த ஞ்சை அரண்மனை உப்பரிகை மீது நின்றிருந்த பரகேசரி வீரநாராயண பராந்தகச் சோழர், பேச்சரவம் கேட்டுத் திரும்பினார். மகாராணி வில்லவன் மாதேவியார், இளவரசி அனுபமாவின் தோளைப் பற்றியபடி வந்து கொண்டிருந்தார். அனுவின் கண்கள், கலக்கத்தின் உறைவிடமாக இருந்தன. தந்தையின் காதுகள் கூர்மையானவை என்று உணர்ந்திருந்த அனுபமா, மெள்ள முணுமுணுத்தாள்.
‘‘பெரியம்மா சாப்பிடவே இல்லையம்மா!’’ பட்டத்தரசியும், மூத்த மகாராணியுமான பெருவுடைநாயகி கோகிலம் மாதேவி யரைத்தான் அனுபமா குறிப்பிட்டாள். அரண்மனை என்ன... தஞ்சாவூர் மாநகரமே அச்சம் கலந்த அமைதியில் ஆழ்ந்திருந்தது. ராஷ்டிரகூட மன்னன் 3-ஆம் கிருஷ்ணன், காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து விட்டான் என்ற செய்தி, இரண்டு நாட்களுக்கு முன் வந்ததிலிருந்தே இறுக்கமும், அமைதியும் சோழநாட்டுக்குள் குடி புகுந்து விட்டன.
பராந்தகச் சோழர் நினைவுகளை அசை போட்டார். பாண்டிய மன்னன் மாறவர்மன் ராஜசிம்மன் மீது, தான் கொண்ட வெற்றி, வேலூர் போரில் பாண்டியனுக்குத் துணை வந்த ஈழ மன்னன் கச்சபனின் படைகளை ஓட ஓட விரட்டியது, ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற போது ஈழ மன்னன் உதயணன்- ரோஹண மலைகளில் ஒளிந்து கொண்டது, காஞ்சிபுரத்தில் பாணர்களை, தான் வசப்படுத்திக் கொண்டது, தன் தந்தையார் ஆதித்ய சோழர் கண்ட சோழ சாம்ராஜ்யக் கனவை நனவாக்குகிற தனது முயற்சிகள் ஆகியவை மொத்தமும் இன்று கேள்விக்குறிக்குள் முடங்கி விட்டதை உணர்ந்தார்.
தக்கோலப் பெருவெளியில் ராஷ்டிரகூடப் படைகளுக் கும், சோழப் படைகளுக்கும் இடையே போர் நடை பெறுகிறது. காஞ்சி மற்றும் புலியூர் கோட்டங்களின் பெருவுடைத் தளபதியும், தொண்டை மண்டல ராஜ்ய தானாதிபதியுமான பட்டத்து இளவரசன் ராஜாதித் தன், சோழப் படைகளின் தலைமையேற்றுப் போராடிக் கொண்டிருந்தான். சேர நாட்டுச் சிற்றரசன் வல்லன் இளங்குமரனும், தளபதி ராஜமனுகுல ஆதித்தனும் இறந்த செய்தி, ஏற்கெனவே வந்து விட்டது. இனி, என்ன நடக்குமோ?
தில்லை தாண்டவ சபைக்குப் பொன் வேய்ந்த நடராஜ திருமேனியை தரிசித்துக் கொண்டிருந்த புனித வேளையில், பக்கத்தில் நின்றிருந்த ராஜாதித்தன் மெய்ம்மறந்து சொன்னது இப்போது நினைவில் தட்டியது: ‘நடராஜப் பெருமானோடு இரண்டறக் கலந்து விட்டால் எத்தனை சுகம்!’ அண்ணன் சொன்னதன் ஆழ்வீச்சு புரியாமலே திரும்பிப் பார்த்துச் சிரித்தனர் கண்டராதித்தனும், அரிஞ்சயனும். மன்னரின் நினைவலைகளை வெட்டிக் கிழிப்பது போல வடமலைக் கதவு வேகமாகத் திறந்தது. ஆடிக் கொண்டிருந்த கதவை தள்ளி, பாய்ந்து வந்தார் கோகிலம் மாதேவியார். ‘‘அக்கா!’’ என்று அழைத்துக் கொண்டே வில்லவன் மாதேவி அருகில் செல்ல... பெரியம்மாவின் கைகளை அனுபமா பற்றிக் கொள்ள... சின்ன இளவரசன் சுந்தரன் பதற்றத்தோடு உள்ளே புக...
