கிராம தேவதை ஆலயங்களின் தலைமை பீடம்... படவேடு! மூல தேவதை... ஸ்ரீரேணுகாம்பாள்! அருளும் ஒளியும் தந்து வாழ்வை சிறக்கச் செய்யும் படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் ஆலயத்துக்குச் சென்றிருக்கிறீர்களா? ஒருமுறையேனும் அவளையும் அவளது ஆலயத்தையும் தரிசியுங்கள்... பிறகென்ன? உங்கள் வாழ்க்கையை வளமாக்குவது அவளது பொறுப்பு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அற்புத ஆலயம்; ஜவ்வாது மலையின் அடிவாரத்தில், படவேடு கிராமத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீரேணுகாம்பாள் கருணையே உருவானவள்; அருளை வாரி வழங்குபவள்; குறைகளையும் கவலைகளையும் சுமந்து வரும் பக்தர்களை, குழந்தையென பாவித்து ரட்சிப்பவள். தமிழ கத்தின் பல ஊர்களில் இருந்தும் இங்கு தினமும் வந்து தரிசித்துச் செல்லும் பக்தர்களே இதற்கு சாட்சி!
சரி... ரேணுகாம்பாள் இங்கே குடிவந்தது எப்படி?
காசி மன்னன் பிரஸேனசித்தன் உலகையே வென்றதான பூரிப்பில் இருந்தான். குழந்தை பாக்கியம் இல்லையே... என நீண்ட காலமாகத் தவித்து மருகியவனுக்கு, இறையருளால் பிள்ளைச் செல்வம் கிடைக்க... குதூகலித்துதானே போவான்?! இதே வேளையில் அமைச்சர் ஒருவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அரசனின் மகளுக்கு ரேணுகை என்றும்; அமைச்சரின் மகளுக்கு சாமுண்டி என்றும் பெயரிட்டு சிறப்புற வளர்த்தனர்; வளர்ந்தனர்.
குறிப்பிட்ட வயதை எட்டியதும் மகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்தான் மன்னன். உடனே ரேணுகை, ''தேசம் முழுவதும் திக்விஜயம் செய்யப் போகிறேன்; என்னை போரில் வெல்பவரையே மணம் புரிவேன்'' என்றாள். மன்னனும் சம்மதித்தான். சாமுண்டி மற்றும் சேனைகளுடன் புறப்பட்டாள் ரேணுகை.
வழியில் உள்ள ஊர்களில், காசி தேசத்து இளவரசி என மன்னர்கள் வரவேற்று உபசரித்தனர். ஆனால், எவரும் எதிர்க்க வில்லை. அப்படியே தொண்டை மண்டலத்தில்... பாலாறு பாயும் பெரிய காடுகளைக் கொண்ட பகுதிக்கு வந்தாள் ரேணுகை (ஆரண்யம் என்றால் காடு. இதுவே ஆரணி என்றானது). ஊரையும் ஆற்றையும் பார்த்தவள் மனதை பறிகொடுத்தாள். ரேணுகை மற்றும் அவளுடைய சேனைகளாலும் இவர்களின் யானைகளாலும் வனத்துக்கு சேதம் ஏற்படுவதைக் கண்ட ஜமதக்னி முனிவரின் சீடர்கள், குருநாதரிடம் தகவல் தெரிவிக்க... சீடர்களுக்கும் ரேணுகையின் படை வீரர்களுக்கும் கடும் போர் நிலவியது. அவர்கள் சாமுண்டியை தோற்கடித்தனர். ரேணுகையோ ஜமதக்னி முனிவரை மணக்க விரும்பினாள். தனது விருப்பத்தை முனிவரிடம் தெரிவிக்க... அவர் முரண்டு பிடிக்க... பிறகு அவளை மன்னித்து மனைவியாக்கிக் கொண்டார் முனிவர். இவர்களுக்கு ஹரிதத்தன், உச்சாங்கன், விஸ்வாவஸூ, பரசுராமர் என நான்கு மகன்கள் பிறந்தனர். பிறகு ஒருநாள்... சித்ரசேனன் எனும் கந்தர்வன் வானில் செல்ல; இதைக் கண்டு ஆற்றில் தண்ணீர் பிடிக்க முடியாமல் ரேணுகை தடுமாற; இதை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்த ஜமதக்னி முனிவர், மூன்று மகன்களை அழைத்து, தாயாரின் சிரசைக் கொண்டு வரச் சொல்ல; அவர்கள் முடியாது என மறுக்கவே, தந்தையின் சொல்லை ஏற்று, தாயாரின் தலையை துண்டித்தார் பரசுராமர்; பிறகு இழந்த தாயையே வரமாகக் கேட்க... வேறொரு தலையை வைத்து, ரேணுகை உயிர் பெற்றாள் என்பதெல்லாம் தெரியும்தானே?
