Saturday, 5 August 2017

திருப்பூவணம்


ந்த ஊரில், கணிகையர் குலத்தைச் சேர்ந்த  பொன்னனையாள் என்பவள், சிவனடியார்களுக்குப் பக்தியுடன் அமுது செய்து உபசரித்து வந்தாள். ஒருமுறை, அவளிடம் போதிய பணமின்றிப் போகவே, அவளுக்கு அருளும்பொருட்டு, சித்தராக அங்கு வந்தார் சிவனார். ரசவாதம் செய்தார்; பித்தளையைத் தங்கமாக்கினார்; அனைத்தையும் அவளிடம் தந்தார்.
அவளே பொன்னனையாள் எனும் பெயர் கொண்டவள் தானே! தங்கத்தைப் பெற்றுக்கொண்டவள், ஆசை ஆசை யாக தங்கத்தால் சிவனாரின் திருமேனியை அமைத்தாள். அப்படியரு அழகு, சிவத் திருமேனி அது! அதில் நெகிழ்ந்தவள், அப்படியே அந்தத் திருமேனியைக் கட்டித் தழுவினாள்; கன்னம் கிள்ளி முத்தமிட்டாள். அந்த லிங்கத் திருமேனியில், அவள் கட்டி முத்தமிட்டதற்கான அடையாளங்களை இன்றைக்கும் காணலாம்!
'துள்ளி முத்தம் கொள்ள மனந்தூய திருப்பொன்னனையாள், அள்ளி முத்தம் கொண்ட அடையாளம் காண்’ என 'திருப்பூவண நாதர் உலா’ எனும் நூல் இந்தச் சேதியைத் தெரிவிக்கிறது.
ஆம், திருப்பூவணம் எனும் பெயர்பெற்ற திருத்தலத்துக்குச் செல்வோமா?
'பாண்டி பதினான்கு’ எனப் போற்றப்படும் பாண்டி நாட்டுத் தேவாரத் தலங்கள் பதினான்கில், பழைமை மாறாமல் பாதுகாக்கப்படும் ஒப்பற்ற திருத்தலம், திருப் பூவணம். மதுரை- மானாமதுரை சாலையில் (மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை), மதுரையில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள ஊர் இது. கோட்டை, பழையூர், நெல்முடிக்கரை, புதூர் என நான்கு பகுதிகளாக உள்ள இந்த ஊரில், கோட்டைப் பகுதியில்தான் பூவணநாதர் ஆலயம் அமைந்துள்ளது.  
குலசேகர பாண்டிய மன்னன், இந்த ஊரில்தான் பட்டம் சூடினான். அவனது முடிசூட்டு விழாவில், பொன் கிரீடத்துக்கு பதிலாக, நெற்கதிரையே முடியாகச் சூட்டிக் கொண்டான். அதனால், நெல்முடிக்கரை எனும் பெயர் இந்த ஊருக்கு அமைந்ததாம். பாண்டிய மன்னர்களின் கோட்டையும் இங்கே இருந்தது.
புஷ்பவன காசி, பிதுர் மோக்ஷபுரம், பாஸ்கர புரம், லக்ஷ்மிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம், ரஹஸ்ய சிதம்பரம், புஷ்பபுரம், பிரம்மபுரி, பூவணக்காசி, திருப்புவனம் எனப் பல பெயர்கள் உண்டு, இந்த ஊருக்கு! பதினெண் புராணங்களில் ஒன்றான 'பிரம்ம வைவர்த்த புராணம்’, இருபது நிகழ்வுகள் வழியே இந்தத் தலத்தின் பெருமையை விவரிக்கிறது.
கோயிலின் நுழைவாயிலில் நிற்கும் போதே, ஆலயத்தின் புராதனத்தை அறிய முடிகிறது. வைகைக் கரை என்பதால், ஊரின் பிற பகுதிகளில் இருந்து சற்றே தாழ்வாகவும் உள்ளது. சிறிதாக இருந்தாலும், ஐந்து நிலை ராஜகோபுரம்; சிற்பங்கள் ஏதுமில்லை. இந்த கோபுரம் நவீனகால கட்டுமானம்!  
கோபுர வாசலில் ஒருபக்கம் ஸ்ரீவிநாயகர்; இன்னொரு பக்கம், ஸ்ரீமுருகன். நுழைந்ததும், தூண்களில் காணப்படும் கம்பீரமான சிலைகள், நம்மை ஈர்க்கின்றன. அவை சிவகங்கை மன்னர்கள் என்று சிலரும், நாயக்க மன்னர்கள் என்று சிலரும் சொன்னார்கள். குறிப்பேதும் இல்லை. இந்தச் சிலைகளில், பெண் ஒருத்தியின் வடிவமும் உள்ளது. அவள்தான் பொன்னனையாள் என்பது மட்டும் புரிகிறது.
அடுத்து, கொடிமரம்; பலிபீடம்; சற்றே நகர்ந்த நந்தி. வெளிப் பிராகாரத்தில், ஆங்காங்கே நந்த வனங்கள்; மீதமுள்ள இடங்களிலும் செடி கொடிகள். உள்வாயிலை நெருங்கியதும், வலது பக்கத்தில், ஸ்ரீபாஸ்கர விநாயகர் சந்நிதிக்கு வழி; இடது பக்கத்தில் ஸ்ரீஅம்பாள் சந்நிதிக்கு வழி. உள்வாயிலுக்கு அருகில், இரட்டைப் பிள்ளையாரும் ஸ்ரீவீரபத்திரரும் காட்சி தருகின்றனர். அடுத்து, உட்புறத்தில் அதிகார நந்தி; உள்ளே சென்றால், 2-ஆம் பிராகாரத்தை அடைகிறோம். இதன் கிழக்குச் சுற்றிலிருந்து தெற்குச் சுற்றுக்குள் திரும்புகிறோம். அம்மன் சந்நிதியிலிருந்து வருவதற்கான பக்கவாட்டு வாசல், இதற்குள் இருக்கிறது. அப்படியே ஸ்வாமி சந்நிதிக்குச் செல்லும் பக்கவாட்டு வாசலும் உள்ளது. தென்மேற்கு மூலை யில், கல்யாண மண்டபம்; மேற்குச் சுற்றின் நடுப்பகுதியில், சிறிதாக கோபுர வாயில் ஒன்று. ஆலயத்தின் மேற்கு கோபுர வாயில் இது; ஆனால், அடைத்தே வைத்துள்ளனர்.
வடமேற்குப் பகுதியில், நிறைய வேப்பமரங்கள். மரத்தடியில், ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீநாகர்களும்! இங்கே, ஏராளமான பக்தர்கள், நாகர் வழிபாடு செய்வதைக் காண முடிகிறது. வடமேற்கு மூலையில், ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமானின் சந்நிதி. வடக்குச் சுற்றுக்குள் நுழைந்ததும், இன்னொரு வேப்ப மரம்; மரத்தடியில் ஸ்ரீவிநாயகரும் ஸ்ரீநாகர்களும்! வடக்குப் பிராகாரப் பகுதியில், திருச்சுற்று மாளிகை அமைந்துள்ளது. வடகிழக்குப் பகுதியில், தெற்கு நோக்கிய ஸ்ரீநடராஜ சபை. இந்தப் பகுதியிலேயே, நவக்கிரக சந்நிதியும் உள்ளது. கிழக்குச் சுற்றின் மூலையில் ஸ்ரீசனீஸ்வர பகவான், தனது வாகனமான காகத்துடன் காட்சி தரும், தனிச்சந்நிதி அமைந்துள்ளது. அருகில், வாக் விநாயகர்; ஸ்ரீபிரம்மா!
அதையடுத்து, ஸ்வாமி சந்நிதிக்குச் செல்லும் வாசல்; ஒரு சில படிகள் ஏறி நுழைந்தால், உள்பிராகாரத்தை அடையலாம் (இங்குதான், ஏற்கெனவே பார்த்த பக்கவாட்டு வாயில், தெற்குச் சுற்றில் உள்ளது). உள்பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில், முதலில் சூரிய பகவான், தனது தேவியரான உஷாவும் பிரத்யுஷாவுமாகக் கவினுறக் காட்சி தருகிறார். அருகில், ஸ்ரீபால கணபதி, வேடுவலிங்கம் மற்றும் காசிலிங்கம். தெற்குச் சுற்றில் திரும்பியதும், உத்ஸவ மூர்த்தங்கள்! பக்கவாட்டு வாசலுக்கு அருகில், சைவ நால்வர்கள்; அறுபத்து மூவர். அடுத்து சப்தமாதர்கள், பிராம்மி மற்றும் வித்தியா ஈஸ்வரர். அதையடுத்து, ஸ்ரீசரஸ்வதிதேவி சந்நிதி. தென்மேற்கு மூலையில் கன்னிமூலை மகா கணபதியும் ஸ்ரீஜவ்ரஹரேஸ்வரரும் காட்சி தர... இவர்களையடுத்து, ஸ்ரீசோமாஸ்கந்தர் சந்நிதி!