‘‘ராஜாதித்தா... ஆ... அ...’’ யானை மீது இருந்தபடி போராடிய மகன் போர்க் களத்தில் வீர மரணம் எய்திவிட்ட செய்தியைக் கேட்ட தாய் கோகிலம் ஓலமிட்டாள். தக்கோலம்- சோழர்களையும் ஓலமிட வைத்து விட்டது.
தக்கோலம்! தட்சன் ஓலம் இட்டதால், இந்தப் பெயர் பெற்ற தக்கோலம்! தொண்டை மண்டலம் வரை எல்லை விரித்திருந்த சோழ சாம்ராஜ்யத்தைக் காவிரிக் கரைக்குள் திருப்பி விட்ட வரலாற்றுப் போர் (கி.பி.949) நடைபெற்ற தக்கோலம். நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் பெருகியதால் திருஊறல் என்று பெயர் பெற்ற தக்கோலம்.
குரு பகவானின் அருளையும், துர்காதேவியின் அருளையும் அள்ளி வழங்கும் தக்கோலம்.
உத்தராயணத் திலும், தட்சிணாயணத்திலும் வண்ணம் (நிறம்) மாறி வடிவம் காட்டிய சிவலிங்கம் எழுந்தருளியிருக்கும் தக்கோலம். பாவம் போக்கும் தக்கோலம். அரக்கோணம்- காஞ்சிபுரம் சாலையில், அரக்கோணம் கடற்படை ஐ.என்.எஸ். ராஜாளியைத் தாண்டினால், சிறிது தொலைவில் தக்கோலம் ரயில் நிலையம். அரக்கோணம்- காஞ்சிபுரம் ரயில் பாதையில் இது அமைந்துள்ளது. அதே சாலையில் இன்னும் சிறிது தூரம் தொடர்ந்தால், இடப் புறம், தக்கோலம் வழியாகச் சென்னை- (அரக்கோணம்- பேரம்பாக்கம் சாலை) செல்லும் பாதை ஒன்று பிரியும். கூட்டு ரோடு என்றழைக்கப்படும் இங்கிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் (அரக்கோணத்திலிருந்து சுமார் 16 கி.மீ.) உள்ளது தக்கோலம் திருத்தலம். சென்னை, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.
ஊரின் நடுநாயகமாக விளங்கும் கோயிலை அடைகிறோம். மேற்கு ராஜ கோபுரமே பிரதான வாயில். கோபுரத்தில் அழகான சிற்பங்கள். மார்க்கண்டேயனுக்கு அருள் வழங்குவதற்காக எமனைக் காலால் உதைக்கும் சிவனாரைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். விசாலமான பிராகாரத்துள் நுழைந்து, வலம் வரத் தொடங்கினால், வடமேற்கு மூலையில் தனியாக- சிறு கோயிலாக விநாயகர் சந்நிதி. கிழக்கு நோக்கிய கஜமுகனை வணங்கி, வடக்குச் சுற்றில் நடக்கிறோம். இந்தச் சுற்றின் நடுவில் ஒரு குளம். பெயர் பார்வதி தீர்த்தம். இதற்குப் பல்லவர் காலத்தில் நந்தி தீர்த்தம் எனும் பெயர் ஏற்பட்டது. கிழக்குச் சுற்று திரும்புகிற மூலையில் யாகசாலை. கிழக்குச் சுற்றின் நடுவில் கொடிமரம், பலிபீடம், நந்தி. நந்திக்கு நேரே கோயில் உள் மதிலில் ஒரு சாளரம். கிழக்குத் திருச்சுற்றின் மீதிப் பகுதி, இயற்கையோடு இயைந்த பசுமடமாகச் செயல்படுகிறது. மாடுகளும் கன்றுகளும் மரத்தின் அடிப் பகுதிகளில் இளைப்பாறுகின்றன. தென்கிழக்கு மூலையில், சற்றே பாழடைந்த மண்டபம்.
