பனையபுரம் ( புறவார் பனங்காட்டூர் )
புறாவுக்காகத் தன் உயிரைக் கொடுக்கத் தயாரான சிபி சக்ரவர்த்தி முக்தி அடைந்த தலம்...
கண் நோய் மற்றும் கோளாறு உள்ளவர்கள் வணங்கினால், நோய் நீக்கிக் கண்ணொளி வழங்கும் இறையனார் எழுந்தருளியிருக்கும் தலம்...
சத்திய வடிவான இறைவி, பொய் சொல்பவர்களைத் தண்டித்து, வழக்குகளில் வெற்றி அருளும் தலம்...
சோழர் காலத்தில் சிறார் பள்ளி, தண்ணீர்ப் பந்தல் மற்றும் உணவகத்தைக் கோயில் நிர்வாகமே பராமரித்த பெருமை வாய்ந்த தலம்...
பனந்தோப்பாக இருந்த இடத்தில், இறையனார் எழுந்தருளிச் சிறப்பித்த தலம்...
_ இத்தனை சிறப்புகளை ஒருங்கே பெற்ற திருத்தலம் போவோம்... வாருங்கள்!
எங்கே இருக்கிறது இந்தத் தலம்?
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியைத் தாண்டினால் தஞ்சாவூர் செல்லும் பாதை பிரியும். அதில் சிறிது தூரம் சென்றால், விழுப்புரம்- வழுதாவூர் சாலை வரும். இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் இடத்தில், முண்டியம்பாக்கத்துக்கு அருகில் உள்ளது பனையபுரம் எனும் சிற்றூர். முண்டியம்பாக்கம் கூட்டுரோட்டில் இறங்கி, அங்கிருந்து கிழக்கே சுமார் 2 கி.மீ. தொலைவைக் கடந்தால் பனைய புரம். முண்டியம்பாக்கம்- வழுதாவூர்- பாண்டிச்சேரி பாதையில் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கு நின்று, செல்கின்றன.
கல்வெட்டுகளில், ‘புனையூர் நாட்டுப் பனையூர்’ என்றும், திருஞானசம்பந்தப் பெருமானால், ‘புறவார் பனங்காட்டூர்’ என்றும், ராஜேந்திர சோழனின் அருமைநாயகியின் பெயரால் ‘பரவைபுரம்’ என்றும் அழைக்கப்பட்ட பனையபுரத்தின் சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது.பிரதான சாலையில் இருந்து கோயிலுக்குச் செல்லும் வீதியும், கோயிலுக்கு எதிரிலுள்ள சந்நிதி வீதியும் வெகு அழகாக- அகலமாக உள்ளன.
பனையபுரக் கோயில் வாயிலில் நிற்கிறோம். உள்ளே செல்வோமா? கிழக்கு நோக்கிய பிரதான வாயில். பொலிவுடன் வண்ண மயமாகத் திகழும் ராஜ கோபுரம். கருங்கல்லால் ஆன அடிப்பாகம். சிலை- பொம்மை எதுவும் இல்லை. ஆயினும், விஜயநகரக் கட்டுமானப் பாணியில் அமைந்த கோபுரம் அழகாக உள்ளது. கோபுர தரிசனத்துக்குப் பின் உள்ளே நுழைகிறோம்.
செப்புக் கவசமிட்ட கொடி மரம். பலிபீடம். நந்தி மண்டபம். விசாலமான பிராகாரத்தில் வலம் தொடங்குகிறோம். தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி. அதைத் தொடர்ந்து தெற்குச் சுற்றில் சிறிய, எழிலான நந்தவனம். தென்மேற்கில் கிழக்கு நோக்கிய விநாயகர் சந்நிதி. சிறிய தனிக் கோயில். மேற்குச் சுற்றில் திரும்பி நடக்கிறோம். மூலவர் கோயிலுக்கு நேர் பின்புறத்தில், கிழக்கு நோக்கிய சுப்ரமணியர் சந்நிதி. வள்ளி- தெய்வானை சமேத சிவசண்முகர். இதன் அருகில் உயர்ந்து நிற்கும் பனை மரங்கள். பனை மரமே இங்கு தல விருட்சம்.
மரங்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மேடையில், பனங்காட்டு ஈசராக சிவலிங்கம். இந்தப் பகுதி பனங்காடாக, இருந்ததால் பனையூர், பனங்காட்டூர் என்றெல்லாம் இந்த ஊருக்குப் பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.
மேற்குச் சுற்றில் வலம் வரும்போது, அம்பாள் சந்நிதிக்குப் பின்புறம் வந்து விடுகிறோம். கோயில் வெளிப் பிராகாரத்தின் வடக்குச் சுற்றில், கிழக்கு நோக்கி இருக்கிறது அம்பாள் சந்நிதி.
