Saturday, 5 August 2017

கரூர்

கொங்கு நாட்டுத் தேவாரத் தலங்கள் ஏழில் முதன்மையானது; சுமார் 5,000 வருடங்கள் பழைமை வாய்ந்தது; கிரேக்க ஆசிரியர் டாலமியால் 'உள்நாட்டுத் தலைநகர்' என்று விவரிக்கப்பட்டது; கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது; காமதேனு வழிபட்டது; புகழ்ச் சோழர் மற்றும் எறிபத்தர் ஆகிய நாயன்மார்கள் வாழ்ந்தது; திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவர் அவதரித்தது; முசுகுந்த சக்கரவர்த்தியும் வியாச மாமுனியும் பூஜை செய்தது; சூரியனும் அகத்தியரும் வணங்கியது; அருணகிரிநாதர் பாடியது... என இன்னும் பல பெருமைகளைக் கொண்ட திருத்தலம் கரூர்.
திருச்சி- ஈரோடு பாதையில் அமைந்துள்ள கரூரில், நடுநாயகமாக உள்ளது, ஈஸ்வரன் கோயில். சேரர்களின் தலைநகரமாகப் பண்டைய இலக்கியங்களிலும் வரலாற்றிலும் குறிக்கப்பட்டுள்ள வஞ்சி மாநகரம், கரூர் நகரமே என்பது பலரின் கருத்து (இப்போதைய கேரளத்தில் உள்ள கொடுங்கோளூர் பகுதியே வஞ்சி என்று சொல்வாரும் உண்டு). ஆதிக் கருவூர், கருவூர் போன்ற பெயர்களும், ஆன் பொருநை என்கிற பழைய பெயர்கொண்ட அமராவதி ஆற்றின் கரையில் அமைந்திருப்பதும், இதுதான் வஞ்சி என்பதற்கு சாட்சி சொல்கின்றன.
கருவூர், ஆதி போன்ற சொற்கள், 'உயிர்கள் முதன்முதலில் படைக்கப்பெற்ற இடம்' எனும் பொருளைத் தருகின்றன. மனித நாகரிக வளர்ச்சியில், ஆற்றங்கரை நாகரிகமே முதலில் தோன்றியது. அதன்படி, ஆன்பொருநை ஆற்றங்கரை நாகரிகமானது, கரூர் பகுதியில் தலைதூக்கி வளர்ந்திருக்கவேண்டும்.
சரித்திரம் மற்றும் ஆன்மிகச் சிறப்புமிகு கரூர் திருக்கோயில் முன்பாக நிற்கிறோம். கிழக்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரம்; ஆங்காங்கே துலங்கும் சுதைச் சிற்பங்கள், புராண, ஆகம காப்பிய நிகழ்வுகளை நினைவு கூர்கின்றன. கோபுரத்தைப் பணிந்து உள்ளே நுழைந்தால், சேர நாட்டுக்கே உரித்தான கல் விளக்குத் தூண். கொங்கு மண்டல (சேர நாட்டு) திருத்தலங்கள் பலவற்றில் இத்தகைய கல் விளக்குத் தூண்களைக் காணலாம். பட்டை பட்டையாக இருக்கும் கரூர் கல்தூணில், நான்கு புறங்களிலும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. தெற்கில் ஸ்ரீவிநாயகர், மேற்கில் மனிதத் தலையைக் கைகளில் ஏந்தி நிற்கும் ஒருவர், வடக்கில் யானை மீதமர்ந்த ஒருவர், கிழக்கில் காமதேனுவால் பால் சொரிந்து போற்றப்படும் சிவலிங்கம் ஆகியவற்றைக் காண்கிறோம். யானைமீது அமர்ந்திருப்பவர், கையில் மழு போன்ற ஆயுதத்தை ஏந்தியுள்ளார். இந்தச் சிற்பத்தை எறிபத்தர் என்று அடையாளம் காட்டுவோர் உண்டு. ஆயினும், வடதிசைக் காவலனான குபேரனுக்கும் சரி, வடதிசைக் கோளான வியாழனுக்கும் சரி... யானை வாகனம் உண்டு. எனவே, இவர்களில் ஒருவராகவும் இந்தச் சிற்பம் இருக்கலாம். கைகளில் மனிதத் தலையைத் தாங்கி நிற்கும் உருவத்தை, புகழ்ச் சோழரின் உருவம் என்கிறார்கள். தூணின் மேல் பகுதியில் பத்ம பீடம்.
விசாலமான வெளிப் பிராகாரத்தில் வலம் வருகிறோம். தென் கிழக்கு மூலையில் கிணறு. இதுவே அக்னி தீர்த்தம். தெற்குச் சுற்றில் திரும்பியதும் வேப்ப மரம்; ஏராளமான நாகர்கள்; கூடவே, விநாயகர். விளக்கேற்றி வைத்து, தொட்டில் கட்டிவிட்டு, நிறைய பெண்கள் இங்கே தங்களது பிரார்த்தனையை விண்ணப்பிக்கிறார்கள். விநாயகரும் உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கிறாராம். அடுத்தொரு வன்னி மரம். இதன் அடியில், வடக்கு நோக்கியவராக சதுர்முக பிரம்மா. கோயிலுக்கான பக்கவாட்டு வழி, இந்தத் தெற்குச் சுற்றுக்குள் திறக்கிறது.
இந்தச் சுற்றிலேயே, கருவூர்ச் சித்தரின் சமாதிக் கோயில் உள்ளது. முகப்பு மண்டபத்துடன் தூய்மையாக விளங்கும் இந்தக் கோயில், கருவூர்ச் சித்தர் ஜீவசமாதி அடைந்த இடமாம். குழந்தைகளின் கல்விக்காகவும் வெற்றிக்காகவும் இங்கு பிரார்த்தித்தால், உடனே நிறைவேறும் (கருவூர்ச் சித்தரும் திருவிசைப்பா பாடிய கருவூர்த் தேவரும் ஒருவரே என்பது பலருடைய அபிப்ராயம்; ஆனால், இருவரும் வேறு வேறு என்பது ஆய்வாளர்கள் கருத்து).
