'பையனுக்கு ஒரு கால்கட்டு போட்டுட்டா, எல்லாம் சரியாயிடும்'... 'பொண்ணைக் கரையேத்திட்டா, எங்களுக்கு வேற எந்தக் கவலையும் இல்ல!' - மகனுக்கோ மகளுக்கோ திருமணத்தை நடத்தி வைப்பதுதான், பெரும்பாலான பெற்றோர்களின் ஏக்கமும் பிரார்த்தனையும்! அவர்களின் ஏக்கத் தைப் போக்கி, பிரார்த்தனையை நிறைவேற்றித்தரும் தலமே, திருப்பைஞ்ஞீலி.
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகேயுள்ளது திருப்பைஞ்ஞீலி. இங்கேயுள்ள இறைவனின் திருநாமம்- ஸ்ரீஞீலிவனநாதர். பைஞ்ஞீலி என்றால் வாழை; வாழைத்தோப்புகளுக்கு நடுவே வீற்றிருப்பதால், ஊரின் பெயரும் இறைவனின் திருநாமமும் இப்படியானது என்கிறது ஸ்தல புராணம்.
திருமணம் முடிந்ததும், வம்சம் தழைக்கவேண்டும் என்பதை, 'வாழையடி வாழை'போல் வளரவேண்டும் என்றுதானே வாழ்த்துகிறோம்! அப்படி வளருகிற திருமணம் எனும் உறவை, கல்யாண வரத்தை தந்தருள்கிறாள் ஸ்ரீநீள்நெடுங்கண் நாயகி. அவளுக்கு, கல்(யாண)வாழைகளாக ஸப்த கன்னியர் இருந்து, நிழல் தருவதாக ஐதீகம்!
கல்யாணம், குழந்தைகள், அவர்களை வளர்த்து ஆளாக்குவது, பெரியவர்களானதும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்துப் பேரன்- பேத்தியை அள்ளியெடுத்துக் கொஞ்சுவது... இதெல்லாம்தானே முழுமையான வாழ்க்கைக்கு அர்த்தம்! அதற்குத் தேவை, தேக ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் அல்லவா? அவற்றைக் குறைவின்றி அருளும் தலம் இதுவே! மரணம் என்கிற எம பயத்தில் தவித்து மருகாதவர்கள் எவரேனும் உண்டோ? மரண பயத்தைப் போக்குவதுடன், இழந்த பதவியையும் சேர்த்து அருள்கிறார் எமதருமன்! ஆம்... இந்தத் திருத்தலத்தில் எமனுக்குத் தனிச் சந்நிதி அமைந்துள்ளது.
ஒருமுறை, எமனின் பதவியை சிவன் பறித்துவிட்டதால், உலகில் மரணம் என்பதே இல்லாது போக, உயிர்கள் பெருகுவது மட்டும் தொடர்ந்துகொண்டு இருந்ததாம். இதனால், ஒரு கட்டத்தில் பாரம் தாங்காமல் தவித்தாளாம் பூமாதேவி. இதுகுறித்து தேவர்கள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானிடம் முறையிட, சிவனாரும் பறித்த பதவியை எமனுக்குத் தந்து அருளினாராம்! அதுமட்டுமின்றி, 'இந்தத் தலத்துக்கு வருவோருக்கு உன்னைப் பற்றிய பயம் விலக வேண்டும்; அவர்களின் ஆயுளை நீட்டிக்கச் செய்வாயாக!' என்று சிவனார் சொல்ல... அதன்படி இந்தத் தலத்துக்கு வரும் பக்தர்களுக்கு, ஆரோக் கியமும் நீண்ட ஆயுளும் தந்தருள்கிறார் எமதருமன். இங்கு, ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் செய்து வழிபடுவது சிறப்பு.
எமன் குடிகொண்டு அருளும் தலம் என்பதால், இங்கு நவக்கிரகங்களுக்கு சந்நிதி இல்லை. மாறாக, இங்கு வந்து ஸ்ரீஞீலிவனநாதரையும் ஸ்ரீநீள்நெடுங் கண்நாயகியையும் எமதருமனையும் வணங்கி வழிபட்டால், கிரக தோஷங்கள் விலகும்; திருமண பாக்கியம் கைகூடும்; குடும்பத்தினர் சந்தோஷமும் குதூகலமுமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வர் என்பது ஐதீகம்.
தீபாவளிப் பண்டிகையின்போது, சிறப்பு அபிஷேக- ஆராதனையில் பங்கேற்று, எமனுக்கு எள் தீபமேற்றி, எள் சாதம் நைவேத்தியம் செய்து வழிபடுவது விசேஷம். உமையவளுக்கு சிவனார் தனது உடலில் இடப் பாகத்தைத் தந்ததை நினைவுபடுத்தும் விதமாக, தீபாவளியன்று காலை, சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அதில் கலந்துகொண்டு, ஸ்வாமி மற்றும் அம்பாளை வணங்கினால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர்; புத்திர, திருமண, செவ்வாய் முதலான சகல தோஷங்களும் விலகும்!
|
No comments:
Post a Comment