சென்னை நகரின் சீர்மிகு கோயில்கள்!
ஸ்ரீ வேங்கீஸ்வரர் ஆலயம் தற்போது இருக்கும் பகுதி வடபழனி என்றாலும், சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தப் பகுதி கோடம்பாக்கம் என்றே அழைக்கப்பட்டது.
சரி... இந்த ‘கோடம்பாக்கம்’ என்ற பெயர் இந்தப் பகுதிக்கு எப்படி வந்தது? சுவாரஸ்யமான ஒரு தகவலை ஸ்ரீவேங்கீஸ்வரர்ஆலயத் தல வரலாறு சொல்கிறது.
திரிபுர (முப்புரம்) அசுரர்களை, சிவபெருமான் அழித்தார் என்கிறது புராணம். இதற்காக மேரு மலையை, சிவபெருமான் வில்லாக வளைத்த இடம் கோடம்பாக்கம். அதாவது கோடு+அம்பு + ஆக்கம் = கோடம்பாக்கம். கோடு என்றால் மலை என்று பொருள்.
இன்னொரு கதையும் கோடம்பாக்கம் ஊர்ப் பெயருக்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. பாற்கடலில் பரந்தாமனுக்குக் குடையாக நின்று, அவரை தனது மடியில் துயில் கொள்ள வைக்கும் பாக்கியம் பெற்றவர் நாகங்களின் அரசனான ஆதிசேஷன். இந்தப் பாரம்பரியத்தில் வந்த கார்க்கோடகன் எனும் நாக அரசன், திருமாலை வழிபட்ட இடம் கோடம்பாக்கம். கோடகன் வழிபட்ட பாக்கம்= கோடம்பாக்கம். இந்தத் தகவலுக்கு வலு சேர்க்கும் விதமாக, ஆதிமூலப் பெருமாள், மாலவன் எனும் பெயரில் இங்கு கோயில் கொண்டு எழுந்தருளி இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இனி, கோடம்பாக்கத்தில் ஸ்ரீவேங்கீஸ்வரர் திருக்கோயில் கொண்ட கதையைப் பார்ப்போம். புராண காலத்திலேயே சிறப்புற்று விளங்கியவர் இந்த ஸ்ரீவேங்கீஸ்வரர்!
வியாக்ரபாதர் எனப்படும் புலிக்கால் முனிவரும், ஆதிசேஷனின் அவதாரமான பதஞ்சலி முனிவரும் சம காலத்தவர்கள். இந்த இருவருமே சிவ பக்தியில் திளைத்து கயிலை வாசனாம் பரமேஸ்வரனை எந்த நேரமும் வழிபட்டவர்கள். இவர்கள் கோடம்பாக்கம் ஸ்ரீவேங்கீஸ்வரரை வழிபட்டு, இறை இன்பத்தில் திளைத்தவர்கள் என்கிறது தல புராணம். இதை மெய்ப்பிக்கும் விதமாக வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோரது சிலைகள், மூலவர் ஸ்ரீவேங்கீஸ்வரர் சந்நிதி அருகே அருள் பாலிக்கின்றன. ஸ்ரீவேங்கீஸ்வரரை தரிசித்து விட்டுத் திரும்பும்போது, நாமும் இவர்களை தரிசிக்கலாம்.
முதலில், புலிக்கால் முனிவர், ஸ்ரீவேங்கீஸ்வரரை வழிபட்ட கதையைப் பார்ப்போம்.
பண்டைக் காலத்தில் நமது தமிழகம், பல பகுதிகளாகப் பிரிந்திருந்தது. ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. சேரன்- சோழன்- பாண்டியன் மற்றும் தொண்டை மண்டல மன்னர்களும் இதில் அடங்குவர். இன்றைய சென்னை நகரின் பெரும்பாலான பகுதி, அன்றைய தொண்டை மண்டலத்துள் அடங்கும்.
அப்போது தொண்டை மண்டலம் நிர்வாக வசதிக்காக 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவற்றுள் புலியூர்க் கோட்டமும் ஒன்று. தற்போதும் புலியூர் என்பது கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. மாபெரும் தவசீலரான புலிக்கால் முனிவர் இங்கு, ஆசிரமம் அமைத்துத் தவம் செய்ததால் இந்தப் பகுதி புலியூர் எனப்பட்டது. இங்கு புலிக்கால் முனிவரைப் பற்றிச் சில வார்த்தைகள்...
