Thursday, 3 August 2017

திருவானைக்கா

அ திகாலைப் பொழுது. இன்னமும் கதிரவக் கீற்றுகள் முழுவதுமாகப் படரவில்லை. எனினும், அல்லோல கல்லோலப்பட்டது, கங்கையில் புனிதமாய காவிரி ஆற்றங்கரை. ஆங்காங்கே அரவமும் மக்கள் நடமாட்டமும் இருந்தாலும், காவிரிப் பெண் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகப் பாய்ந்து கொண்டிருந்தாள். சில இடங்களில், தன்னுடைய ஜில்லென்ற தண்ணீரைப் பாறைகளில் மோதி, மெலிதான கிங்கிணி ஒலி எழுப்பிக் கொண்டிருந்தாள்.
காவிரித் தாயின் அபிமான மகன் உறையூர்ச் சோழன் மாவளத்தான் மாதடக்கை கமலச் செம்பியன் பெருநற்கிள்ளி, காவிரி நீராட வரும் காலைப் பொழுது. அருமந்த மகன் வருவதற்காக ஆற்றுத் தாயும் காத்திருந்தாள்.
‘‘மாமன்னர் கோப்பெருநற்கிள்ளி வாழ்க! வாழ்க!’’ ‘‘மாவளத்தான் மாதடக்கை செம்பியன் வாழ்க! வாழ்க!’’
கட்டியக்காரனின் குரல் முரசைவிட வேகமாக முழங்க, உறையூர்ச் சோழ மன்னர் நீராட வந்தார்.
‘‘காவிரியம்மா!’’ என்று கன்றின் அன்போடு அழைத்துக் கொண்டே, ஆற்றுக்குள் இறங்கினார். காவிரியும் தன் மகிழ்வைத் தெரிவிப்பதற்கு, மன்னர் மீது நீரை வாரித் தெளிக்க, குள்ளக் குளிரக் குடைந்து நீராடினார் மன்னர். நீராட்டம் முடித்துக் கரையேற யத்தனித்தார்.
‘‘அந்தோ! இதென்ன... கழுத்தில் அணிந்திருந்த முத்துச்சரம் எங்கே?’’
மன்னரின் முத்துச்சரத்தைக் காவிரி கழற்றி விட்டாளோ? விலையுயர்ந்த முத்துச்சரமாயிற்றே.... கரையேற மாட்டாமல் மன்னர் தவித்தார்.
‘காவிரியணீம்மா! ஏனம்மா ஆரத்தைக் கழற்றினாய்? ஆனைக்கா அண்ணலுக்கு அணிவிக்கக் கருதினாயோ தாயே?’
மன்னர் மனதினுள் பற்பல எண்ணங்கள் தோன்றி மறைய... ‘‘ஆனைக்கா அண்ணலே! அந்த மாலையை ஏற்றுக் கொள் ஆதிநாயகனே!’’ என்று உள்ளக் கிடக்கையை வாயார வெளிப்படுத்தினார்.
தி ருவானைக்கா திருக்கோயிலின் கருவறை. தலை தாழ்த்திக் கை குவித்து மன்னர் மாவளத்தான் நிற்க.... அருள்மிகு வெண்ணாவலீசருக்குத் திருமஞ்சனம் நடந்தேறிக் கொண்டிருந்தது.
‘கிலிங்... கிலிங்...’ ஈசனைத் திரு மஞ்சனமாட்டிக் கொண்டிருந்த ஜம்புநாத குருக்கள் எதுவும் புரியா மல் விழித்தார்.
அதே நேரம் _ மாவளத்தானும் கண் திறந்து நோக்க... மன்னரின் பரிவாரமெல்லாம் பார்த்துக் கொண் டிருக்க... திருமஞ்சனக் குடத்திலிருந்து குருக்கள் நீர் வார்க்க....
‘அட! இதென்ன பளபளப்பு... என்னது அது, வெள்ளை வெள்ளை யாக?!’
குடத்துக்குள்ளிருந்து முத்துமாலை விரைந்து வந்து பரமேஸ்வரன் திரு மேனியில் பாங்கொளி சேர்த்தது!
மாவளத்தான் திக்குமுக்காடிப் போனார். ‘‘ஆனைக்கா அண்ணலே! அங்கு கொடுத் ததை இங்கு ஏற்றாயா? என்னே உன் பெருங் கருணை!’’
தி ருவானைக்கா _ ஸ்ரீரங்கத்துக்கு சுமார் ஒரு கி.மீ. கிழக்கில் அமைந்துள்ள திருத்தலம். வடக்கில் வடவாறான கொள்ளிடமும், தெற்கில் காவிரியும் நீர் மாலைகளாகக் கோத்துக் கிடக்க, இடையில் சோலையும் மலர்களும் சுகந்த வாசமுமாகப் பரவிக் கிடக்கும் புண்ணிய பூமி!
தாரமாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுந்து நீரில் நின்றடி போற்றி நின்மலா கொள்ளென ஆங்கே ஆரம் கொண்ட எம் ஆனைக் காவுடை ஆதியை நாளும் ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே!
என்று சுந்தரமூர்த்தி சுவாமி கள், சோழனின் மணி ஆரத்தைப் பரமன் அணிந்து அருள்பாலித்த அழகைப் பாடுவார்.
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் 
எம்மாடு சும்மாடாம் ஏவர் 
நல்லார் செத்தால் வந்து உதவுவார் ஒருவரில்லை 
சிறுவிறகால் தீமுட்டிச் 
செல்லா நிற்பர்சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா என்றன் அத்தா உன் பொற்பாதம் அடையப் பெற்றால்அல்ல கண்டம் கொண்டடியேன் என் செய்கேனே
என்று திருநாவுக்கரசர் நெஞ்சுருகப் பாடிய தல மாம் திருவானைக்கா செல்வோம், வாருங்கள்.
தி ருவானைக்கா. யானை வழிபட்டதால் ஆனைக்கா. நாவல் (ஜம்பு) மரத்தடியில் சிவலிங்கமாகப் பரமன் எழுந்தருளியதால் ஜம்புகேஸ்வரம். பஞ்சபூதத் தலங்களுள் நீர்த்தலமானதால் அப்பு க்ஷேத்திரம். அம்பாள், ஐயனைத் தொழுததால் ஞானக்ஷேத்திரம்.
யானையின் தொடர்பைக் காட்ட கஜாரண்யம், இபவனம் (இபம் - யானை), தந்திவனம் (தந்தி - யானை ) என்றும், நாவல் காடு என்பதால் ஜம்புவீஸ்வரம், வெண்நாவல் வனம், ஜம்பு வனம் என்றும், ஞானம் அருளிய தலம் என்பதால் ஞானத்தலம், ஞானபூரி என்றும், அமுத பூமி என்பதால் அமுதேஸ்வரம் என்றும், பற்பல பெயர்கள் இந்தத் தலத்துக்கு உண்டு.
கண்ணைக் கட்டும் அழகுடன் பிரமாண்டமாக நிற்கிறது திருவானைக்கா ஆலயம். ஐந்து பிராகாரங்களைக் கொண்ட கோயில். ஐந்தாவது மற்றும் நான்காவது திருச்சுற்றுகளில் வீடுகள் உள்ளன. நான்காவது பிராகாரத் திருமதில், ‘நீறிட்டான் மதில்’ என்று பெயர் பெற்றது. ஐந்தாவது சுற்று, ‘விபூதிச் சுற்று’ என்று அழைக்கப்படுகிறது. முன் கோபுர வாயிலில் உள்ள சிங்கத் தூண்கள்- பல்லவ மன்னர்களும் இந்தக் கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்று காட்டுகின்றன.
நீறிட்டான் மதில் சுமார் 35 அடி உயரமும், மொத்தமாகச் சுமார் 8,000 அடி நீளமும், ஏறத்தாழ ஐந்தரையடி அகலமும் கொண்டது.
அ து சரி, நீறிட்டான் மதில் என்றால் என்ன பொருள்? ஆழித்தேர் மறுகில்பயில் மெய்த்திருநீறிட்டான் மதில் சுற்றிய பொற்றிரு ஆனைக்கா என்று திருப்புகழ் இந்த மதில் பற்றிக் கூறும். கோயில் திருப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. மதில் கட்டப்பட்டது. மதில் கட்டுமானப் பணியை மேற்கொண்டிருந்த ஒரு சித்தர், கூலி வேலை செய்தவர்களுக்குக் கூலியாகத் திருநீறு கொடுத்தார். அவரவர் செய்த பணிக்கேற்ப, அந்தத் திருநீறு பொன்கட்டிகளாக மாறின. நீறிட்டதால், இது திருநீறிட்டான் திருமதில். சிவ பெருமானே சித்தராக வந்து தமக்கான மதிலைத் தாமே கட்டிக் கொண்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. தம் பணியைத் தாமே செய்து கொண்ட எம்பெருமானை வணங்கிக் கொண்டே உள் புகுகிறோம். அவனருளால்தானே அவன் தாள் வணங்க வேண்டும். ‘வழிநடத்து வள்ளலே!’ என்று விண்ணப்பித்தவாறே ஆலயம் தொழுவோம்.
தி ருவானைக்கா திருக்கோயிலின் அமைப்பு உற்றுக் கவனிக்கப்பட வேண்டியது. சுவாமி சந்நிதி மேற்கு நோக்கியது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கியது. மேற்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்தால், அடுத்தடுத்து மூன்று கோபுரங்களைக் கடந்து மூன்றாம் பிராகாரத்தை அடையலாம். நான்காம் மற்றும் மூன்றாம் பிராகாரங்களைக் கடந்து, நேராக மூலவர் சந்நிதி நோக்கிச் சென்றால், சிறிது சிறிதாகக் கீழே இறங்கி, மூலவர் சந்நிதியை அடையும்போது தரை மட்டத்துக்கும் கீழே அந்தத் திருச்சந்நிதி அமைந்திருக்கும் அழகை ரசிக்கலாம். படிப்படியாக இந்தக் கோயில் கீழிறங்குவானேன்? என்ன காரணம்? இதற்கு விடை தேட வேண்டும் என்றால் காலச் சக்கரத்தின் வரலாற்றில் சற்றே இல்லை... நிறையவே பின்னோக்கிப் போக வேண் டும்.
அ து பல்லாண்டுகளுக்கு முற்பட்ட காலம். காவிரிக் கரையெல்லாம் நிறைய வெண் நாவல் மரங்கள். அதனாலேயே ஜம்புவனம் என்று அந்தப் பகுதி அழைக்கப்பட்டது.
ஒரு நாவல் மரத்தின் அடியில் அழகு லிங்கம் ஒன்று. காட்டுக்குள் திசை மாறிச் சென்று கொண்டிருந்தது ஒரு யானை. நாவல் மரத்தை நெருங்கிய யானை, சடாரென்று நின்றது. இத்தனை நாட்களாகத் தன் நெஞ்சில் நிறைந்திருந்த ஆசைக்கு, இன்று ஓர் அட்சய பாத்திரம் கிடைத்ததே என்று மகிழ்ந்தது. ‘இனி தினமும் காவிரி நீர் கொணர்ந்து, மலர் கொய்து, தும்பிக்கையால் தண்டனிட்டு பரமேஸ்வரனைப் பணிந்து பூஜிக்கலாமே!’
மறுநாள் காலை வரை காத்திருக்கக்கூடப் பொறுமை இன்றி, மலர்வனம் எங்குள்ளது என்று பார்த்து வரப் புறப்பட்டது யானை.
ஒவ்வொரு நாளும் யானையின் பூஜை கோலாகலமாக நடக்கும். காவிரியில் நீராடிவிட்டு, தும்பிக்கையில் நீர் முகந்து வரும். அபிஷேகப் பிரியரான பரமனுக்கு நீர் வார்க்கும். மல்லிகை, முல்லை, சம்பங்கி, சண்பகம், தாமரையுமாக மலர் கொணர்ந்து தூவித் தொழும். அருளண்ணலின் திருமேனிக்கு அழகு செய்து அழகு பார்க்கும்.
சில காலம் கழித்து, அதே வனத்துக்குச் சிலந்திப் பூச்சி ஒன்று வந்து சேர்ந்தது. சிவலிங்கம் கண்டவுடன் சிலந்திக்கும் சொல்லொணா ஆவல். பார்த்துப் பார்த்துப் பரவசப்படும். ஆனால், ஒன்று மட்டும் உறுத்தும். நாவல் மரத்தின் இலைகள் அவ்வப்போது காய்ந்து சருகாகி உதிர்ந்து சிவலிங்கத்தை அபசாரப்படுத்துகின்றனவே! மேலே ஒரு விதானம்(மேல் பந்தல்) இருந்தால் இது நடக்குமா? விதானம் கட்ட முத்துக்கும் மணிக்கும் சிலந்தி எங்கே போகும்? ஆனாலும், விதானம் கட்ட வேண்டுமே! எண்ணம் இருந்தால், ஏகும் வழி கிட்டாமலா போகும்? வழி கிடைத்தது. தனது வலையைக் கொண்டே, இறைவனுக்கு விதானம் கட்டியது. சருகுகளும் இலைகளும் லிங்கத்தின் மீது விழவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சிலந்தி, அங்கு தங்கினால் அது சிவ அபசாரம் என்றெண்ணி, வேறிடம் சென்று தங்கியது.
மறுநாள் காலையில் யானை வந்தது. அன்போடு ஆண்டவன் திருமேனியை நோக்க.... ‘அடடா... அபசாரம்! அபசாரம்! சிலந்தி வலை. எச்சில் பட்டுப் போச்சே!’ (சிலந்தி தன் எச்சில் கொண்டுதானே வலை பின்னும்) பரிதவித்த யானை, வேகவேகமாக வலையழித்துத் தூய்மைப்படுத்தி.... அபிஷேகம் செய்து.... தன் பூஜையைத் தொடர்ந்தது.
யானை சென்ற பின்னால் சிலந்தி வந்தது. தன் பணியாக மீண்டும் ஒரு விதானம் கட்டியது.
காலப்போக்கில், இதுவே தினசரி நிகழ்வானது. யானை பூஜை செய்தது. அடுத்து வந்த சிலந்தி விதானம் அமைத்தது. பின்னால் வந்த யானையோ, அபசாரம் என்று அதை அழித்தது.
தாங்க மாட்டாத சிலந்தி, ஒரு நாள் மறைவாகக் காத்திருந்து யார் தனது விதானத்தை அழிக்கிறார்கள் என்று பார்த்தது. யானை என்பது தெரிந்தவுடன், தும்பிக்கைக்குள் புகுந்து கடிக்கத் தொடங்கியது. வலி பொறுக்க மாட்டாத யானை, தும்பிக்கையை ஓங்கித் தரையில் அடித்தது. ரத்தம் கொட்ட யானையும் இறந்தது; சிலந்தியும் இறந்தது. யானையும் பூஜை செய்தது. சிலந்தியும் கோயில் கட்டியது (விதானம் அமைப்பதென்பது கோயில் கட்டுவதுதானே!). யானை செய்தது கிரியை. நோன்பு, சடங்கு, பூஜை முறை இவை அனைத்தும் கிரியையில் அடங்கும். சிலந்தி செய்தது சரியை. தன்னுடல் நோவ, சடங்கு முறை இல்லாமல் செய்யும் தொண்டுதான் சரியை.
சிவகணங்களுள் இருவரான புஷ்பதந்தன், மாலியவான் ஆகியோர்தாம் யானையாகவும் சிலந்தியாகவும் பிறந்தவர்கள். கிரியை செய்த புஷ்பதந்தன், மீண்டும் தன் சிவகண வடிவம் பெற்றான். சரியை செய்த சிலந்தியின் ஆசை (கோயில் கட்டுவது) முழுவதுமாக நிறைவேறவில்லை. எனவே, இறைவன் அருளால், மாலியவான் சோழ குலத்தில் அரசனாகத் தோன்றினான்.
சோ ழ மன்னர் சுபதேவனுக்கும் அவர்தம் திருவாட்டி கமலவதிக்கும் அரும்பெரும் மகவாக அவதரித்தார் சோழன் கோச்செங்கணான். எண்தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட கோச்செங்கண் சோழரான இந்த மன்னர், முதன்முதலாகக் கட்டிய கோயிலே திருவானைக்கா என்று கருதப்படுகிறது.
கி.பி. 3-4-ஆம் நூற்றாண்டு காலத்தில் உறையூர் பகுதியைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட மன்னர் கோச்செங்கணான். திரு வானைக்காவில்தான், தனக்கு முற்பிறவியில் அருள் கிடைத்தது என்பதை உணர்ந்து, இந்தத் திருக்கோயிலைக் கட்டினார்.
ஆனைக் காவில் தாம்முன்னம் அருள் பெற்றதனை அறிந்தங்கு மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார் ஞானச்சார்வாம் வெண்ணாவல் உடனே கூட நாம் சிறக்கும் பானற்கனத்துத் தம்பெருமான் இருமங்கோயில் பணி சமைத்தார்
என்று இதனைச் சேக்கிழார் பாடுகிறார்.
அதெல்லாம் சரி... அது ஏன் கீழே கீழே இறங்கும்படி கோயிலைக் கட்டினார்?
கோ ச்செங்கண் சோழனுக்குத் தன் பூர்வ பிறவி நினைவு முழுமையாக வந்ததாம். யானைதானே தான் கட்டிய விதானக் கோயிலை அழித்தது? அப்படி யானால் இந்த பிறவியில் தான் கட்டும் கோயிலுக்குள் யானை புகாவண்ணம் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டாராம்.
யானை மிகப் பெரிய உருவம் கொண்டது. அத்தனை எடையையும் தூக்கிக்கொண்டு, படிகளில் ஏறுவது கடினம். அதைவிடக் கடினம், படிகளில் இறங்குவது (படிகளில் இறங்கும்போது, மனிதர்களுக்கே உடல் எடை முன்பக்கமாகக் கீழே தள்ளும். யானைக்குக் கேட்கவா வேண்டும்). யானை புகா கோயிலாகக் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்ட சோழ மன்னர், கீழே கீழே இறங்குவது மாதிரி கட்டினாராம்.
கோச்செங்கண் சோழன் கட்டிய பல கோயில்கள், மாடக்கோயில்களாக அமைந்துள்ளன என்பது தமிழகத்தின் பண்பாட்டு மற்றும் வரலாற்றுச் சிறப்பாகும். அவை எங்கே இருக்கின்றன தெரியுமா? திருவாரூர்-மயிலாடுதுறை தடத்தில் உள்ள நன்னிலம், திரு அம்பர் மற்றும் காரைக்கால் அருகில் உள்ள திருவைகல் போன்ற தலங்களில் சிவன் கோயில்களையும், திருநறையூரில் (நாச்சியார்கோவில்) விஷ்ணு கோயிலையும் இந்த மன்னரே எழுப்பித்தார். சாதாரணமாக, மாடக் கோயில் என்பது மாடத்தில் உள்ள கோயில் என்பதாக உயரத்தில் அமையும் (யானை ஏறினாலும் இறங் கக் கஷ்டப்படும். அதனால், ஏற யத்தனிக்காது). ஆனால், சில தலங்களில் இந்த மாடக் கோயிலே கீழிறங்கும் வகையில் அமைந்துள்ளது.
திருவானைக்காவில் கோயில் கொண்டுள்ள ஜம்புகேஸ்வரர், தண்ணீர் வடிவினராக இருப்பதாலும், கருவறைப் பகுதியில் எப்போதும் நீர் சுரந்து கொண்டே இருப்பதாலும், உயர் மாடத்தில் அமைக் காமல் சோழன், கருவறையை நீர் மாடத்தில் அமைத் துக் கட்டியிருக்க வேண்டும்.
சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல்பந்தர் செய்து உலந்தவன் இறந்தபோதே கோச் செங்கணானுமாகக்கலந்த நீர்க் காவிரி சூழ் சோணாட்டுச் சோழர் தங்கள்  குலம் தனில் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே!
என்று சிலந்தி சோழனாகப் பிறந்ததைப் பாடுவார் திருநாவுக்கரசர்.
எப்படியோ சிற்பக் கலையும் செழுமைகொள் சைவ நெறியும் சேர்ந்திலங்கும் திருவானைக்கா திருத்தலம், கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாக உள்ளே அழைக்கிறது. வாரீர்!

ஐ ந்தாவது பிராகாரத்தில் வீடுகள். இந்தப் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில், கொள்ளிடக் கரைக்குப் போகும் வழியில் தான் கோயிலுக்கு மலர் கொய்யும் நந்தவனம் இருக்கிறது.
நான்காவது பிராகாரத்திலும் வீடுகள் உள்ளன. கோயிலின் மேற்குக் கோபுரம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. கிழக்குக் கோபுரம் மிகுந்த சிறப்பு வாய்ந்தது. சுந்தரபாண்டியன் கோபுரம் என்று மக்களின் புழக்கத்தில் வழங்கப்படும் இந்த கோபுரம், கி.பி. 13-ஆம் நூற்றாண்டில், மாறவர்மன் சுந்தரபாண்டியனால் தொடங்கப்பட்டது. பின்னர் வந்த போசள மன்னர் (ஹொய்சாளர்) வீரசோமேஸ்வரன் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. கல்வெட்டுகளில், வீரசோமேஸ்வரன் திருநிலை ஏழு கோபுரம் என்று குறிக்கப்படும். இந்த கோபுரத்தில் உள்ள சிற்பங்கள், சோழ-பாண்டிய- போசள பாணிகளில் அமைந்துள்ளன. புலன்கள் வழிப் புகுந்து உள்ளத்தைப் புரட்டிப் போடும் அளவுக்கு அழகு கொஞ்சும் சிற்பங்கள்!
சிற்பங்களின் சிறப்பு ஒரு புறம் இருக்க... ஆனைக்கா ஆலயத்தில் இன்னும் பல சிறப்புகள் உண்டு. பற்பல மண்டபங்கள், பற்பல சிறு கோயில்கள் என்று எல்லா வற்றையும் உள்ளடக்கிக் கொண்டு கம்பீரமாக மிளிர்கிறது ஆனைக்கா.
நான்காம் பிராகாரத்தில், தெற்குப் பகுதியில் பிரம்ம தீர்த்தம். தென்மேற்குப் பகுதியில் சூரிய தீர்த்தம், ஆயிரங்கால் மண்டபம், தெப்பக்குளம். தெப்பக்குளத்தைச் சுற்றி இரண்டடுக்கு வரிசையில் அமைந்த மண்டபம் என்று ஏற்றமிக்க பெருமைகள் ஏராளம் உள்ளன. வடமேற்குப் பகுதியில் பசுமடமும் இந்தப் பிராகாரத்தில்தான் உள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தின் அழகுச் சிற்பங்களைச் சொல்லி மாளாது.
உற்சவ காலத்தில் பரமன் திருவுலாவும் தேரோட்டமும் நடைபெறும் நான்காம் பிராகாரத்தில்தான் சங்கராலயம் என்று அழைக்கப்படுகிற பெருமைமிக்க சங்கரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே ராஜராஜேச்வரம் ஆலயமும் (மூன்றாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது), அதன் மதிலுக்குள் அடங்கினாற்போல பசுபதீச்வரம் கோயிலும் உள்ளன. போசள மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பசுபதீச்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவலிங்கம், முகலிங்கம் ஆகும். தென்னகத் திருக்கோயில்களில் முகலிங்கத்தைக் காண்பது மிகவும் அபூர்வம்.
சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள். பஞ்ச பிரம்ம மூர்த்தங்கள் என்ற பெயரில் தனித் தனி முகம் கொண்ட உருவத் திருமேனியாக ஐந்து வகையான திருமேனிகளில் சிவனை வழிபடலாம். ஆனால், பசுபதீச்வரத்தில் ஐந்து திருமுகங்களும் ஒன்றாக அடங்கிய முகலிங்க தரிசனம் மிகுந்த சிறப்புடன் கிடைக்கிறது. கிழக்கில் தத்புருஷம், தெற்கில் அகோரம், வடக்கில் வாமதேவம், மேற்கில் சத்யோஜாதம் ஆகிய நான்கு திருமுகங்களுடன் சிவலிங்கத்தின் அருவத் திருமுடி, வடகிழக்கு நோக்கிய உச்சித் திருமுகமான ஈசானத்தைக் குறிக்க, ஐமுக ஈசனைக் கண்ணாரக் கண்டு நெஞ்சாரத் துதிக்கலாம்!
மூன்றாம் பிராகாரத்திலும் பல்வேறு சிறப்புகள் உண்டு. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதி, (பழைய) ஜம்புகேஸ்வரர் சந்நிதி ஆகியவற்றைத் தாண்டினால் ஊஞ்சல் மண்டபம். தொடர்ந்து இந்திர தீர்த்தம். தீர்த்தத்தின் முன்புறம் ஒரு பக்கத்தில் முத்துக்குமார ஸ்வாமியான சுப்ரமணியர். இன்னொரு பக்கத்தில் விநாயகர். தீர்த்தத்தின் இன்னொரு கரையில், காசி விஸ்வநாதருக்கும் விசாலாட்சிக்கும் தனித் தனி சந்நிதிகள்.
அன்னை அகிலாண்டேஸ்வரியின் சந்நிதிக்கு இப்படியே போகலாம். என்றாலும், சுவாமியின் கருவறை தரிசனத்தை நிறைவு செய்து கொண்டு வருவோம். அக்னி தீர்த்தமும் வசந்த மண்டபமும் கண்டு, பிராகார வலம் வருகிறோம்.
சுவாமி சந்நிதிக்குப் போவதற்கான முகப்பிடத்தில் நம்மை இழுத்து நிறுத்துகிறது ஒரு மண்டபம். நாலு கால் மண்டபம். வேத அல்லது சதுர்வேத மண்டபம் என்றும் பெயர் உண்டு. கொடிமரம் இருப்பதால், இதுவே கொடிமர மண்டபமும் ஆகும். நான்கு வேதங்களைக் குறிப்பதாக உள்ளன, இந்த ஒற்றைக்கல் தூண்கள். ஒவ்வொரு தூணின் மேல்பகுதியிலும் எட்டெட்டு சிங்கங்கள். மண்டபத்தைத் தாங்குவது போல அமைக்கப்பட்ட சிங்கங்கள். அற்புதமான சிற்பங்கள் பலவற்றைக் கீழ்ப்பகுதிகளில் கொண்டுள்ள இந்தத் தூண்கள், கீழே குறுகலான தண்டு கொண்டு, மேலே கிளை படர்ந்து விரியும் மரங்கள் போல, சிற்ப விருட்சங்களாகவும் வேத விருட்சங்களாகவும் காட்சி தருகின்றன. மேலே அண்ணாந்து பார்த்தால்... தொங்கும் சங்கிலிகள். கருங்கல்லால் ஆன சங்கிலிகள்!
இரண்டாம் பிராகாரத்தில் உற்சவ மண்டபம். உற்சவ மூர்த்தர்கள் கொலுவீற்றிருக்கும் மண்டபம். சோமாஸ்கந்த மண்டபம் என்றும் அழைக்கப்படுகிற இந்த மண்டபத்தின் மேலோங்கிய சிறப்பு, இங்குள்ள கொடுங்கைகள். பழைய கால கட்டுமானத்தின் சிறப்பு அம்சம், இத்தகைய கொடுங்கைகள். மண்டபங்கள், நடை பிராகாரங்கள், முகப்பு போன்ற இடங்களில் கட்டடக் கட்டுமானத்திலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் வளைவான பகுதிகளே கொடுங்கைகள் எனப்படும். சோமாஸ்கந்த மண்டபத்தில் உள்ள கொடுங்கைகள், நம் கண் பார்வையை ஏமாற்றுகின்றன. மரத்தால் செய்யப்பட்டவை என்று எண்ணத் தலைப்படுகிறோம். இவை கல் கட்டுமானம் என்றாலும், மரத்தாலானவை போலவே தோற்றமளிக்கின்றன. கொடுங்கை அழகில் உள்ளத்தைக் கொள்ளை போக்கிவிட்டு, பிராகார வலம் வந்தால், புனிதமான வெண்ணாவல் மரத்தை தரிசிக்கலாம். கருவறைக்கு அருகில் ஆனால், வெளியே இருக்கிறது வெண்ணாவல் மரம்.
நாவல் மரம், நமது நாட்டுக்கு மிகவும் சொந்தமான மரம். நாவல் மரங்கள் நிறைய இருந்த பகுதியாக மொத்த பாரத தேசமும், பழைய இலக்கியங்களில் விவரிக்கப்படுகிறது. இந்தியாவுக்கே சம்புத்தீவு (‘ஜம்பு’ என்பது ‘சம்பு’ என்றாகி விட்டது) நாவலந்தீவு என்றெல்லாம் பெயர்கள் காணப்படுகின்றன. புராணங்களில் நான்கு மகா தீவுகளில் ஒன்றாகவும், பிற்கால எழுத்துகளில் ஏழு முக்கியத் தீவுகளில் ஒன்றாகவும் ஜம்புத்வீபம் காட்டப்படும். புத்த சமய நூல்களிலும் சம்புத்தீவு பற்றி நிறையக் குறிப்புகள் உண்டு. மணிமேகலை காப்பியத்தில் வரும் சம்புத் தீவு பற்றிய செய்திகளை, உ.வே.சாமிநாதய்யர், புத்த நூல்களைக் கொண்டு விளக்குவார்.
கிருஷ்ண பரமாத்மா, நாவல் பழங்களைத் தின்னும் ஆசையில், தங்க அணிமணிகளைக் கொண்டு கொடுத்து, நாவல் பழங்கள் வாங்கி வந்ததாக ஆழ்வார் பாசுரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்பாரண்யமாக (நாவலங்காடு) இருந்த இடத்தில்தான், ஒரு வெண் நாவல் மரத்தின் அடியில் சிவப் பரம்பொருள், லிங்க வடிவில் வீற்றிருந்தார். அவருக்குதான் சிலந்தி விதானம் கட்டியது. யானை அபிஷேகம் செய்தது.
ஆனைக்காவின் தலமரம் வெண்ணாவல். வணங்கித் திரும்பி, இதே பிராகாரத்தில் எழுந்தருளும் தல விநாயகரான ஓங்கார விநாயகரையும் தரிசிக்கிறோம்.
உள் பிராகாரத்தில் நுழைந்து மூலஸ்தானம் நோக்கிச் செல்கிறோம்.
படிகள் இறங்கி இறங்கித்தான் செல்ல வேண்டும். மூலஸ்தான மூர்த்தி, தரை மட்டத்துக்குக் கீழாக இருக்கிறார். பஞ்சபூதத் தலங்களுள், ஆனைக்கா அப்புத் தலம் (நீர்த் தலம்). அதனால் மூலஸ்தானத்தில் எப்போதும் நீர், கொப்பளித்து ஊறிக் கொண்டே இருக்கிறது. ‘ஈரமுள்ளவர்’ என்று சுந்தரர் அழைத்தார். பக்தர்களுக்காக உணர்வில் ஈரம் கொள்ளும் எம்பெருமான், வடிவிலும் ஈரம் கொண்டு அருளுகிறார்.
மூலஸ்தான ஜம்புகேஸ்வரர், சிவலிங்கத் திருமேனியாக எழுந்தருளியிருக்கிறார். சதுர பீட ஆவுடையார். சிறிய லிங்கமானாலும் சிந்தையைக் கட்டி நிறுத்தும் செல்வத் திருமேனி. கருவறைக்குள் செல்ல வேண்டுமானால், பக்க வாட்டில் உள்ள சிறிய, உயரம் குறைந்த வாயில் வழியாகக் குனிந்துதான் செல்ல வேண்டும்.
கருவறைக்கு முன்பாக ஒன்பது துவாரங்கள் கொண்ட சாளரம் ஒன்று உண்டு. உள்ளே செல்லாமல், சிவலிங்கத் திருமேனியை இந்தச் சாளரத்தின் வழியாக தரிசிப்பதே மிகுந்த சிலாக்கியமானதாகக் கருதப்படுகிறது. மனித உடலுக்கு ஒன்பது வாயில்கள். ‘இந்த உடல் அழுகிக் கழுகுக்கு இரையாவதற்கு முன்னமே, ஆனைக்கா அண்ணலைத் தொழுதால் உய்யலாம்’ என்பார் திருநாவுக்கரசர்.
ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும் கழுகு உரிப்பதன் முன்னம் கழலடி தொழுது கைகளால் தூமலர் தூவிநின்று அழும் அவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே
என்று பாடுவார். ஒன்பது துவாரங்கள் உணர்த்தும் பொருளை உணர்ந்து, மனம்-மெய்-மொழிகளால் ஆனைக்கா அண்ணலை வணங்குகிறோம்.
இந்தச் சாளரம், திருச்சாலகம் என்று வழங்கப்படுகிறது. ‘சேவிக்கும் எல்லைத் திருச்சால் கதவமும்’ என்று திருவானைக்கா புராணம் பாராட்டும். எம்பெருமானைத் திருச்சாலகம் வழியாகத்தான் வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜம்புகேஸ்வரருக்கே ‘திருச்சாலகச் சோதி’ என்று பெயர் சூட்டுவார் அருணகிரிநாதர். அருங்கூர் திருச்சாலகச் சோதி தம்பிரானே என்று துதிப்பார். சாலகம் வழியே நோக்குகிறோம். ஜம்புகேஸ்வரர், அப்பு லிங்கேஸ்வரர், வெண்ணாவல் ஈசர், நீர்த்திரள்நாதர் என்றெல்லாம் திருநாமங்கள் பூண்ட அருள்மிகு ஆனைக்கா அண்ணல், குளிர்ச்சியும் சாந்தமும் கொண்ட சிவலிங்க ஸ்வரூபியாகக் காட்சி தருகிறார்.
கருவறை இருக்கும் பகுதியே, குளிர்ச்சியாக இருக்கிறது. அந்தப் பகுதியில் கால் பதித்தவுடனேயே நீர்த்திரள்நாதர், தம் தண்ணொளியால் நம்மை ஆட்கொள்கிறார். தென் ஆனைக்காவானைத் தென்பாண்டி நாட்டானை என்னானை என்னப்பன் என்பார்கட்கு இன்னமுதை என்று மாணிக்கவாசகர் பாடிய ஜம்புநாதரைப் பணிகிறோம்.
ஜ ம்புகேஸ்வரம் திருக்கோயிலில் உள்ள பல மண்டபங்களில் பல்வேறு சிற்பங்கள். இவற்றுள் ஆங்காங்கு சில சிற்பங்கள், இந்தத் திருத்தலத்தின் பெருமையைப் பலவாறு உணர்த்தக் கூடியவையாக உள்ளன. ஜம்புகேஸ்வரம் என்று இந்தத் தலத்துக்குப் பெயர் வந்ததற்கான ஒரு காரணமும் இவ்வாறு விளக்கப்படுகிறது.
ஜம்புமாதவன் என்றொரு முனிவர். நாவலங்காட்டில் தவம் செய்தார். அவரின் மடியில், நாவல் பழமொன்று விழுந்தது. சர்வேஸ்வரனுக்கே அந்தப் பழம் என்று தீர்மானித்து, அதை எடுத்துக் கொண்டு கயிலாயம் சென்றார். நிவேதனமாகப் படைத்தார். பக்தனின் காணிக்கையை ஏற்றுப் பழத்தை உண்ட பரமேஸ்வரன், கொட்டையை மட்டும் வீசிவிட்டார். அதையே பகவானின் பிரசாதமாகக் கருதி உண்டார் ஜம்புமாதவர். இறைவனின் அற்புதத்தால், வயிற்றுக்கு உள்ளேயே முளைவிட்டு நாவல் மரம் வளர்ந்து ஓங்கியது. முறையிட்ட முனிவரை மீண்டும் பொன்னி ஆற்றங்கரையில் உள்ள நாவலங்காட்டுக்குப் போகும்படி அருளினார் ஆண்டவன். ‘‘நாவலங்காட்டில் போய் நிலைத்திரு ஜம்புமாதவா! அங்கே, மர நிழலில் வந்து யாம் தங்குவோம்!’’ என்று இறையனார் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி முனிவரும் செய்ய, முனிவரே மரமாக, மரத்தடியில் சிவலிங்கர் எழுந்தருளினார்.
ஆனைக்கா அண்ணலை வழிபட்டு வழிபட்டு... மனம் ஆறாமல்... இன்னும் இன்னும்... என்று நிற்கிறோம்.
‘‘அம்பாள் வந்தாச்சு!’’ ஏதோவொரு குரல் ஒலிக்கிறது. திரும்பிப் பார்த்தால்.... அம்பிகை வேஷமிட்டு அர்ச்சகர் வருகிறார். என்ன இது?
உச்சிக்கால பூஜையின்போது, ஒவ்வொரு நாளும் அர்ச்சகர், அம்பிகை வேடமிட்டு ஐயனுக்கு பூஜை செய்வார்.
இதற்கும் ஓர் ஐதீகம் உண்டு. பூவுலகில் சிவலிங்க வழிபாடு செய்ய வேண்டுமென ஆசைப்பட்டார் அம்பிகையார். எழில் கொஞ்சும் பொன்னித் திருக்கரையை அடைந்தார். நாவலங்காடு நானாவித நறுமணங்களோடும் திகழ்ந்தது. பொன்னி நதியின் நீரெடுத்துச் சிவலிங்கமாக்கி வழிபடத் தொடங்கினார் அம்பிகையார்.
அம்பிகை வழிபட்ட நீர்த்திரள்நாதர். இவர் அப்பு லிங்கேஸ்வரர். அம்பிகை வழிபட்ட ஐதீகம் இப்போதும் தொடர்கிறது. உச்சிக்கால வழிபாட்டு நேரத்தில் அர்ச்சகர், அகிலாண்டநாயகி திருச்சந்நிதியிலிருந்து புறப்படுவார். அம்பிகை போல உடை புனைந்திருப்பார். கிரீடமும் உருத்திராட்ச மாலையும் மலரும் நீரும் கைகளில் ஏந்தி வருவார். மூன்றாம் பிராகாரத்தை முழுதாக வலம் வந்து சுவாமி சந்நிதிக்குச் செல்வார். தன்னை அம்பிகையாக பாவித்து பூஜை செய்வார். அம்பிகையே வந்து ஐயனை வழிபடுவது கண்கொள்ளாக் காட்சி.
திருவானைக்கா திருக்கோயிலில் இது தொடர்பாக இன்னுமொரு சிறப்பு சம்பிரதாயம் உண்டு. ஆனால், அது நாள்தோறும் இல்லை. பங்குனி மாதச் சித்திரைத் திருநாளில் மட்டும் நடைபெறும்.
ஜம்புகேஸ்வரர், சிவலிங்க வடிவில் நாவல்மர நிழலில் எழுந்தருளியவுடன், பரமனின் பாதார விந்தங்களில் பணிந்த பிரம்மா, உற்சவம் செய்ய அனுமதி கேட்டார். அதன்படி பிரம்மோற்சவம் நடைபெற்றது. மாசி மாத மிருகசீரிஷ நாளன்று ரிஷபக் கொடியேற்றி உற்சவம் தொடங்கினார் பிரம்மா. தேவர்களும் நாகர்களும் கந்தர்வர்களும் மனிதர்களும் பங்குபெற்ற இந்த உற்சவத்தில், முதல் பதினேழு நாட்கள் விநாயகருக்கும் முருகருக்கும் பிற மூர்த்திகளுக்கும் பூஜைகள் நடந்தன. பதினேழாம் நாள் மாலை, எட்டு ரிஷபக் கொடிகளை ஜம்புநாதர் அருளுடன், எட்டுத் திசைகளில் ஏற்றினார் பிரம்மா. மறு நாளில் இருந்து, ஜம்புநாதர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா போனார். இவ்வாறு இருபத்தேழு நாட்கள் செல்ல, பங்குனி மாத ரோகிணித் திருநாள் வந்துவிட்டது. அது பிரம்மாவுக்குரிய நாள். பிரம்மாவுக்கு ஓர் ஆசை. அன்று எட்டுத் திசைக் கொடிகளையும் இறக்கி, பெருமானின் தீர்த்தவாரி கொண்டு பிரம்ம தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்னும் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். அது மட்டுமல்ல... அன்றைய தினம் யாரெல்லாம் பிரம்ம தீர்த்தத்தில் நீராடுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் எம்பெருமான் அருள் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இறையனாரும் அவ்வாறே அருளினார். அதன் பின் பிரம்மா மூன்று நாட்கள் பள்ளியறைப் பெருமானுக்கான உற்சவமும், மூன்று நாட்கள் சண்டேசர் திருவிழாவும் செய்தார். பின்னர் மூன்று நாட்களுக்கு மௌனமாக இருந்து மௌனத் திருவிழாவும் செய்தார். இதன் பின்னரும் ஆசை அடங்காத பிரம்மா, ஐயனையும் அம்பிகையையும் வீதியுலா அழைத்துச் செல்ல விழைந்தார். ஜம்புநாதரும் அகிலாண்டேஸ்வரியும் முதல் திருச்சுற்றில் தொடங்கி ஐந்தாம் திருச்சுற்று வரை, எல்லாப் பிராகாரங்களிலும் வீதியுலா சென்றார்கள். பின்னர் ஒரு நாள் விடையாற்றி, ஒரு நாள் மண்டலாபிஷேகம், ஒரு நாள் நிறைவு பூஜை என்று உற்சவம் நிறைவுக்கு வந்தது.
பிரம்மா தொடங்கிய இந்த பிரம்மோற்சவ விழா, இப்போதெல்லாம் ‘பெருந்திருவிழா’ என்ற பெயரில் நாற்பது நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.
37-ஆம் நாளான பங்குனிச் சித்திரை நாளன்று, ஜம்புநாதர், அம்பிகை வேடமிடுவார். அம்பிகையோ, ஐயன் வேடமிடுவார். தலத்தின் ஐந்து பிராகாரங்களிலும் இருவரும் உலா வருவார்கள். ‘பஞ்சப் பிராகார விழா’ என்றும் ‘ஐந்து திருச்சுற்றுப் பெருவிழா’ என்றும் அழைக்கப்படும் இந்த உற்சவம் உள்ளமெல்லாம் கொள்ளையிட்டு உணர்வை உருக்கும்.
தாரமாய மாதராள் தானோர் பாகம் ஆயினானும், அவ்வாறே பாகம் ஆயினாளும் பக்தர்களுக்கு அருளக் கொள்ளும் முயற்சிகள்தாம் எத்தனை எத்தனை!
ஐந்து சுற்றுப் பெருவிழாவை மானசீகமாகவே கண்டு வணங்கி, மூலவர் சந்நிதிவிட்டு வெளிப் போகிறோம். மூன்றாம் பிராகாரம் அடைந்து அம்பிகை திருக்கோயில் செல்கிறோம்.
அகிலாண்டேஸ்வரி நாயகியின் சந்நிதி. தனித் திருக்கோயிலாகவே இருக்கிறது. சுவாமி மேற்கு நோக்கியவர் அல்லவா; இங்கே, அம்பிகை கிழக்கு நோக்கியவள்.
அம்பிகை திருக்கோயிலுக்குக் கோபுரமும் இரண்டு பிராகாரங்களும் உள்ளன. நேரடியாக அம்பிகை கோயிலுக்குள் வருவதற்கு வழி உண்டு. அம்மன் கருவறைக்குள் செல்வதற்கு முன், எதிரில் நான்கு திருக்கரங்களுடன் கூடிய ஸ்ரீபிரசன்ன விநாயகர் காட்சி தருகிறார்.
ஆதிசங்கரர் இந்தத் திருக்கோயிலுக்கு வருகை புரிந்த காலத்தில், அம்பிகை உக்கிரமானவளாக இருந்தாளாம். அம்பிகையின் உக்கிரம் தணிவித்து சாந்த ஸ்வரூபியாக ஆக்க விழைந்த சங்கர பகவத்பாதர், அம்பிகையின் திருமகனாரின் திருவுருவத்தை எதிரில் ஸ்தாபித்துக் கோபத்தைக் குறைத்ததாக ஐதீகம். இப்போதும்கூட, அம்பிகையை தரிசித்து விண்ணப்பிப்பதற்கு முன்னர், விநாயகரிடம் சொல்லிவிட்டுச் சென்றால், விநாயகர் நடத்திக் கொடுத்து விடுவார் என்பது ஐதீகம்.
அம்பிகையின் உக்கிரத் தன்மையால், ஆலயத்தினுள் செல்லாமல் வெளியிலிருந்தே வழிபாடு நடத்தினார்களாம் பக்தர்கள். இதைக் கண்டு மனம் நொந்த சங்கரர், அம்பிகையின் உக்கிரத்தை மேற்கொண்டும் தணிக்க உபயம் தேடினார். அம்பிகையின் செல்லப் பிள்ளையாயிற்றே. அவருக்குக் கிடைக்காத வழியா!
அம்பாள் ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாசலேஸ்வரி ஆயிற்றே! ஸ்ரீசக்கரங்கள் இரண்டைத் தயாரித்தார் சங்கரர். அம்பாளிடம் அவற்றைக் கொடுத்து உக்கிரமெல்லாம் இறக்க விண்ணப்பித்தார். ஸ்ரீசக்கரங்களைப் பிரதிஷ்டை செய்ய வேண்டும். இதுவோ நீர்த்தலம். எங்கே பிரதிஷ்டை செய்வது? தண்ணீரில் பிரதிஷ்டை செய்ய முடியுமா? பார்த்தார். அம்பாளின் காதுகளில் தாடங்கங்களாக அந்த ஸ்ரீசக்கரங்களை அணிவித்து விட்டார்.
இப்போதும் ஒவ்வொரு காதிலும் சிவசக்கரமும் ஸ்ரீசக்கரமும் அணிந்து தாடங்க மகிமை மிக்கவளாக ஸ்ரீசக்ர ஸ்வரூபிணி காட்சி தரும் விந்தைத் திருத்தலம் இது!
அம்பாளின் திவ்வியத் திருக்கோலம் வெகு அழகு. வார்த்தைகள் வர்ணிக்க முடியா உயர் அழகு!
நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். மேற்கரங்கள் இரண்டிலும் தாமரை மலர்கள். கவசம் அணிவித்து அலங்காரம் செய்யும்போது வலது மேற்கரத்தில் கிளியும் இடது மேற்கரத்தில் தாமரையும் அணிவித்து அழகு பார்க்கும் வழக்கமும் உண்டு. கீழ்க் கரங்கள் இரண்டும், அபய-வர முத்திரை காட்டி அருள்கின்றன.
அகிலாண்டநாயகியின் மந்தகாசப் புன்னகை உணர்வையெல்லாம் உருக்கி வசீகரிக்கிறது.
எண்ணிறந்த தாயர் வயிற்றிருந்து பிறந்(து) இடும் துயரமனைத்தும் நீங்க மண்ணிறந்து புனலிறந்து வயங்கிய செந் தீயிறந்து வளியினோடு விண்ணிறந்து பெருங்கருணைத் தாயாகித் தனது அகட்டின் விரவ வைத்துக் கண்ணிறந்த கவின் காட்டும் அகிலாண்ட நாயகியைக் கருத்துள் வைப்போம்
என்று திருவானைக்கா புராணத்தில், கச்சியப்ப முனிவர் போற்றிப் புகழும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி!
அம்பிகையின் முன்னர் முருகப் பெருமானும் எழுந்தருளியுள்ளார். ஒரு பக்கம் விநாயகரும் இன்னொரு பக்கம் முருகனும் எதிரில் எழுந்தருளி வணங்கக் கூடியவளாக இருக்கும் அம்பிகையை வழிபட்டு உய்வு அடைந்தவர்கள் பலர். ‘அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்’ என்று த்விஜாவந்தி ராகத்தில் பாடுகிற முத்துசாமி தீட்சிதர், ‘லம்போதர (விநாயகர்) குருகுக (முருகர்) பூஜிதே’ என்று மைந்தர்கள் வணங்கும் மங்கை நல்லாளைச் சரணத்தில் பாடுகிறார்.
அகிலாண்டேஸ்வரியின் அருளால்தான் தாயுமானவ சுவாமிகள் உயர்வுற்றார். ஒரு முறை இவர் திருச்சி மன்னரின் அரசவையில் முக்கியமான ஆவணம் ஒன்றைத் தன்னினைவு இன்றிக் கசக்கிப் போட, அரசிக்கான அவமரியாதை என்று மற்றவெரல்லாம் அவதூறு பேச... அதே நேரம் திருவானைக்காவில், அகிலாண்டேஸ்வரியின் திருத்துகிலில் நெருப்புப் பொறி பற்றியதும், வேகமாக உள் நுழைந்த தாயுமானவர் நெருப்பை அணைத்ததும், இதனை அர்ச்சகர்கள் பார்த்ததும், அவர்கள் கூடிவந்து நடந்தது கூறியதும், பின்னர் வெளிப்பட்டு வியப்பை ஏற்படுத்தின.
அண்டகோடி புகழ்காவை வாழும் அகி லாண்ட நாயகி என் அம்மையே!
- என்பார் தாயுமானவர்.
கச்சியப்ப முனிவரும், கமலை ஞானப்பிரகாசரும் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளும் இந்த அம்பிகையைப் பாடிப் பரவினார்கள்.
அகிலாண்டேஸ்வரி தாய், கன்னியாகவே இருப்பதாக ஓர் ஐதீகமும் உண்டு.
பூவுலகில் வந்து நாவலங்காட்டில், தவம் செய்து சிவலிங்கத்தைப் பூசித்த அம்பிகை, தன்னெதிரில் அருள் பாலித்த ஐயனிடம், வேதாந்த சித்தாந்தச் சந்தேகங்களுக்கு விளக்கம் வேண்டினாள். பரமனாரும் பொருள் விளக்கினார். ஞானம் முடிவற்றது என்றும் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டியதென்றும் இறையனார் உபதேசித்தார்.
சிவபிரான் குருவாக இருக்க, அம்பிகை மாணவியாக இருந்து அருள் நிறைவித்த அற்புதத் திருத்தலம்.
பொதுவாக பக்தர்களுக்கு உபாத்தியாயராக அம்பிகை இருப்பதாக ஐதீகம். ஹைமவதி என்னும் திருநாமத்துடன் உமா தோன்றி, இந்திராதி தேவர்களுக்கு அறிவு வழங்கியதாக உபநிஷதங்கள் கூறும். ஆயின், அந்த அம்பிகையே ஞானக் குழந்தையாகி சி¬க்ஷ பெறும் சிறப்புத் தலம் திருவானைக்கா!
கல்வி முழுவதும் முடியாத நிலையில், திருமணம் வேண்டாமென்று, அம்பிகை கன்னிக் கோலம் பூண்டு விட்டதாகக் கருதப்படுகிறது. எனவே, இந்தக் கோயிலில், திருக்கல்யாணத் திருவிழா கிடையாது. ஞானவாணியாக நிற்கும் அகிலாண்டநாயகி, தன்னை வணங்குபவர்களை ஞானவான்களாக்க வல்லவள். அவ்வாறு கவிஞ ரானார் வரதன்.
யார் இந்த வரதன்? திருவானைக்கா திருக்கோயிலில் பணி செய்து வந்தார். மெத்தப் படித்தவர் அல்லர். அதே கோயிலில் கணிகையாக இருந்த பெண்ணை மணந்தார். இருவரும் தினமும் ஆலயப் பணிகளில் ஈடுபட்டார்கள்.
அன்றொரு நாள். சுவாமி சந்நிதியில் அர்த்தஜாமம் வரை நடனமாட வேண்டிய முறை வரதனின் மனைவிக்கு வந்தது. இரவில், தான் திரும்பிவர நேரமாகும் என்பதால், கோயில் மண்டபத்திலேயே கணவனைக் காத்திருக்கச் சொன்னாள் அவள். தன் பணி முடித்து சற்றே விரைவாக வந்துவிட்ட வரதன், தூணில் சாய்ந்து கண்ணயர்ந்து விட்டார். பூஜை நிறைவடைந்து அந்தப் பெண் வந்தாள். அழைத்துப் பார்த்தாள், அரவமே கேட்கவில்லை. சரி, நேரமாகி விட்டதால், கணவன் வீடு சென்று விட்டார் போலும் என்று எண்ணியவள், உடனே வீட்டை அடைந்தாள்.
இங்கோ, மண்டபத்தில் இரவு நேரத்தில் இருட்டில் உறங்கிக் கொண்டிருந்த வரதன், ஏதோ ஒலி கேட்டுக் கண் விழித்தார். ஒரு பெண் நடக்கும் ஒலி; கால் தண்டைகளும் பாடகங்களும் சிலம்பின.
பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அழகு பூஷிதையான அந்தச் சிறுமி அருகில் வந்தாள். அதே மண்டபத்தில் இரவு-பகல் பாராமல் அம்பிகையை எண்ணித் தவம் செய்து கொண்டிருந்தார் பண்டிதர் ஒருவர். ஞானம் பெறுவதற்காக ஞானவாணியை வேண்டினார். அவருக்கு அருள வேண்டி அம்பிகை வந்தாள். ஆனால், சிறுமி வடிவத்தில், எவ்வித ஞான வெளிப்பாடும் இல்லாமல் வந்தாள். பண்டிதர் அருகில் சென்று, தன் வாயில் தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டே, பண்டிதரின் வாயைத் திறக்கச் சொன்னாள். வந்திருப்பவள் அம்பாள் என்பதை உணராத பண்டிதர், தாம்பூலம் உமிழ வாய் திறப்பதா என்று ஏசி அனுப்பி விட்டார். திரும்பிச் செல்ல யத்தனித்த அம்பாள், தூணில் சாய்ந்து உறங்கிய வரதனிடம் வந்தாள். கண் விழித்து நோக்கிய வரதனை வாய் திறக்கச் சொன்னாள். அம்பாளின் வாய்த் தாம்பூலம் ஏற்ற வரதன், அப்போது முதல் கார்மேகமாகப் பொழியும் காளமேகப் புலவரானார்.
அனைத்து வகைக் கவிதைகளிலும் வித்தகராக விளங்கிய காளமேகப் புலவர், அகிலாண்டேஸ்வரியையும் ஜம்புநாதரையும் பலவாறு போற்றிப் பாடினார். அகிலாண்டேஸ்வரியையே சரஸ்வதியாகவும் பாவித்து சரஸ்வதிமாலை எனும் நூலையும் பாடினார்.
திருவானைக்கா திருத்தலத்தின் மண்டபங்களும் மண்டபச் சிற்பங்களும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்னும்படி இருக்கின்றன. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள வசந்த மண்டபம் அருகில் ஒரு தூணில் காணப்படும் குறத்தி வடிவம் ஏக அழகு. குறத்தியின் குறுஞ்சிரிப்பும், கையில் பின்னிய கூடையும் கண்களைக் கொள்ளை கொள்கின்றன. இந்த இடத்துக்கே குறத்தி மண்டபம் என்னும் பெயர் உண்டு.
திருவானைக்கா திருக்கோயிலுக்குள் இருக்கும் சிறு சிறு கோயில்களும் ஏகப் பிரசித்தம். கி.பி. 14 -ஆம் நூற்றாண்டு வாக்கில் சமயபுரம் பகுதியை (அப்போதைய கண்ணனூர்) ஆண்டு வந்த போசள மன்னர் வீரசோமேஸ்வரன் (இவரே கிழக்கு கோபுரத்தைக் கட்டி முடித்தவர்) ஜம்புகேஸ்வரத்தில் நான்கு சிறு கோயில்களை நிர்மாணித்தார். தன் பாட்டன், பாட்டி, தந்தை, அத்தை ஆகியோரின் பெயர்களால் வல்லாளேஸ்வரம், பத்மாலீஸ்வரம், நரசிம்மேஸ்வரம், சோமளீஸ்வரம் என்று வழங்கியதாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
ராமபிரானும் இங்கு வழிபட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. திருக்கோயிலின் ஐந்தாம் பிராகாரத்துக்கு மேற்கே இருக்கும் ராம தீர்த்தமும், அதன் அருகில் உள்ள கரியமாலீஸ்வரர் (நீலகிரீஸ்வரர்) கோயிலும் ராமர் உருவாக்கியவை.
அகலிகைக்குச் சாபம் கொடுத்தபின், அவசரப்பட்டுச் சாபம் கொடுத்துவிட்டதற்காக வருந்திய கௌதம ரிஷியும், வேதவியாசரின் தந்தையாரான பராசர முனிவரும் திருவானைக்காவில் வழிபட்டார்கள்.
அள்ளக் அள்ளக் குறையாத அமுதசுரபியாக அருள் வழங்கும் ஆனைக்கா, சொல்லச் சொல்லக் குறையாத சிறப்புகள் கொண்டு இலங்குகிறது.
அருள்மிகு ஜம்புகேஸ்வரரையும் அருள்மிகு அகிலாண்டேஸ்வரியையும் எண்ணித் துதித்துக் கொண்டே வெளியில் வருகிறோம்.

No comments:

Post a Comment