அந்த மகானிடம் பக்தர் ஒருவர் கேட்டார் 'நான் எவ்வளவு பிரார்த்தனை செய்தாலும், கடவுள் எனக்கு அதைப் பூர்த்தி செய்வது இல்லையே?'
'பிரார்த்தனை நிறைவேறிவிட்டால், அதற்குப் பிறகு நீ பிரார்த்தனையை நிறுத்தி விடுவாய் என்றுதான்!'
_ மென்மையும் வெகுளித்தனமும் நிறைந்த இந்த விடையில்... ஆழ்ந்து நோக்கினால் எத்தனை மேதைமை, எத்தனை ஞானம், எத்தனை அமைதி!
சில நேரங்களில், சின்னச் சின்ன சொற்களாலும் பல நேரங்களில் சொற்களே இல்லாமலும் ஞானப் பாதையில் பலரை நகர்த்திச் சென்ற மகான்...
பதினேழு வயதில் ஏற்பட்ட பரபிரம்ம அனுபவத் தைத் தொடர்ந்து, உடலின் நினைப்பொழித்து ஆத்ம அனுஸந்தானத்திலேயே மூழ்கித் திளைத்த பரம ஞானி...
மானுடப் பிறப்பின் கட்டுகளை உணர்ந்து, அவற்றுக்கு ஏற்ப ஆன்ம பயணத்துக்கு வழிகாட்டிய ஆசான்...
'சின்னக் கருப்பன்' என்ற நாயிலும், 'ராஜா' என்ற குரங்கிலும் அத்வைத ஆன்மாவைக் கண்டு கொண்டு, இரட்டைத் தாரகைகளாகப் பிரகாசித்த விழிகளுடன் ஒளி காட்டிய மகரிஷி--
காந்தமும் இரும்பும்போல் கவர்ந்து எனை விடாமல்
கலந்து என்னோடு இருப்பாய் அருணாசலா _ என்று திருவண்ணாமலையில் நின்று கலந்துவிட்ட பகவான் ஸ்ரீரமணர்தான், மேலே குறிப்பிட்டுள்ள விடையைத் தந்தவர்!
கலந்து என்னோடு இருப்பாய் அருணாசலா _ என்று திருவண்ணாமலையில் நின்று கலந்துவிட்ட பகவான் ஸ்ரீரமணர்தான், மேலே குறிப்பிட்டுள்ள விடையைத் தந்தவர்!
1879-ஆம் ஆண்டு, ஆருத்ரா தரிசனத் திருநாளன்று, புனர்பூச நட்சத்திரம் நிறைந்த நேரத்தில் (டிசம்பர் மாதம்- 29/30 இரவு 100 மணி), வேங்கடராமன் என்கிற பிள்ளைத் திருநாமத்துடன், பகவான் ரமணர் அவதரித்தார்.
இந்த மகானின் அவதாரத் தலமான திருச்சுழியல், சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் மாணிக்கவாசகராலும் பாடப்பெற்ற திருத்தலம்; பாண்டி பதினான்கு என்று பெயர் பெற்ற பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுள் 10-வது பெருந்தலம். அருள்மிகு துணைமாலை அம்மை உடனாய அருள்மிகு திருமேனிநாதரின் புகழ்த் தலமாம் திருச்சுழியலை தரிசிக்கச் செல்வோமா?
நல்லதொரு ஆட்சி செய்யும் தலைவனைப் போற்றி, அவனது பத்து அங்கங்களையும் பாடுகிற முறைக்கு, 'தசாங்கம்' என்று பெயர். பெயர், நாடு, ஊர், ஆறு,மலை, ஊர்தி, படை, பறை, மாலை, கொடி ஆகியவை இந்த அங்கங்களாம். சிவபெருமானின் திருத்தசாங்கங்களைப் பாடுகிற மாணிக்கவாசகர், அவருக்கான நாடு என்று எதைக் குறிக்கிறார் தெரியுமா? வேறு எதை? தென்பாண்டி நாட்டைத்தான்!
| ஏதம் இலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிலுக்கும் நாதன் நமை ஆளுடையான் நாடு உரையாய் -- காதலர்க்கு அன்பு ஆண்டுமீளா அருள்புரிவான் நாடு என்றும் தென்பாண்டி நாடே தெளி |
தம் மீது அன்புகொண்டு வழிபடுபவர்க்கு, மீளாத அன்பு தந்து அருள் புரியும் சிவபெருமானின் நாடு, பாண்டி நாடு. அந்தப் பாண்டி நாட்டில், 'பாண்டி பதினாலு
தன்னில் பத்தாம் தவமுடையர்' எனும் பெருமையு டன் இறைவனார் விளங்குகிற தலமே, திருச் சுழியல்.