இங்கிருந்து அர்த்த மண்டபத்துக்குள் நுழையும் வாயிலில், துவாரபாலகியர் ஜயா, விஜயா கம்பீரமாகக் காட்சியளிக்கின்றனர். வாயிலின் ஒரு பக்கம் வல்லப கணபதி. மறு பக்கம் தண்டாயுதபாணி. வணங்கி உள்ளே நுழைகிறோம். கருவறையில், அருள்மிகு சத்யாம்பிகை எனும் புறவாம்பிகை.
புறாவைத் துரத்தி வந்த வேடனிடம் சண்டையிட்டு, புறாவுக்கு ஈடாகத் தன் தசையைக் கொடுக்க முற்பட்ட சிபி சக்ரவர்த்தியின் நீதி தவறா தன்மை மற்றும் காருண்யத்தை மெச்சி, அவருக்கு முக்தி வழங்கப்பட்ட தலம் இது என்பது ஐதீகம். எனவே, அம்பிகைக்கு புறவாம்பிகை என்று சிறப்பான திருநாமம். அம்பிகை, நின்ற திருக்கோலத்தில்- நான்கு திருக்கரங்களுடன் அபயம்- வரதம் அருள்பவராகக் காட்சி தருகிறார். இந்த அம்பிகையே ஊரின் காவல் தெய்வமாகவும் போற்றப்படுகிறார்.
இந்த அம்பிகை, அழகுத் தமிழில் மெய்யம்மை, மெய்யாம்பிகை என்றும் வழங்கப்படுகிறாள். யார் பொய் சொன்னாலும் அம்பாளுக்குத் தெரிந்து விடுமாம். முற்காலத்தில், ஊர் வழக்குகளை அம்பாள் முன்னிலையில் பேசுவது வழக்கம். அம்பிகை முன்பாக எவரும் பொய் பேசத் தயங்குவர். மீறி அசட்டுத் துணிச்சலோடு பொய் பேசுபவர், சில நாட்களிலேயே அதற்கு உரிய தண்டனை பெறுவர். இன்னமும்கூட, வழக்கு வியாஜ்யங்களில் சமரசம் மற்றும் வெற்றியை நாடுவோர் அம்பிகையை நாடி வந்து சரண் புகுகிறார்கள். சோலைகள் நிறைந்த பகுதியில் எழுந்தருளியதாலும், அம்பிகைக்கு இந்தப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். அருள்மிகு மெய்யம்மையை வணங்கிய பின் சந்நிதியை விட்டு வெளிவருகிறோம்.
இந்தக் கோயிலின் அமைப்பு வித்தியாசமானது. ராஜ கோபுரத்திலிருந்து பிராகாரத்துக்குள் நுழையும் பகுதியில் கொடிமரமும், நந்தியும் உள்ளன. நேரடியாக மூலவர் சந்நிதிக்கு வர வேண்டுமானால், நடுவில் சற்றே உயரமான ஒரு மண்டபம் (இதை வெளி மண்டபம் என்று அழைப்போமா?). அதை அடுத்து பாதை. பின்னர்தான், உள்வாயில், உள் பிராகாரம், மூலவர் சந்நிதி ஆகியவை உள்ளன.
எனவே, உள் பிராகாரத்தையும், மூலவர் சந்நிதியையும் அடைய, கொடி மரத்திலிருந்து சற்றே வலமாகத் தெற்குச் சுற்றுக்குள் நுழைந்து, வெளி மண்டபத்தை அடுத்துள்ள பாதையில் திரும்புகிறோம். இந்த மண்டபத்தின் வெளி மூலையில் கல் விநாயகர் ஆஜானுபாகுவாக- அற்புதமாகத் திகழ்கிறார். சிற்பியின் கைத்திறனில் அழகு விக்கிரகம்.
மண்டபத்தை அடுத்துள்ள பாதைக்குள் நுழையும் இடத்தில், மும்மூர்த்திகளையும் ஒருசேர வணங்கும் விதத்தில் பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் விக்கிரகங்கள். மண்டபத்தின் ஒரு பகுதியில் உற்சவ மூர்த்தங்கள். பாதையிலிருந்து உள்வாயிலுக்குச் செல்லும் இடத்தில், ஒரு பக்கம்- அதிகார நந்தி மற்றும் துவார கணபதி. இன்னொரு பக்கம்- சண்முகர் மற்றும் சனீஸ்வரர்.
நுழை வாயிலின் இரு புறமும் துவாரபாலகர் களான டிண்டி- முண்டி. எல்லோரையும் வணங்கிக் கொண்டே அழகும் அமைதியும் கொஞ்சும் உள் பிராகாரத்தை அடைகிறோம். தெற்குச் சுற்றில் வரிசையாக விநாயகர், சைவ நால்வர், அறுபத்துமூவர்.
