Thursday, 3 August 2017

கொழுந்தீஸ்வரர் குடியிருக்கும் குடைவரைக் கோயில் !

 
சி வகங்கைச் சீமையின் கடைக்கோடியில் திருமலை எனும் ஊரில் உள்ளது மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம். புராண மற்றும் புராதனச் சிறப்பு வாய்ந்த ஆலயம் இது.
மலையில் கோயில் உள்ளதால், இந்த ஊர் திருமலை எனப்படுகிறது. ராமரும் சீதையும் தங்க ளது பயணத்தின்போது இந்த மலையில் ஒரு நாள் தங்கிவிட்டுச் சென்றார்களாம். அவர்கள் தங்கிய மலைக் குகை தற்போது சிதைந்த நிலையில் உள்ளது. ராமர்-சீதை தங்கியதன் நினைவாக, அந்தக் காலத்தில் குகையின் கீழ் உள்ள மலையைக் குடைந்து குடைவரைக் கோயிலை எழுப்பினர். அதில் ராமரும் சீதையும் திருமணக் கோலத்தில் புடைச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் சிவகங்கை மன்னர் காலத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது சிவகங்கை தேவஸ்தானத்தின் கீழ் இந்தக் கோயில் உள்ளது.
இந்தக் கோயில் பகுதி, மூன்று அடுக்குகள் கொண்டது. முதல் அடுக்கில் கொழுந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இரண்டாவது அடுக்கில் ராமர்-சீதை தங்கிய பகுதி மற்றும் புளியமரத்து முனீஸ்வரர் ஆலயமும் மூன்றாம் அடுக்கில் கார்த்திகை தீபம் ஏற்றும் கம்பமும் உள்ளன.
இந்தக் கோயிலில் பல இடங்களில் கல்வெட்டுகள் உள்ளன. இவை அனைத்தும் சமணர்களால் பொறிக்கப்பட்டுள்ளன. ‘மனம் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், அது குடும்பப் பிரச்னையாக இருந்தாலும் இந்தக் கோயிலுக்கு வந்தால் நிவர்த்தி ஆகி விடுகிறது’ என்கின்றனர் பக்தர்கள். இங்குள்ள தெப்பக்குளத்தில் குளித்தால் காசியில் உள்ள கங்கையில் நீராடிய பலன் கிடைக்கிறது.
மன்னர் காலத்தில் இந்தக் கோயிலைப் பாதுகாத்து வந்த மாவீரன் கருவபாண்டியனுக்குக் கோயில் வாசலிலேயே சிலை வைத் திருக்கிறார்கள்.
அரசர் காலத்தில் இந்தக் கோயிலைப் பராமரித்து வந்த கருவபாண்டியன் என்ற மாவீரன் அரசனின் குதிரை வண்டியைக் கோயிலுக்கு ஓட்டி வரும்போது திடீரென்று நுரை கக்கி இறந்து விட்டான். இறக்கும் தறுவாயில் தனது கடைசி ஆசையாக அரசனிடம், ‘‘இந்தக் கோயிலை வணங்க வருபவர்கள் மத்தியில் நான் என்றும் காவலனாகவும், வரவேற்பவனாகவும் இருக்கும் வகையில் எனது சிலையை நுழைவாயிலில் வையுங்கள்!’’ என்றான். அவனது விருப்பத்துக்கு இணங்க அரசர் நிறுவிய சிலைதான் (மாவீரன் கருவபாண்டியன்) இன்றும் நம்மைக் கைகூப்பி வணங்கி வரவேற்கிறது. இதை ஒட்டி சூரியனும் சந்திரனும் சிலை வடிவில் உள்ளனர்.
திருமலையில் வற்றாத சுனை ஒன்று உள்ளது. இந்தச் சுனை நீரால்தான் மலைக்கொழுந்தீஸ்வரர் மற்றும் அம்பாள் பாகம்பிரியாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
மலையின் மேற்புறம் இரண்டா வது அடுக்கில் பம்பர வடிவில் ஒரு மலை உள்ளது. இதை ஒட்டி வளர்ந்துள்ள புளிய மரத்தின் கீழே புளியமரத்து முனீஸ்வரர் இருக்கி றார். அதன் முன்புறம் சமணர்க ளால் நடப்பட்ட நடுகல் ஒன்று உள்ளது.
