ஊர்த்துவரதன் தடுமாறிப் போனான். சிறிது தொலை வாகவே தேர் ஆடுகிறது; பலமிழந்தது போல நிற்கிறது; வேகம் குறைகிறது. என்ன நடக்கிறது? புரியவில்லை. 'பிரம்மாவின் அருளால் பெற்ற தேர், வலிமை குறைந்து விடுமா?'தள்ளாடிய தேரில் தள்ளாடியபடியே நின்ற ஊர்த்துவரதனின் சிந்தனை, பின்னோக்கிப் பாய்ந்தது.
தாய்- தந்தையர் வைத்த பெயரான ஆதன் அருள்மாறன் என்பதும், மக்கள் அன்பால் அழைத்த ஆதன் பேரரையன் என்பதும் ஏறத்தாழ மறைந்துபோய், எல்லோருமே 'ஊர்த்துவரதன்' என்றழைக்கும் அளவுக்கு தானும் தனது தேரும் பிரபலப்பட்டுவிட்டோம் என்பது புரிந்தது. இருந்தாலும் தேருக்கு இன்றென்ன ஆயிற்று?
மழவ அரசனான தான், காவிரிக் கரையில் செய்த தவத்துக்கு மெச்சி, பிரம்மா இந்தத் தேரைக் கொடுத் தார். பூமியிலிருந்து ஒரே கணத்தில் மேலே எழும்பும் ஆற்றல் கொண்ட தேர்; வானவெளியைத் தொட்டவுடன், காற்றின் வேகத்தில் கடிது செல்லும்! எவ்வளவு தொலைவாயினும், எவ்வளவு நேரமாயினும் நில்லாமல் போகும் தன்மை கொண்டது. தேர் மேலெழுந்து போவதால், அதில் அவன் பயணிப்பதால், எல்லோரும் அவனை ஊர்த்துவரதன் (ஊர்த்வம்- மேலே; ஊர்த்துவரதன் - மேலெழும் தேரில் செல்பவன்) என்றே அழைக்கத் துவங்கினர்.
எல்லாம் சரிதான். ஆனால், பொதிய மலை நோக்கிப் போகலாம் என்று புறப்பட்டிருந்த ஊர்த்துவரதன், மேலே செல்ல முடியாமல் தேர் கீழிறங்குவதைக் கண்டான். வலப்புறத் தூணில் இருந்த பொறியை வேக வேகமாக அழுத்தினான். ம்ஹும்... எந்தப் பலனும் இல்லை. விரைந்து கீழிறங்கிய தேர், இன்னும் விரைவாக தரையைத் தொட்டது; தொட்டது மாத்திரமில்லை... வெகு ஆழமாக மண்ணில் பாய்ந்து நின்றது.
வியப்பும் அச்சமும் கலந்த பார்வையை நாற் திசைக்கும் பாய விட்ட ஊர்த்துவரதனின் கண்கள், சற்றே நிலை குத்தின. எங்கோ தூய திருநீற்றின் மணம்; புறத்தே ஓசையோ ஒலியோ கேட்கவில்லையாயினும், சிவ நாமத்தின் நாதம் காற்றில் கலந்தது போன்ற உணர்வு; கூப்பிடு தூரத்தில் இருந்த அரச, புன்னை மரங்களின் துளிர்கள் கூட எங்கோ ஆழ்ந்த கவனத்தில் இருப்பது போன்ற தோற்றம்... தேரிலிருந்து கீழிறங்கினான். கால்கள் மண்ணைத் தொட் டதும், சொல்லொணா பரவசம் உடலெங்கும் பரவியது.
அடி மீது அடி வைத்து நகர யத்தனித்தபோது, கட்டுப்பாடே இல்லாமல் கால்கள் ஏதோ இடம் நோக்கிச் சென்றன. காற்றும் காற்றில் கலந்த நாதமும் இழுத்துச் செல்ல... தன்னியக்கமின்றி நகர்ந்து போய் நிற்க... அடடா... அருமை அருமை! அகத்திய பெருமான் அஞ்சலி தாங்கி, லிங்க பூஜை செய்து கொண்டிருந்தார்.
குறுமுனியைக் கண்டவுடன், ஊர்த்துவரதனுக்குத் தனது தேர் நின்றதற்கான காரணம் புரிந்தது. இறை வனாரைத் தம் உள்ளத்தில் தரித்த அந்த உத்தமரைத் தாண்டி, பிரம்ம ரதமேயானாலும் பாய்ந்து விட முடியுமா என்ன?