தென்மேற்கு மூலையில் விநாயகர். தொடர்ந்து மேற்குச் சுற்றில் சப்த மங்கையரான பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி மற்றும் சண்டி. அடுத்து ஐயப்பன். விசுவநாதரும் விசாலாட்சியும் கம்பீரமாகக் காட்சி கொடுக்க, அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீதேவி- பூதேவி உடனாய ஸ்ரீமகாவிஷ்ணு, ஆறுமுகர்.
வடக்குச் சுற்றில் சண்டிகேஸ் வரரைத் தாண்டி வந்து, கிழக்குச் சுற்றில் திரும்பும்போது, கபால மாலையுடன் கூடிய கால பைரவர் தரிசனம் தருகிறார்.
வலத்தை முடித்து நேரே உள்ளே சென்றால்... முதலில் மூலவர் சந்நிதியின் மகா மண்டபம். வலப் பக்கத்தில் நடராஜ சபை. கருவறைக்குச் செல்லும் வழியில், இரு புறமும் உற்சவத் திருமேனிகள். மெள்ள அர்த்த மண்டபத்துள் நுழைந்து நிற்க... எதிரில் அருள்மிகு கண்ணமர்ந்த நாயனார். அழகும் கம்பீரமுமாகக் காட்சி தரும் இவரே ஸ்ரீபனங்காட்டீஸ்வரரான கண்ணமர்ந்த நாயனார். சம்ஸ்கிருதத்தில் சொன்னால், ஸ்ரீநேத்திர உத்தாரணேஸ்வரர். சுவாமிக்கு இதென்ன திருநாமம் என்கிறீர்களா? அதைத் தெரிந்து கொள்ள ‘தட்ச யாக’ காலத்துக்குப் போக வேண்டும்.
இந்தத் தலத்தில், ஆண்டு தோறும் ஏழு நாட்களுக்குத் தனது ஒளிக் கற்றைகளை சுவாமி மீது பொழிந்து அவரை வழிபடுகிறான் சூரியன். சித்திரை மாதம், முதல் ஏழு நாட்கள் பனங்காட்டீஸ்வரர் மீது சூரியக் கதிர்கள் விழுவதைக் காணலாம். சூரியக் கதிர்கள் இறைவன் மீது விழுமாறு கோயில் அமைப்பு உள்ளது. உள் பிராகாரத்தில், மூலவர் மகா மண்டப வாயிலில் நின்று, மகா மண்டபத்தின் கூரைப் பகுதியை அண்ணாந்து பார்த்தால், இந்த அமைப்பு புரிபடும். அர்த்த மண்டபச் சுவர் சற்றே உயரமாகத் தூக்கப்பட்டு (கிராமங்களில், எடுத்துக் கட்டுதல் என்பார்களே, அந்தப் பாணியில்), அதில் மரச் சாளரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், குறிப்பிட்ட நாட்களில் சூரியக் கதிர்கள், சிவனார் மீது விழ முடியும்.
தட்ச யாகத்தில் சூரியனுக்கு அடிபட்டது நமக்குத் தெரியாது. ஆனால், சூரியன் சித்திரை மாதத்தில் ஏழு நாட்கள் வழிபட்டு முக்தி அடைந்ததாக ஐதீகம். எப்படி இருந்தாலும், கண் பார்வைக் கோளாறு மற்றும் முகம் தொடர்பான நோய் கண்டவர்கள் இங்கு வந்து கண்ணமர்ந்த நாயனாரின் திருவடிகளில் சரண் புகுந்தால், அவர்களின் கோளாறும் நோயும் நீங்குவது நிச்சயம்!
முழுவதுமாகப் பார்வை இழந்தவர்கள்கூட, இந்த இறைவனாரின் காலடிகளில் தஞ்சம் புகுந்து பார்வை பெற்ற சம்பவங்கள் சமீப காலத்தில் நிறைய நிகழ்ந்துள்ளனவாம். பக்தர்களின் அகக் கண்ணைத் திறந்து விடுகிறார் சுவாமி என்றும் தத்துவார்த்தமாகப் பொருள் கொள்ளலாம். ‘அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’ என்று பாடினார் அல்லவா திருமூலர்? கண்ணமர்ந்தவர் என்ற திருநாமத்தை வைத்தே பாடுகிறார் சம்பந்தப் பெருமான்.
விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்விரி பண்ணமர்ந்தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப் பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞகா பிறைசேர் நுதலிடைக் கண்ணமர்ந்தவனே கலந்தார்க்கு அருளாயே...
அந்தப் பிள்ளைப் பெருமானாரது பாடலைப் பாடியபடி மூலவரை வலம் வருகிறோம்.
கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை. கோயில் பழைமை வாய்ந்தது என்றாலும் சமீபத்திய திருப்பணிகள் காரணமாக, நவீனமும் பொலிவும் கலந்து மிளிர்வதைக் காணலாம்.
உள் பிராகாரத்திலிருந்து வெளிப் பிராகாரத்தை அடைகிறோம். ஆங்காங்கே கிடக்கும் கல் தூண்கள் சிந்தையைக் கவர்கின்றன. பழங்காலப் பாணியில் வேலைப்பாடுகளுடன் கிடக்கும் தூண்கள்! இவை எப்போதிருந்து கிடக்கின்றன... தெரியவில்லை. ஆனால், சம்பந்தர் காலத்திலேயே இந்தக் கோயில் பெருமை மிக்கதாகத் திகழ்ந்துள்ளது.
சோழர் காலத்தில் இந்த ஊர் பெரியதாகவும், கோயில் நிறைந்த புகழோடும் விளங்கியது. முதலாம் மற்றும் இரண்டாம் ராஜேந்திரன் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மேலும் விஜயநகர ஆட்சியாளர்களது காலத்தில் திருப்பணிகளும் நடந்துள்ளன. அப்படியானால், ஏதோவொரு காலத்தில், கட்டுமானப் பணிகளின்போது வடிவமைக்கப்பட்ட தூண்கள் பயன்படுத்தப்படாமலோ அல்லது பிற்காலத் திருப்பணியில் நீக்கப்பட்டோ இவ் வாறு கிடக்க வேண்டும்.
திருவொண்ணாழி என்றால், கருவறை என்று பொருள். சமயச் சடங்குகள் சரியாக நடைபெறவும் நிர்வாகத்தைக் கண்காணிக்கவும் செயல்பட்ட குழு போலும். பிற்கால வாரியங் களுக்கு முன்னோடியான குழு, இந்தத் திருவொண்ணாழி சபையோம் என்றால் அது மிகை இல்லை. மேலும் நகரத்தோர், தானத்தோர் போன்ற குழுக்கள் செயல்பட்டிருந்ததும் இந்தக் கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்தக் கோயிலின் சிறப்புகள் ஏராளம். இந்தக் கோயில் வளாகத்துக்குள்ளோ, அருகிலோ வைணவக் கோயில் (சோழ விண்ணகர ஆழ்வார் கோயில்) ஒன்றும் இருந்துள்ளதாகத் தெரிய வருகிறது. பாண்டிய மன்னனின் புகழுக்காக, இங்கு மூலவருக்குச் சிறப்பு வழி பாடான ‘கோதண்டராம சந்தி’ செய்யப்பட்டுள்ளது.
பனங்காட்டீஸ்வரர் கோயிலுக்குள் ஒரு காலத் தில் சிறுவர்களுக்கான இலவசப் பள்ளிக்கூடமும் தண்ணீர்ப் பந்தல்களும் செயல்பட்டுள்ளன. தவிர நாள் தோறும் ஐம்பது பேருக்கு அன்னதானம் படைத்த உணவகமும் இருந்துள்ளது.
இந்த ஊர் கோயிலுக்கு, முதலாம் ராஜேந்திர மன்னரின் அருமைநாயகி பரவை நல்லாள் பெயரால் திருவிழா ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ராஜேந்திர மன்னர், பரவை ஆகியோரின் சிலைகள் இங்கு நிறுவப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது (அவை என்னவாயின என்று தெரியவில்லை!). பனையபுர ஆலயத்தில் சோழர் காலச் சிற்பங்கள் மிகுதி. விஜய நகரச் சிற்பங்களும் உள்ளன. பெரும்பாலும் சிற்பங்கள் நளினமான எழிலுடன் விளங்குகின்றன.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளால், பனையபுரச் சிவபெருமான் பதிகம் மற்றும் சத்தியாம் பிகைப் பதிகம் ஆகியவை அருளப் பெற்ற இந்தத் திருத்தலம், பனை மரத்தைத் தலமரமாகக் கொண்ட ஐந்து திருத்தலங்களுள் ஒன்று. திருவத்திபுரம் (வந்தவாசி அருகில்), வன்பார்த்தான் பனங்காட்டூர் (காஞ்சி- கலவை மார்க்கத்தில்), திருப்பனந்தாள் (கும்பகோணம் அருகில்), திருப்பனையூர் (பேரளம்- திருவாரூர் மார்க்கம்) ஆகியவை மீதமுள்ள நான்கு. மற்ற பனையூர்களிலிருந்து வேறுபாடு காண்பதற்காக இந்தத் தலம், ‘புறவார் (புறவு- சோலை) பனங்காட்டூர்’ ஆனது.
No comments:
Post a Comment