இங்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதம் வித்தியாசமானது. கால் உபாதைகள் உள்ளவர்கள் கால் போன்ற அமைப்பை மலைப் பாறை யில் செதுக்கியும், கை மற்றும் கண் களில் பிரச்னை உள்ளவர்கள் அதே போன்ற உருவத்தை மலைப்பாறையில் செதுக்கியும் தங்கள் நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். இப்படிச் செதுக்கப்படும் உருவத்தின் கீழ் தங்கள் பெயரையும் பதிக்கிறார்கள். உளியால் மலையில் உருவங்களைச் செதுக்குவ தற்கென்றே உள்ளூர்க்காரர் ஒருவர் இருக்கிறார்.
கோயிலைச் சுற்றி வயல்வெளியாக இருப்பதால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கிறது. காலை ஏழு முதல் மதியம் பன்னிரண்டு மணி வரை கோயில் திறந்திருக்கும். மாலை நேரத்தில் கோயில் திறக்கப்படுவதில்லை. வித்தியாசமான தோற்றமும், வரலாற்றுச் சிறப்பும் இருப்பதால், மதுரையில் இருந்து தொல்பொருள் துறை அதிகாரிகள் கோயிலுக்கு வந்து பார்வையிட்டு சமணர்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தார் களாம். அதோடு, இந்தக் கோயிலை சுற்றுலாத் தலமாக்க ஏற்பாடுகள் செய்வதாகவும் சொல்லி இருக்கிறார்களாம்.
மேலும் சில தகவல்கள்...
 கோயிலின் மேற்புற மலைப்பகுதியில் ‘சமணர் படுகை’ உள்ளது. அதில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.
 கருவறையில் மலைக்கொழுந்தீஸ்வரரும் வெளியே வலப் புறமாக அம்பாள் பாகம்பிரியா ளும் வீற்றிருக்கின்றனர்.
 கருவறைக்கு வெளியே இரு மருங்கிலும் துவார கணபதியும் தண்டாயுதபாணியும் வீற்றிருக்கின்றனர்.
 இது ஓர் அதிசய குடைவரைக் கோயில். அந்நாளில் அரசர் சிவகங்கையிலிருந்து கோயிலுக்கு வருவதற்கான பாதாளப் பாதையுடன் கூடிய இந்த குடைவரைக் கோயிலில் அகத்தியர் தரிசனம் கண்ட ‘மீனாட்சி-சுந்தரேஸ்வரர்’ திருமணக் கோலத்தில் வீற்றிருக்கின்றனர்.
 கோயிலின் பின்பகுதியில் ஐந்தடி உயர முக்குருணி விநாயகரும் அவருக்கு முன் பகுதியில் விஷ்ணு துர்க்கையும் உள்ளனர். பொதுவாகச் சிலையின் முன்புறம் மட்டுமே செதுக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த அதிசய விநாயகரின் பின்புறமும் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. விநாயகரின் பின்பக்கத்தில் தலைமுடிகூட தெரிகிறதாம்.
 முக்குருணி விநாயகருக்கு இணையாக அதே அளவு உயரத்தில் ஆறுமுகங்களுடன் வீற்றிருக்கிறார் முருகன்.
இ ந்தக் கோயிலுக்கு சிவகங்கை யிலிருந்தும், திருப்பத்தூரிலிருந்தும் வரலாம். சிவகங்கையில் இருந்து ஒன்பது கி.மீ. தொலைவில் உள்ள திருமலைக்கு பஸ் வசதி சரியில்லை. தினமும் இரண்டு முறை மினி பஸ் சென்று வருகிறது. ஆட்டோ மற்றும் கார் மூலம் செல்லலாம்.
திருப்பத்தூரிலிருந்து பதினைந்து கி.மீ. தொலைவில் இருக்கிறது ஒக்கூர். ஒக்கூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள திருமலைக்கு குறிப்பிட்ட சில நேரங்களில் அரசு பஸ்கள் உண்டு. ஒக்கூரிலிருந்து திருமலைக்கு ஆட்டோவிலும் செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம் காலை ஏழு மணி முதல் மதியம் பன்னிரண்டு வரை. செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் உண்டு. அன்று மதியம் 2.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

No comments:

Post a Comment