கைகூப்ப... அதுபோது, சிவ சிந்தனையில் ஆழ்ந்திருந்த அகத்திய மாமுனி தமது அருள் பார்வையைத் திருப்ப... உத்தமப் பார்வை ஊர்த்துவரதன் மீது படிய... இந்தப் பரமானந்தத்தைப் பக்கத்தில் இருந்து பார்க்கவில்லையாயினும், எட்டியிருந்தபடியே தனது மணிகளை ஒலித்துக் காட்டித் தேரும் ஆமோதித்தது.
ஊர்த்துவரதனின் தேர் அழுந்தியதால், தேர் அழுந் தூர் என்று பெயர்பெற்ற புண்ணிய பூமிக்குப் போவோமா?
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் பயணித்து, கோமல் செல்லும் சாலையில் திரும்பிச் சென்றால், மூவலூர் வரும்; அதையடுத்துத் தேரழுந் தூர். மயிலாடுதுறை- கும்பகோணம் மார்க்கத்தில் இதுவொரு புகைவண்டி நிலையம். மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து நிறைய பேருந்துகள் இந்த ஊருக்குச் செல்கின்றன.
தேர் எழுந்தூர், தேர் இழந்தூர், திரு அழுந்தூர், அழுந்தை என்றெல்லாம் பலவாறாக அழைக்கப் படுகிற இந்தத் திருத்தலம், பிரபல வைணவத் திருக்கோயிலான ஆமருவியப்பன் ஆலயம் உள்ள ஊர்; ராம கதை யைத் தமிழில் இயற்றிக் கொடுத்த கம்பர் பிறந்த ஊர்; வேதங் களே பூஜித்த புண்ணியத் திருத்தலம்.
கம்பன் பிறந்த ஊர் காவிரி தங்கும் ஊர்
கும்பமுனி சாபம் குலைந்த ஊர் -- செம்பதுமத் தாதகத்து நான்முகனும் தந்தையும் தேடிக் காணா ஓதகத்தார் வாழும் அழுந்தூர்
என்றொரு தனிப் பாடல் உண்டு. கம்பர் வாழ்ந்ததாகக் கருதப்படுகிற இடம், கம்பர்மேடு என்று வழங்கப்படுகிறது. ஊரின் கிழக்கில், சிவன் கோயிலான
அகத்தியர், காவிரித்தாய், வேதங்கள், பிரம்மா, இந்திரன், பிரகலாதன் என்று பல்லோரும் வணங்கி வாழ்த்தியுள்ள இந்தத் திருத்தலம், சைவ- வைணவ ஒற்றுமையின் மிகப் பெரும் அத்தாட்சியாகத் திகழ்கிறது. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள வைணவ திவ்வியதேசம்; ஞானசம்பந்தப் பெருமானால் பாடிப் பரவப் பட்டுள்ள சைவப் பெருந்தலம்- தேரழுந்தூர். இது, கரிகால் பெருவளத்தானின் தலைநகரமாக விளங்கியதாகவும் குறிப்புகள் காணப்படுகின்றன.
இந்த அற்புதத் திருத்தலத்தின் வேதபுரீஸ்வரர் திருக்கோயிலின் முன்பு நிற்கிறோம். ஐந்து நிலை மேற்கு ராஜ கோபுரம். பொம்மைகள் நிறைய இல்லையாயினும், நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டது. கோபுரம் தாண்டி உள்ளே சென்றால் விசாலமான இடம். அப்படியே வெளிப் பிராகாரம் முழுவதும் சுற்றி வரலாம். வெளிப் பிராகாரத்தில் வேறு சந்நிதிகள் ஏதும் இல்லை. எனினும், தென்மேற்குப் பகுதியில் (அதாவது, கோபுர வாயிலில் உள்நுழையும்போது, நமக்கு வலப் பக்கமாக) அம்பாள் சந்நிதி, தனிக் கோயிலாகவே உள்ளது. பிராகாரத்தை
வலம் வந்துவிட்டு, உள் வாயிலை அடைகிறோம். இந்த வாயிலின் அருகே, கொடிமரம். கொடி மர மாடத்தில் விநாயகர். உள்வாயில் கடந்து சென்றால், உள் பிராகாரம். திருச்சுற்றைத் தொடங்குகிறோம். முதலில், ஆதிசிவனார். அடுத்து கஜலட்சுமி. வடமேற்கு மூலையில் வள்ளி- தெய்வானை சமேத முருகன் (இது மேற்குப் பார்த்த திருக்கோயில் என்பதால், நாம் உள்ளே நுழைந்து வலத்தைத் தொடங்கியிருப்பது மேற்குத் திருச்சுற்று).
