Friday, 11 August 2017

அன்பில்


யிலுக்கும் மூஞ்சூறுக்கும் வேலையான வேலை! வேறொன்றுமில்லை... இரண்டு மூன்று நாட்களாக, மேகங்கள் கூட்டமாகக் கவிந்து, குளிர் காற்றையும் மழைத் துளிகளையும் தோற்றுவித்துக் கொண்டிருந்தன.
மேகங்களைக் கண்ட மயில், மயிலோன் முருகனைக்கூட அவ்வப்போது மறந்து விட்டது. மகிழ்ச்சியில் ஒரே ஆட்டம்தான். மூஞ்சூறுக்கோ, மயிலின் ஆட்டத்தைக் கண்டு மகிழவே நேரம் போதவில்லை. இங்கும் அங்கும் ஓடுவதும் கற்களின் மீது ஏறி, கால்களை அசைப்பதுமாக ஒரே கோலாகலம்.
வசதியாக, விநாயகரும் முருகனும் கூட, இரண்டு நாட்களாக எங்கேயும் கிளம்பவில்லை. போதாக்குறைக்கு, ஐயனிடம் சொல்லிவிட்டு காளையும் அம்பாளிடம் சொல்லிவிட்டு சிங்கமும் கூட வந்து விட்டன. அனைவரும் தன்னை ரசித்து, கொண்டாடுகிற மகிழ்ச்சியில், மயிலின் ஆட்டமோ ஆட்டம்!
கலாபம் விரித்தாடிய கோல மயில், ஓரக்கண்ணால் மற்றவர்களைப் பார்த்தது. தனது முதுகு மீது வாலை லாகவமாகப் போட்டுக் கொண்டு, பிடரியை லேசாகச் சிலிர்த்தபடி, கண்களில் எல்லையில்லா கரிசனத்துடன் சிங்கர் நோக்க... காளையாரோ வாய்கொள்ளா சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டிருந்தார்.
இவர்களே இவ்வளவு ரசித்தால், நண்பனான மூஞ்சூறு எவ்வளவு ரசிக்க வேண்டும். ஆசை ஆசையாக மூஞ்சூறைப் பார்த்தது மயில். அடடா! என்னாயிற்று? மூஞ்சூறின் பார்வை வேறெங்கோ!
'எனது ஆடலை விட்டு விட்டு, வேறெதையோ என்ன பார்க்க வேண்டிக் கிடக்கு?!'- கோபம் தலை தூக்க... ஆட்டத்தை விடாத மயில், மூஞ்சூறின் அருகில் மெள்ள வந்தது. ஆனாலும் மூஞ்சூறின் கவனம் சிதையவில்லை. இன்னும் பக்கத்தில் போன மயில், தனது கூரிய அலகால் மூஞ்சூறின் வாலைக் குத்தியது. மெதுவாக நகர்ந்து கொண்ட மூஞ்சூறு, ஏதோ சைகை காட்டியது.
மூஞ்சூறு காட்டிய திசையில் மயில் நோக்க... இவர்களது சிறு சண்டையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காளையும் சிங்கமும் கூட அந்த திசை நோக்கி திரும்பின.
மூஞ்சூறின் கவனத்தை ஈர்த்தது? வேறு யார்... எல்லாம் நம்முடைய பிள்ளையார்தாம்!
கண்கள் பாதி மூடியிருக்க, முகமெல்லாம் பரவசமாகத் தலையைச் சிறிதே சாய்த்து... விநாயகரின் கவனம் எங்கோ முழுமையாகப் பதிந்திருந்தது.
