Friday, 4 August 2017

சைதாப்பேட்டை ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள்! வேங்கடத்துத் தேன்கொண்ட மலர்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்! ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான் தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே.
_ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
(நாச்சியார் திருமொழி)
திருமலையாம் திருப்பதி க்ஷேத்திரத்தில் எழுந்தருளி இருக்கும் வேங்கடேச பெருமாளை நினைத்து, மேற்கண்ட பாடலைப் பாடுகிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார். இந்தப் பாடலில் திருமலையின் வளங் களைச் சொல்லி, ‘கூர்மையான நகங்களைக் கொண்டு இரண்யனின் உடலைப் பிளந்து எறிந்த எம்பெருமான்’ என்று வேங்கடவனை நரசிம்மராக, பாவித்துப் பாடுகிறார் ஆண்டாள்.
ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்!
_ பெயரே சற்றுப் பெரியதுதான். பெயருக்கேற்றாற் போல் அருளையும் பொருளையும் தாராளமாக அள்ளி வழங்கும் வள்ளல், இந்தப் பெருமாள் என்று சொல்கிறார்கள் சைதாப் பேட்டை ஆன்மிக அன்பர்கள். அது சரி... சென்னையில் இவர் குடி கொண்டது எப்படி?
சுமார் 600 நூறு வருடங்களுக்கு முன் சைதாப் பேட்டை அருள்மிகு கோதண்டராமர் ஆலயத்தில் (இதுதான் பழைய ஆலயம்) எழுந்தருளினார் ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள். ஆனால், அதற்கும் முன்பிருந்தே இங்கு வீற்றிருந்து அருள் பாலித்து வந்தவர் ஸ்ரீராமபிரான். கோதண்டராமர் இந்த ஆலயத்தில் எழுந்தருளி சுமார் 1,800 வருடங்கள் ஆகி இருக்கும் என்கிறார்கள். ராமபிரான் கோயில் கொண்டதால், சைதாப்பேட்டையின் இந்தப் பகுதி, அந்தக் காலத்தில் ரகுநாதபுரம் என்று அழைக்கப்பட்டு வந்தது.
பல நூறு வருடங்களுக்கு முன், சைதாப்பேட்டை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன: திருக்காரணீஸ்வரம், செங்குந்த கோட்டம், திருநாரையூர், ஸ்ரீரகுநாதபுரம்.
திருக்காரணீஸ்வரத்தில் காரணீஸ் வரரும், செங்குந்த கோட்டத்தில் சிவசுப்ரமண்யரும், திருநாரையூரில் சௌந்திரேஸ்வரரும், ஸ்ரீரகுநாதபுரத்தில் ஸ்ரீராமபிரானும் எழுந்தருளி அருள் பாலித்து வந்தார்கள்; இன்றும் அருள் வழங்கி வருகிறார்கள். இதில், ரகுநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாளை சுமார் 600 வருடங்களுக்கு முன் பிரதிஷ்டை செய்தவர்கள் பலிஜா செட்டியார்கள்.
ஆதி காலத்தில் சீதாதேவி மற்றும் லட்சுமணருடன் இந்த ஆலயத்தில் எழுந்தருளி இருந்தார் ஸ்ரீராமபிரான். ஆனால், இந்த ராமபிரானுக்கு உண்டான ஸ்ரீஆஞ்ச நேய மூர்த்தி இவருக்கு எதிரே சுமார் அரை கி.மீ. தொலைவில் ஆற்றங்கரை ஓரமாகத் தனியாக அமைந் திருந்தார். அந்த நாளில் ஸ்ரீராமர் ஆலயத்துக்கு வந்து வணங்கும் பக்தர்கள், இவரை வணங்கிய பின், எதிரே வீற்றிருக்கும் ஸ்ரீஆஞ்சநேயரையும் தரிசித்து வணங்குவது வழக்கம்.
பின்னாளில், ஊர் விரிவடைந்தது. ஜனங்கள் பெரு கினர். குடியிருப்புகளும் அதிகரித்தன. அதனால், இந்த ராமர் ஆலயத்தில் இருந்து ஆஞ்சநேய மூர்த்தியைக் கண்டு வழிபட இயலவில்லை (தற்போதும் இந்த ஆலயத்தில் ஸ்ரீராமபிரான் சந்நிதிக்கு எதிரே சுவரில் ஒரு துளை உள்ளது. அந்தத் துளைக்கு நேராக அடுத்த சுவரிலும் ஒரு துளை இருக்கிறது. அதாவது ஸ்ரீராமபிரானை வணங்கும் பக்தர்கள் இந்தத் துளை வழியே ஆஞ்சநேயரை தரிசிப்பதாக ஐதீகம்).
இதன் பின், ஸ்ரீராமபிரான் சந்நிதிக்கு எதிரே ஆலயத்துக்கு உள்ளேயே ஒரு சிறிய ஆஞ்சநேயர் சந்நிதியை அமைத்து விட்டார்கள் (தற்போது இந்த ஆலயத்துக்கென வெவ்வேறு திசைகளில் நான்கு ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன). அரை கி.மீ. தொலைவில் இந்த ஸ்ரீராமபிரானுக்கு உண்டான அந்த ஆஞ்சநேயர் இன்றும் தனித்து தரிசனம் தந்து கொண்டிருக்கிறார். சரி... இந்த ஆலயத்தில் ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள் வந்து அமர்ந்த கதையைப் பார்ப்போமா?
சுமார் 600 வருடங்களுக்கு முன் ஸ்ரீராமபிரான் ஆலயத் திருப்பணி வேலைகளில் மும்முரமாக இருந்தனர், இங்கு வசித்து வந்த பலிஜா செட்டியார் குலத்தவர். சீரமைப்புப் பணிக்காக ஓரிடத்தில் பள்ளம் தோண்டியபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. பூமிக்குள் இருந்து தாயாரின் சிலா மேனியும், பஞ்சலோக விக்கிரகமும் கிடைத்தன. ‘பெருமாளின் அனுக்கிரகத்தோடுதான் இந்த விக்கிரகங்கள் கிடைத்துள்ளன. எனவே, இந்த ஆலயத்தில் பெருமாள் எழுந்தருள எண்ணம் கொண்டுள்ளார்’ என்று கருதிய பலிஜா செட்டியார்கள், பெருமாளுக்கு அந்த ஆலயத்தில் பிரதானமாக ஒரு சந்நிதியை உருவாக்க முடிவெடுத்தனர்.
பொதுவாக பலிஜா செட்டியார்கள் வேங்கடவன் எழுந்தருளிய திருமலைக்கும், நரசிம்மர் எழுந்தருளிய சோளிங்கருக்கும் அடிக்கடி சென்று வணங்கி வருவார்கள். எனவே, சைதாப்பேட்டை ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் தாங்கள் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப் போகும் பெருமாளுக்கு இந்த இரண்டு திருத்தல நாயகர்களின் பெயர்களும் இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதனாலேயே ‘ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்’ என்ற நாமகரணம் பெருமாளுக்குச் சூட்டப்பட்டது. தாயார்: ‘அலர்மேல் மங்கை’!
தவிர, புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளின் சம்ரோக்ஷணத்துக்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநரசிம்மர் இங்கு எழுந்தருளி வைபவத்தை நடத்தி வைத்தாராம். அதை நினைவு கூரும் வகையில் ‘ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்’ என்று இந்தப் பெருமாள் பெயர் கொண்டதாக, தல வரலாறு சொல்கிறது. இப்போதும் வருடத்துக்கு ஒரு நாள் தை மாத உற்சவத்தின்போது திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் இந்த ஆலயத்துக்கு எழுந்தருள்கிறார்.
இனி, ஆலய தரிசனம் செய்வோம்.
கிழக்குத் திசை நோக்கிய ராஜ கோபுரம். ஐந்து நிலைகள் மற்றும் 86 அடி உயரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. 1992-ல் ராஜ கோபுரத் திருப்பணிகள் தொடங்கப்பட்டு 2001-ல் பூர்த்தி அடைந்து, மகா கும்பாபிஷேகம் நடந்துள்ளது. ராஜ கோபுரத் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது நிகழ்ந்த ஒரு சம்பவத்தை சிலிர்ப்புடன் சொன்னார் ஆலய முக்கியஸ்தர் ஒருவர்: ‘‘பெருமாளுக்கான வேலை எதையும் நாங்க நடத்தறதே இல்லை. அவரே (பெருமாள்) எல்லா காரியத்தையும் முன் னின்று நடத்திக்கிறார். எப்ப எந்தப் பிரச்னைன்னாலும் அவரே ஏதாவது ஒரு ரூபத்துல வந்து சரி பண்ணிக்கிறாரு. உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைச் சொல்றேன்...