தக்கோலம் என்னும் பெயர் இந்தத் தலத்துக்கு எப்படி வந்தது? பிரம்மாவும் விஷ்ணுவும் சிவப் பரம் பொருளை அடைய விரும்பினார்கள். தவம் செய்தால் தவப்பேறாகப் பரம்பொருள் கிடைப்பார். தங்களின் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள, விருஷபா நதிக் கரையில் அவர்கள் தேர்ந்தெடுத்த இடமே தக்கோலம். தவக் கோலம் என்ற பெயர் தக்கோலம் ஆனது.
பார்வதிதேவி தவம் செய்ய விரும்பினார். மலை அரசன் (பர்வதராஜனான ஹிமவான்) மகளான பார்வதி தேவி, மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து பூஜை செய்வதற்குத் தேர்ந்தெடுத்த இடம் இந்தத் தலம். அம்பாளின் தவக் கோலம் பெற்ற இடம் என்பதாலும், தவக் கோலம் எனும் பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.
தக்கன் ஓலம் என்பது, தக்கோலம் ஆனதாகவும் வரலாறு உண்டு. தக்கன் யாகம் செய்தான் (பிரம்மாவின் மானச புத்திரர்களில் ஒருவனான தட்ச பிரஜாபதி; தட்சன் எனும் பெயர், தக்கன் ஆனது). முன்னதாக, இதே தக்கன், பார்வதி தன் மகளாக வேண்டும் என்றும், சிவபெருமான் தன் மாப்பிள்ளையாக வேண்டும் என்றும் விரும்பித் தவம் செய்திருந்தான். விருப்பமும் நிறைவேறியது. தக்கன், யாகம் ஒன்று நடத்தியது தெரியும் (தட்சனது யாக குண்டம் இருந்த இடம்தான் தக்கோலம் எனப்படுகிறது). தந்தையின் யாகம் என்பதால், அழையா விருந்தாளியாக வந்த தாட்சாயனி, தந்தையால் அவமானப்படுத்தப்பட்டார். பிறகு, தீயவன் மகள் என்றும், வடிவம் வேண்டாம் என்றும் முடிவு செய்து நெருப்புக்குள் புகுந்தார்.
இதையறிந்த சிவனார் வெகுண்டார். யாகத்தை அழிக்க, தன் பூத கணங்களை ஏவினார். அவர்களுக்கும் பிருகு முனிவரால் ஏவப்பட்ட அசுர சக்திகளுக்கும் பெரும்போர் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் அசுர சக்திகளின் தாக்குதலால் பூதகணங்கள் சிதறுவதைக் கண்ட ஈசனார், தன் உக்கிர அம்சமான வீரபத்திரரை யும் மகா காளியையும் உருவாக்கி தட்சனை அழிக்க அனுப்பினார். கையில் வில்லும், கண்களில் கோபமுமாகப் பாய்ந்த வீரபத்திரரைக் கண்டு தக்கன், உலகமே அதிர ஓலமிட்டான். இவ்வாறு தக்கன் ஓலமிட்ட இடம் தக்கோலம் ஆனது.
தக்கோலம் என்றே இப்போதும் வழங்கப்படுகிற இந்தத் திருக்கோயிலில், அம்பாள் சந்நிதியில் நிற்கி றோம். தெற்குத் திருச்சுற்றில் வடக்குப் பார்த்ததாக உள்ள சந்நிதி. சிறிய முகப்பு மண்டபம், பின்னர் அர்த்த மண்டபம். கிரிராஜ கன்னிகை என்ற திரு நாமத்தோடு (கிரிராஜன்- மலை அரசன்; கன்னிகை- மகள்) நின்ற திருக்கோலத்தில் அம்பாள் அருள் வழங் குகிறார். திருவதனத்தில் தவழும் வசீகரப் புன்னகை மெய்சிலிர்க்கச் செய்கிறது. அம்பாள் சந்நிதியை வலம் வருவதற்கான பிராகாரம் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்கள் இல்லை. வலம் வந்து, மீண்டும் தெற்குத் திருச்சுற்றில் நிற்கிறோம். எதிரில், மூலவர் (சுவாமி) சந்நிதிக்குச் செல்லும் வழி.
