சிவபெருமானின் 64 மூர்த்தங்களில் ஒன்றான அரியர்த்தர் திருக்கோலத்தில் இறைவன் அருள்பாலிக்கும் திருத்தலம் சங்கரன்கோவில். இது, பாண்டிய நாட்டின் பஞ்சபூத தலங்களில் பிருதிவி (மண்) தலமாகத் திகழ்கிறது. மற்றவை: தேவதானம்(ஆகாயம்), தென்மலை (வாயு), தாருகாபுரம் (நீர்), கரிவலம்வந்தநல்லூர் (நெருப்பு).
 திருநெல்வேலி மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில், ராஜபாளையத் துக்குத் தெற்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சங்கரன்கோவில். விருதுநகர்- தென்காசி ரயில் மார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவு.
 இங்கு அருள்பாலிக்கும் இறைவன் ஸ்ரீசங்கரலிங்கனார் பெயரிலேயே, தலத்தின் பெயரும் வழங்கப்படுகிறது. முற்காலத்தில் வழங்கப்பட்ட, ‘சங்கரநயினார்கோவில்’ என்ற பெயரே பிற்காலத்தில், ‘சங்கரன்கோவில்’ என்று மருவியதாகச் சொல்கிறார்கள். ராசபுரம், பூ கயிலாயம், புன்னைவனம், சீராசபுரம், கீராசை, வாமாசைபுரம், கூழை நகர் ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு உண்டு. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள், ஆவுடையம்மன்கோவில் மற்றும் தவசுக் கோவில் ஆகிய பெயர்க ளால் அழைக்கின்றனர்.
 கோமதியம்மன் மட்டுமின்றி இந்திரன், பைரவர், சூரியன், அக்னி ஆகிய தேவர்களும் அகத்தியர், பத்திசாரர் ஆகிய முனிவர்களும் வழிபட்ட திருத்தலம் இது.
  தேவேந்திரனின் மகன் சயந்தன். இவன், சீதாதேவி யின் மேல் மையல் கொண்டு, காக்கை வடிவில், அவள் மேனியில் அலகால் கொத்தித் துன்புறுத்தினான். ஸ்ரீராம பிரான் தர்ப்பைப் புல்லை எடுத்து சயந்தன் மீது ஏவினார். இதனால் ஒரு கண்ணில் பார்வை இழந்த சயந்தன், காக்கை உருவை நீக்க முடியாமலும் வருந்தினான். பிறகு, தன் தந்தையின் ஆலோசனைப்படி, அவர் கொடுத்த முத்துமாலையுடன் இந்தத் தலத்துக்கு வந்து, ஸ்ரீசங்கரலிங்கத்துக்கு அந்த மாலையை அணி வித்து வழிபட்டு சுயரூபம் பெற்றான்.
 உறையூர் சோழன் வீரசேனன், தன் மகளுக்கு முடிசூட்டிய பின் இந்தத் தலத்துக்கு வந்து, சிவசன்மன் என்ற அடியார் மூலம் ஐந்தெழுத்து மந்திரம் உபதேசிக்கப் பெற்று சிவ பூஜையின் மூலம் ஸ்ரீசங்கரனாரின் திருவருளைப் பெற்றானாம்.
 எலி பிடிக்கச் சென்றபோது கிடைத்த புதையலைக் கொண்டு தீய வழியில் பாவத்தைச் சேர்த்த வேடன் ஒருவன், இந்தத் தலத்துக்கு வந்து நாகசுனைக் கரையில் வீழ்ந்து இறந்ததனால் பாவம் நீங்கி ஸ்ரீசங்கர னாரின் திருவருளைப் பெற்றான் என்கின்றன புராணங்கள்.
