Friday, 4 August 2017

பருகியதில் பங்கு தரும் பானக நரசிம்மர் !

‘பாதி எனக்கு... மீதி உனக்கு!’ 
 
பருகியதில் பங்கு தரும் பானக நரசிம்மர்
ரா மபிரான் பத்தாயிரமாவது வயதை எட்டியதும், ‘‘பகவானே! தங்களது பூலோக வாசம் முடியப் போவதைத் தங்களுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன் !’’ என பணிவுடன் தெரிவித்தார் எமதர்மன்.
ஸ்ரீராமர் புன்னகைத்தார். ராமர் வைகுண்டத்துக்குக் கிளம்பும்போது ஆஞ்சநேயர் கண்ணீர் மல்க, ‘‘ஐயனே! தங்களைப் பிரிந்து நான் இருக்க மாட்டேன். எனவே, என்னையும் வைகுண்டம் அழைத்துச் செல்லுங்கள்’’ என்று தழுதழுத்தார். அவரைத் தழுவித் தேற்றிய தசரத புத்திரன், ‘‘கவலைப்படாதே அனுமா! ‘மங்கள கிரி’ க்ஷேத்திரத்தில் வணங்கி, அங்கேயே தங்கி என் பக்தர்களுக்கு அருள்வாயாக!’’ என்றார்.
அப்படிப்பட்ட தலம் ‘மங்களகிரி.’ மகா க்ஷேத்திரங்கள் என குறிப்பிடப்பட்ட தலங்கள் எட்டு. அவை: ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், நைமிசம், சால கிராமத்ரி, நாராயண் ஆசிரமம், தோதாத்ரி, வேங்கடகிரி, புஷ்கரம். இதில் தோதாத்ரி எனப்படுவதே இந்த மங்களகிரி க்ஷேத்திரம். இந்த எட்டுத் தலங்களும் மகா விஷ்ணுவே உருவாக்கியவை என்று புராணங்கள் கூறுகின்றன.
ஆந்திர மாநிலம், விஜயவாடா- குண்டூர் தேசிய நெடுஞ்சாலையில், விஜயவாடா புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் அமைந் துள்ளது மங்களகிரி. விஜயவாடாவிலிருந்து மங்களகிரி செல்வதற்குப் பேருந்துகளும் 10 ரூபாய் கட்டணத்தில் ஷேர் ஆட்டோக்களும் உள்ளன. இங்கு கோயில் கொண்டு அருள் புரிபவர் அருள் மிகு ஸ்ரீஅஷ்டமுக தண்ட பேருண்ட ஜ்வால
பானக நரசிம்மர். இங்கு அருள் பாலிக்கும் தாயாரின் திருநாமம் ராஜ லட்சுமி. புராதனமான இந்த நரசிம்மர் ஆலயம் மங்களகிரியில் உள்ள குன்றின் மீது கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. கீழிருந்து குன்றுக்குச் செல்ல, வசதியான மலைப்பாதை உள்ளது. வாக னங்களிலும் செல்லலாம். குன்றின் மீது புடைப்புச் சிற்பமாகக் காட்சி தரும் நரசிம்மரின் வாய், திறந்த நிலை யில் தரிசனம் தருகிறது. தரிசன காலத்துக்கு ஏற்றவாறு வெள்ளி அல் லது தங்கக் கவசம் கொண்டு முகப் பகுதி அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஏகாதசியன்று கவசம் அகற்றப்பட்டு, ஸ்வாமியின் ‘நிஜ ரூப தரிசன’த்தைக் காணலாம்.
நமுசி எனும் அரக்கன், பிரம்மனை நோக்கி பல ஆண்டுகள் தவமிருந்து, நிலத்திலோ நீரிலோ தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்று வரம் பெற்றான். தைரியம் பெற்ற நமுசியின் அட்டகாசம் தேவர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் தேவர்கள் ஒன்று கூடி, பகவான் ஸ்ரீமந் நாராயணனிடம் முறையிட்டனர். தன் நரசிம்ம அவதாரத்தில் இது முடிவுக்கு வரும் என ஆறுதல் கூறினார் அவர்.
அதன்படி ஸ்ரீமகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரத்தின் போது நமுசியை அழித்தார். அதன் அடையாளமாக பெருமாள் தன் ஒரு கன்னத்தில் சங்கும், மற்றொரு கன்னத்தில் சக்கரமும் கொண்டு காட்சி தருகிறார்.
