Tuesday, 8 August 2017

சிக்கல்

வெண்ணெய் உகந்த சிவபிரான் எழுந்தருளிய தலம்; சிவாலயத் தில், பெருமாளுக்கும் தனிச் சந்நிதி அமைந்துள்ள ஆலயம்; சப்தவிடங்கத் தலமாக இல்லையெனினும் மரகதவிடங்கராக ஸ்ரீதியாகேசர் காட்சி தரும் கோயில்; தாயைப் பணிகிற தனயனாக, முருகப்பெருமான் அருள்பாலிக்கிற க்ஷேத்திரம்; சோழ தேசத்துக்கே உண்டான கட்டுமலைக் கோயில் அமைந்த தலம்; கடல் நாகைக் காரோணத்தின் பஞ்சகுரோசப் பெரும்பதிகளில் ஒன்றான தலம்... என பெருமைகள் கொண்ட தலம் எங்கே இருக்கிறது, தெரியுமா?
'சிக்கலில் வேல் வாங்கிச் செந்தூரில் சம்ஹாரம்’ என்பார்கள் முன்னோர்கள். ஸ்ரீசிவன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீமுருகன், ஸ்ரீஅம்பாள் என கடவுளர் பலர்க்கும் உகப்பான சிக்கல் திருத்தலம் செல்வோம், வாருங்கள்!
திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில், நாகப்பட்டினத் துக்கு முன்னதாக (சுமார் 4 கி.மீ. முன்னதாகவே) உள்ளது சிக்கல். பேருந்து வசதிக்கு குறைவே இல்லாத திருத்தலம்.  
சிக்கல் சிங்காரவேலர் என்று இந்தத் தலத்து முருகக் கடவுள், பிரசித்தி பெற்றுள்ளார். எனவே, 'முருகன் கோயில்’ என்றே அனைவருக்கும் அடையாளம் தெரிகிறது. ஸ்காந்த புராணத்தின் தீர்த்த ஸம்ஹிதையில் உள்ள வசிஷ்டாஸ்ரம மகாத்மியத்தில் கூறியுள்ள தகவல்கள், இங்கேயுள்ள கல்வெட்டுகளில் பொறிக் கப்பட்டுள்ளன. 'வடக்கில் வாரணாசியைப் போல், தெற்கில் இங்கு தெய்வங்கள் அனைவரும் கூடுகின்றனர்; வாரணாசியில் இறந்தால் முக்தி; இங்கேயோ, சிவலிங்கத்தைக் கண்டாலே முக்தி’ என சிக்கல் தலம் குறித்த செய்திகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
ஏழு நிலை ராஜகோபுரம்; அருகில் மூன்று நிலையில் இன்னொரு கோபுரம். ஏழுநிலை கோபுரம் சிவாலயத்துக்கும், மூன்று நிலை கோபுரம் பெருமாள் கோயிலுக்கும் வழியாக அமைந்துள்ளன. உள்ளே நுழையும்போதே, மனதுள் கேள்வி வருகிறது... அதென்ன சிக்கல்? யாருக்குச் சிக்கல்?
வசிஷ்ட மாமுனிவர், இங்கு சிவனாரைப் பூஜித்து காமதேனுவைக் கிடைக்கப் பெற்றார். அதனிடமிருந்து பால் பொங்கிவர, அதில் இருந்து வெண்ணெயை எடுத்து, அந்த வெண்ணெய்யால் சிவலிங்கம் பிடித்து வழிபட்டாராம்!  பூஜை முடிந்ததும், வெண்ணெய் லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. பூமியில் வெண்ணெய் சிக்கிக் கொண்டதால், ஊருக்கு சிக்கல் எனப் பெயர் அமைந்தது!
கதையின் சுவாரஸ்யத்தை அசைபோட்டபடியே, உள்ளே நுழைந்ததும் கார்த்திகை மண்டபம், வசந்த மண்டபம் என்றெல்லாம் அழைக்கப்படுகிற அழகிய மண்டபத்தைக் காண்கிறோம். கார்த்திகைத் திருநாளில், சிங்காரவேலவர் இங்கு எழுந்தருளி அருள் பாலிப்பார். மண்டபத்தில் நிலைக்கண்ணாடியும் உள்ளது. ஆகவே சிங்காரவேலவரை முன்னும் பின்னும் பக்கவாட்டி லும் பார்த்துப் பார்த்து பரவசத்துடன் தரிசிக்கலாம்.
அடுத்து, வெளிப்பிராகாரத்தை அடைகிறோம். இதில் பெரும்பகுதி நந்தவனமாகவே உள்ளது. வடமேற்கில், ஸ்ரீஅனுமனுக்கு தனிச்சந்நிதியும் உண்டு. 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்த ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த கருமுத்து அழகப்பச் செட்டியார் அவர்களின் விருப்பப்படி, சமீபகாலங்களில் அமைத்த சந்நிதி இது! ஸ்ரீஅனுமனுக்கு அமுது கட்டி வழிபட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பர்.
வடக்குத் திருச்சுற்றில், பெருமாளுக்கான தனிக்கோயில். ஸ்ரீகோலவாமனப் பெருமாள் என்பது திருநாமம். மாவலியைச் சந்திக்க வாமனராக அவதரித்தபோது, சிவனாரின் அருளைப் பெறுவதற்காக இங்கே எழுந்தருளினாராம்! தலத்தில் உள்ள, கயாசரஸ் தீர்த்தத்தை எடுப்பித்து, அதில் அனுதினமும் நீராடி, திருநீறும் ருத்திராக்ஷமும் அணிந்து, சிவனாரைப் பணிந்து, மாவலியை அழிக்கும் ஆற்றலைப் பெற்றாராம்! ஆகவே, இவருக்கு கயா மாதவன் என்றும் கோலவாமனர் என்றும் திவ்விய நாமங்கள். தாயார் - ஸ்ரீகோமளவல்லித் தாயார்.  
ஆதியில், முசுகுந்தச் சக்கரவர்த்தி, இந்த ஆலயத்தைக் கட்டியதாகக் கூறுவர். இக்ஷ்வாகு குல மன்னனாக அயோத்தியில் ஆட்சி புரிந்த முசுகுந்தர், நேர்மையாளர். ஒருமுறை, இவருடைய குதிரைக் குளம்பு ஏற்படுத்திய காயத்தால் இறந்து போனார் ஒருவர். இதில் துடித்துப் போன முசுகுந்தர், தாம் செய்த பாவத்துக்குப் பரிகாரமாக, சிவத் தலங்களைத் தரிசிக்கப் புறப்பட்டார். பல தலங்களுக்குச் சென்றார்; பலனேதும் கிடைக்கவில்லை. குல குருவான வசிஷ்டரை நாடினார். வெண்ணெய் நாதரான சிவனாரின் மகிமையை ஏற்கெனவே உணர்ந்திருந்த வசிஷ்டர், சிக்கல் தலத்தில், பால் தீர்த்தத்தில் நீராடி, சிவனாரை வழிபடும்படி அறிவுறுத்த, அதன்படியே செய்தார்; தலத்துக்குச் சென்ற கணத்தில், பாவங்கள் அகலுவதை உணர்ந்த முசுகுந்தர், மரத்தடியில் எழுந்தருளியிருந்த வெண்ணெய்நாதருக்கு கோயில் எழுப்பி, பிராகாரங்கள் அமைத்து, விதானங்கள் செப்பனிட்டுத் திருப்பணிகள் செய்தார்.
அடுத்து, உள்வாயிலை அடைகிறோம். ஒருபுறம், ஸ்ரீவிநாயகர்; இன்னொரு புறத்தில் ஸ்ரீதண்டபாணி. உள்ளே நுழைந்தால், உள்பிராகாரம். இங்கேதான் கொடிமரம் உள்ளது. தெற்குச் சுற்றில், பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன வாகனங்கள்! சிங்காரவேலவரின் சிறப்பு வாகனங் களான மயில், ஆடு, குதிரை ஆகிய வாகனங்கள் தங்கத்தால் தகதகக் கின்றன. அடுத்து, ஸ்ரீவிநாயகர் மற்றும் அறுபத்து மூவர்.
மேற்குச் சுற்றில், ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீகார்த்திகை விநாயகர். அட... இப்படியரு விசேஷ திருநாமம், எதற்காம்? கந்தக் கடவுளை வளர்த்தவர்கள், கார்த்திகைப் பெண்கள், அல்லவா? அவர்கள், அதாவது கார்த்திகைப் பெண்கள், 'கந்தனை சரியான முறையில் வளர்க்க எங்களுக்கு உதவுங்கள்’ என விநாயகரை வழிபட்டார்களாம். அதனால், கார்த்திகை விநாயகர் எனத் திருநாமம் அமைந்ததாம்! இவர்களை அடுத்து, ஸ்ரீஆறுமுகருக்கான தனிக்கோயில்; மயிலேறியாக அவர் காட்சி தரும் அழகே அழகு! சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட சந்நிதி. வடமேற்கு மூலையில், ஸ்ரீகஜலட்சுமி சந்நிதி. வடக்குச் சுற்றில், ஸ்ரீபைரவர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள்.