தற்காலத்தில், 'திருச்சுழி' எனப்படும் இந்த ஊர் (கொச்சை வழக்கில் திருச்சுளி), விருதுநகர் மாவட் டத்தில், மதுரை- அருப்புக்கோட்டை- பரமக்குடி பேருந்து சாலையிலும், விருதுநகர்- மானாமதுரை ரயில் மார்க்கத்திலும் உள்ளது. விருதுநகருக்குக் கிழக்கே சுமார் 40 கி.மீ., மதுரைக்குத் தெற்கே சுமார் 45 கி.மீ., அருப்புக்கோட்டையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருச்சுழி. மதுரை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருது நகர் ஆகிய ஊர்களிலிருந்து திருச்சுழிக்கு நிறைய பேருந்து வசதி உண்டு.
தம் தோழரான சேரமான்பெருமாள் நாயனாருடன், ராமேஸ்வரம் சென்று தொழுது விட்டு, அங்கிருந்தபடியே ஈழத் தலமான திருக்கேதீஸ்வரம் வணங்கிய பின்னர், திருச்சுழியல் அடைந்தார் சுந்தரர். பெருமான் மீது நட்டபாடை பண்ணில் பதிகம் பாடினார்.
| ஊனாய் உயிர் புகலாய் அகலிட மாய்முகில் பொழியும் வானாய் வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின் தேனாதரித்(து) இசைவன்டினம் மிழற்றுந் திருச்சுழியல் நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே |
_ என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளால் பாடப்பெற்ற திருச்சுழிக்குள் நுழையும்போதே, மனம் நிறைய அமைதி வந்து அமர்கிறது. கிராம வாடை குன்றாத அழகான தலம்.
தலபுராணத்தின்படி, இந்த ஊருக்குப் பலவித மான பெயர்கள் காணப்படுகின்றன.
காடு கழனிகள் நிறைந்த வளமையான ஊர் ஆதலால் வயலூர்; பிறவிப்பிணி தீர்க்கும் முத்திபுரம், முத்திநகரம்; அரச மரங்கள் சூழ்ந்த பகுதியாதலால் அரசவனம், போதிவனம்; திரிசூலத்தால் தூக்கி நிறுத்தப்பட்ட தலம் என்பதால் சூலபுரம்; சுழித்ததால் சுழியல், சுழிகை, சுழிகாபுரி, ஆவர்த்தபுரம், கலபுரம், கலநகர்.
முன்னொரு காலத்தில் (கிருதயுகம் என்கிறது தல புராணம்), சந்திரசேனன் எனும் பாண்டிய மன் னன் ஆட்சிக் காலத்தில், பிரளயமெனப் பொங்கி வந்ததாம் கடல்! மன்னன், சிவனாரை வணங்கித் தொழ, பிரளயத்தை அப்படியே சுழிக்கச் செய்து, நிலத்துக்குள் புகச் செய்தாராம் சிவனார். நீர் சுழித்ததால், சுழியல்.
ஆவர்த்தம் என்றாலும், கலம் என்றாலும் சுழித்தல், வட்டமிடுதல் என்ற பொருள்கள் உண்டு (சுழித்து, வட்டமிட்டுச் செய்யப்படுவதால், பானைக்கும் கலம், கலயம் போன்ற பெயர்கள் ஏற்பட்டன). இதே பொருளால், இந்தத் தலத்துக்கு 'ஆலபுரம்' (ஆலம்- நீர்) என்ற பெயரும் வந்தது. கயிலையைக் காட்டி லும் சிறப்பானது
என்பதால், இங்கே சுயம்புவாக சிவனார் எழுந்தருளினாராம்!
இவை மட்டுமின்றி, இன்னும் பற்பல சிறப்புகள்கொண்ட இந்தத் தலத்தில், அருள்மிகு திருமேனிநாதர் கோயில் நடுநாயகமாக விளங்குகிறது. பெரிய ஆலயம். ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தைச் சேர்ந்தது.கிழக்குத் திருவாயிலின் வழியே உள்ளே நுழையலாம். அரசவனம் என்பதற்கேற்ப, வாசல் பகுதி யில் அரச மரங்கள். அரசடி விநாயகரும் இருக்கிறார். ஐந்து கரத்தானை வணங்கி உள்ளே சென்றால், விசாலமான முன் னிடம்; நேரே சென்றால், அம்மன் சந்நிதி. நமக்கு வலப் பக்கத்தில், பெரிய குளம். அதன் எதிரே சுவாமி சந்நிதி. வாசலில் உள்ள பெரிய குளமே, கவ்வைக் கடல்.
| கவ்வைக் கடல் கதிறிக் கொணர் முத்தங்கரைக்(கு) ஏற்றக் கொவ்வைத் துவர் வாயார் குடைந்து ஆடும் திருச்சுழியல் தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார் அவ்வத்திசைக்கு அரசாகுவார் அலராள் பிரியாளே |
என்று சுந்தரர் பாடியதால், இது கவ்வைக் கடல். ஒலிப்புணரி (கவ்வை- ஒலி) என்றும் பெயர் உண்டு. கவ்வை என்றால் துன்பம், பழி, வருத்தம் என்றும்
பொருள்கள் கொள்ளலாம்!
