Tuesday, 8 August 2017

நாகப்பட்டினம

ளமையான நுளம்பாடி (மீனவர்கள் வாழும் பகுதி) அது. நுளையர் தலைவர், சிறந்த சிவபக்தர். படகுகள் பல இயக்கி, நுளையர்கள் பல திசைகளுக்கும் செல்வார்கள்; மீன் கொண்டு வருவார்கள்; மீன் தொழிலின் செழிப்பால், நுளம்பாடியே செழித்தது.
நுளையர் தலைவருக்கு ஒரு வழக்கம் உண்டு. வலை வீசிப் பிடித்து வரும் மீன்களிலேயே எது தலை மீனோ, (அளவிலும் செழிப்பிலும் பெரியதான மீன்) அதனை 'நட்டம் ஆடிய நம்பருக்கு’ என்று சொல்லிக்கொண்டே மீண்டும் கடலில் விட்டுவிடுவார். அந்தத் தலை மீன், நடராஜரான சிவபெருமானுக்கு என்பது கணக்கு.
வாகுசேர் வலைநாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும்
ஏக நாயகர் தம் கழற்கு எனவிடும் இயல்பால்
ஆகும் நாள்களில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே
மேக நீர் படி வேலையின் பட விட்டு வந்தார்
சில நாட்களில், வலையில் ஒரேயரு மீன் மட்டுமே கிட்டும். அப்போதும், அதனை இறைவருக்கு என்று விட்டு விடுவார். இவ்வாறு தொடர்ந்து நடைபெற, வருமானம் குறைய, நுளம்பாடியின் செல்வமும் செழிப்பும் குன்றின. நுளையர் தலைவரும் அவர்தம் மனைவியும் பிள்ளைகளும் உணவின்றிப் பல நாள் கழிக்க நேர்ந்தது. இருப்பினும், இறைவர்பால் அவர்கொண்ட அன்பு கிஞ்சித்தும் தளரவில்லை. இத்தகு நிலையில், ஒரு நாள் வலையில் கிட்டியது அற்புத மீன் ஒன்று.
ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத் 
தூ நிறப் பசுங்கனக நல்சுடர் நவமணியால் 
மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலை ஆம் 
பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார்
உடலெல்லாம் ஆடகப் பொன்னால் ஆக்கப்பட்டிருக்க, நவரத்தினங்கள் பதித்தாற்போல் பொலிவு தோன்ற, அற்புத மீனாக அது காட்சியளித்தது. பல நாட்களாகப் பரிதவித்துக் கொண்டிருந்த நுளையரெல்லாம் வந்து, 'மீன் ஒன்று கிடைத்தது’ என்று தலைவரிடம் தெரிவித்தனர். அவரும் வந்து பார்த்தார்.
ஒன்றும் மற்று இது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் 
சென்று பொன்கழல் சேர்க எனத் திரையடும் திரிந்தார்
'அடடா, இந்த அழகு மீன் என்னை ஆளுடைய நாயகராம் இறைவனார்க்கு ஆகும்!’ என்று, கிடைத்தற்கரிய அந்த ஒற்றை மீனையும் கடலில் விட்டார்.

துன்பத்தில் வாட நேர்ந்தாலும் கொண்ட கொள்கையை விடாது, இறைத்தொண்டையும் விடாது செய்த அந்த நுளையர் தலைவர்- அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார். அதிபத்தர் அவதரித்து வாழ்ந்த திருத்தலம்- திருநாகைக் காரோணம்!
மன்னி நீடிய செங்கதிரோன் வழி மரபின் 
தொன்மை ஆம் முதல் சோழர்தம் திருக்குலத்து உரிமைப் 
பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர்போல் 
நன்மை சான்றது நாகப்பட்டினத் திருநகரம்
அங்கம், அருணம், கலிங்கம், கௌசிகம், காம்போஜம், கொங்கணம், கோசலம், சாவகம், சிங்களம், சிந்து, சீனம், சோனகம், திராவிடம், துளுவம், பப்பரம், மகதம், மராடம், வங்கம் ஆகிய 18 நீடுபுகழ் நிலங்களின் வளமையையும் ஒன்றாகப் பிரதிபலிக்கும் சிறப்புடன் இந்தத் திருநகரம் திகழ்ந்ததாம். நாகப்பட்டினம் என்று இப்போது நாம் அழைக்கும் இந்தத் தலத்தின் இலக்கிய- ஆன்மிகப் பெயர், நாகைக் காரோணம். நாகை நகர்நாடிப் புறப்படுவோமா?
கடற்கரை நகரமான நாகப்பட்டினம், சோழர்களின் தலைநகரமாகத் திகழ்ந்த பதி. வெளிநாட்டவரோடு சோழ மன்னர்கள் கடல் வணிகம் செய்த துறைமுகப் பட்டினம்.
நாகர் இன மக்கள் நிரம்ப வாழ்ந்ததால், இப்பெயர் பெற்றது என்றும், நாகராஜன் வழிபட்டதால் நாக பட்டினம் ஆனது என்றும் இருவிதமாகக் கூறப்படுகிறது.
நகரின் நடுநாயகமாக விளங்குகிறது திருக்கோயில். ஊர் பெயர் நாகப்பட்டினம்; கோயில் பெயர் காரோணம். காரோணத்தார் கோயில் அல்லது சிவன் கோயில் என்று விசாரிப்பதைவிட, நீலாயதாக்ஷி திருக்கோயில் என்று கேட்பது நலம். காஞ்சி காமாக்ஷி, மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி எனும் வரிசையில், நாகை நீலாயதாக்ஷியும் வெகு விசேஷம்! நவீனத்தின் செல்வாக்கை அம்மன் பெயரிலும் காணமுடிகிறது. நீலாயதாக்ஷி என்னும் திரு நாமம் 'நீலா’ என்று சுருக்கமுற்று, நீலா கீழவீதி, நீலா சந்நிதி என்றே பெயர்கள் வழங்கப்படுகின்றன. வழி கேட்கும்போது, 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் வெகு உரிமையாக 'ஓ, நீலா கோயிலா?’ என்று கேட்டு, வழி சொன்னார். எந்தப் பெயர் சொன்னாலும், தாய்க்கு அது சம்மதம்தானே!
நிறைபுனல் அணிந்த சென்னி நீள்நிலா அரவம்சூடி 
மறையலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் 
கறைமலி கடல்சூழ் நாகைக் காரோணம் கோயில்கொண்ட 
இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பமாமே
- என்று அப்பர் பெருமான் பணிந்து போற்றிய காரோணத்தார் கோயிலின் கிழக்கு வாசலில் நிற்கிறோம். முகப்பு வாயில் மட்டுமே இருக்கிறது; கோபுரம் இல்லை. கோயிலைப் பார்த்து நிற்க, நமக்கு இடது பக்கத்தில் சற்றே தள்ளி இன்னொரு வாயிலும் உள்ளது. 'நீலா சந்நிதி’ என்று  எழுதி, அம்புக்குறியும் போட்டிருக்கிறது. ஆனால், அந்த வழியும், இப்போது நாம் நுழையும் வழியும் கோயிலின் விசாலமான உள்ளிடத்துக்கு தான் போய்ச் சேருகின்றன.
உள்ளே நுழைந்ததும், நாகாபரண விநாயகர் சந்நிதி. நாகராஜன் வணங்கிய தலமாதலால், நாகாபரண விநாயகர் விசேஷமானவர். அடுத்து பலிபீடம்; பெரிய நந்தியும் நந்தி மண்டபமும். சுதை நந்தி. வலப் பக்கத்தில் நிர்வாக அதிகாரியின் அறை; இடப் பக்கத்தில் கோயில் அலுவலகம்; அருகில், பக்கவாட்டு வாயில். அடுத்தாற்போல, புண்டரீக முனிவர் சந்நிதி. இந்தத் தலத்தின் சிறப்புப் பெருமை பெற்றவர் இவர்தாம். இவராலேயே, இங்கெழுந்தருளிய சுவாமிக்குக் 'காயாரோகணேஸ்வரர்’ என்று திருநாமம் ஏற்பட்டதாம்! அதென்ன வரலாறு?
புண்டரீகர் என்றொரு முனிவர் தவம் இயற்றினார். அவருடைய யாகத்தைத் தடுத்து, அதன் அவிர்பாகத்தை அக்னிதேவன் ஏற்க முடியாதவாறு அரக்கர்கள் இடையூறு செய்தனர். ஆனால், தமது பக்தியால், அரக்கர்களை திசை மாறச் செய்து யாகத்தை நிறைவேற்றினார் புண்டரீகர். பக்தியிலும் தர்மத்திலும் சிறந்த அவரை, மனித உடலோடு சேர்த்து ஏற்றுக்கொண்டார் சிவனார். காயத்தோடு ஆரோகணித்துக்கொண்டார் என்பதால், காய ஆரோகணேஸ்வரர்; அதுவே காலப்போக்கில் காரோணேஸ் வரர் ஆகிவிட்டது. காயாரோகணம் என்பது காரோணம் ஆனது. புண்டரீக முனிவரின் அன்பை எண்ணியபடியே, உள் வாயிலை அடைகிறோம். இதுவே ஐந்து நிலை கோபுரம் கொண்ட ராஜவாயில். கோபுரத்தை வணங்கியபடி நின்றால், நமக்கு வலப்பக்கத்தில் மற்றொரு வாயில். இதுவே அம்மன் சந்நிதிக்குச் செல்லும். அம்மன் சந்நிதி வடக்குப் பகுதியில் இருக்க, வெளியில் தெற்குப் பக்கத் துணை வாசலில் (நாம் பார்த்த அம்புக்குறி வாசல்) ஏன் நீலா சந்நிதி என்று அம்புக்குறி போட்டார்கள் என்று வியந்தபடியே உள்ளே நுழைகிறோம்.
நேர் எதிரே பெரிய மண்டபம்; சுவாமி சந்நிதி, அம்மன் சந்நிதி இரண்டுக்கும் சேர்ந்தாற்போல் முகப்பில், சற்றே நீண்ட முன்விரிவோடு உள்ளது. இதற்கு 'ராஜதானி மண்டபம்’ என்று பெயர். இறை வன் அருளால் பக்தர்களை ஆள, பக்தர்கள் தமது அன்பால் இறைவனை ஆள, சிவனாரின் அருளாட்சி நடை பெறும் இடமல்லவா..! இந்தத் தலத்துக்கே சிவராஜதானி என்றொரு பெயருண்டு. இந்த மண்டபத்தில், அழகான நெடிதுயர்ந்த கொடிமரம், பலிபீடம், நந்தி. இந்த மண்டபம் இருப் பதே வெளிப் பிராகாரமும் ஆகும். வலம் தொடங்குவோமா?
வலம் தொடங்குகிற இடத்தில், கிழக்குச் சுற்றிலேயே அதிபத்தர் சந்நிதி. தென் கிழக்கு மூலையில், முன்னர் யாக சாலை இருந்த இடமும் மண்டபமும். அடுத்தது ஆஞ்சநேயர் சந்நிதி. விசாலமான பிராகாரத்தில் நடந்து தென்மேற்கு மூலையை அடைந்தால், ஸ்ரீவல்லப கணபதி சந்நிதி. உடனுறை பத்ரகாளி. மேற்குச் சுற்றில் சந்நிதிகள் ஏதுமில்லை; கோயிலின் மேற்கு வாயில் மட்டும் உண்டு.
வடமேற்கு மூலையில், அகோர வீரபத்திரர். வடக்குச் சுற்றில் நடந்து, வடகிழக்குப் பகுதியில் ராஜதானி மண்ட பத்துக்குள் நுழைகிறோம். பிராகாரத்தின் வட கிழக்குப் பகுதியில், ராஜதானி மண்டபத்தின் அங்கமாகவே அம்மன் சந்நிதி அமைந்துள்ளது. அம்மன் சந்நிதிக்கு அப்பால், வடகிழக்கு மூலையில் அழுகுணிச் சித்தர் சந்நிதி. அம்மன் சந்நிதியைச் சுற்றி, ஆங்காங்கே வாகனங்கள். அப்படியே சுற்றி வந்து, சுவாமி சந்நிதி முகப்பை அடை கிறோம். உள்ளே நுழைவதற்கு முன்னால், இந்த வாயிலில் உள்ள விநாயகரையும் சுப்ரமணியரையும் வழிபடுகிறோம். உள்புகும் வழியில், ஒருபுறம் விநாயகர்; மற்றொரு புறம் அதிகார நந்தி. தொடர்ந்து உள்புகுந்தால், உள் பிராகாரம். பிராகார வலத்தைத் தொடங்குகிறோம்.
உமா சகிதமாகச் சிவனார், சூரியன் என்று தரிசித்துவிட்டு, தெற்குச் சுற்றில் நடந்தால் அறுபத்து மூவர்- மூலச் சிலா ரூபங்கள்; தொடர்ந்து, நால்வர் பெருமக்கள்.
அடுத்து அஸ்திரதேவர். பல்வேறு வகை யான ஆயுதங்களையும் இவர் மீது ஆரோகணித்து, அவற்றின் அதிபதியாக இவரை வணங்குவது முறை. தென்மேற்கு மூலையில் மாவடிப் பிள்ளையார். இவரே, இந்தத் தலத்தின் விநாயகர்.
நாகைக்காரோணத் தின் தலமரம் மா; ஆகவே, அதன் அடியில் எழுந்தருளிய விநாயகர் மாவடிப் பிள்ளையார். இப்போது இந்த இடத்தில் தல மரம் இல்லை. விநாயகரைத் தொடர்ந்து வரிசையாகக் கார்முகீஸ்வரர், பஞ்சலிங்கங்களைத் தரிசிக்கலாம். அடுத்து, வள்ளி- தெய்வானை உடனாய சுப்ரமணியர்; மயில்மீது சாய்ந்து நின்ற கோலத்தில் அருள்கிறார். இவரை அருணகிரிநாதர் பாடிப் பரவுகிறார்.
வாலை துர்க்கை சத்தியம்பி லோககத்தர் பித்தர்பங்கில் 
மாது பெற்றெடுத்து உகந்த சிறியோனே 
வாரிபொட்டு எழ கிரவுஞ்சம் வீழ நெட்டயிற்றுரந்த 
வாகை பொற்புய பிரசண்ட மயில்வீரா 
ஞால வட்ட முற்றவுண்டு நாகமெத்தையில் துயின்ற 
நாரணற்கு அருள்சுரந்த மருகோனே 
நாலு திக்கும் வெற்றிகொண்ட சூரபத்மனைக் களைந்த 
நாகபட்டினத் தமர்ந்த பெருமாளே
அருணகிரியாரின் அற்புதத் திருப்புகழ் நாயகரான ஆறுமுகரை வணங்குகிறோம். இவர், நின்றகோல முருகர்; ராஜதானி மண்டபத்தில் மயில்மீதமர்ந்த பெருமான் இருக்கிறார். எனவே அவரைத்தான், 'நாகப்பட்டினத்தமர்ந்த பெருமானே’ என்று திருப்புகழ் குறிப்பிடுகிறது என்கிறார்கள். அதனாலென்ன? 'வாகை பொற்புய பிரசண்ட மயில்வீரா’ என்றழைத்துக்கொண்டே அடுத்த சந்நிதி நோக்கி நகர்கிறோம்.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீவிஸ்வநாதர், ஸ்ரீபைரவர் என்று தொடர்ந்து, வடமேற்கு மூலையில் ஸ்ரீமகாலட்சுமி சந்நிதி. வடக்குச் சுற்றில் வாகனங்கள் வைக்கப்பட்டுள் ளன. நவக்கிரகங்களின் சந்நிதியை அடைகிறோம். சனி பகவான் தனிச் சந்நிதியும் கொண்டுள்ளார். தசரதச் சக்ரவர்த்தி சனியால் பீடிக்கப்பட்டு, அந்த தோஷம் நிவர்த்தியாவதற்காக, நாகைக்கு வந்து நீராடி, சிவனாரை வழிபட்டு, சூரியனுடைய பரிபூரண அருளையும் சனியின் நன்மைகளையும் பெற்றதாக வரலாறு. அதை நினைவுகூறும் வகையில், இங்கே சனிக்குத் தனிப் பிரதிஷ்டை. அடுத்துள்ள நவக்கிரகச் சந்நிதியில், கோள்கள் ஒன்பது பேரும் ஒரே திசை நோக்கியவாறு (சுவாமியை நோக்கியவாறு) எழுந்தருளியுள்ளனர். நடராஜ சபை தொழுது, பைரவரையும் வணங்கி, வலத்தை நிறைவு செய்கிறோம்.

ருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருச்சந்நிதி. படிகளில் ஏறித்தான் செல்லவேண்டும். மூலவர் சந்நிதிக்கு அருகில் (தெற்குப் புறமாக) தியாகராஜர் சந்நிதியும் உண்டு. சப்தவிடங்கத் தலங்களில் நாகையும் ஒன்று. இங்கு எழுந்தருளியுள்ள தியாகேசர், அருள்மிகு சுந்தரவிடங்கர். இவரின் நடனம் பாராவாரதரங்க நடனம்; அலை போன்ற ஆட்டம்!
படிகளில், சற்றே வலப்புறமாகச் சென்று, மீண்டும் உள்நோக்கித் திரும்பினால், சுவாமி கருவறை. மகாமண்டபத்தில் வலப் பக்கத்தில் நடராஜர் காட்சி கொடுக்கிறார். அர்த்தமண்டபம் தாண்டி உள்நுழைய... அருள்மிகு காயாரோகணேஸ்வரர். பெரிய பாணம்!
ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருள்நல்கிச் 
சேணின்றவர்க்கு இன்னஞ் சிந்தை செய வல்லான் 
பேணி வழிபாடு பிரியா தெழுந் தொண்டர் 
காணுங்கடல் நாகைக் காரோணத்தானே...
- என ஞானசம்பந்தர் போற்றும் பெருமான் இவர். பக்தர்கள் வணங்கித் தொழுதால், எதையும் தரக்கூடியவர். என்ன ஆதாரம் என்கிறீர்களா? தேவார மூவருள் ஒருவரான சுந்தரரைக் கேட்டால், அத்தாட்சியும் ஆதாரமும் தருகிறார். வாருங்கள், அவரையே கேட்போம்!
திருவொற்றியூரில் பொய் சத்தியம் செய்து சங்கிலிநாச்சியாரை மணந்த சுந்தரர், சத்தியத்தை மீறி ஒற்றியூர் விட்டுப் புறப்பட்டார். கண் பார்வை போயிற்று. இறைவன் அருளால் கோல் பெற்றுத் தட்டுத் தடுமாறி காஞ்சியை அடைந்தார். ஒரு கண்ணில் பார்வை பெற்றார்.
பின்னர், திருவாரூர் அடைந்தார். அங்கு ஆரூர் தியாகேசன் அருளால் முழுமையாகக் கண்பார்வை பெற்றார். அங்கிருந்து புறப்பட்டு, நாகைக்காரோணம் சென்றார். இறைவனாரைக் கண்ணாரக் கண்டார். பாடினார்.
பத்தூர் புக்கு இரந்துண்டு பலபதிகம் பாடிப் 
பாவையரைக் கிறி பேசிப் படிறாடித் திரிவீர் 
செத்தார் எம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் 
செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கொரு நாள் இரங்கீர் 
முத்தாரம் இலங்கி மிளிர் மணிவயிரக் கோவை 
அவைபூணத் தந்தருளி மெய்க்கினதா நாறும் 
கத்தூரி கமழ்சாந்து பணித்தருளவேண்டும் 
கடல்நாகைக் காரோணம் மேவியிருந்தீரே
- என்று தொடங்கிக் கொல்லிக் கௌவாணப் பண்ணில் பதிகம் பாடினார். இதனைப் பாடிப் பொன்னும், நவமணியும், ஆபரணங்களும், பட்டும், உடைவாளும் குதிரையும் பெற்றார். எனவே, செல்வம் வேண்டுபவர்கள், இந்தத் திருத்தலத்தில், இந்தப் பதிகத்தைப் பாடிக் காயாரோகணேஸ்வரரை வணங்கினால், கட்டாயம் பயன் கிட்டும். இந்தப் பதிகத்தின் இறுதிப் பாடல்:
பண்மயத்த மொழிபரவை சங்கிலிக்கும் எனக்கும் 
பற்றாய் பெருமானே மற்றாரை உடையேன் 
உண்மயத்த உமக்கடியேன் குறைதீர்க்க வேண்டும் 
ஒளிமுத்தம் பூணாரம் ஒண்பட்டும் பூவும் 
கண்மயத்த கத்தூரி கமழ்சாந்தும் வேண்டும் 
கடல் நாகைக் காரோணம் மேவியிருந்தீர் என்று 
அன்மயத்தால் அணிநாவல் ஆரூரன் சொன்ன 
அருந்தமிழ்கள் இயல்வல்லார் அமர் உலகாள்பவரே
- தம்மைக் குறிப்பிட்டு, தம்முடைய நாச்சிமாரையும் குறிப்பிட்டு, மூவருக்கும் பற்றானவர் இறைவனாரே என்று கூறிவிட்டு, முதற்பாடலில் கேட்டவற்றையே மீண்டும் கேட்கிறார். எனவே, இதனை வெள்ளிப்பாடல் என்கிறார்கள். அதாவது, பாடலானது தங்கமாக இல்லாமல், கூறியதையே மீண்டும் கூறுவதால், வெள்ளியானதாம்!
அதுமட்டுமில்லை... வெள்ளிப்பாடல், வேறு யாராலோ பாடப்பட்டு, சுந்தரர் பெயரில் சேர்க்கப் பட்டுவிட்டது என்றும் சிலர் கருதுகின்றனர். இருக்கட்டுமே, பலன் பெற்றவர் யாரோ தன்னு டைய பங்காகச் சேர்த்துவிட்டார் போலும்! 'சுந்தரரைப் போன்று நன்மைகளைச் செய்ய நல்ல செல்வம் தாரும் ஐயனே’ என்று நாமும் வேண்டிக் கொள்ளலாம்.
ஸ்ரீகாயாரோகணேஸ்வரரை வழிபடுகிறோம். ஸ்வாமி சந்நிதியின் பின் மாடத்தில், சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னால், பார்வதி- பரமேஸ்வரர் திருக்கோலம், சிலா ரூபமாக, புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது.
தென்திசை நோக்கிச் சென்ற அகத்தியருக்கு, இறைவனார் திருமணக்கோலம் காட்டிய திருத் தலங்களுள் இதுவும் ஒன்று. மெள்ள அருகில் உள்ள தியாகேசர் சந்நிதியை அடைகிறோம்.
தேவலோகத்திலிருந்து முசுகுந்தச் சக்கரவர்த்தி பெற்றுவந்த ஏழு தியாகேசர்களில் இவரும் ஒருவர். பூலோகத்து உளிகளால் செதுக்கப் படாததாலேயே, இந்த எழுவரும் எழுந்தருளிய தலங்கள் சப்தவிடங்கத் தலங்கள் (டங்கம்- உளி; விடங்கம்- உளிக்கு அப்பாற்பட்டு) ஆகின்றன. தியாகேசர் என்றாலே அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதா. அதுவும், இவர் சுந்தர விடங்கர். கனகம்பீரமாக இருக்கிறார். தியாகராஜரின் ஆட்சிபீடம் என்பதாலேயே, இத்தலம் சிவராஜதானி ஆகிறது. தியாகராஜர் சந்நிதி இருக்கும் மண்டபத்தையும் ராஜதானி மண்டபம் என்று அழைப்பார்கள்.
தியாகராஜரை வழிபட்டுவிட்டு, மீண்டும் சுவாமி சந்நிதியை வலம் வருகிறோம். கோஷ்ட மாடங்களில் வழக்கமான இடங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை ஆகியோரின் திருமேனிகள். கூடுதலாக, துர்க்கையின் ஒருபுறத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்; இன்னொரு புறம்- ஸ்ரீபிட்சாடனர்.
ஆதிபுரம், ஆதீநகரம், பார்ப்பதீச்வரம், அகத்தீச்வரம், அரவநகரம் என்கிற பெயர்களையும் கொண்ட நாகையின் கல்விச் சிறப்பு, மிகவும் பிரபலமானது.
ஒருமுறை, காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தார். நல்ல பசி. அந்தக் காலத்திலும் சோற்றுக்கடைகள் உண்டு. புதிய ஊரில் அப்படிப்பட்ட கடை எங்கே என்று தெரியாத புலவர், வழியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைக் கண்டார்.
அந்தச் சிறுவர்களிடம் வழி கேட்கும் முயற்சியில், 'சோறு எங்கே விக்கும்?’ என்றார். அந்தச் சிறுவர்களோ, குறும்பின் மறு உருவங்கள்.  'தொண்டையில் விக்கும்’ என்று பரிகாசமாக விடை பகர்ந்தனர். புலவருக்கு ஒருபக்கம் வியப்பு; இன்னொரு பக்கம், கேலியால் வந்த ஆதங்கம்!
பெரியவரைக் கேலி செய்யும் சிறுவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் எண்ணத்துடன், அருகில் இருந்த சுவரில், பாடலொன்றை எழுதத் தீர்மானித்தார். முதல் வரியை எழுதினார். 'பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு...’ அதற்குள் பசியின் தீவிரம் அதிகமாகிவிட, எங்கேனும் போய்ப் பசியாறிவிட்டுப் பின்னர் வந்து அடுத்த வரி எழுதலாம் என்று அவர் எண்ணிச் செல்ல...
அவர் வருவதற்குள் அந்தச் சிறுவர்களே பாடலை நிறைவு செய்திருந்தனர்:
'நாக்குத் தமிழுரைக்கும் நன் நாகை’
இதைக் கண்டு மதிமயங்கி நின்றாராம் கவி காளமேகம். நாகைக் காத்தான் சத்திரம் பற்றியும் அவர் பாடுகிறார்.
பண்டைக்காலம் தொட்டே கல்வித் திருநகரமாக நாகை விளங்குவதற்குக் காரணம், அம்பிகை நீலாயதாக்ஷி.
இது அம்பாளின் சக்தி பீடங்களில் ஒன்று. அம்பிகை யின் தமிழ்த் திருநாமம் அருள்மிகு கருந்தடங்கண்ணி. நின்ற திருக்கோலம்; அபய வரம் காட்டும் திருக்கரங்கள் இரண்டு; மீதமுள்ள இரு கரங்களில் பாசம்- அங்குசம் தாங்கியிருக்கிறாள். அம்பாளின் புன்னகை அன்பைப் பொழிகிறது.
அம்பாள் சந்நிதியை வலம் வரும்போது, சற்றே முகப்பு நோக்கியதாக, அழுகணிச் சித்தர் சந்நிதி அமைந்துள்ளது. அம்மன் கருவறையைச் சுற்றிய இடங்களில் கோயில் வாகனங்கள். இந்த ஆலயத்தின் தீர்த்தங்களான புண்டரீக தீர்த்தமும், தேவ தீர்த்தமும் கோயிலின் தெற்கிலும் மேற்கிலும் உள்ளன.
அதிபத்த நாயனார் விழா ஆவணி மாதம் நடைபெறும். அவர் வாழ்ந்த பகுதி நம்பியாங்குப்பம் என்று வழங்கப்படுகிறது. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இந்தத் தலத்துக்கு இயற்றிய தல புராணத்தில்,
தடிகடல் புகுதல் போலச் சைவமாம் கடலில் புக்கு 
முடிவலை வீசல் போல முதிர் பக்தி வலையை வீசி 
நெடிய மீன் கவர்தல் போல நிராமய உமையோர் பாகத்து 
அடிகளாம் மீன் கவர்ந்த அதிபத்தர்க்கு அன்புசெய்வாம்
- என்று அதிபத்த நாயனாரைப் போற்றுகிறார். அடியாரை வணங்கினால் ஆண்டவனுக்கு மகிழ்ச்சியாம். அடியார் அருளும், ஆண்டவன் அருளும் கிடைக்கும் வகைக்குப் பிரார்த்தித்தவாறே வெளியே வருகிறோம்.

No comments:

Post a Comment