ராஜ கோபுரம் கட்டும் பணிகள் ஜரூராக நடந்து கொண்டிருந்த நேரத்தில் பணத் தட்டுப்பாடு காரணமாக வேலையில் ஒரு சுணக்கம் விழுந்தது. பணியாளர்களுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை கூலி கொடுக்க வேண்டி இருந்தது. அதைக் கொடுத்தால்தான் அடுத்த வேலை என்கிற நிலைமை. ஒரு மதிய வேளையில் கோயில் வாசலில் அமர்ந்து, ‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அப்போது சுமார் அறுபத்தைந்து வயதுப் பெரியவர் ஒருவர் வந்து நின்றார். மூக்குக் கண்ணாடி அணிந்த அவர், பார்ப்பதற்கு வெகு சாதாரணமாகக் காட்சி அளித்தார்.
கட்டப்பட்டு வரும் ராஜ கோபுரத்தை அண்ணாந்து பார்த்தார். ‘எவ்வளவு எஸ்டிமேட்ல ராஜ கோபுரம் கட்றீங்க?’னு கேட்டார். ‘வேடிக்கை பார்க்க வந்தவர் போல இருந்துட்டு, வெவரமெல்லாம் கேக்கறாரே’னு நினைச்சு, ‘அம்பது லட்ச ரூபா’னு சொன்னோம். உடனே, மேல்சட்டைப் பையில் இருந்து, தன் மூக்குக் கண்ணாடி கவரை வெளியே எடுத்தார். அதற்குள் கைவிட்டு நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு ‘செக்’கை எடுத்தார். பேனாவால் அதை நிரப்பியவர், ‘ராஜ கோபுரப் பணிக்கு என்னால் ஆன கைங்கர்யம் இது. வெச்சுக்குங்க’னு சொல்லிக் கொடுத்துட்டுப் போயிட்டார். என்ன... ஒரு நூறு ரூபாயா இருக்கும்னு நினைச்சு, அந்த ‘செக்’கைப் பார்த்த எங்களுக்கு அதிர்ச்சி. நாங்க அப்போது சம்பளம் கொடுப்பதற்குத் தவித்துக் கொண்டிருந்த ஒரு லட்ச ரூபாய், அதில் எழுதி நிரப்பப்பட்டிருந்தது. வங்கியில் ‘செக்’கைக் கொடுத்து அது பணமாகும் வரை எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பணம் வந்த பின் ஏதோ பெருமாளே வந்து கொடுத்துவிட்டுப் போனதாக நினைத்தோம். இதை அடுத்து வேலைகள் மளமளவென நடந்தன!’’ என்றார்.
நாராயணன் திருநாமத்தை ஜபித்துக் கொண்டே ராஜ கோபுரத்தை வணங்கி, உள்ளே செல்கிறோம். தினமும் காலையில் ஆறரை மணிக்கு விஸ்வரூப தரிசனம். கோபூஜை முடிந்த பின், ஆலயப் பணிகள் தொடங்குகின்றன. விஸ்தாரமான, அழகிய திருக்கோயில். தீபஸ்தம்பம். பலிபீடம். கொடிமரம். கருடாழ்வார் மண்டபம்.
தாராளமான ஒரே பிராகாரம். முதலில், வலம் வருவோம். துவக்கத்தில் மடப்பள்ளி, ஆலய அலுவலகம். பலிஜா செட்டியார் இனத்தவர்களின் பராமரிப்பில் ஆலயம் இருந்து வருகிறது. இதன் நிர்வாக அறங்காவலராகத் தற்போது இருந்து வருபவர், பாலகிருஷ்ணன் செட்டியார்.
அடுத்து, வாகன மண்டபம். இந்த ஆலயத்தில் உள்ள வாகனங்கள் சுமார் 300 வருடங்களுக்கும் மேற்பட்ட பழைமை கொண்டவை. வாகனங்கள் அனைத்தும் தேக்கு போன்ற உயரிய மரங்களால் செய்யப்பட்டு, பழைய முறைப்படி புளியங் கொட்டையை ஊற வைத்து அரைத்து மெல்லிய துணியிட்டு பூசி, தங்க ரேக்குகள் ஒட்டப்பட்டவை. எனவே, இந்த வாகனங்களைப் பார்க்கும்போது ‘தங்கத்தால் ஆனவையோ?’ என்ற சந்தேகம் உற்சவ காலங்களில் பக்தர்களுக்கு எழுவது வாடிக்கை. சூரிய பிரபை, சந்திர பிரபை, அன்னப்பட்சி, கற்பக விருட்சம், கருடன், ஹனுமந்தன் (விசேஷ காலங்களில் ஹனுமன் என்கிற இந்த ஹனுமந்த வாகனத்துக்கு பிரமாண்ட வடை மாலை சாற்றி உற்சவர் புறப்பாடு நடக்குமாம்!), யாளி, யானை, சிம்மம், குதிரை, நாகர், புண்ணியகோடி, மங்கள கிரி போன்ற வாகனங்கள் அனைத்தும் பளபளப்பாக இருக்கின்றன. இவற்றை பத்திரமாகப் பாதுகாத்து வருவது பாராட்டத் தக்கது. இந்த வாகனங்களின் கண்கள் அனைத்தும் பளிங்கு போல் மின்னுகின்றன. நாம் செல்லும் திசையெல்லாம் நம்மையே உற்று நோக்குவது போல் இருக்கின்றன. இந்தக் கண்களை, லண்டன் மாநகரத்தில் இருந்து விசேஷமாக வரவழைத்து, அந்தக் காலத்தில் பொருத்தி இருக்கிறார்களாம்.
ஆலய நிர்வாக அறங்காவலர் பாலகிருஷ்ணன் செட்டியார் நம்மிடம், ‘‘விழாக் காலத்தில் உற்சவர் விக்கிரகத்துடன் ஆலயத்தினுள் வாகனங்கள் உள்வலம் வரும் வசதி, இந்த சென்னை மாநகரத்தில் இன்று பல ஆலயங்களில் இல்லை. அந்த அளவுக்கு நெருக்கடியான சந்நிதிகள். ஆனால், இந்த ஆலயத்தில் அந்த வசதி தாராளமாக இருக்கிறது. வாகனங்களை அலங்கரித்து உள் புறப்பாடு விமரிசையாக நடந்த பிறகு, ராஜ கோபுர வாசல் கடந்து, உலா செல்லும்.
இந்த வாகனங்களின் பெருமைகளையும் பழைமையையும் கேள்விப்பட்டு, இதே போன்ற வாகனங்களைத் தங்கள் ஆலயத்துக்கும் செய்ய வேண்டும் என்பதற்காக, பிற ஆலயங்களில் இருந்து பலரும் இங்கு வந்து பார்த்து விட்டுச் செல்கிறார்கள். அதை எல்லாம் பார்க்கும்போது வாகனங்கள் தயாரித்த முன்னோர்களை நினைத்தால் பெருமையாக இருக்கிறது!’’ என்றார் சிலிர்ப்பாக.
இதை அடுத்து, ஸ்ரீசக்கரத்தாழ்வார் சந்நிதி. இவரை வலம் வரும்போது பின்பக்கம் ஸ்ரீநரசிம்மர்.
அடுத்து, தாயார் சந்நிதி. அலர்மேல் மங்கை என்பது திருநாமம். சுமார் அறுநூறு ஆண்டுகளுக்கு முன் ஆலயத் திருப்பணியின்போது கிடைத்த தாயாரின் மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்கள் அழகுடன் அருள் புரிகின்றன. அபய- ஹஸ்த முத்திரை காட்டும் இரு கரங்கள் தாமரை மலர்கள் ஏந்திய இரு கரங்கள் என மொத்தம் நான்கு கரங்கள். உற்சவர் விக்கிரகத்தில் (திருவல்லிக்கேணி பார்த்தசாரதி உற்சவர் விக்கிரகத்தைப் போலவே) ஏராளமான புள்ளிகள் இருக்கின்றன. ‘பல வருடங்கள் தொடர்ந்து மண்ணுக்குள்ளேயே புதைந்திருந்ததால் இப்படி ஆகி இருக்கலாம்...’ என்கிறார்கள்.
நவராத்திரி காலத்தில் அலர்மேல் மங்கை தாயாருக்கு லட்சார்ச்சனை நடைபெறும். திருமணம் மற்றும் குழந்தைப் பேறுக்கு இந்தத் தாயார் சிறந்த வரப்ரசாதி. 27 நாட்கள், தினமும் 27 முறை தாயாரை வலம் வந்தால் கேட்ட வரத்தை அருள்வார். கேட்ட வரமருளும் அலர்மேல் மங்கை தாயாரின் சாந்நியத்துக்கு ஓர் உதாரணம் சொன்னார் ராமதுரை பட்டாச்சார்யர்.