கவ்வைக் கடல் தீர்த்தத்தைத் தாண்டி ஆலயத்துள் நுழைகிறோம். இறைவனின் அடியை நாடும்போது, துன்பமிகு பிறவிக் கடலைத் தாண்ட வழி கிடைக்கிறது என்பதுதான் எவ்வளவு பொருத்தம்! இறைவனார் பிரளய நீரைச் சுழிக்கச் செய்தபோது, பிலத்துள் (பிலம்- பாதாளம்) பாய்ந்த நீர், ஒலித்துக் கொண்டே போயிருக்க வேண்டும். எனவே, இது கவ்வைக் கடல் ஆகியிருக்கும். நீராழி மண்டபத்துடன் கூடிய தீர்த்தத்தைப் பணிந்து, ஸ்வாமி கோயில் வாயிலை அடைகிறோம்.
முதலில் கம்பத்தடி மண்டபம். கொடிமரம், பலிபீடம் ஆகியவை இங்கே உள்ளன. ஒருபக்கம் ஸ்ரீவிநாயகர் சந்நிதி; மற்றொரு பக்கம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நிதி கம்பத்தடி மண்டபத்தில் இருந்து அப்படியே வெளிப் பிராகார வலம் வர முடியும். அது இல்லாமல், நேராகச் சென்றால், ஸ்வாமி கோபுரம்; ஏழு நிலை ராஜ கோபுரம். அதிகார நந்தி நிற்கிறார். வணங்கி, உள்ளே செல்கிறோம். சுவாமி சந்நிதி உள் பிராகாரத்துக்கு வந்து விட்டோம்.
முதல் பிராகாரமான இதற்கு, நாயக மண்டபப் பிராகாரம் என்றும் பெயர் உண்டு. கிழக்குச் சுற்றில் முதலில் உஷா- பிரத்யுஷா சமேத சூரியன், அடுத்து விநா யகர். தெற்குச் சுற்றில் திரும்புகிறோம். தென்கிழக்கு மூலையில் விநாயகர். அடுத்து சைவ நால்வர். தொடர்ந்து அறுபத்துமூவர். இந்தச் சுற்றில் கிணறு ஒன்றும் உள்ளது. அறுபத்துமூவருக்கு இடையில், உள்ளே இருக் கும் நடராஜ சபைக்கு எதிராக, இங்கே அகலிகை- கௌதமர் உருவங்கள். இவர்கள் எங்கே இங்கே வந்தார்கள் என்கிறீர்களா?
உற்ஸவ விக்கிரகங்களிலும் அகலிகை- கௌதமரைக் காணலாம். கௌதமரால் சபிக்கப்பட்ட அகலிகை கல்லானாள் அல்லவா? ஸ்ரீராமனால் சாபம் நீங்கப் பெற்றாள். பின்னர், தன் மீதான குறை முழுமையாக நீங்க இந்தத் தலத்துக்கு வந்து, இறைவனை வணங்கி வழிபட்டாளாம். கௌதமருக்கும் அகலிகைக்கும் சிவ பெருமானும் பார்வதியும் திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்தனர்.
பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர்; தொடர்ந்து மேற்குச் சுற்றில் வரிசையாக சோமாஸ்கந்தர், விநாயகர், விஸ்வநாதர்- விசாலாட்சி, லட்சுமி மற்றும் பூமாதேவி உடனாய சுழிகை கோவிந்தர். வடமேற்கு மூலையில், வள்ளி- தெய்வானை சமேத மயில் வாகன- நான்கு கர நின்றகோல ஸ்ரீசுப்ரமணியர். வடக்குச் சுற்றின் கிழக்குப் பகுதியில் நடராஜர். கிழக்குச் சுற்றில் திரும்பியதும் ஸ்ரீகால பைரவர்; அடுத்து ரோஹிணி- கிருத்திகா சமேத சந்திரன்; அடுத்து, தனியாக சனி பகவான். வலம் வந்து நிறைவு செய்து, ஸ்வாமி சந்நிதிக்குள் நுழைகிறோம்.