மேற்கு ராஜ கோபுரத்தில் தொடங்கிய வெளிப் பிராகார வலத்தை நாம் இன்னும் நிறைவு செய்ய வில்லை. எனவே, அதையே தொடர்கிறோம். அம் பாள் சந்நிதியைத் தாண்டிச் சிறிது தூரம் தெற்குத் திருச்சுற்றில் தொடர்ந்தால், சுப்பிரமணியர் சந்நிதி. வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் அருள் காட்சி தருகிறார். தெற்குச் சுற்றிலிருந்து மேற்குச் சுற்றில் திரும்ப, பிராகார வலம் நிறைவடைகிறது. சுவாமி சந்நிதிக்குச் செல்வதற்குத் தெற்குச் சுற்று வாயிலைத் தான் அடைய வேண்டும். எனவே, மீண்டும் ஒரு முறை பிராகாரத்தை வலம் வந்து, கிழக்குச் சுற்றுக் கொடி மரத்தை வணங்கிப் பின்னர் தெற்குச் சுற்று வாயிலை அடைகிறோம்.
அருள்மிகு ஜலநாதேஸ்வரர் (தக்கோலத்து ஈசர்) கிழக்குப் பார்த்தவர். நாம் நுழைவதோ தெற்குச் சுற்றிலுள்ள பக்கவாட்டு வாயில். உள்ளே நுழைந்த வுடன், வலப் புறத்தில் வரிசையாக வாகனங்கள். இடப் பக்கத்தில் கையில் வில்லேந்திய ஐயப்பன் அருள் பாலிக்கிறார். வெளிப் பிராகாரத்தில் கொடி மரத்துக்கு அருகில் ஒரு சாளரம் பார்த்தோமே... அந்தச் சாளரம், நாம் இப்போது நிற்கும் இந்த மண்ட பத்துக்குள்தான் திறக்கிறது. சாளரத்துக்கு எதிரில் உள்வாயில். உள்வாயிலின் இரு புறமும் உள்ள விநாயகரையும், முருகப் பெருமானையும் வணங்கிச் சென்றால், உள் பிராகாரம்.
உள் பிராகாரத்தை வலம் வருவோமா? உள் வாயிலுக்கு நேரே நந்தி. இந்த நந்திக்கு நேராகவும் ஒரு சாளரம். இப்படியே சுவாமி சந்நிதிக்குப் போக முடியாது. பக்கவாட்டு வழியில்தான் போக வேண்டும். பிராகாரத்தில் முதலில் சூரியன். தெற்குச் சுற்றுக்குள் திரும்பியவுடன் தொடக்கத்தில் சப்த மாதர்கள். அடுத்ததாகச், சற்றே தாழ, ஒரு லிங்கம். தக்கோலத்தில் சிவ லிங்க பூஜை செய்து பேறு பெற்றவர்களுள் ஒருவர் உதித முனிவர். அவர் பூஜித்த இடமும், லிங்கமும் இதுவாம். வெளிப் பிராகாரத்தில் இந்த இடத்தை யட்டி (அம்பாள் சந்நிதிக்கும், சண்முகர் சந்நிதிக்கும் இடைப்பட்டு, ஆனால் உள் மதிலை ஒட்டி) சிறிய விமானம் அமைந்துள்ளதைக் காணலாம்.
மூர்த்தங்களின் எழில் மனதைப் பறிக்கிறது. தக்கோலத்துச் சுக்கிர வார அம்பாள், பராசக்தி+ லட்சுமி+ சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக வணங்கப்படுகிறார். உற்சவ மூர்த்தங்களில், திருவாலங்காட்டு காளியும் இங்கு உண்டு. போட்டி நடனத்தின்போது சிவனார் தம் காலைத் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடிவிட, பெண் வடிவிலிருந்ததால் அவ்வாறு செய்ய முடியாத காளி, குதிகால்களைச் சேர்த்து வைத்து, பாதங்களைப் பக்க வாட்டில் திருப்பி வைத்து ஆடினார். பாதங்களைப் பக்கவாட்டில் வைத்த திருக்கோலத்தில் ஆலங்காட்டு காளி இங்கேயும் காட்சி தருகிறார். சந்திரசேகரர் உற் சவ மூர்த்தமும் உண்டு.