கணைநீடு எரிமால் அரவம் வரைவில்லாஇணையா எயில் மூன்றும் எரித்த இறைவர்பிணைமா மயிலும் குயில்சேர் மட அன்னம்அணையும் பொழில் அன்பில் ஆலந்துறையாரே சடைஆர் சதுரன் முதிரா மதிசூடிவிடைஆர் கொடியன்று உடை எந்தை விமலன்கிடைஆர் ஒலி ஒத்து அரவத்து இசை கிள்ளைஅடைஆர் பொழில் அன்பில் ஆலந்துறையாரே
மேகத்தில் ஸ்ருதி கூட்டி, மின்னலில் விசையேற்றி, விண்ணில் பண்ணெடுத்து விந்தையெல்லாம் சேர்த்தெடுத்து, காற்றில் கலந்து வந்து காதலுடன் தொட்ட பாடல்கள். தக்க ராகப் பாடல்களுக்கு இடையிடையே யாழொலி!
தலையைச் சாய்த்து, தும்பிக்கையால் தாளம் தட்டியபடி, இசையின் இன்ப வெள்ளத்தில் மூழ்கியிருந்த விநாயகரின் அருகில், மூஞ்சூறு மெள்ள வந்து அமர்ந்தது. முதலில் தயங்கிய மயிலும் கலாபத்தைக் கோத்துக் கொண்டே வந்து நிற்க... எங்கிருந்தோ திடுதிப்பென்று முருகப் பெருமானும் வந்து சேர்ந்தார். சிம்மமும் காளையும் ஆளுக்கொரு பக்கம் சாய்ந்து உட்கார்ந்தே விட்டன.
செடியார் தலையில் பலி கொண்டினிதுண்டபடியார் பரமன் பரமேட்டி தன்சீரைக்கடியார் மலரும் புனல்தூவி நின்றேத்தும்அடியார் தொழும் அன்பில் ஆலந்துறையாரே
பாட்டின் ஒலி பாங்காகத் தொடர்ந்தது.
இதற்கிடையில், சுற்றிலும் கேட்ட சத்தத்தால் விழித்த விநாயகர், இசையைக் கேட்கும்படி எல்லோருக்கும் சைகை காட்டினார்.
சில மணித்துளிகளுக்குப் பிறகு, பாட்டின் ஒலி கரைந்து கொள்ளிட நதியின் வெள்ள ஒலி தலை தூக்கியது. ''பாட்டு கேட்பதென்றால், அப்பாவைப் போலவே அண்ணாவுக்கும் கொள்ளைப் பிரியம்!'' என்று கண் சிமிட்டியபடி முருகன் சொல்ல, மயில் ஓர் அங்கீகாரப் புன்னகையை வீசியது. மூஞ்சூறு இன்னமும் இசை வெள்ளத்திலிருந்து எழவே இல்லை போலும்!
''அண்ணா, பாடுவது யாரோ பிஞ்சுக் குரலாகத் தெரிகிறதே! ஓங்கார நாதரான தங்க ளின் கவனம் யார் மீதோ?''- ஒன்றும் தெரியாதது போன்ற குறும்புடன் முருகன் கேட்க, தும்பிக்கையாலேயே தம்பியின் காதுகளைத் திருகினார் விநாயகர். ''அண்ணா, என் காதுகள் சிறியவை. இப்படிப் பிடித்து இழுத் தாவது உங்கள் காது போல், என் காதையும் பெரிதாக்கப் பார்க்கிறீர் களோ?!''- விளையாட்டாக சிணுங்கினார் முருகன். மயிலிடமிருந்து இறகு ஒன்றை வாங்கி வந்த காளை யார், அவரின் காதுகளை வருடி விட்டார்.
''என்னைப் போலவே உன் காதுகளும் பெரிதானா லாவது, உன்னால் இசையைச் சுவைக்க முடிகிறதா பார்க்கலாம்! நீ நெருப்புக்காரன், உனக்கெங்கே இசையும் இசைவும் புரியும்?''- விநாயகரும் தமது பங்குக்குச் சீண்டினார்.
அதற்குள், ''யானைப் பிள்ளையே! அது எவரு டைய பாட்டு?'' - இனியும் தாங்க முடியாது என்ற அவசரத்துடன் வினவினார் சிங்கர்!
''அப்படிக் கேளும். அது, சீகாழிச் சிவக்கொழுந்து ஞானசம்பந்தப் பிள்ளையின் பாட்டு!'' என்று விநாயகர் விளக்கினார்.