சில காலம் கழித்து, போர் ஒன்றில் ஜமதக்னி முனிவரை கார்த்தவீர்யனின் குமாரர்கள் நூறு பேர் சேர்ந்து கொன்றுவிட... கணவனுடன் சேர்ந்து உடன்கட்டை ஏறினாள் ரேணுகை. அந்த நிமிடம்... திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தால், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாள். உடலில் தீக்காயங்கள்; கட்டியிருந்த புடவை எரிந்து சாம்பலானதால், வேப்பிலையையே ஆடையாக்கிக் கொண்டாள். இவளுக்கு தேனும் தினை மாவும் உண்ணக் கொடுத்த மூதாட்டி ஒருத்தி, காயங்களுக்கு வேப்பிலை- மஞ்சளை அரைத்துப் போட்டாள்! இதையடுத்து பார்வதிதேவியின் அருளால், ரேணுகா பரமேஸ்வரியாகக் கோயில் கொண்டாள் என்கிறது ஸ்தல புராணம்.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 48 கி.மீ. தொலைவில் உள்ளது சந்தவாசல். இங்கிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது படவேடு தலம். ஆரணியில் இருந்து 23 கி.மி. தொலைவு; வேலூரில் இருந்து 40 கி.மீ. தொலைவு. நிறைய பஸ் வசதி உண்டு. ரேணுகை தனது படைகளுடன் குடியிருந்ததால், படைவீடு என்றாகி, படபேடு ஆனதாம்!
தாரகாசுர வதத்தால் ஏற்பட்ட சாபம் தீர, இங்கு உள்ள மலையில் முருகப்பெருமான் தவம் புரிந்ததால் பாலகிரி; கௌண்டின்ய முனிவர் தவம் புரிந்ததால் கௌண்டலிபுரம்; புண்டரீக முனிவர் மானஸ பூஜை செய்து முக்தி பெற்ற தலம்; குசஹஸ்த மகரிஷி ஸ்ரீராமரை ஆராதித்து அவரின் அருள் பெற்ற இடம் என சிறப்புகள் பலவற்றைக் கொண்டது படவேடு!
அதுமட்டுமா? ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு, தசகண்ட ராவணன் ராம லக்ஷ்மணர்களை அழிக்க வர, படவேட்டில், செங்கமலத் தடாகத்தில் இருக்கும் தாமரை மலரில் உள்ள வண்டு ஒன்றில், அரக்கனின் உயிர் இருப்பதை அறிந்து அதனை எடுப்பதற்காக அனுமன் இங்கே வந்தார். அனுமன் தனது எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்ததால் ரேணுகாம்பாள் கோபம் கொண்டாள். இதையறிந்த ராம-லட்சுமணர்கள், இங்கு வந்து, இருவரையும் சமாதானம் செய்தனராம்! பிறகு இங்கேயே கோயில் கொள்ளும்படி ரேணுகாம்பாள் வலியுறுத்த... ஸ்ரீராமர் இங்கே கோயில் கொண்டாராம்! அருமையான இந்த ஆலயத்தில், அற்புதக் கோலத்தில் காட்சி தருகிறார் அனுமன்! ஆக, ரேணுகாம்பாள் ஆலயத்துக்கு அருகிலும் மலையிலுமாக ஆலயங்கள் பல இருக்கின்றன. இந்த ஆலயங்களுக்கு வந்து இறைவனை தரிசித்த டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் சேர்மன் வேணுஸ்ரீநிவாசன், எண்ணற்ற திருப்பணிகளை ஆலயங்களுக்குச் செய்தார். இந்த ஆலயங்களுக்கு தரிசிக்க வரும் பக்தர்கள் பலர், சம்புவராயரின் மறுபிறவியாகவே வேணுஸ்ரீநிவாசனைப் பாராட்டு கின்றனர்.
தென்னையும் வாழையும் தோப்பாக இருந்து குளிர்விக்க... ஊரின் கடைக்கோடியில், மலையடிவாரத்தில் இருந்தபடி தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவரையும் குளிர்வித்து அருள்பாலிக்கிறாள் ஸ்ரீரேணுகாம்பாள்!
சக்தி வாய்ந்த சக்தி தெய்வமாம் படவேடு நாயகியை தரிசிப்போம்; எல்லா நலனும் வளமும் பெறுவோம்!
மலையில் கிடைக்கும் விபூதி!