கருவூரில் அவதரித்த கருவூர்த் தேவர், மிகச் சிறந்த ஞானி; இவருடைய பாடல்கள், சைவ ஒன்பதாம் திருமுறையில், திரு இசைப்பா தொகுதியில் சேர்க்கப் பட்டுள்ளன. ராஜராஜ சோழனுக்குச் சமகாலத்தவராக வாழ்ந்த இவருடைய திருவடிவம், தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளது.
கருவூர்ச் சித்தர் என்பவருடைய வாழ்க்கையில், பற்பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவரைப் பற்றிய உண்மை புரியாத சிலர், அவரை விரட்டிக்கொண்டு வந்தபோது, அச்சமுற்றவர் போல ஓடிச் சென்று ஆநிரையப்பர் ஆலயத்துக்குள் புகுந்தவர், அப்படியே சிரித்தபடி, ஜோதி வடிவில் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார்! ஸ்வாமியும், தம்முடைய வலது பாகத்தில் அவரைச் சேர்த்துக்கொண்டாராம்.
கருவூர்ச் சித்தர் சந்நிதியின் கோஷ்டங்களில், காகத்தின் மீதமர்ந்தவராக காகபுஜண்டர், கமண்டலமும் தண்டமும் தாங்கியவராக நிற்கும் அகத்தியர், புலித்தோல் மீதமர்ந்தவராக பதஞ்சலி ஆகியோர் காட்சி தருகின்றனர். அருகில் நந்தவனம். தென்மேற்கு மூலையில், ஸ்ரீவிநாயகர் சந்நிதி.
மேற்குச் சுற்றில் ஸ்ரீபசுபதி விநாயகர் கோயில்; சமீபகால கட்டுமானம். வடமேற்கு மூலையில் வில்வ மரம்; அடியில் நாகர்கள்; நடுவில் ராகு- கேது. வடக்குச் சுற்றில் திரும்பி வலம்வரும்போது, அம்பாள் சந்நிதியையும் சேர்த்துச் சுற்றிவருகிறோம் என்பது புரிகிறது. சண்டிகேஸ்வரி மண்டபத்தின் அருகே, அப்படியே சடாரென்று அம்பாள் சந்நிதிக்கு செல்வதற்கான வழியும் உள்ளது.
இருங்களேன்... பிராகாரத்தை முழுமையாக வலம் வந்துவிடுவோமே!
அம்பாள் சந்நிதியின் முகப்புப் பகுதியில் சிறியதொரு நந்தவனம். அதில், பசுபதீஸ்வரர் வரலாற்றைக் காட்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ள சிலை. நிறைய தாய்மார்கள், தத்தம் குழந்தைகளை அங்கு விளையாடவிட்டு, ஸ்ரீபசுபதீஸ்வரர் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பிராகாரங்களில் இடம் இருக்கக்கூடிய கோயில்களில் எல்லாம் இப்படியாகத் தல புராணச் சிலைகளையும் பொம்மைகளையும் அமைத்துக் குழந்தைகளை விளையாடச் செய்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.
அந்த வரலாற்றை நாமும் தெரிந்து கொள் வோம். ஒருமுறை, காமதேனுவானது தவம் செய்ய விரும்பியது. அதற்கான இடம் எங்கே என்று தேடியபோது, பூலோகம் சென்று வஞ்சி வனத்தை நாடலாம் என்று நாரதர் வழி காட்டினார். ஆம்பிரா நதிப் பகுதிக்கு வந்த காமதேனு, அங்கிருந்து வஞ்சி வனத்தை அடைந்தது. அப்போது, 'காமதேனுவே! இந்த வஞ்சி (அசோகம்) வனத்தில் ஒரு புற்று காணப்படும். அங்கு, பாதாளத்திலிருந்து வெளிப் பட்ட சுயம்பு மகாலிங்கம் உள்ளது. அதனை வழிபட்டுத் தவம் செய்வாயாக!' என்று அசரீரி ஒலித்தது.
காமதேனுவும் அவ்வாறே செய்தது. தினந் தோறும் சிவலிங்கத்துக்குப் பால் சொரிந்து வழிபட்டது. ஒருநாள், கால் இடறியதால், சிவ லிங்கத்தின் மீது தட்டிவிட, லிங்கத்தின் மீதிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. அதைக் கண்டு காமதேனு துடித்துப்போனது. ரிஷபாரூடராகச் சிவபெருமான் காட்சி கொடுத்தார். 'காமதேனுவே, கவலை கொள்ளாதே! உன்னால் வழிபடப்பட்டதால், இங்கு எழுந்தருளிய சிவலிங்கத்துக்குப் பசுபதி நாதர் எனும் பெயர் நிலைக்கும். நீ தென்திசை செல்வாய். அங்கு அண்ட சராசரங்களின் அடிச்சுவடுகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் கண்டு அடைவாய். ஒருகாலத்தில் பிரம்மா, தம்முடைய படைப்புத் தொழிலைச் செய்ய இயலாமல் அங்கு வருவார். அப்போது, நீயே படைப்புத் தொழிலைச் செய்வதைக் கண்டு அயர்வார். தம்முடைய தவறுகளைத் திருத்திக் கொள்வார்' என்றருளினார்.
சமாதானமடைந்த காமதேனு அவ்வாறே செய்தது. பாலைச் சொரிந்து வெண்ணெய் மலையை உருவாக்கியது; குளம்பால் கிளறிக் கிளறி, தேனு தீர்த்தத்தை உருவாக்கிச் சிவார்ச்சனையைத் தொடர்ந்தது. இறைவனாரும் பசுபதீஸ்வரராக இங்கே கோயில்கொண்டார்.
இறைவனின் திருவிளையாடல்களை எண்ணி வியந்தபடி வலம் வருகிறோம். கிழக்குச் சுற்றில் திரும்பி நடக்கும்போது, பெரிய மண்டபம் கண்ணில்படுகிறது. கோபுரத்திலிருந்து உள்ளே நுழைந்ததும், கல் விளக்குத் தூணுக்கு வலதுபுறமாக இருக்கும் இந்த மண்டபமே, புகழ்ச்சோழர் மண்டபமாகும். யார் இந்தப் புகழ்ச் சோழர்?!
உறையூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய இவர், ஒருமுறை கருவூருக்கு வந்து தங்கியிருந்தார். அப்போது, பட்டத்து யானையை நதிக்கரைக்கு அழைத்துப் போனார்கள். எதிரில் சிவகாமியாண்டார் வந்தார்.
முதியவரான சிவகாமியாண்டார், தீவிர சிவபக்தர். தினந்தோறும் அமராவதி ஆற்றில் நீராடி, அருகிலுள்ள நந்தவனத்தில் மலர் கொய்து, மாலைகள் கட்டி, பூக் குடலையில் வைத்துக் கொண்டு வருவார்; பசுபதிநாதருக்கு அன்புடன் சாற்றுவார். இது அவருடைய வழக்கம். அன்றும் அப்படித்தான், மாலைகளைக் குடலையில் சுமந்து வந்தார். மதர்ப்புடன் வந்த பட்டத்து யானை, சிவகாமியாண்டாரின் அருகில் சென்றது; அவரைக் கீழே தள்ளி, குடலையைப் பற்றியது; மலர் மாலைகளைக் காலடியில் போட்டு மிதித்தது. கீழே விழுந்த சிவகாமியாண்டார், மாலைகள் சிதைக்கப் பட்டதைப் பார்த்துக் கலங்கிக் கண்ணீர் வடித்தார்.
அதே நேரம், எறிபத்தர் அங்கே வந்துசேர்ந்தார். எறிபத்தர் நல்ல பக்தர். ஆண்டவனுக்குக் கைங்கரியம் செய்வதைக் காட்டிலும், அடியாருக்குக் கைங்கரியம் செய்வதையே தம்முடைய தலையாய கடமையாக எண்ணுபவர். சிவகாமியாண்டாரின் தவிப்பைக் கண்டார். பட்டத்து யானையின் மதர்ப்பை நினைத்து ஆத்திரம் கொண்டார்; அடியாரின் பரிதவிப்பைக் கண்டு பொங்கினார். யானை சென்ற வழியே சென்றார். ஆற்றங்கரையில் அதனைக் கண்டார். அதன்மீது ஏறி, மலர்களைச் சிதைத்த அதன் துதிக்கையைத் தனது உடைவாளால் வெட்டினார்.
துதிக்கை வெட்டப்பட்ட பட்டத்து யானை இறந்தது. எறிபத்தரை எதிர்த்த படைவீரர்களும் கொல்லப்பட்டனர். செய்தி அரசரை அடைந்தது. பட்டத்து யானைக்கு இழைக்கப்படும் தீமை, எதிரிகளின் படையெடுப்பை உணர்த்தும்.
நிலவரம் புரியாமல், குதிரையேறிப் பாய்ந்து வந்த மன்னர், எறிபத்தர் இருந்த இடத்தை அடைந்தார். யானையைக் கொன்றவர் என்று அவரை அடையாளம் காட்டினர். அவர் அடியார் எனக் கண்டுகொண்ட மன்னர் கோபம்கொள்ளாமல், நடந்தது என்ன என்று தீர விசாரித்தார்.
பின்னர், தம்முடைய வாளை உருவி எறிபத்தர் கையில் கொடுத்தார். 'யானை தவறு செய்தது; அதற்கு தண்டனை தந்தீர்கள். ஆயினும், மதர்த்த அந்த யானையின் உடைமையாளனாக, அதனைச் சரியான கட்டுக்குள் வைக்காதவனாக உள்ள நானே தண்டனைக்கு உரியவன். ஆகவே, என்னையும் வாளுக்கு இரையாக்குங்கள்' என்று வேண்டினார். மன்னரின் மேன்மையை உணர்ந்த எறிபத்தர், தம்மைத் தாமே நொந்துகொண்டு, வாளால் தம்மையே வெட்டிக்கொள்ளத் துணிந்தார்.
தனக்கென்ற சுயநலத்தோடு வாழாமல், பிறருக்காகவும், பிறரின் துயர் தீர்க்கவும் வாழத் தலைப்பட்ட அந்த இரு பெருமகனாரின் நிறைந்த அன்பைக் கண்ட பரம்பொருள், பசுபதிநாதராகக் காட்சி கொடுத்து வாழ்த்தியதுடன் மட்டுமின்றி, யானையையும் வீரர்களையும் உயிர்ப்பித்தார்; சிவகாமியாண்டாரின் மாலைகளையும் ஏற்றுச் சிறந்தார். அடியாருக்குத் துன்பம் நேரலாகாது என்றெண்ணிய எறிபத்தரும், அரசபோகத்தை விடவும் அடியார் பெருமையே சிறந்தது என்று வாழ்ந்த புகழ்ச் சோழரும், ஆண்டவனின் அன்புக்கு உகந்த நாயன்மார்களாயினர்.
புகழ்ச்சோழரின் பெருந்தன்மையை நினைத்தபடியே மண்டபத்தைச் சுற்றிவருகிறோம். நூற்றுக்கால் மண்டபம். இதே புகழ்ச் சோழரின் வரலாற்றில் இன்னொரு சம்பவமும் உண்டு. அதையும் சேக்கிழார், பெரியபுராணத்தில் கூறுகிறார். அந்தக் கதையைப் பின்னர் பார்க்கலாம். இப்போது கோயிலுக்குள் செல்வோம்.

புகழ்ச்சோழரின் பக்தி மற்றும் காமதேனுவின் வழிபாடு குறித்த கரூர் கோயிலின் தலபுராணத்தை வியந்தபடி, ஆலய தரிசனத்தைத் தொடர்கிறோம்.
ஆலயத்துக்குள் நுழைந்ததும், விளக்குத் தூண் ஒன்றை தரிசித்தோமே... அந்தத் தூணுக்கு முன்னதாக பதினாறு கால் மண்டபம் உள்ளது. இதன் தூண் சிற்பங்கள் வேலைப்பாடுகள் மிகுந்தவை. அடுத்து, உள் வாயிலை அடைகிறோம். இதன் இடப் பக்கத்தில், சைவ நால்வரின் வண்ண ஓவியம். இந்த வாயிலின் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால், செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலிபீடம், நந்தி. இங்கேயும் நிறைய தூண்கள். நந்திக்கு முன்பாக உள்ள தூண்களில், நான்கு பெருமக்களின் சிலா ரூபங்கள். யார் யார் தெரியுமா? எறிபத்தரும் முசுகுந்தரும் ஒருபுறம்; திருஞானசம்பந்தரும் புகழ்ச்சோழரும் மறுபுறம்!
