செங்கல்பட்டு - மகாபலிபுரம் சாலையில் உள்ளது திருக்கழுக்குன்றம். இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது ஒரகடம். இங்கே சிறியதொரு மலையின் மீது கோயில் கொண்டு, அருளும் பொருளும் அள்ளித்தருகிறார் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீஅறம்வளர்த்தநாயகி!
அதென்ன வாடாமல்லீஸ்வரர்?
ஒருமுறை... சிவபெருமானின் தரிசனம் வேண்டி கடும் தவம் இருந்தாராம் ஸ்ரீராமன். ஆனால், வெகுநாட்களாகியும் அவருக்கு சிவதரிசனம் கிடைக்கவில்லை. கலங்கி தவித்த ஸ்ரீராமன், மனமுருக சிவபெருமானை பிரார்த்தித்தார். அப்போது அவருக்குள் ஓர் அசரீரி... 'ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை மலரால் அர்ச்சித்து என்னை வழிபடுக. எந்த மலர் வாடாமல் இருக்கிறதோ... அன்று எமது தரிசனமும் வரமும் கிடைக்கும்!' என்று ஒலித்தது.
அதன்படியே செய்து வந்தார் ஸ்ரீராமன். ஒருநாள், மல்லிகை மலரால் அவர் சிவபிரானை அர்ச்சித்து வழிபட்டார். இந்த மல்லிகை பூக்கள் மூன்று நாட்களாகியும் வாடாமல் மணம் பரப்ப... அப்போதே ஸ்ரீராமனுக்கு சிவதரிசனம் கிடைத்தது; இறைவனும் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர் என்று திருநாமம் கொண்டார் என்கிறது தலபுராணம்.
7-ஆம் நூற்றாண்டில், 2-வது நந்திவர்மன் எனும் பல்லவ மன்னனால் கட்டப்பட்ட ஆலயம் இது. அனைத்துக் கடவுளரும் உறையும் இடம் இது என்பதால் யுரகடம் எனப்பட்டு, பின்னர் ஒரகடம் என மருவியதாகச் சொல்வர்.
சிவபூஜை செய்த ஸ்ரீராமன், தன் காதிலும் ஒரு மல்லிகைப் பூவை வைத்துக் கொண்டிருந்தாராம். எனவே, இங்கு வந்து ஸ்வாமிக்கு அர்ச்சித்த மல்லிகைப் பூவை காதில் வைத்துக் கொண்டு பிராகார வலம் வந்து வணங்கினால், காது தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. தவிர, ஸ்ரீவாடாமல்லீஸ்வரருக்கு மல்லிகைப்பூ மாலை சார்த்தி அர்ச்சனை செய்ய, நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். அது மட்டுமா? வீண் பழி, தொழில் சிக்கல், உறவில் விரிசல், திருமணத் தடை என எந்தப் பிரச்னையாக இருந்தாலும், வாடாமல்லீஸ்வரரை தரிசித்து, பிரார்த்தித்தால் போதும்... நம் கவலையெல்லாம் தீர்ந்து விடும் என்கின்றனர் பக்தர்கள்.
கருப்பைக் கோளாறு, கருச்சிதைவு எனப் போன்ற சிக்கல்களால் பிள்ளைப் பேறு வாய்க்கப் பெறாதவர்கள், தம்பதி சமேதராக இங்கு வந்து மலையடிவாரத்தில் உள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, மஞ்சள் ஆடை உடுத்திக் கொண்டு, மடியில் மல்லிகைப் பூக்களை சுமந்தபடி வந்து, சிவனாருக்கு மல்லிகை மாலை அணிவித்து வேண்டினால், வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்பது உறுதி.
கருவறைக்கு எதிரே இருக்கும் நந்தி வித்தியாசமானவர்! ஒருமுறை... நந்திதேவருக்குப் பரிசாக தன்னுடைய புலித் தோலை வழங்கினாராம் இறைவன்!
ஆமாம்... இங்கு உள்ள நந்திதேவர், புலித்தோலை அணிந்தபடி காட்சி தருகிறார். இதுபோன்ற நந்தி தரிசனம் அபூர்வம்!
வாடாமல்லீஸ்வரரை தரிசியுங்கள்; மனதில் உள்ள அத்தனை வாட்டத்தையும் போக்குவார்; மனதை மல்லிகையாய் மலரச் செய்வார்!
|
Saturday, 5 August 2017
ஓரகடம் - ஸ்ரீவாடாமல்லீஸ்வரர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment