புதிய தொடர்
|
சித்தர்கள் வாழும் மலையில் ஒரு சிறப்பு தரிசனம்!
உலகிலேயே பெரியது எது?’ என்று வகுப்பறையில் உள்ள மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் அந்த ஆசிரியர். ‘இமய மலை’ என்றான் ஒரு மாணவன் துடுக்காக. இணைய தளத்தில் அடிக்கடி துருவிக் கொண்டிருக்கும் ஒரு மாணவன், ‘சியாச்சின் மலைதான்’ என்றான். பிறக்கும்போதே தாயைப் பறி கொடுத்த ஒரு மாணவனோ, ‘உலகத்திலேயே பெரியது அம்மாதான் சார்’ என்றான், கண்களில் நீர் துளிர்க்க. ஆம்! உண்மையான பாசத்துக்கு ஈடு இணை என்று எதையுமே சொல்ல முடியாது. பாசம், பரிவு, அன்பு... இவை எல்லாம் பஞ்சம் இல்லாமல் கொட்டிக் கிடக்கிறது பாரத தேசத்தில். இந்த தேச மண்ணில் உதிக்கும் அத்தனை மனிதர்களுமே ஒரு விதத்தில் பாக்கியசாலிகள். மனிதனை நெறிப்படுத்த சாஸ்திரங்கள் இருக்கின்றன; பக்குவப்படுத்த புராணங்கள் இருக்கின்றன. ‘உணவு வேண்டும்... உறையுள் வேண்டும்’ என்று லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் அலைந்து தவித்த அதே மனிதப் பிறவி, இன்றைக்கும் அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறது. காலங்கள் மாறினாலும் காரியம் ஒன்று தான்! அன்றைக்கும் இன்றைக்கும் என்ன ஒரு வித்தியாசம் என்றால், இன்று நாகரிக வளர்ச்சி அடைந்து நவீன வசதியோடு தேடிக் கொண்டிருக்கிறான்! ஆனால், உண்மையைத் தேடி அலைந்தானே... அவன் வனாந்திரப் பிரதேசங்களில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். மலைக் குகைகளில் இருப்பிடத்தை ஏற்படுத்திக் கொண்டான். தவத்திலும் ஞானத்திலும் நாட்களைச் செலவிட்டான். பசித்தபோது பழங்களைச் சாப்பிட்டான். அங்கே வாழும் கொடிய மிருகங்களை எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால் அவனுக்கு ஏற்பட்டது. தினமும் சந்திக்க வேண்டியவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்ள வேண்டியதுதானே முறை?! அப்படியே ஆக்கிக் கொள்ள முற்பட்டான். கண்களில் கனிவையும், உள்ளத்தில் அன்பையும் வைத்து அந்தக் கொடிய மிருகங்களை ஆதரவோடு அவன் பார்த்தான். கொடிய மிருகங்களும் தங்கள் இயல்புகளில் வித்தியாசம் காட்டின. கொஞ்சும் பாவனையுடன் அவனை நெருங்கின; குழைந்து பழகின. ஆன்மிகவாதிகள் இப்படித்தான் காட்டில் வளர்ந்தார்கள்; கலைகளைக் கற்றுத் தேர்ந்தார்கள். உலகத்துக்கு வேண்டுமானால், அதிசயங்கள் ஏழாக இருக்கலாம். ஆனால், இந்தப் பிரபஞ்சத்தில் அதிசயங்கள் ஏராளம். நமது வழிபாட்டுக்கு உரிய பஞ்சபூதங்களே பிரமாண்டமான ஓர் அதிசயம்தான்! தண்ணீர் ஓர் அதிசயம்; உலகப் பரப்பளவில் எழுபது சதவிகிதத்தைத் தண்ணீரே ஆக்கிரமித்துள்ளது. மேட்டூர் அணையில் 120 அடிக்கு நீர் நிரம்பி, தமிழ்நாடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கே உள்ள அதிகாரிகள், அதுவரை வந்து சேர்ந்து, சேமிப்பாக இருக்கும் தண்ணீருக்குத் தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வழிபாடு செய்கிறார்கள்.
பூமி ஓர் அதிசயம். ஓரிடத்தில் தோண்டினால் தண்ணீர் கிடைக்கிறது; இன்னோர் இடத்தில் தோண்டினால் தங்கம் கிடைக்கிறது. வேறோர் இடத்தில் தோண்டினால் பெட்ரோல் கிடைக்கிறது. வீடு கட்டுவதற்காகவோ, அலுவலகம் கட்டுவதற்காகவோ ஓர் இடத்தை வாங்கினால், நல்ல துவக்கமாக இருக்கட்டும் என்று அதற்கு ‘பூமி பூஜை’ போடுகிறோம். அந்த இடம் வளம் கொழிக்க வாழ்த்துக் கேட்கிறோம், பூமித் தாயிடம்.
நெருப்பு இன்னோர் அதிசயம். காலையில் குடிக்கும் காபிக்கு நெருப்பு நேரடியாகத் தேவை. நாள் முழுக்க வெளிச்சம் தந்து வியர்வையை விரட்டும் மின்சாரத்துக்கு நெருப்பு மறைமுகத் தேவை. ஒவ்வொரு தேவதைக்கும் உரிய ஹோமங்களை முறையாகச் செய்து, அக்னி பகவானை குளிர்விக்கிறோம். உடலாலும் உள்ளத்தாலும் சுத்தமானவர்களை நெருப்பு என்றுமே சுடுவதில்லை. இது சத்தியம்! தான், சுத்தமானவள் என்று நிரூபிப்பதற்காக நெருப்பில் இறங்கினாள் கற்புக்கரசி சீதை. என்ன ஆனது? அனலின் வெம்மை கொண்டு அன்னையைத் தாக்கவில்லை அக்னி பகவான். நேர்த்திக்கடன்களுக்காக இன்றும் நெருப்பில் இறங்கும் ‘தீமிதி’ சம்பவங்கள் நாகரிகம் வளர்ந்த கிராமங்களில்கூட சகஜம். இது ஒரு வகைப் பிரார்த்தனை.
சதுரகிரி?
சித்தர்களின் தலைமைப் பீடம் சதுரகிரி தான்! எண்ணற்ற சித்தர்கள் சதுரகிரி மலையில் கூடி ஆன்மிக விவாதங்கள் நடத் துவது உண்டாம். இதற்கென அவர்கள் அமைத்த பல குகைகள் இன்றைக்கும் சதுரகிரி மலையில் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் காணப்படுகின்றன. சித்தர்கள் ஏற்படுத்திய தீர்த்தங்கள் இன்றைக்கும் இருக்கின்றன.
‘‘சித்தர்கள் வசித்த குகைகள் இந்த மலைப் பிரதேசத்தில் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. பல குகைகள் அமைந்த கடினமான பகுதிகளுக்கு மனிதர்கள் எவரும் செல்ல முடியாது. இன்றைக்கும் அவர்கள் சூட்சுமமாக இருந்து நம்மை ஆசீர்வதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மலைகளின் உச்சியில் தினமும் நட்சத்திர ரூபத்தில் அவர்கள் வலம் வருவார்கள். சில நட்சத்திரங்கள் திடீ ரென வானத்தில் வேகமாகச் செல்வதைக் காணலாம். கீழிறங்கும்; மேலே போகும். வண்ண ஜாலமே வானத்தில் நடக்கும். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இது போன்ற அதிசயக் காட்சிகளை இங்கு அடிக்கடி காணலாம். நட்சத்திர வடிவில் சித்தர்களது தரிசனம் யாருக்குக் கிடைக்கிறதோ, அவர்கள் எல்லோரும் பெரும் பாக்கியசாலிகள்!’’ என்றார் சதுரகிரியில் வசித்து வரும் பெரியவர் ஒருவர்.
வான்மீகி, கோரக்கர், கமல முனி, சட்டை முனி, அகத்தியர், சுந்தரானந்தர், கருவூரார், அகப்பைச் சித்தர், கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச் சித்தர், ராமதேவர், இடைக்காட்டுச் சித்தர், திருமூலர், போகர், அழுகுணிச் சித்தர், காலாங்கிநாதர், மச்ச முனி ஆகியோர் பதினெண் சித்தர்கள் எனப்படுவர் (இவர்களையே வேறு வரிசையிலும் சொல்வதுண்டு). தவிர புசுண்டர், ரோமர், யூகி, பிரம்மர், நந்தி, புலஸ்தியர், தேரையர் முதலான சித்தர்கள் சதுரகிரியில் வாழ்ந்து யோகத்தில் திளைத்தனர். வேள்விகள் புரிந்தனர்.
சதுரகிரி மலையானது, மேரு முதலிய எட்டு வகை மலைகளுக்கும் தலைமையான மலை என்கிறது ‘சதுரகிரி தல புராணம்’. கிழக்குத் திசையில் இந்திர கிரி; மேற்குத் திசையில் வருண கிரி; வடக்குத் திசையில் குபேர கிரி; தெற்குத் திசையில் ஏம கிரி. இப்படி ஒரு சதுரம் போல் அமைந்துள்ள மலைகளுக்கு மத்தியில் சிவ கிரி, பிரம்ம கிரி, விஷ்ணு கிரி, சித்த கிரி ஆகிய நான்கு மலைகள். எனவே, இத்தகைய இந்த மலைப் பிரதேசம் சதுரகிரி எனப்படுகிறது. சதுரகிரி மலையின் இன்றைய மொத்தப் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். இந்த அற்புத மலையில் பிரதானமாக அமைந்துள்ளவை சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் ஆலயங்கள். தவிர பிலாவடி கருப்பர், ரெட்டை லிங்கம், பெரிய மகாலிங்கம் போன்ற தெய்வங்கள் குறிப்பிடத் தக்கவை. சதுரகிரியின் மையத்தில் சஞ்சீவி மலை இருக்கிறது. சஞ்சீவி மலை என்றதும் வாயு புத்திரனான ஆஞ்சநேயர் நினைவுக்கு வருகிறாரா? ஆம்! சஞ்சீவி மலை இங்கு இருப்பதற்குக் காரணம் ஆஞ்சநேயர் தான் !
அந்தக் கதையைச் சற்றுப் பார்ப்போமா ? ஸ்ரீராமருக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த யுத்தம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அந்தப் போரின்போது ஒரு நாள் ராவணனின் மகன் இந்திரஜித் எய்த பிரம்மாஸ்திரம் லட்சுமணனைத் தாக்கியது. பேச்சு மூச்சில்லாமல் விழுந்தான் லட்சுமணன். தகவல் கேட்ட ஸ்ரீராமர் ஓடோடி வந்து லட்சுமணனை எழுப்புவதற்குப் பாடுபட்டார். எந்தப் பலனும் இல்லை! அப்போது சுக்ரீவன் உள்ளிட்ட வானரப் படையினர் ஓடோடி வந்தனர்.ஆஞ்சநேயரை அழைத்த சுக்ரீவன், ‘‘ஆஞ்சநேயா... லட்சுமணனை இப்போது இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டியது அவசியம். எனவே, அஷ்டகுல பர்வதங்களுக்கு அப்பால் இருக்கிற சஞ்சீவி மலையை உடனே எடுத்து வா. லட்சுமணனின் மூர்ச்சையைத் தெளிவிக்கும் சக்தி கொண்ட மூலிகைகள் அந்த மலையில்தான் உள்ளன. உடனே புறப்படு!’’ என்று சுக்ரீவன் சொல்லி முடிக்கு முன்னரே, ராம நாமத்தைத் துதித்தவாறு விண்ணில் பறந்தார் ஆஞ்சநேயர். சஞ்சீவி மலையை அடையாளம் கண்டு, அதை அப்படியே பெயர்த்து எடுத்து வந்தார்! தேவையான மூலிகைகளைக் கொண்டு லட்சுமணனுக்கு சிகிச்சை செய்யப்பட்டது. சில நாழிகை கழித்து ஏதும் அறியாதவன் போல் கண் விழித்து எழுந்தான் அவன். அனைவரும் மகிழ்ந்தனர். ஆஞ்சநேயரைப் பெரிதும் பாராட்டிய சுக்ரீவன், ‘‘நன்றி வாயுபுத்திரா... நீ கொணர்ந்த சஞ்சீவி மலையின் பயன்பாடு முடிந்து விட்டது. இதை எங்கிருந்து கொண்டு வந்தாயோ அங்கேயே கொண்டு போய் வைத்து விட்டு வா!’’ என்றார். எனவே, ‘ஆஞ்சநேயர் தூக்கிச் செல்லும் சஞ்சீவி மலையின் ஒரு பகுதி சதுரகிரியின் மையத்தில் விழ வேண்டும்!’ என்று பிரார்த்தித்தனர். அடுத்த கணம் சஞ்சீவி மலையில் இருந்து ஒரு பகுதி மட்டும் பெயர்ந்து கீழே விழுந்தது. ‘அரும் தவம் செய்யும் முனிவர்களுக்கு என்னாலான உபகாரம் இது என்றால் நான் பெரிதும் மகிழ்கிறேன்!’ என்று உற்சாகமாக அங்கிருந்து புறப்பட்டார் ஆஞ்சநேயர். அதன் பின், சஞ்சீவி மலையை முன் இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு திரும்பினார் ஆஞ்சநேயர். சதுரகிரி மலைக் காற்று, நம் உடலில் பட்டாலே தனி சுகம்தான்! |
No comments:
Post a Comment