Friday, 4 August 2017

திருச்சோற்றுத்துறை..!


மனம் கலங்கி நின்றார் அருளாளர். ஊரெல்லாம் பசியால் வாடி வதங்கி யது. ஆண்கள், பெண்கள்... அதை விட, சின்னஞ்சிறு பிள்ளைகள் எல்லோரும் துடிதுடித்து... பரிதவித்து, சொல்லவும் முடியாமல் அழுது... என்ன கொடுமை இது! இறைவா, இப்படியா மக்களைப் பசியில் தவிக்க விடுவாய்?
சில வருடங்களாக மழையும் ஆற்று நீர்வரத்தும் இல்லாமல் பூமி வாடிப் போக, பசியும் பிணியும் தலை விரித்தாட, சொல்லொணா துயரத்தில் தவித்தனர் மக்கள். இதுவரை எப்படியோ தாக்குப் பிடித்தாயிற்று. இனி முடியாது. ‘பரமனாரே, உனக்குப் பரமகருணை என்பார்களே... ஆனால், இப்போது கண்ணே இல்லாததுபோல இருக் கிறாயே, இது நியாயமா?’- கிட்டத்தட்ட சண்டையே போட்டுக் கொண்டிருந்தார் அருளாளர்.
பரமனிடமிருந்து பதிலா வரும்? பசியிலும் பிணியிலும் வாடும் மக்களால் கோயிலுக்கு எப்படி வர முடியும்? திருமேனி அர்ச்சகர் ஒரு மாதம் முன்பே வருவதை நிறுத்தி விட்டார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. தள்ளாத வயதில் என்ன செய்வார் பாவம்! சாயங்காலத்தில் வந்து விளக்கு மட்டும் வைத்த உத்தானன், இரண்டு நாட்களுக்கு முன்னால் கீழே விழுந்து விட்டான்.
விளக்கு கூட இல்லாமல் இருட்டில் கிடந்த சிவமூர்த்தத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அருளாளர், திடீரென்று வாயில்படியில் மோதி அழத் தொடங்கினார். அவர் மனைவி திருநகைப் பிராட்டியார், ஓடிப் போய்த் தடுத்தும் பலனில்லை. ஏதும் செய்வதறியாது தவித்த திருநகைப் பிராட்டியார், கையைப் பிசைந்து கொண்டே சிவமூர்த்தத்தை நோக்கினார்.
திடீரென்று கேட்ட அந்தச் சத்தத்தில் ஊரே உறைந்து போனது. எங்கிருந்தோ தோன்றிய அடர்த்தியான மேகங்கள், கண நேரத்தில் மழை பொழிய, ஊரே வெள்ளக் காடானது. ஏற்கெனவே பசியில் வாடியவர்களுக்கு, ஈரமும் வெள்ளமும் இன்னமும் எரிச்சலைத் தர... துணியும் மட்டையும் தண்ணீரில் அடித்துப் போக... சிவனாருக்குக் கிடைத்த சாபத்துக்கு அளவே இல்லை!
இருந்த ஒரே ஓர் ஆடையும் தன் உடல் மீதே இருந் ததால் வெள்ள அபாயம் பற்றிக் கவலைப்படாமல் இருந்த சிவலோகன், யாரோ கூப்பிடும் குரல் கேட்டு எழுந்தான். கால்கள் கெஞ்சின; மூச்சு தவித்தது. அந்தக் குரல் இப்போது கிட்டவே கேட்டது.
அருளாளர் அழைத்தார். கையில் பாத்திரம் ஒன்றை வைத்தபடி, எல்லோரையும் அழைத்தார். திண்ணை திண்ணையாக உட்கார்ந்து சோறு போட்டார். சோறும் நெய்யும் குழம்புமாக, அந்தச் சின்னஞ்சிறு பாத்திரத்திலிருந்து கொட்டின!
‘அப்ப, மழை பெஞ்சுதில்ல... அந்தத் தண்ணில இந்தப் பாத்திரம் திடீர்னு வந்ததாம். ‘இதை வைத்து எல்லார்க்கும் சோறு போடு அருளாளா... இது அள்ள அள்ளக் குறையாது!‘னு அசரீரி கேட்டு தாம். கடவுள் கண்ணத் திறந்துட்டார்!’ என்று ஊர் மகிழ்ந்தது.