இது உள்பிராகாரப் பகுதியும்கூட! இதன் கிழக்குச் சுற்றில் வலத்தைத் தொடங்கினால், முதலில் சூரியன். பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில், சூரியக் கதிர்கள் கோபுரம் வழியே கொடிமரம் கடந்து, சிவனாரின் திருப்பாதங்களைப் பணிகின்றன. எனவே, சூரிய வழிபாட்டுத் தலங்களில் கரூரும் ஒன்று. தெற்குச் சுற்றின் திருமாளிகையில் வரிசையாக நால்வர் பெருமக்கள், பொல்லாப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அறுபத்துமூவர் மற்றும் சந்தானக் குரவர்கள் நால்வர். தென்மேற்கு மூலையில் ஸ்ரீவலம்புரி விநாயகர். மேற்குச் சுற்றில், ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரர். அடுத்தொரு விநாயகர். தொடர்ந்து, சோமாஸ்கந்தர். இவருக்கு அழகான தமிழ்ப் பெயரிட்டு அழைக்கிறார்கள்... உமைமுருகு இறைவன்; அடடா, சொல்லச் சொல்ல இனிக்கிறது!
மேற்குச் சுற்றில், உற்ஸவ மூர்த்தங்கள்; அடுக்கடுக்காக மாடங்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன. அடுத்து, ஸ்ரீகஜலட்சுமி சந்நிதி. வள்ளி- தெய்வானையுடன் ஸ்ரீஆறுமுகர், வேலாயுதனாகவும் சேவற்கொடி யோனாகவும், மயிலேறுபவனாகவும் தரிசனம் தருகிறார். தொடர்ந்து அருணகிரியார், தண்டாயுத பாணி, ஸ்ரீகாந்திமதி உடனாய ஸ்ரீகரியமாலீஸ்வரர், மற்றும் பைரவர்.
வடக்குச் சுற்றில், பஞ்சலிங்கங்கள்; பஞ்ச அம்பாள்கள்; பஞ்ச பலிபீடங்கள். தொடர்ந்து, அம்பாள் சந்நிதியிலிருந்து வரும் பக்கவாட்டு வாயிலைக் கடந்தால், ஸ்ரீபைரவர் சந்நிதி. அடுத்து, ஸ்ரீநடராஜர் சபை. மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்ப, நவக்கிரகங்களையும் சந்திரனையும் தரிசிக்கலாம். உள் பிராகார வலத்தை நிறைவு செய்தாயிற்று; ஸ்வாமி சந்நிதிக்குச் செல்வோமா?
படிகளில் ஏறித்தான் சுவாமி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். அதேபோல், சந்நிதியைச் சுற்றிலும் மேடை போன்ற உயர அமைப்பும் உள்ளது. படிகளில் ஏறுவதற்கு முன்னர்தான், நான்கு தூண்களில் நான்கு திருவுருவங்கள் இருப்பதைக் கண்டோம்.
எறிபத்தரும் புகழ்ச்சோழரும் நாம் ஏற்கெனவே சந்தித்தவர்கள். திருஞானசம்பந்தர், இந்தத் தலத் தைப் பாடிய தேவார ஆசிரியர்.
முசுகுந்தர்? இவரும் ஒரு சோழச் சக்கரவர்த்தி. முற்பிறவியில் குரங்காக இருந்தவர். எதேச்சையாக, ஒரு சிவராத்திரி இரவில், கீழே இருந்த புலியிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக, தான் அமர்ந்திருந்த மரத்தின் இலைகளைப் பறித்துப்போட்டபடியே, உறக்கத்தைத் தள்ளி வைத்தது அந்தக் குரங்கு. அதற்குச் சிவராத்திரி என்றும் தெரியாது; தான் பறித்துப் போட்டவை வில்வ இலைகள் என்றும் தெரியாது; கீழே சிவலிங்கம் இருந்ததும் தெரியாது. ஆனாலும், தன்னை அறியாமல் சிவனுக்கு வில்வார்ச்சனை செய்ததன் விளைவாக, அடுத்த பிறவியில் சோழ மன்னராகப் பிறக்கும் வரம் பெற்ற அந்தக் குரங்கு, தனது முற்பிறவி மறந்து போகாமல் இருக்க, குரங்கு முகத்துடன் பிறப்பதற்கு வரம் கேட்டது. அதன்படி, குரங்கு முகத்துடன் பிறந்து, சோழ மன்னராக ஆனவர் முசுகுந்தர்.
ஒருமுறை, தேவேந்திரனுக்கு அரக்கர்களிடம் இருந்து துன்பம் வந்தபோது, அவர்களை அழித்து ராஜ்ஜியத்தை மீட்பதற்கு, தேவேந்திரனுக்கு உதவியாகப் போருக்கு அழைக்கப்பட்டார். வெற்றி பெற்று, இந்திரனுக்கு அரசை மீட்டுக் கொடுத்தபின், திருமாலிடம் தீட்சை பெற்று, கருவூர் ஆநிலை அடைந்தார். அங்கு தங்கியிருந்து, ஆநிலையப்பரை வழிபட்டார்; கோயிலுக்குத் திருப்பணிகள் செய்தார்; சிவபெருமான் ஆணையால், இவர் சில நாட்கள் படைப்புத் தொழிலையும் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
அடடா, இதென்ன! படைப்புத் தொழிலைக் காமதேனுவும் செய்ததாகப் பார்த்தோமே! என்ன அது?
பிரம்மாவுக்கு, தாமே படைப்புக் கடவுள் எனும் இறுமாப்பு பெருகியது. உயிர்களைத் தாம் படைக்கா விடில், மற்றவர்கள் காப்பாற்றவும், அழிக்கவும் முடியாதே! ஆகவே தாமே பிரதானம் என்று கர்வப்பட்டார். பிரம்மாவின் இத்தகைய மதர்ப்பை அடக்க எண்ணினார் சிவனார்.
பிரம்மாவின் இரவுப் பொழுது முடிந்து, பகல் தொடங்கியது. அப்போது பிரம்மாவும் படைப்பைத் தொடங்கவேண்டும். தொடங்கினார்; ஆனால், எந்த உயிரையும் உருவத்தையும் அவரால் செய்யமுடியவில்லை. எல்லாம் சிதைந்து சிதைந்து போயின. தமது குற்றத்தை உணர்ந்தவர், சிவனை நினைத்துத் தவமிருந்தார்.
இதற்கிடையில் படைப்பு நடைபெற வேண்டுமே... பூவுலகில், ஆம்பிரா நதிக்கரையில் லிங்கபூஜை செய்து வழிபட்ட காமதேனுவைத் தெற்கு நோக்கிச் செல்லவைத்த சிவனார், அதன் கண்களில் அண்டசராசரங்களின் அடிச் சுவடுகளைக் காட்டினார். படைக்கும் ஆற்றலையும் அதற்கு வழங்கினார். அதேபோல், தவத்திலிருந்த பிரம்மனுக்கும் காட்சி தந்தவர், அவரை வஞ்சி வனம் சென்று, அங்குள்ள பசுபதீஸ்வரரை வணங்கச் சொன்னார். பின்னர், தென்திசை நகர்ந்து காமதேனுவைக் காணும்படி பணித்தார். அவ்வாறே செய்த பிரம்மாவுக்கு ஆச்சர்யம்... பசுவொன்று படைப்பைச் செய்ய முடியுமா?! இறைவனார் நினைத்தால், எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதை பிரம்மா உணர்ந்தார். படைப்பைத் தாம் செய்வது, தம்முடைய திறத்தால் அன்று; இறைவனின் அருளால் எனத் தெளிந்தார்.
சிரம் தாழ்த்திக் கரம்கூப்பி நின்ற பிரம்மா வின் முன்னர் இறைவனார் மீண்டும் தோன்றினார். 'பிரம்மதேவரே, உம்முடைய குற்றங்கள் யாவும் களையப்பட்டன. இனி இங்கு, இந்தத் தலத்தில் பெருவேள்வி ஒன்றைச் செய்யுங்கள்; கலைமகளை மணமுடியுங்கள்; தொடர்ந்து படைப்புத் தொழிலை இங்கே தொடங்கி, குறைவில்லாமல் செய்யுங்கள்' என்று ஆசி வழங்கினார்.
பிரம்மாவும் ஆம்பிரா நதிக்கருகில், பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி வழிபட்டார். வெண்ணெய் மலைக்குப் பக்கத்தில் வேள்விச்சாலை அமைத்து யாகம் நடத்தினார். பின்னர், அனைவரின் ஆசிகளுடன் கலைமகளை மணமுடித்தார். படைப்புத் தொழிலைக் குறைவின்றி நடத்தினார். பசுபதிநாதருக்கு அழகிய கோயிலைக் கட்டினார். அருகில், வஞ்சி வனத்தின் காவல் தெய்வமான வஞ்சிப் பெண்ணுக்கும், ஐயனாருக்கும் கோயில்கள் எழுப்பினார் (வஞ்சிக் கோயிலே, இப்போதைய காளி கோயில்). மேரு மலைக்கு நிகரான திருத்தேரினைச் செய்தார். பசுபதிநாதருக்குப் பங்குனி உத்திரப் பெருவிழா எடுத்தார். பின்னர், சிவனருளுடன் சத்தியலோகத்தை அடைந்தார்.
இதனிடையில், பிரம்மா வேள்வி செய்தபோது, காமதேனுவை இந்திரலோகம் போகச் சொல்லிவிட்டு, முசுகுந்தரைச் சில காலம் படைப்பைச் செய்யச் சொன்னாராம் சிவபெருமான்.
சாபம் நீக்கி அருள்பெற்ற தலம் என்பதால்தான், வெளிப் பிராகாரத்தில் வன்னி மரத்தடியில், பிரம்மனும் சிலை வடிவில் வீற்றிருக்கிறார். இதையட்டி, இந்தத் தலத்துக்குப் பற்பல பெயர்கள் அமைந்துள்ளன.
இறையருளால் முதலில் தோன்றியதால் ஆதிபுரம்; படைப்பின் தொடக்கம் நிகழ்ந்ததால், கருவூர் அல்லது ஆதிக்கருவூர் அல்லது கர்ப்பபுரி; வஞ்சி மரங்கள் நிறைந்த இடமாதலால், வஞ்சுளாரண்யம் அல்லது வஞ்சி; காமதேனு வழிபட்டதால் ஆநிலை (ஆ+நிலை- ஆன்மாக்கள் நிலைப்பட்ட இடமாதலாலும் ஆநிலை); ஊழிகள்தோறும் பசுபதிநாதர் உயிர்களைத் தம்முள் மறைத்து வெளிப்படுத்துவதால் கரபுரம் (கரத்தல்- மறைத்தல்). இன்னும் சில பெயர்களும் உள்ளன. பெருமாள் பள்ளிகொண்டதாலும், சூரியன் வழிபட்டதாலும் பாஸ்கரபுரம்; சோழர்கள் முடிசூட்டிக்கொண்ட ஐந்து பெருநகரங்களுள் ஒன்றானதால் வீரசோழபுரம் (பிற நான்கு- உறையூர், பூம்புகார், திருவாரூர், சேய்ஞ்ஞலூர்); மலை, காடு, ஆறு, தீர்த்தம், நகரம், கோயில் ஆகிய ஆறு மங்கலங்களும் நிறைந்ததால், ஷண்மங்கல க்ஷேத்திரம் எனவும் போற்றப்படுகிறது இந்தத் தலம்.
ஸ்வாமி சந்நிதிக்குள் நுழைகிறோம். படிகளேறி, மகா மண்டபம் கடந்து, அர்த்த மண்டபம் புகுந்து... உள்ளே... ஸ்ரீஆநிலையப்பர்; பசுபதீஸ்வரர்.
திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய ஆநிலையப் பர். சுயம்புலிங்கம்; சதுரபீட ஆவுடையார்! சற்றே உயரமான லிங்கபாணம், வடக்கு பக்கமாகச் சாய்ந்தாற்போல் உள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள்... சூரியக் கதிர்களை ஏற்றுக் கொள்வதற்காகச் சிவனார் சற்றே சாய்ந்து கொண்டாராம். தைப்பூச நாளில் சிவனாருடன் ஐக்கியப்பட்டுவிட்ட கருவூர்த் தேவரை, தென்புறத்தில் அமர்த்தியதால் சாய்ந்துகொண்டார் என்பது இன்னொரு காரணம். காமதேனு வழிபட்டதால் உண்டான குளம்புச் சுவடுகள், லிங்கத்தின் மீது குழிவான தழும்புகளாக உள்ளன. லிங்கபாணம் முழுவதுமே சொரசொரப்பாக இருக்கிறது. மகாமண்டபத்தில் ஒருபுறம் விநாயகர்; மறுபுறம் திருமுறைப் பெட்டி. அருகில் நடராஜ சபை. இதற்கு எதிரிலிருக்கும் பக்கவாட்டு வழியே ஸ்வாமி கருவறையை வலம் வருகிறோம். முன்னரே பார்த்தபடி, சந்நிதியைச் சுற்றிலும் மேடை அமைப்பு. கோஷ்ட மூர்த்தங்களாக ஸ்ரீநர்த்தன விநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை. சிறிய மண்டபத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர்.
ஸ்வாமியை வணங்கி, அம்மன் சந்நிதிக்குச் செல்கிறோம். கரூரில் இரண்டு அம்மன்கள். இரண்டு தனித்தனிச் சந்நிதிகள்!
ஆநிலையப்பரின் மூத்த ஆதிசக்தி, ஸ்ரீகிருபா நாயகியாகக் கோயில் கொண்டுள்ளாள். ஸ்ரீசக்ர மேருவின் மீது நிற்கும் திருக்கோலம். மேருவைத் தாங்கியபடி அமர்ந்திருக்கும் சிங்கம்; நான்கு திருக்கரங்களுடன் பாசாங்குசம் ஏந்தியபடி, அபயமும் வரமும் காட்டி நிற்கிறாள். அலங்காரவல்லி எனும் தமிழ்ப்பெயருடன் காட்சி தரும் கிருபாநாயகியின் சந்நிதி, கிழக்கு நோக்கியதாக, சுவாமி சந்நிதிக்கு வடக்கில் (அதாவது சுவாமிக்கு இடதுபக்கமாக) உள்ளது.
இந்தச் சந்நிதியின் மகாமண்டபப் பகுதியில், தெற்கு நோக்கியதாக அமைந்திருப்பதுதான், ஸ்ரீசௌந்தரநாயகி சந்நிதி. இரண்டு அம்மன்களுக்கும் எதிரில் தனித்தனியே நந்தி. வெளிப் பிராகாரத்தில் வரும்போது, சண்டிகேஸ்வரி மண்டபத்திலிருந்து அப்படியே அம்மன் சந்நிதிக்குள் நுழையலாம் என்று பார்த்தோமே, இரண்டு சந்நிதிகளின் சந்திப்பில் அந்த வழி இருக்கிறது. சௌந்தரநாயகி சந்நிதியிலிருந்து அப்படியே ஸ்வாமி சந்நிதியின் வடக்கு உள்சுற்றை அடைந்துவிடலாம்.
அதுசரி, இங்கே ஏன் இரண்டு அம்மன்கள்?!

ரூருக்கு மேற்கில், அமராவதி ஆற்றங்கரையில், அப்பிபாளையம் எனும் கிராமம் உள்ளது. இங்கு, வேட்டுவ இனப் பெருமகனார் ஒருவருக்கு, வடிவுடையாள் எனும் மகள் இருந்தாள். சிறுவயதிலிருந்தே அவளது நடை - உடை பாவனைகள் வித்தியாசமாக இருந்தன. தன் வயதுச் சிறுமியருடன் விளையாட மாட்டாள்; எப்போதும், ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருப்பாள்.
பருவ வயதை அடைந்ததும், சிவனாரை வணங்க வேண்டும்; ஆகவே, சிவலிங்கம் வேண்டும் எனப் பெற்றோரிடம் கேட்டாள். அவளின் தந்தையும் சந்தன மரத்தால் ஆன சிவலிங்க மூர்த்தம் ஒன்றைச் செய்து கொடுத்தார். இதையடுத்து, வடிவுடையாளின் பேச்சு அநேகமாகக் குறைந்தது. ஏற்கெனவே, சைவ உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தவள், உணவின் அளவையும் குறைத்துக்கொண்டாள். பெற்றோர், கவலைப்பட்டனர்; பெண்ணுக்குத் திருமணம் செய்துவைத்துவிடலாம் எனத் திட்டமிட்டனர்.
ஆனால் அவளோ, 'பசுபதிநாதரை மட்டுமே மணப்பேன்' என்றாள். அதைக் கேட்ட ஊர்க்காரர்கள், 'பொண்ணுக்குப் பைத்தியம் பிடிச்சிருச்சு' என்றனர். இந்த நிலையில் ஒருநாள், ''பசுபதிநாதரை வணங்குங்கள்; அவர் வழிகாட்டுவார்'' என்றாள் பெற்றோரிடம்.
அதைத் தொடர்ந்து, அவளது பெற்றோரின் கனவில் தோன்றிய பசுபதிநாதர், 'தங்களின் மகளை பங்குனிப் பெருவிழாவின் 7-ஆம் நாளில் மணப்பேன்; அதன் அடையாளமாக, அப்பிபாளையம் முழுவதும் பூச்சொரியும்' எனச் சொல்லி மறைந்தார்.
