Saturday, 5 August 2017

வெஞ்சமாக்கூடல் ! (கரூர்)

ரமனாருக்கு, இந்தப் பக்தரின் பாடல் என்றால், வெல்லக்கட்டி. பாடிக்கொண்டே வந்த அவருக்குப் பொருள் தேவைப்பட்டது. தலையைத் தலையை அசைத்துப் பாடலைச் சுவைத்த பரமனாரிடம் கேட்டேவிட்டார். பரமனார் கதைதான் நமக்குத் தெரியுமே!
சரியான ஓட்டாண்டி; வீடு- வாசல் இல்லாமல், சுடுகாட்டில் சுற்றித் திரியும் பண்டாரம். என்ன செய்வார் பாவம்! ஆனாலும், கேட்டால் கொடுக்க வேண்டுமே! சுடலையாண்டி என்றாலும், சொக்கத் தங்கமாக இரண்டு பிள்ளைகள். இருவரும் கொள்ளை அழகு! மூத்தவனுக்கு மூக்கு கொஞ்சம் நீளம் என்றாலும், பார்ப்பதற்குப் பிரகாசமாக இருப்பான்.
பாட்டுக்குப் பொருள் தரவேண்டும், என்ன செய்யலாம் என்று பார்த்துக்கொண்டே வந்த பரமனாரின் கண்களில், அந்த மூதாட்டி தென்பட்டாள். அவ்வளவுதான், நேரே போனார்; பிள்ளைகளை ஈடாக வைத்தார்; பாட்டியும் பொன் கொடுத்தாள்; அதை வாங்கிச் சென்று, அந்த பக்தரிடம் தந்துவிட்டார் பரமன்.
அதுசரி, ஆதிப் பரமனுக்கே பிள்ளைகளை ஈடாகப் பெற்றுக்கொண்டு பொன் கொடுத்த அந்த மூதாட்டி யார்? அவள்தான் அம்பிகை பரமேஸ்வரி.
சரி, அவ்வளவு தூரம் பரமனைப் பாட்டால் மயக்கிய பக்தர் யார்? வேறு யாராக இருக்கமுடியும்? எல்லாம் நமது சுந்தரமூர்த்தி சுவாமிகள்தாம்!
கிழவேதி வடிவாகி விருத்தையைக் கிட்டி என்றன்அழகாகும் மக்கள் அடகு கொண்டு அம்பொன் அருளுதி என்று எழுகாதலால் தமிழ் பாடிய சுந்தரர்க்கு ஈந்த ஒரு மழுவேந்திய விகிர்தேசுவரன் வாழ் கொங்கு மண்டலமே
- என்று கொங்கு மண்டலச் சதகம், இந்தத் தலத்து ஈசனைப் பற்றிப் பேசுகிறது. இந்த நிகழ்ச்சி, உண்மையில் நடந்ததா இல்லையா என்பது சர்ச்சை இல்லை. சுந்தரருக்குச் சிவனார் பொன் கொடுத்த தலங்களில், வெஞ்சமாக்கூடலும் ஒன்று என்பதால், இப்படியரு கற்பனை, அடியார்கள் மனதில் உதித்திருக்கவேண்டும். சொந்தப் பிள்ளைகளை அடகு வைத்தாலும், சுந்தரத் தமிழைக் கேட்கும் விருப்பம் ஈசனாருக்கு உண்டு எனும் எழிலார்ந்த காட்சியை ஏற்படுத்தி விட்டார்கள். அதிலும், தெய்வப் பிள்ளைகளை அடகு வைத்தால், யார் ஈடு கட்டுவது? அதுதான், அம்பிகையையே வம்புக்கு அழைத்துவிட்டார்கள்.
சுந்தரருக்குப் பொன் கிடைத்த தலம்; அவரின் சுந்தரப் பதிகம் பெற்ற தலம்; ஆறுகள் கூடுமிடத்தில், ஆற்றங்கரையில் உள்ள தலம்; அருணகிரிநாதரின் திருப்புகழ் கொண்ட தலம்; வெள்ளத்தால் அடித்துப் போகப்பட்ட திருக் கோயிலைப் பெரியோர்களும் அடியார்களும் இணைந்து திருப்பணி செய்து, புனருத்தாரணம் செய்த தலம்... கொங்கு நாட்டுத் திருத்தலங்களில் ஒன்றான வெஞ்சமாக்கூடல்!
கரூருக்குத் தெற்கில் அமைந்துள்ளது இந்தத் தலம். கரூர் - திண்டுக்கல் சாலையில் சென்று, ஆறுரோடு என்னும் இடத்தில் திரும்பினால், வெஞ்சமாங் கூடலூர் எனும் பெயர்ப் பலகை வழிகாட்டுகிறது. கரூரிலிருந்து நிறையப் பேருந்துகள் செல்கின்றன. கரூர் கோயிலின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கும் இந்தக் கோயிலுக்குக் கரூர் கோயில் வாசலிலேயே அழகாக வழி சொல்கிறார்கள். வெஞ்சமன் எனும் வேட்டுவ மன்னன் ஆட்சி செய்த பகுதி- வெஞ்சமாநகர்; அமராவதி ஆறும் அதன் கிளை நதியான சிற்றாறும் ஒன்றிணையும் இடம். எனவே, கூடலான வெஞ்சமாக்கூடல். கோயிலுக்கு அருகில், குழகன் ஆறு பாய்கிறது. இதையே குழகாறு, குடகன் ஆறு, குடவன் ஆறு என்றெல்லாம் அழைக்கிறார்கள்.
60-களில், பெருஞ்சிக்கல் ஒன்றைச் சந்தித்தது இந்தக் கோயில். வேட சந்தூர் அருகே உள்ள அணைக்கட்டு உடைந்து, குழகனாற்றில் வெள்ளம். கோயிலின் கருங்கற்கள், சுமார் 2 கி. மீ. தொலைவு வரை அடித்துச் செல்லப்பட்டன; ஊரும் அழிவைச் சந்தித்தது. பல்லாண்டு காலம் முயற்சி செய்த ஈரோடு அருள்நெறிக் கூட்டத்தார், 82-ல் தொடங்கி திருப்பணிகளைச் செய்து, 86-ல் கோலாகலமாக கும்பாபிஷேகமும் நிகழ்வித்தனர்.
அவர்களையும், திருக்கோயில் திருப்பணிகளில் உதவிய பெருமக்களையும் மானசீகமாக வணங்கியபடியே, கோயில் வாயிலில் நிற்கிறோம்.
கிழக்கு நோக்கிய ஆலயம்; ஐந்து நிலை ராஜகோபுரம். சிலைகள் இல்லையானாலும், கம்பீரத் தோற்றம். கோபுரத்துக்கு வெளியில், ஒருபுறச் சந்நிதியில் ஸ்ரீவிநாயகர்; மறுபுறச் சந்நிதியில் ஸ்ரீமுருகர். கோபுரத்திலிருந்து சுமார் 17 படிகள் இறங்கித்தான் உள்ளே செல்லவேண்டும். ஆற்றங் கரையாகவும், தாழ்நிலப் பகுதியாகவும் இருப்பதால், வெள்ளம் அடித்துச் சென்றிருக்கவேண்டும் என்பது புரிகிறது.
படிக்கட்டுகள் இறங்கியதும் நேர் முன்னால், கொடி மரம்- பலிபீடம், நந்தி. கோபுர வாயிலுக்கு அருகில், உள்புறத்தில் சந்திரன். வெளிப் பிராகாரம், ஆங்காங்கே செடிகொடிகளுடன் இருக்கிறது; சந்நிதிகள் ஏதுமில்லை இந்தப் பிராகாரமானது, ஸ்வாமி சந்நிதியைச் சுற்றி அம்பாள் சந்நிதியின் பின்புறம், உள் பிராகாரத்துடன் இணைந்துவிடுகிறது. அம்பாள் சந்நிதிக்கு வடக்குப் பக்கத்திலுள்ள ஸ்ரீநடராஜர் சபையையும் வலமாகச் சுற்றி வரும்போது, வடகிழக்குப் பகுதியில், நவக்கிரகச் சந்நிதி; அடுத்து பைரவர் சந்நிதி. கிழக்குச் சுற்றில், சனைஸ்வரரின் (ஸ்ரீசனீஸ்வரர்) தனிச் சந்நிதி. கோபுரத்தின் உள்பகுதியில், அந்தப் பக்கம் சந்திரன்; இந்தப் பக்கம் சூரியன். வலம் நிறைவு செய்து, கொடிமரத்தின் அடியில் வந்து பணிகிறோம்.
நேரே நின்று மூலவர் சந்நிதியைக் காணும்போது, சற்றே இடது பக்கத்தில், திறந்த மண்டபம் போன்ற அமைப்பு. இதுவே உள்பிராகாரம். இதன் தெற்குச் சுற்றில், முதலில் சைவ நால்வர் பெருமக்கள். தொடர்ந்து அறுபத்துமூவர். இந்த மூர்த்தங்களின் கீழ் அவரவர் நாடு, மரபு, காலம், நட்சத்திரம் ஆகிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளன.
இளைஞர்களும் சிறுவர்களும் கோயிலுக்கு வரும்போது, நாயன்மார்களைப் பற்றிய சிந்தனைகளை ஓரளவுக்கு இது தூண்டும். தென்மேற்கு மூலையில், ஸ்தல விநாயகர்; முன்னால் மூஷிக வாகனமும் எழுந்தருளியிருக்கிறது. தொடர்ந்து பஞ்ச லிங்கங்கள். வடமேற்குப் பகுதியில், வள்ளி- தெய்வானை உடனாய முருகப்பெருமான்; மயிலின் மீது கால் வைத்துக் காட்சி தருகிறார்; பன்னிரு கரங்கள். முருகனுக்கு இடது புறமாக மயில் உள்ளது. இந்தப் பெருமானை, அருணகிரியார் பாடித் துதிக்கிறார்.
வண்டுபோல் சாரத்து அருள் தேடிமந்திபோல் காலப் பிணிசாடிச்செண்டுபோல் பாசத்துடன் ஆடிச்சிந்தைமாயத் தேசித்தருள்வாயேதொண்டரால் காணப் பெறுவோனேதுங்கவேல் கானத்து உறைவோனேமிண்டரால் காணக் கிடையானேவெஞ்சமாக் கூடல் பெருமாளே
- என வேண்டுகிறார். நாமும் கந்தனைக் கொண்டாடி, அப்படியே வடக்குச் சுற்றில் திரும்பி, ஸ்வாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட இடத்தில் நுழைந்து, கிழக்குச் சுற்றை அடைகிறோம்.
நந்தியிடம் அனுமதி பெற்று, மூலவர் சந்நிதிக்குள் செல்கிறோம். பெரிய முகப்பு மண்டபம். கடந்து உள்ளே செல்ல, மூலவர் சந்நிதிக் கதவுகளில், கொங்கு நாட்டுத் தலங்கள் ஏழின் மூலவர் மூர்த்தங்களும் செதுக்கப்பட்டுள்ளன. சிறப்பான சிந்தனை; சிறப்பான செயல்பாடு. அர்த்த மண்டபத்தில் சிறிய விநாயகர்; நந்தி. அருகில் நின்று உள்ளே நோக்க... ஸ்ரீகல்யாண விகிர்தேஸ்வரர்.
குளங்கள் பலவும் குழியும் நிறையக் குடமாமணி சந்தனமும் அகிலும்துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டித்திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரைமேல்வளங்கொள் மதில் மாளிகை கோபுரமும்மணி மண்டபமும் இவைமஞ்சு தன்னுள்விளங்கும் மதிதோய் வெஞ்சமாக்கூடல்விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
- எனச் சுந்தரர் பாடுகிறார்.
இப்போது குழகனாறு என்று சொன்னாலும், சுந்தரர் என்னவோ சிற்றாறு என்றே பாடுகிறார். சிற்றாறும் அமராவதியும் கூடும் இடமென்பதால் 'கூடல்' என்பது மீண்டும் நினைத்தற்குரியது. 'விகிர்தன்' என்ற சொல்லுக்கு, குறைவு, வேறுபாடு போன்ற பொருள்களோடு, முறை, நெறி, விதி ஆகிய பொருள்களும் உள்ளன. முறையை ஏற்படுத்தி, அம்முறைப்படியே தாமும் இலங்கும் இறைவனார் என்பதைக் குறிப்பதற்காகவோ, இப்படியரு திருநாமத்தைச் சுந்தரர் செப்புகிறார்?!
மூலவர், அழகான சிவலிங்கத் திருமேனி. மூலவர் கோஷ்டங் களில், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீலிங்கோத்பவர், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை. தனி மண்டபத்தில் ஸ்ரீசண்டேஸ்வரர்.
ஸ்வாமி சந்நிதிக்கு இணையாக, அதன் வடக்குப் பக்கத்தில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது அம்பாள் சந்நிதி. நின்ற கோலத்தில் அபய வரம் காட்டுகிறாள் அருள்மிகு பண்ணேர்மொழியம்மை. இது, சுந்தரர் மொழிந்த திருநாமம்.
பண்ணேர் மொழியாளை ஒர் பங்குடையாய்
படுகாட்டகத்தென்றும் ஓர் பற்றொழியாய்
என்று அவர் பாடுகிறார். பண்போலும், இசைபோலும் மொழிகளைக்கொண்ட
அம்மை. இதுவே, வடமொழியில் மதுரபாஷிணி என்றும் விளங்குகிறது. விகிர்தநாயகி என்றும், விகிர்தேஸ்வரி என்றும் திருநாமங்கள் உள்ளன. கல்வெட்டுகளில், 'பனிமொழியார்' எனும் பெயர் காணப்பெறுகிறது.
ஆமாம், பார்வதிதேவி, பனிமலையில் இமவான் மகளாகப் பிறந்து, பனிமலையில் உறையும் பரமனார்க்கு வாழ்க்கைப் பட்டவள் அல்லவா! மொழியும் பனியின் குளிர்வாய்க் கொண்டவள்!
அம்மன் சந்நிதி கோஷ்டங்களில் மூர்த்தங்கள் இல்லை.
அழகான கோயில்; அமைதியான சூழல். பிராகாரத்தில் அமர்ந்தால், மனமெல்லாம் சாந்தம் குடி கொள்கிறது. உலகத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கு உதாரணங்களாக, விதிகளை வகுத்து அவற்றின்படியே, ஆணாகவும் பெண்ணாகவும், கணவனாகவும் மனைவியாகவும் காட்சியளித்து, அந்த முறைப்படியே செயல்வகுத்து, தந்தை- தாயாகவும் அருளாட்சி நடத்துகிற கல்யாண விகிர்தேஸ்வரரையும் விகிர்தேஸ்வரியையும் வழிபட்டுப் பணிகிறோம்.
'எம்மையும் தருமமுறைப்படி வாழச் செய் பரம்பொருளே' என்று வணங்கியபடியே திரும்புகிறோம்.

No comments:

Post a Comment