இப்படி, அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந் தருளி இருக்கும் தலமே, ஏழூர் தலங்களில் ஒன்றான திருச்சோற்றுத்துறை. காவிரி தென்கரைத் தலங்களுள் ஒன்றான இது, கண்டியூர்- ஐயம்பேட்டை சாலையில், கண்டியூரிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தஞ்சையிலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவு. திருவையாற்றில் இருந்தும் செல்லலாம்.
இந்த ஊருக்கு வடக்கே பாயும் குடமுருட்டி ஆற்றையும், காவிரியையும் கடந்தால், சிறிது தொலைவில் திருப்பழனம். திருவையாற்றில் தொடங்கி, திருப் பழனம், திருச்சோற்றுத்துறை என்ற சப்தஸ்தானத் தலங்களில், இது மூன்றாவது. அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால், இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது. மூவர் தேவாரம் பெற்ற இந்தத் தலத்தை, ராமலிங்க வள்ளலாரும் போற்றியுள்ளார்.
முற்றாத பால்மதியம் சூடினானே 
 முளைத்தெழுந்த கற்பகத்தின் 
 கொழுந்துஒப்பானேஉற்றாரென்றுஒருவரையும் 
 இல்லாதானே 
 உலகோம்பும் ஒண்சுடரே 
 ஓதும் வேதம்கற்றானே எல்லாக் 
 கலைஞானமும் 
 கல்லாதேன் தீவினைநோய் கண்டுபோகச்செற்றானே திருச்சோற்றுத்துறைஉளானே
திகழொளியே சிவனே உன் அபயம்தானே’ என்று அப்பர் பெருமான் போற்றிப் பரவிய திருச் சோற்றுத்துறை நாதரை தரிசிக்கத் தயாராகி விட்டீர் களா? வாருங்கள், போகலாம்.
பெரிய வாயில். ஊருக்கு மையமாகத் திகழ்கிறது கோயில். வாயிலைத் தாண்டிச் சென்றால், வெளிப் பிராகாரம். வாயிலுக்கு அருகே வலப் பக்கத்தில் ஒரு மேடை. வாயிலுக்கு நேரே, சரிவான கூரையுடன் கூடிய முகப்புப் பகுதி. வெளிப் பிராகாரத்தை வலம் வர யத்தனிக்கிறோம்.
பிராகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில், அம்பாள் சந்நிதி. தனிக் கோயிலாகவே திகழ்கிற அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்துள்ளது. முன்புறத்தில், நீள மானதொரு மண்டபம். அடுத்து, மகா மண்டபம் என்று சொல்லத் தக்க அளவில் மற்றொரு மண்டபம். இதன் வாயிலில், இடப் புறம், விநாயகர் மற்றும் நாகர். நின்ற திருக்கோல நாயகியான இவருக்கு, ஒப்பிலாம்பிகை என்று திருநாமம். அன்னபூரணி எனும் நாமமும் உண்டு.
அருளாளர் அன்னம் வேண்ட, அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் படியாக அட்சய பாத்திரம் வழங்கினார் ஈசன் என்று பார்த்தோமில்லையா? அந்தப் பாத்திரத்துக்கு ‘உலவா சோற்றுக் கலம்’ என்று பெயர். அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய பேரருளாளரான பெருமானுக்கு அருள்மிகு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி, பூரண அருள் கடாட்சிக்கும் அம்மைக்கு அருள்மிகு அன்னபூரணி என்றும் திருநாமங்கள். ‘அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும் வாட்டமும் அண்டவே அண்டா!’ எனும் நம்பிக்கை நிலவுகிறது. வெறும் நம்பிக்கை இல்லை, கண் கூடான உண்மை என்று ஊர்மக்கள் உறுதிபடச் சொல் கின்றனர். அம்பாள் கோயிலை வலம் வரும் வசதி உண்டு. சண்டிகேஸ்வரிக்கு ஒரு தனி மண்டபம். வலம் வந்து விட்டு, சற்று எட்டி நின்று அண்ணாந்தால், அம்பாள் சந்நிதியின் மூன்று தள விமானம் கண்ணைக் கவர்கிறது. அம்பாள் கோயில் தாண்டி தெற்கு மற்றும் மேற்குப் பிராகாரங்கள் எல்லாம் நந்தவனம். நந்தவனம் என்றாலும் தென்னை மரங்கள்தாம் நிறைய இருக்கின்றன. பிராகாரத்தைச் சுற்றி வந்து, முன்னரே பார்த்தோமே, சாய்வுக் கூரை மண்டபம் - அந்த இடத்தை அடைகிறோம்.
பலி பீடம், சிறிய நந்தி மண்டபம். சரிவான தகட்டுக் கூரையோடு அமைந்திருக்கும் இந்த மண்டபம், ராஜ கோபுரமான உள்வாயிலின் முகப்பில் உள்ளது. கோபுர வாயிலில் ஒரு புறம் விநாயகர்; மறு புறம் முருகர். வழிபட்டு உள்ளே நுழைந்தால், சந்நிதியின் முன்புறம் முழுவதும் ஒன்று சேர்ந்தாற்போல், பெரிய மண்டப அமைப்பு. மண்டபத்தின் வலப் பக்கம், நடராஜ சபை (ஆடலரசர் சபை). இடப் பக்கம், நிறையத் தூண்களுடன் கூடிய வாகன இருப்பிடம். இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். அல்லது சற்றே இடப் பக்கம் திரும்பி, உள் பிராகார வலம் வரலாம். வலம் வருவோமா?
தெற்குப் பிராகாரத்துக்குள் திரும்பிச் செல்கிற இடத்தில், கிழக்குப் பார்த்த மாதிரி ஒரு தனிச் சந்நிதி. உள்ளே அழகு கொஞ்சும் ஆறுமுகர். தனிக் கோயிலாகவே விளங்கும் இந்தச் சந்நிதியின் ஆறுமுகர் மிகப் பெரிய வடிவினர். திருச்சோற்றுத்துறையின் சிறப்பு மூர்த்தம் என்றே சொல்ல லாம். சேயோன் இருந்தால், பக்கத் திலேயே மாயோனும் இருப்பார் இல்லையா! ஆறுமுகர் சந்நிதிக்குத் தெற்காக, கிழக்குப் பார்த்தபடி, சங்கு- சக்ரதாரியான மகாவிஷ்ணு. அடுத்து, கௌதமர் வழிபட்ட காட்சியை விளக்கும் சிற்பம்.
கௌதம முனிவர், மிகப் பெரிய தவசீலர். பஞ்ச காலத்தில் மக்கள் படும் அவதி பொறுக்காமல், இறைவனை வணங்கி, கௌதமர் வழி கேட்டதைப் பற்றிய செய்தி கள் பிரம வைவர்த்த புராணம் போன்றவற்றில் உண்டு. எங்கெல் லாம் கௌதமர் சென்று பயிர் செய்து விளைச்சல் புரிகிறாரோ, அங்கெல்லாம் பஞ்சம் பறந்தோடி, வளமும் வனப்பும் செழிக்கும். இவ்வாறு கௌதமரும் அகலிகையும் (கௌதமரின் தர்மபத்தினி- ராமாயணத்தில் வரும் அதே அகலிகைதான்!) பல இடங் களுக்கும் சென்று வேளாண்மை செய்தனர். ஓரிடத்தில் வளமை ஏற்பட்டவுடன், அங்கிருந்து இன்னோரிடம் சென்று நன்மை பெருகச் செய்தனர்.
