Tuesday, 15 August 2017

சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் ! - 1


தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
லகில் நிலவும் சமயங்களில் இந்து மதம் தனி ஒருவரால் தோற்றுவிக்கப்படாத சிறப்பு உடையது. இதைத் திருநெறி, அறநெறி, அருள்நெறி, செந்நெறி, வாழ்வியல்நெறி என்றெல்லாம் அழைக்கலாம். இந்தப் புராதன இந்து மதத்தில் அவரவர் விருப்பப்படி இறைவனை உணர்ந்து வழிபடும் சுதந்திரம் உண்டு. இங்கே இறைவனுக்கும், பக்தனுக்கும் இடையே உறவு ஏற்படுத்த எவரும் தேவை இல்லை. நமது சமய நெறிப்படி இறைவனே குருவாகி வந்து, அவரவருக்கு ஏற்ப அருள் புரியும் முறையில் ‘குருவே இறைவன்’ என்று போற்றப் பெறும் நிலையைக் காணலாம்.
‘இறைவன் இவ்வாறு இருக்கிறான்... நான் கண்டேன்... நீங்களும் கண்டு வணங்கி, இன்புறுங்கள்!’ என்று காட்டும் அனுபவசாலிகள் நிறைந்தது இந்து மதம். நம் அருளாளர்கள் பலரும் இறைவனைக் கண்டார்கள்; நாமும் காணு மாறு வழிகாட்டி உள்ளார்கள். அத்தகு ஞானியரை வாழையடி வாழையாகப் பெற்றது நம் பாரத நாடு.
அறுவகை வழிபாட்டில் (காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம், சௌரம்) தொன்மையானது சைவம் எனப்படும் சிவ வழிபாடு. சிவம் என்ற சொல்லுக்கு அன்பு, உயர்வு, கடவுள், பிரம்மம், மகிழ்ச்சி, நித்திய யோகம், நன்மை, பசு, வேதம், மங்களம் ஆகிய பல பொருள்கள் உண்டு. இப்படி பரவலாக இருக்கும் இறைவனை ‘சிவம்’ என்ற சொல்லால் அழைத்தனர். ‘சிவன்’ என்பது, சிவப்பிலிருந்து வந்திருக்கலாம். சிவப்பன்- சிவன். ‘செம்மேனி எம்மான்’ என்பது திருமுறைகள் சொல்லும் வாக்கு. உலக உயிர்கள் உய்யும் வண்ணம் முழு முதற் பொருளாகிய சிவபிரான் கொண்ட வடிவங்கள் உருவம், அருவம், அருவுருவம் என்பனவாம். உருவம்- வடிவம் உள்ளது. இதில் பிரம்மா (நான்முகன்), விஷ்ணு (திருமால்), ருத்ரன், மகேசன் என்னும் நான்கு வடிவங்கள். அருவம் என்பது வடிவம் இல்லாதது. இது, சிவம், சக்தி, விந்து, நாதம் எனும் நான்கு. அருவுருவம்- வடிவம் இருந்தும் இல்லாததுமான சிவலிங்கத் திருமேனிகள்.
அதாவது அருவம், உருவம் இரண்டு கூறுகளும் அமையப்பெற்ற முகலிங்கங்கள். தலை, உடல், கை, கால் முதலிய உறுப்புகள் அமைந்த நடராஜர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் முதலான மகேச்வர வடிவங்களை சிற்பக் கலைஞர்கள் உருவங்கள் என்று குறிப்பிடுவர்.
‘அனுக்ரஹாய லோகானாம் லிங்கானிச மஹேச்வர’ உலகங்களுக்குக் கருணை செய்யவே, லிங்க வடிவில் விளங்குகிறார் மகேச்வரர். உருவத் திருமேனிக்கும்,கண்ணுக்குப் புலப்படாத அருவத் திருமேனிக்கும், மூலமான சிவபெருமானை வழிபட அடையாளமாக விளங்குவது சிவலிங்கம்.
சிவலிங்க வழிபாடு உலகம் முழுவதும் வியாபித் திருந்ததை சரித்திர ஆராய்ச்சியாளர்களும், புதை பொருள் ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் அகழ்வாய்வின்போது முத்திரை ஒன்றில் சிந்துச் சமவெளி நாகரிக காலத்தைச் சேர்ந்த சிவன்- பசுபதி என்பதை உணர்த்தும் உருவத்துடன் சிவலிங்கங்களும் கிடைத்துள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாளரான சர் ஜான் மார்ஷல், ‘‘சிந்து சமவெளியில் தட்டுப்பட்டவற்றுள் குறிப்பிடத் தக்கது சைவத்தின் பழைமையே. அது, அதற்கும் முற்பட்ட காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இன்றளவும் வழக்கில் உள்ள மிகப் பழைமையான சமயமாக அது விளங்குகிறது!’’ என்கிறார்.
‘‘வட அமெரிக்காவின் கொலராடோ ஆற்றுப் பள்ளத்தாக்கில் அகழ்வாராய்ச்சி செய்தபோதும் சிவலிங்கங்கள் கிடைத்துள்ளன. அங்குள்ள குன்றின் மேல் சிவன் கோயில் ஒன்று இடம்பெற்றிருந்தது. அது சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்’’ என்று இலங்கை அறிஞர் ந.சி. கந்தையா, தனது ‘சிவன்’ என்னும் நூலில் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். மேலும் இவர், ஆப்பிரிக்கா- ஐரோப்பா- மத்தியக் கிழக்கு- தூரக் கிழக்கு- தென் கிழக்கு, தென் அமெரிக்கா, மெக்சிகோ, பசிபிக் தீவுகள் போன்ற பகுதிகளிலும் சிவ வழிபாடு இருந்ததை குறிப்பிடுகிறார்.
மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள ‘க்ரீட்’ தீவின் நகரங்களுள் ஒன்றின் பெயர் ‘சிவன்’. அங்கும் அகழ்வாராய்ச்சியின் போது ஏராளமான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. சிரியாவின் பழைய நகரங்களில் ஒன்றின் பெயர் ‘சிவாஸ்’. ஹிட்டைட் நாட்டில் கிடைத்த புதைபொருட்களில் ஒன்றான பழங்கால நாணயத்தில், சிங்க வாகனத்தில் வீற்றிருக்கும் பெண் உருவமும், ரிஷப வாகனத்தில் வீற்றிருக்கும் ஆணின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன. இது நம் அம்மையப்பனை நினைவூட்டுகிறது அல்லவா? லிபியா பாலைவனத்தில் உள்ள பாலைவனச் சோலை ஒன்றின் பெயர் ‘சிவன்’.
இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தைச் சார்ந்த புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் பல சிவலிங்கங்களைக் கண்டுபிடித்துள்ளனர். ஜெர்மனியிலும் லிங்க வழிபாடு தழைத்திருந்தது. ‘ஷிண்டோயிசம்’ எனும் ஜப்பானிய மதத்தில் லிங்க வழிபாடு முதன்மையானதாகக் கருதப்படுகிறது. ஆகவே, அங்கு பொது இடங்களில் லிங்கங்கள் வைத்து வழிபடப் பெற்றன.
இவற்றின் மூலம் சிவநெறி உலகம் முழுவதும் பரவியிருந்ததை நாம் அறியலாம். எனவேதான் மாணிக்கவாசக சுவாமிகள்,
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்று பாடிப் பரவுகிறார்.
இனி, ‘முக லிங்கங்கள்’ பற்றிப் பார்ப்போம்.

No comments:

Post a Comment