வடமேற்குப் பகுதியில், கார்த்திகேயரான முருகப் பெருமான் சந்நிதியும், ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும் அமைந் துள்ளன. வடக்குச் சுற்றில் திரும்பி நடந்தால், அழகிய பெரிய நடராஜ சபை. இந்த ஆலயத்தின் ஸ்ரீநடராஜர் வெகு அழகு. மிகப் பெரிய மூர்த்தம்; கொவ்வைச் செவ்வாயும், குமிழ்ச் சிரிப்பும், குஞ்சிதபாதமும் என காலமும் கணக்கும் நீத்த அந்தக் காரணனுடைய கம்பீரம், சொல்லுக்கு அடங்காது!  புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரும், ஆதிசேஷனான பதஞ்சலியும் பார்த்துக்கொண்டு இருக்க, ஆனந்த தாண்டவம் ஆடுகிறார் அம்பலவாணர். மீண்டும் கிழக்குச் சுற்றில் திரும்பினால், பைரவர் மற்றும் பழநியாண்டவர் சந்நிதிகள். அடுத்து, கார்த்திகை- ரோஹிணி சமேதராக ஸ்ரீசந்திரன்.
உள்வலம் நிறைவு செய்தாயிற்று. ஸ்வாமி சந்நிதியை அடைவதற்கு முன்னதாக உள்ள பகுதியில், ஏராளமான தூண்கள் கொண்டு அழகுறத் திகழ்கிறது மகா மண்டபம். இந்தத் தூண்களிலும் சரி, உள்பிராகாரத்துக்குள் நுழையும் பகுதியில் உள்ள தூண்களிலும் சரி... எத்தனையெத்தனை சிற்பங்கள்! பல வகைப் பறவைகள், யாளிகள், ஸ்ரீகோதண்ட ராமர், திருக்கயிலாயக் காட்சி, ஸ்ரீரிஷபாரூடர், ஸ்ரீபார்வதி தேவி, ஸ்ரீகாளி, தாண்டவமாடும் ருத்ரன், காளிங்கநர்த்தனர், அர்த்தநாரீஸ்வரர், அகத்தியர், வீரபத்திரர், பைரவர் என எண்ணற்ற எழில் சிற்பங்கள்!
ஸ்வாமி சந்நிதிக்குள் நுழை வதற்கு முன்பாக, நந்திதேவர்; விசாலமான அர்த்த மண்டபம். இங்கேயும், தூண் ஒன்றில், நர்த்தனமாடுகிறார் நடராஜர். உள்ளே... கருவறையில் ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர்.
வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப்போர்வை  தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
- என்று அப்பர் பெருமானார் பாடிப் பரவிய ஸ்ரீபூவணநாதர்! 'பூவணமும் பூமணமும் போல அமர்ந்திருப்பூவணத்தில் ஆனந்தப் பொக்கிஷமே’ என்று ராமலிங்க வள்ளல் பெருமான் போற்றுகிற புஷ்பவனேஸ்வரர், சதுரபீட ஆவுடையாரில் பிரமாண்ட லிங்கத்திருமேனியராக அருள்கிறார்!
தந்தை தட்சன் செய்த யாகத்துக்கு அழையா விருந்தாளியாகச் சென்றாள் தாட்சாயிணி; சிவனார் தடுத்தும் கேளாமல் சென்ற தவற்றுக்குப் பரிகாரமாகப் பூவுலகில் இறங்கினாள். பூவணத்தை நாடி வந்து, சிவபூஜை செய்தாள். அம்பிகைக்காக, அங்கே பாரிஜாத மரத்தடியில் சிவலிங்கம் ஒன்று தோன்றியது. பூமரத்தடியில் தோன்றியதால், புஷ்பவனேஸ்வரர் ஆனார். அண்டபகிரண்டமே சிவலிங்கமாகச் சுருங்கி அருள்பாலிப்பதாக, திருவிளையாடற் புராணத்தில் தெரிவிக்கிறார் பரஞ்ஜோதி முனிவர்.
அம்பிகை மட்டுமின்றி ஏனையோ ராலும் வழிபடப்பட்டவர் இந்த ஈஸ்வரர்! சூரியபகவான் வழிபட்டு, கிரகங்களுக்குத் தலைவனாகும் பேறு பெற்றான். பிரம்மா வழிபட்டு உய்வு பெற்றார். மகாவிஷ்ணு வழிபட்டு, ஜலந்தரனை அழிப்பதற்கான சக்ராயுதத்தைப் பெற்றார். காளிதேவி வழிபட்டு உக்கிரம் தணிந்தாள். செய்த பாவங்கள் யாவும் தொலையக்கூடிய இந்தத் தலத்தில் திருணாசனன் என்பவனும், துன்மஞ்சயன் என்பவனும் வழிபட்டு பாவங்கள் தொலையப் பெற்றனர். உட்பலாங்கி என்பவள் சிவனாரை வழிபட்டு, நல்ல கணவனையும், நிரந்தரமான சுமங்கலித் தன்மையை யும் அடைந்தாள். கலியுகத்தின் தீமைகளால் பீடிக்கப்பட்ட நள மகாராஜா இங்கே வழிபட்டதால், அந்தத் தீமைகள் யாவும் அகன்றன.
மாத்யாந்தின முனிவரும், தியானகட்ட முனிவரும் இங்குதான் சிவனாரிடம் உபதேசம் பெற்றனர்.  
இங்கே அருளும் சிவனாருக்கு, ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் எனும் திரு நாமமும், இந்தப் பகுதிக்குப் பூக்காடு எனும் பெயரும் ஏற்பட்டதற்கு, இன்னொரு சுவாரஸ்யமான காரண மும் சொல்வர்.
சிவனாரின் அடி- முடி அறியும் போட்டியில், பிரம்மாவுக்காகப் பொய் சாட்சி சொல்லி, சிவ பூஜைக்கு ஆகாது என ஒதுக்கப்பட்ட தாழம்பூ, தான் செய்த தவற்றை உணர்ந்து, இங்கு வந்து சிவனாரிடம் மன்னிப்புக் கேட்டது. மலருக்கு மன்னிப்புக் கொடுத்து நற்கதி அளித்ததால், சிவனார்... பூவணத்தார் (பூவண்ணத்தார் என்பது தான் பூவணத்தார் ஆகியிருக்கவேண்டும்) ஆனார்; தலமும் பூவணம் ஆனது. இங்கு, கோரக்கச் சித்தரின் ஜீவசமாதியும் உள்ளது.
கருவூர்த்தேவர் திரு இசைப்பாவில், இந்தத் தலத்தையும் இறைவனாரையும் போற்றுகிறார்.
திருவருள் புரிந்தாளாண்டு கொண்டிங்ஙன் 
சிறியனுக்கினியது காட்டிப் 
பெரிதருள் புரிந்தானந்தமே தருநின் 
பெருமையில் பெரியதொன்றுளதே 
மருதர சிருங்கோங்ககின் மரஞ்சாடி 
வரைவளங்கவர்ந்திழி வையைப் 
பொருதிரை மருங்கோங்காவண வீதிப் 
பூவணங் கோயில் கொண்டாயே
- என்று பாடுகிறார்.
ஸ்ரீபுஷ்பவனேஸ்வரரை, தேவார மூவரும் போற்றிப் பாடுகின்றனர். ஆனால் ஒரு வேடிக்கை... மூன்று பேரும் இந்தத் தலத்துக்குள் நுழையவில்லை. ஏன் தெரியுமா?! திருப்பூவணத்து மண்ணெல்லாம் சிவலிங்கமாகத் தெரிந்ததாம்! சிவலிங்கங்களை எப்படி மிதிப்பது என அஞ்சிக் கலங்கியவர்கள், உள்ளே நுழையாமல், வைகையின் எதிர்க்கரையில் நின்றே பாடினார்கள்.
அறையார் புனலு மாமலரு மாடா வார்சடைமேல் 
குறையாற் மதியஞ் சூடி மாதோர் கூறுடை யானிடமாம் 
முறையால் முடிசேர் தென்னர் சேரர் சோழர்கள் தாம்வணங்கும் 
திறையா ரொளிசேர் செம்மை யோங்குந் தென்திருப் பூவணமே
- என்று பாடிய சுந்தரர், இங்கு வரும்போது தனியே வரவில்லை; தமிழகத்து மூவேந்தர்களுடனும் வந்தார்!

நீடு பூவணத்துக்கு அணித்தாக நேர்செல்ல 
மாடுவரும் திருத்தொண்டர் மன்னிய அப்பதிகாட்டத் 
தேடு மறைக்கு அரியாரைத் திரு உடையார் என்று எடுத்துப் 
பாடு இசையின் பூவணம் ஈதோ என்று பணிந்து அணைவார்.
- மூவேந்தர்களும் இந்தத் தலத்துக்கு வந்து, திருப்பூவண நாயகரை வணங்கிப் பணிந்ததை, மேற்காணும் பாடலால் விவரிக்கிறார் சேக்கிழார் (பெரியபுராணம்).
'நகருக்குள் வரவில்லை; எதிர்க்கரையில்தான் நின்றனர்’ என்று சேக்கிழார் குறிப்பிடவில்லை. 'வலம் வந்தனர்; இறைவன் முன் பணிந்தனர்; அங்கேயே சில நாட்கள் தங்கினர்’ என்கிறார் அவர்.
ஆனால், தேவார மூவரும் நகருக்குள் வரவில்லை என்பதும், எதிர்க்கரையில் அவர்கள் தங்கிய இடமே 'மூவர் மண்டபம்’ என வழங்கப்படுகிறது என்பதும் செவி வழிச் செய்திகளாக அறியப்படுகின்றன.
திருப்பூவணத்தின் அசைகிற, அசையாப் பொருட்கள் அனைத்தும் சிவலிங்கம் என்பதால், வானத்தில் செல்லும் கோள்கள்கூட, சற்றே ஒதுங்கிச் செல்வதாக திருவிளையாடற் புராண ஆசிரியர் பரஞ்சோதி முனிவர் தெளிவுபடுத்துகிறார்.
எண்ணில் அங்கு உறை சராசரம் இலிங்கமென்றெண்ணி
விண்ணினாள்களும் கோள்களும் விலங்குவ
 - என்கிறது அவரது பாடல்!
உள்ளே வரும்போது, நந்தி சற்றே சாய்ந்து நகர்ந்தாற்போல் இருப்பதைப் பார்த்தோம் இல்லையா?
எதிர்க்கரையில் தங்கிய நாயன்மார்கள், அங்கிருந்தே சிவனாரைத் தரிசிக்க முயன்றபோது, நந்தி மறைத்ததாம்; அதனால், நந்தியைச் சிவனாரே நகரச் சொன்னாராம்.
திருப்பூவணத்தாரை நெஞ்சாரத் தொழுகிறோம். அடடா! இவர்தாம் ரசவாதம் செய்தவரா?
பொன்னனையாள் தினமும் அதிகாலையில், பூவணத்தார் கோயிலுக்குச் சென்று, அவர் திருமுன் சுத்த நிருத்யம் ஆடிப் பணிந்து, பின்னர் இல்லம் வந்து, அடியார்களுக்கு அமுது செய்விப்பாள். இவ்வாறு செய்வ திலேயே அவளின் பொருளெல்லாம் கரைந்தது.
இதற்கிடையில், சிவனார் உருவத் தைச் செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு ஆசை. பொருள் இல்லா மல் தவிக்கையில்தான், அமுது செய்யும் கூட்டத்துடன் கூட்டமாக ஒருநாள் சித்தர் ஒருவரும் வந்தார். எல்லோருடனும் சேர்ந்து அமராமல், தனியாகக் காத்திருந்தார்.
பணிப்பெண்கள் வந்து கேட்டபோது, பொன்னனை யாளைக் காணவேண்டும் என்று தெரிவித்தார். அவளும் வந்தாள். 'ஏன் இவ்வாறு மெலிந்தாய்?’ என்று காரணம் கேட்டார். அமுது செய்விப்பதற்குப் பொருள் குறைந்ததையும், குறிப்பாகத் திருமேனி செய்விக்கப் பொருள் இல்லாமையையும் அவள் தெரிவித்தாள்; சிவபெருமான் திருமேனி செய்வதற்காக மெழுகில் கருக்கட்டி வைத்தி ருப்பதையும், வரும் பொருளெல் லாம் அடியார் பணியில் செலவாவதையும் விவரித்தாள்.
அடியார் பணியே மகேஸ்வர பூஜை என்பதை எடுத்துக் கூறிய அந்தச் சித்தர், ''வீட்டிலுள்ள பித்தளை, செம்பு, ஈயம், வெள்ளி என்று அத்தனை உலோகப் பாத்திரங்களையும் கொண்டு வா'' என்றார். கொண்டுவந்தாள்.
அனைத்தையும் திருக்கண் நோக்கினார் சித்தர். ''இரவு இவற்றையெல்லாம் நெருப்பிலிடு'' என்று கட்டளை இட்டார். 'மதுரையில் வசிக்கும் சித்தர் யாம்’ என்று கூறிக்கொண்டே நகர்ந்தார்.
இரவில், பொன்னனையாள் அவற்றையெல்லாம் எடுத்துத் தீயில் இட, அவ்வளவும் பொன்னாயின! அந்தப் பொன்னில், சிவன் திருமேனியைச் செய்த பொன்னனை யாள், திருமேனியின் அழகைக் கண்டு, 'அச்சோ, அழகிய பிரானோ!’ என்று அள்ளி முத்தமிட்டாள்!
திருப்பூவணநாதருக்கு இதன் காரணம் பற்றியே, ஹேம நாதர் (ஹேமம் - தங்கம்), அழகியபிரான் ஆகிய திருநாமங்களும் நிலவுகின்றன.
இந்தக் கதையை நினைத்தபடி, அழகியபிரானை தரிசித்துக் கொண்டே முன் மண்டபப் பகுதிக்கு வந்தால், நுழைவாயில் அருகில் நாம் பார்த்த சிற்பங்களில், பொன்னனையாள் சிற்பத்துக்கு அருகில், சித்தர் உருவமும் இருப்பதைக் காண முடிகிறது.
மூலவரை தரிசித்தபின்னர், மீண்டும் உள் பிராகாரத்தில் வலம் வருகிறோம். கோஷ்ட மாடங்களில், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீதுர்கை. தனியான மண்டபத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் அருள்கிறார். திருப்பூவணநாதரை வணங்கிவிட்டு, அம்மன் சந்நிதி நோக்கிச் செல்கிறோம்.
ஸ்வாமி சந்நிதிக்கு இணையாக, ஸ்வாமிக்கு வலப்புறம் அமைந்தாற் போல் உள்ளது அம்பாள் சந்நிதி. கோயிலுக்கு வெளிப்பகுதியிலிருந்தே நேரடியாக அம்பாள் சந்நிதிக்கு வருவதற்கு வழியுண்டு. ஸ்வாமி சந்நிதியிலிருந்து பக்கவாட்டு வழியாகவும் வரலாம்.
அம்பாள் சந்நிதி முகமண்டபப் பகுதியில் வாகனங்கள் வைக்கப் பட்டுள்ளன. உள்ளே போனால், கொடிமரம், பலி பீடம், நந்தி. பெரியதாகத் திருவாசி. துவாரபாலகர்கள் இருக்கவேண்டிய இடத்தில், நந்திதேவரும் பிருங்கியும் காட்சி தருகின்றனர்.
இந்த வாயிலைக் கடந்து சென்றால், அம்பாள் சந்நிதி பிராகாரத்தை அடைகிறோம். அதன் தென்மேற்கு மூலையில், ஸ்ரீவிநாயகர் சந்நிதி; வடமேற்கு மூலையில், முருகப்பெருமான் சந்நிதி. வடக்குச் சுற்றில், தனி மண்டபத்தில், ஸ்ரீசண்டிகேஸ்வரி. வடகிழக்குப் பகுதியில், பள்ளியறை. வலம் வந்து, அம்பாள் திருமுன்னர் நிற்கிறோம். கருவறை வாயிலில், ஒருபுறம் யோகினி; மறுபுறம் போகினி. எதிரில் நந்தி. உள்ளே அருள்காட்சி வழங்குகிறாள், ஸ்ரீமின்னனையாள் எனும் ஸ்ரீசௌந்தரநாயகி.
அம்பிகையை மின்னல் என்று வர்ணிப்பதும், உருவகப் படுத்துவதும், 'மின்னலாய் அருள் வழங்கு’ என்று வேண்டுவதும் வழக்கம். மின்னலானது, எவ்வாறு ஒரேயரு கணம் தோன்றி மறைந்தாலும், பேரொளிப் பிரகாசத்தைத் தந்துவிட்டு, அபரிமிதமான ஆற்றலையும் கொடுக்கிறதோ, அவ்வாறே அம்பாளும், ஒரு கணம் பிரத்யக்ஷமாகிப் பின்னர் அருள் கடாக்ஷிப்பாள்!
நின்ற கோல நாச்சியாராக அருள்பாலிக்கும் அம்பிகை, அபயமும் வரமும் காட்டுகிறாள்; பாசமும் அங்குசமும் ஏந்தியிருக்கிறாள். அம்மன் சந்நிதி கோஷ்டங்களில், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியோரும் எழுந்தருளி இருக்கிறார்கள்.
இந்தத் தலத்தின் விருட்சம், பலா மரம். மணிகர்ணிகை ஆறும் (இந்தப் பகுதியின் சிறிய ஆறு) வைகை ஆறும் தீர்த்தங்கள். வைகை நதியாள், இங்கே உத்தரவாகினி; அதாவது, வடக்கு முகமாகப் பாய்கிறாள். எங்கெல்லாம் புண்ணிய தீர்த்தங்கள் வடக்கு முகமாகப் பாய்கின்றனவோ, அங்கெல்லாம், முன்னோருக்கான சடங்குகளைச் செய்வது நன்மை பயக்கும்.
ஆகவேதான், திருப்பூவணமும் பித்ரு கடன்களுக்கான தலமாக மதிக்கப்படுகிறது. தர்மக்ஞன் என்பவன் ஓர் அரசன். தந்தையின் அஸ்திச் சாம்பலை, சேதுக் கரையில் கரைப்பதற்காக, இந்த வழியாகப் போனான்.
அவன் இந்தத் தலத்தை அடைந்ததும், மலராக மாறியது அஸ்தி. பூவண்ணமாக இருப்பவர் உறையும் தலமல்லவா, யாவற்றையும் பூவாக மாற்றும் ஆற்றல் இந்தத் தலத்துக்கு உண்டு! திருமகள் இங்கு வழிபட்டாள்; நள மகாராஜா, தன்னுடைய கலிதோஷங்களைத் தொலைத்து, மனைவி- மக்களை மீண்டும் பெற்றார். மார்க்கண்டேயர் இங்கு பாலபிஷேகம் செய்தார். மாணிக்கவாசகரும் இந்தத் தலத்தைப் போற்றிப் பாடினார்.
பங்குனியில் பெருவிழா காணும் இந்தத் தலத்தின் புராணத்தைப் பாடிய கந்தசாமிப் புலவர், 'திருப்பூவண நாதர் உலா’ என்றும் ஒருநூல் இயற்றியுள்ளார். திருப்பூவணநாதர் உலா வர, அவரைக் கண்டு பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவத்துப் பெண்களும் அன்பும் காதலும் பக்தியும் கொள்வதை, இதில் காண்கிறோம். தமிழ்த் தாத்தா
உ.வே.சாமிநாத ஐயர், அரும்பாடு பட்டு, இந்த நூலுக்கு அரும்பதவுரை யும் ஆக்கிப் பதிப்பித்துள்ளார்.
கோயிலைவிட்டு வெளியில் வந்து வைகைக் கரையில் நிற்கிறோம். எதிர்க்கரை கண்களில் படுகிறது. அங்குதானே, தேவாரப் பெரியோர் நின்றிருப்பார்கள்! மானசீகமாக அவர்களையும் வணங்கிப் பணி கிறோம். மிகப் பிரபலமான மடப்புரம் காளியம்மன் ஆலயமும் எதிர்க்கரையில்தான் உள்ளது.
மின்னனையாளையும் பூவண நாதரையும் பணிந்து வணங்கிப் பொன்னனையாளை நினைத்த படியே திருப்பூவணத்தில் இருந்து விடைபெறுகிறோம்.

No comments:

Post a Comment