த ங்கக் கிண்ணத்திலிருந்த பாலை அருந்தியது அந்த அன்னப் பேடை. அதன் முதுகை நீவிக் கொண்டிருந்த பார்வதி தேவியார், பதற்றத்துடன் திரும்பிப் பார்த்தார். கணேசனும் முருகனும், ஆளுக்கொரு புறமாக ஓடி வந்து அவர் முதுகைப் பற்றிக் கொண்டார்கள்.
‘‘என்ன கணேசா?’’ என்று அம்மை வினவ, தும்பிக்கையை நீட்டி வாயிற்புறத்தைக் காட்டினான் விநாயகன்.
கோபாவேசமாக பரமனார் புறப்பட்டுக் கொண்டிருந் தார். புரிந்து விட்டது தேவியாருக்கு - கொஞ்சம் நாட்களாகவே, ஹிரண்யாக்ஷனும் கமலாக்ஷனும் வித்யுன்மாலியும் படாத பாடுபடுத்திக் கொண்டிருந் தனர். ஒரு நாள் பிரச்னை வெடிக்கும் என்பது தேவியார் எதிர்பார்த்ததுதான்- இதோ... வெடிக்க ஆரம்பித்து விட்டது.
மூன்று அரக்கர்களும் ஆளுக்கொரு கோட்டை கட்டிக் கொண்டு, அந்தத் தங்கம்- வெள்ளி- இரும்புக் கோட்டைகளில் ஏறி, ஆகாயத்தில் பறந்து, தேவர்களையும் மனிதர்களையும் துன்பப்படுத்தி, ஆணவத்தில் ஊஞ்சலாடினர். பொறுத்துப் பொறுத்து, என்றாவது ஒரு நாள் திருந்துவார்கள் என்று எண்ணினர். அவர்கள் திருந்துகிற வழியாக இல்லை என்ற நிலையில், இதோ, இறையனார் பொங்கியெழுந்து புறப்பட்டு விட்டார்!பாடுபடுத்திக் கொண்டிருந் தனர். ஒரு நாள் பிரச்னை வெடிக்கும் என்பது தேவியார் எதிர்பார்த்ததுதான்- இதோ... வெடிக்க ஆரம்பித்து விட்டது.
உலோகக் கோட்டைகளில் ஊர் சுற்றும் அந்த மூன்று அரக்கச் சகோதரர்களை எதிர்ப்பதற்குத் தேர் வேண்டாமா?
பூமியைத் தேராக்கி, சூரியன் - சந்திரனை சக்கரங்களாகப் பூட்டி, சிந்தாமணி பவனத்தின் வாயிலில் நிறுத்தியிருந்தார் மகாவிஷ்ணு. வேதங்களே தேர்க் குதிரையாகப் பூட்டப்பட, தேர்ச்சாரதியாக பிரம்மா நின்றார்.
‘‘அம்மா... அப்பாவுக்கு ஆயுதம் வேண்டாமா?’’- முருகனுடைய கேள்வி முடிவதற்குள்ளாகவே, மேரு மலை வளைந்து வில் வடிவம் தாங்கி, ஐயன் கரத்தில் அடைக்கலமாவது தெரிந்தது. வாசுகிப் பாம்பு, வில்லுக்கு நாண் ஆனது. அடுத்த நொடிக்குள், விஷ்ணுவே அம்பாக மாற, பரமனார் வில்லேந்திப் புறப்பட்டு விட்டார்.
விநாயகன், முருகனைப் பார்க்க, முருகன் விநாயகனைப் பார்த்து முறுவல் பூக்க... அவர்களின் அர்த்த புஷ்டியான சமிக்ஞைகளைக் கண்ட அம்பிகைக்குச் சிரிப்பு வந்தது. ‘குறும்புக்காரப் பிள்ளைகள். அப்பாவின் திருவிளையாடலுக்கு நிகராக, இவர்களும் விளையாடுவார்கள்!’
சிந்தாமணி பவன வாயில் அமளிதுமளிப்பட்டது. தேவேந்திரன், வாயு, தேவ மருத்துவர்கள், அஸ்வினி தேவர்கள், வித்யாதரர்கள், ஆதித்யாதிகள் என்று ஒரே கூட்டம். ‘‘ஐயன் திருக்கோலம் காண ஆசை ஆசையாக வந்தோம்!’’ - வார்த்தைகளை உமிழ்ந்து கொண்டே தேவேந்திரன், பூமிரதம் போன தடத்தில் ஓடினான். ஏற்கெனவே சிவனார் புறப்பட்டுப் போய்விட்டதைப் புரிந்து கொண்ட தேவர்களும், பின்னாலேயே ஓடினார்கள்.
‘‘அம்மா! நாங்களும் அப்பாவின் ‘விற் கோலம்’ கண்டு வருகிறோம்!’’- தும்பிக்கையால் மயிலைச் சீண்டிக் கொண்டிருந்த விநாயகனும் விரைந்தான்; புன்முறுவலோடு நின்ற அம்பிகை மனதுக்குள் பெரியதாகவே நகைத்துக் கொண்டார் - ‘இந்த மகா குறும்பன் வேடிக்கை பார்க்க மட்டுமா போவான்?!’
தேவர்கள் பதறி ஓடுவதற்குள், ரதமானது நெடுந்தூரம் போயிருந்தது. திருக்கோலம் காண தேவர்கள் வந்து கொண்டிருப்பதை அறிந்த இறையனார், க்ஷீரா நதியருகே தேரை நிறுத்தித் திரும்பிப் பார்த்தார். நதிக்கு அப்பாலிருந்த தேவர்கள் விற்கோலம் கண்டு வணங்கி நிற்க, விநாயகனும் முருகனும் அவரவர் வாகனங்களில் ஏறி வான வீதியில் வந்து கொண்டிருந்தனர். இறையனார் சிரித்தார்.
விற்கோலம்! இறையனார் விற் கோலம் அருளியதால், திரு + விற்கோலம் என்ற பெயர் பெற்ற திருத்தலம். க்ஷீரா நதியாக விளங்கி, இன்று கூவமாகத் திகழ்கிற நதியின் கரையில் இருப்பதால், ‘கூவம்’ என்றே அழைக்கப்படுகிற ஊர். தொண்டை நாட்டின் தேவாரத் திருத்தலங்களில் ஒன்றான கூவம், கிராமச் சோலைகளின் நடுவே எழிலுடன் விளங்குகிறது.
கூவம் என்பது ஒரு பழந்தமிழ்ச் சொல். சுனை அல்லது நிலத்தடி நீர் ஊற்று என்று பொருள். சம்ஸ்கிருதத்தில், இது ‘கூபம்’ எனப்படுகிறது. கூவக் கலை என்பது மிகப் பெருமையாகப் பேசப்பட்ட பண்டைய கலைகளுள் ஒன்று. பூமியைத் தோண்டாமலே, நிலத்தடியில் தண்ணீர் ஊற்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கே கூவக் கலை என்று பெயர். கூவக் கலையைச் செயல் படுத்து பவர்கள் ‘கூவலர்கள்’ எனப் பட்டனர். பண்டைய தமிழகத்தில், கூவக் கலை புழக்கத் தில் இருந்தது. மேல்நாடுகளிலும் இந்தக் கலையைப் பற்றிய செய் திகள் உள்ளன. 1556-ல், கிரேக்கரான ஜார்ஜஸ் அக்ரிகோலா, இது பற்றிய நூலை எழுதியுள்ளார். உலகப் போர்களின்போது, இந்தியா உட் பட பல நாடுகளில் கூவக் கலை பயன்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் குறுக் காகப் பாய்ந்து வரும் கூவம் நதி, திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்குகிறது. பூமிக்கு அடியி லிருந்து ஊற்றாகப் பாய்ந்து வருகிற நதியாக இருந்ததாலேயே, கூவம் என்ற பெயர் இந்த ஊருக்கும் நதிக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். கூவம் திருத்தலத்தில்தான், கூவம் நதியின் தலை நீரோட்டம் அமைந்துள்ளது (காலப்போக்கில், பல்வேறு ஏரிகளுக்கு வடிகாலாகவும், கேசவரம் அணைக்கட்டு வழியாகக் கொரத்தலையாற்றுக்கு வடிகாலாகவும் கூவம் மாறி விட்டது என்பது வேறு செய்தி).
இறைவனின் விற்கோலம் அருளப்பட்ட இடம் என்பதால் திருவிற்கோலம் என்று இலக்கிய ரீதியாக வழங்கப்பட்டாலும், திருஞானசம்பந்தர் தமது தேவாரத்தில், திருவிற்கோலம், கூகம் ஆகிய இரண்டு பெயர்களைப் பயன்படுத்துகிறார்.
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான் கொந்துலா மலர்பொழில் கூகம் மேவினான் அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற்கோலமே’ என்று பாடுகிறார். ‘கூகம்’ என்பதற்கு ‘மறைவு’ என்று பொருள். பூமியிலிருந்து மறைந்து வெளிப்படும் நீர் ஊற்றுக்கும் கூகம் - கூபம் - கூவம் போன்ற பெயர்கள் ஏற்பட்டுள்ளன போலும்! சம்பந்தப் பெருமான் பாடிப் பரவிய கூவம் செல்வோம், புறப்படுங்கள்!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய ஊர்களிலிருந்து கூவம் செல்வதற்குப் பேருந்து வசதி உள்ளது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், செம்பரம்பாக்கத்தை அடுத்து, திருவள்ளூர் நோக்கிச் செல்லும் சாலையில் சென்று கூவம் கூட்டு ரோட்டை அடையலாம். அங்கிருந்து கூவம் ஊர் சுமார் 1 கி.மீட்டரில் உள்ளது. சுங்குவார் சத்திரம் - பேரம்பாக்கம் வழியாகத் திருவள்ளூர் செல்லும் சாலையிலும் சென்று கூவம் கூட்டு ரோட்டை அடையலாம். திருவள்ளூர் சென்று விட்டால், அங்கிருந்து திருப்பாசூர், கடம்பத்தூர் வழியாகவும் கூவத்தை அடையலாம். சென்னை-அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்தும் கூவம் செல்லலாம்.
அமைதியான கிராமம், பசுமையான தோட்டங்கள் சூழ்ந்திருக்க, ஊருக்குள் இருக்கிறது திருவிற் கோலத் திருக்கோயில். இப்போது திருப்பணிகள் நடைபெறுகின்றன.
கோயில் மதிலுக்கு வெளியில் கிழக்குப் புறத்தில், திருக்குளம். அக்னி தீர்த்தம், கூபாக்னி தீர்த்தம், அச்சிறுகேணி, கூபம் என்ற பெயர்கள் இந்தக் குளத்துக்கு வழங்கப்படுகின்றன. குளத்தின் சிறப்பு பற்றி உள்ளூர்க்காரர்கள் நிறையச் சொல் கிறார்கள். இதில் தவளைகள் இருக்காதாம். நாம் பார்க்கும்போது தவளைகள் இல்லை. வேறு எங்கிருந்தாவது கொண்டு வந்துவிட்டுப் பார்த்தா லும், வெளியேறி விடும் என்கிறார்கள். குளத்தில் மீன்கள் உள்ளன.
அக்னி தீர்த்தம், பிரார்த்தனை சிறப்புக்குரியது; புத்திரப் பேறு வேண்டுபவர்கள், இந்தக் குளத்தில் மூழ்கி இறைவனை வழிபடுவது வழக்கம். கோயிலின் பிரதான வாயில் தெற்குப் பார்த்துள்ளது. முன்னர், ராஜ கோபுரம் இருந்ததில்லை. இப்போது ஐந்து நிலை ராஜ கோபுரம் நிர்மாணிப்பதற்கான திருப்பணிகள் நடைபெறுகின்றன.
முகப்பு வாயிலின் இரு புறமும் உள்ள விநாயகரையும் முருகரையும் வழிபட்டு உள்ளே நுழைகிறோம். விசாலமான பிராகாரம். எந்தச் சந்நிதியும் இல்லை.
வாயிலிலிருந்து பிராகாரத்தில் செல்லாமல், நேராக நின்று பார்த்தால், எதிரே நடராஜர் சபை தெரிகிறது. அப்படியே நடராஜர் சபையை நோக்கி நடந்தோமானால், (நமக்கு இடப் புறம்) முதலில் அம்பாள் சந்நிதி; அதைக் கடந்து தொடர்ந்தால், மூலவர் சந்நிதி வாயிலுக்கு வந்து விடுகிறோம்.
நடராஜரை வணங்கிக் கொண்டே, கிழக்கு முகமாகத் திரும்பி, மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம். உள்பிராகாரத்தில் வலம் வந்தபின் கருவறைக்குப் போகலாமா? உள்பிராகாரம் நன்கு விசாலமாகவே உள்ளது. கிழக்குச் சுற்றில்தானே நுழைந்தோம்- தெற்குச் சுற்றில் நடந்து, தென்மேற்கு மூலையை அடைகிறோம்.
கம்பீரமாகச் சிரிக்கிறார் விநாயகப் பெருமான். ‘அச்சிறுத்த விநாயகர்’ என்பது இவருடைய திருநாமம். பூமியை ரதமாகக் கொண்டு அரக்கர்களைச் சம்ஹரிக்கப் புறப்பட் டாரல்லவா சிவபெருமான் - அப்போது, விக்னராஜரான விநாயகரை வணங்காமல் புறப்பட்டு விட்டார். தடைகளை நீக்கும் லம்போதர சுந்தரனை வணங்காமல் புறப்படலாமா? கடவுளே ஆனாலும் விதிகளை மீறலாமா? செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டிய முறையில் செய்ய வேண்டுமல்லவா!
அப்பா புறப்பட்ட தேரின் அச்சை முறியச் செய்தார் விநாயகர் - அதுதான், அச்சிறுத்த விநாயகர்!
அதுசரி, இந்தச் சம்பவம், அச்சிறுபாக்கத்தில்தானே நடந்தது - கூவத்தில் எப்படி அச்சிறுத்த விநாயகர் என்கிறீர் களா? உங்கள் கேள்வி நியாயமானதுதான்!
திரிபுர அரக்கர்களை (ஆரம்பத்தில் சொன்ன மூன்று அரக்கர்கள்) சிவபெருமான் நெற்றிக்கண் திறந்து எரித்த தலம் - திரு அதிகை; அதற்காக இறையனார் வில் தாங்கி அருளியது திருவிற்கோலம் (கூவம்); இறை யனாரின் விற்கோலம் கண்டு தேவர்கள் வழிபட்டது இலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர் - கூவம் திருத்தலத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், ஆற்றுக்கு அக்கரையில் உள்ளது); இறையனாரின் தேர் அச்சு முறிந்தது அச்சிறுபாக்கம். இதுதான், வழக்கமாகக் கூறும் பாணி. சிற்சில நேரங்களில், இறைவனுடைய திருவிளையாடல்களை, ‘இங்கு நடந்தது, எங்களூரில் நடந்தது, இங்குதான் நடந்தது’ என்று பற்பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் சொந்தம் கொண்டாடுவதையும், அவற்றுக்கேற்ப ஸ்தல புராணங்கள் அமைவதையும் பார்க்கிறோம். எல்லாம் வல்லவரும் எங்கும் நிறைந்தவருமான எம்பெருமான், ‘இங்குதான் நின்றார், இங்கு மட்டும்தான் நடந்தார்’ என்று கூற முடியுமா என்ன? மனித எல்லைகளைக் கடந்து இங்கும் அங்கும் எங்கும் அந்தப் பரம்பொருள் நடத்திய (நடத்தி வருகிற- இனி நடத்தப் போகிற) திருவிளையாடல்களை அனுபவிப்பதற்கு நாம் ஏற்படுத்திக் கொள்கிற வாய்ப்புகளே, இப்படிப் பட்ட கதைகளும் புராணங்களும் ஆகும். அப்பாவைத் தொடர்ந்து வந்து தானும் திருவிளையாடும் அந்தக் குறும்புக்காரப் பிள்ளையைப் பார்த்தபடி நிற்கிறோம்.
இங்குதான் அச்சை முறித்தாரோ, இங்கிருந்து அச்சிறுபாக்கம் சென்று, அங்குதான் அச்சை முறிப்பாரோ, எப்படியோ தெரியவில்லை - ஆனால், குறுநகை தவழக் காட்சி தருகிறார் அச்சிறுத்த விநாயகர். ‘அச்சிவன் உறைரதம் அச்சது பொடிசெய்த அதிதீரா’ என்று பாடினார் அருணகிரிநாதர் - அதிதீரனை வணங்கி நிற்கிறோம். ‘‘விக்னேஸ்வரா, அறிந்தும் அறியாமலும் யாம் செய்த பிழைகளைப் பொறுத்து, எங்கள் வாழ்க்கைத் தேரின் அச்சு முறியாமல் அருளப்பா’’ என்று வேண்டிப் பணிகிறோம்.
மேற்குச் சுற்றில், அடுத்தொரு விநாயகர், சுப்ரமணியர். மூலவருக்கு நேர் பின்புறம் லிங்கோத்பவருக்கு எதிரில் வள்ளி- தெய்வானை சமேத ஷண்முகர். பன்னிரண்டு திருக்கரங்களுடன் வேலும் கொடியும் தாங்கி அழகு வடிவத்தில் அருள்கிறார். அடுத்து பாலமுருகன் சந்நிதி. அதற்கும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி.
வடக்குச் சுற்றில் திரும்பி வலத்தைத் தொடர்கிறோம். வடகிழக்கு மூலையை அடைந்தால், பைரவர் சந்நிதி. தனிக் கோயில் என்றே கூறலாம். நின்ற திருக்கோலத்தில், தெற்கு முகமாகக் காட்சி தரும் பைரவர், தனது வாகனமில்லாமல் நிற்கிறார். வாகனத்தை எங்கே தொலைத்தார்? இதற்கும் ஒரு சுவாரஸ்யமான கதை நிலவுகிறது. இறைவனின் விற்கோலம் காண தேவர்கள் ஆசைப்பட்டார்கள் இல்லையா? அவர்களை அழைத்து வருவதற்காக பைரவர் சென்றாராம். அப்போது அவரது வாகனமான நாய் வழி தவறி விட்டதாம். எனவேதான், வாகனமில்லாமல் பைரவர் இருப்பதாகக் கர்ணபரம்பரைக் கதை வழங்குகிறது.
கதையின் சுவாரஸ்யத்துக்குள் சிந்தனைக்கான செய்தியும் உள்ளது. பைரவரின் வாகனமான நாய், வேதங்களின் வடிவம். வேதங்களே சிவபெருமானுக்குத் தேர்க் குதிரைகளானதாகத் திரிபுர வரலாறு சொல்லும். அதனால் ஒருவேளை, நாய் இல்லாமல் பைரவரைக் காட்டி இருக்கிறார்களோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
திரிபுர அரக்கர்கள் கதை, நாம் ஒவ்வொருவரும் உள்முக நோக்கத்தோடு அணுக வேண்டிய கதை. மனித மனதில் உறையும் ஆணவ மலங்களின் வடிவங்களே, மூன்று அரக்கர்கள் எனலாம். மனக் கோட்டையிலும் எண்ணக் கோட்டையிலும் வாழும் மனிதர்கள், தங்கமும் வெள்ளியும் இரும்பும் எஃகும் இன்னும் பல பொருட்களும் தங்களைக் காப்பாற்றி விடும் என்று நினைப்பது போலத்தான், உலோகக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டு, இங்கும் அங்கும் அலைந்தால் தப்பித்து விடலாம் என்று அந்த அரக்கர்களும் நினைத்தார்கள்.
வேதங்கள் என்பவை நெறிகள்; வாழ வேண்டிய வகையைக் காட்டும் வழிமுறைகள். வழிமுறை தவறிப் போகும்போது எஞ்சுவது அரக்கத்தனம். அதனால்தான், இறைவனைக் காண தேவர்களுக்கு வழிகாட்ட நாய் சென்றதாகவும். அரக்கத்தனத்தை அழிக்கப் புறப்பட்ட தேரில் வேதங்களே குதிரைகள் ஆனதாகவும் கதைகளை நம் முன்னோர் அமைத்தனர்.
ஓரிடத்தில் ஒரு சிலை இருப்பதற்கும் ஆழமான காரணங்கள், இல்லாமல் இருப்பதற்கும் ஆழமான காரணங்களா! சிவாம்ச ஸ்வரூபமாக விளங்கும் பைரவரை வணங்கிக் கொண்டே சந்நிதியின் விமானத்தை அண்ணாந்து பார்க்கிறோம். ஆச்சரியம் மேலிடுகிறது. தொலைந்து போன வாகனம் திரும்பி வந்து ஒன்றுக்குப் பலவாக விமானத்தில் ஏறிக் கொண்ட மாதிரி, நாய் வடிவச் சிற்பங்கள் பற்பல, சுதைச் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.
வலத்தை நிறைவு செய்து விட்டோம். முதலில், நடராஜ சபை எதிரில் நின்று அங்கிருந்துதானே உள்பிராகார வலத்தைத் தொடங்கினோம்... அந்த இடத்துக்கு மீண்டும் வந்து விட்டோம். நமசிவாயத் திருமந்திரத்தை ஓதிக் கொண்டே மூலவர் கருவறைக்குள் நுழைகிறோம். முன் மண்டபத்தில் ஒரு பக்கம் உற்சவர் விக்கிரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், விநாயகர், சுக்கிரவார அம்மன், பள்ளியறை மூர்த்தி, பிட்சாடனர், மான், துர்க்கை அம்மன், லட்சுமி, சரஸ்வதி, நால்வர் என்று எழில் கொஞ்சும் உற்சவ மூர்த்தங்கள். பக்கத்தில், சைவ நால்வர் பிரதிஷ்டை.
மெள்ளத் திரும்பி மூலவரை தரிசிக்கிறோம். அருள்மிகு திருவிற்கோல நாதர். திரிபுராந்தகேஸ்வரர் என்றும் திருநாமம் உண்டு. சுயம்புலிங்கமாக, தீண்டாத் திருமேனியாகக் காட்சி தருகிறார்.
ஐயன் நல் அதிசயன் அவன் விண்ணோர் தொழும்மையணி கண்டனார் வண்ணம் வண்ணவான் பையரவு அல்குலாள் பாகம் ஆகவும் செய்யவன் உறைவிடம் திருவிற்கோலமே! என்று
ஞான சம்பந்தர் பாடிப் பணிந்த பரமனார் இவர்தாம்!
அதென்ன ‘ஐயன் - அதிசயன்’! சென்ற நூற்றாண்டு வரை, இந்த சிவலிங்கம், சில அறிகுறிகளைக் காட்டியதாம். மழை மிகுந்து வெள்ளம் வருவதாக இருந்தால், முன்னதாகவே சிவலிங்கத்தின் மீது வெண்மை படருமாம்; அதே போன்று, போர் வரப் போகிறது என்றால், செம்மை படருமாம். இப்போது இந்த அறிகுறிகள் தென்படுவதில்லை. இருந்தாலும், இதைக் குறித்தே ஞானசம்பந்தர் ‘ஐயன் - அதிசயன்’ என்று பாடியதாகத் தெரிகிறது.
கிழக்குப் பார்த்தவராக, கஜ பிருஷ்ட விமானத்தின் கீழ் கோயில் கொண்டுள்ள திரிபுராந்தகேஸ்வரர், இன்னொரு விதத்திலும்கூட அதிசயர் என்று சொல்கிறார்கள். இவருக்கான அபிஷேக நீர் ‘திருமஞ்சன மேடை’ என்ற இடத்திலிருந்து வர வேண்டும். திருமஞ்சன மேடை, கூவம் ஆற்றின் கரையில் (கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில்) உள்ளது. இதற்கென்றே ஆட்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் திருமஞ்சன மேடை சென்று நீர் கொண்டு வருவர். ஒருவேளை யாராவது சோம்பல்பட்டு, கூவம் வரை செல்லாமல், வேறு ஏதேனும் நீர் கொண்டு வந்து, அதைக் கொண்டு அபிஷேகம் நடந்து விட்டால், சுவாமி திருமேனி மீது சிற்றெறும்புகள் ஊரத் தொடங்குமாம்.
அதிசயராகவும் அரவணைப்பவராகவும் விளங்கும் திரிபுராந்தகேஸ்வர ரைத் தொழுது, மீண்டும் உள்பிராகார வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை. சண்டேஸ்வரர் ஆகியோரும் இருக்கின்றனர். மீண்டும் ஒரு முறை மூலவரை வழிபட்டு வெளியில் வருகிறோம். நடராஜ சபையை அடைகிறோம். தெற்குப் பார்த்து ஆடிக் கொண்டிருக்கும் ஆடல்வல்லானைத் தொழுகிறோம். உள்ளூர்காரர்கள், நடராஜரை ரக்ஷ£ நடராஜர் என்கிறார் கள். காளிக்கு அருள் புரிந்த பின்னர், அமைதியாக ஆடும் நடனம்- ரக்ஷ£ நடனம். காளிக்குப் பாதுகாப்பு அளித்தமையால் ‘ரக்ஷ£ நடனம்’ (ரக்ஷ£ - பாதுகாப்பு) என்பதாக ஐதீகம். சித்திரை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். அப்போது, ஆறாவது நாள், காளிக்கு அருளிய நிகழ்ச்சி இடம்பெறும். பிரம்மோற்சவம் பத்தாம் நாளன்றும், மார்கழி திருவாதிரைத் திருநாளன்றும் நடராஜர் வீதியுலா வருவார்.
நடராஜரைப் பணிந்து அருகிலுள்ள அம்பாள் சந்நிதியை அடைகிறோம். அம்பாள் சந்நிதியும், சுவாமி சந்நிதியைப் போலவே கிழக்கு நோக்கிய சந்நிதி. தனியாகக் கொடிமரம்; சிம்ம வாகனம். கொடிமரத்துக்கு முன்னால் துவஜாரோஹண மண்டபம் என்கிற நான்கு கால் மண்டபம் உள்ளது. சுவாமிக்கு வலப் புறத்தில் இருப்பது மாதிரி அம்பாள் சந்நிதி அமையும் தலங்கள் விசேஷமாகச் சொல்லப்படுகின்றன. இவ்வாறான அமைப்பு, இறைவன்- இறைவியின் கல்யாணத் திருக் கோலம் என்றுகூட வர்ணிக்கப்படுகிறது. சுவாமியின் வலப் பக்கத்தில் இறைவி அருள்கோலம் கொண் டிருந்தால், சுவாமியும் அம்பா ளும் ‘ஆதிதம்பதி‘ என்று அழைக்கப்படுகிறார்கள்.
பெரியதாகவுள்ள முன் மண்டபம் தாண்டி, அம்பாள் சந்நிதியை அடைகிறோம். அருள்மிகு திரிபுராந்தகி என் னும் திரிபுரசுந்தரி அம்மன், நின்ற திருக்கோலத்தில், நான்கு கரங்களுடன், அபய- வர ஹஸ்தங்கள் தாங்கி, தரிசனம் தருகிறார். அம்பாள் திருமுன், காஞ்சி பரமாச்சார்யர் ஸ்தாபிதம் செய்த ஸ்ரீசக்கரம் உள்ளது. அம்பாள் சந்நிதியில் பள்ளியறையும், முன் மண்டபத்தில் நவக்கிரகச் சந்நிதியும் உள்ளன. ‘போர்க்கோலம் கொண்ட விற்கோலப் பரமேட்டியே!’ என்று ராமலிங்க சுவாமிகள் தொழும் திரிபுராந்தகரையும் திரிபுரசுந்தரியையும் பணிந்து வெளியில் வருகிறோம்.
சிவன் கோயிலுக்குச் சமீபத்தில் பெருமாள் கோயிலும் உள்ளது. கரியமாணிக்கப் பெருமாள் என்பது இறைவன் திருநாமம். விநாயகர் திருவிளையாடலால், சிவனாரின் தேர் அச்சு முறிந்துபோனதல்லவா- உடனே, தானே ரிஷபமாக மாறி, விஷ்ணு, சிவனாரைத் தாங்கினாராம். அவரே கரியமாணிக்கப் பெருமாள் என்கிறார்கள்.
நீர்கொண்ட சடையரு நம்பெரும் காமத்தழல் அவிப்ப நிற்கின்றானைக் கூர்கொண்ட கனல் மழுமான் ஆண்மையும் பெண்மையுமாய கூற்றிற்கேற்பச் சீர்கொண்ட வலன் இடம்கொள் நாயகனைப் புகலிஇறைச் செந்தமிழ்ப் பூந் தார்கொண்ட திருவிற்கோலப் பெருமான்தனை
இதயத்தவிசின் வைப்பாம் என்று தல புராணமாம் கூவப் புராணத்தில், சிவப்பிரகாச சுவாமிகள் பாடுகிறார். இதய சிம்மாசனத்தில் ஸ்வாமியைப் பற்றிய எண்ணங்களை ஏந்தி, கூபாக்னபுரி என்று இலக்கியங்களில் போற்றப்படும் கூவம் திருத்தலம் விட்டு வெளியே வருகிறோம்.
No comments:
Post a Comment