நன்மை செய்து கொண்டே போனால், அவர்களைப் பார்த்துப் பொறாமை ஏற்படாமல் இருக்குமா? பொறாமையின் விளைவு பலவாறாக வந்தது. எப்படியாவது கௌதமரைக் குற்றம் இழைக்க வைத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்த பிற முனிவர்களும் இந்திரனும், மாயப் பசு ஒன்றை உருவாக்கி, கௌதமரின் வயலில் மேய விட்டனர். பசுவை அடிக்கக் கூடாது; ஆனால், பயிரைக் காப்பாற்ற வேண்டும். என்ன செய்வது? தர்ப்பைப் புல்லெடுத்து பசுவின் மீது போட்டு, அதை விரட்ட முற்பட்டார் முனிவர். ஆனால், என்ன கொடுமை! தர்ப்பைப் புல் பட்டவுடன், கீழே விழுந்து உயிரை விட்டது பசு. தர்ப்பைப் புல்லால் அந்த அளவுக்கு வலிமையான காயம் ஏற்படுமா? விதியின் விளையாட்டு இது என்பதை உணர்ந்த கௌதமர், அகலிகையிடம் சொல்லி விட்டுத் தவம் செய்தார். தவத்தின் பலனாக சிவபெருமான் பிரத்தி யட்சமாக, அவரிடம் ‘கோ-ஹத்தி’ (பசுவைக் கொன்ற) தோஷத்துக்கு, தான் பரிகாரம் தேடுவதைச் சொன்னார் கௌதமர். மாயையின் விபரீத விளையாட்டைப் பற்றி முனிவருக்கு அறிவுறுத்திய மகேஸ்வரன், ஏதே னும் வரம் கேட்கச் சொன்னார். சமுதாயத்துக்கு நன்மை செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தால் விடுவாரா கௌதமர்?! உத்தர பாரதத்துக்கு வளம் கொடுக்கும் கங்கை, தட்சிண பாரதத்துக்கும் வந்தால் எப்படி இருக்கும்? கேட்டே விட்டார்: ‘கங்கையை இங்கு பாய விடுங்கள் பெருமானே!’. செஞ்சடைக் கற்றைகளில் கிடந்த வளை, சிவபெருமான் ஓடச் சொல்லி ஆணையிட, கோ என்னும் பசுவால் பெருகிய கோதா விரியாக தக்காண பீடபூமியில் இன்னமும் அந்த நதி பாய்கிறது.
இவ்வளவு சிறப்புக்கு உரிய கௌதம முனிவர், தங்கித் தவம் செய்து முக்தி நாடிய தலம் திருச்சோற்றுத்துறை. மிகப் பெரிய சிவநேசராக விளங்கிய அவர், சோற்றுத்துறை நாதரை வணங்கி (பலருக்கும் அன்னம் பாலிக்க கௌதமர் பயிர் விளைவித்தது போல, இந்த ஊர்ப் பெருமானும் உலவா சோற்றுக் கலம் தந்தவரல்லவா- எனவே, இவர்தாம் தனக்கு முக்தி தர வேண்டும் என்று கௌதமர் எண்ணியிருக்க வேண்டும்) வழிபட்டு முக்தி பெற்றார். சோற்றுத்துறைக்கு ‘கௌதமாஸ்ரமம்’ என்றும் பெயர் காணப்படுகிறது. கௌதமர் சிலை அருகே நிற்கிறோம். அந்த மகா முனிவரும் அவரின் தர்மபத்தினி அகலிகையும் மனக்கண் முன்னால் விசுவரூபம் எடுக்கிறார்கள். வில்லாயுதம், வாள் சண்டை, சிவலிங்க பூஜை ஆகியவற்றைக் கொண்ட சிற்பத் தொகுப்பைத் தாண்டி நடந்தால், மண்டப அமைப்பைக் கடந்து, கூரை திறந்திருக்கும் பிராகாரப் பகுதிக்கு வந்து விடுகிறோம். சோழர் காலக் கட்டுமானத்தை உறுதி செய்யும் திருமாளிகைச் சுற்று. தெற்குச் சுற்றில் சப்த மாதர்கள். தென்மேற்கு மூலையில், விநாயகரும் லிங்க மும். அடுத்து யாகசாலை; தொடர்ந்து ஐயனார். இந்தப் பகுதியில், கிழக்குப் பார்த்ததாக ஒரு தனிச் சந்நிதி, மகா கணபதிக்காக உள்ளது. மேற்குச் சுற்றில், மார்க்கண்டேயர் வழிபட்ட லிங்கம் மற்றும் ஏழூர்த் தலங்களின் சப்த லிங்கங்கள். திருவேதிக்குடியின் வேதிபுரீஸ்வரரும் இருக்கிறார். வடமேற்கு மூலையில், மகாலட்சுமி; மற்றும் பஞ்ச லிங்கங்கள். வடக்குச் சுற்றி லிருந்து கிழக்குச் சுற்று திரும் பினால், நவக்கிரகங்கள்.
