Saturday, 5 August 2017

ஜடாயு வழிபட்ட திரிநேத்திரநாதர் !


திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் திருப்பள்ளி முக்கூடல் என்னும் திருத்தலத்தில் அருளாட்சி புரிகிறார் ஸ்ரீ அஞ்சனாட்சி சமேத  ஸ்ரீ திருநேத்திரநாதர். திருப்பள்ளிமுக்கூடல் தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகா சிவராத்திரி தினத்தில், சூரியக் கதிர்கள் சிவனின் திருமேனியில் விழுவது சிலிர்ப்பூட்டும் காட்சி! 
தேவாரப் பாடல் பெற்ற, காவிரியின் தென்கரை யில் அமைந்திருக்கும் தலங்களில் இது 83வது தலம். இத்திருத்தலத்தைப் பற்றி அப்பர் சுவாமிகள்...
'அடைந்தார்தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம் கடிந்தானைக் கார்முகில் போல் கண்டத்தானைக் கடுஞ் சினத்தோன் தன்னுடலை நேமியாலே தடிந்தானைத் தன்னொப்பார் இல்லாதானைத் தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில் படிந்தானைப் பள்ளியின் முக்கூடலானைப் பயிலாதே பாழேநான் உழன்றவாறே!’ என்று சிறப்பித்துப் பாடி இருக்கிறார்.
ராமர் தன் தந்தை தசரதருக்கு இந்தத் தலத்தில் தர்ப்பணம் செய்ததால், இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை அன்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்கின்றனர்.
இந்தக் கோயிலில், 'முக்கூடல் தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ள தீர்த்தக் குளம் மிகவும் புனிதம் வாய்ந்தது. இந்தக் குளத்துக்குள் 16 தீர்த்தக் கிணறுகள் இருப்பதாக ஐதீகம். இந்தக் குளத்தில் நீராடினால் மகாமக தீர்த்தத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது தொன்றுதொட்டு நிலவி வரும் நம்பிக்கை. தொடர்ந்து, 12 அமாவாசை தினங்கள் இந்தத் தலத்துக்கு வந்து, இங்குள்ள தீர்த்தக் குளத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால், திருமணத் தடைகள் விலகி நல்ல மணவாழ்க்கை அமைவதாகவும், புத்திர தோஷம் நீங்கி குழந்தைப் பேறு கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.
தபோவதினி என்ற பெயருடைய ஓர் அரசி தனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டி, இந்தத் தலத்துக்கு வந்து அம்பிகையை வழிபட்டதால், அம்பிகையே தாமரை மலரில் அழகிய பெண் குழந்தையாகத் தோன்றியதாகவும், பின்னர் சிவனார் வேதியராக வந்து மணம் செய்து கொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.
முக்கூடல் தீர்த்தம் உருவான கதை!
ராமாயண காலம். இந்தப் பகுதியில் இருந்த ஜடாயு ஒரே நேரத்தில் காசி, ராமேஸ்வரம் ஆகிய இரண்டு தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடி, இறைவனை தரிசித்து முக்தி அடையவேண்டும் என்று சிவபெருமானை தியானித்து தவம் இயற்றினார்.
சிவபெருமான் ஜடாயுவுக்கு தரிசனம் தந்து, 'வேண்டும் வரம் என்ன?’ என்று கேட்டார். ஜடாயு தன்னுடைய விருப்பத்தைக் கூற, 'உனது விருப்பம் விரைவில் நிறைவேறும்.
ராவணன் சீதையை பலவந்தமாகத் தூக்கிச் செல்லும்போது, நீ அவனைத் தடுப்பாய். அதனால் சினம் கொண்ட ராவணன் உன்னுடைய சிறகுகளை வெட்டிவிடுவான். நீ வேதனையால் துடித்துக் கொண்டிருக்கும்போது ராமபிரான் உன்னிடத்தில் வருவார். நீ அவரிடம் ராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற பாதையைத் தெரிவிப்பாய்.  அதைக் கேட்டு ராமபிரான் மகிழ்ச்சி அடைவார். நீ அவரது பாதத்தில் விழுந்து முக்தி பெறுவாய்'' என்று அருளினார் சிவபெருமான்.
தான் ஒன்றைக் கேட்டால் இறைவன் வேறு ஒன்று சொல்கிறாரே என்று எண்ணிய ஜடாயு, 'இறைவா, நான் காசி மற்றும் ராமேஸ்வரம் தீர்த்தத்தில் நீராடி, அத்தலங்களில் வழிபட்டு முக்தி பெறவேண்டும் என்று வரம் கேட்டேன். ஆனால், தாங்களோ ராவணன் என் சிறகுகளை வெட்டுவான் என்றும், நான் ராமரின் பாதங்களில் விழுந்து முக்தி பெறுவேன் என்றும் சொல்கிறீர்களே! ராமரின் திருவடிகளில் விழுந்து முக்தி பெறுவது கிடைத்தற்கரிய புண்ணியமாகும். ஆனாலும், நான் விரும்பிய வண்ணம் இரண்டு தலங்களிலும் நீராடி புண்ணியம் பெறும் பேற்றினையும் தாங்கள் எனக்கு அருளவேண்டும்'' என்று பிரார்த்தித்தார்.
''ஜடாயு, நீ காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் போகவேண்டாம். பிருங்கி மகரிஷியின் காலத்தில், விநாயகப் பெருமானால் ஏற்படுத்தப் பட்ட இந்தத் தலத்தின் தீர்த்தத்தில் நீராடினாலே போதும்... ராமேஸ்வரத்தில் நீராடிய புண்ணிய மும், திரிவேணி சங்கமத்தில் நீராடிய புண்ணிய மும் பெறுவாய்'' என்று அருள்புரிந்து மறைந் தார் சிவனார். அதன்படி, ஜடாயு இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி பெரும்பேறு பெற்றார். இந்தக் குளமானது திரிவேணி சங்கமத்துக்கு இணையானது என்பதால், இதற்கு திருமுக்கூடல் தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.
மாதம்தோறும் வரும் அமாவாசைகளிலும், ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை போன்ற நாள்களிலும் இந்தத் திருத்தலத்துக்கு வந்து முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதுடன், இறைவன் திரிநேத்திர நாதரையும் அம்பிகை அஞ்சனாட்சியையும் வழிபட்டு வந்தால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமையப் பெறலாம்.

No comments:

Post a Comment