர்.
 காயத்ரி மண்டபத்துக்குச் செல்லும் வழியில் சந்நிதி கொண்டிருக்கும் அன்னபூரணிக்கு ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும். இந்தச் சந்நிதியில் தர்ம துவாரம், பிக்ஷத் துவாரம் ஆகியன உள்ளன. அன்னபூரணியை வணங்கி பிக்ஷத் துவாரத்தின் வழியாக ‘பகவதி பிக்ஷ£ம் தேஹி’ என்று கையேந்திப் பிச்சை கேட்டு வழிபட்டால், உணவுப் பஞ்சம் வராது.
 கரிகால் பெருவளத்தான் இமயத்தை நோக்கி படையெடுத்துச் செல்லும் முன் காஞ்சிபுரத்தில் தங்கி, கோயில் திருப்பணிகளை மேற்கொண்டதாகவும், அதன் பயனாக இமயத்தில் புலிக்கொடியை நாட்டியதாகக் கூறப்படுகிறது.
 ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயத்தில் ஸ்தம்ப பிரதிஷ்டா விநாயகர், விக்ன நிவாரண கணபதி, இஷ்ட சித்தி விநாயகர், சௌபாக்கிய கணபதி, சந்தான கணபதி, திருமஞ்சன விநாயகர், ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆகிய சந்நிதிகளைக் காணலாம்.
 இங்கு பஞ்ச காமாட்சிகள் இருப்பதாக ஐதீகம். நான்கு காமாட்சி விக்கிரகங்களுடன் ஐந்தா வது காமாட்சியின் பாதம் மட்டுமே உண்டு.
மூலஸ்தான காமாட்சி: அனைவரும் தரிசிக்கும் இடம். இங்கு அபிஷேக- ஆராதனைகள் நடை பெறுகின்றன.
அடுத்ததாக தபஸ் காமாட்சி. சிவபெருமானை வேண்டி அன்னை காமாட்சி தவம் செய்த இடம். இது மூலஸ்தானத்துக்கு அருகிலுள்ள சிறிய சந்நிதி.
அடுத்தது பிலாகாஸ காமாட்சி. ஸ்ரீகாமாட்சியின் திவ்விய வடிவை இங்கு தரிசிக்கலாம். இந்த வடிவத்துக்கு முன்பு ஸ்ரீகாமாட்சி, ஆகாயத்தில் பிலாகாஸமாக பொந்து ஒன்றில் இருந்ததாகக் கூறுவர். அடுத்தது உற்சவ காமாட்சி. இந்த விக்கிரகத்துக்கு பிரம்மோற்சவம் நடை பெறுகிறது.
பங்காரு காமாட்சியின் சந்நிதி மேலே உள்ளது. அரூப லட்சுமி சந்நிதியும் உள்ளது.
 காமாட்சியின் அவதாரமே சிறப்பு வாய்ந்தது. ஆண்- பெண் கலவை இல்லாமல் தோன்றிய சக்தியின் அம்சம்.
 அசுரர்களை வதம் செய்து தேவர்களின் துன்பத்தைப் போக்க வந்த தேவி அங்குள்ள பிலம் (துவாரம்) ஒன்றில் தோன்றி, இன்ப ஆட்சி புரிகிறாள் என்று தல வரலாறு கூறுகிறது.
 கலைமகளையும், திரு மகளையும் கண்ணாக உடையவள் என்று பொருள்படும் காமாட்சி எனும் திருப்பெயர் (கா- சரஸ்வதி, மா- லட்சுமி, அட்சி- கண்ணாக உடையவள்). காம+ஆட்சி எனப் பிரித்து (காமம்- விருப்பம்), அடியார்கள் விரும்பியவற்றை வழங்குபவள் என்றும் பொருள் சொல்வர். காமாட்சி என்பதை க+ஆ+ம+ஆட்சி எனப் பிரித்து, க- பிரம்மனையும், அ- திருமாலையும், ம- ருத்திரனையும், ஆட்சி- கண்ணால் படைப்பவள் எனும் உண்மைப் பொருளை உணர்த்துகிறது என்றும் சொல்வர்.
 காமாட்சியின் கண்கள் திரிவேணி சங்கமம். கண்மணி கறுப்பு, விழிகளில் வெண்மை, அதில் ரத்தம் பாய்ந்த சிவப்பு ரேகைகள் என்று மூவர்ணமும் தெரியும். கறுப்பு, சிவப்பு, வெண்மை என்பது கங்கை, யமுனை, சோணபத்ரா ஆகிய நதிகளின் நிறங்களாகும்.
 காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி மூவரும் தங்கள் கண்களால் பக்தர்களுக்கு அபயம் அளிப்பவர்கள். அதனால் இங்கு அபய- வரத- ஹஸ்த முத்திரைகளை காண முடியாது.
 காயத்ரி மண்டபத்தின் நடுவே பஞ்ச பிரம்ம பீடத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை ஆசனமாகக் கொண்டு, நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனக் கோலத்தில் தென்திசை நோக்கி வீற்றிருக்கிறாள் ஸ்ரீகாமாட்சி.
 மன்மதனின் மலர்க் கணைகளான தாமரை, அசோகு, மா, மல்லிகை, நீலோத்பலம் ஆகிய ஐவகை மலர் அம்புகளையும், கரும்பு வில்லையும் கையில் தரித்து அன்னை காமாட்சி காட்சி தருகிறாள். ‘கரும்பு வில் நமது மனதைக் குறிப்பதால், அம்பாள் தன் மதுரமான மனதினால் வில்லைக் காட்டி நம்மை வசப்படுத்துகிறாள். ஐந்து புஷ்ப பாணங்களும் நம் ஐம்புலன்களை ஈர்த்து, செயலற்றுப் போவதற்காக ஏற்பட்டவை’ என்பது காஞ்சிப் பெரியவர் கூறிய விளக்கம்.
 மார்க்கண்டேய புராணத்தில் அமைந்துள்ள காமாட்சி விலாசம், பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்யானம், ஸ்காந்த மகா புராணத்தில் உள்ள காஞ்சி மகாத்மியம், தட்ச காண்டம், காஞ்சி புராணம் ஆகியவை தவிர ஏராளமான செவி வழிக் கதைகள் மற்றும் துதிப் பாடல்களால் சிறப்பிக்கப் பெற்றவள் ஸ்ரீகாமாட்சி.
 சிவபெருமான் அளித்த இரண்டு படி நெல்மணிகளைக் கொண்டு அன்னதானம், சுமைதாங்கி அமைத்தல், ஓதுவித்தல், ஊனமுற்றோருக்கு உணவு வழங்குதல், கண்நோய் அகற்றுதல், சிறுவர்களுக்கு சிற்றுண்டி வழங்குதல், பசுவுக்கு உணவு அளித்தல், பசுக்கள் தங்க இடம் அமைத்தல், பசுக்கள் பெருக உதவுதல், குழந்தைகளுக்கு பால் வழங்குதல், தர்ம திருமணம் நடத்துதல் உட்பட 32 வகை தர்மங்களைச் செய்ததால், காமாட்சிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற சிறப்புப் பெயர் உண்டு.
 கிருத யுகத்தில் துர்வாசர் 2000 ஸ்லோகங் களாலும், திரேதா யுகத்தில் பரசுராமர் 1500 ஸ்லோகங்களாலும், துவாபர யுகத்தில் தௌம்ய முனிவர் 1000 ஸ்லோகங்களாலும், கலி யுகத்தில் மூகர் 500 ஸ்லோகங்களாலும் காமாட்சியை துதித்துள்ளனர்.
 இந்தக் கோயிலில் மூலவர் அமர்ந்த கோலத்திலும் உற்சவர் நின்ற கோலத்திலும் அருள் புரிகிறார்கள். உற்சவ காமாட்சியின் அருகில் தோழி யாக லட்சுமியும், சரஸ்வதியும் உலா வருவார்கள். பௌர்ணமி அன்று இரவு அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
 ஸ்ரீகாமாட்சி விக்கிரகத் துக்கு எதிரில் உள்ள ஸ்ரீசக்ரத் துக்கே அர்ச்சனை, பூஜை, வழிபாடு எல்லாம். ஸ்ரீசக்ரத் தொட் டியில் புடைத்துக் காணப்படும் சிற்பத் தேவதைகளை அஷ்ட துர்கைகள் அல்லது அஷ்ட காளிகள் என்பர். ஸ்ரீசக்கரத்தில் வசினி, காமேசி, மோதினி, விமலா, அருணா, ஜயினி, சர்வேஸ்வரி, கௌலினி ஆகிய எட்டு தேவிகளையும் தரிசிக்கலாம்.
அம்பிகை அமர்ந்திருக்கும் உண்ணாழி மண்டபம், காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களின் உருவகமாக 24 தூண்கள் கொண்டது.
 சிறப்பு தரிசனத்தில் அம்மனை வணங்கச் செல்லும் ஆண்கள் மேலாடை அணியக் கூடாது.
 உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள், அரூப லட்சுமியை வழிபட்டு, அவளின் பிரசாதமான குங்குமத்தைத் தொடர்ந்து நெற்றியில் இட்டு வந்தால் பலன் நிச்சயம்.
 இங்கு ஸ்ரீகாமாட்சி வருவதற்கு முன்பிருந்தே சங்கர மடத்துக்கு அருகில், செழுங்கழு நீரோடை பிள்ளையார் கோயில் வீதியில் கோயில் கொண்டு அருள் புரிகிறாள் ஆதி காமாட்சி. அவசியம் தரிசிக்க வேண்டிய திருக்கோயில் இது.
 அமாவாசை, பௌர்ணமி, தமிழ் வருடப் பிறப்பு மற்றும் மாதப் பிறப்பு, பூரம் (அம்பாள் நட்சத்திரம்), வெள்ளிக் கிழமைகளில் தங்க ரத உற்சவம் நடைபெறும். இந்தத் தங்க ரதம் காஞ்சி மாமுனிவர் ஸ்ரீஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமி களால் வழங்கப்பட்டது. அம்பாளுக்கு வெள்ளி ரதமும் உண்டு.
 அழகிய பல்லக்கை விஸ்வகர்மாவும், முத்துக் கொண்டையை பிரம்மாவும், ஸ்ரீசக்ரமெனும் பதக்கத்தை சிவபெருமானும் அம்பாளுக்குத் தந்தருளி, அவளது அலங்காரத்தைக் கண் குளிரக் கண்டு வணங்கி, காஞ்சியிலேயே சாந்நித்யம் பெற்று விளங்கி, அனைவருக்கும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டினராம். அதற்கு அன்னையும் சம்மதித்தாளாம்.
 ருத்ரரின் அம்சமான துர்வாசர், தன் சீடர்களான விஸ்வாமித்ரர், பரத்வாஜர், கௌசிகர், காசியபர், அத்ரி, அகஸ்தியர் ஆகியோருடனும், அவர்களின் புத்ர சிஷ்யர்களு டனும் ஸ்ரீகாமாட்சியை தரிசித்து, ‘சௌபாக்ய சிந்தாமணி’ எனும் பூஜா விதிமுறைகளை ஏற்படுத்தி, காலம் காலமாக பூஜித்து வருவதற்குக் கட்டளையிட்டார். அந்த ஆறு கோத்திரக் காரர்களே இன்றும் அம்பாளை பூஜித்து வருகின்றனர்.
 காமாட்சியின் திருவடிகளில் நவக் கிரகங்கள் தஞ்சம் புகுந்திருப்பதாக ஐதீகம். எனவே, இவளை வணங்குபவர்களுக்கு நவக் கிரக தோஷம் ஏற்படுவதில்லை!
 ஆதிசங்கரருக்கே இங்கு முதல் மரியாதை. அவரது ஜயந்தி உற்சவம், இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆதிசங்கரரது அனுமதி பெற்றே அம்பாள் வீதி உலா வருவாள். அப்போது அம்பாளை நோக்கியபடி உலா வருவார் ஆதி சங்கரர்.
 ஆதிசங்கரரது சந்நிதிக்கு மேலே, குரு பரம்பரையான நாராயணர், பிரம்மா, வசிஷ்டர், சக்தி, பராசரர், வியாசர், சுகர், கௌடபாதர், கோவிந்தபகவத் பாதாள் ஆகியோரையும் தரிசனத்துக்கு ஏற்ற வகையில் அமைத்துள்ள னர். அனைவருக்கும் மேலே ஆதிகுருவான தட்சிணா மூர்த்தியையும் தரிசிக்கலாம்.
 காஞ்சி மடத்தில், ஆதிசங்கரரின் சிஷ்யப் பரம் பரையில் வருபவர்களே, ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் பரம்பரை தர்மகர்த்தா ஆவர்.
 காஞ்சி காமகோடி பீடாதி பதிகள் ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர ஸரஸ்வதி மஹா ஸ்வாமிகள். (68-வது பீடாதிபதி) 1942-ல் காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மனுக்கு மிகச் சிறப்பாக கும்பாபிஷேகம் செய்வித்து, தங்கத்தால் சஹஸ்ர காசு மாலை அணிவித் தார்கள்.
 ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், 1976-ல் கும்பாபிஷேகத்தை பிரமாண்டமாகச் செய்தார்.
