Friday, 4 August 2017

திருக்கோலக்கா


ங்கயற்கண்ணியாம் அகிலாண்டேஸ் வரி ஊட்டிய ஞானப்பாலைப் பருகி, ஊறிய தமிழ்ப் பெருக்கால் திருஞானசம்பந்தப் பெருமான் உலகம் வியக்கும் தேவாரப் பாடல்களைப் பாடத் தொடங்கினார் இல்லையா! அன்றிரவு, தோணியப்பரின் நினைவுடன் துயின்ற திருஞானசம்பந்தர், மறு நாள் காலை பொழுது புலரத் தொடங்கியதும் திருக்கோயிலுக்குச் சென்றார். தோணியப்பரை வணங்கினார். இறைவன் அருளால், பக்கத்தில் உள்ள திருக்கோலக்கா என்னும் திருத்தலத்துக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை எழுந்தது.
நாமும் தோணியப்பரை வணங்கி நின்றபோது, இந்தத் தகவல் உள்ளம் புகுந்து, உணர்வில் கலக்க... திருக்கோலக்கா செல்லும் விருப்பம் பற்றிக் கொண்டது. புறப்பட்டுவிட்டோம் கோலக்கா.
திருக்கோலக்கா. திருஞானசம்பந்தப் பெருமானின் யாத்திரையில் இதுவே முதல் தலம் எனலாம். காவிரிக் கரைத் திருத்தலங்களுள் ஒன்றான கோலக்கா, சீர்காழியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. ‘சீர்காழி எல்லை முடிந்து விட்டதா!’ என்று எட்டிப் பார்ப்பதற்குள் கோலக்கா வந்துவிடுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் கிராமம்; கிஞ்சித்தும் மாசுபடாத அச்சு அசலான கிராமத்து வாசனை மனதைக் கொள்ளை கொள்ள, அடி மேல் அடியெடுத்துக் கிராமத்துள் நுழைகிறோம்.
பெருக்கு ஓலிட்டு அலைபிறங்கும் காவிரி நீர் பிரச மலர் தரளம் சிந்த வரிக்கோல வண்டாட, மாதரார் குடைந்து ஆடும் மணிநீர் வாவித் திருக்கோலக்கா- என்று
இந்த ஊரைப் பற்றிச் சேக்கிழார் பெருமான் விவரிக்கிறார்.
திருஞானசம்பந்தர் கோலக்காவுக்கு வந்தார். வேதத்தின் விழுப்பொருளாம் விடையேறு நாயகனை தரிசித்தார்; பாடத் தொடங்கினார். வெறுமே பாடுவாரா? கைத் தாள மிட்டுக் கொண்டே பாடினார்.
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக்காவுளான் சடையும் பிறையும் சாம்பல் பூச்சும்கீழ் உடையும் கொண்ட உருவம் என் கொலோ வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் கொடிகொள் விழவார் கோலக்காவுள் எம் அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே
அன்பும் பக்தியும் இழையோட... சந்தமும் தாளமும் சதிராட... சீர்காழிக் கொழுந்து பாடப் பாட, பிஞ்சுக் கரங்கள் தாளம் போடப் போட... தன் அன்புப் பிள்ளையின் அம்புஜக் கரங்கள், தாள வேகத்தில் சிவந்து போவதைப் பொறுப்பாரா பரமேஸ்வரனார்?
