Wednesday, 16 August 2017

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்




தித்திக்கும் தீபாவளித் திருநாளில், ஸ்ரீகங்காதேவியைத் தரிசிப்பதும், கங்கை நதியில் நீராடுவதும் அதிக புண்ணியங்களைத் தரும் என்பது ஐதீகம். அதேபோல், தீபாவளி நாளில் நாம் எந்த நீரில் நீராடினாலும், 'இந்த நீரானது கங்கையைப் போல் புனிதத்தைப் பெறட்டும்' என்று பிரார்த்தித்து நீராடுவது வழக்கம்!
சரி... கங்காதேவியை தரிசிக்க வேண்டும் எனில்?!
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீவிஸ்வேஸ்வர ஸ்வாமி திருக்கோயில். சமீபத்தில் சக்தி விகடனும் நயஹாவும் இணைந்து, இந்தக் கோயிலில்தான் திருவிளக்கு பூஜையைச் சிறப்புற நடத்தின.
அந்தக் காலத்தில் ஒருநாள்... ஸ்ரீவிஸ்வேஸ்வரா கோயிலில், பொங்கி வந்ததாம் ஊற்று நீர். இதனை, கங்கை நீராகவேபோற்றி, கிணறு அமைத்து, ஸ்வாமிக்கு அபிஷேக நீராகவும் தீர்த்தமாகவும் பயன்படுத்தத் துவங்கியதாம், கோயில் நிர்வாகம்! இதனை, கங்கா கிணறு என்றே சொல்லிப் பூரிக்கின்றனர், திருப்பூர் மக்கள். இந்தக் கங்கா கிணற்றுக்கு அருகில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீகங்காதேவி.
ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீவிஸ்வேஸ்வரர்; அம்பாள் - ஸ்ரீவிசாலாட்சி. எனவே, இது காசிக்கு நிகரான தலம் எனப் போற்றப்படுகிறது. இங்கு வந்து பிரார்த்தித்தால், பித்ருக்கள் தோஷம் நீங்கும்; முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
இன்னொரு சிறப்பு... ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சந்நிதிக்கும் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் சந்நிதிக்கும் நடுவே, ஸ்ரீமுருகப்பெருமான் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார். சோமாஸ்கந்த அமைப்பில் உள்ள இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கினால், இல்லறம் இனிதே சிறக்கும்; பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்கின்றனர், பக்தர்கள்.
ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வேஸ்வரரையும் ஸ்ரீகங்காதேவியையும் தரிசிக்கும் பக்தர்களின் சிரசில் கிணற்றுத் தீர்த்தத்தைப் பிரசாதமாகத் தெளிக்கின் றனர், அர்ச்சகர்கள். இந்த கிணற்று நீர், தலையில் பட்டால், நம் பாவமெல்லாம் பறந்தோடிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
வைகாசி விசாக நன்னாளில், தேரோட்டம் நடைபெறும். அப்போது சிவனாரும், அருகில் உள்ள ஆலயத்தில் இருந்தபடி அருளாட்சி செய்யும் ஸ்ரீவீர ராகவப் பெருமாளும் ஒன்றாக தேரில் வீதியுலா வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும்!
மார்கழி திருவாதிரை நாளில், சுமங்கலிப் பெண்கள் இங்கு வந்து, ஸ்வாமி தரிசனம் செய்து, புது மஞ்சள் சரடு அணிவது, திருப்பூர் மாவட்ட பக்தர்களின் வழக்கமாம்!
தீபாவளித் திருநாளன்று, இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீவிசாலாட்சி அம்பாளையும் ஸ்ரீவிஸ்வேஸ்வரரையும் மனதாரத் தரிசித்துவிட்டு, அப்படியே ஸ்ரீகங்காதேவியை கண் குளிர வணங்கி, சிரசில் கங்காதீர்த்தப் பிரசாதத் தைத் தெளித்து வந்தால், பாவங்கள் தொலையும்; புண்ணியம் பெருகும்!

No comments:

Post a Comment