Saturday, 5 August 2017

ஞாயிறு சூரியன் வழிபட்ட சிவாலயம்!




சூரிய பகவான் வழிபட்ட தலங்களை பாஸ்கர தலங்கள் எனப் போற்றுவர். இதிலும் குறிப்பாக, பஞ்ச பாஸ்கரத் தலங்கள் என வகைப்படுத்தியுள்ளனர். அவை திருவாரூர் - தலைஞாயிறு, நீடாமங்கலம் - திருப்பரிதி நியமம், ஆடுதுறை - திருமங்கலக்குடி, நன்னிலம் - திருச்சிறுகுடி மற்றும் சென்னைக்கு அருகில் உள்ள ஞாயிறு!
பிரம்மாவின் சாபத்தால் தொழுநோய் கண்டு அவதிப் பட்டார் சூரிய பகவான். சாப விமோசனம் பெறுவதற்கு
வழி கேட்டு சிவனாரை எண்ணி தவம் செய்தார். அப்போது... 'தாமரை மலர்கள் பூத்திருக்கும் தடாகத்தில் நீராடி, அங்கே தாமரைப் பூவில் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளும் சிவனாரை வழிபட சாபம் நீங்கும்' என அசரீரி ஒலித்தது. இதில் மகிழ்ந்த சூரியனார், அசரீரி வாக்குப்படி, இந்தத் தலத்துக்கு வந்து தடாகத்தில் நீராடி, சிவ பூஜை செய்ய, தாமரையில் இருந்து தோன்றிய சிவனார், இவருடைய சாபத்தை நீக்கி அருளினார். சூரியனாரின் சாபத்தைப் போக்கி அருளிய அந்தத் தலம்... ஞாயிறு!
சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகில் உள்ளது ஞாயிறு. சூரிய பகவான் (ஞாயிறு) வழிபட்ட தலம் என்பதால் இந்த ஊருக்கு ஞாயிறு என்றும், மலரில் வெளிப்பட்டவர் ஆதலால் இறைவனுக்கு ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர் என்றும் திருப்பெயர் அமைந்ததாகச் சொல்கிறது தல புராணம்! சூரியன் நீராடி வழிபட்ட தடாகம், சூரிய தீர்த்தம் என வழங்கப்படுகிறது.
சோழ மன்னன் ஒருவன், ஒருமுறை இந்த வழியே வந்த போது, அருகில் உள்ள பகுதியில் சிலகாலம் தங்கினானாம் (அதுவே சோழவரம் ஆனதாகச் சொல்கிறார்கள்). அருகில் உள்ள வனத்துக்கு வந்த மன்னன், தாமரை தடாகத்தைக் கண்டு பரவசம்
அடைந்தான். சிவ பூஜைக்காக பூக்களைப் பறித்தான். அப்போது ஒரு பூ மட்டும் விலகி விலகிச் சென்றதாம்! பல முறை முயன்றும் அந்தப் பூவைத் தொடக்கூட முடியாததால் ஆத்திரம் கொண்ட மன்னன், கத்தியை
எடுத்து மலரை வெட்டினான். அந்தப் பூவில் இருந்து ரத்தம் பீறிட்டது; தடாகம் முழுவதும் ரத்தம் பரவியது. அதிர்ந்த மன்னன், மயங்கிச் சரிந்தான். அவனுடைய குதிரை வெறிபிடித்தது போல் எங்கோ ஓடிச் சென்றது.
பிறகு மயக்கம் தெளிந்த போது, தனது கண்கள் பார்வையை இழந்து விட்டதை அறிந்து கதறி அழுதான்! தனது தவறை எண்ணி வருந்தியவன், சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்ட... அந்த நிமிடமே அவன் முன்னே காட்சி தந்த சிவ பெருமான், 'இங்கே... இந்தத் தலத்தில், சூரியன் வந்து வழிபடும் வகையில் ஆலயம் ஒன்றை எழுப்பு!' என்று அருளினார்.
அதன்படி, இங்கே... சிவாலயம் ஒன்றை எழுப்பிய மன்னன், ஸ்வாமிக்கு ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி, வணங்கினான். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீசொர்ணாம்பிகை; சுவாமியின் வலது புறத்தில் சந்நிதி கொண்டிருக்கிறாள். ஆகவே திருமண பாக்கியம் அருளும் தலம் என்கின்றனர்!
வருடந்தோறும், சித்திரை மாதம் 1-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை, சூரியனின் ஒளிக் கதிர்கள், சிவனார் மற்றும் அம்பாள் சந்நிதியில் விழுகின்றன. இந்த நாளில், இறைவனை தரிசிப்பது பெரும்பலன் தரும் என்கின்றனர் பக்தர்கள்.
அழகிய, பிரமாண்ட ஆலயம்! ஸ்ரீபுஷ்பரதேஸ்வரரின் சந்நிதிக்கு எதிரிலேயே தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார் சூரிய பகவான். எனவே இங்கே நவக்கிரக சந்நிதி இல்லை! சித்திரை, தை மாதப் பிறப்புகள், ரத சப்தமி முதலான நாளில், சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன.
ஞாயிறு - சொர்ணாம்பிகை, மயிலை-கற்பகாம்பிகை, மேலூர் - திருவுடைநாயகி, திருவொற்றியூர் - வடிவுடை அம்மன், திருமுல்லைவாயில் - கொடியிடை நாயகி ஆகிய ஐவரும் பஞ்ச வடிவ அம்சங்கள் என்று போற்றுவர். இவர் களில் ஸ்ரீசொர்ணாம்பிகை, கருணையே உருவானவள்! வெள்ளிக் கிழமை அன்று வரும் பௌர்ணமியில், இவளை தரிசித்தால், பஞ்ச மகா சக்திகளையும் தரிசித்த பலன் கிடைக்குமாம்!
கண்வ மகரிஷி முக்தி பெற்ற தலம், சுந்தரமூர்த்தி நாயனாரின் இரண்டாவது துணைவியாரான சங்கிலிநாச்சியார் பிறந்த பூமி என பெருமைகள் பல கொண்ட திருத்தலம்- ஞாயிறு. தனது சாபம் தீர்ந்த திருத்தலம் என்பதால் இங்கே... பக்தர்களின் சகல தோஷங்களையும் போக்கி அருளுகிறார் சூரிய பகவான்! மாசி மகத் திருநாளில்தான், சங்கிலிநாச்சியாருக்கும் சுந்தரருக்கும் திருமணம் நடைபெற்றதாம்! எனவே இந்த நாளில், விளக்கு பூஜை இங்கே விசேஷமாக நடைபெறுகிறது.
கோயிலின் தல விருட்சம், நாகலிங்க மரம். நாக தோஷம், களத்திர தோஷம் முதலான அனைத்து தோஷதாரர்கள், கண் பார்வைக் கோளாறு உள்ளவர்கள், நோயால் அவதிப்படுவோர் மற்றும் சூரிய தசா புத்தி கொண்டவர்கள், இந்தத் தலத்துக்கு ஞாயிற்றுக் கிழமையில் வந்து, சூரிய புஷ்கரணியில் நீராடி, சூரிய பகவானையும் ஸ்ரீபுஷ்பரதேஸ்வரரையும் மனதாரப் பிரார்த்தித்தால், தோஷங்கள் நீங்கி வளம் பெறுவர். கதிரோனைப் போற்றும் தைப் பொங்கலில், ஞாயிறு தலம் சென்று அவரின் திருவருளைப் பெற்று வருவோம்.
சுபிட்சம் தரும் சூரியனார்!
சூரிய பகவானை, ஞாயிறு தோறும் வந்து வணங்கினால் சிறப்பு என்கின்றனர். 11 வாரம் வந்து வணங்கி, 11-வது வாரத்தில் செந்நிற ஆடையை பகவானுக்கு சார்த்தி, செந்தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட... முடிந்தால் அன்னதானம் செய்து வழிபட, கண் பார்வைக் கோளாறு, தீராத நோய், திருமணத் தடை ஆகியவற்றைத் தீர்த்து அருளுவார் சூரிய பகவான். பதவி உயர்வு, பிள்ளை வரம் ஆகியவற்றுக்காகவும் இங்கே பக்தர்கள் வேண்டி நிற்கிறார்கள்! கோதுமையால் நைவேத்தியம் செய்வது விசேஷ பலன் தருமாம்!
எங்கே இருக்கிறது?
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது ஞாயிறு திருத்தலம். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றத்துக்கு நிறைய பஸ் வசதி உண்டு.
சென்னை பாரிமுனையில் இருந்து ஞாயிறு தலத்துக்கு நேரடி பஸ் வசதி உண்டு.
கோயில் தொடர்புக்கு 99620 34729

No comments:

Post a Comment