அஞ்செழுத்து (நமசிவாய பஞ்சாட்சரம்) எழுதப்பெற்ற ஆடகப் பொன்னால் ஆன தாளம், பிள்ளையின் பிஞ்சுக் கரங்களில் வந்து அமர்ந்தது. தலைமீது தாளத்தை வைத்து வணங்கிய திருஞானசம்பந்தர், மீண்டும் கைகளில் எடுத்து, அதைத் தட்டினார். பரமனார் கொடுத்த தாளத்தைக் கொண்டு, செல்ல மகன் பாடல் இசைப்பதைப் பார்த்த அம்பிகை, உடனே, அந்தத் தாளத்துக்கு ஒலியும் ஓசையும் கொடுத்தார்.
இந்த அதிசயத்தைப் பார்த்து, தும்புரு நாரதர் உள்ளிட்ட தேவ இசை வாணர்களும் முனிவர்களும் பிறரும் மலர் மாரி பொழிந்தனர்.
திருக்கோலக்கா கிராமத்துக்குள் நுழைந்து கோயிலை அடைகிறோம். சிறிய கோயில். கோயில் வரை வாகனங்கள் செல்ல முடியும்.
கோயிலின் எதிரில் குளம். ஆனந்த தீர்த்தம். கோயில் திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. வாயிலில் கோபுரமில்லை. ஏழு கலசங்களோடு கூடிய கிழக்கு முகப்பு வாயில் உள்ளது. தாண்டி உள்ளே போனால், ஒரு கிணறு. வலது- இடது இரண்டு பக்கங்களிலும் சில கட்டடங்கள். வலப் பக்கம் வாகனங்கள் வைப்பதற்கான இடம்.
அடுத்தொரு வாயில். முற்காலத்தில், இதுதான் முக்கிய வாயிலாக இருந்திருக்கும் போலும். இந்த வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தால், கோயில் பிராகாரத்தை அடைந்து விடுகிறோம்.
ஓர்காழிப் பாலற்கா அன்று பசும் பொன் தாளம் கொடுத்த கோலக்கா மேவிய கொடையாளா என்று ராமலிங்க ஸ்வாமிகள் பாடியதை பாடிக் கொண்டே, பிராகார வலம் தொடங்குகிறோம்.
கிழக்குத் திருச்சுற்றில்தானே நுழைந்தோம். வலம் தொடங்கும் போது, முதலில், சந்திரன். அடுத்து, தேவார மூவர். தெற்குச் சுற்றில் திரும்பும் இடத்தில், சிவலிங்கம். தெற்குச் சுற்றில் முதலில், அதிகார நந்தி.
இதற்குப் பின்னர், இந்தக் கோயில் சற்றே வித்தியாசமாக இருக்கிறது. தெற்குச் சுற்றிலிருந்து மூலவர் சந்நிதிக்குப் போவதற்கான பக்கவாட்டு வாயில். பிராகாரம் என்று நாம் வலம் வருவது, மூலவர் திருச்சந்நிதியின் வெளிச் சுவரைத்தான். எனவே, மூலவர் கோஷ்ட மூர்த்தங்களை தரிசிக்கலாம். தெற்குச் சுற்றை முடித்துவிட்டு, மேற்குச் சுற்றில் திரும்புகிறோம். இந்தச் சுற்று தனியாக குறுகலாக அமைக்கப்பட்டுள்ளது. மேற்குச் சுற்றுச் சந்நிதிகள், மூலவர் சந்நிதிக் கட்டடத்திலிருந்து விரிவாக்கம் செய்யப்பட்டது போல அமைக்கப்பட்டுள்ளதால், மேற்குச் சுற்றுப் பிராகாரம் ஒரு சிறிய இடைமண்டபம் போல் தோற்றம் தருகிறது. தென்மேற்கு மூலையில் விநாயகர், அடுத்து சோமாஸ்கந்தர், சுப்ரமணியர், உற்சவ சுப்ரமணியர், தென்கிழக்கு மூலையில் மகாலட்சுமி என்று வரிசையாகச் சந்நிதிகள்.