| வருமேனி பிறப்பொழித்து மருவிய சாயுச்சியமே தருமேனிக் கவலையினித் தளர்வொழி நீ மடநெஞ்சே கருமேனிப் பரந்தாமற் குஒருபாகம் கலந்துஅளித்த திருமேனிப் பெருமானைப் பணி கமலச் சேவடியே |
- என்று தலபுராணம் போற்றும் திருச்சுழியல் எம்பெரு மான். இவருக்கு இன்னும் பற்பலத் திருநாமங்கள். கல்யாணக் கோலம் காட்டியதால்- மணக்கோலநாதர், கல்யாண சுந்தரர். சுழிக்கச் செய்ததால்- சுழிகேசர்!
| உற்றான் நமக்கு உயரும் மதிச் சடையான் புலன் ஐந்தும் செற்றாற் திருமேனிப் பெருமான் ஊர் திருச்சுழியல் பெற்றான் இனிது உறையத் திறம்பாமைத் திருநாமம் கற்றார் அவர் கதியுட்செல்வர் ஏத்தும் அது கடனே |
- என்று சுந்தரர் பாடினார் இல்லையா? சுந்தரர் பாட்டைக் கேட்பதற்காகப் பல நூறு வேடம் ஏற்கும் பெருமான், அவர் வைத்த பெயருக்கு எவ்வளவு மகிழ்வார்?!
திருமேனிப்பெருமான், திருமேனிநாதர் என்ற பெயர்களால் அறியப்படுகிறார். இதுவே வடமொழியில், 'தனுநாதர்' என்றும் ஆனது. மூலவரை வழிபட்டு உள் பிராகாரத்தை மீண்டும் வலம் வருகிறோம்.
கருவறையைச் சுற்றிலும் அகழி அமைப்பு. கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் மற்றும் துர்கை பிராகாரத்தில் இறங்காமல், உயரத் திலேயே கோஷ்ட மூர்த்தங்களை வலம் வரும் வகையில், தூண்களுடன் கூடிய மேடை இருக்கிறது தனி மண்டபத்தில், சண்டேஸ் வரர் விசாலமான உள் பிராகாரத்தில் வலம் வரும்போது, இந்த முறை நம் கண்களை ஏதோ ஈர்க்கின்றன... விதானத்தில் காணப்படும் அற்புதமான ஓவியங்கள்.
இந்த ஸ்வாமியைத் திருமேனிப்பெருமான் என்று சுந்தரர் அழைத்தது
பொருத்தம்தான்! ஊரும் பேரும் இல்லாமல், வடிவமும்கொள்ளாமல் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்த பரம் பொருளான பிரான், நமக்காகத்தானே வடிவும் ஊரும் பேரும் கொண்டு நிற்கிறார். ஒன்றில்லாத வடிவுகொண்ட பரபிரும்மம், திருமேனி தாங்கி நிற்பதால், திருமேனிப் பெருமான்! ஊழிப் பிரளய காலத்தில், அத்தனையும் அந்தப் பரம்பொருளுக்குள் அடங்கி நிற்கும். மீண்டும் உயிர்கள் பிறந்து, பொருள்கள் தோன்றுவதும் ஊழி முதல்வனிடத்தில் இருந்துதான். அனைத்தையும் படைத்து அனைத்துள்ளும் நின்று அனைத்து மேனியுமானவர் திருமேனிப் பெருமான்!
எப்படி எப்படிப் பார்த்தாலும் பொருத்தமான திருநாமம். பின்னே, சுந்தரர் என்றால் சும்மாவா?
வற்றாத அருள்நாதர்மட்டுமல்ல திருமேனிப் பெருமான்; பக்தர்களது அன்புக்கும் உணர்வுக்கும் பாத்திரமானவர்.
அன்புடை நெஞ்சத்து இவள் பேதுற அம்பலத்தடியார்
என்பிடை வந்து அமிழ்து ஊறநின்று ஆடி இருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்து அன்னம் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல் துயிலும் வயலூரன் வரம்பிலனே
என்பிடை வந்து அமிழ்து ஊறநின்று ஆடி இருஞ்சுழியல்
தன்பெடை நையத் தகவழிந்து அன்னம் சலஞ்சலத்தின்
வன்பெடை மேல் துயிலும் வயலூரன் வரம்பிலனே
காண்போர் உள்ளம் உருகும்படியாகத் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுபவன்தான். ஆனாலும் எப்படிப்பட்டவன் தெரியுமா? அவனது ஊரான திருச்சுழியலில், ஓர் அன்னம் செய்வது போல்தான் இவனது செய்கையும்; நீரில் வாழ்கிற அன்னம், தன் பெடை அன்னத்தை (பெண் அன்னம்) வருந்தச் செய்து விட்டு,'சலம்சலம்' எனும் சங்கின் பெடை மீது கிடக்கிறது. வயல் நிறைந்த சுழியல் வயலூரன், அந்த தகவிலாத அன்னத்தைப் போன்று தகவில்லாதவன். தன் தலைவியை வருந்தச் செய்து, வேறிடம் போயிருக்கும் இவனும் தகவில்லாதவன்தான்.