 ஸ்ரீகாமாட்சி அம்பாளுக்கு தங்கக் கவசம், தங்க ஹஸ்தம், தங்கக் கிரீடம், தங்க வஸ்திரம் என அலங் காரம் செய்து, ஸ்ரீபங்காரு காமாட்சியாக்கி வழிபட்ட ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், அம்பாளின் மூலஸ்தான கோபுரத்தையும், ஆதிசங்கரரது சந்நிதி விமானத்தையும் தங்கத்தால் வேய்ந்தார். தன் சிஷ்யர் விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுடன், 1995-லும் ஸ்ரீகாமாட்சிக்கு சிறப்பாக கும்பாபிஷேகம் செய்தார்.
 வைரம் பாய்ந்த அரச மரம் ஒன்று காமாட்சி ஆலய பிராகாரத்தில் பல நூற்றாண்டு காலமாக இருந்தது. அதன் வேர்கள் கர்ப்பக்கிரகம் வரை ஊடுருவி விட்டது. மரத்தை வெட்ட மனம் இல்லாத காஞ்சிப் பெரியவர், வேளாண் அறிஞர்களைக் கலந்து கொண்டு, பெரு முயற்சி செய்து அந்த மரத்தை வேருடன் பெயர்த்து, குமர கோட்டக் கோயிலின் நந்தவனத்தில் நடச் செய்தார்.
அந்த மரத்துக்கு தானே தினமும் நீர் ஊற்றினார். மரம் பழைய நிலைக்கு வரும் வரை பெரியவாளின் கவனம், அதன் மீதே இருந்தது. இப்போது அந்த மரம் பிரமாண்டமாகத் தழைத்து நிற்கிறது.
 காஞ்சி காமாட்சி திருக்கோயிலில் சித்திரை மாதம் சங்கர ஜயந்தி உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். வியாச பூஜையன்று ஆதிசங்கரர் சர்வதீர்த்தக் கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர் முதன் முதலில் தங்கியிருந்த விஸ்வநாதர் கோயிலில் அபிஷேக- ஆராதனைகள் செய்யப்படுகின்றன.
 காமாட்சி அம்மனுக்கு ஒவ்வொரு மாசி மாதமும் நடத்தப் படும் பிரம்மோற்சவம் விசேஷமானது. இந்த விழாவின் கடைசி நாள் ‘உதய விஸ்வரூப சேவை’ நடைபெறுகிறது. இதைக் காண, கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
 ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அம்மனுக்குச் செய்யப்படும் ‘நவாவரண பூஜை’ சிறப்பு வாய்ந்தது. மார்கழி, திருவாதிரை முதலாக தைப்பொங்கல் வரை திருவிழா நிகழும். ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் திருவிழா மயம்தான்.
 ஸ்ரீகாமாட்சி திருக்கோயிலில் தினசரி ஐந்து கால பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள்,
 ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் ஸ்ரீகாமாட்சியம்மன்- ஸ்ரீஏகாம்பரநாதர் கல்யாண உற்சவம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் சிறப்பாக நடைபெறும். அன்று நூற்றுக் கணக்கான புது ஜோடிகளுக்கு அதே இடத்தில் கல்யாணமும் நடை பெறுகின்றன.
 சுந்தரமூர்த்தி நாயனார், ‘திருவொற்றியூர் எல்லையைத் தாண்ட மாட்டேன்!’ என்று சிவபெருமான் மீது சத்தியம் பண்ணிவிட்டு எல்லை கடந்தார். அதனால் அவர் பார்வை இழந்தார். எனவே, பாடல்களாலேயே அவர், சிவ பெருமானைத் திட்டித் தீர்த்தார். பற்பல ஆலயங்களில் பாடிப் பாடி பார்வை கேட்டார். அப்படியும் பயன் இல்லை. கடைசியில் காஞ்சி வந்து, காமாட்சியிடம் கரைந்து வேண்டினார். அங்கிருந்து ஏகாம்பரரை தரிசிக்கச் செல்வதற்குள் அவருக்கு இடப் பக்க கண் தெரியத் தொடங்கியது!
 ‘மூக பஞ்ச சதீ’ என்ற நூலை எழுதிய மூகன் என்பவர், பிறவி ஊமை. இவருக்கு அருள் புரிந்த காமாட்சி இவரிடம் அபார கவித் திறமை பொங்கச் செய்தாள். அதனால் அம்பாளை குறித்து 500 பாடல்களை (மூக பஞ்ச சதீ) பாடினார் இந்த மூக கவி. இவரே பின்னாளில் காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சார்யாராகவும் விளங்கினார்.

No comments:

Post a Comment