''அதுதானே பார்த்தேன். அடிக்கடி கேட்ட குரலாக ஒலித்ததே!''- நெற்றிச் சுருக்கத்தைத் தளர்த்திய படியே காளையார் குரல் கொடுத்தார்.
''எங்கே ஆளுடைய பிள்ளையார்?'' என்று ஆடி யோடி மூஞ்சுறு தேடியது.
விநாயகர் தொடர்ந்தார் ''மேக மூட்டத்தைக் கண்டு ஆட்டம் போட்டீர்களே... கொள்ளிடத்தில் வெள்ளம்! திருக்கானூர் வந்து தரிசித்த ஞான சம்பந்தன், கொள்ளிடத்தைத் தாண்டி இங்கு வர இயலாமல் சிக்கிக் கொண்டான். அங்கிருந்தே பாடினான். காழிச் செம்மலின் காதல் இசைக்கு வசப்படாமல் இருக்க முடியுமா?''
''என்ன இருந்தாலும் பெரிய காதுகள் இருந்தால் இதுவொரு வசதி. தூரத்தில் பாடுவதுகூட, வெள்ள ஓசையைத் தாண்டியும் கேட்டு விடும்''- என்று... தன் நாயகனாம் முருகப் பெருமானின் காதுகளை விநாயகர் திருகியதற்காக, இன்னமும் ஆதங்கம் தீராத மயில், யானைக் காதுகளைத் தனது அலகால் நீவியது.
''அண்ணா, அடுத்தென்ன திட்டம்? ஆளுடைய பிள்ளை எப்போது, எப்படி வருவார்?''- முருகப் பெருமான் கேட்டார்.
''தெரிந்தும் தெரியாதது போல நடிப்பதே உனக்கு வழக்கம்! கவலைப்படாதே, நாளை வெள்ளம் வடிய... ஞானசம்பந்தர் அன்பில் ஆலந்துறையை அடைந்து விடுவார்!'' என்றார் விநாயகர்.
சோழநாட்டுத் திருத்தலங்களில் அன்பிலும் ஒன்று. அன்பில் ஆலந்துறை என்பதே முழுமையான பெயர். கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இருக்கும் இந்தத் தலத்தில் உள்ள விநாயகர், 'செவி சாய்த்த விநாயகர்' என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.
அவரின் செவி சாய்த்ததற்கான காரணம், கொள்ளிடத்தின் தென்கரையில் நின்று ஞான சம்பந்தர் பாடியதை செவி மடுத்ததே ஆகும் என்று கர்ண பரம்பரைக் கதை வழங்குகிறது. இதுபற்றி, சேக்கிழார் எதுவும் கூறவில்லை. என்றாலும், தலையைச் சாய்த்தபடி காட்சி கொடுக்கும் இந்த தலத்து விநாயகரின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்!
வாருங்கள், அன்பில் ஆலந்துறை செல்லலாம்.
அன்பில் ஆலந்துறை. திருச்சியிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவிலும் லால்குடியிலிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருச்சி மற்றும் லால்குடியில் இருந்து நிறைய பேருந்துகள் உள்ளன. அழகிய கிராமமான அன்பில், கீழ அன்பில், மேல அன்பில் என்று இரு பகுதிகளாக உள்ளது. மேல அன்பில்- வைணவ திவ்விய தேசங்களுள் ஒன்று. சுந்தரவல்லி நாச்சியார் உடனாய வடிவழகிய நம்பி, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் தலம். இந்த தலத்துக்கு மண்டூக மகரிஷியின் பெய ரால் மண்டூகபுரி என்றும் பெயருண்டு (இதனால், கொள்ளிடத்துக்கு மண்டூக தீர்த்தம் எனும் திருநாமமும் உண்டு). கீழ அன்பில் என்பதுதான் ஆலந்துறையாரான சத்தியவாகீசர் கோயில் கொண்டுள்ள பாடல் பெற்ற தலம்.
திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிய சிறப்புமிக்க அன்பில் திருக்கோயில். கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. கோபுரத்தில்... அம்பிகையின் திருமணக் கோலம், ஊர்த்துவ தாண்டவமாடும் பரமசிவன், கஜசம்ஹாரமூர்த்தி என்று ஏராளமான வடிவங்கள்.
கோயிலுக்குள் நுழைகிறோம். சற்றே விசாலமான உள்ளிடம். நமக்கு இடப் பக்கத்தில் குளம். கட்டுமானமும் படிகளும் இருந்தாலும், பாசி படிந்து கிடக்கிறது. சந்திர தீர்த்தம் என்றும் சிவ தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிற இந்தத் தீர்த்தத்தில் ஐந்து கிணறுகள் உள்ளன. மதில் ஓரமாக கோயிலின் மடைப்பள்ளி. நிறைய செடி- கொடிகளுடன் காணப்படும் இந்தப் பகுதியிலேயே, சில அடிகளில், உள் வாயில். இந்த வாயிலின் உள்பகுதிகளில் பற்பல கல்வெட்டுகள். இந்த வாயிலைத் தாண்டி உள்ளே சென்றால், வெளிப் பிராகாரத்தை அடைகிறோம்.
வெளிப் பிராகாரத்தில் ஒரு புறம் நந்தவனம். இன்னொரு புறம்... சாதாரணமாகக் கோயிலின் உள் சுவர் இருக்கும் இல்லையா? இங்கேயும் சுவர் இருக்கிறது; ஆனால், சற்று வித்தியாசமாக! நடுநடுவே உள்ள தூண்கள், பழங் கால கட்டுமானமாக உள்ளன. தூண்களுக்கு இடைப்பட்ட சுவர்ப் பகுதி, நவீன கால கான்க்ரீட் கட்டுமானம். ஏன்?
வெளிப் பிராகாரத்தை வலம் வந்து, மூலவர் சந்நிதிக்குச் செல்வதற்காக சில படிகள் ஏறி, உள் பிராகாரப் பகுதியை அடையும்போது காரணம் புரிகிறது. வேறொன்றுமில்லை... தொடக்கத்தில், வெளிச் சுற்றும், அதிலிருந்து ஒருசில அடிகள் உயரத்தில் உள் சுற்றும் இருந்திருக்கின்றன. உள்சுற்று என்பது உண்மையில், மூலவர் சந்நிதியைச் சுற்றி அமைந்த, தூண் களுடன் கூடிய மண்டபம் போன்ற உயரமான பகுதி. இதற்குத் தூண்கள் உண்டே தவிர, சுற்றுச் சுவர் கிடையாது. பாதுகாப்பு கருதி பிற்காலத்தில் தூண்களை ஒட்டியபடி சுவர் கட்டப்பட்டுள்ளது. பழைய முறைப்படி பார்த்தால், இரண்டும் சேர்ந்து ஒரே சுற்றுதான்.
படிகள் ஏறுவதற்கு முன்னதாக, இரண்டு பக்கத் தூண்களிலும், பக்கத்துக்கு ஒருவராக தரிசனம் தரும் விநாயகரையும் முருகரை யும் வணங்குகிறோம். படியேறியதும், நந்தி. இங்கிருந்து பார்த்தாலே மூலவர் சந்நிதி தெரிகிறது. பிராகாரம் சுற்றத் தொடங்கு கிறோம். உள் பிராகாரக் கிழக்குச் சுற்றில், முதலில் சூரியன். தென்கிழக்கு மூலையில், வடக்கு நோக்கியபடி நால்வர் பெருமக்களான ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் மற்றும் மாணிக்க வாசகர். இவர்களுடன் பெரியபுராண ஆசிரியரான சேக்கிழாரும் இருக்கிறார். தெற்குச் சுற்று வழியாக நடந்து, தென்மேற்கு மூலையை அடைய, அங்கு விநாய கர் சந்நிதி. உள்ளே ஒரு விநாயகர் வீற்றிருக்க, வெளியே இன்னொரு விநாயகர். ஆஹா, ஆஹா! இவர்தாம் நம்முடைய சிறப்பு நாயகர்; செவி சாய்த்த விநாயகர்!