ஆஹா! இறைவனிடம்தான் பக்தர்களுக்கு எவ்வளவு உரிமை! நாயகி பாவத்தின் அக இலக்கணத்தை ஆதாரமாகக் கொண்ட
திருக்கோவையார் பாடல் என்றாலும், உரிமையோடு குறை சொல்ல வும் கோபத்தோடு முகம் திருப்பவும் சுழியல்பிரானிடம் ஊடல் கொள்கிறார் மாணிக்கவாசகர். அன்பரின் அன்புக்குக் கட்டுப்பட்ட திருமேனிநாதர் அதற்கும் மகிழ்ச்சி அடைவார்!
திருக்கோவையார் பாடல் என்றாலும், உரிமையோடு குறை சொல்ல வும் கோபத்தோடு முகம் திருப்பவும் சுழியல்பிரானிடம் ஊடல் கொள்கிறார் மாணிக்கவாசகர். அன்பரின் அன்புக்குக் கட்டுப்பட்ட திருமேனிநாதர் அதற்கும் மகிழ்ச்சி அடைவார்!
திருமேனிநாதரைச் சித்தமெல்லாம் நிரப்பிக் கொண்டே, உள் வாயில் தாண்டி மீண்டும் கம்பத்தடி மண்டபம் வருகிறோம்
இங்கிருந்தே அம்மன் கோயில் செல்லலாம். தனிக் கோயில் என்றே சொல்லும் படி
உள்ளது அம்மன் சந்நிதி. ஸ்வாமி சந்நிதிக்குத் தெற்காக, கிழக்குப்பார்த்தபடி, ஸ்வாமி சந்நிதிக்கு இணையாக அமைந்துள்ளது. இவ்வாறு ஸ்வாமிக்கு வலப் பக்கத்தில் அம்மன் சந்நிதி... அதுவும் ஒரே திசை நோக்கியபடி இணையாக இருந்தால், அத்தகைய தலத்தைத் திருமணத் தலம் என்பது வழக்கம். ஸ்வாமியும் அம்பாளும் திருமணக் காலத்தில் (கோலத்தில்?) உள்ளபடி காட்சி தருகிறார்கள்.
இரண்டு சந்நிதிகளையும் இணைக்கும் வாயில் மண்டபத்தின் வழியாக அம்மன் சந்நிதி முகப்பை அடைகிறோம். முதலில் கோயிலுக்குள் வந்தபோது, கவ்வைக் கடலுக்குப் பக்கத்தில், ஒரு விசாலமான முன்னிடத்தில் நின்றோமே... அந்த இடத்திலிருந்து நேரடியாக அம்மன் கோயிலுக்கு வந்திருந்தால், மூன்று நிலை கோபுரம் ஒன்று வரும். கோபுரத்துள் நுழைந்து வந்தால், இப்போதிருக்கும் இந்த இடத்துக்கு வந்து விடுவோம். சந்நிதிக்குச் செல்லும் உள்வாயிலில் பெரிய திருவாசி. உள்ளே நுழைந்ததும் இருக்கும் மண்டபத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி. சில படிகள் ஏறி உள்ளே சென்றால், அம்பாளின் உள் பிராகாரம். சுற்றின் தென்மேற்கு மூலையில் ஸ்ரீவிநாயகர் சந்நிதி; வடமேற்கு மூலையில் வள்ளி- தெய்வானை சமேத முருகன். மயிலுடனும் நான்கு திருக்கரங்களுடனும் ஒற்றைத் திருமுகத்துடனும் தரிசனம் தருகிறார். வடக்குச் சுற்றில் தனி மண்டபத்தில் சண்டிகேஸ்வரி வடகிழக்குப் பகுதியில், பள்ளியறை. அருகில் உற்சவ அம்பாள். வலம் நிறைவு செய்து, அம்பாள் சந்நிதிக்குள் நுழைகிறோம். அர்த்த மண்டபம்; அடுத்ததாகக் கருவறை. அம்பாள் அருள்மிகு துணை மாலை நாயகி.
