சித்திரை மாதம் அமா வாசையை அடுத்த மூன்றாம் நாள் வரும் திதி நாள், அட்சய திருதியை எனப்படும். மகத்துவம் மிகுந்த இந்தத் திருநாளன்று எந்த ஒரு செயலைத் துவங்கினாலும் அது முழுமையாக வெற்றி பெறும் என்பது ஐதீகம்.
அட்சயம் என்றால் பூரணமா னது, குறையாதது, அழியாத பலன் தரும் என்று பொருள். இந்த நாளுக்குரிய புராண மகிமைகள் ஏராளம்.
  செல்வத்துக்கு அதிபதியான குபேரன், சங்கநிதி- பதுமநிதி எனும் ஐஸ்வரியக் கலசங்களைப் பெற்ற நாள் அட்சய திருதியை ஆகும்.
 திருமகளின் எட்டு அவதாரங்களுள் ஐஸ்வரிய லட்சுமி மற்றும் தான்யலட்சுமி தோன்றியது இந்தத் திருநாளில்தான்.
 கிருத யுகத்தில், ஓர் அட்சய திருதியை தினத்தன்றுதான் பிரம்மா உலகைப் படைத்தார்.
 வனவாசத்தின்போது கடும் தவம் செய்த தர்மரின் முன்னால் காட்சி தந்த சூரிய பகவான், ‘அன்ன வளம் குன்றாத’ அட்சயப் பாத்திரத்தை அவருக்கு அளித்ததும் இந்த நாளில்தான்.
 இந்தப் புண்ணிய நாளில்தான் தசாவதாரங் களுள் ஒன்றான பரசுராம அவதாரம் நிகழ்ந்தது.
  ஈஸ்வரன் பிட்சாடனர் திருக்கோலத்தில் வந்து அன்னபூரணியான அம்பிகையிடம் பிட்சை பெற்ற திருநாளும் இதுதான். பிட்சாடனர் திருக்கோலத்தில் ஈசன், அம்பிகையிடமிருந்து இரந்து பிட்சை ஏந்தினார். இப்படி ஈஸ்வரனுக்கே அமுதளித்த அன்னபூரணிக்கும் மகத்தான அட்சய சக்திகள் கூடின. இந்தப் புராண சம்பவம் நிகழ்ந்த திருத்தலம் காசியம்பதி.
 மஹோதயம் எனும் நகரில் ஒரு வணிகன் இருந்தான். குணசீலனான அவன், அட்சய திருதியையின் மகிமையைக் கேள்வியுற்று, ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் கங்கையில் நீராடி, பித்ரு தர்ப்பணம் செய்வதுடன், கோ தானம், சுவர்ண தானம், பூமி தானம் போன்றவற்றைச் செய்தான்.
இதன் பயனால் அவன் மறுபிறவியில் குசாவதி என்ற நாட்டின் அரசனாகப் பிறந்து, அட்சயமான செல்வத்தைப் பெற்றதாகக் கதை.
எனவே, இந்த தினத்தில் கங்கா ஸ்நானம், பித்ரு தர்ப்பணம் இவற்றுடன் சுவர்ணம், விசிறி, குடை ஆகியவற்றை தானம் செய்வது அழியாத பலன் தரும் என்று கருதப்படுகிறது.
 அட்சய திருதியை அன்று சிலர் தங்கள் இல்லங்களில் மகாவிஷ்ணுவை நினைத்து ஒரு பூஜை செய்வார்கள். அதாவது, ஒரு படியில் அரிசி நிரப்பி அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, புதிய வஸ்திரம் சுற்றி அலங்கரித்து, உச்சியில் தங்கக் காசு ஒன்றை வைத்து, வாசனை மலர்களால் அர்ச்சித்து பூஜிப்பார்கள். இதனால், அந்த ஆண்டு முழுவதும் இல்லத்தில் எந்த விதக் குறையுமின்றி தங்கம் கொழிக்கும் என்பது ஐதீகம். இதனால்தான் அன்று மக்கள், நகைக் கடைகளுக்குச் சென்று புதிய நகைகளை வாங்கும் வழக்கம் ஏற்பட்டது!
|
No comments:
Post a Comment