மத்தியந்தினர் எனும் முனிவரின் மகன் வியாக்ரபாதர் எனப்படும் புலிக்கால் முனிவர். பொழுது புலருமுன்- அதிகாலை நேரத்தில் பூக்கள் நிறைந்த மரங்களில் ஏறி, மலர் பறித்து இறைவனுக்கு அர்ப்பணித்து வணங்குவதற்காக, தவ வலிமையால் புலி போன்ற உடல் அமைப்பு பெற்றவர் இவர். இதன் உதவியால், மரங்களில் ஏறி, வண்ண மலர்களைப் பறித்து சிவ பூஜை செய்து வந்தார். இவர் ஆசிரமம் அமைத்திருந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, தூய பக்தியுடன் பூஜித்து வந்தார். புலிக்கால் முனிவர் வசித்த பகுதி புலியூர் ஆனது போல், இவர் வழிபட்ட சிவலிங்கம், புலியூருடையார் ஆனது.
புலியூரை, வியாக்ரபுரி என்றும் சொல்வர். இதனால், இந்தத் தலத்து இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் எனப்பட்டார். புலியை வேங்கை என்றும் சொல்வர். அப்படியாக இந்த ஈஸ்வரன், ஸ்ரீவேங்கீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார்.
அடுத்து பதஞ்சலி முனிவர், இந்த வேங்கீஸ்வரரை தரிசித்த கதை.
சர்வ லோகங்களையும் காத்து ரட்சிக்கும் மாலவனான திருமால், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தார். அவர் தமது யோக நித்திரை நிலை விலகி, பத்மாசனக் கோலத்தில் எழுந்தருளி இருந்தார். மனதில் மகிழ்ச்சியும் குதூகலமும் பொங்க மாலவன் இப்படிக் காட்சியளிப்பதன் காரணம் புரியாமல் அருகில் இருந்த ஆதிசேஷனும் பிரம்மதேவனும் பிரமித்தனர்; திகைத்தனர். என்ன காரணமாக இருக்கும் என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.
அப்போது அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த திருமால், ‘‘பிரம்மதேவா... ஆதிசேஷா... எமது ஆனந்தக் களிப்புக்கு அர்த்தம் புரியாமல் நீங்கள் இருவரும் அல்லல் படுகிறீர்கள் என்பதை உணர்ந்தோம். உங்களது குழப்பத்தை இனியும் நீடிக்க விட மாட்டோம். என்ன காரணம் என்று நானே சொல்கிறேன்...’’ என்று அவர்களை ஆசீர்வதித்தவர் தொடர்ந்தார்:
‘‘ஒரு முறை ஆனந்தக் களிப்பு மேலிட சிவபெருமான் பல வகையான நடனங்கள் ஆடினார். பயங்கர நிருத்தம், சுத்த நிருத்தம், அனுக்கிரக நிருத்தம், சௌக்கிய நிருத்தம், ஆனந்த நிருத்தம் போன்ற நடன வகைகளை அந்த கயிலையான் செய்து காட்டினார். சிவபெருமான் அன்றைக்கு ஆடிய நடன அசைவுகளை இன்றைக்கு என் மனக் கண்ணில் நிறுத்திப் பார்த்தேன். என்னை அறியாமல் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்து விட்டேன். அதனால்தான் இந்த மகிழ்ச்சி!’’
தொடர்ந்து சிவபெருமான் அப்போது ஆடிய நடனம் பற்றி திருமால் விவரித்துக் கொண்டே போக... ஆதிசேஷன் அதிசயித்து நின்றபடி, கண்களை அகலத் திறந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இதைக் கண்டு வியந்த திருமால், ‘‘என்ன ஆதிசேஷா... பக்தி உணர்வால் மிகுந்த பரவசத்துக்கு உள்ளாகி நிற்கிறாய் போலிருக்கிறதே... சிவ பக்தியில் சிறந்து விளங்கத் துடிக்கிறாயோ... சிவபெருமானின் திருநடனத்தைக் காண உனக்கு விருப்பமா?’’ என்று கேட்டார்.
‘‘மாலவா... என் உள்ளத்தில் இருப்பதைத் தாங்கள் அப்படியே சொல்லி விட்டீர் கள்... சிவபெருமானின் திருநடனக் கோலத்தை தரிசிக்க விரும்புகிறேன். பெறற்கு அரிய அந்தப் பேறு எனக்குக் கிட்டுமா?’’ என்றார் ஆதிசேஷன்.
‘‘கட்டாயம் வாய்க்கும். அவரை நோக்கித் தவம் செய். அவரது அருளை நிச்சயம் நீ பெறுவாய்!’’ என்று ஆதிசேஷனை ஆசீர்வதித்து அனுப்பினார் பரந்தாமன்.