நடராஜப் பெருமானையும், உற்சவ மூர்த்தங்களையும் வணங்கிக் கொண்டே இடப் புறம் திரும்பினால், மூலவரின் முன் மண்டபம். அதை அடுத்து அர்த்த மண்டபம். வாயிலில், ஒரு புறம் விநாயகர். வாயிலின் இரு புறமும் காவல் நிற்கும் துவாரபாலகர்கள். மூலவர் கருவறை முகப்பில், மேலே கயிலைக் காட்சி, பார்வதி- பரமேஸ்வரத் திருக்கோலம்.
உள்ளே கண்களையும், சித்தத்தையும் திருப்ப... மூலவர். அருள்மிகு ஜலநாதேஸ்வரர். ஊறல்நாதர், ஊறல்நாயகர், ஊறலீசர், ஜலேஸ்வரர், ஜலநாத உடையார், ஜலகண்டர் என்றெல்லாம் இவருக்கு திருநாமங்கள். சுயம்பு லிங்கமாகக் காட்சியளிக் கும் சுவாமி, சற்றே தாழ இருக்கும் ஆவுடை யாரையும், கூர்மையான லிங்க பாணத்தையும் கொண்டுள்ளார். பாணத்தில் இரண்டு பள்ளங்கள் காணப்படுகின்றன. எப்படி வந்தன? அம்பிகை மணலால் சிவலிங்கம் பிடித்து வைத்து பூஜை செய்தாரல்லவா? சும்மா இருப்பாரா சிவனார்? ஆற்றில் வெள்ளம் வரச் செய்து விட் டார் (முற்காலத்தில் விருஷபா நதியென்றும், க்ஷீரா நதி என்றும் அழைக்கப்பட்ட குசஸ்தலை ஆற்றங்கரையில்தான் தக்கோலம் உள்ளது). வெள்ளம் பெருக்கெடுத்தோட... மணல் லிங்கம் கரையத் தொடங்க... இறையனாரை விடமாட்டேன் என்று அம்பிகை லிங்கத்தை ஆலிங்கனம் செய்ய... அழுத்திப் பிடித்துக் கொண்ட அம்பிகையின் மார்பு பதிந்த தடங்களையே, பள்ளங்களாகப் பார்க்கி றோம். மூலவருக்குப் பின்புறம், சுவரில் பார்வதியும், பரமேஸ்வரரும் திருமணக் கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். ஜலநாதேஸ்வரர் என்று அழைக்கப் பட்டாலும், கல்வெட்டுகளிலும், சாசனங்களிலும், மக்கள் புழக்கத்திலும் உமாபதீஸ்வரர் என்றே இவர் வழங்கப்படுகிறார். தக்கனையே ஓலமிட வைத்தவர் என்றாலும், மார்க்கண்டேயனை காப்பாற்றுவதற்காக எமனை உதைத்த சிவபெருமானின் பரம கருணையே, இங்கு வந்த ஞானசம்பந்தருக்கு நினைவு வந்திருக்க வேண்டும். எப்படிப் பாடுகிறார் பாருங்கள்:
கறுத்த மனத்தினொடும் கடுங்காலன் வந்து எய்துதலும் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தான் இடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரம்தோளும் மெய்யும் தெரிய அன்று
ஒறுத்தருள் செய்த பிரான் திருவூறலை உள்குதுமே
அருள்மிகு ஜலநாதேஸ்வரரை வழிபட்டு, மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம். சந்நிதியைச் சுற்றிலும், பிராகாரத்துக்கும், சந்நிதிச் சுவருக்கும் இடையில் அகழி போன்ற அமைப்பு. தொண்டை மண்டலக் கோயில் கள் பலவற்றிலும் இத்தகைய அமைப்பைப் பார்க்கலாம். புடைச் சிற்பப் பாணியில், பாதி வெளியே வந்த மாதிரி அமைக்கப்பட்டுள்ள தூண்களும், மேல்வரிசையிலும், கீழ் வரிசையிலும் காணப்படும் பூத- கண வடிவங்களும் மிக அழகு.இந்தக் கோயிலின் சிறப்புகளில் ஒன்று- விநாயகர் உட்பட கோஷ்ட மூர்த்தங்கள் அமர்ந்திருக்கும் பாங்கு. பிற கோயில்களில் உள்ள தட்சிணாமூர்த்திக்கும், தக்கோலத்து தட்சிணாமூர்த்திக்கும் வேறுபாடு உண்டு. இவர் வலக் காலைக் கீழே ஊன்றிக் கொண்டு, இடக் காலை மேலே வைத்துக் கொண்டு உத்கடி ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். வலக் கரங்களில் அக்ஷமாலையும், சின்முத் திரையும், இடக் கரங்களில் நெருப்பும், சுவடியும், செஞ்சடைக் கற்றையை வட்ட வடிவில் முடிந்திருக்கிறார். கபால கிரீடம் தரித்திருக்கிறார்.