இங்குள்ள நரசிம்ம பெருமாளுக்கு கிருத யுகத்தில் அமிர்தத்தையும், திரேதா யுகத்தில் பசும் நெய்யையும், துவாபர யுகத்தில் பசும்பாலையும் நிவேதித்து அருள் பெற்றுள்ளனர் பக்தர்கள். தற்போது நடந்து வரும் இந்தக் கலியுகத்தில் கரும்பு ரசத்துடன் கற்கண்டு பானகம் மற்றும் வெல்லம் மிளகு கலந்த பானகத்தையும் நிவேதித்து, ஆராதித்து மகிழ்ந்துள்ளனர்.இப்போது மங்களகிரி ஆலயத்தில் மகா நைவேத்தியத் தின்போது பெருமாளுக்கு சர்க்கரை- மிளகு கலந்த பானகத்துடன் அன்னம், பருப்பு, ரசம் ஆகியவையும் சமர்ப்பிக்கப்படுகின்றன.
பக்தர்கள், தங்களது குறை தீரவும், விரும்பிய எண் ணங்கள் நிறைவேறவும் தங்களின் சக்திக்கு உகந்த அளவில் பானக நீரை, நரசிம்மரின் நைவேத்தியத்துக்காக கோயில் பட்டாச்சார்யரிடம் வழங்குகின்றனர். அவர் அதை நரசிம்மருக்கு நிவேதித்து, கற்பூர தீபாராதனை காட்டுவார். பிறகு சிறிய கிண்ணம் ஒன்றில் பானகத்தை எடுத்து பெருமாளின் திறந்த வாயில் ஊற்றுவார். கிண்ணத்தில் உள்ள பானகம் ஏறத்தாழ பாதி குறைந்ததும் ஸ்வாமியின் வாயிலிருந்து ‘களக், களக்’ என்ற ஓசை வந்தவுடன் பான கம் ஊற்றுவதை பட்டாச்சார்யர் நிறுத்தி விடுவார். இதுபோல் அண்டா முழுவதும் பானகம் நிறைந்திருக்கையில், அதை எடுத்து சிறிய பாத்திரம் மூலம் மொண்டு மொண்டு பட்டர், பெருமாளின் வாயில் ஊற்ற, அண்டா வில் உள்ள பானக நீர் சரியாக அரையளவாகக் குறைந்தவுடன், ஸ்வாமியின் வாயில் ‘க்ளக்... க்ளக்’ என்ற சத்தம் வரும். அப்போது பானகம் ஊற்றுவது நிறுத்தப்படும்! தான் அருந்திய பானகத்தின் ஐம்பது சதவிகிதம், தன் பக்தனுக்கு பிரசாத மாகப் போக வேண்டும் என்பது நரசிம்மரின் சங்கல்பம் போலும்! இப்படி நைவேத்தியம் செய்யப்பட்ட பானகம் சுவையானது. வேறு எந்த ஓர் ஆலயத்திலும் இவ்வளவு சுவையான பானகம் கிடைக்காது. இங்கு பானக நீர் அல்லது இளநீர் தப்பித் தவறித் தரையில் சிந்தினாலும் அங்கு ஈ, எறும்பு மொய்ப்பதில்லை!
நைவேத்தியத்துக்காக குறைந்த கட்டணத்தில் பக்தர்களுக்கு பானகத்தை தயாரித்துத் தரவும் ஏற்பாடு செய்துள்ளது மங்களகிரி தேவஸ்தானம்.
இனி, தாயார் ராஜலட்சுமியின் தரிசனம். தேவியை தரிசிக்க குன்றின் மேல்பகுதிக்குச் செல்ல வேண்டும். படிக்கட்டுகளைக் கடந்தால், குகை போன்ற பகுதியில் புன்னகையுடன் காட்சி அளிக்கிறார் ராஜலட்சுமி தாயார். இவர், பெருமாளை விட்டுப் பிரிந்து குன்றில் தனியே இருப்பதற்கான காரணத்தை தல புராணம் கூறுகிறது.
பக்தர்கள் நைவேத்தியமாகத் தரும் பானகத்தை தான் மட்டும் அருந்தி, துணைவியைக் கண்டுகொள்ளாமல், மீதியை பக்தர்களுக்கு அளித்து வருவதால், பகவான் மீது தேவி ஊடல் கொண்டு இப்படித் தனியாக வசிக்கிறாளாம்! தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் மனமார வழங்கும் மஞ்சள், குங்குமம், தேங்காய், பழம் ஆகியவையே தனக்குப் போதும் என்று தேவி நினைக்கிறாளாம். பெருமாள் மற்றும் தாயார் எழுந்தருளியுள்ள யானை வடிவிலான இந்தக் குன்று, ஒரு காலத்தில் எரிமலையாக, அடிக்கடி அக்னிக் குழம்பைக் கக்கி வந்ததாம். பகவானுக்கு பானக நைவேத்தியம் தொடர்ந்து செய்யப்பட்டதால், எரிமலைக் குழம்பு வெளிப்படுவது நின்று போனதாகத் தல புராணம் கூறுகிறது. இந்தக் குன்று, யானை போல் தோற்றம் தருவதற்கும் ஒரு பின்னணி உண்டு என்கிறார்கள்.
