திருச்சி மாவட்டம் உடையார் பாளையத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்தான் ராஜேந்திர சோழன். கி.பி. 1025 முதல் சுமார் 250 வருடங்கள் கங்கை கொண்ட சோழபுரம்தான் சோழ சாம்ராஜ்யத்தின் தலை நகராக இருந்தது. கங்கை வரை படையெடுத்துச் சென்று வெற்றிக் கொடி நாட்டித் திரும்பியதன் நினைவாக உருவாக்கிய நகரம் என்பதால், இதற்கு ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்று பெயர் சூட்டினான் மன்னன் (கோயில் வளாகத்துக்கு வெளியே உள்ள மியூஸியத்தில் முதலாம் ராஜேந்திர சோழனைப் பற்றிய சரித்திரக் குறிப்புகள் உள்ளன!).
தனது தலைநகரில் இவன் கட்டிய பிரமாண்டமே, கங்கை கொண்ட சோழபுரத் திருக்கோயில். மூலவர் பிரகதீஸ்வரர். கங்கை கொண்ட சோழீச்சுரர் என்றும் சொல்வார்கள். அம்மன் பிரஹன்நாயகி. இவருக்குத் தனி சந்நிதி இருக்கிறது.
இங்குள்ள அற்புதமான சிற்பங்கள், கலையழகில் தஞ்சைப் பெரிய கோயில் சிற்பங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு உயர்ந்து நிற்கின்றன என்கிறார்கள் சிற்பக் கலை வல்லுநர்கள்.
கோபுரத்தில் தட்சிணாமூர்த்தி, நட ராஜர் உட்படக் காட்சியளிக்கும் அனைத்து சிற்பங்களும் மிகுந்த கலைநயத்துடன் விளங்குகின்றன. மூலவர் பிரகதீஸ்வரர் அமைந் துள்ள பகுதி சுமார் 18 அடி உயரம். மூலவர், சிவலிங்க வடிவில் ஏறத்தாழ 13 அடி உயரத்துடன் காணப்படுகிறார்.
பாசுபதாஸ்திரம் வேண்டி அர்ஜுனன் தவம் புரிகிறான். அவன் முன் தோன்றி வலுச்சண்டைக்கு இழுக்கிறார் வேடன் வடிவ சிவபெருமான். அருகில் வேடுவச்சியாக உமையாள். தன்னைச் சோதிக்க வேடன் வடிவில் வந்திருப்பவர் சிவன் என்று தெரியாமல் அவருடன் சண்டையிடு கிறான் அர்ஜுனன். இறுதியில் சிவன் பிரசன்னமாகி அவன் வேண்டிய அஸ்திரம் தந்தருளுகிறார்.
இன்னொரு காட்சி... சண்டிகேஸ்வரர் தன் சிவபக்திக்கு இடையூறாக இருந்த தன் தந்தையின் காலை வெட்டித் தள்ள... அப்போது சிவன் பிரசன்னமாகி தந்தை- தனயன் இருவருக்கும் அருள் பாலிக்கிறார். கோபுரத்துக்கு அருகில் படிக்கட்டுகளை ஒட்டி சண்டி கேஸ்வரரின் சிறு ஆலயம். வட கிழக்குப் பகுதியில் துர்க்கை ஆலயம்.
வட இந்தியா மீது ராஜேந்திர சோழன் படை யெடுத்துச் சென்று வெற்றிக்கொடி நாட்டி, அங்கிருந்து புனிதமான கங்கை நீரைக் கொணர்ந்து தனது தலைநகரில் கட்டிய கோயில் மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்ததுடன், அங்குள்ள பெரிய வட்ட வடிவக் கிணற்றிலும் கங்கை நீரைக் கொட்டிப் புனிதப் படுத்தினான். அந்தக் கிணறு சிம்மக் கேணி எனப்படுகிறது. சிங்க வடிவ முகப் பில் உள்ள இதற்குள் நுழைந்து படிக்கட்டில் இறங்கினால், நீர் மட்டத்தை அடையலாம்.
ராஜ கோபுரம் தவிர, கோயி லின் முகப்புக் கோபுரம் 12 அடி உயர நுழைவாயிலுடன் காணப் படுகிறது. சுமார் நூறு அடி உயரத்துக்கு மேல் கட்டப்பட்ட இந்த கோபுரம் மொட்டையாக நிற்பது பரிதாபமான ஒரு காட்சி. காலத்தின் சுழற்சியில் இது சிதிலமடைந்து விழுந்தது. ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்தில் இந்தக் கோபுரம் இடித்துத் தள்ளப்பட்டு, இதன் கற்கள் காவிரி அணை கட்ட எடுத்துச் செல்லப்பட்டது வேதனையான வரலாற்று நிகழ்வு!
கோயிலின் பிராகாரம், தஞ்சைப் பெரிய கோயிலில் அமைந்துள்ளதைப் போலவே இரண்டு அடுக்குகளில் அமைந்துள்ளது. சிற்பங்கள் எதுவும் இன்றி, தஞ்சைக் கோயிலைப் போலவே இதன் தூண்களும் காட்சியளிக்கின்றன. கோபுரத்துக்குத் தெற்கில் உயரமான தென் கயிலாய மண்டபம் ஒன்று, வெறும் பீடமாகத் தென்படுகிறது. இந்த மண்டபம் அந்தக் காலத்தில் மிகவும் கம்பீரமாக இருந்திருக்க வேண்டும். தற்போது வெறும் பீடம் மட்டுமே காணப்படுகிறது. இதன் பின்புறத்தில் பிள்ளையாருக்கு சிறு கோயில் ஒன்று இருக்கிறது.
கோபுரத்துக்கு வடக்கில், உத்தர கயிலாய மண்டபம் ஒன்றும் காணப்படுகிறது. இது முழுமையாக இருக்கிறது. கணேசர், நடராஜர், பிட்சாடனர், சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, பைரவர், அர்த்தநாரி, துர்க்கை ஆகியோரின் விக்கிரகங்கள் இங்கு காணப்படுகின்றன.
மிகப் பெரிய ராஜகோபுரம். அதில் ஏராளமான அழகுமிகு சிற்பங்கள். கோபுரத்தைச் சுற்றி சிறு கோயில்கள் என்று ஒரு கலைக் கூடமாக விளங்கும் இந்த வளாகம், பச்சைப் பசேல் என்று புற்களுடன் ‘பளிச்’சென்று விளங்குவதால் பக்தர்களும் உல்லாசப் பயணிகளும் இங்கு பெரிய அளவில் ஆர்வத்துடன் வருகிறார் கள்.
சரித்திரம் பேசும் ஒரு சாதனைக் கோயிலை தரிசித்து முடித்து வெளியே வரும்போது நெஞ்சம் நிறையப் பெருமிதம் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment