Wednesday, 16 August 2017

வேதாரண்யம் விளக்கழகு!




ஸ்ரீராமர், ஸ்ரீபிரம்மன், விஸ்வாமித்திரர், அகத்தியர், ஆகியோர் வழிபட்ட தலம்; சக்தி பீடங்களில் சுந்தரி பீடம் அமையப்பெற்றது; ஸ்ரீநடராஜரின் 16 சபைகளில் ஒன்று; சப்தவிடங்கத் தலங்களில், புவனவிடங்கத் தலம்; ஸ்ரீசரஸ்வதிதேவி வீணையின்றிக் காட்சி தரும் தலம்; ஸ்ரீதுர்கை தெற்கு நோக்கியபடி, தவக் கோலத்தில் காட்சி தரும் திருத்தலம்; திரிசங்கு சொர்க்கத்தைப் பெற்ற தலம்; சேர, சோழ, பாண்டியர்களும் வழிபட்ட தலம்; மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறப்புப் பெற்ற தலம்; புனித நதியாம் கங்கை, மணிகர்ணிகையில் நீராடிப் புனிதம் பெற்ற தலம்; தேவார மூவரால் பாடல் பெற்ற தலம்...
அடேங்கப்பா... நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்குத்தான் எத்தனைச் சிறப்புகள்?! வேதங்கள் நான்கும் ஆரண்யங்களாகி (காடுகள்) பரம்பொருளை வழிபட்டதால், வேதாரண்யம் எனப் புகழ் பெற்றதாம்!
அதுமட்டுமா? இந்த ஆலய தீபத்தை, அறியாமல் தூண்டியதாலேயே ஒரு எலி, மறுபிறப்பில் மூவுலகை ஆளும் மகாபலிச் சக்கரவர்த்தியான தலமும் இதுதான்!
நிறைமறைக்காடு தன்னில் நீண்டெரி தீபந்தன்னைகறைநிறத்தெலி தன்மூக்கு சுட்டிட கனன்று தூண்டநிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவானுலகமெல்லாங்குறைவறக் கொடுப்பார்ப்போலும் குறுக்கை வீரட்டனாரே.!
- என இதுகுறித்து தேவாரத்தில் அப்பர் பெருமான் பாடிச் சிலாகித்துள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்தேறியது, ஒரு கார்த்திகை தீபத் திருநாளின் போது! எனவே, இங்கு திருக்கார்த்திகைத் தீபத் திருநாள், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை சோமவாரங்களில் (திங்கட்கிழமை) ஸ்ரீவேதாரண்யேஸ் வரருக்கு, சகஸ்ர சங்காபிஷேகம் சிறப்புற நடைபெறும். அத்துடன் கருவறையில், லிங்க மூர்த்தியுடன், ஸ்வாமியும் அம்பாளும் தம்பதியாக வும் காட்சி தரும் தலம் இது என்பதால், இங்கு விளக்கேற்றி, ஸ்ரீவேத நாயகி சமேத ஸ்ரீவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்; இல்லறம் இனிதே சிறக்கும்; செழிக்கும் என்பது ஐதீகம்!
திருக்கார்த்திகை தீப நன்னாளில், கோயில் முழுவதும் பல்லாயிரக்கணக்கான அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, கோயிலே ஜொலிக்குமாம்! பிறகு, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவேதாரண்யேஸ்வரர், ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீதியாகராஜர் மற்றும் ஸ்ரீதுர்கை ஆகியோரது திருச்சந்நிதிகளில் சிறப்பு வழிபாடுகளும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த விழாவில் கலந்துகொண்டு ஸ்வாமியின் பேரருளைப் பெற, திரண்டுவருவார்களாம், பக்தர்கள்!
''வேதாரண்யம் விளக்கழகு என்பார்கள். இந்த முறை, திருக் கார்த்திகையும் பௌர்ணமியும் சேர்ந்தே வருவது சிறப்பு. எனவே, அந்த நாளில் ஆலயத்துக்கு வந்து, தாமரைத் தண்டில் திரி அல்லது பஞ்சு கொண்டு விளக்கேற்றி, ஸ்ரீவேதாரண்யேஸ்வரரையும் ஸ்ரீவேத நாயகியையும் வழிபட்டால், சகல பாவங்களும் விலகும்; பெண்கள் தாலி பாக்கியம் பெற்று, சந்தோஷமும் மகிழ்ச்சியும் பொங்க வாழ்வார்கள்!'' என்று சொல்லிச் சிலிர்க்கிறார் கோயிலின் முன்னாள் தலைமை அர்ச்சகரான தியாகராஜ குருக்கள்.
விளக்கழகு வேதாரண்யம் வாருங்கள்; உங்கள் இல்லத்திலும் வாழ்விலும் இனி புத்தொளி வீசுவதை உணர்வீர்கள்!

No comments:

Post a Comment