முன்னொரு காலத்தில் அரசாண்ட பரியாத்திரா என்ற அரசனின் பிள்ளை ஹிரஸ்வா சிருங்கிக்கு உடலில் எக்கச்சக்கமான வியாதிகள். விஷ்ணு பக்தனான அவன், தன் உடல் தேறும் பொருட்டு தல யாத்திரை செய்யத் தொடங்கினானாம். அவனது பக்தியால் மகிழ்ந்த தேவர்கள், அவனை மங்களகிரி சென்று, விஷ்ணுவை எண்ணி தவம் செய்ய வழிகாட் டினர். அதனால் சிருங்கி மங்களகிரியில் அமர்ந்து கடும் தவம் செய்தான்.
ஆண்டுகள் சில கடந்தன. மகனைத் தேடி அலைந்த அரசன் பரியாத்திரா, இறுதியில் அவனை மங்களகிரியில் கண்டுபிடித்தான். நாடு திரும்புமாறு மகனை வலியுறுத்தினான். இதை மறுத்து விட்டதுடன் தன் தவத்தைத் தொடர்ந்தான் இளவரசன். அப்போது, ‘‘இனிமேல் சிருங்கிதான் எனக்கு வாகனம்!’’ என்று அசரீரி ஒலித்ததாம். இப்படி இளவரசன் அங்கேயே உறைந்ததால் அந்தக் குன்று, யானை வடிவமாக மாறி விட்டதாம் (சிருங்கி என்றால் யானை என்றும் பொருள் உண்டாம்).
இந்த மங்களகிரி பகுதி நீண்ட காலமாக கோல் கொண்டா நவாபின் ஆளு கைக்கு உட்பட்டிருந்தது. கி.பி.1780-ல் மன்னன் ஹைதர் அலி, மங்களகிரி பகுதியில் படையெடுத்து, கொள்ளை அடிக்க எடுத்த முயற்சி, அந்தப் பகுதியின் அரசன் மற்றும் பொதுமக்களால் முறியடிக்கப்பட்டது. கி.பி.1816-ல் மங்களகிரியைக் கொள்ளை அடிக்கும் வெறியோடு வந்த பிண்டாரிகள் என்ற கூட்டத்தினரை, அப்போது அமராவதி நகரை ஆண்டு வந்த பெரும் வீரரான வாசிரெட்டி வெங்கடாத்ரி எனும் அரசன் விரட்டி, வாகை சூடினான்.
மங்களகிரி ஸ்ரீநரசிம்மர் ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்ததுடன், ஆலயத்துக்கு சில நிவந்தனங்களையும் மன்னர் கிருஷ்ணதேவ ராயர் அளித்துள்ளதை அந்த ஊர் கல்வெட்டுகள் பறை சாற்றுகின்றன. காஞ்சி மகா பெரியவாள் 1967-ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டிருந்தபோது, அதிகாலை வேளையில் புஷ்கரணியில் ஸ்நானம் செய்துவிட்டு மங்களகிரி ஆலயத்தின் ஆயிரம் படிக்கட்டுகளைக் கடந்து நடந்து வந்து ஸ்ரீநரசிம்மரையும், தாயாரையும் தரிசித்து மகிழ்ந் துள்ளார். இந்த ஆலயத்துக்குச் சொந்தமாக சுமார் 400 ஏக்கர் நிலம் உள்ளது. அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மற்றும் பக்தர்கள் தரும் காணிக்கைகளைக் கொண்டு ஆண்டு தோறும் இங்கு ஸ்ரீராமநவமி, ஸ்ரீஅனுமத் ஜயந்தி, ஸ்ரீநரசிம்ம ஜயந்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற கொண்டாட்டங்கள் சிறப்புற நடைபெறுகின்றன. இந்த விசேஷ நாட்களிலும், சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
காலையில் 6:30-க்கு நடை திறக்கப்பட்டால், பிற்பகல் இரண்டு மணி வரை பக்தர்கள் தரிசிக்கலாம். பிற்பகலில் வானுலகத் தேவர்கள் பகவானைத் தரிசிக்க வருகிறார்கள் என்பது ஐதீகம். எனவே, மதியத்துக்குப் பிறகு பொதுமக்களுக்கு தரிசனம் கிடையாது. பானக நரசிம்மர் சமேத ராஜலட்சுமி தாயாரை பக்தியுடன் தரிசித்தால், கடன்கள் அடை படும், வியாபாரம் செழிக்கும், குழந்தைகள் கல்வியில் தேர்ச்சி பெறவும், குடும்பம் ஒற்றுமையுடன் திகழவும், செல்வம் சேரவும், பணியில் சிறக்கவும் அருள் கிட்டும் என்பது நம்பிக்கை!
ஆலயத் தொடர்புக்கு: ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமி வாரி தேவஸ்தானம், மங்களகிரி- 522 503, குண்டூர் மாவட்டம், ஆந்திர மாநிலம். போன்: 08645 - 232754

No comments:

Post a Comment