துணை மாலையோடும் சுழியல் நகர் மேவும்
இணையார் திருமேனி ஈசா
இணையார் திருமேனி ஈசா
_ என்பார் உமாபதி சிவம். ஐயனுக்குத் துணை யாக இருந்து, பக்தர்களுக்குத்
துணை செய்து, அருள் வழங்கும் அம்பாள் துணைமாலை நாயகிதாமே! நீர் பொங்கி வந்தபோது, அதனை பிலத்துள் சுழிக்கச் செய்த பிரான், திருமேனி தாங்கி சிவலிங்கமாகக் காட்சி கொடுத்தார்; அம்பாளும் அவருடன் அவருடைய உள்ளுறை சக்தியாகக் காட்சி தந்தாள்; துணைமாலை ஆனாள். அம்பாள் திருமேனி அழகோ அழகு. அசப்பில் மதுரை மீனாட்சி அம்மனின் அதே தோற்றம். கழுத்து, இடுப்பு மற்றும் இடது கால் சற்றே சாய்ந்த திரிபங்கி திருக்கோலம். சாந்தமே உருவாக தரிசனம் தரும் அம்பாளை வணங்கி நிற்கிறோம்.
இது, ஒரு காலத்தில் ருத்ர பூமியாக விளங்கியதாம். பூமியை சாந்தப்படுத்த, அம்பாள் சுயம்பு நாயகியாக சுபங்கரியாக (நன்மை செய்பவள்) தோற்றம் தந்தாள். அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில், மேலே ஸ்ரீசக்கரம் வடிக்கப்பட்டுள்ளது. தீமைகளைக் களைந்து நன்மைகளை நிறையச் செய்ய அம்பாள் அருள்கிறாள்.
அம்பாளுக்குச் சகாயவல்லி என்றும் ஒரு திருநாமம். சகாயம் செய்பவள்.
பராக்கிரமப் பாண்டியன், தனது பாவம் அகல இங்கு வந்து பிரார்த்தித்தான். அப்போது அம்பாள், அவனுக்குச் சகாயம் செய்து, சிவனாரையும் அருள வைத்தாளாம். முத்துமாலை உமையாள் (என்ன இருந்தாலும் முத்துடை பாண்டி நாட்டின் செல்வச் சீமாட்டி அல்லவா), சொர்ணமாலை, மாணிக்கமாலை, ரத்னேஸ்வரி (அனைத்து ரத்தினங்களும் மணிகளும் தங்கமும் வெள்ளியும் அவள்தாமே) என்றும் திருநாமங்கள் உண்டு. அம்மன் சந்நிதி கட்டுமானம் வெகு சிறப்பு. கருவறை அகழி அமைப்பு; வெளிச்சம் வருவதற்காக சுவர்களின் மேல் பகுதியில் சுற்றிலும் சாளரங்கள்; அழகான தூண்கள் அம்மன் கோஷ்டத்தில் இச்சா, கிரியா, ஞான சக்திகள். அம்மனை வழிபட்டு வெளியே வருகிறோம்.
முகப்பு மண்டபம் வந்தால், அங்கிருந்து 2-ஆம் பிராகார (வெளிப் பிராகாரம்) வலம் வரலாம். அப்படியே சுற்றி வரலாமா? அம்பாள் சந்நிதி மற்றும் ஸ்வாமி சந்நிதி இரண்டையும் சேர்த்தது 2-ஆம் பிராகாரம். அம்பாள் சந்நிதிக்கு எதிரில், இந்தப் பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளி அறைகள்.
தென்மேற்கு மூலையில் அண்ட பகிரண்ட விநாயகர். தந்தை பிரளயம் சுழித்தவர்; அப்போது அண்ட பகிரண்டம் மீண்டும் தொடங்க, விக்னம் நீக்கியவர்
இவராகத்தாமே இருக்க வேண்டும். அவ்வளவு பெரிய பிள்ளையார்... ஆனாலும் மிக மிகச் சிறிய மூஞ்சூறு. அண்ட தத்துவத்தின் அமைப்பே இப்படித்தானோ!
இந்தப் பிராகாரத்தின் மேற்குச் சுற்று முழுக்க நடப்பதற்கு வசதியாகக் கல் தளம் போடப்பட்டிருக்கிறது. இதே மேற்குச் சுற்றில், தல மரமான புன்னை. இந்த பகுதிக்கே ஒரு காலத்தில் புன்னை வனம் என்று பெயர் உண்டாம். வடமேற்கில், வள்ளி- தெய்வானை சமேத நான்கு கர மயிலேறுநாதர்; அழகோ அழகு!
2-ஆம் பிராகார வடக்குச் சுற்றில் திரும்புகிறோம். கிழக்குப் பார்த்தபடி ஒரு சந்நிதி. முன்னால் நந்தியும் பலிபீடமும். சிறிய முகப்பு மேடையும், முன் மண்டபமும் கொண்ட தனிக் கோயில். துவார விநாயகரும் துவார சுப்பிரமணியரும் உள்ளனர். இங்கு எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீபிரளய விடங்கர். வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய பெரிய லிங்கம்.