சுற்றி வந்து மூலவர் சந்நிதி வாயிலில் நிற்கிறோம். சந்நிதி வாயிலில் நிற்கும் அதிகார நந்தியை வணங்கிவிட்டு, உள்ளே நுழைகிறோம். மகா மண்டபமும் அர்த்த மண்ட பமும் தாண்டி, அர்த்த மண்டப வாயிலில் உள்ள விநாயகரையும் துவார பால கர்களையும் வணங்கி உள்ளே நோக்கினால்... ஆஹா! என்ன திவ்வியமான காட்சி! அருள்மிகு சோற்றுத் துறைநாதர் எனும் தொலையாச் செல்வர்.
 நம்பனே நான்மறைகள் ஆயினானே 
 நடமாட வல்லானே ஞானக் கூத்தா கம்பனே கச்சி மாநகருளானே 
 கடிமதில்கள் மூன்றினையும் பொடியா 
 எய்தஅம்பனே அளவிலாப் பெருமையானே 
அடியார்கட்கு ஆரமுதே ஆனேறு ஏறும் செம்பொனே திருச்சோற்றுத்துறையுளானே 
 திகழொளியே சிவனே உன் அபயம் நானே’
என்று நாவுக்கரசர் பாடியபடியே பணிந்து நிற்கிறோம். அழகிய லிங்கத் திருமேனி. ஓதவனேஸ்வரர் என்றும் இவருக்குத் திருநாமம் உண்டு. அப்படியென்றால்?
பழந்தமிழில், ‘ஓதம்’ என்ற சொல்லுக்கு ஈரம், கடல், அலை, வெள்ளம், குளிர்ச்சி ஆகிய பிற பொருள்களோடு ‘உணவு, சோறு’ ஆகிய பொருள்களும் காணப்படுகின்றன. ஓதனம் என்றாலும் உணவு, சோறு என்ற பொருள்கள் உள்ளன. பொம்மல் போனகம் அன்னம் ஓதனம் சோறெனவுரைப்பர் என்று திவாகரம் எனும் இலக்கண நிகண்டு கூறும். ஓதவனம் என்றால் கடல். கடல் நஞ்சைத் தாமுண்டு, மக்களுக்குச் சோறு படைக்கும் பரமனாருக்கு, எல்லா வகையிலும் பொருத்தமான பெயர்தான்!
மகாமண்டபத்தில் இடப் புறம் அருளாளத் தம்பதியும் சிலாரூபமாக உள்ளனர். வலப் பக்கம் காசி விஸ்வநாதர் காட்சி தருகிறார். குடமூக்கு உள்ளிட்ட தலங்களை வணங்கிக் கொண்டே சோற்றுத்துறை அடைந்த சுந்தரர், இங்குக் கௌசிகப் பண்ணில் பதிகம் பாடினார்.
ஓதக் கடல்நஞ்சினை உண்டிட்ட
பேதைப் பெருமான் பேணும் பதியாம் சீதப் புனல் உண்டெரியைக் காலும்
சூதப் பொழில்சூழ் சோற்றுத் துறையே
இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்
தலையால் தாழும் தவத்தவர்க்கு என்றும்
தொலையாச் செல்வச் சோற்றுத் துறையே
இறைவனிடத்து அன்பும் அர்ச்சனையும் செய்ய வேண் டும். அர்ச்சனை செய்ய மலர் இல்லையென்றால், மலர் தேடும் சக்தியும் இல்லையென்றால், பரவாயில்லை, வெறும் இலையைக்கூட இறைவனார் ஏற்றுக் கொள்வார். ‘சோற்றுத்துறை சுகவளம்’ என்று வள்ளலாரால் பாடப் பெற்ற சோற்றுத்துறை நாதரை வணங்கி மீண்டும் பிராகார வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்களான தெற்குச் சுற்று தட்சிணாமூர்த்தியும், வடக்குச் சுற்று துர்கையும் தனிக்கோயில் போல மண்டபம் கொண்டிருக்கிறார்கள். சண்டிகேஸ்வரரும் தனி மண்டபத்தில் வீற்றிருக்கிறார்.
