Saturday, 5 August 2017

ஸ்ரீபுரந்தரீஸ்வரர் திருக்கோயில், மருதாடு

மூலவராகக் குடிகொண்டிருக்கும் சிவலிங்கத் திருமேனியை, சாளரத்தின் வழியே நந்திதேவர் தரிசிக்கும் ஆலயங்கள் வெகு குறைவு. அப்படியான அமைப்பில் உள்ள ஆலயங்கள், சக்தியும் சாந்நித்தியமும் கொண்டவை; அங்கே பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டால், எல்லா நலனும் அமையப் பெறலாம் என்பது நம்பிக்கை!
திருவண்ணாமலை மாவட்டத் தில் உள்ளது மருதாடு திருத்தலம். இங்கேயுள்ள ஸ்ரீபுரந்தரீஸ்வரர் ஆலயத்தின் அமைப்பு, சாளரம் வழியே நந்திதேவர் மூலவரைப் பார்க்கும்படி அமைந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் வழியில், சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மருதாடு. பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது ஸ்ரீபுரந்தரீஸ்வரர் திருக்கோயில்!
புரந்தரன் என்றால் இந்திரன். தேவர் களின் தலைவனான இந்திரன், பூலோகத் துக்கு வந்து சிவலிங்க பூஜை செய்து, கடும் தவம் இருந்து பலன் பெற்ற தலங்கள் பல உண்டு. மருதாடு ஆலயத்திலும் சிவனாரை வேண்டி தவம் இருந்து, வரங்கள் பலவற்றைப் பெற்றதால், இந்தத் தலத்தின் இறைவனுக்கு ஸ்ரீபுரந்தரீஸ்வரர் என்று திருநாமம். அம்பாளின் திருநாமம் - ஸ்ரீஇந்திரப்பிரசாதவல்லி.
இந்தத் திருநாமத்துக்குக் காரணம் உண்டு.
பூலோகத்துக்கு வந்த இந்திரன், வனங்கள் சூழ்ந்த பகுதிகளில், சிவ-பார்வதியை நோக்கிக் கடும் தவம் இருந்தான். ஆனாலும், அவனது தவத்துக்குப் பலன் கிடைக்கவில்லை. அப்போது இந்திரனை சந்தித்த அகத்தியர், ''மருதவனத்தில் தவம் செய். சிவனருள் மட்டுமின்றி உமையவளின் பேரருளும் கிடைக்கப் பெறுவாய்!'' என்று சொல்லி, இந்திரனை மருதவனத்துக்கு அழைத்து வந்தார்.
அங்கேயுள்ள ஆற்றில் தினமும் நீராடுவதும், தவம் செய்வதுமாகவே நாட்கள் ஓடின. அம்மையப்பனாக விளங்கும் சிவ-பார்வதியில் சிவனைவிட அம்மை யானவள் அன்பும் கருணையும் அதிகம் கொண்டவள் அல்லவா?! உண்ணாமல் உறங்காமல் சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைத்துக் கண்ணீர் மல்கத் தவம் செய்யும் இந்திரனின் மீது பரிவு கொண்டாள்; பாசத்துடன் அவனுக்கு திருக் காட்சி தந்தாள். அதுமட்டுமா? இந்திரனுக்கும் அகத்தியருக்கும் குங்குமம் மற்றும் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கினாள். இந்திரனுக்குப் பிரசாதம் கொடுத்தருளியதால், உமையவளுக்கு ஸ்ரீஇந்திரப்பிரசாதவல்லி என்று திருநாமம்!
ஆடி மாதம் அம்பிகையின் மாதம்; தை மாத வெள்ளிக்கிழமையும் தேவிக்கு உகந்த இனிய நாள்; நவராத்திரியின்போது வருகிற வெள்ளிக்கிழமையும் மிகவும் சிறப்புக்கு உரிய தினம். ஆகவே, ஆடி மாதத்தின் ஐந்து வெள்ளிக்கிழமைகள், தை மாதத்தின் ஐந்து வெள்ளிக்கிழமைகள் மற்றும் நவ ராத்திரியின் ஒரு வெள்ளிக்கிழமை ஆகிய 11 வெள்ளிக்கிழமைகளில், இந்திரனுக்குக் காட்சி தந்து, தீர்த்தப் பிரசாதம் அருளி னாள் அம்பிகை என்பர்! இன்றைக்கும், இந்த நாட்களில் அம்பிகையே வந்து அனைவருக்கும் பிரசாதம் தருகிறாள் என்பது நம்பிக்கை.
வயலும் வயல் சார்ந்த இடமுமாகத் திகழ்ந்ததால், மருத நாடு எனும் பெயர் பெற்றது. முதலாம் ராஜேந்திரன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் இந்த ஊர், மருதாடான விக்கிரம சோழநல்லூர் எனப்பட்டு, பிறகு விக்கிரமச் சோழபுரம் என்றானது. முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில், இந்த ஆலயம் பெருந் திருக்கோயில் என்று அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது கல்வெட்டு. அப்போது இறைவனின் திருநாமம் - ஸ்ரீபெருந் திருக்கோயில் உடைய உடையார். அடுத்தடுத்து ஆட்சி மாற்றங்கள் நிகழ... ஸ்ரீபுரந்தரீஸ்வரர் எனும் திருநாமம் அமையப் பெற்றதாம்.
மேற்குப் பார்த்தபடி, மூன்று நிலை ராஜ கோபுரத்துடன் அழகுறத் திகழ்கிறது ஆலயம். உள்ளே, கிழக்குப் பார்த்தபடி காட்சி தருகிறார் ஸ்ரீபுரந்தரீஸ்வரர். இவரை சாளரத்தின் வழியே தரிசித்தபடி இருக்கிறார் நந்திதேவர். தெற்கு நோக்கிய சந்நிதியில், தாயுள்ளத்துடன், அருளும் பொருளும் அள்ளித் தந்து அனைவரை யும் காத்தருளும் ஸ்ரீஇந்திரப்பிரசாதவல்லியின் அற்புதத் தரிசனம்; அழகும் கனிவும் கொண்டு அம்பிகை காட்சி தரும் அழகே அழகு!
கோயிலின் இன்னொரு சிறப்பு... இந்தக் கோயிலில் வில்வமரம், வன்னிமரம் என இரண்டு தலவிருட்சங்கள் அமைந்துள்ளன. வன்னி மரத்தடியில், நான்கு தலைகளுடன் திகழும் நாகேந்திரனை வணங்கினால், நாக தோஷம் விலகும்; திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ராஜராஜசோழ மன்னன், இந்த ஆலயத்தில் தடையின்றி விளக்கெரிய நிவந்தங்கள் அளித்திருக்கிறார். அவரது நெருக்கத் துக்கும் நம்பிக்கைக்கும் உரியவனான செண்பகராகிய உத்தம நீலி ராஜ ராஜ அணுக்கப் பல்லவரையன் என்பவன், கோயிலுக்கு 70 ஆடுகள் வழங்கி யுள்ளான். அதுமட்டுமா?! அன்றில் எனும் பறவைகள் அதிகம் இளைப்பாறும் ஏரி ஒன்று; இதனை 'அன்றில் ஏரி' என்றே அழைத்தனர். இந்த ஏரியையும் கோயிலுக்குத் தானம் அளித்ததாக அறிவிக்கும் கல் வெட்டுகள் உண்டு. இந்த ஏரியை, தற்போது 'அண்டல் ஏரி' என்பர்.
புராண- சரித்திரப் பெருமைகள் கொண்ட இந்தக்கோயில், இன்றைக்கும் இங்கு வருவோரின் குறைகளைப் போக்கும் தலமாக விளங்குகிறது.
சோமவாரம் (திங்கட்கிழமை), சுக் கிரவாரம் (வெள்ளிக்கிழமை) ஆகிய தினங்களில், அம்பாள் பிராகார வலம் வருவதைக் காணக் கண்கோடி வேண்டும் (இதற்கென இரண்டு உற் ஸவ மூர்த்தங்கள் உள்ளன). அப்போது அம்பிகையைக் கண்ணாரத் தரிசித்துப் பிரார்த்திக்க, கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் அமைவர்; குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவராம். அதேபோல், மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று, அம்பிகை யின் இரண்டு மூர்த்தங்களும் பிராகார வலம் வருவதைத் தரிசிப்பதும் புண் ணியம்; சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப் பெறுவர்!
இங்கே, நவக்கிரக சந்நிதிக்கு அரு கிலேயே சூரியனும் காட்சி தருகிறார். இவரை வணங்கினால், தினமும் 108 முறை சூரிய நமஸ்காரம் செய்த பலன் கிடைக்குமாம். இங்கே, ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் சந்நிதியும் உள்ளது. தேய்பிறை அஷ்டமியில், இவருக்கு அபிஷேகம் செய்து, மிளகு தீபம் ஏற்றி, தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பிரார்த்திக்க, தைரியம் பிறக்கும்; எதிரிகளின் தொல்லை அகலும்; நினைத்தது நிறைவேறும் எனச் சிலாகிக்கின்றனர் பக்தர்கள்.
மருதாடு திருத்தலத்துக்கு வாருங்கள்; மனதில் நிம்மதியும் சந்தோஷமும் பெற்றுச் செல்லுங்கள்!

No comments:

Post a Comment