வடக்குச் சுற்றிலேயே, இன்னும் சற்று தள்ளி, ஒரு நந்தவனம். இங்குதான் பிரம்ம தீர்த்தம் இருந்ததாம்; திருப்பணி காலத்தில் மூடப்பட்டுவிட்டதாம். 2-ஆம் பிராகார வடகிழக்கு மூலையை அடைகிறோம். இங்கே தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார் ஸ்ரீதண்டாயுதபாணி. மேற்கு நோக்கிய திருமுக மண்டலம். கொடிமரமும் மயிலும் பலிபீடமும் கொண்ட சந்நிதி. சற்றே உயரத்தில் உள்ள இந்தச் சந்நிதியில் கிளி கொஞ்சும் முகத்தோடு குழந்தையான ஆண்டியப்பர். அருகில், வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள இடம். கிழக்குச் சுற்றிலேயே, நவக்கிரகச் சந்நிதி.
வெளிப் பிராகார வலத்தை நிறைவு செய்து மீண்டும் கம்பத்தடி மண்டபத்தை அடைந்து விட்டோம்.
பாண்டிய நாட்டை, அழகானதொரு பெண்ணாக உருவகம் செய்து, அவளின் நாபிதான் திருச்சுழியல் என்றார் திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்சோதியார்.
கொங்கையே பரங்குன்றமும் கொடுங்குன்றும் கொப்பூழ்
அங்கமே திருச்சுழியல் அவ்வயிறு குற்றாலம்
செங்கை ஏடக மேனியே பூவணம் திரள் தோள்
பொங்கர் வேய் வனம் திருமுக மதுரையாம் புரமே
அங்கமே திருச்சுழியல் அவ்வயிறு குற்றாலம்
செங்கை ஏடக மேனியே பூவணம் திரள் தோள்
பொங்கர் வேய் வனம் திருமுக மதுரையாம் புரமே
அவள் அழகான மங்கை; அவளின் மார்புகள்- திருப்பரங்குன்றமும்
பிரான்மலையுமாம் (கொடுங் குன்றம்); கொப்பூழான நாபி- சுழியல்; வயிறு- குற்றா லம்; திருவேடகம்- சிவந்த கைகள்; திருமேனி- திருப்பூவணம்; அழகான திரண்ட தோள்கள்- வேணுவனம்; திருமுகமோ- மதுரை. கற்பனை அழகு என்பது மட்டுமல்ல... ஆழமான புவியியல் ஞானமும் இந்தப் பாடலில் மிளிர்கிறது. இதே ஆசிரியர், சிவபெருமான்- உமையம்மையை யோக நெறியில் மணந்த தலம் சுழியல் என்றும் சுட்டுகிறார்.
மலைமகளை
வரத யோக நெறி நின்று மணந்தார் சுழியல் வியன் நகரும்..
வரத யோக நெறி நின்று மணந்தார் சுழியல் வியன் நகரும்..
_ இது அம்மை-அப்பத் திருமணத் தலம் ஆதலால், திருமணப் பிரார்த்தனை தலமும் ஆகும்.
சுந்தரர், சேரமானுடன் இங்கு வந்து, திருமேனிநாதரை வழிபட்டுத் தங்கியிருந்தார். ஒரு நாள் இரவு... அவரது கனவில், 'இளம் காளையாக, கையில் பொற் செண்டும் திருமுடியில் சுழியக் கொண்டையும்' கொண்டு காட்சி தந்த இறைவனார், 'யாம் இருப்பது கானப்பேர்' என்று மொழிய... இங்கிருந்து, கானப்பேர் எனும் காளையார்கோவில் சென்றனர் சுந்தரரும் சேரமானும். இந்த நிகழ்ச்சி, அருகில் குண்டாற்றங்கரையில் உள்ள பள்ளிமடம் எனும் இடத்தில் நடந்ததாம். இதைக் குறிக்கும் வகையில், அங்கே ஸ்ரீகாளைநாத சுவாமி கோயில் உள்ளது.
ராமாயண அகலிகை என்ன... மகாபாரத அர்ஜுனனும் இங்கே வழிபட்டான்! தென்திசைக்குத் தீர்த்த யாத்திரை வந்த அர்ஜுனன், பாண்டிய நாட்டை அடைந்தான். இளவரசி சித்திராங்கதையை மணந்தான். திருத்தலங்களுக்குச் சென்றான். இந்தத் தலத்தில், தன் காண்டீபத்தின் நுனியால் நிலத்தைக் கல்லி, தீர்த்தம் உண்டாக்கி நீராடி வழிபட்டான். கம்பத்தடி மண்டபத்தில் இருந்து அம்மன் சந்நிதி செல்லும் வழியில், அம்மன் சந்நிதிக்கு வடகிழக் காக உள்ளது அர்ஜுன தீர்த்தம். இதுவே கோடி தீர்த்தமும் ஆகும்.