விநாயகருக்கு இங்கே தனிச் சிறப்பு. திருவீழி மிழலைக்கு அருகேயுள்ள திருச்சிறுகுடி எனும் தலத்துக்குச் சென்ற ஞானசம்பந்தர், அங்கிருந்து தேரழுந்தூர் அடைந்தார். ஆனால், வேதபுரீஸ்வரர் ஆலயத்துக்கான வழி தெரியவில்லையாம். ஊர் எல்லையிலேயே நின்று அவர் வழி வேண்ட, அங்கே எழுந்தருளிய பிள்ளையார், வழி சொன்னாராம். ஊர் தொடக்கத்தில், கம்பர் நினைவு வளைவு உள்ள இடத்துக்கு அருகில் ஒரு பிள்ளையார் இருக்கிறார். இவருக்கு ஞானசம்பந்தப் பிள்ளையார் என்று திருநாமம். இவ்வாறு பிள்ளையார் உதவி செய்ததால், கோயிலின் உள்ளேயும் மூன்று விநாய கர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகச் சொல் கிறார்கள்.
வலத்தை நிறைவு செய்து, மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம். துவாரபாலகர்களை வணங்கி உள்ளே நோக்க... அருள்மிகு வேதபுரீஸ்வரர். அழ கான லிங்கத் திருமேனி. மேற்கு நோக்கியவர்.
தொழுமாறு வல்லார் துயர் தீர நினைந்து
எழுமாறு வல்லார் இசை பாட விம்மி அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர் வழிபாடுசெய் மாமட மன்னினையே
என்று ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற அருள் நாதர். அத்யாபகேஸ்வரர், திருஅழுந்தூர் நாதர், அழுந்தை உடையார், அழுந்தைப்பிரான், அழுந்தூர் உடைய நாயனார் என திருநாமங்களைக் கொண்ட வர். வேதபுரீஸ்வரர் எனும் திருநாமம் இவருக்கு எவ்வாறு ஏற்பட்டது? ஞானசம்பந்த பெருமான், இந்தத் தலத்தைப் பாடும்போது, அழுந்தை மறையோர் வழிபாடுசெய் மாமட மன் என்றும், அழுந்தை மறையோர் விடலே தொழு மாமட மேவினன் என்றும், அழுந்தையவர் எம்மான் என்றும், அழுந்தை மறையோர் மறவாதெழ மாமட மன் என்றும், அழுந்தை மறையோர் நெடுமாநகர் கைதொழ நின்றனன் என்றும் பாடுகிறார். அழுந்தூர் நகரில், வேதம் உணர்ந்த மறையோர் பலர் இருந்திருக்க வேண்டும்; அவர்களின் யாகங்களும் யக்ஞங்களும் இடையறாது நிகழ்ந்திருக்க வேண்டும்.
இவருக்கு அத்யாபகேஸ்வரர் என்றும் திருநாமம் உண்டு. அத்யாபகர் என்பவர் வேதம் உரைப்பவர். முன்னொரு காலத்தில், இறைவனாரே இங்கு வேதம் ஓதுவித்ததாகவும், அவரே ஆசிரியராக இருந்து பயிற்றுவித்ததால், அத்யாபகேசர் என்று திருநாமம் ஏற்பட்டதாகவும் செவிவழிச் செய்தி விளங்குகிறது.