அதன் பின் அத்திரி முனிவர்- அனுசூயை தம்பதிக்கு ஆதிசேஷன் மகனாக அவதரித்தார். எப்படி? குழந்தை வரம் வேண்டி தவம் இருந்த அனுசூயையின் கைகளில் சின்ன ஐந்து தலை நாகமாக வந்து பொருந்தினார் ஆதிசேஷன். கையில் திடீரென்று பாம்பைக் கண்ட அனுசூயை, சட்டென்று கைகளை உதற... அது அவளின் கால்களின் மேல் விழுந்தது. இப்படி அனுசூயையின் பாதங்களில் ஆதிசேஷன் விழுந்ததால் அவனுக்கு பதஞ்சலி (பதம்- கால்; சலித்தல்- விழுதல்) என்ற பெயர் ஏற்பட்டது. அதன் பின் இந்தத் தம்பதியின் மகனாக வாழ்ந்து சிவ பக்தியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட முனிவர்தான் பதஞ்சலி.
வியாக்ரபாதரும், பதஞ்சலியும் இணைந்து பல சிவத் தலங்களை தரிசித்துப் பேறு பெற்றனர். அப்படி வரும்போதுதான் இவர்கள் கோடம்பாக்கத்தை அடைந்தனர். ஏற்கெனவே வேங்கீஸ்வரரை ஸ்தாபித்து சிவனருள் பெற்ற வியாக்ரபாதருடன் பதஞ்சலியும் இணைந்து நித்தமும் சிவ பூஜை செய்தனர். பல நாட்கள் இங்கு தங்கி சிவபெருமானை துதித்து வணங்கினர். அதன் பின்னரே சிதம்பரம் சென்று இருவரும் தில்லைக் கூத்தனின் ஆனந்த நடனம் காணும் பேறு பெற்றனர்!
இவ்வாறு வியாக்ரபாதரும் பதஞ்சலியும் பூஜித்து வணங்கி அருள் பெற்ற கோடம்பாக்கம் ஸ்ரீவேங்கீஸ்வரரை தரிசனம் செய்வது நமக்கெல்லாம் கிட்டிய பெரும் பேறு அல்லவா!
பழைமையான ஸ்ரீவேங்கீஸ்வரர் ஆலயத்தை தரிசிப்போமா?
நெடிதுயர்ந்து நிற்கும் கம்பீரமான சிவாலயம்... கிண்டி கத்திப்பாரா- கோயம்பேடு நூறடி சாலையில் வடபழனி சிக்னல் அருகே வலப் பக்கமாக அமைந்திருக்கிறது திருக்கோயில். ஆனால், நுழை வாயில் அதற்கு மறு பக்கம் இருக்கிறது.
கிழக்குப் பார்த்த ஆலயம். இறுதியாக 1983-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய கும்பாபிஷேகம், இங்கு 1995-ஆம் ஆண்டு ஏனோ நடக்கவில்லை. தற்போது கும்பாபிஷேகத் திருப்பணிகளைத் துவங்க இருக்கிறார்கள். பரம்பரை அறங்காவலர்களின் மேற்பார்வையில் இந்த ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆலயத்துக்குத் தற்போது அறங்காவலராக இருப்பவர் ஜி. பிரேம் ஆனந்த்.
வண்ணம் வெளுத்துப் போன பழைமையான ஏழு நிலை ராஜ கோபுரம். அதைத் தாண்டியதும் இடப் பக்கம் சூரியன் மற்றும் வீரபத்திரர் சந்நிதிகள். வலப் பக்கம் முனீஸ்வரர் மற்றும் சந்திரனுக்கு சந்நிதிகள்.
உயர்ந்தோங்கிய கொடிமரம். பலிபீடம். பிரதோஷ நந்தி. சிறு வடிவம். பிரதோஷ காலத்தில் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கும். நந்திதேவரின் தரிசனம் முடிந்து பிராகார வலம் வருகிறோம். ஒரே பிராகாரம். விஸ்தாரமானது.
முதலில், வரசித்தி விநாயகர். பலிபீடம், மூஞ்சூறு வாகனம். தனிக் கோயில்.
அடுத்து வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர், காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள் என்று சந்நிதிகள்.
ஸ்ரீவேங்கீஸ்வரர் சந்நிதியின் விமானம் அற்புதமான அமைப்பு கொண்டது. கஜபிருஷ்ட விமானம். இது சோழ மன்னர்களால் கட்டப்பட்டது என்கிறார்கள்.
பிராகார வலத்தின்போதே கோஷ்ட மூர்த்தங்களை தரிசிக்கலாம். ஸ்ரீதுவார கணபதி, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்கை ஆகியோர் கோஷ்டங்களில். தவிர, காளி அம்மன் அபிஷேக மண்டபம் என்று ஒரு சந்நிதி இருக்கிறது. காளி அம்மனின் உற்சவர் விக்கிரகத்துக்கு ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
பிராகார வலத்தின்போது பெரிய இரண்டு மண்டபங்கள் காணப்படுகின்றன. முதலில், அலங்கார மண்டபம். உற்சவ காலத்தில் அலங்கரிப்பட்ட ஸ்வாமி விக்கிரகங்களை இங்கு கொண்டு வந்து வைக்கிறார்கள். இன்னொன்று- வசந்த மண்டபம்.
