அடி காண முடியாத பாதாள சனீஸ்வரர்! |
இவற்றில் இந்த இதழ் ‘ஆலயம் தேடுவோம்’ பகுதியில் நாம் பார்க்க இருக்கும் திருத்தலம், அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீசோழீஸ்வரர் ஆலயம். பழைமையின் சாயங்களைத் தன் மேல் பூசிக் கொண்டிருந்தாலும், கோயிலின் அமைதியும் அழகும் நம்மைக் கவர்ந்திழுப்ப தென்னவோ நிஜம்! கம்பீரமான ராஜ கோபுரம். விஸ்தாரமான பிராகாரங்கள். வியக்க வைக்கும் கட்டுமானம்!
கோயிலுக்குக் கும்பாபிஷேகம் ஆகி, சுமார் 60 வருடங்களுக்கு மேல் இருக்குமாம். அதே நேரம் விக்கிரகங்களின் பிடிமானத்துக்காக சார்த்தப்பட்டிருக்கும் அஷ்டபந்தன மருந்து ஒரு கட்டத்தில் மிகவும் இற்றுப் போய் விட்டதால், சுமார் 25 வருடங்களுக்கு முன் ‘மருந்து சாற்றும் விழா’வை மட்டும், அவசரம் மற்றும் அவசியம் கருதி எளிமையாக நடத்தி இருக்கிறார்கள்.
‘கூடிய விரைவில் கும்பாபிஷேகத்தை எப்படியாவது நடத்தி விடலாம்’ என்று திருப்பணி வேலைகளை 2001-ஆம் ஆண்டில் பாலாலயத்தோடு துவங்கினார்கள். ஆனால், பொருள் தேவை காரணமாகத் திருப்பணி வேலைகள் அவ்வப்போது சுணக்கம் அடைந்தது. இருந்தாலும், பணிகள் அறவே நின்று விடாமல், தொடர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம் அந்த சோழீஸ்வரரின் அருள் என்றே சொல்ல வேண்டும். இன்னும் ஆறு மாதங்களுக்குள் கும்பாபிஷேகத்தை நடத்தி விடலாம் என்று திருப்பணிக் குழுவினர் திட்டமிட்டிருக்கிறார்கள். பாலாலயம் செய்ததால், 2001-க்குப் பிறகில் இருந்தே உற்சவங்களும் ஸ்வாமி புறப்பாடும் நின்று விட்டன. பக்தர்கள் வருகையும் சற்றுக் குறைந்துள்ளது.
ஏராளமான புராணக் கதைகள்... கணிசமான வரலாற்றுச் சான்றுகள்... குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவுக்கு விக்கிரகங்களின் சிறப்புகள்... இவை அனைத்தும் சேர்ந்ததுதான் குத்தாலம் அருள்மிகு சோழீஸ்வரர் ஆலயம்! விக்கிரம சோழ மன்னன், இந்த ஆலயத்துக்கு ஏராளமான திருப்பணிகள் செய்ததால் அவனுடைய பெயரைக் கொண்டே ஈஸ்வரர், ‘சோழீஸ்வரர்’ என அழைக்கப்பட்டார். அதற்கு முன் வரை அக்னீஸ்வரர் எனவும், திருத்தலத்துக்கு அக்னீசம் என்றும் பெயர் இருந்து வந்தது. அக்னி பகவான் இந்தத் தலத்து இறைவனை வழிபட்டு பேறுகள் பெற்றுள்ளார்.
அக்னி பகவான் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்ட கதையைப் பார்ப்போமா? இந்தக் கதை ‘திருத்துருத்தி புராண’த்தில் ‘அக்னிலிங்கப் படல’த்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்த இடம் குத்தாலத்துக்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி. இந்திரன் போன்ற தேவர்களுக்குத் தன் திருமணக் கோலத்தை இறைவன் காட்டி அருளியது- குத்தாலத்தில் உள்ள சொன்னவாறு அறிவார் திருத்தலத்தில். இங்குள்ள இறைவியின் பெயர் அரும்பன்ன வனமுலையாள். இறைவனையும் இறைவியையும் திருமணக் கோலத்தில் தரிசித்து, திகட்டாத இன்னருள் பெற வேண்டி தேவர்களும் முனிவர்களும் பல திக்குகளில் இருந்தும் வந்து குவிந்தார்கள். இறைவனின் திருமணத்தைக் கண்டு தரிசித்த கையோடு, திரும்பும் வழியில் ஆங்காங்கே தங்கள் பெயருடன் ஒரு லிங்கத்தையும் ஸ்தாபித்துச் சில நாட்கள் வழிபட்டுள்ளனர்.
இது போல் இறைவனின் திருமணத்தை தரிசிக்க வந்தவர்தான் அக்னி பகவான். அதன் பின் குத்தாலம் தலத்துக்குள் காலடி எடுத்து வைத்தார். கயிலைநாதனையும், அவரது கரம் பற்றிய தேவியையும் தரிசித்து, சில காலம் அங்கேயே தங்கி வந்தார்.
தனது இந்தக் கோரிக்கையை சொன்னவாறு அறிவாரிடமே வைத்து, மிகுந்த சிரத்தையுடன் தவம் இருந்து அவரை வழிபட்டார். நறுமணம் வீசும் மலர்களைப் பறித்து மாலைகள் தொடுத்து, நலம் பயக்கும் ஈசனை வணங்கினார். நல் உணவு சமைத்து தம்பதி சமேதராக விளங்கும் ஈசனுக்கு சமர்ப்பித்து மகிழ்ந்தார். இறைவன் தனக்கு அருளும் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
தூய பக்தியுடன் வழிபடும் எவரையும் அரவணைத்து அருள்பவர் அல்லவா அந்த ஆதிசிவன்? அக்னியின் வழிபாட்டில் நெகிழ்ந்தார். ஒரு நாள் அவருக்குக் காட்சி கொடுத்தார். மகிழ்ந்தார் அக்னி பகவான். தன்னை நினைத்துப் பிரார்த்தனை செய்யக் காரணம் என்ன என்று வினவினார் மகேசன். அக்னி பகவானும் மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் பழிச் சொல் குறித்து பலவாறும் விளக்கிச் சொன்னார்.
நெருப்புக்கு அதிபதியான அக்னி பகவான் மனம் குளிர்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு, ஈசன் சொன்ன இடத்தை அடைந்தார். விக்கிரகம் வடிப்பதில் தேர்ந்த தேவலோகச் சிற்பிகளை வரவழைத்து இறைவனுக்கும் இறைவிக்கும் விக்கிரகம் வடித்தார். பரிவார தேவதைகளையும் அமைத்தார். திருக்கோயிலுக்கு எதிரே திருக்குளம் வெட்டி, அதில் கங்கை, காவிரி முதலான புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு வந்து நிரப்பினார். ஆகம முறைப்படி வழிபாடுகளைத் துவக்கினார். சித்திரைத் திருநாள் முதல் அனைத்து உற்சவங்களையும் ஆரம்பித்து வைத்தார்.
அப்பனும் அம்மையும் அகம் மகிழ்ந்தனர். அக்னி தேவன் தங்களை அனுதினமும் ஆராதிப்பது கண்டு அவன் முன் மீண்டும் தோன்றி அருள, இறைவன் திருவுளம் பூண்டார். ஒரு தினத்தில் அக்னி பகவான், ஈசனை மனமார வழிபட்டுக் கொண்டிருக்கும்போது லிங்கத் திருமேனியில் இருந்து வெளிப்பட்டார் ஈசன். ‘‘அக்னி தேவா... உனது அயராத இறை பக்தியில் மகிழ்ந்தோம். எம் சொல்லுக்கு இணங்கி, இங்கு வந்து கோயில் எழுப்பிய உனது பக்தி கண்டு பெருமிதம் கொண்டோம். கேள், என்ன வேண்டும்?’’ என்றார்.
அக்னி பகவான் மண்டியிட்டு நின்றார். ‘‘இறைவா... உனது அன்பே எனக்கு என்றென்றும் வேண்டும். இந்தப் புனிதக் குளத்தில் மூழ்கி வழிபடும் பக்தர்களது துயரைத் தாங்கள் போக்க வேண்டும். அவர்களது பாவங்களை விலக்க வேண்டும். உனது பொருட்களைத் திருடுபவரது குலம் நாசம் அடைந்து, அவர்கள் நரகத்தில் உழல வேண்டும்’’ என்றவர் கடைசியாக, தனது தனிப்பட்ட வேண்டுகோளையும் வைத்தார். ‘‘மகேசா... என்னால் தீண்டப்பட்ட பொருட்களை நான் சுடுகின்ற காரணத்தால் சில சந்தர்ப்பங்களில் என்னை பாவம் சூழ்கிறது. அதில் இருந்து எனக்கு விலக்கு அளித்து, என்னை தூயவனாக அறிவிக்க வேண்டும்’’ என்றார்.
‘‘அனைத்து வரங்களையும் இக்கணமே நிறைவேற்று கிறோம்’’ என்று அக்னிக்கு அருளிவிட்டு, லிங்கத் திருமேனியில் புகுந்தார் இறைவன். அக்னி பகவான் ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தார். அன்று முதல் இந்தத் தலம் ‘அக்னீஸ்வரம்’ என்றும், இறைவன் ‘அக்னீஸ்வரர்’ என்றும், அவர் வெட்டிய திருக்குளம் ‘அக்னிக் குளம்’ எனவும் வழங்கப்படலாயிற்று. இதில் குளம் தற்போது தூர்ந்து போய் குட்டையாகக் காட்சி அளிக்கிறது. எவரும் பயன்படுத்த முடியாத அளவில் இருக்கிறது. எனினும், ஆலயத்தில் உள்ள கிணற்றின் தீர்த்தத்தையே அக்னிக் குளத்தின் தீர்த்தமாகக் கருதி அபிஷேகத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள்.
கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த ஜய்தா பல்லவராயர் என்ற அரசு அதிகாரியால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயிலுக்கு வேண்டுவன எல்லாவற்றையும் செய்திருக்கிறார்கள் சோழ மன்னர்கள். அதுபோல் இந்த இறைவனும் அவர்களுக்கு அருளையும் ஆசியையும் வழங்கி உள்ளதை அறிய முடிகிறது. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம். விக்கிரம சோழனின் மனைவியாகிய கோமளை, வெண்குஷ்ட நோயால் பெரும் அவதிப்பட்டு வந்தாள். தன் மனைவியுடன் இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வந்து, நோய் அகல பிரார்த்தித்து வந்தான் விக்கிரம சோழன்.
பிரார்த்தனையும் பலித்தது. ஒரு சுப தினத்தில் கோமளையின் உடலில் இருந்த வெண்குஷ்ட நோய் முற்றிலும் அகன்று புதுப் பொலிவுடன் ஆனாள். சோழர்கள் குடும்பமே பெரிதும் மகிழ்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக, இந்த ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டான் விக்கிரம சோழன். ஆலய வழிபாடு தங்கு தடை இல்லாமல் நடைபெறுவதற்காக வெவ்வேறு ஊர்களில் விளை நிலங்களை எழுதி வைத்தான். இத்தகைய விளைநிலங்கள் உள்ள ஊர் ‘விக்கிரமன் குத்தாலம்’ என இன்றைக்கும் வழங்கப்படுகிறது. இவனுடைய காலத்தில்தான் இந்தப் பகுதி ‘சோழீசம்’ என ஆனது. இறைவனும் ‘சோழீஸ்வரர்’ ஆனார்.
ஆலய தரிசனம் செய்வோமா?
கிழக்குத் திசை நோக்கி, ஐந்து நிலைகள் கொண்ட ராஜ கோபுரம். இதுதான் பிரதான வாயில். தெற்குத் திசையில் கும்பகோணம்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையை ஒட்டியே ஒரு நுழைவாயிலும் உள்ளது. தற்போது இங்கே வளைவு அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. ராஜகோபுரம் அமைந்துள்ள கிழக்கு வாயிலின் வழியே உள்ளே செல்கிறோம். கொடிமரம் இல்லை. பலிபீடம். பிரதோஷ நந்தி. ஸித்தி விநாயகர். இதை அடுத்து பெரிய மண்டபம். சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிக்குப் பொதுவான மண்டபம் இது. வலப் பக்கம் ஸ்ரீசௌந்தரநாயகி. நேரே ஸ்ரீசோழீஸ்வரர் சந்நிதி.
முதலில், உள் பிராகார வலம் வருவோம். சிவன் சந்நிதிக்கு அருகில், கிழக்குப் பார்த்த நிலையில் ஸ்ரீபரிமள சுகந்த நாயகி. இந்த ஆலயத்தில் இரண்டு அம்மன் சந்நிதிகள். ஒன்று- பிரதான அம்பாளாகிய சௌந்தரநாயகி. மற்றொரு அம்மன்- பரிமள சுகந்தநாயகி. இறைவனை மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்காக இந்த அன்னைதான் பரத மகரிஷி நடத்திய யாக குண்டத்தில் இருந்து தோன்றி, திருமணஞ்சேரியில் இறைவனின் திருக்கரம் பற்றினார். நான்கு திருக்கரங்களுடன் சுமார் நான்கடி உயரத்தில் அருள் புரிகிறார் இந்த மண நாயகி.
பிராகார முடிவில் ஸ்ரீநடராஜர் மற்றும் உற்சவர் மண்டபங்கள். பாதுகாப்பு கருதி இங்குள்ள உற்சவர் விக்கிரகங்கள், வேறோர் ஆலயத்தில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன. அருகே ஸ்ரீபைரவர், ஸ்ரீசந்திரர், ஸ்ரீசூரியன், ஸ்ரீபாதாள சனீஸ்வரர் ஆகியோரின் திருமேனிகள்.
இங்கு அமைந்திருக்கும் பாதாள சனி பகவான், சிறப்பு வாய்ந்தவர். சுயம்பு மூர்த்தியாக பாதாளத்தில் இருந்து வந்தவர் இந்த சனி பகவான் என்று கருதப்படுகிறது. சுமார் 20 வருடங்களுக்கு முன் இந்த சனியின் பீடம் சற்று சேதப்பட்டிருந்ததால், அதைப் பெயர்த்தெடுத்து மாற்ற முற்பட்டிருக்கிறார்கள். எனவே, சனி பகவானின் விக்கிரகத்தை அகற்றுவதற்காக, பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள். ஆனால், அடிப் பகுதி தெரியவே இல்லை. பள்ளம் தோண்டிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். சுமார் 15 அடி வரை தோண்டியும் பீடத்தின் அடிப் பகுதியைக் காண முடியாததால், இந்தப் பணியை அப்படியே விட்டு விட்டார்கள்.
அடி காண முடியா அந்த அற்புத சனீஸ்வரரின் முன் நின்று கொண்டிருக்கிறோம். சனியின் நிலைகளில் ஒன்று, பாதாள சனீஸ்வரர். அதாவது, பாதாளத்தில் இருந்து புறப்பட்டு வந்தவர்.