திருஞானசம்பந்தர் பாடுவதில், மற்றொரு தகவ லும் கிட்டுகிறது. 'அழுந்தை நகரில் மறையோர் மடம் அமைத்தனர்; அதில் குடிகொண்ட ஆண்டவன்' என்று பாடுகிறார். மடம் என்பது துறவியர் வாழும் இடம். முனிவர் வாழிடம் என்பதுடன் கோயில் எனவும் பொருள்படும். ஆதிகாலத்தில் இங்கிருந்த கோயில், ஸ்ரீமடம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம்; வேதம் ஓதுவிப்பதும் அங்கு நடைபெற்றதால் வேதமடம் என்று வழங்கப்பட்டிருக்கலாம். இதற்கு ஏற்புடையதாக, ஆதிசிவன் என்று ஊர்க்காரர்கள் சுட்டிக்காட்டும் சிவலிங்கத்துக்கு ஸ்ரீமடேஸ்வரர் என்றும் பெயர் உள்ளது. மடேஸ்வரர்தாம், அத்யாபகராகவும் இருந்தார் என்கின்றனர் சிலர்.
வேதபுரீஸ்வரரை வழிபட்டுக் கொண்டே, மீண்டும் மூலவர் சந்நிதியை வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்களாக ஸ்ரீதுர்கை, ஸ்ரீலிங்கோத்பவர் மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. தனி மண்டபத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர். தட்சிணாமூர்த்திக்கு அருகில், சுவர் மாடத்திலேயே அகத்தியர். பக்கத்து மாடத்தில் ஒரு பெண் வடிவம். காவிரித் தாய்.
தேரழுந்தூருக்கான தனிப் பாடலை முதலிலேயே பார்த்தோம். அதிலேயே, 'கும்பமுனி சாபம் குலைந்த ஊர்' என்றொரு செய்தி வருகிறது, கும்பமுனி அகத்தியர். அவருக்கு சாபமா? என்ன சாபம்? யார் கொடுத்தார்கள்? அகத்தி யருக்குச் சாபமில்லை. அகத்தியர் கொடுத்த சாபம்!
காவிரியைக் கண்ணுற்ற அகத்தியர், அவள் தன்னை மணக்க வேண்டும் என்று ஆசைப் பட்டாராம். அவள் மறுத்து விடவே, அவளைத் தனது கமண்டலத்தில் அடைத்து விட்டாராம். காகம் வந்து சாய்த்து விட, அவள் விடுதலை பெற்றுப் பாய்ந்தாள். இன்னும் சினம் மிகுத்த அகத்தியர், அவள் பாயுமிடமெல்லாம் துன்பம் வரவேண்டும் என்று சாபமிட்டாராம். அந்த சாபம் தீரவும், தான் பாயும் இடங்களில் மகிழ்ச்சி நிலவவும் காவிரித் தாய், தேரழுந்தூரில் தொழுது பரிகாரம் பெற்றாளாம். இந்தக் கதை, வேதபுரீஸ்வரர் கோயிலிலும் உண்டு; ஆமருவியப்பன் கோயிலிலும் உண்டு.
தேர் அழுந்தியதால் தேரழுந்தூர் என்ற பெயர் என்பதைத் தெரிந்துகொண்டோமில்லையா? இந்தக் கதையும் கூட சிற்சில மாற்றங்களுடன் வழங்குகிறது.
இருப்பினும், அவனுக்குத் திருமாலின் அருள் பரிபூரணமாக இருந்தது. யாகம் ஒன்றின்போது, உபரிசிரவஸ் கண்ணுக்கு மட்டும் புலனாகும்படியும், முனிவர்கள் கண்களுக்குப் புலனாகாமலும் அவிர் பாகத்தை ஏற்றார் விஷ்ணு. காத்துக் கொண்டிருந்த முனிவர்கள், ஒருமுறை வாய்ப்பு கிடைத்தபோது, உபரிசிரவசுக்குச் சாபம் கொடுத்து, அவன் தேரைக் கீழே தள்ளிவிட்டனர்; தேர் அழுந்தியது. இறைவனை நோக்கி உபரிசிரவஸ் தவம் செய்ய... அவர் அருளால், கருடன் வந்து அவனையும் அவன் தேரையும் மேலே தூக்கிவிட்டு, மீண்டும் வான வீதியில் அவன் உலவப் பெற்றான்.
உபரிசிரவஸ், வானவீதியில் தனது தேரில் சென் றான். திருமால் கோயிலைத் தாண்டி அவன் செல் வதைக் கண்ட கருடாழ்வார், அவனை இழுத்தார். அதனால் தேர் அழுந்தியது. பின்னர் திருமால் அருளால், அவன் மீண்டும் தேருடன் வானவீதிக்குச் சென்றான். இந்த உபரிசிரவஸ் பிரஹஸ்பதியின் சீடன்; இவனுடைய மகளே மச்சகந்தி (வியாசரின் தாய்) என்றெல்லாமும் குறிப்புகள் உண்டு.
