Saturday, 5 August 2017

வைத்தீஸ்வரன்கோவில்

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், அப்பாவான சிவனாரின் பெயரை அப்படியே, மகனான முருகனுக்கும் சூட்டி விடுகிறார்...
உரத்துறை போதத் தனியானஉனைச் சிறிது ஓதத் தெரியாதுமரத்துறை போலுற்று அடியேனும்மலத்திருள் மூடிக் கெடலாமோபரத்துறை சீலத் தவர்வாழ்வேபணித்தடி வாழ்வுற்று அருள்வோனேவரத்துறை நீதர்க் கொருசேயேவயித்திய நாதப் பெருமாளே
வைத்தியநாத சுவாமி - இதுதான் இந்தத் தலத்தின் மூல நாயகரான சிவபெருமானின் திருநாமம். அப்பன் என்ன மகன் என்ன... அனைத்தும் பரம்பொருளே என்றுதான், அருணகிரியார் அப்படிப் பாடி விடுகிறார் போலும்!
ஆமாம்! ஸ்ரீவைத்தியநாதரும் ஸ்ரீதையல்நாயகியும் ஸ்ரீமுத்துக்குமாரரும் அருள் வழங்கும் வைத்தீஸ்வரன் கோயிலுக்குத்தான் செல்கிறோம், வாருங்கள்!
புள் (பறவை - ஜடாயு), இருக்கு (ரிக் வேதம்), வேள் (முருகன்), ஊர் (ஊர்ந்து வருவதால் சூரியனுக்கு இப்படி யரு பெயர்) ஆகியோர் பூஜித்ததால், புள்ளிருக்கு வேளூர்; ஜடாயு வழிபட்டதால் ஜடாயுபுரி; வேதம் வழிபட்டதால் வேதபுரி; கந்தன் வழிபட்டதால் கந்தபுரி; சூரியன் வழிபட்டதால் பரிதிபுரி; செவ்வாய் வழிபட்டதால் அங்காரகபுரி; அம்பிகை வழிபட்டதால் அம்பிகாபுரம்! உயிர்களின் வினையைத் தீர்க்க இறைவனார் வைத்தியநாதராக எழுந்தருளியிருப்பதால் வினைதீர்த்தான் கோயில்... இப்படிப் பல பெயர்களுடன் துலங்குகிற திருத்தலம்.
சோழ நாட்டின் காவிரி வடகரைத் தலம்; சீர்காழிக்கு அடுத்ததாக உள்ளது. சீர்காழிக்கும் மயிலாடுதுறைக்கும் இடைப்பட்ட ஊர். நாடிச் சுவடிகளைத் தேடி வருங்காலத்தை அறிவதற்கும், செவ்வாய் தோஷ நிவர்த்திக்கும், நோய் பரிகாரங் களுக்கும் உரிய தலம்.
ஊர் நடுவில் கம்பீரமாகக் காட்சி தரும் கோயில். உயர்ந்த மதில்; கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கோபுரங்கள். மேற்கு வாசலே பலராலும் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கு ராஜகோபுர வாசல் வழியாக நுழைகிறோம். கோயில் வாசலில் நிறைய கடைகள்; மண்டபங்கள். வாகன மண்டபம் கடந்து உள் புகுகிறோம். இரண்டு கொடி மரங்கள். நமது கண்ணையும் கருத்தையும் கவரும் இவற்றில், ஒன்று பொன்னால் ஆனது, மற்றது வெள்ளி! அழகெனக் காட்சி தரும் கொடிமரங்களை வணங்கி மூலவரை நோக்கிச் செல்கிறோம்.
பிராகார வலம் வந்து, பிறகுதானே மூலவரிடம் செல்வோம்..? ஆனால் இங்கே, மூலவர் என்ற கணக்குக்கு ஒருவர்தாம் என்றாலும், வைத்தியநாதருடன் அம்பாளும் முத்துக்குமாரசுவாமியும் மிக மிக விசேஷமானவர்கள். ஆகவே, ஒவ்வொருவராக வழிபட்டுக் கொண்டே வருவோமா? மூலவர் அருள்மிகு வைத்தியநாத சுவாமி...
பத்திமையால் பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன்தன்னைஎம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும்அத்தேனை அமுதத்தை ஆவின்பாலைஅண்ணிக்கும் தீங்கரும்பை அரனையாகிப் புத்தேளைப் புள்ளிருக்கும் வேளூரானைப்போற்றாதே ஆற்ற, நாள் போக்கினேனே!
- என்று அப்பர் பெருமான் பாடிப் பரவும் வைத்தியநாதர். மேற்கு நோக்கிய சிறிய சிவலிங்க வடிவம். உலகைப் படைத்துக்
காக்கும் பரம்பொருள், மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் உண்டாகும் நோய்களை நீக்குவதற்காகவும் தடுப்பதற்காகவும் தாமே வைத்தியநாதர் ஆக... அம்பிகை, கையில் தைலமும் சஞ்சீவி மூலிகையும் வில்வ மண்ணும் தாங்கி ஸ்ரீதையல்நாயகியாக உடன்வந்தார்.
இந்த நிகழ்வுக்குக் காரணமாக மற்றொரு சம்பவம்
முருகப் பெருமான், தாரகாசுரனோடு போர் நடத்தி னார். அதில், காயமடைந்த தம் படைவீரர்களின் காயங் களைப் போக்கவும் உயிர்களைக் காக்கவும் திருவுளம் கொண்ட முருகப்பெருமான், கயிலைநாதரையும் அன்னை பார்வதியையும் எண்ணி வேண்ட, அவர்கள் உடனடியாக வைத்தியநாதரும் தையல்நாயகியுமாகப் புள்ளிருக்கு வேளூருக்கு எழுந்தருளினர்.
சூரியனும் வழிபட்ட திருத்தலம் இது! இதன் தொடர்ச்சியாக, சூரிய வழிபாடு நிகழ்ந்தேறுகிறது. புரட்டாசி மாதம் 19, 20, 21 தேதிகளிலும், மாசி மாதம் 19, 20, 21 தேதிகளிலும் அஸ்தமன காலத்தில் கதிரவக் கதிர்கள் இறைவன் திருமேனி மீது விழுகின்றன. கோபுரத்தின் ஊடாகக் கதிர்களை நீட்டி, பலிபீடம்- கொடிமரம்- நந்தி ஆகியவற்றைக் கடந்து, மூலவர் திருமேனியைத் தழுவுகிறான் கதிரோன்.
மூலவர் உள்பிராகாரத்தை வலம் வருகிறோம். மேற்குச் சுற்றிலிருந்து தொடங்கினால், வடமேற்கு மூலையில் செல்வ மகாலட்சுமி. வடக்குச் சுற்றில் திரும்பியவுடன், திருமுறைப் பேழை (சைவ நூல் களான பன்னிரு திருமுறைகளுக்கான சந்நிதி; இவற்றையே கடவுளாக வழிபடுவர்). அடுத்து நடராஜ சபை. சிவகாமியம்மை உடனிருக்க, மாணிக்கவாசகரும் காரைக்கால்
அம்மையும் உள்ளனர். தொடர்ந்து, அறுபத்து மூவர்; பஞ்ச லிங்கங்கள்; சஹஸ்ர லிங்கம்.
கிழக்குச் சுற்றில், பைரவர் சந்நிதி, நவக் கிரகங்கள். தொடர்ந்து ஸ்ரீராமர், ஜடாயு, அங்காரகன், சூரியன் உள்ளிட்ட பலரும் வழிபட்ட லிங்கங்கள். அடுத்து... அட, இவர் யார்? மருத்துவக் கடவுளான தன்வந்த்ரி.
அமுத கலசம் ஏந்தி, பாற்கடலிலிருந்து தோன்றிய தன்வந்த்ரி, கையில் கமண் டலமும் கதையும் ஏந்தியபடி, வைத்தியநாத சுவாமி சந்நிதிக்குப் பின்புறம் கோயில் கொண்டுள்ளார். இந்த மண்டபத்துக்கு தன்வந்த்ரி மண்டபம் என்றே பெயர். வைத்திய முறைகளை உலகுக்கு பரப்பு வதற்காகவே அவதாரம் செய்த ஆயுர்வேத பிதாமகரான இவர், தன்வந்த்ரி நிகண்டு, வைத்திய சிந்தாமணி உள்ளிட்ட நூல் களையும் அருளிச் செய்துள்ளார். மருத்துவ மேதையான தன்வந்த்ரி, வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து ஸ்ரீவைத்தியநாதரை வழிபட்டு, தனது திறமையை வளர்த்துக் கொண்டாராம்.
தெற்குச் சுற்றில் திரும்பினால் ஜடாயு குண்டம். திருநீறு நிரம்பியதாக உள்ள குழி. ராவணனிடமிருந்து சீதையை மீட்கப் போராடிய ஜடாயுவின் சிறகுகளை வெட்டி, அவரை அரக்கன் வீழ்த்தினான். ராமன் வரும்வரை, குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த ஜடாயு, ராமன் வந்ததும், நடந்தவற்றைச் சொல்லி உயிர் நீத்தார். தந்தையாக பாவித்த ஜடாயுவுக்காக ஸ்ரீராமன், இறுதிக்கடன்கள் செய்த இடமே, ஜடாயு குண்டம். ராம- லக்குவர்கள், விஸ்வாமித்திரர், வசிஷ்டர் ஆகியோரது வடிவங்கள், ஜடாயு மண்டபத்தின் மேல் பகுதியை அலங்கரிக்கின்றன.
அடுத்து, வரிசையாக உற்ஸவ மூர்த்தங்கள்; வெகு அழகு. சோமாஸ்கந்தர், சிவகாமி உடனாய நடராஜர், சிங்காரவேலர், கங்கா விசர்ஜனர், பிட்சாடனர், கங்காளர், திரௌபதி, ஐயனார், பிரதோஷ நாயகர்,
துர்கை என்று பளபளக்கும் உற்ஸவர்களில், ஜடாயுவும் அங்காரகனான செவ்வாயும் உள்ளனர். ஏறத்தாழ ஒரு தனிச் சந்நிதியிலேயே உற்ஸவ செவ்வாய். இவருக்கு, செவ்வாய் தோஷ நிவர்த்திக்காக அர்ச்சனைகள் உண்டு. செவ்வாய்க் கிழமைகளில் ஆட்டு வாகனத்தின் மீது இவர் பிராகார உலா வருகிறார். அடுத்து வலஞ்சுழி விநாயகர், சோமாஸ்கந்தர்.
சுவாமியை வழிபட்டுவிட்டு, அம்பாளை வணங்கச் செல்கிறோம். அம்பாள் சந்நிதிக்கு எதிரில், சித்தாமிர்த தீர்த்தம்.
வைத்தீஸ்வரன்கோவிலுக்கு 18 தீர்த்தங்கள் இருப்பதாகப் புராணங்கள் குறிக்கின்றன. இவற்றுள் தலையாயது, சித்தாமிர்த தீர்த்தம். நான்கு யுகங்களின் பெருமை பெற்ற இது, அம்பா ளின் பார்வைக்கு உட்பட்டதாக, அம்பாளின் எதிரில் இருப்பது சிறப்பு. காலங்காலமாக சித்தர்களும் முனிவர்களும் இங்கே வந்து, எம்பெருமானுக்கு தீர்த்த நீர் கொண்டு அபிஷேக- ஆராதனை செய்தனர். பரமனாரின் திருமுடியிலும் திருவடியிலும் வழிந்தோடிய நீர், அமிர்தமாக இங்கே கலந்தது. சித்தாமிர்த தீர்த்தம் எனும் பெயர் கொண்டது.
கிருத யுகத்தில், காமதேனு, தன் பாலால் வைத்தியநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்தது; அப்போது பொங்கிப் பெருகி, அபிஷேக வாயிலிருந்து வழிந்தோடிய பாலை, பரம கருணா மூர்த்தியான பரமேஸ்வரர், இந்த தீர்த்தத்துள் கலக்கச் செய்தார். இதனால், கோக்ஷீர (பசுவின் பால்) தீர்த்தம் என்று பெயர். திரேதா யுக காலத்தில் அடியார்கள் பலர் இங்கே வந்தனர். தாகம் தணித்துக் கொள்ள தீர்த்த நீரெடுத்துப் பருகினர். நீர், கரும்பென இனித்தது. ஆதலால், இக்ஷூ (கரும்பு) தீர்த்தம் எனலானது. துவாபர யுகம் மற்றும் கலியிலும், இங்கு மூழ்கியதாலும், இதன் நீர் மேலே பட்டதாலும் உய்வடைந்தவர்கள் ஏராளம்!
சிவபெருமானை அழைக்காமல் யாகம் செய்த தட்சன், தனது தலை துண்டிக்கப் பட்டான். தவறை உணர்ந்து பிராயச்சித்தம் வேண்டினான். வைத்தியநாத சுவாமியின் சித்தாமிர்த குளத்தில் மூழ்கி எழுந்தால் பாவம் தீரும் என்பதை அறிந்து, இங்கே வந்து, சித்தாமிர்தத்தில் மூழ்கி, தலையும் உடலும் சேரப்பெற்றான்.
மூவாசையும் துறந்தவரான சதானந்தர், சித்தாமிர்தக் கரையில் தவம் செய்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்த போது, இரை தேடி வந்த பாம்பொன்று தவளையை துரத்தியது. பாம்பிடமிருந்து தப்பிக்க முயன்ற தவளை, முனிவர் மீது குதிக்க, தொடர்ந்து பாம்பும் தாவ... 'பரம்பொருளுடன் ஒன்றவிடாமல் செய்யும் பாம்பும் தவளையும் இந்த தீர்த்தத்தில் இல்லாமல் போக' என்று ஆணையிட... இன்றளவும் இந்த தீர்த்தத்தில் பாம்பும் தவளையும் தங்குவதில்லை!
அங்காரகனுக்கு ஒருமுறை உடல் நோய் உண்டானது. செங்குஷ்டம் தோன்றிப் பொலிவிழந்து, தட்டுத் தடுமாறி... சித்தாமிர்தக் குளத்துக்கு விரைந்து வந்து, நீராடி, வைத்தியநாதரை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான். இப்போதும் செவ்வாய் பரிகாரத் தலமாக இந்த ஊர் விளங்குகிறது.
சித்தாமிர்த தீர்த்தத்துக்கு குன்றாத எழில் சேர்ப்பது, நடுவில் இருக்கும் நீராழி மண்டபம். தீர்த்த வரலாற்றுச் சுதைச் சிற்பங்களும், ரிஷப வடிவங்களும் அழகு. தீர்த்தத்தின் நான்கு புறமும் மண்டபங்கள்; கருங்கல் தளங்களில் அழகிய வேலைப்பாடுகள்.
சித்தாமிர்தக் கரையிலிருந்து நகர மனமின்றி நகர்கிறோம். என்ன இருந்தாலும் அன்னை அழைக்கிறாளே... அவளை தரிசிக்க வேண்டாமா?
ருள்மிகு தையல்நாயகி. சுவாமியோடு தைலப் பாத்திரம் தாங்கி வந்தவள் என்பதால், தைலாம்பாள் என்றும் திருநாமம். நின்ற கோலம். தெற்கு நோக்கிய திருமுக மண்டலம். அம்பாள் சந்நிதி உள்பிராகாரத்தில் பள்ளியறை, ஆடிப்பூர அம்மன், விநாயகர் சந்நிதி, விஷ்ணு சந்நிதி, சுப்பிரமணியர் சந்நிதி ஆகியன உள்ளன. தாலி பாக்கியத்துக்காக தைலாம்பாளிடம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.
இந்தத் தலத்தின் செல்வமுத்துக்குமார சுவாமி, அம்பாளின் செல்வத் திருமகன் அல்லவா! கோடைக் காலங்களில் குழந்தைக்குத் துன்பம் நேரும் எனும் ஐதீகத்தில், முத்துக்குமாரரை அம்பாள் சந்நிதியில் கொலு வைக்கின்றனர். முத்துக்குமார சுவாமி புறப்பாடு ஆகும்போதெல்லாம் அம்மாவிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வார்; திரும்ப வந்தவுடன் அம்மாவிடம் தெரிவிப்பார். கிருத்திகை போன்ற விழாக்காலங்களில், நடைப் பாவாடையிட்டுக் கொண்டு, மயில் விசிறி உபசாரத்துடன் புறப்படும் முத்துக்குமாரர், சிவன் சந்நிதியை வலம் வந்து வணங்கி, அம்மாவிடம் வந்து சொல்லிவிட்டுக் கிளம்புவார். அதேபோன்று, உலா முடிந்து திரும்பும்போதும், அம்மாவிடம் வந்து சொல்வார். அவ்வாறு பிள்ளை திரும்பிவரும் போது, அம்மா, மகனுக்குப் பால் வழங்கி ஆசுவாசப் படுத்துவார். இதன் ஐதீகமாக அந்த தருணத்தில், அம்பாள் சந்நிதியில் முருகனுக்குப் பால் நைவேத்தியம் நடக்கும்.
நான்கு வேதங்களில் தொன்மையான ரிக் வேதம், தன்னுள்ளிருக்கும் வேதப் பொருளை உணர்ந்து, அதனைச் சிவமாக வழிபட்ட திருத்தலம் இது!
வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே- என்கிறார் திருஞான சம்பந்தர். கீழகோபுரம் வழியாக நுழைந்தால், இடது பக்கம், தலமரமான வேம்பு. அதனடியில் ஆதி வைத்தியநாதர். உள்வாயிலின் ஒருபுறம் வீரபத்திரர்; மற்றொரு புறம் ஆதிவிக்னேஸ்வரர். உள்ளே வந்தால், நேரே பழநியாண்டவர் சந்நிதி. பக்கத்தில் ஜ்வரஹரேஸ்வரர். அடுத்து, செவ்வாய் சந்நிதி.
வைத்தீஸ்வரன்கோயில், அங்காரகப் பரிகாரத் தலம்! தொழுநோயால் பீடிக்கப் பட்ட அங்காரகன், இங்கே வழிபட நோய் தீர்ந்தது. இங்கு வந்து அங்காரகனை வழிபடுபவர்களுக்கு எவ்விதக் குறையும் அணுகாது என்று அப்போது சுவாமி வரம் கொடுத்தார். அங்காரகன், இங்கே தெற்குப் பார்த்த மூலவர். இவருக்கு அதிபதி முருகன்.
செல்வமுத்துக்குமாரர் சந்நிதிக் குப் பின்புறம் இவர் சந்நிதி அமைந்திருப்பது வெகு சிறப்பு.
அங்காரகன், சிவ அம்சம் கொண்டவன்; பார்வதியைப் பிரிந்து, சிவன் யோகத்தில் ஆழ்ந்திருந்தபோது, அவருடைய நெற்றியில் வியர்வை துளிர்த்து நிலத்தில் விழ, அதுவே குழந்தை உருக் கொண்டது; குழந்தையை பூமாதேவி வளர்த்தாள்; தவம் செய்து யோகாக்னியைப் பெற்ற அவன், கிரக பதம் பெற்றான். உக்ர சிவரூபமான வீரபத்திரரே குளிர்ந்து, செவ்வாய் ஆனார் என்கிறது மச்ச புராணம்.
நிலமகளால் வளர்க்கப்பட்ட இவரே, நிலத்துக்கு அதிபதி. செவ்வாய், இங்கே, நான்கு திருக்கரங்களுடன், கதை, சக்தி, சூலம் ஆகிய ஆயுதங்களை ஏந்தியவராக, ஒரு திருக்கரத்தால் அபயம் தருபவராகக் காட்சி அளிக்கிறார். செவ்வாய்க் கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோயில், விழாக் கோலம் பூணும். அன்று, ஆட்டுக்கிடா வாகனத் தில், உற்ஸவர் செவ்வாய் வீதியுலா வருவார். முருகனும் செவ்வாயும் முன்னும் பின்னுமாக விளங்க, ஒருவரை வணங்கினால், அது மற்றவருக்கும் சேருகிற சிறப்பு, இந்தத் தலத்துக்கு மட்டுமே உரித்தானது. மேற்குப் பிராகாரத்தில், சுவாமி சந்நிதிக்கு அருகில், செல்வமுத்துக்குமார சுவாமி. இந்தத் தலத்துக்கு வந்த குமரகுருபரர், முத்துக்குமாரசுவாமியின் அருளில் திளைத்தார். 'பொன் பூத்த குடுமி' என்று முருகன் தொட்டுக் கொடுக்க, பிள்ளைத் தமிழ் பாடினார் குமரகுருபரர். முத்துக்குமார சுவாமிப் பிள்ளைத் தமிழ், புள்ளிருக்கு வேளூர் சேனாதிபதிப் பெருமாள் பிள்ளைத் தமிழ், முத்தையா பிள்ளைத் தமிழ் என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நூலில்,
சீராட்டி விளையாடு சேனாபதிக் கடவுள்
சிறு தேர் உருட்டி அருளே
திருவளர வளர் கந்தபுரி வளர் இளங்குமர
சிறு தேர் உருட்டி அருளே
- என்று குமரனின் வகைவகையான விளையாடல்கள்...
இவர் சந்நிதியில், பேழை ஒன்றில், படிகலிங்கம் உண்டு. முத்தையன் வழிபடுவதால் முத்துலிங்கம். நாள்தோறும், காலை மற்றும் உச்சிக்காலங்களில் முத்துலிங்கத்துக்கு அபிஷேக- ஆராதனைகள் ஆன பின்பே, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை. முத்தையனே லிங்கசுவாமியை வழிபடுவதாக ஐதீகம். சொல்லப்போனால்... கிருத்திகை, கந்த சஷ்டி போன்ற விசேஷ காலங்களிலும்தாம் செல்வ முத்துக்குமாரருக்கு அபிஷேகம்; மற்ற நாட்களில், முத்துலிங்கத்துக்குத்தான்! ஆம்! அப்பாவுக்கு முதல் மரியாதை தருகிறார் இந்தப் பிள்ளை. கோயில் சொத்துகள், வைத்தியநாதசுவாமி பெயரில் இருந்தாலும், சிறப்பு வழிபாடுகளுக்கான ஆளுகை உரிமை மகனிடம் உள்ளது.
வைத்தியநாதர், வலப்புறத்தில் தையல்நாயகி! இருவருக்கும் இடையில் செல்வமுத்துக்குமார சுவாமி... இந்தத் தலமே, சோமாஸ்கந்த மூர்த்தத்தின் பாங்கில் அமைந்திருக்கிறது. விழாக் காலங்களிலும், சோமாஸ்கந்த ஸ்வரூபமாகவே எழுந்தருள்வர்.
அர்த்தஜாம பூஜையின்போது... பச்சைக்கற்பூரம் கலந்த சந்தனத்தைப் பிடித்து (நேத்திரப்பிடி சந்தனம்) வைத்து, அதனுடன் எலுமிச்சைப் பழம் மற்றும் திருநீறு ஆகியவற்றை முருகனின் பாதத்தில் வைத்து வணங்குவர். அப்போது முருகனுக்குத் தாலாட்டு பாடுவர். அம்மையும் அப்பனும் பிள்ளைக்கு உணவூட்டி உறங்க வைக்கின்றனராம்! புழு காப்பு எனப்படும் இந்த பூஜை முடிந்த பிறகே, சுவாமி- அம்பாளுக்கு அர்த்தஜாமம் நிகழும். அடடா! மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்காகப் பரம்பொருள் எப்படியெல்லாம் வடிவங்கள் கொண்டு வாழ்ந்து காட்டுகிறது!!
கிருதயுகத்தில் கோக்ஷீரமாகவும், திரேதாயுகத்தில் இஷூசாரமாகவும், துவாபரயுகத்தில் ஜடாயு சாரமாகவும், கலியில் சித்தர்கள் வைத்தியநாதரை அபிஷேகித்த தேவாமிர்தமாகவும் தலத்தின் தீர்த்தம் சிறப்பு பெற்றது. இதைத் தவிரவும் இங்கே பல தீர்த்தங்கள் உள்ளன. கோயிலின் தென்மேற்கு மூலையில் கோதண்ட தீர்த்தம்-ஜடாயுவுக்கு ஸ்ரீராமன் இங்கே ஈமக்கடன்கள் செய்தாராம்! பங்குனி உத்திர நாளில் ஸ்ரீநடராஜர் இங்கே எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கிறார்; முடி இறக்க வரும் பக்தர்கள், இங்கு தவறாமல் நீராடுகின்றனர். தென்கிழக்கில்- கௌதம தீர்த்தம்; கௌதமரால் உருவாக்கப்பட்டது. வடக்கே- வில்வ தீர்த்தம்; விஸ்வ தேவர்களால் உருவாக்கப் பட்டது. கீழவீதிக்குக் கிழக்கே உள்ள முனிவர் தீர்த்தம் - காஷ்யபர் உள்ளிட்ட ஏழு முனிவர்கள் உருவாக்கியது; தட்சன் தலையைக் கொய்த பின், வீரபத்திரர் இங்கே நீராடி தனது உக்கிரத்தையும் தீமையையும் போக்கிக் கொண்டார்.
கோயிலின் வடகிழக்கு திசையிலுள்ளது அங்க சந்தான தீர்த்தம் - தாரகனுடனான போரில், கீழே விழுந்துவிட்ட தேவர்களுக்காக வைத்தியநாத சுவாமி, தமது சூலத்தால் தோற்றுவித்த தீர்த்தம்... தேவர்களின் அங்கங்களை இதில் பெய்து, அவற்றின் காயங்கள் அகற்றிப் பொருத்தினார் சுவாமி; தேவர்கள் உயிர் பெற்றனர்; அங்கங்களை அருளால் வழங்கியமையால், அங்க சந்தான தீர்த்தமானது; இதன் மண் விசேஷமானது; கொஞ்சம் எடுத்துப் பூசினாலும் பிணிகள் அகலும்.
கீழை கோபுர வாயிலின் உட்புறம் உள்ள தல மரமும் புனிதமானது. முதிர்ச்சியோடு காட்சி தரும் இதனடியில் ஆதி வைத்தியநாதர் குடியிருப்பதால், இதுவே ஆதி வைத்தியபுரி! வேம்படிமால் என்றும் பெயருண்டு. கிருத யுகத்தில், இந்தப் பகுதி கதம்ப வனம்; இங்கே பிரம்மதேவர் தவம் செய்ய, சுவாமி அவருக்குக் காட்சி கொடுத்தார். திரேதா யுகத்தில், இதுவே வில்வ மரம்; சம்பாதியும் ஜடாயுவும் இங்கே வழிபட்டனர். துவாபர யுகத்தில் மகிழ (வட மொழியில், வகுளம்) மரமானது; இதனடியில் காட்சி தந்த பரம்பொருளை, விஷ்ணு வணங்கினார்.
இப்போது இதுவே வேம்பு.தேவரும் மூவரும் தோன்றி, பரம்பொருளை இங்கே வணங்குகிறார்கள்.
'வினை தீர்த்தான் கோயில் விளக்கழகு' என்றொரு பழமொழி உண்டு. விளக்கு மட்டுமல்ல... இங்கு எல்லாமே அழகுதான்! தன்வந்த்ரி மண்டபம், கிருத்திகை அபிஷேக மண்டபம், ஆடிப்பூர அம்மன் சந்நிதிக்கு அருகில் அஷ்டலட்சுமி ஓவியங்கள், பிரமாண்ட துவார பாலகர்கள், ஜடாயு உருவம், வசந்த மண்டபம், சித்தாமிர்தத்தின் நீராழி மண்டபம், ஒரே வரிசையில் நிற்கும் நவக்கிரகங்கள், சட்டைநாதர், ஆறுமுகர் சந்நிதிக்கு முன்பு உள்ள சந்தனக் குழம்பு மண்டபம், ராஜகோபுரங்கள் மட்டுமல்லாமல் கட்டைகோபுரங்களும் எழிலாக அமைந்த நேர்த்தி; ஆஸ்தான மண்டபம், அலங்கார மண்டபம், சித்திர மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், களஞ்சிய மண்டபம், யானைகட்டு மண்டபம் என்று மண்டபங்களின் திருக்கோலம்...
திருஞானசம்பந்தர், அப்பர், அருண கிரிநாதர், குமரகுருபரர், படிக்காசுத் தம்பிரான், அட்சயலிங்கத் தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப் புலவர் என்று இத்தலத்தைப் பாடிய மகான்கள், தலமரமான வேம்பின் அடியில் கிடக்கும் பழுப்புகளையே மக்கள் மருந்தாகக் கொள்ளும் பெருமை, பார்த்துப் பரவசமடைய வேண்டிய பத்திரகாளி சந்நிதி... இப்படி, வைத்தீஸ்வரன் கோயில் சிறப்புகள் இன்னும் நீள்கின்றன.
வாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேசிசஜபேந் நாமத்ரயம் நித்ய மமகா ரோக நிவாரணம்
என்று வைத்தியருக்கெல்லாம் மகா வைத்திய ரான புள்ளிருக்குவேளூரானை வணங்கி வழிபட்டு மீள்கிறோம்.
நோய் தீர்க்கும் பிரசாதங்கள்!
ந்தத் தலத்தின் சிறப்புப் பிரசாதங்கள், திருச்சாந்து உருண்டையும் அங்கசந்தான மண்ணும் ஆகும்.
நோய்கள் நீங்க, வைத்தியநாதரை வழிபடுவோருக்கு திருச்சாந்துருண்டை கண்கண்ட மருந்து. 'மருந்துப் பொட்டலம்' என்றே சொல்வார்கள். இதனை, சித்தாமிர்த தீர்த்த நீருடன் கலந்து உட்கொள்ள வேண்டும். தீராத நோயெல்லாம் தீரும்.
முறையாக திருச்சாந்துருண்டை கடன் கழிப்பவர்களும் உண்டு. வளர்பிறையில் மங்கலமான ஒருநாளைத் தேர்ந்தெடுத்து, அன்று அங்கசந்தான தீர்த்தத்தில் மூழ்கி, அதன் நடுவிலிருந்து மண்ணெடுத்து, ஒரு புதுப் பாத்திரத்தில் வைத்து, கோயிலின் உள்ளே விபூதி குண்டத்திலிருந்து விபூதி சேர்த்து, சித்தாமிர்த நீர் கலந்து, நமசிவாய மந்திரத்தை ஓதிப் பிசைய வேண்டும். முத்துக்குமாரசுவாமிக்கு முன்பாக உள்ள குழி அம்மியில் இட்டு அரைக்கவேண்டும். பின்னர், கடுகளவு உருண்டைகளாகச் செய்து, தையல்நாயகியார் பாதங்களில் இட்டு வழிபடவேண்டும். பின்னர் நியமமாக உட்கொள்ளவேண்டும்.
மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான்
என்ற அப்பர் வாக்குக்கேற்ப வைத்தியநாதர் நோய்கள் யாவற்றையும் போக்கி அருள்வார்.

No comments:

Post a Comment