அந்த நாளுக்காக ஊரே காத்திருந்தது. அந்த நாளும் வந்தது. காலையில் கண்விழித்தவருக் கெல்லாம் ஆச்சரியம்... அப்பிபாளையம் முழுவதும், பூமழை பொழிந்திருந்தது. வடிவுடையாளின் வீட்டின் முன்னே, மொத்த கிராமமும் திரண்டிருந்தது. தியானத்தில் அமர்ந்திருந்த வடிவுடையாளின் கழுத்தில், தங்கமும் வைரமுமாகப் பளபளத்தது பூமாலை. அவளை அனைவரும் வணங்கினார்கள்; பல்லக்கில் அமர்த்தி, பசுபதிநாதர் கோயிலுக்கு அழைத்துவந்தனர்.
ஸ்வாமியின் கருவறையை அடைந்த வடிவுடையாள், அப்படியே இறைவனுடன் இரண்டறக் கலந்தாள். திருவரங்கத்தில், அரங்கனுடன் கலந்துவிட்ட ஆண்டாளைப்போல, பசுபதீஸ்வரருடன் கலந்துவிட்டாள் வடிவுடையாள்!
ஐயனின் அருட்சக்தியாகவே மாறிய அவளுக்கு, பிற்காலத்தில் சந்நிதியும் ஏற்படுத்தினர்; வடிவுடையாள் எனும் திருநாமம், ஸ்ரீசௌந்தரநாயகி என மாறியது. உள்ளத்தில் இச்சா சக்தி கொண்டு, தியானத்தின் கிரியா சக்தியால் வழிபட்டால், இறைவன் எனும் ஞானசக்தியை அடையலாம் என உணர்த்துவதே வடிவுடையாளின் சரிதம்!
வடிவுடையாளாகிய ஸ்ரீசௌந்திரநாயகியையும் மூத்த சக்தியாம் ஸ்ரீகிருபாநாயகியையும் வணங்கிப் பணிகிறோம்.
கரூரில் அம்பாளுக்குத் தனிச் சிறப்புகள் பலவுண்டு. இப்போது, அமராவதி எனப்படும் ஆன்பொருநை நதியே அம்பாளின் வடிவம்தான். அருகில் பன்றிமலை எனும் வராக கிரி உள்ளது. ஆதியில், அமராவதி ஆறு வராககிரியில் இருந்துதான் உற்பத்தியானதாம். கஸ்யப வம்சாவளியைச் சேர்ந்த வராக முனிவர், இங்கு சிவலிங்கம் நிறுவி, பூஜித்தார்; சிவனாரிடமே உபதேசம் பெற்றார். முனிவருக்கு யோகீசன் எனும் தீட்சாநாமத்தை வழங்கிய சிவனார், அங்கே உருவான மலை, வராக முனிவரின் பெயரால் வராகமலை என அழைக்கப்படும் என அருளினார்.
பின்னொரு காலத்தில், மழை வளம் குறைந்தது. உலக உயிர்கள் பஞ்சத்தால் வாடின. அப்போது, அம்பிகையை அழைத்த சிவனார், அவளின் அருளே ஆறெனப் பாய்ந்து, உயிர்களைக் காக்கவேண்டும் என ஆணையிட்டார்.
அதன்படி, அம்பிகையின் திருவருளே நதியாகப் பாய்வதால், அம்பா நதி; கரையில் முனிவர்கள் பலரும் மாமரங்களாக நின்று தவம் செய்வதால், ஆம்பிரா நதி; காமதேனு வழிபட்ட தால், ஆன்பொருநை; இந்திர லோகம் போன்று ஒளிர்வதால் அமராவதி... என இந்த நதிக்குப் பெயர்கள் உருவாகின!
கரூர் சிவாலயத்தின் முருகப்பெருமானை, அருணகிரிநாதர் ஏழு பாடல்களால் துதிக்கிறார்.
மதியால்வித்தகனாகி- மனதால் உத்தமனாகிப்பதிவாகிச் சிவஞான- பரயோகத்து அருள்வாயேநிதியே நித்தியமே என்- நினைவே நற்பொருளாயோய்கதியே சொற்பர வேளே- கருவூரில் பெருமாளே... கருணாகர சற் குருவே குடகில் கருவூர் அழகப் பெருமாளே!
எப்போதும் மாமனான திருமாலைப் பாடிப் பின்னர் மருகனான முருகனைப் பாடுகிற வழக்கம் கொண்ட அருணகிரியார், இங்கே, 'கருவூர் அமர்ந்த அழகனே' என்றே முருகனை அழைக்கிறார்.
இந்தத் தலத்தில் வழிபட்டதால், அஷ்டதிக் காவலர் களும் அவரவரின் பெருமையையும் தகுதியையும் பெற்றனர் என்கிறது ஸ்தல புராணம். பிரம்மா, சாபம் நீங்கி படைப்புத் தொழிலைத் துவங்கியபோது, இந்திரன், எமன், அக்னிபகவான் ஆகியோர் இங்கு வந்து பசுபதிநாதரை வணங்கினர்.
அதனால் மகிழ்ந்த சிவனார், இந்திரனை தேவர்களுக்கு அரசனா கவும், கீழைத் திசையின் காவல னாகவும் ஆக்கினார். அக்னியை தென்கிழக்குக்கும், எமனை தெற்குத் திசைக்கும் தலைவர்களாக்கினார். பசுபதிநாதரின் விதானம் மற்றும் பீடத்தை நீரிட்டுக் கழுவித் தூய்மையாக்கினான் வருணன். அவனைக் கடலுக்கும் நீருக்கும் அதிபதியாகவும், மேற்கு திசை காவலனாகவும் ஆக்கினார் பரமன். வாயு திருவிளக்கிட்டான்; குபேரன் நவமணிகளால் அர்ச்சித்தான்; எனவே, அவர்களை முறையே வட மேற்கு மற்றும் வடக்குத் திசைகளின் அதிபதிகளாக்கினார். ஈசான்யன், இறைவனையே எண்ணி அமர்ந் திருந்தான்; அவனை வடகிழக்கின் தலைவனாக்கினார் ஈசன்!
அமிர்தம் உண்ணப்பெற்ற தேவர்கள் அழியாதிருப்பதைக் கண்ட சுக்கிராச்சார்யர், தனக்கும் அப்படிப்பட்ட வரமொன்று வேண்டுமெனக் கருதினார். கருவூரை அடைந்து பசுபதிநாதரை வழிபட்டார். அதன் பயனாக, இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் வல்லமை பெற்ற 'மிருத் சஞ்சீவினி' எனும் மந்திரத்தை, ஈசனாலேயே உபதேசிக்கப்பெற்றார்.
பிரம்மாவின் வேள்விக்காக வஞ்சி வனம் வந்த வியாச முனிவர், அங்கேயே பலகாலம் தங்கினார். முசுகுந்தச் சக்கரவர்த்தியும் இந்தத் திருக்கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்தார்.
கரூருரைச் சுற்றிலும் உள்ள இடங்கள் பலவும், இந்தத் தலத்தின் பெருமைகளுடன் தொடர்பு கொண்டவை. அமராவதி, காவிரி, மணிமுத்தாறு ஆகிய மூன்றும் ஒன்றுகூடும் இடம், சுமார் 20 கி.மீ தொலைவில் திருமுக்கூடல் எனும் பெயருடன் திகழ்கிறது.
தெற்கே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள தான்தோன்றிமலையில், பெருமாள் கோயில் உள்ளது. வடக்கே 15 கி.மீ தொலைவில், ஆறுநாட்டார் மலையான புகழிமலையில் முருகப்பெருமான் ஆலயம். வடக்கே 9 கி.மீ தொலைவில் வெண்ணெய்மலை; இதன் கிழக்கே காமதேனுவின் தேனு தீர்த்தம்.
உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டமன்னன் கோபிதுவாரத்வஜன், அகத்திய ராலும் பிரமிட்டராலும் சாபம் பெற்றான்; விளைவாக, நோயுற்றான். 'சாபம் நீங்கவேண்டும் எனில், ஆம்பிரா நதிக்கரையில், பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, ஆநிலையப்பரை வணங்கவேண்டும்' என்றார் அகத்தியர். அதற்காக இங்கே வந்தவன், வியாசரிடம் உபதேசம் பெற்று, அவ்வாறே செய்தான். ஆநிலையப்பர் ஆலயத்தின் கிழக்குப் பகுதிகளில் அவன் பராமரித்த வனம், கோபி துவார வனமானது. அதனுள் முருகப்பெருமான், முருக தீர்த்தம் ஏற்படுத்தியதாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு!
தீர்த்தங்கள் மட்டும் என்னவாம்?! அமராவதியில் நீராடினால், பிறவிப் பிணி நீங்கும். தேனு தீர்த்தத்தில் நீராடி, பின்னர் அன்னதானம் செய்தால், புவியையே ஆளலாம். முருக தீர்த்த வழிபாடு முக்தியைத் தரும்; பிரம்ம தீர்த்தத்தில் நீராடினால், நோய்கள் நீங்கும்; வறுமை அகலும்; அமிர்தம் உண்ட பலன் கிட்டும்; பிறவா வரம் கிடைக்கும். திருமால் அறிதுயில் கொள்வது அரச தீர்த்தம். இங்கு வழிபட்டால், பிள்ளைப்பேறும், எல்லையில்லா வளமும் பெறலாம். தாடகை தீர்த்தத்தில் வழிபட்டால், திருமணத் தடை நீங்கும்; மகப்பேறு வாய்க்கும்.
அவ்வளவு ஏன்... கருவூர் ஆலயத்தில் எது செய்தாலும், கோடி பலன்களைக் கொடுக்கவல்லது. ஒருபிடி அன்னமிட்டால், அது கோடி பேருக்கு அன்னமிட்டதற்கு ஈடாகுமாம். நமசிவாய மந்திரத்தை ஒருமுறை ஓதினால், கோடி முறை ஓதிய பலன் கிட்டும்.
அம்மன் சந்நிதிகள் இரண்டிலுமே நந்திகள் அமைந்திருப்பது இந்தத் தலத்தின் சிறப்புகளில் ஒன்று. இரண்டு அம்மன் சந்நிதிகள் இருப்பதற்கு வரலாற்று ரீதியாகவும் காரணம் சொல்கிறார்கள்.
அந்நிய மதத்தாரின் படையெடுப்பின்போது, பாதுகாப்பு நோக்கத்துடன் பூமியில் பள்ளம் தோண்டி சிலைகளைப் புதைத்து, மறைத்து வைத்தார்களாம். மீண்டும் சிலைகளைத் தோண்டி எடுத்தபோது, அம்மன் சிலை மாத்திரம் கிடைக்கவில்லை. 'சரி, பரவாயில்லை' என்று வேறு அம்மன் சிலையைச் செய்து பிரதிஷ்டை செய்தனராம். வெகு காலம் கழித்து, பழைய அம்மனும் கிடைத்துவிட... இரண்டு அம்மன்களின் தரிசனம்!
இந்தத் தலம், சிவ- சக்தி ஐக்கியத் தலம் என்றும் போற்றப்படுகிறது. கோயிலின் உட்புற வாயிலில், தூண் ஒன்றில், வட்ட வடிவில், ஏதோ சில எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. பொருத்தம் இல்லாத எழுத்துக்கள் போலத் தோன்றினாலும், சக்கர பந்தன முறையில், அதாவது, ஒரு வட்டத்தை நிறைவு செய்யும் வகையில் வாசித்தால், வாக்கியங்கள் புலப்படும்.
வாம யாமளியா சிவாவாசி யானிலை வானவாவானவா பலறாயவாவாயறாவண யாமவா
'இடது பாகத்தில் நீலநிற யாமளையான அம்பிகையைக் கொண்டவரே! குதிரையை, காளையை வாகனமாகக் கொண்டவரே! முதன்மையானவரே, அஞ்ஞான இருளை அகற்றுபவரே, அழகானவரே! நள்ளிருளில் நட்டம் பயில்பவரே, அருள்வீரே!' என்று அறிஞர்கள், இதற்கான விளக்கம் கொடுக்கிறார்கள்.
'இறைவனே, போற்றியே போற்றி!' என்று கருவூர்த் தேவரின் திருஇசைப்பா பாடல் உள்ளத் தில் வாசமிட, ஆநிலையப்பரைப் பணிந்தபடியே, இந்தத் தலத்தில் இருந்து விடைபெறுகிறோம்!

No comments:

Post a Comment