‘‘ஒரு முறை அலர்மேல் மங்கை தாயார் சந்நிதியில் பிரமாண்டமான ஹோமம் நடைபெற்றுக் கொண்டிருந் தது. அதில் பிஸியாக இருந்தேன். திடீரென்று ஆலய முக்கியஸ்தர்கள் சிலர் வந்து, ‘தாயாருக்கு அணிவிக்க சில நகைகளை எடுக்க வேண்டும். லாக்கர் சாவியைக் கொடுங்கள்!’ என்று கேட்டனர். உடனே, இடுப்பில் கை விட்டுத் தேடினேன். சாதாரணமாக சாவியை, இடுப்பு வேஷ்டிக்கு இடையில் செருகி வைத்திருப்பது வழக்கம். ஆனால், அங்கே சாவியைக் காணவில்லை. நான் அமர்ந்திருந்த இடத்திலேயே எங்கேயாவது கீழே விழுந்திருக்கப் போகிறது என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடிப் பார்த்தேன். கிடைக்கவே இல்லை! வந்தவர்களும் என்னுடன் சேர்ந்து தேடினார்கள். அவர்களின் அவசரத்தைப் புரிந்து கொண்ட நான், ‘ஒரு ஐந்து நிமிடம் கழித்து வாருங்கள். தருகிறேன்’ என்று அனுப்பினேன்.
பிறகு, தவித்தேன். ஆலயத்தில் விசேஷம் நடைபெறுகிற இந்தத் தருணத்தில் எங்கே என்று போய் லாக்கர் சாவியைத் தேடுவது? மங்களகரமான அந்த அலர்மேல் மங்கை தாயாரிடமே கண்ணீருடன் எனது கோரிக்கையை வைத்தேன். ‘இப்போது ஹோமம் நடை பெறுகிறது. இடுப்பில் லாக்கர் சாவியைக் காணவில்லை. என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ... தெரியாது. சாவியைக் கேட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் வந்து விடுவார்கள். அப்படி வரும்போது அவர் களிடம் சாவியை நான் தந்தாக வேண்டும். உன் பொறுப்பு!’ என்று சொல்லி விட்டு ஹோமத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.
சரியாக ஐந்து நிமிடம் கழிந்ததும், லாக்கர் சாவியைக் கேட்டு அவர்கள் பரபரப்புடன் மீண்டும் வந்தார்கள். யதேச்சையாக என் பார்வை கீழே சென்றது. அங்கே- என் காலடியில் பளிச்சென சாவி தெரிந்தது. சில நிமிடங்களுக்கு முன், பலரும் தேடிய இடத்தில் கிடைக்காத சாவி, எனது பிரார்த்தனைக்குப் பிறகு பளிச்சென்று பார்வையில் பட்டது. இது போல் தாயாரின் அருளுக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்...’’ என்று சிலாகித்தார்.
பிராகார வலம் தொடர்கிறது. அடுத்து, ஸ்ரீஆண்டாள் சந்நிதி. நந்தவனம். யாகசாலை. வலம் முடிந்து, தீப ஸ்தம்பத்தைச் சுற்றியவாறு மூலவரை தரிசிக்க உள்ளே செல்கிறோம். துவாரபாலகர்களான ஜயன், விஜயன் ஆகியோர் வீற்றிருக்கும் மண்டபம். அடுத்து, மகா மண்டபம். சிற்பங்களுடன் தூண்கள். இந்த மண்டபத்தில்தான் தெற்குப் பார்த்தவாறு கோதண்டராமர் சந்நிதி. இதுதான் ஆலயத்தில் முதலில் தோன்றிய சந்நிதி. சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமனுடன் பக்தர்களுக்கு அருள் தருகிறார் ஸ்ரீராமர். இவருக்கு எதிரே, ஆஞ்சநேயர்.
இந்த ராமர் சந்நிதியில் ஒரு விசேஷம். மூலவர் ராமருக்கு வலப் பக்கம் சீதை; கல்யாண கோலம். உற்சவர் ராமருக்கு இடப் பக்கம் சீதை; பட்டாபிஷேக கோலம். ஆனந்தமாக அருள் வழங்குகிறார் இந்த அண்ணல். உற்சவர் ராமர் விக்கிரகம் ஆலயக் குளத்தில் இருந்து கிடைத்ததாகவும் சொல்கிறார்கள்.
தவிர, இந்த மண்டபத்தில் விகனஸாச்சார்யன், நாகர், சேனை முதலியார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள் ஆகியோரின் சிலா விக்கிரகங்கள்.
நேராக, ஸ்ரீதேவி- பூதேவியுடன் தரிசனம் தருகிறார் ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள். சிலா விக்கிரகம். சதுர் புஜங்கள். சங்கு, சக்கரம், அபயம், வரதம் தாங்கிய திருக்கரங்கள். திருமஞ்சனம் நடைபெறுகிறது. விசேஷ காலங்களில் தைலக் காப்பு சார்த்துகிறார்கள். தைலக் காப்பு சாற்றிய மறு நாள் தயிர் சாதம் நைவேத்தியம் செய்கிறார்கள். தைலக் காப்பின் எரிச்சல் அடங்குவதற்காக பெருமாளுக்கு இந்த நைவேத்தியம். வேங்கடவனாகவும் நரசிம்மரா கவும் காட்சி தரும் அந்த நாராயண பெருமாளை தரிசித்து வெளியே வருகிறோம்.
இந்த ஆலயத்தில் ஆண்டு முழுதும் உற்சவங்கள்தான். சித்திரையில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம், வைகாசியில் மூன்று நாட்கள் வசந்த உற்சவம், ஆனியில் மயிலை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் புறப்பட்டு வந்து இந்த ஆலயத்தில் எழுந்தருளல், ஆடியில் திருவாடிப்பூர தினத்தில் ஆண்டாள் உற்சவம், புரட்டாசியில் பத்து நாட்கள் நவராத்திரி உற்சவம், ஐப்பசியில் மணவாள மாமுனிகள் சாற்றுமுறை உற்சவம், பவித் தோற்சவம் மூன்று நாட்கள், கார்த்திகையில் திருக்கார்த்திகை உற்சவம், மார்கழியில் ராப்பத்து- பகல்பத்து உற்சவம், வைகுண்ட ஏகாதசி உற் சவம், தை மாதத்தில் ரத சப்தமி உற்சவம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஸ்வாமி புறப்பட்டு வந்து இங்கு எழுந்தருளல், மாசியில் தோட்ட உற்சவம், பங்குனியில் திருக்கல்யாண உற்சவம் என்று விழாக்கள் ஏகத்துக்கும் நீள்கின்றன. தாமரை புஷ்கரணி என்கிற திருக்குளம் வெளியே இருக்கிறது.
ஆலயத்துக்கென்று கடந்த 2002-ஆம் ஆண்டு பிரமாண்ட தேர் செய்திருக்கிறார்கள். சித்திரை பிரம்மோற்சவத்தில் திருத்தேர் வலம் வருகிறது. சித்திர வேலைப்பாடுகளுடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தேர், சிறப்பு வாய்ந்த ஒன்று.
விஸ்தாரமான ஆலய அமைப்பு, உலா செல்வதற்கு வித விதமான வாகனங்கள், ஆர்ப்பாட்டமாக வீதிகளை வலம் வர அசைந் தாடும் தேர், தாமரை புஷ்கரணி எனும் திருக்குளம், என்றென்றும் குறைவில்லாத உற்சவத் திருவிழாக்கள், வெவ்வேறு திசைகளில் ஆலயத்துக்கென்று நான்கு ஆஞ்சநேயர்கள்... ஆஹா! மனம் இல்லாமல் திரும்பி வருகிறோம்- சைதாப்பேட்டை ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்மர் ஆலயத்தை விட்டு!
தகவல் பலகை
தலத்தின் பெயர் : சைதாப்பேட்டை ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்.
மூலவர் : ஸ்ரீபிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள், ஸ்ரீஅலர்மேல் மங்கை தாயார்.
அமைந்துள்ள இடம் : சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவு.
எப்படிச் செல்வது? : பாரிமுனையிலிருந்து செல்லும் 18 பேருந்து மூலம் மேற்கு சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தத்தை அடையலாம். பஸ் நிறுத்தம் அருகேயே ஆலயம். தாம்பரம் - பீச் மின்சார ரயில் மார்க்கத்தில் சைதாப்பேட்டை வருகிறது. அங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம்.

No comments:

Post a Comment