ஞானசம்பந்தரின் பாடலை மட்டுமல்ல. திருநாவுக்கரசரது பாடல்களையும் இவர் செவி சாய்த்துக் கேட்டதாகச் சொல்லப்படுகிறது! இவருக்கு, 'சாமகானம் கேட்ட விநாயகர்' என்றும் ஒரு திருநாமம் உண்டு. அதென்ன கதை?
பராந்தக சோழர், அக்னிஹோத்ரிகள் நூற்றியெட்டு பேரை, இந்த கிராமத்தில் குடியேற்றினார். அவர்களைக் கொண்டு வேத பாராயணம் செய்யச் சொன்னார். இந்த அக்னிஹோத்ரிகள், ஜைமினி சாம வேதத்தைச் சார்ந்தவர்கள்; சாமகானம் இசைத்தவர்கள். இவர்களது சாம இசையையும் செவி சாய்த்துக் கேட்டவர், செவி சாய்த்த விநாயகர். எல்லாவற்றையும் செவி சாய்த்துக் கேட்டவர், நமது வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் செவி சாய்த்துக் கேட்பார் என்ற நம்பிக்கையில், எல்லா வற்றையும் பிள்ளையாரின் திருவடிகளில் கொட்டுகிறோம்.
அடுத்து, லிங்கோத்பவர், பிட்சாடனர், விசாலாட்சி உடனாய காசி விசுவநாதர். வடமேற்கு மூலையில், சுப்பிரமணியர் சந்நிதி. வள்ளி- தெய்வானை சமேதரான முருகர், பன்னிரு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். மயில், முருகரின் இடப் புறமாகத் திரும்பியுள்ளது.
வடக்குச் சுற்றில் திரும்பி வர, சண்டிகேஸ் வரர் மண்டபத்தைத் தாண்டியதும், கிழக்கு நோக்கிய நிலையில் அம்மன் சந்நிதி. சிறிய அர்த்த மண்டபம் கொண்ட இந்தச் சந்நிதியில், அருள்மிகு சௌந்தரநாயகி அம்மன். நான்கு திருக் கரங்களுடனும், அபய- வர முத்திரைகளுடனும், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார். பராந்தக சோழன் காலத்தில்தான், அம்மன் சந்நிதி கட்டப்பட்டதாம். அதற்கு முன்னர், மாடக் கோயிலாக இருந்ததாம். ஐயனுடைய உணர்வாகவும், நினைவாகவும், கருத்தாகவும் விளங்கும் அம்மையை வணங்கி, வடக்குத் திருச்சுற்றிலேயே தொடர்கிறோம். அடுத்து, நவக்கிரகச் சந்நிதி. சனி பகவான் மட்டும் வாகனத்துடன் உள்ளார்.
வடகிழக்கு மூலையில், கால பைரவர். கிழக்குச் சுற்றில், தனியாக சனி; அடுத்து சந்திரன். பிராகாரத்தை வலம் வந்து, மூலவர் கருவறைக்கு முன்பாக உள்ள மண்டபப் பகுதியைச் சேர்ந்து விட்டோம். நிறைய தூண்கள்; பலப்பல சிற்பங்கள். இவை, பல்வேறு காலகட்டத் திருப்பணிகளைப் பிரதிபலிப்பனவாக இருந்தாலும் பெரும்பாலான சிற்பங்களில் சோழர் முறைகள் தென்படுகின்றன. அன்னம், புலி, யாளி, முனிவர்கள், பூதகணங்கள் ஆகியவற்றுடன், அனுமன், கிருஷ்ணர், பிரம்மா ஆகியோரும் சிற்பச் சிலைகளாகக் காட்சி தருகின்றனர்.