எல்லாம் சரிதான். தக்கோலத்தில் நந்தி வாயிலிருந்து நீர் வரும் என்றார்களே, அது எங்கே? தக்கோலத்தின் பழைய பெயர் திருஊறல். சுவாமிக்கும், ஊறல்நாதர் என்பது திருநாமம். இந்தப் பெயர் எப்படி வந்தது?
அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோயில் உள்ள தக்கோலம் திருத்தலம், குசஸ்தலை ஆற்றின் (உக்ராக்ஷி நதி என்றும், பழைய பெயரையும் இந்தத் தலத்தோடு தொடர்புபடுத்தலாம். குறிப்பாகச் சொன்னால், குசஸ்தலையின் கல்லாறு பகுதி இது) கரையில் உள்ளது. ஜலநாதேஸ்வரர் கோயிலுக்கு வடகிழக்கே சுமார் 500 அடி தொலைவில், நதியைத் தொட்டுக்கொண்டு மற்றொரு கோயில் உள்ளது. இதுவே, ஊறல் என்னும் பெயருக்கான நந்தி எழுந்தருளியிருக்கும் தலம்.
ஆற்றின் கரையில், கிட்டத்தட்ட ஆற்றுக்குள்ளேயே இருப்பது போன்று இருக்கிறது அருள்மிகு கங்காதரேஸ்வரர் கோயில். தெற்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, கிழக்கு நோக்கிய மூலவரை தரிசிக்கலாம். சந் நிதியை நோக்கி நிற்கிற இடத்தில், கீழே சுரங்கம் போன்ற அமைப்பைக் காட்டுகிறார்கள், அங்கு நீர் வருமாம். மூலவரை வணங்கி வலம் வரலாம். தென்மேற்கு மூலையில் அம்பாள் சந்நிதி. நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தரும் அருள்மிகு மோகனவல்லி. மேற்குச் சுற்றில் நடுநாயகமாக (மூலவருக்கு நேர் பின்னால்) ஒரு நந்தி. தரைக்கும் கீழே ஒரு பள்ளத்தில் இருக்கிறார். இவரது வாயிலிருந்துதான் நீர் ஊறும்.
‘இப்போதெல்லாம் நீர் வருவதில்லையே ஏன்?’ ஊர்ப் பெரியவர் அழகான விடை சொன்னார்:
‘‘அப்பல்லாம் பூமியில் தண்ணி இருந்தது. ஆத்துல தண்ணி நல்லா ஓடும். நந்தி வாயிலயும் தண்ணி ஊறியது. எப்ப நிலத்தில தண்ணி குறைஞ்சுதோ, நந்தியும் நிறுத்திடிச்சு!’’
ஜலநாதேஸ்வரர்- கங்காதீஸ்வரர் கோயில்களுக்கு பல்லவர்களும், சோழர்களும் திருப்பணி செய்துள்ள னர். பல சிற்பங்கள் ராஜகேசரி பல்லவ மன்னன் காலத்தவை. இங்குள்ள சிற்பங்கள் மற்றும் விக்கிரகங் களின் அழகை வர்ணிக்கச் சொற்கள் போதாது. மத்திய அரசு உதவியோடு தமிழக அரசு இந்தக் கோயிலுக்கான திருப்பணியைச் செய்ய திட்டமிட்டிருக்கிறதாம். தேர் ஓடாமல் நின்றது குறித்து ஊர் மக்கள் பெரு வருத்தத்தில் உள்ளனர். தேர் ஓடுவதற்கு ஜலநாதேஸ்வரரும், கங்காதீஸ்வரரும் அருள வேண்டும் என்று பிரார்த்தித்தபடி வெளிப் போகிறோம்.
No comments:
Post a Comment