வெளிப் பிராகாரத்தை அடைகிறோம். அம்பாள் சந்நிதியை நாடுகிறோம். அம்பாள் சௌந்தரநாயகி. அழகம்மை. அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லியான அம்பிகை. நின்றகோல நாச்சியாராக எழில் திருக்காட்சி தருகிறார்.
அம்பிகைக்கு இந்தத் தலம் மிகச் சிறப்பானது. மயிலாடுதுறை குத்தாலம் பகுதியில் உள்ள திருமண தலங்களில், தேரழுந்தூர் சிறப்பிடம் பெறுகிறது. அம்பாளுக்கு ஊரறிய மீண்டும் இறைவனாரை மணக்க வேண்டும் என்ற விருப்பம் தோன்றியது. அதன்படி அம்பிகை பூமியில் பசுவாகப் பிறப்பெடுத்தாள். திருவாவடு துறையில், இந்திராணி, சரஸ்வதி மற்றும் லட்சுமி புடைசூழ பசுவாகத் திரிந்தாள். பசு மேய்ப்பவராக திருமால் தோன்றினார்; தேரழுந்தூரில், பசுவாக இருந்த சகோதரியை மங்கை வடிவில் கண்டார். உடனே பெண்ணுருக் கொண்ட அம்பாள், பரத முனிவரின் மகளாக திருத்துருத்தியில் வளரத் தொடங்கினாள். அம்பாள்- ஸ்வாமி திருமண யாகங்கள் திருவேள்விக் குடியில் நடந்தேறின; மாப்பிள்ளை யாக வந்த சிவனாரை, பரதர் எதிர்கொள் பாடியில் சென்று எதிர்கொண்டு அழைத்தார்; திருமணம்... திருமணஞ்சேரியில் நடைபெற்றது.
அம்பாள் சந்நிதி அமைப்பே, இங்கு சற்று வித்தி யாசமானது. சாதாரணமாக ஸ்வாமி கிழக்குப் பார்த்தோ, மேற்குப் பார்த்தோ இருந்தாலும், அம்பாள் தெற்குப் பார்த்தவராக இருப்பார். சில கோயில்களில், ஸ்வாமி கோயிலுக்கு இணையாக, பக்கத்தில் அதே திசை நோக்கிக் காட்சி தருவார். இங்கு எல்லாவற்றிலும் வேறுபட்டு, ஸ்வாமியும் அம்பாளும் எதிரும் புதிருமாகக் காட்சி தருகின்றனர். ஒருவேளை, அழகுவல்லியாக அம்பாள் நிற்பதை, நேருக்கு நேர் காணும் ஆவல் ஸ்வாமிக்கு வந்ததோ என்னமோ?!
தேரழுந்தூரில், பங்குனி புனர்பூசத் திருநாள் வெகு விசேஷம். அன்றைக்கு சிவன் கோயிலிலும் விஷ்ணு கோயிலிலும் ஏக கோலாகலம். அதுதானே ராமாவதாரத்
தேரழுந்தூருக்கு அருகில் உள்ள மூவலூர், தேவார வைப்புத் தலமாகும். மூவலூர் முக்கண்ணன் ஊர் என்று அப்பர் பாடுகிறார். மூவலூர் இறைவனார் மார்க்கசகாயேஸ்வரர்; அம்பிகை சௌந்தரநாயகி.
பிரகலாதனும் பிரம்மாவும் தேரழுந்தூரில் வழிபட்டுள்ளனர். கம்பர் பிறந்ததால் தமிழ் இலக் கியத்தில் தனியிடம் பெற்றுவிட்ட தேரழுந்தூரில், வேதபுரீஸ்வரரை மீண்டும் வணங்கி நிற்கிறோம்.
கடலேறிய நஞ்சமுது உண்டவனே
உடலே உயிரே உணர்வே எழிலே அடலேறுடையாய் அழுந்தை மறையோர் விடலே தொழுமாமடம் மேவினையே
என்று ஞானசம்பந்தர் வழி நின்று வழிபட்டு, இந்தக் கோயிலில் இருந்து விடைபெறுகிறோம்.
|
Tuesday, 8 August 2017
தேரழுந்தூர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment