Tuesday, 8 August 2017

ஓணகாந்தன் தளி


நிமிர்ந்து பார்த்த சுந்தரருக்குச் சிரிப்பு வந்தது. 'சரியான ஓட்டாண்டி; எப்போதும் கையில் இந்தக் கபாலத்தை வைத்துக்கொண்டு திரிகிறாரே!’ - சிவனாரைப் பார்த்துச் சிரித்தார். 'பெயரைப் பார்... அதுவும் இரண்டு சிவனார்கள்! ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர்... நல்ல வேடிக்கை!’ வாணாசுரனின் சேனாதிபதிகள் வந்து வழிபட்டார்களாம். அவர்களின் பெயர்களையே தாமும் ஏற்றுக்கொண்டாராம் சிவனார்.
நண்பரைக் காணக் காண, சுந்தரருக்கு நகைச்சுவை பீறிட... அந்த உணர்விலேயே, இந்தளப் பண்ணில் பாட்டும் புறப்பட்டது.
திங்கள் தங்கு சடையின் மேலோர் திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார்கொல் தட்டியாளார் உங்களுக்காட் செய்யமாட்டோம் ஓணகாந்தன் தளியுளீரே...
பிறைநிலா தங்கியிருக்கும் சடைக்கற்றைகள் மீது, ஒப்பற்ற அலைகள் புரள இருக்கிற கங்காதேவியும் (உம்மோடு எப்போதும் இருக்கும் உமையம்மைக்கு அஞ்சி) வாயைத் திறக்கமாட்டாள்; உம்முடைய மூத்த மகனான கணபதியோ பெருவயிறன்; அவனால் நடக்கக்கூட முடியாது; இளைய மகன் வேலவனோ சிறு பிள்ளை; உமாதேவியாரோ, உம்மைமாத்திரம் ஆள்வாரேயன்றி அடியவரை ஆளமாட்டார்; பின்னர் நாங்கள் என்னதான் செய்வது? உம்முடைய குடும்பத்துக்கு ஆட்செய்தால் எங்களுக்கு என்ன கிடைக்கும்? நாங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் ஆட்செய்யமாட்டோம், ஓணகாந்தன் திருக்கோயிலில் இருப்பவரே!
வல்லதெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய்திறந் தொன்று இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர் பல்லை உக்க படுதலையிற் பகல் எலாம் போய்ப் பலி திரிந்திங்கு ஒல்லை வாழ்க்கை ஒழியமாட்டீர் ஓணகாந்தன் தளியுளீரே உம்மை நல்ல சொற்கள் சொல்லி வாழ்த்தினாலும், வாயைத் திறந்து, பொருள் 'உண்டு’ என்றோ 'இல்லை’ என்றோ கூறமாட்டீர்; பல்லின்றி இருக்கும் தலையோட்டைத் தூக்கிக்கொண்டு, பகலெல்லாம் பிச்சைக்கு அலைகிற இந்த உமது வாழ்வை விடமாட்டீரா? உம்மிடத்தில் நாங்கள் என்ன கேட்பது?
இவ்வளவு கிண்டல் செய்தாலும், சுந்தரர் தனது வழக்கமான விண் ணப்பத்தை விடவில்லை. வழக்கம்போல பொன்னும் பொருளும் கேட்டார். 'கொடுக்கலாமோ’ என்று யோசித்த சிவனாருக்கு, இவர் தனது குடும்பத்தை ரொம்பவே கிண்டல் செய்துவிட்டாரோ என்றும் தோன்றியது. அதே யோசனையில் சிவனார் ஆழ்ந்துவிட... சுந்தரரா விடுவார்? 'கோயிலைவிட்டே ஓடிப் போங்கள்’ என்று குரல் கொடுத்தார்.
கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே ஆடிப் பாடி அழுது நெக்கங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர் தேடித் தேடித் திரிந்தெய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர் ஓடிப் போகீர் பற்றுந் தாரீர் ஓணகாந்தன் தளியுளீரே கூடிக் கூடித் தங்களின் அன்பால் உம்மைத் தொழுது, பாடிப் பாடி, அழுது உள்ளம் நெக்குருகி, மனம் நெகிழ்ந்து போகிற அன்பர்களுக்கு இன்பம் தராமல் இருக்கிறீர்; உம்மைத் தேடித் தேடி வந்து நாடுகிற என்னிடத்தும் உமது சித்தத்தை வைக்காமல் இருக்கிறீர்; திருக்கோயிலைவிட்டு ஓடிப் போகவும் மாட்டீர்; எங்களுக்குப் பற்றாகவும் இருக்கமாட்டேன் என்கிறீர்; ஓணகாந்தன் கோயிலில் இருப்பவரே!
அவ்வளவுதான்; 'கோயிலைவிட்டு ஓடவும் மாட்டீர்’ என்பது செவியுற்றதோ இல்லையோ, இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று பார்த்த சிவனார், பாம்புக் கச்சையை இழுத்துக் கட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டார். ஆமாமாம், இரண்டு சிவனார்களும் வேகவேகமாகப் புறப்பட்டு விட்டனர். கோயிலைவிட்டுப் புறப்பட்டார்களே தவிர, எங்கே போவது என்று தெரியவில்லை. சிவபெருமானுக்கு என்ன, கோயிலை விட்டு வெளியில் அலைந்து பழக்கமா? போகுமிடம் புரியாமல், அருகிலிருக்கும் புளியமரத்தில் போய் அமர்ந்துகொண்டார்.
அடடா... சுந்தரரும் பின்னாலேயே விரட்டிக் கொண்டு புளியமரத்தடிக்கு வந்துவிட்டாரே! வேறு வழியின்றி சிவனார், அவரை அங்கிருந்து விரட்டுவதற்காகப் புளியங்காய்களை உதிர்த்தார்; என்ன அதிசயம்! மரக்கிளைகளில் புளியங் காய்களாகப் புறப்பட்டவை, தரையைத் தொடும் போது தங்கக் காய்களாக மாறின.
ஆஹா! சுந்தரருக்குப் பொன் தந்து அருளிய பெருந்தலம் செல்லலாமா? காஞ்சிபுரத்தில் உள்ள ஓணகாந்தன் தளி (தளி- கோயில்) எனும் திருத்தலமே அது! 'நகரேஷ§ காஞ்சி’ என்கிற புகழ்மிக்க பதியில், ஐந்து தேவாரத் திருத்தலங்கள் உள்ளன; ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயில், கச்சி அநேங்கதங்காவதம், கச்சி மேற்றளி, கச்சி நெறிக் காரைக்காடு ஆகிய நான்கோடு ஓணகாந்தன் தளியும் ஒன்றாகும். காஞ்சி- அரக்கோணம் பாதையில், சர்வ தீர்த்தம் கடந்ததும், பஞ்சுப்பேட்டை எனும் இடம் உள்ளது. பஞ்சுப்பேட்டை துணை மின் நிலையத்துக்குச் செல்ல, பேருந்துச் சாலையில் இருந்து சிறிய பாதை பிரிகிறது. அப்படியே சென்றால், துணை மின் நிலையத்துக்கு எதிரில், சற்றே ஒதுங்கினாற்போல் கோயில் அமைந்துள்ளது. சமீப காலத் திருப்பணிகள் நடந்து, புதிய வண்ணங்களுடன் காட்சி தருகிறது கோயில்.  
முகப்பில் சிறிய கோபுரம்; 3 நிலைகள்; சமீப காலங்களில் நிர்மாணிக்கப்பட்டது. கோயிலுக்கு எதிரில் குளம். தலத்தின் தீர்த்தம், இந்திர தீர்த்தம் எனப்படுகிறது. கோபுரம் பணிந்து உள்ளே புகுந்தால், பலிபீடம்; நந்தி. சற்றே தள்ளி, நமக்கு இடது பக்கமாக, மற்றொரு பலிபீடம்; நந்தி. இரண்டு சந்நிதிகள் இருப்பது தெரிகிறது. இரண்டை யும் சேர்த்தாற்போல் பிராகாரம்.
பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் தலவிருட்சமாக வில்வம். தெற்குப் பிராகாரத்தில், பக்கவாட்டிலிருந்து ஒரு வழி உள்ளே செல்கிறது. அப்பால், ஒரு சந்நிதியும் இருக்கிறது. தென்மேற்கு மூலையில் ஸ்ரீவிநாயகர் சந்நிதி.
இந்த விநாயகருக்கு 'வயிறுதாரி விநாயகர்’ என்று பெயர் (சுந்தரர் அப்படித்தானே பாடினார்! அதனால்தான் இந்தத் திருநாமம்). மேற்குத் திருச்சுற்றில், சிறிய நந்த வனம்; மரத்தடிகளில் நாகர்கள்; அங்கேயே, பசுக்க ளையும் கன்றுகளையும் பராமரிக்கின்றனர். வடமேற்கு மூலையில் ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத முருகன்; மயில்மீது சாய்ந்து நின்று, நான்கு கரங்களோடு, அபயமும் வரமும் தாங்கி, திருக்கோலம் காட்டுகிறார். வடக்குச் சுற்றில், ஸ்ரீபைரவர் சந்நிதி; கிழக்குச் சுற்றுள் திரும்பும் இடத்தில், நவக்கிரகங்கள்; கிழக்குச் சுற்றிலேயே, சூரியன்.
கோயில் விசாலமாகவும் இல்லை; விசேஷ சந்நிதிகளைக் கொண்டும் இல்லை; ஆனாலும், ஏதோவொரு சாந்தம் குடிகொண்டிருக்கிறது, இந்தக் கோயிலில். தெரியாமலா, சுந்தரர் வந்து பொன் பெற்றார்!
நந்தி மண்டபத்தை அடைகிறோம். கோபுர முகப்புக்கு நேரே இருக்கும் சந்நிதிக்கு முதலில் செல்வோம். முகப்பு மண்டபத்துடன் இருக்கும் இது, ஸ்ரீஓணேஸ்வரர் சந்நிதி. ஓணன், காந்தன் ஆகிய இருவரும் வழிபட்டதால், இங்கே, இரண்டு சிவனார்கள்; ஒருவர் ஓணேஸ்வரர்; மற்றவர், காந்தேஸ்வரர். முகப்பு மண்டபத்தில், சைவ நால்வர். அர்த்த மண்டபம் கடந்து, மூலவர் கருவறை; வட்ட வடிவ ஆவுடையாருடன்  காட்சி தருகிறார், மூலவர் பக்கத்தில் (அதாவது, வடக்குப் புறமாக) இருக்கும் சந்நிதிக்கும் சிறிதான முன்மண்ட பம் உள்ளது; பழங்காலத் தூண்கள் தெரிகின்றன. தனியான பலி பீடமும் நந்தியும் உள்ளன. ஆனாலும், முன்னதைவிட இந்தச் சந்நிதி சற்றே அளவில் சிறியது. மூலவர் ஸ்ரீகாந்தேஸ்வரர், வட்ட வடிவ ஆவுடையார் கொண்ட லிங்கத் திருமேனி. இரண்டு சந்நிதிகளுக்கும் அழகிய கருவறை விமானங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஸ்ரீஓணேஸ்வரர் சந்நிதியின் கோஷ்ட மூர்த்தங்களாக ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். வடக்குச் சுற்றில், தனி மண்டபத்தில் ஸ்ரீசண்டேஸ்வரர்.
ஸ்ரீஓணேஸ்வரர், ஸ்ரீகாந்தேஸ்வரர் என்று இரண்டு சிவலிங்கத் திருமேனிகள்; ஆனாலும், இந்த ஸ்வாமியை ஒரேயருவராகச் சேர்த்துப் பாடுவதே வழக்கம். சுந்தரரும் சரி, ராமலிங்க வள்ளலாரும் சரி, அப்படித்தான் பாடியுள்ளனர். தொடக்கத்தில் ஆரம்பித்த பரிகாசத்தை, நிறைவு வரை சுந்தரர் விடவேயில்லை.
வாரிருங்குழல் வாள் நெடுங்கண் மலைமகள் மதுவிம்மு கொன்றைத்தாரிருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்யவைத்த காரிரும் பொழில் கச்சி மூதூர்க் காமக் கோட்டம் உண்டாக நீர்போய் ஊரிடும் பிச்சை கொள்வதென்னே ஓணகாந்தன் தளியுளீரே!
கரிய கூந்தலும், மை தீட்டிய கருவிழிகளும் கொண்ட அம்பிகை, கொன்றை மாலையணிந்த உம்முடைய மார்பைவிட்டு எப்போதும் அகலாள். அந்த அன்னை, அறச்சாலைகள் வைத்து, முப்பத்திரண்டு அறங்களையும் நாள்தோறும் வளர்க்கும் தலம் இந்தக் கச்சிமூதூர்; அப்படியிருக்க, நீர் மட்டும் ஊரூராகச் சென்று பிச்சை கொள்வது என்ன? 'அம்பிகை உமக்கு மட்டும் ஏதும் இடாமல் விட்டு விட்டாளா, நீர் மட்டும் பிச்சை சுமந்து அலைகிறீரே?’ என்று சுந்தரர் வினவும் நயத்தைச் சுவைத்தபடியே வலம் வருகிறோம். பக்கவாட்டில் ஒரு வழி வருகிறது; அங்கே ஒரு சந்நிதி என்று முன்பே பார்த்தோமே, அங்கே செல்கிறோம்.
ஓணகாந்தன்தளியின் வடக்குப் புறத்தில், அதையட்டினாற் போலவே, இன்னொரு சந்நிதி. இதற்கு வருவதற்குத் தனியாக வாசலும் உள்ளது. இங்கேயும் பலி பீடம்; நந்தி. சிறிய முன்மண்டபம். துவார விநாயகரும் துவார சுப்ர மணியரும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர். சிறிய பிராகாரம். தென் மேற்கு மூலை கணபதியும் வடமேற்கு சண்முகரும் தனிச் சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். மூலவர், ஸ்ரீசலந்தரேஸ்வரர். சலந்தரன் வழிபட்ட சிவலிங்கம்; இது சுந்தரர் காலத்துக்குப் பிறகு நிகழ்ந்த பிரதிஷ்டை; தனி மண்டபத்தில் ஸ்ரீசண்டேஸ்வரர்.
மீண்டுமொரு முறை மூன்று சந்நிதிகளையும் வலம் சுற்றி வழிபட்டுவிட்டு, வெளியில் வருகிறோம். பக்கத்திலுள்ள மரங் களெல்லாம் கண்களில் படுகின்றன. 'ஏதாவதொரு மரத்தில் சிவனார் அமர்ந்திருப்பாரோ, அருகில் சென் றால் கனிகளை உதிர்த்துப் பொன் மழை பொழிவாரோ’ என்று நம்மை அறியாமல் நாடுகிறோம்.        
செடியும் கொடியுமாகிக் கோலம் காட்டும் அந்தப் பரம்பொருள், தம்மையே பொன்னாகவும், தம்மருளையே பொருளாகவும் தருகிற விந்தையை வியந்தபடியே இந்தக் கோயிலிலிருந்து விடை பெறுகிறோம்!

No comments:

Post a Comment