மூலவர் கருவறைக்கு முன்பாக உள்ள தூணில், உழவாரப் படையைக் கையில் ஏந்திய திருநாவுக்கரசர். எதிர்ப் பக்கத் தூண் ஒன்றில் பிரம்மா. மற்றும் ஒரு தூணில், இரண்டு பாம்புகள் பின்னிப் பிணைந்திருக்கின்றன; இடையில் சிவலிங்கம். தூண் சிற்பங்களில், நமது கருத்தைக் கவர்வது பிரம்மன். இவர் சற்றுக் கூடுதலாகவே காணப்படுகிறார். பிராகார வலத்தில், கருவறைச் சுவர்களிலும் பிரம்மா நிறையவே கண்ணில் பட்டார். என்னவென்று உணர்ந்து கொள்ள, முதலில் மூலவரை தரிசிக்கலாம், வாருங்கள்.
தூண்களை ரசித்தபடி நாம் நின்றிருந்த மண்டபத்தை நந்தி இருப்பதால், நந்தி மண்டபம் என்றே அழைக்கலாமா? நந்தி மண்டபத்திலிருந்து மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றுடன் கூடிய கருவறை. மகா மண்டபப் பகுதியில், விதவிதமான கண்ணாடி சர விளக்குகள். ஒரு பக்கம் நடராஜ சபை. நடராஜருக்கு அருகிலேயே பிற உற்சவ விக்கிரகங்கள். நடராஜ சபைக்கு எதிரே, உள் பிராகாரத்திலிருந்து உள்ளே வருவதற்கான பக்க வாட்டு வாயில்.
அர்த்த மண்டபம் தாண்டி பார்வையைச் செலுத்தினால்... அருள்மிகு சத்தியவாகீசர்! பிரம புரீஸ்வரர் எனும் திருநாமமும் கொண்டுள்ளார். சதுரபீட ஆவுடையாருடன் கூடிய அழகிய சிவ லிங்க மூர்த்தம். இவருக்கு ஏன் சத்தியவாகீசர் எனும் திருநாமம்?
ஆதியில் இங்கு பிரம்மதேவன், சிவனை வழிபட்டார். தொடர்ந்து, 'வாகீசர்' எனும் தவசீலரும் இங்கு வந்து தங்கி, ஆஸ்ரமம் அமைத்து வழிபட்டார். சத்தியலோகவாசியான பிரம்மாவும் வாகீசரும் பூசித்ததால், இரண்டும் இணைந்த திருநாமம் போலும்! தவிர, பிரம்மா வழிபட்டதை உணர்த்தும் வகையில் பிரம புரீஸ்வரர் எனும் பெயரும் வழங்கப்படுகிறது.
வானம் சேர்மதி சூடிய மைந்தனைநீநெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலைஆனஞ் சாடியை அன்பிலாலந் துறைக் கோன் என் செல்வனைக் கூறிட கிற்றியேபிறவி மாயப் பிணக்கில் அழுந்தினும்உறவெலாம் சிந்தித்து உன்னி உகவாதேஅறவன் எம்பிரான் அன்பில் ஆலந்துறைமறவாதே தொழுதேத்தி வணங்குவமே
என அப்பர் பெருமான் பாடித் துதிக்கும் மெய்யலி நாதரை வணங்கி வழிபட்டு மீண்டும் உள்வாயில் அருகில் வருகிறோம். மூலவர் சந்நிதிக்குச் செல்லும் வழியை அண்ணாந்து பார்க்கிறோம். மேலே... விடையேறு மங்கைபாகன் நடுவில் இருக்க, அவரின் இருபுறமும் ஞான சம்பந்தரும் நாவுக்கரசரும் நின்று பாடுவது போன்று அமைத்திருக்கிறார்கள். பாடல் கேட்கும் பரமனாரின் விந்தைகளை வியந்து கொண்டே பார்வையைச் சுழலவிட்டால், நந்தவனப் பகுதியில் தெரியும் ஆலமரங்கள்! ஆம், இந்தத் தலத்தின் தல மரம் ஆலம்; ஆலம் செழித்த ஆற்றங்கரைதான் ஆலந்துறை.
அன்பிலானின் அருள் பெற்று, ஆனந்தத்துடன் வெளியே வருகிறோம்.

No comments:

Post a Comment