பக்தர்களுக்கு வழங்கப்படும் விபூதி விசேஷமானது என்கின்றனர் கோயில் ஊழியர்கள். அருகில் உள்ள மலையில் இருந்து எடுத்து வரப்படும் விபூதியை பிரசாதமாகத் தருகின்றனர். மலையில் கமண்டல நதியின் உற்பத்தி ஸ்தானத்தில், இரண்டு பக்கமும் மண் மேடாக காட்சி தருகிறது. இங்குதான் ஜமதக்னி முனிவர் தவம் புரிந்து, யாகம் நடத்தினாராம்! இந்த இடத்தில் உள்ள மண், விபூதியைப் போன்றே இருப்பது சிறப்பு! ஒவ்வொரு ஆனி மாத உத்திரத்தின் போது, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விபூதியை எடுத்து வந்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர்.
திருமண வரம் அருளும் சுக்கிர பலம்!
கடும் உக்கிரத்துடன் ஸ்ரீரேணுகாம்பாள் காட்சி தந்ததால், அருகில் லிங்க வடிவ சிவனார், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரது விக்கிரகங்களை கருவறையில் ரேணுகாம்பாளுக்கு அருகில் பிரதிஷ்டை செய்தனராம்! எனவே சுக்கிர பலம் நிரம்பிய கருவறையில் குடிகொண்டிருக்கும் ரேணுகாம்பாள், பக்தர்களது திருமணத் தடையை தகர்த்து அருளுகிறாள் என்பது ஐதீகம்!
ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் - யந்த்ரம்!
இந்தத் தலத்துக்கு வந்து அம்மனை வழிபட்ட ஸ்ரீஆதிசங்கரர், பாணலிங்கத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்தார்; அத்துடன் சக்தி வாய்ந்த ஜன ஆகர்ஷண யந்திரத்தையும் கருவறைக்கு எதிரே பிரதிஷ்டை செய்தார் என்கிறது ஸ்தல புராணம்! இதில் ஸ்ரீரேணுகாம்பாளின் சக்தி பன்மடங்கு பெருகி, அவளது சாந்நித்தியம் கூடிக் கொண்டே இருக்கிறதாம்!
நோய் தீர்க்கும் அம்பாள்!
அம்மை, கண் நோய் முதலான எந்த நோயாக இருந்தாலும், அம்பாளுக்கு மஞ்சள் காப்பு செய்து வழங்கப்படும் தீர்த்தத்தைப் பருகி வந்தால், பலன் உண்டு. தவிர, தொடர்ந்து 11 நாள் இங்கு வந்து, அம்மனை தரிசித்து, தீர்த்தத்தைப் பருகினால், தீராத நோயெல்லாம் தீரும் என்பது ஐதீகம்! இதேபோல், நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவோர், அம்மனை வழிபட்டு, 'மதில் மேல் விடுதல்' செய்தால் (கோழியை கோயிலின் மேற்பகுதியில் வீசுதல்) நோய் தீரும்; நிம்மதி பெருகும் என்பது நம்பிக்கை!
சிலை தூக்கி வலம் வருதல்!
அம்பாளிடம் குழந்தை வரம் கேட்டு, வேண்டுதல் நிறைவேறியதும் ஆண் குழந்தை பிறந்தால் ஸ்ரீபரசுராமர்; பெண் குழந்தை எனில் ஸ்ரீரேணுகாம்பாள் ஆகியோரின் திருவுருவ பொம்மைகளை மகன் அல்லது மகள் தூக்கியபடி பிராகார வலம் வருவதைக் காணலாம்! குழந்தைகளை நோயிலிருந்து விடுவிக்க வேண்டிக் கொண்டும், இதுபோல் சிலை தூக்கி வலம் வருதல் நடைபெறுகிறது! இதற்கென ஏராளமான திருவுருவ பொம்மைகள் ஆலயத்திலேயே தயார் நிலையில் உள்ளன.
தங்கும் வசதியும் உண்டு!
படவேடு தலத்துக்கு வருவோர், ஸ்ரீரேணுகாம்பாள், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீயோக ராமச்சந்திர ஸ்வாமி மற்றும் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி ஆகியோரின் ஆலயங்களுக்குச் சென்று தரிசிக்க வசதியாக, படவேடு கோயிலுக்கு அருகிலேயே தங்கும் விடுதிகளை எழுப்பியுள்ளது ஸ்ரீரேணுகாம்பாள் ஆலய நிர்வாகம் (தொடர்புக்கு 94862 48103, 04181 - 248224).
|
No comments:
Post a Comment