திருச்சோற்றுத்துறைத் திருக்கோயிலில், சூரியனும் இந்திரனும் வழிபட்டிருக்கிறார்கள். பராந்தகச் சோழன் காலத்திலும், முதலாம் ஆதித்த சோழன் காலத்திலும் இந்தக் கோயிலுக்கு நிறையத் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. கோயிலில் உள்ள நிறைய கல்வெட்டுகளின்மீது, சமீப காலத் திருப்பணிகளின்போது சுண்ணாம்பு பூசியிருக்கிறார்கள். சோழ அரசிகள், இந்தக் கோயிலில் விளக்கெரிக்கவும் விழாக்கள் நடத்தவும் நிறைய நிவந்தங்கள் கொடுத்துள்ளனர்.
இதுவொரு பிரார்த்தனைத் தலம். குறிப்பாகத் திரு மணத் தலம். எந்தக் கோயில்களில் எல்லாம், சுவாமிக்கு வலப் புறத்தில் அம்பாள் எழுந்தருளி இருக்கிறாரோ, அந்தக் கோயில்கள் எல்லாம் ‘திருமணக் கோலத் தலம்’ எனும் பெயர் பெறும். தஞ்சைப் பகுதி திருமணக் கோலத் தலங்களில், சோற்றுத்துறை முக்கியமானது.
திருவையாற்றைச் சேர்ந்த சப்தஸ்தானத் தலங்கள் என்கிறபோதே, நந்திதேவரின் திருமணம்தான் நினைவுக்கு வரும். சிலாத முனிவரின் மகனான ஜப்பேசனை, அவனது குறைந்த ஆயுளை நீட்டிக்கும் விதமாக, கங்கை நீர், பிரம்ம கமண்டல நீர், அம்பிகை யின் பால், மேக நீர், ரிஷபத்தின் வாய் நுரை ஆகியவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வித்து நந்தி தேவராக்கி வைத்தாரல்லவா சிவபெருமான் (திருவை யாற்றிலேயே இந்த வரலாற்றைப் பார்த்தோமே)! அந்த நந்தியை, சிவகணங்களுக்குத் தலைவராக்கி நந்திகேஸ்வரராக்கினார்; தம் மகனாக ஏற்றுக் கொண்டு திருமணமும் செய்து வைத்தார். 
சிவபக்தர்களில் முதன்மையானவரான வியாக்ர பாத (புலிக்கால்) முனிவரின் மகளான சுயம் பிரகாசைதான் (அல்லது சுயாம்பிகை) மணமகள். திருமணம் பங்குனி மாதம் புனர்பூசத் திருநாளன்று மழபாடியில் நடைபெறும். திருமணத்துக்குப் பக்கத்து ஊர் சிவபெருமான்களெல்லாம் உதவினர் என்று ஏற்கெனவே தெரிந்து கொண்டோம்.
சித்திரை மாதம் திருவையாறு பெருமானான ஐயாறப்பருக்கு பிரம்மோற்சவம். அதன் நிறைவு நாளில் (அதாவது பௌர்ணமிக்கு அடுத்த நாள்) நந்திதேவரையும் சுயாம்பிகையையும் வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர். ஐயாறப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடி பல்லக்கில் ஏறிக் கொள்வர். காலை ஆறு மணி சுமாருக்குத் திருவையாறில் புறப் படும் இந்த கோஷ்டி, முதலில் திருப்பழனத்துக்குச் செல்லும். அங்கு ஆபத்சகாயரும் பெரியநாயகியும் இவர்களை எதிர்கொண்டழைத்து உபசாரம் செய்வர். பின்னர், அவர்களும் சேர்ந்து கொள்ள, அடுத்த இடம் திருச்சோற்றுத்துறை. அதன் எல்லையிலேயே அவர்களை எதிர்கொண்டு அழைக்கும் சோற்றுத்துறைநாதரும் அன்னபூரணி அம்மையும் ஊருக்குள் அழைத்து போவார்கள். திருச்சோற்றுத்துறையில் வருபவர்களுக்கு எல் லாம் அன்னம் பாலிக்கப்படும். பின்னர், இந்த ஊர்வலம் திருவேதிக்குடி நோக்கித் தொடரும்.
சோற்றுத்துறை நாதரையும் அன்னபூரணியை யும் மீண்டும் வணங்கி நிற்கிறோம். ‘அன்னம் பாலிக்கும் ஆண்டவனே, எங்கள் பிறவிப் பிணிக் கும் மருந்து கொடப்பா!’ என்று வேண்டியபடி வெளி வருகிறோம்.

No comments:

Post a Comment