இந்த ஆலயத்தில் ஏராளமான சித்தர்களும் ரிஷிகளும் ஆதி காலத்தில் தவம் செய்து வந்துள்ளனர். அத்தகைய ஆன்றோர் பெருமக்களை வரவேற்கும் விதமாகத் தன் கைகளைக் கூப்பிய நிலையில் காட்சி தருகிறார் சனி பகவான். இது போன்ற வடிவத்தைத் தரிசிப்பது அபூர்வம் என்கிறார் அர்ச்சகர். திருநள்ளாறு தலம் சென்று திருக்குளத்தில் மூழ்கி, சனி பகவானை வழிபட்ட நளனுக்கு, அங்கு செல்லுமாறு வழி சொன்னவர் இந்த பாதாள சனீஸ்வரர் என்கிறார்கள். ‘‘சனி பகவான் பீடித்திருந்த ஏழரை ஆண்டு காலம் முடிந்தும், நளனை விட்டு சனி அகலவில்லை. அவனுக்குத் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன. எனவே, எந்தத் திருத்தலத்தில் தனது துயரங்கள் அனைத்தும் நீங்குமோ என்கிற தவிப்புடன் ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள சனி பகவானை வணங்கிக் கொண்டே வந்தான். அப்போது அவன் குத்தாலத்தில் உள்ள இந்த சோழீஸ்வரர் ஆலயத்துக்கும் வந்து பாதாள சனீஸ்வரரை வணங்கினான். ‘உனது கஷ்டங்கள் எல்லாம் விலகும். திருநள்ளாறு திருத்தலம் சென்று அங்குள்ள சனியை வணங்கு. அவர் உனக்கு நலம் தருவார்’ என்று அருளினார். அதன் பின், இங்கிருந்து புறப்பட்டுச் சென்று திருநள்ளாற்றில் விமோசனம் பெற்றான் நளன்’’ என்று புராணத் தகவலைச் சொன்னார் உள்ளூர் ஆன்மிக அன்பர் ஒருவர்.
பிரதான அம்பாளாகிய ஸ்ரீசௌந்தரநாயகி, தென்திசை நோக்கித் தனிச் சந்நிதியில் அருள் பாலித்து வருகிறார். நின்ற கோலம்; அழகு வடிவம். ஒரு காலத்தில் பொன் நகைகளைப் பூட்டி தரிசனம் தந்த இந்த அன்னை இன்று மணியால் ஆன ஆபரணங்களையும் கிரீடத்தையும் தரித்துக் காணப்படுகிறாள். உள்ளூர் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இவ்வளவு அழகான அம்மன், தங்க ஆபரணங்கள் இல்லாமல் இருப்பதைப் பார்த்து, அவர்களே மணியாலான ஆபரணங்களை வடிவமைத்துத் தந்திருக்கிறார்களாம்.
‘‘திருமணத்துக்காக அம்பாள் இங்கு அவதரித்ததால் திருமணப் பேறு மற்றும் புத்திர பாக்கியத்துக்கு இந்த ஆலயத்தில் பிரார்த்தித்துக் கொள்ளலாம்!’’ என்கிறார் அர்ச்சகர். வெளிப் பிராகாரம் விஸ்தாரமானது. நந்தவனமும், ஸ்தல விருட்சமான வில்வமும் இங்கு காணப்படுகிறது.
உற்சவங்களும் நல்ல முறையில் இங்கு நடந்துள்ளன. வைகாசி பிரம்மோற்சவம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை கடைசி ஞாயிறில் தீர்த்தவாரி, மாசி மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் உள்ளிட்ட பல விழாக்கள் சோழீஸ்வரர் ஆலயத்தில் கோலாகலம். கார்த்திகை கடைசி ஞாயிறு அன்று குத்தாலத்தில் உள்ள ஐந்து சிவாலயத்தில் இருந்து உற்சவர்கள் மேள தாளத்துடன் புறப்பட்டு, சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள காவிரி ஆற்றுக்குப் போய் தீர்த்தம் கொடுத்து விட்டு வரும் காட்சி, பார்க்க பரவசமாக இருக்கும் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகள், மாசி மகம், வைகாசி பௌர்ணமி ஆகிய தினங்களில் ஸ்ரீசோழீஸ்வரரை வழிபட்டால், பாவங்கள் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.
தனது அருளாட்சியை உலகெங்கும் வழங்கி வரும் ஸ்ரீசோழீஸ்வரர் ஆலயத் திருப்பணிகள் விரைவில் பூரணமாக நடந்தேறி, குடமுழுக்கு காண உள்ளூர்க்காரர்கள் பெரிதும் விழைகிறார்கள். அதில், நாமும் கலந்து கொண்டு அருள் பெறுவோம்; ஆனந்தம் அடைவோம்.
|
No comments:
Post a Comment