வடக்குச் சுற்றில் திரும்பினால், அநேகமாகப் பிராகாரத்தின் முக்கால்வாசி நீளத்துக்குச் சந்நிதிகள் ஏதுமில்லை. வடகிழக்கு மூலைக்கு அருகில், சனி பகவானுக்கு தனியாக ஒரு சந்நிதி. அதே மூலையில், ஸ்வாமி தீர்த்தத்துக்கான கிணறு. மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்பினால், சூரியன். பிராகார வலத்தை நிறைவு செய்து விட்டோம். மூலவர் கருவறை நோக்கிச் செல்கிறோம்.

நேரே நுழைந்தால், பெரிய உள் மண்டபம். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள். நின்று மூலவரைப் பார்க்கும்போது, நமக்கு வலப் பக்கத்தில், நடராஜ சபை. மண்டபத்திலேயே, நந்தியும் பலிபீடமும். நேரே நோக்க... அருள்மிகு சப்தபுரீஸ்வரர் எனும் அருள்மிகு திருத்தாளமுடையார். திருஞானசம்பந்தருக்கு தாளம் கொடுத்தவர் ஆதலால், இப்படியரு திருநாமம்.
குழந்தைக்கு அருளியவர் என்பதாலோ என்னவோ, சற்றே குட்டையான சிவலிங்கத் திருமேனியராக திகழ்கிறார் திருத்தாளமுடையார், சதுரபீட ஆவுடையார். மேலே ருத்ராட்ச விதானம்.
சுந்தரரைத் திருவாரூருக்கு வரச் சொன்னார் சிவபெருமான். தில்லையிலிருந்து புறப்பட்ட சுந்தரர், சீர்காழிப் பகுதியை அடைந்தார். சம்பந்தரின் அவதாரத் தலம் என்பதால், சீர்காழியைத் தன் கால்களால் மிதிக்க அஞ்சி, ஊரைச் சுற்றிவந்து தோணியப்பரை வணங்கிவிட்டு, திருகோலக்காவை அடைந்தார். சம்பந்தருக்குப் பொன் தாளம் கொடுத்த செய்தியை உணர்ந்தார். தாளமுடையாரைப் பாடி வணங்கினார்.
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பு ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மனக்கருத்தை ஆளும் பூதங்கள் பாட நின்றாடும் அங்கணன் தனை எண்கணம் இறைஞ்சும் கோளிலிப் பெரும் கோயிலுளானை கோலக்காவினில் கண்டு கொண்டேனே
உலகத்தவர் முன் தாளம் ஈந்த திருத்தாளமுடையார் குட்டையானவராக இருந்தாலும், படுகம்பீரமாகக் காட்சி தருகிறார். வணங்கி மகிழ்ந்து மீண்டும் வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை. பிரம்மா தலைப் பக்கம் நிற்க, மகாவிஷ்ணு கால்பக்கம் நிற்க, லிங்கோத்பவர் அருமையோ அருமை.
ஆமாம், இந்தக் கோயிலில், ஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்றார்; அதனால், ஸ்வா மிக்குத் தாளமுடையார் என்பது திருநாமம். அதற்கு முன்?
மாசிலா ஈஸ்வரர் என்று ஐயனும், பெரியநாயகி என்று அம்மையும் திருநாமம் கொண்டிருந்ததாக உள்ளூர்க் காரர்கள் கூறுகிறார்கள்.
தாளேஸ்வரரான திருத்தாளமுடை யாரை வணங்கி, அம்மன் சந்நிதியின் பக்கம் செல்கிறோம். தனிக் கோயில் என்றே சொல்லலாம். ஸ்வாமி சந்நிதிக்குப் பக்கத்தில் (சற்றே வடக்காக), அதே போன்று கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது.
சிறிய முன் மண்டபம். வலப் பக்கத்தில் பள்ளியறை. அம்பாளுக்கு அருள்மிகு தொனிப்ரதாம்பாள் என்பது திருநாமம். தமிழில், ஓசை கொடுத்த நாயகி. நின்ற திருக்கோலத்தில் சதுர்புஜ நாயகியாக, வரத- அபய ஹஸ்தம் தாங்கி அருள் வழங்கும் அம்மை. வணங்கி நிற்கும்போது, சமீப காலத்தில் இந்தக் கோயிலில் நிகழ்ந்த அதிசயங்கள் உள்ளத்துள் வலம் வருகின்றன. 1970-களில், இந்தப் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர், தன் ஊமை மகன் பேசும் சக்தி பெற வேண்டும் என்று இங்கு நேர்ந்து கொண்டார். மகனும் சில நாட்களிலேயே பேசத் தொடங்க, தங்கத்தால் தாளம் செய்து, அந்தத் தாயார் கோயிலுக்குக் கொடுத்துள்ளார். 42 கிராம் பவுனால் ஆன அந்தத் தாளத்தை எடுத்துக் காட்டுகிறார் சிவாச்சார்யார். உள்ளமும் உடலும் சிலிர்த்தது!
கோயிலின் உற்சவ மூர்த்தங் களில், பொன் தாளத்தைக் கையில் ஏந்தி நிற்கும் திருஞானசம்பந்தர் விக்கிரகம் வெகு அழகு! சீர்காழியில் சித்திரைப் பெருவிழாவின் 2-ஆம் நாள் திருமுலைப்பால் விழா நடக்கும்போது, இங்கு- திருக்கோலக்காவில், தாளம் தருகிற திருவிழா நடைபெறுகிறது.
அழகும் அருளும் பொங்கி வழியும் கோலக்கா திருத்தலத்தில் இருந்து வெளி வருகிறோம்.

No comments:

Post a Comment