இனி, மூலவர் ஸ்ரீவேங்கீஸ்வரர் தரிசனம். துவாரபாலகர்களைத் தாண்டி உள்ளே நுழைந்தால் பலிபீடம், நந்தி. நேராக தரிசனம் தருகிறார் ஸ்ரீவேங்கீஸ்வரர். பெரிய திருமேனி. வியாக்ரபாதரும் பதஞ்சலி முனிவரும் துதித்த வடிவம். கண்ணை மூடிக் கொண்டு ‘நமசிவாய’ சொல்லும் பக்தர்கள்.
உள்ளேயே சைவ நால்வர் சந்நிதி. தவிர, நடராஜர்- சிவகாமி- மாணிக்கவாசகர் ஆகியோருக்கான பஞ்சலோக விக்கிரகங்கள். வெளியே வரும்போது இடப் பக்கத்தில் வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி ஆகியோருக்கான சிறு சிலா விக்கிரகங்கள். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று ‘பதஞ்சலி- வியாக்ரபாதர் மன்ற’த்தினரைச் சேர்ந்த ஆன்மிக அன்பர்கள் இந்த விக்கிரகங்களுக்கு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடத்துகிறார்களாம்.
வெளியே வந்ததும் தெற்குப் பார்த்த சந்நிதியில் அம்பாள். அம்பாளின் திருநாமம்- அருள்மிகு சாந்தநாயகி. சாந்தசொரூபியான இவள், பக்தர்கள் கேட்கும் வரங்களை சலியாது அருளும் நாயகி.
ஆலய அர்ச்சகராகச் செயல்படுபவர் சுரேஷ் குருக்கள். அவர் நம்மிடம் சொன்னார்:
‘‘மூன்று தலைமுறையா நாங்க இந்தக் கோயில்ல கைங்கர்யம் செஞ்சுண்டு வர்றோம். இங்கே எல்லா உற்சவங்களும் விமரிசையா நடந்திண்டிருக்கு. ஒவ்வொரு பௌர்ணமி அன்னிக்கும் ஸ்வாமி- அம்பாள் விக்கிரகங்களுக்கு விசேஷ அபிஷேகங்கள் மற்றும் வழிபாடு நடக்கும். அன்று மாலை ஆறரை மணிக்கு வீதியுலா செல்வார்கள். ஸ்வாமி மற்றும் அம்பாளுடன் அநேக பக்தர்களும் உடன் வருவார்கள்.
ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று அம்பாளுக்குப் பால்குட அபிஷேகம் நடைபெறும். புரட்டாசி முதல் வாரத்தில் மழை வேண்டி 108 கலசாபிஷேகம் விமரிசையா நடக்கும். மற்றபடி நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், பங்குனி பிரம்மோற்சவம், திருக்கல்யாணம் போன்றவை இங்கு சிறப்பு. இந்த ஆலயத்தின் உப ஆலயமான அருள்மிகு அழகப் பெருமாள் ஆலயத்தில் இருந்து இங்கு எழுந்தருளும் அழகர் பெருமாள், வேங்கீஸ்வரர் ஸ்வாமிக்கு கன்னிகாதானம் செய்து வைப்பார். ஏழாம் நாள் திருத்தேர் புறப்பாடு.
சிவராத்திரி அன்று நான்கு கால பூஜை. கடைசி காலத்தில் 108 சங்காபிஷேகம் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பக்தர்கள் கூட்டம் அன்று சொல்லி மாளாது!
கிருத்திகை தினங்களில் சுப்ரமண்யர் புறப்பாடு நடைபெறும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் அதற்கு உகந்த நாட்களில் வழிபாடுகள் தடை இல்லாமல் இங்கு நடந்து வருகிறது. பழைமையான கோயில். எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வருவார்கள்; போவார்கள். வியாக்ரபாதரும் பதஞ்சலியும் போற்றிக் காத்த வேங்கீஸ்வர பெருமானின் புகழை இன்று சொல்வதற்கும், பூஜைகள் அனுஷ்டிப்பதற்கும் எங்கள் குடும்பம் பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும்!’’ என்கிறார், சுரேஷ் குருக்கள் சிலிர்ப்புடன்.
பழைமையின் சாயல் பூத்து மிளிரும் அருள்மிகு வேங்கீஸ்வரரை தரிசித்து நாமும் அவன் அருள் பெறுவோம்!
|
No comments:
Post a Comment