Sunday 31 July 2016

65 பூசலார் நாயனார் புராணம்

"மறைநாவன் நின்றவூர்ப் பூசலார்க்கும் அடியேன்."

"மனக்கோவில் கட்டி சிவபெருமானை பிரதிட்டை செய்த மறையவர்."

“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே” 

சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.

நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்.....

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ இருதயாலீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மரகதாம்பிகை

அவதாரத் தலம் : திருநின்றவூர்

முக்தி தலம் : திருநின்றவூர்

குருபூஜை நாள் : ஐப்பசி - அனுஷம்

"அடுப்பது சிவன்பால் அன்பர்க்காம் பணி செய்தல் என்றே
கொடுப்பது எவ்வகையும் தேடி அவர் கொளக் கொடுத்துக் கங்கை
மடுப்பொதி வேணி ஐயர் மகிழ்ந்து உறைவதற்கு ஓர் கோயில்
எடுப்பது மனத்துக் கொண்டார் இருநிதி இன்மை எண்ணார்."

பாடல் விளக்கம்:

சிவபெருமானுக்கும் அவருடைய அன்பர்களுக்கும் ஆகும் பணிகளைச் செய்தலே தக்கது என்று துணிந்து, அடியவர்களுக்குக் கொடுப்பதற்கென எவ்வகையாலும் பொருளைத் தேடி, அவர்கள் கொள்ளும்படி தந்து, திருக்கோயில் அமைப்பதற்குப் பெருந்திரளான செல்வம் தம்மிடம் இல்லாமையை எண்ணாதவராய்க் கங்கை தங்கிய சடையையுடைய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளி இருப்பதற்கு என ஒரு கோயிலைக் கட்டும் செயலையும் தம் உள்ளத்தில் கொண்டார்.

பூசலார் நாயனார் புராணம்


ஒழுக்கத்தால் எக்காலமும் ஓங்கி உயர்ந்த தொண்டை மண்டலத்திலே திருநின்றவூர் எனும் திருத்தலத்தில் வேதியர்கள் மரபிலே தோன்றியவர் பூசலார் நாயனார். இவரது உள்ள உணர்வெல்லாம் கங்கையணிந்த சங்கரனின் சேவடியில் மட்டுமே பதித்திருந்தது. ஆகம வேத, சாஸ்திர நெறிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார் நாயனார். பிறை அணிந்த பெருமானுக்குத் தமது ஊரில் எப்படியும் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்று திருவுள்ளம் கொண்டார். 

ஆலயம் அமைப்பதற்கான செல்வத்தை அவரால் திரட்ட முடியவில்லை. பூசலார் மனம் புண்பட்டு நைந்தார். செய்வதறியாது சித்தம் கலங்கி ஏங்கினார் நாயனார். புறத்தேதான் புற்றிடங்கொண்ட பெருமானுக்குக் கோயில் எழுப்ப இயலவில்லை; அகத்திலே, அண்ணலாருக்கு, என் மனதிற்கு ஏற்ப எவ்வளவு பெரிய கோயில் வேண்டுமானாலும் கட்டலாம் அல்லவா? என்று தமக்குள்  தீர்மானித்தார். 

அதற்குத் தேவையான நிதி, கருங்கல், மரம், சுண்ணாம்பு முதலிய கருவி, கரணங்களை எல்லாம் மனதிலே சேர்த்துக் கொண்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, தனி இடத்தில் அமர்ந்து ஐம்புலங்களையும் அடக்கி ஆகம முறைப்படி மனத்திலே கோயில் கட்டத் தொடங்கினார். இரவு பகலாக கோயில் அமைப்பதையே சிந்தையாகக் கொண்டு இறைவன் கோயிலை அகத்தே இருத்தி கர்ப்பகிருஹம், ஸ்தூபி, அலங்கார மண்டபம், திருமதில்கள், திருக்குளம், திருக்கிணறு, கோபுரம் முதலிய அனைத்தும் புத்தம் புதுப் பொலிவோடு உருவாக்கினார்.

நாயனாருக்குப் புறத்தே கோயில் எழுப்புவதற்கு எத்தனை நாளாகுமோ, அத்தனை நாளானது, அகத்தே கோயில் எழுப்புவதற்கு! இதே சமயத்தில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த பல்லவ தேசத்து மன்னன் காஞ்சியிலே ஈசனுக்கு கற்கோயில் ஒன்று கட்டி முடித்தான். நாயனார் மானசீகமாகக் கும்பாபிஷேகம் நடத்த இருந்த அதே நன்னாளில் காஞ்சியிலும் கும்பாபிஷேகத்துக்குரிய நாள் குறித்து அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான் மன்னன். 

கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவு எம்பெருமான் மன்னனின் கனவிலே எழுந்தருளினார். அன்பா! திருநின்றவூரில் குடியிருக்கும் நம்முடைய அன்பனாகிய பூசலார் தமது உள்ளக் கோயிலில் கட்டி முடித்துள்ள கோயிலுக்கு நாளை கும்பாபிஷேகம். அந்த ஆலயத்துள் நாளை நாம் எழுந்தருள சித்தம் கொண்டுள்ளோம். ஆதலால் நீ வேறு ஒரு நாளில் கும்பாபிஷேகத்தை வைத்துக்கொள்வாயாக என்று மொழிந்து மறைந்தருளினார். 

பல்லவர் கோமான் கண் விழித்தெழுந்தான். கனவை நினைத்து வியந்தான். திருநின்றவூர் சென்று அச்சிவனடியாரைச் சந்தித்து அவரது திருக்கோயிலையும் தரிசித்து வருவது என்று ஆவல் கொண்டான் மன்னன்; அமைச்சருடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டான். திருநின்றவூரை அடைந்த அரசன், பூசலார் அமைத்துள்ள திருக்கோயில் எங்குள்ளது? என்று பலரைக் கேட்டான். ஊர் முழுவதும் தேடினான். எவருக்கும் தெரியவில்லை. இறுதியில் மன்னன் அவ்வூரிலுள்ள எல்லா அந்தணர்களையும் வரவழைத்துப் பூசலாரைப் பற்றி வினவ, அவர்கள் மூலம் பூசலார் இருக்குமிடத்தைத் தெரிந்து கொண்டான் மன்னன்.

பூசலார் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டான் மன்னன். பூசலாரைக் கண்டான். அவரது அடிகளைத் தொழுது எழுந்தான். அண்ணலே! எம்பெருமான் என் கனவிலே தோன்றி நீங்கள், அவருக்காக எட்டு திக்கும் வாழ்த்த, திருக்கோயில் கட்டி அமைத்துள்ளதாகவும், இன்று நீங்கள், அத்திருக்கோயிலில் ஐயனை எழுந்தருள்விக்க நன்னாள் கொண்டுள்ளதாகவும், அதனால் நான் காஞ்சியில் கட்டி முடித்த திருக்கோயில் கும்பாபிஷேகத்தை வேறு நாள் பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளையிட்டு அருளினார். இவ்வெளியோன், தேவரீர் கட்டி முடித்துள்ளத் திருக்கோயிலைத் தரிசித்து வழிபட பெருமகிழ்ச்சி கொண்டு வந்துள்ளேன். 

தாங்கள் அமைத்துள்ள அத்திருக்கோயில் எங்குள்ளது? என்று கனிவோடு வினவிப் பணிவோடு வணங்கினான் மன்னன். மன்னன் மொழிந்ததைக் கேட்டு பூசலார் பெரும் வியப்பில் மூழ்கினார். அவர் உடல் புளகம் போர்ப்ப மன்னனிடம் காடவர் கோமானே! அடியேனையும், ஒரு பொருளாகக் கொண்டு இறைவன் இங்ஙனம் திருவாய் மலர்ந்து அருளினார் போலும்! இவ்வூரில் அரனார்க்கு ஆலயம் அமைக்க அரும்பாடுபட்டேன். பெருமளவு பொருள் இல்லா நான், புறத்தே தான் ஆண்டவனுக்குக் கோயில் கட்ட முடியவில்லை. அகத்தேயாகிலும் கட்டுவோம் என்ற எண்ணத்தில், வேறு வழியின்றி எனது உள்ளத்திலே கோயில் கட்டினேன். இன்று அவரை இத்திருக்கோயிலில் பிரதிஷ்டையும் செய்து கும்பாபிஷேகம் புரிகிறேன் என்றார். 

அடியார் மொழிந்தது கேட்டு மன்னன் மருண்டான். இறைவழிபாட்டின் இன்றியமையாத சக்தியை உணர்ந்தான். உள்ளக் கோயிலில் குடியேறப் போகும் இறைவனின் அருள் நிலையை எண்ணிப் பார்த்தான். சங்கரனைச் சிந்தையில் இருத்தி, அன்பினால் எழுப்பிய உள்ளக் கோயிலுக்கு ஈடாக, பொன்னும், பொருளும் கொண்டு கட்டிய கோயில் ஒருபோதும் இணையாகாது என்பதை உணர்ந்தான். மன்னன் நினைவில் பலவாறு எண்ணி நைந்தான். திருமுடிபட பூசலார் நாயனார் திருவடிகளில் வீழ்ந்து அவரைப் போற்றிப் புகழ்ந்தான். 

மன்னன் பரிவாரங்களுடன் காஞ்சிக்குத் திரும்பினாள். பிறையணிந்த பெருமானார் பூசலார் எண்ணியபடியே குறித்த காலத்தில் அவரது உள்ளக் கோயிலில் எழுந்தருளினார். பூசலார் நாயனாரும் சிவபெருமானை உள்ளத்திலே நிறுவிப் பூசனை புரியத் தொடங்கினார். அன்று முதல் தினந்தோறும் முக்காலமும் ஆகம நெறிவழுவாமல் நித்திய நைமித்தியங்களைச் செய்து உள்ளக் கோயில் முக்கண்ணப் பெருமானை வழிபட்டு வந்த நாயனார், பிறவாப் பேரின்பமாகிய பெருமாளின் திருவடி நீழலையே அடைந்தார்.

"நீண்ட செஞ்சடையினார்க்கு நினைப்பினால் கோயிலாக்கிப்
பூண்ட அன்பு இடையறாத பூசலார் பொற்றாள் போற்றி
ஆண்ட கை வளவர் கோமான் உலகுய்ய அளித்த செல்வப்
பாண்டிமா தேவியார் தம் பாதங்கள் பரவல் உற்றேன்."

பாடல் விளக்கம்:

மிக நீண்ட சிவந்த சடையையுடைய இறைவற்கு உள்ளத்திலேயே கோயில் அமைத்துத் தாம் கொண்ட அன்பினை இடையறாது செலுத்திய பூசலாரின் பொன்னடிகளைப் போற்றி, ஆண்மைமிக்க சோழர் பெருமான் உலகம் உய்யப் பெற்றுக் கொடுத்த செல்வப் பாண்டி மாதேவியரானமங்கையர்க்கரசி அம்மையாரின் திருவடிகளைப் போற்றப் புகுகின்றேன்.

நன்றி : திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்

|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- || 

No comments:

Post a Comment