இந்திரதுய்ம்னன் என்ற பாண்டிய மன்னனின் காலத்தில், இந்தப் பகுதி முழுதும் வெள்ளம் சூழ்ந்தது. பாண்டியனின் வேண்டுகோளுக்கு இணங்க, திரிசூலம் கொண்டு இந்தப் பகுதியைத் தூக்கினார் சிவனார். அதனால் சூலபுரமான இங்கு, சூல தீர்த்தமும் உண்டு. சிவனாரின் சூலம் குத்திய இடம், கவ்வைக் கடல் நீராழி மண்டபத்தின் பின்புறம் உள்ளது.
திருச்சுழியல் பகுதியில் ஓடும் ஆறு குண்டாறு.அப்படியானால்? கௌண்டின்ய முனிவர் இங்கு தவம் செய்தார். அவருக்காக கங்கையே இங்கு பாவம் தீர்ப்பவளாக- பாவஹரி நதியாகப் பாய்ந்தாள்! கௌண்டின்யருக்காகப் பாய்ந்த ஆறு, 'கௌண் டின்ய ஆறு' என்றானது. அதுவே காலப் போக்கில் பேச்சு வழக்கில், 'குண்டாறு' என்றாகி விட்டது. ஆற்றங்கரையில் உள்ளது கௌண்டின்ய தீர்த்தம். இன்றைய காலகட்டத்தில் இவற்றுள் சில தீர்த்தங்கள் மூடப்பட்டுவிட்டன; அல்லது புழங்குவாரின்றி மண் மூடிவிட்டன.
பார்வதிதேவியார் திருமணம் வேண்டி பூஜித்த தலம் என்றும் சதானந்தர் (கௌதமர்- அகலிகை யின் மகனும் ஜனக மன்னனின் குருவும் ஆனவர்) தவம் செய்த தலம் என்றும் குறிப்புகள் காணப் படுகின்றன. திருக்கோயிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம்; 8-ஆம் நாள் மாசி மகத்தில் திருக்கல்யாணம்; 9-ஆம் நாள் தேர்; 10-ஆம் நாள் தீர்த்தவாரி என்று கோலாகலம்தான். அம்பாளுக்கு ஆடித் தபசு வெகு சிறப்பு. பங்குனி மாதத்தில் அகலிகை- கௌதமர் கல்யாண காட்சி! கோயில் கல்வெட்டுகள், பராக்கிரம பாண்டியன் காலத் தில் கருவறை கட்டப்பட்டதைத் தெரிவிக்கின்றன. முதலாம் ராஜராஜன் காலத்தில் திருப்பணிகள் ஏராளமாகச் செய்யப்பட்டன. 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த ராஜகேசரி வர்மன்' என்று முதலாம் ராஜ ராஜனைக் குறிப்பிடும் கல்வெட்டும் உள்ளது.
மற்றொரு சிறப்பையும் உள்ளூர்க்காரர்கள் காட்டுகிறார்கள். கோயிலின் வாயில் பகுதியில் ஓர் அரச மரம். தருமம் இங்கு, நான்கு யுகங்களிலும் முறையே நாவல், மா, மகிழம், அரசு என்று தாவர வடிவங்கள் தாங்கி நிற்கிறதாம். இந்த அரச மரத்தடியில் தாவர விநாயகர்.
இந்தத் தலத்துக்கான நூல்கள் ஏராளம்! திருச்சுழியல் புராணம் என்பதே தல புராணம். திருச் சுழியல் வெண்பா, திருச்சுழியல் அந்தாதி, திரிசூலபுர மகாத்மியம், துணை மாலையம்மை பிள்ளைத் தமிழ், திருச்சுழியல் கயிற்றுப் பின்னல் போன்ற நூல்கள் உள்ளன. குமரகுருபரர் தமது மீனாட்சியம்மை குறம் எனும் நூலில் இந்த ஊரைக் குறிப்பிடுகிறார்.
லுக்கு அருகில் ஸ்ரீரமணர் அவதரித்த இல்லம் இருக்கிறது. ரமணாஸ்ரம நிர்வாகத்தின் கீழ், சுந்தர மந்திரம் என்று இயங்கி வரும் இங்கு சென்று ரமணரின் திருவுருவப் படத்தை வணங்கலாம்.
No comments:
Post a Comment