வலத்தை நிறைவு செய்து கொடிமரத்தை அடைகிறோம். இங்கேயுள்ளது முன்மண்டபம்; நமக்கு வலப்பக்கத்தில் அம்பாள் சந்நிதி மற்றும் பள்ளியறை உள்ளன. எதிரில் படிகள்; இந்தப் படிகளில் (பன்னிரண்டு படிகள்) ஏறிய பிறகு, மூலவரின் சந்நிதியை அடையவேண்டும். இதனைக் கட்டுமலை என்பார்கள். கட்டுமலை சந்நிதிகளை தேவகோட்டம் என்றும் சொல்வார்கள். படிகளுக்கு அருகில் ஸ்ரீசுந்தரகணபதி காட்சி தருகிறார். அவரை வணங்கிவிட்டு, மூலவரைத் தரிசிக்கப் படிகள் ஏறுகிறோம். முன்னதாக, சோமாஸ்கந்தரான ஸ்ரீதியாகேசரின் அற்புதத் தரிசனம். திருவாரூர் பகுதியில் சப்த விடங்கத் தலங்களில் இந்தத் தலம் அடங்காது. சோமாஸ்கந்தர் சந்நிதியில், மரகத லிங்கம் ஒன்றும் உள்ளது; மரகதவிடங்கர் என்று திருநாமம். அடுத்து, மூலவர் சந்நிதி. ஸ்ரீநவநீதேஸ்வரர், ஸ்ரீவெண்ணெய்நாதர், ஸ்ரீவெண்ணெய்ப்பிரான், ஸ்ரீவெண்ணெய்லிங்கேஸ்வரர், பால்வெண்ணெய்நாயனார் எனப் பல திருநாமங்கள், சிவனாருக்கு!
வானுலாவு மதி வந்துலவும் மதின்மாளிகை
தேனுலாவு மலர்ச்சோலை மல்குந்திகழ் சிக்கலுள்
வேனல் வேளை விழித்திட்ட வெண்ணெய்ப்  பெருமானடி
ஞானமாக நினைவார் வினையாயின நையுமே
முன்னுமாடம் மதில்மூன்றுடனே எரியாய்விழத்
துன்னுவார் வெங்கணைஒன்று செலுத்திய சோதியான்
செந்நெல் ஆகும் வயல்சிக்கல் வெண்ணெய்ப் பெருமானடி
உன்னி நீடும் மனமே நினையாய் வினை ஓயவே...  என்று திருஞானசம்பந்தரால், துதிக்கப் பெற்ற பெருமான் இவர்தாம்! லிங்கத் திருமேனி; சதுரபீட ஆவுடையார்; குட்டையான பாணம்; வெண்ணெயால் குழைக்கப் பெற்றவர் என்பதால், குழைவாகவே காட்சி தருகிறார்.
கடவுள் எங்கே இருக்கிறார்? பாலில் படுநெய்யாக மறைய நின்றிருக்கிறார். பாலுக்குள்ளே, வெண்ணெயும் நெய்யும் இருந்தாலும், பாலைப் பார்க்கும்போது, இவற்றைக் காணவா முடிகிறது?! நமது அகப் பாற்கடலில்தான், ஆண்ட வனும் குடிகொண்டிருக்கிறார்.
ஆனால், அந்த அதிசயத்தை உணராமலே, ஆண்டவனை எங்கெங்கோ தேடுகிறோம் வசிஷ்டர் போன்ற மாமுனிவர்கள், உள்ளம்  எனும் பாற்கடலைக் கடைந்து, உள்ளிருக்கும் சிவத்தை வெளிப்படுத்தி, வெண்ணெய்யாக்கி வழிபட்டனர். 'இறைவா, எங்களுக்கும் வெண்ணெய்யாக வசப்படு. திரண்டு வந்து ஆட்கொள் அப்பனே’ எனப் பணிந்து நிற்கிறோம்.


முன்னொரு காலத்தில், மழை பொய்த்து, பஞ்சம் தலைவிரித்தாடியது. அப்போது, பசியின் கொடுமையால், தவறுகள் இழைத்த காமதேனு, பாவம் பற்றியதால், புலியின் முகத்தைப் பெற்றது. பிறகு, தவற்றை உணர்ந்து சிவனாரை வழிபட்டு, தனது புலிமுகம் நீங்குவதற்காக வழி கோரியது.
'பூலோகத்தில், மல்லிகாவனத்துக்குச் சென்று தங்கி வழிபட்டால், புலி முகம் நீங்கும்’ என்று அருளினார் சிவபெருமான். அதன்படி, மல்லிகை வனமாக விளங்கிய இந்தத் தலத்தை அடைந்து, சிவனாரை வேண்டி, வணங்கியது. ஈசனின் கருணையால் புலிமுகம் நீங்கியது. மனதில் பொங்கிய மகிழ்ச்சியால், காமதேனு பாலைப் பொழிய, அந்த இடத்தில் பால் குளம் உருவானது. இதனால், காமதேனு தீர்த்தம் என்றும், தேனு தீர்த்தம் என்றும், பால் குளமானதால் க்ஷீர புஷ்கரிணி என்றும் இங்கேயுள்ள தீர்த்தக்குளம் பெயர் பெற்றது. பின்னர், வசிஷ்டர் சிவத்தை வழிபட ஆசை கொண்டார். கயிலைநாதரின் திருவுள்ளக் குறிப்பையும் உணர்ந்தார். அதன்படியே, மல்லிகை வனம் அடைந்து, க்ஷீர புஷ்கரிணிக் கரையில் வழிபட்டார். பால் குளத்தில் பொங்கித் திரண்ட வெண்ணெயை எடுத்து, அதிலேயே சிவலிங்கம் பிடித்து வைத்து பூஜித்தார்.
வெண்ணெய் உருகிவிடாதா? உருகி உருகி வழிபட்டால், வெண்ணெய் நாதர் உருகாது நின்று உள்ளுறைய மாட்டாரா! அதன்படியே, உருகாத வெண்ணெய் லிங்கத்தைப் போற்றினார் வசிஷ்டர். மல்லிகை வனத்திலேயே, மற்றொரு இடத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய நினைத்து, எடுத்துப் பார்த்தார். சிக்கல் தோன்றிச் சிக்கலாகவே சிவனார் நின்றார். பின்னர், வசிஷ்டருக்கு இறைவனார் திருக்காட்சி தந்தார். 'என்ன வரம் வேண்டுமோ, கேள்!’ என்று சிவனார் சொல்ல... சிக்கி நின்று சிவலிங்கமான முறையில், அவ்விடத்திலேயே எப்போதும் அருள்பாலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார், வசிஷ்டர். அதன்படி, சிக்கலில் நிரந்தரமாகச் சிவனார் எழுந்தருளினார். வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டாஸ்ரமம் என்றும், மல்லிகைச் செடிகள் காடாக வளர்ந்திருந்ததால் மல்லிகாரண்யம் என்றும் அழைக்கப்பட்டது, இந்தப் பகுதி.  
வெண்ணெய்நாதர் சந்நிதிக்கு அருகில், தெற்கு நோக்கியதாக நடராஜர் சந்நிதி. அருகில் உற்ஸவத் திருமேனிகள். மூலவர் சந்நிதிக்கு வலப்புறத்தில், சிங்காரவேலர் சந்நிதி. வெள்ளி மஞ்சத்தில் ஒய்யாரமாகச் சாய்ந்திருக்கும் நின்ற திருக்கோலம்; நான்கு திருக்கரங்கள்; அபயமும் வரமும் தாங்கியவர்; இருபுறமும் ஸ்ரீவள்ளி- ஸ்ரீதெய்வானையும் காட்சி தருகின்றனர்.
சிக்கல் சிங்காரவேலர் வெகு பிரசித்தமான வர். சூரனுடன் போர் செய்யப் புகுமுன், அன்னை  பராசக்தியிடம் அருளும், ஆயுதமாம் வேலும் பெற்றுச் சென்றார். அப்படி அன்னையிடம் அன்பு மகன் வேல் பெற்றதே சிக்கல் திருத்தலமாகும்! ஐப்பசியில் சிங்காரவேலருக்கு நடைபெறும் பெருவிழாவில், சூரசம்ஹாரமும் உண்டு. 5-ஆம் நாள் விழாவில், தேரோட்டம் நிறைவுற்றதும், அன்னையிடம் வேல் பெற்று, முருகனார் மலைக்குச் செல்வார். அப்போது, அவரது திருமேனியில் வியர்வைத் துளிகள் துளிர்க்கும்; மலைக்குச் சென்றபின்னும், ஒரு சில மணி நேரத்துக்கு வியர்வைத் துளிகள் முத்து முத்தாகக் கோத்து, முத்தப்பன் மீது நிற்கும். இந்த எழில்காட்சியைக் கண்டு தரிசிக்கக் கூட்டம் அலைமோதும்.
அலர் தரு புட்பத்துண்டாகும் வாசனை
திசைதொறும் முப்பத்தெண் காதம் வீசிய
அணி பொழிலுக்குச் சஞ்சாரமாம் அளி இசையாலே
அழகிய சிக்கல் சிங்காரவேலவ
சமரிடை மெத்தப் பொங்காரமாய் வரும்
அசுரரை வெட்டிச் சங்காரமாடிய பெருமாளே
- என்று அருணகிரிநாதர் தமது திருப்புகழிலும்,
சத்த சாகரமும் கணத்தில் சுற்றிவரு
தாருகன் வாயில் உதிரம்
கக்கிப் படைத்துக் கிடந்தே இருக்கக்
கடைக்கண் சிவந்த வேலன்
கற்பகாடவி தடவு மண்டப கோபுரம்
கனக மதில் நின்றிலங்கும்
சிக்கலம் பதி மேவு சிங்காரவேலனாம்
தேவர்நாயகன் வருகவே
- என காஞ்சிபுரம் சிதம்பர முனிவர் தனது க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழிலும், சிங்காரவேலரைப் போற்றுகிறார்கள்.
இவருக்கு ஆட்டுக்கிடா வாகனம். ஆணவமும் முட்டாள்தனமும் நிறைந்த ஆட்டுக்கிடாவை அடக்கு வது போல், நமது ஆணவத்தையும் மடமையையும் போக்குபவர். சிங்காரவேலரின் திருவாபரணங்கள் கொள்ளை அழகு! பொற்கவசம், நவரத்தினங்கள் இழைத்த சாயக் கொண்டை கிரீடம், வைரவேல், வெள்ளிக் குடை, ஆலவட்டம் ஆகியவை பிரபலமானவை. இவரது வெள்ளித் தேரும் எழில் கொஞ்சும்.
மீண்டும் உள்பிராகாரத்தை வலம் வருகிறோம். மூலவர் கருவறை தேவகோஷ்டங்கள், கட்டுமலை கோஷ்டங்களாகத் திகழ்கின்றன. ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோஷ்டத்துக்கு அருகில் தல விருட்சமான மல்லிகை. அருகில், ஸ்ரீசனீஸ்வரருக்குச் சந்நிதி உள்ளது. வசிஷ்டர், அவருடைய சீடர்கள் மற்றும் காமதேனு வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளது. வடக்குக் கோஷ்டத்தில் ஸ்ரீதுர்கை. வடக்குச் சுற்றில், தனி மண்டபத்தில் ஸ்ரீசண்டேஸ்வரர். மீண்டும் முன் மண்டபத்தை அடைந்தால், அம்பாள் சந்நிதி. ஸ்ரீவேல்நெடுங்கண்ணி. சத்தியதாட்சி என்று வடமொழி நாமம். நின்ற திருக்கோலத்துடன், தெற்குப் பார்த்த சந்நிதியில் அருள் பாலிக்கிறாள். நான்கு திருக்கரங்கள்; பாசம், அங்குசம், அபயம் ஆகியவற்றோடு மற்றொரு கரத்தைச் சாய்த்துப் பிடித்தபடி நிற்கிறார். அம்பிகையின் நெடுங்கண்ணே, வேல் போன்று கூர்மையாக இலங்க, தமது ஆற்றலையே வேலாக்கி, கருணைக் கடாட்சத்தையும் சேர்த்து முருகனிடம் வழங்கியதாக ஐதீகம்.
சிக்கல் திருத்தலத்துக்கு இன்னும் பல சிறப்புகள் உள்ளன. கலையும் கலாச்சாரமும், அழகும் அருளும் திரண்டு மிளிரும் திருத்தலம்; கட்டுமலைக் கோயில் இது. சோழ மன்னரான கோச்செங்கணான், இங்கு திருப்பணி செய்துள்ளார்; யானை புகா மாடக் கோயில்களாக, சற்றே உயரத்தில் அமைந்த கோயில் களாக இவர் கட்டுவது வழக்கம்; அதன்படி, இந்தக் கோயிலும் உயரத்தில், மாடத்தில் அமைக்கப்பட்டுள்ளது; 80 அடி உயரமுள்ள ஏழுநிலை ராஜகோபுரம், 1930-களில் எடுப்பிக்கப் பெற்றது. இருப்பினும், புராண நிகழ்ச்சிகள் பலவற்றை நினைவுகூரும் சுதைச்சிற்பங்களைக் கொண்டுள்ளது கோபுரம்; குறிப்பாக, கந்தக் கடவுளின் வரலாற்று நிகழ்வுகள் பலவும் சித்திரிக்கப்பட்டுள்ளன.
கார்த்திகை மண்டபத்தில், கந்தன் கதையின் நிகழ்வுகள் ஓவியங் களாகவும், ராமாயணக் காட்சிகள் சுதைச் சிற்பங்களாகவும் அமைந்துள்ளன; பெருமாள் சந்நிதியில் ஸ்ரீவைகுண்டநாதர் சிற்பம் (சேஷமாம் பாம்பின்மீது அமர்ந்தது போல்) வெகு சிறப்பு; ராஜகோபுரத்துக்கு முன்பாக உள்ளது கல்யாண மண்டபம். 'காரனேஷன் ஹால்’ என்றும் அழைக்கப்பெறுகிற இந்த மண்டபம், 1932-ல் கட்டப்பட்டது; 3000 பேருக்கும் மேலாக அமரக்கூடிய வசதி கொண்டது; தல, மூர்த்திச் சிறப்புகளுடன், தீர்த்தச் சிறப்பும் கொண்ட இந்தத் தலத்தில், ஐந்து தீர்த்தங்கள் உள்ளன; விருத்த காவிரி என்றழைக்கப்படும் ஓடம்போக்கியாறு; காமதேனுவால் அமைக்கப்பட்ட பால்குளம் (அல்லது க்ஷீர புஷ்கரிணி அல்லது சுதாநிதி அல்லது அமிர்த தடாகம்) கோயிலுக்கு மேற்கில் உள்ளது; ஸ்ரீகோலமாதவப் பெருமாள் அமைத்த கயா தீர்த்தம் மேற்கில் உள்ளது; கோயிலுக்குக் கிழக்கில் உள்ள லட்சுமி தீர்த்தம் ஸ்ரீமகா லட்சுமியால் அமைக்கப்பெற்றது; வேல்நெடுங்கண்ணியின் அருள் பார்வையால் உருவான அம்மா குளம் கோயிலுக்கு வடக்கே உள்ளது; அஞ்சலி ஹஸ்தத்தோடு காட்சி தரும் ஸ்ரீஆஞ்சநேயர், வரப் பிரசாதி; முருகப்பெருமானுக்கு சிகி வாகனன் (சிகி-மயில்) என்றொரு திருநாமம் உண்டு; அதனாலேயே, சிகியிலிருந்து, சிக்கல் என்றானதாகவும் சொல்வர். வசிஷ்டர் சிக்கெனப் பிடித்ததாலும் இந்தப் பெயர் அமைந்தது; பால் குளக்கரையிலுள்ள அரச மரமும், இந்தத் தலத்தின் மரமாகும்; அப்படிப் பார்த்தால், இரண்டு தலமரங்கள் (மல்லிகை, அரசு); திலோத்தமையின்மீது மையல் கொண்டு தவம் குன்றிய விஸ்வாமித்திரர், அந்தப் பாவம் தீர, இங்கு வந்து பால்குளக்கரையில், அரச மரத்தடியில் சிவனாரை எண்ணி வழிபட்டாராம்; எனவே, அரசும் தல மரமானது.
சித்திரையில் சிவனாருக்கு பிரம்மோற்ஸவமும், ஐப்பசியில் முருகக் கடவுளுக்கு உற்ஸவமும் விமரிசையாக நடைபெறுகின்றன. ஸ்ரீசிவன், ஸ்ரீஅம்பாள், ஸ்ரீமுருகன், ஸ்ரீபெருமாள், ஸ்ரீதியாகேசர், ஸ்ரீஆஞ்சநேயர் என்று அவரவர்க்கு உகந்த இஷ்ட தெய்வங்கள், ஒரே கோயிலில் அருள்வதும் சிறப்பு!
திருச்சிக்கல் பெருமைகளை எண்ணி எண்ணி வியந்தபடி, இத்தலத்திலேயே சிக்கிக்கொள்ள மாட்டோமா எனும் அவாவுடன் வெளியில் வருகிறோம். சிக்க வைத்துக்கொள் சிங்காரவேலா!

No comments:

Post a Comment