 சேற்றூர் என்ற தலத்தின் அருகே ஓடும் தேவியாற்றங்கரையில் வசித்தவர் சிவராத முனிவர். இவரின் மகன் கன்மாடன். இவன், பசுவைக் கொன்றதனால் உண்டான தனது பாவம் தீர, சங்கரன்கோவிலுக்கு வந்து நாகசுனையில் மூழ்கி மூன்றே நாட்களில் ஸ்ரீசங்கரனாரின் திருவருளைப் பெற்று நற்கதி அடைந்தான் என்பர்.
  கருவநல்லூரை ஆட்சி செய்த அரசன், பிரகத்துவச பாண்டியன். பிள்ளை இல்லாத இவனது குறையைப் போக்க எண்ணிய கருவநல்லூர் ஈசன், ‘‘நான், ஸ்ரீசங்கரனார் என்ற நாமத்துடன் அருள்பாலிக்கும் புன்னை வனம் சென்று, அங்குள்ள எனது கோயிலைப் பெரிதாக் கட்டி வழிபாடு செய். விரைவில் உனது குறை நீங்கும்!’’ என்றருளினார். அதன்படியே பிரகத்துவச பாண்டியன், புன்னை வனம் வந்து வழிபட்டு ஸ்ரீசங்கர லிங்கனாரின் திருவருளால் விஜயகுஞ்சர பாண்டியனை மகனாகப் பெற்றான்.
 1923-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி திருச்செந்தூருக்குச் சென்ற காஞ்சி மகா பெரியவர், அங்கு ஐந்து நாட்கள் தங்கியிருந்தார். பிறகு, பாத யாத்திரையாகச் சென்று அம்பாசமுத்திரம், பாபநாசம், தென்காசி, திருக்குற்றாலம் ஆகிய தலங்களை தரிசித்து விட்டு இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீகோமதியம்மன் சமேத சங்கரலிங்கர் மற்றும் சங்கர நாராயணரை தரிசித்துள்ளார்.
 இந்தத் திருத்தலத்தையும், இங்குறையும் தெய்வங்களையும் போற்றும் நூல்கள் பல உண்டு. அவை: சங்கரநயினார் கோயில் சங்கரலிங்கர் உலா, சங்கரநயினார் கோயில் அந்தாதி, சங்கர லிங்கர் சதகம், கோமதியம்மை பிள்ளைத் தமிழ், சங்கர சதாசிவ மாலை. இவற்றுள் ‘சங்கரநயினார் கோயில் அந்தாதி’ எனும் நூல் ‘கூழையந்தாதி’ என்று சிறப்பு பெயருடன் திகழ்கிறது. இதை, மகோபாத்யாய உ.வே. சாமிநாத ஐயர் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். தவிர, மதுரை ராமலிங்கம் பிள்ளை இயற்றிய, ‘சங்கரநயினார்கோவில் கோமதியம்மை தவ மகிமை அம்மானை’ மற்றும் சித்தாந்த பண்டித பூஷணம் ஈசுவர மூர்த்திப் பிள்ளை இயற்றிய, ‘கோமதி ரத்தின மாலை’ ஆகிய நூல்களும் பிரசித்திப் பெற்றன.
 ‘பூ கயிலாய மான்மியம்’ என்கிற ஸ்ரீசங்கர நாராயண க்ஷேத்ர மான்மியம்’ என்ற வடமொழி நூல், தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 1919-ல் வெளியானது. இதே நூல் மீண்டும் 96-ல் அச்சிடப்பட்டது. திருக் குற்றாலக் குறவஞ்சி எனும் நூல், சங்கர நயினார் கோயிலை, ‘புன்னைக் காவு’ என்று குறிப்பிடுகிறது.
 ‘கோமதி மகிமை’ என்ற தலைப்பில் வரும் பாரதியாரது தோத்திரப் பாடல்கள் சங்கரன்கோவிலின் மகிமையைக் கூறுகின்றன.
 சங்கரன்கோவிலின் தல புராணத்தை இயற்றி யவர் சீவலமாற பாண்டி மன்னர் ஆவார். சுமார் 790 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் இந்தத் தலத்தில் சிறிது காலம் தங்கியிருந்ததாகவும் அறிய முடிகிறது. இந்த ஊருக்குத் தென்மேற்கில் உள்ள சீவலப்பேரி குளம், இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள சீவலராயன் ஏந்தல் எனும் ஊர் ஆகியன இவரது பெயரால் அழைக்கப்படுகின்றன.
 தல புராணத்தின் முதல் ஆறு சருக்கங்கள், ஊற்று மலை சமஸ்தான வித்வான் புளியங்குடி முத்து வீரப்பக் கவிராயரால் கி.பி.1913-ல் இயற்றப்பட்டவை. தல புராணத்துக்கு பதவுரையும், சுருக்கமும் எழுதியவர் மு.ரா.அருணாசலக் கவிராயர்.
 ஒருமுறை பார்வதி தேவிக்கு, ‘பரமன்- பரந்தாமன்... இருவரில் பெரியவர் யார்?’ என்ற சந்தேகம் எழுந்தது. தனது சந்தேகத்தை பரமனிடமே வினவினாள் தேவி.
புன்னகைத்த சிவனார், ‘‘பூவுலகில், பசுக்கள் நிறைந்த புன்னை வனம் சென்று தவம் இயற்று. அங்கு யாம் எழுந்தருளி உன் சந்தேகத்தை தீர்ப்போம்!’’ என்றார். அதன்படி பூலோகம் வந்த உமையவள் புன்னை வனம் சென்று, தவத்தில் ஆழ்ந்தாள்.
நாட்கள் கழிந்தன. பார்வதி தேவியின் சந்தேகத்தைத் தீர்த்தருள எண்ணினார் சிவபெருமான். கடக ராசியில் சூரியன் பிரவேசிக்க... சந்திரன், மகர ராசியில் இருந்து தனது சொந்த வீட்டை 7-ஆம் பார்வையாகப் பார்க்க... ஆடி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடிய நன்னாளில் நள்ளிரவு வேளையில்... தன் மேனியின் ஒரு பாதி சங்கரனாகவும் மறு பாதி நாராயணனாகவும் திகழ ஸ்ரீசங்கரநாராயணராக காட்சி தந்தார் இறைவன்.
இந்தத் திருக்காட்சியால் அரியும் சிவனும் ஒன்றே என்றுணர்ந்தாள் அம்பிகை.
பிறகு, ஈசனின் சுயரூப தரிசனத்தைக் காண வேண்டி மீண்டும் தவத்தைத் தொடர்ந்தாள் தேவி. அதன் பலனாக தனது சுயரூபத்தில் காட்சித் தந்த சிவனார், உமைவளுடன் திருமணக் கோலம் கண்டார்.
 காச்யப முனிவருக்கு இரண்டு மனைவிகள். அவர்களில் விநதை, கருடனைப் பெற்றெடுத்தாள். கத்ரு, பாம்புகளை ஈன்றாள். இந்த இருவருக்கும் இடையேயான முன்பகையின் விளைவால் கருடனும் பாம்புகளும் மோத நேர்ந்தது.
 இறுதியில் அனந்தன் முதலான பாம்புகள் கருடனைச் சரணடைந்தன. ஆதிசேஷன் என்ற பாம்பு மகா விஷ்ணுவுக்கு படுக்கை ஆனது. வாசுகி சிவனாருக்கு ஆபரணம் ஆனது. சங்கன்- பதுமன் ஆகிய நாகங்கள் முறையே சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவின் பக்தர்களானார்கள். உமாதேவியை போலவே இவர்கள் இருவருக்கும், ‘சிவபெருமான்- மகாவிஷ்ணு... இருவரில் யார் பெரியவர்?’ என்ற சந்தேகம் எழுந்தது.பூலோகம் வந்து அத்ரி முனிவரிடம் தங்களது சந்தேகம் குறித்துக் கேட்டனர். அவர், ‘சிவபெருமானே உயர்ந்தவர்!’ என்றார். இதை பதுமன் ஏற்கவில்லை. எனவே தேவலோகம் வந்தவர்கள் அங்கு இந்திரனிடம் தங்களது சந்தேகத்தைத் தீர்க்கும்படி வேண்டினர். அவன் வியாழ பகவானிடம் கேட்டுத் தெளிவு பெறுமாறு கூறி அனுப்பினான்.
வியாழ பகவான் அவர்களிடம், ‘‘உமாதேவி தவம் இருந்த புன்னை வனம் சென்று தீர்த்தம் ஏற்படுத்தி அங்குள்ள இறைவனை வழிபட்டு வாருங்கள். உங்கள் ஐயம் தீரும்!’’ என்றருளினார்.
அதன்படி பூலோகம் வந்த சங்க-பதுமர்கள் புன்னை வனத்தை அடைந்து தீர்த்தம் ஏற்படுத்தி சிவனாரை வழிபட் டனர். அவர்களுக்கும் சங்கர நாராயணராகக் காட்சி தந்து அருள்பாலித்தார் இறைவன்.
சங்கரநாராயணர் திருக் கோலம் கண்டு தங்களது சந்தேகம் தீர்ந்த அந்த நாகர்கள், ‘‘ஸ்வாமி, எங்கள் பேதமை ஒழிந்தது போல உலக மக்களும் ‘அரியும் அரனும் ஒன்றே!’ என்று உணரும் விதம் தாங்கள் அருள் பாலிக்க வேண்டும். இந்த இடம் எங்கள் பெயரால் திகழ வேண்டும்!’’ என்று வேண்டினர். அப்படியே அருள் பாலித்தார் இறைவன்.
 இந்த நாகர்கள் உருவாக்கிய நாக சுனை, கோயிலுக்குள்ளே அழகான நடு மண்டபத்துடன் திகழ்கிறது. காற்றைப் புசிக்கும் சர்ப்பங்களால் உருவாக்கப்பட்ட தீர்த்தம் ஆதலால் இதில் நண்டு, ஆமை, தவளை, மீன் ஆகிய நீர் வாழும் உயிர்கள் வசிப்பதில்லை என்கிறார்கள். குஷ்டம், குன்மம், மனநோய் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாக சுனையில் நீராடி, கோமதியம்மன் மற்றும் சங்கர லிங்கனாரை வழிபட்டால் நோய் நீங்கி குணம் பெறலாம் என்பது ஐதீகம். நாக சுனை தவிர, அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சூரிய தீர்த்தம், வைரவ தீர்த்தம், கௌரி தீர்த்தம் ஆகியனவும் இந்தத் தலத்தில் உண்டு. ஸ்ரீசங்கரலிங்கனார் சந்நிதியின் நிருதி திக்கில் சங்கர (இந்திர) தீர்த்தம் உள்ளது. ஊருக்குத் தெற்கில் உள்ளது ஆவுடைப் பொய்கை. இதில், தை மாதம் கடைசி வெள்ளியன்று தெப்பத் திருவிழா நடைபெறும்.
 கல்வெட்டு மற்றும் சரித்திரக் குறிப்புகளின்படி சுமார் 945 ஆண்டுகளுக்கு முன்பு, உக்கிர பாண்டிய மன்னரால் இந்தக் கோயில் கட்டப்பட்டதாக அறிய முடிகிறது.
 தேவர்களுள் ஒருவனான மணிக்கிரீவன், பார்வதி தேவியின் சாபத்தால் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அவன், புன்னை வனத்தின் (கரிவலம்வந்தநல்லூரில் ஸ்ரீபால்வண்ணநாதர் ஆலயத்தில் உள்ள தோட்டத்தின்) காவலனாக பணி புரிந்தான். அதனால் அவனை காப்பறையன் மற்றும் காவற்பறையன் ஆகிய பெயர்களால் அழைத்தனர். ஒரு நாள் தோட்டப் பராமரிப்பு பணியின் நிமித்தம் அங்கிருந்த புற்று ஒன்றை அகற்ற முற்பட்டான் காவற் பறையன். அப்போது அதனுள் இருந்து பாம்பு ஒன்றின் மீது வெட்டுப்பட்டு, துண்டானது. அருகில் சிவலிங்கம் ஒன்றும் வெளிப்பட்டது. காவற்பறையன் திகைத்தான். இதை மன்னரிடம் தெரிவிக்க ஓடினான்.
 இந்த நிலையில், ஸ்ரீமீனாட்சியின் பக்தரான மன்னர் உக்கிரபாண்டியர் (இவர் மணலூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்) அம்மனை தரிசிக்க மதுரைக்குக் கிளம்பினார். வழியில் பெருங்கோட்டூர் என்ற இடத்தை அடைந்ததும் அவரது பட்டத்து யானை மேற்கொண்டு நகராமல் அடம் பிடித்தது. தனது தந்தங்களால் மோதி தரையைப் பெயர்த்த யானை அங்கேயே படுத்துக் கொண்டது. ‘ஏதேனும் தெய்வ குற்றம் நிகழ்ந்து விட்டதோ!’ என மன்னர் பதறினார்.
அப்போது, மன்னர் இங்கிருக்கும் செய்தியறிந்து ஓடோடி வந்த காவற்பறையன், புன்னை வனத்தில் நிகழ்ந்ததை மன்னரிடம் விவரித்தான். அவனுடன் புன்னை வனம் சென்ற மன்னர் உக்கிரபாண்டியன், அங்கிருந்த புற்றையும், வாளால் தாக்கப்பட்ட பாம்பையும், புற்றிடம் கொண்ட லிங்க மூர்த்தியையும் கண்டார். அப்போது அங்கோர் சிவாலயம் அமைக்கும்படி ஓர் அசரீரி கேட்டது. அதன்படியே அந்த இடத்தில் சிவாலயம் எழுப்பிய உக்கிரபாண்டியன், தனது பட்டத்து யானை மூலம் பிடிமண் எடுத்து பெருவிழா கொண்டாடினான். இந்த ஆலயமே ஸ்ரீசங்கரநாராயணர் திருக்கோயில். உக்கிரபாண்டியனின் பட்டத்து யானை தனது தந்தத்தால் (கோடு) தரையைத் தோண்டிய இடமே இன்றைய பெருங்கோட்டூர்.
சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரலிங் கத்தை உலகறியச் செய்யக் காரணமான காவற்காரனுக்கு ஊரின் தெற்கே சிறு கோயில் ஒன்றும் உள்ளது. இந்தக் கோயில் உள்ள தெரு, காப்பறையன் தெரு எனப்படுகிறது. காவற்பறையனுக்கு அன்றாட பூஜைகள் நடைபெறுகிறது. சித்திரை விழாவின்போது அவருக்குச் சிறப்பு வழிபாடு செய்த பிறகே கொடியேற்றம் நிகழ்கிறது.
 பராக்கிரம பாண்டியன் (1473-1507), பாண்டியன் கெடில வர்மன் (1475), அதிவீரராம பாண்டியன் (1562-1605) ஆகியோரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் மேற்கொண்டதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
 திருநெல்வேலியைச் சார்ந்த வடமலையப்ப பிள்ளையும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளார். கோமதியம்மை சந்நிதியின் கொடிமர மண்டபம், அம்பலம், கோபுரம், களஞ்சியம், மடைப்பள்ளி, மணிமதில், தேர், தேர் மண்டபம், நிருதித் திக்கு மண்டபம், மேலை வீதித் திருமடம், பூங்காவனம், தெப்பக் குளம், மண் மண்டபம், கயிலாய வாகனம், சிங்க வாகனம், பூத வாகனம், அம்மைக்கு அரதன் அங்கி மற்றும் அறுபத்துமூவர் விக்கிரகங்கள் ஆகியவற்றை இவர் அமைத்ததாக ‘சங்கரலிங்கர் உலா’ என்ற நூல் குறிப்பிடுகிறது. இன்றும் இங்குள்ள கொடிமர மண்டபத் தூண் ஒன்றில் வடமலையப்பப் பிள் ளையின் திருவுருவைக் காணலாம்.
  சங்கரனார் திருக்கோயிலை இன்று நாம் காணும் அளவுக்குப் புதுப்பித்தவர் முன்னாள் தர்ம கர்த்தாவான அமரர் என்.ஏ.வி. சோமசுந்தரம் பிள்ளை. இவர், சங்கரநாராயணர் சந்நிதியின் முன்னுள்ள மண்டபம், அம்பலம், ஸ்ரீநடராஜர் சந்நிதி, ஆறுமுகநயினார் சந்நிதி, கோயில் கோபுரம், நாக சுனை முன் மண்டபம், அங்கூர் விநாயகர் கோயில் கோபுரம், மேலைவாசல் முன் மண்டபம் ஆகியவற்றைக் கட்டியது உட்பட பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார்.
 ரத வீதிகள் சூழ ஊரின் நடுநாயகமாக, சுமார் 4 ஏக்கர் 50 செண்ட் பரப்பளவில் அமைந்துள்ளது ஸ்ரீசங்கரநாராயணர் திருக்கோயில். ஆனையூர் மலையில் இருந்து கல் எடுத்து வரப்பட்டு இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறுகிறார்கள். இது, ஒரே வளாகத்தில் ஸ்ரீசங்கரலிங்க சுவாமி கோயில், ஸ்ரீசங்கரநாராயணர் கோயில் மற்றும் ஸ்ரீகோமதி அம்மன் கோயில் என மூன்று பிரிவாகத் திகழ்கிறது. இந்த மூன்று கோயில்களும் கருவறை, அர்த்த மண்டபம், மணி மண்டபம், மகா மண்டபம் மற்றும் திருச்சுற்று ஆகியவற்றுடன் விளங்குகின்றன.
 திருக்கோயிலின் ராஜ கோபுரம் சுமார் 125 அடி உயரத்துடன் 9 நிலைகள் கொண்டு திகழ்கிறது. உச்சியிலுள்ள கலசங்கள் ஒவ்வொன்றும் சுமார் 7 அடி - 4 அங்குலம் உயரம் உள்ளவை. இதன் 9-வது நிலையில் பெரிய மணி ஒன்று... இரண்டு நாழிகைக்கு ஒரு முறை அடிக்கும்படி அமைக்கப்பட்டிருந்ததாம். தற்போது அது செயல்படவில்லை.
 இந்த ஆலயத்தின் பிராகாரச் சுவர்களில், பற்பல தெய்வ ஓவியங்கள் தீட்டப்பட்டிருக் கின்றன. அவற்றுள், ஸ்ரீவிநாயகரின் 16 திருக்கோலங்கள், ஸ்ரீஅரங்கநாதர் சயனம், ஞான சக்திதரர், ஸ்ரீதண்டாயுதபாணி, தேவசேனாதி பதி சமேத ஸ்ரீசுப்ரமணியர் உட்பட முருகப் பெருமானின் திவ்ய திருக்கோலங்கள் சில, தசாவதாரக் காட்சி ஆகியன குறிப்பிடத் தக்கவை.
 ராஜ கோபுர வாயிலுக்கு நேரே கோயிலின் தென் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீசங்கரலிங்கனார் சந்நிதி. இதன் பிராகாரச் சுவர் முழுவதும் திருமுறைப்பாக்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. கொடி மரம், பலிபீடம், தாண்டி உட்புகும் முகப்பில் அதிகார நந்தி மற்றும் சுயசை தேவி தரிசனம். கன்னிமூலையில் நாக ஆபரணம் ஏந்திய ஸ்ரீசர்ப்ப விநாயகர். வாயு மூலையில் ஸ்ரீநாக ராஜனுக்குப் புற்றுக்கோயில் உள்ளது. சர்ப்ப விநாயகரை வணங்கி நாகராஜனுக்கு பால், பழம், முட்டை நைவேத்தியம் செய்தால் நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
சங்கரலிங்கனார் சந்நிதியின் கிழக்குப் பிராகாரத்தில் உள்ள வலப்புறத் தூணில் உக்கிரபாண்டியனும், இடப்புறத் தூணில் உமாபதி சிவமும், வணங்கும் கோலத்தில் விக்கிரக வடிவில் உள்ளனர். இங்கு சந்திர- சூரியர்களையும் தரிசிக்கலாம்.
தெற்குப் பிராகாரத்தில் மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய சைவ நால்வரைத் தொடர்ந்து மகாவிஷ்ணு, அறுபத்துமூவர், ஜுரதேவர், காந்தாரி, பிரமசக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வராஹ சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி, சேக்கிழார் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். அடுத்து வள்ளி-தெய்வானையுடன் ஸ்ரீசுப்பிரமணியர்.
வடக்குப் பிராகாரத்தில் தெற்கு மூலையில் ஸ்ரீவன்மீகநாதர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் வடக்கு மூலையில் சனி பகவான், ஸ்ரீகாசிவிஸ்வநாதர், ஸ்ரீபைரவர் மற்றும் ஸ்ரீதுர்கா தேவி ஆகியோரையும் தரிசிக்கலாம். இங்கு துர்க்கை தென்முகமாக அமர்ந்திருப்பது, ‘அவள் எமபயம் போக்கி அபயம் அளிப்பவள்!’ என்பதை உணர்த்துவதாக உள்ளது.மூலவருக்குப் பின்புறம் கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்குப் பதிலாக யோக நரசிம்மர் அருள் புரிகிறார். மண்டபத்தில் தெற்கு நோக்கி காட்சி தரும் ஸ்ரீநடராஜர் ஊன நடனமும், ஞான நடனமும் ஆடுவதாக ஐதீகம். இவரின் அருகே சிவகாமி அம்மையார் தாளம் போட... காரைக்கால் அம்மையார் பெருமானின் திருநடனத்தை பரவசத்துடன் ரசித்த நிலையில் உள்ளார். இந்தக் கோயிலில் ஆறுமுகருக்கும் சந்நிதி உண்டு. உள்ளே கருவறையில் சிறிய லிங்க மூர்த்தமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீசங்கரலிங்கப் பெருமான். இவர் சுயம்பு லிங்கம். அருகே எழிலே உருவாக ஸ்ரீமனோன்மணிதேவி.
ஸ்ரீசங்கரலிங்கனார், மணிக்கிரீவன் என்ற காவலனுக்கு வாலற்ற பாம்பு வடிவில் காட்சி கொடுத்ததால் இவருக்கு கூழைப்பிரான் பெயருண்டு. எனவே இந்தத் தலமும் கூழை நகர் என்றானது. இங்கு ஓடும் ஆறு கூழை எனப்பட்டது. தவிர இந்த இறைவனை- கூழைக் குழகர், கூழை அமலர், தென்கூழைச் சங்கரர், கூழையரும் பொருள், கூழைக் கறைக் கண்டர், கூழைக் கங்காளர், கூழைவிமலர், கூழையுகந்த பிரான், கூழைப் புனிதர், கூழைக் கண்ணுதலார் ஆகிய பெயர்க ளாலும் வழங்குவர். ஸ்ரீசங்கர மூர்த்தி, வாராசை நாதன், வைத்தியநாதன், சீராசை நாதன், புன்னைவன நாதன், கூழை யாண்டி ஆகிய பெயர்களும் உண்டு. ஸ்ரீசங்கரலிங்கனாரின் உற்சவருக்கு ஸ்ரீஉமா மகேஸ்வரர் என்று திருநாமம்.

 தட்ச யாகத்தில் பங்கு கொண்ட சூரிய பகவானை கடுமையாக தண்டித்தார் அகோர வீரபத்திரர். இதனால் ஏற்பட்ட உடற் துன்பமும், சிவ நிந்தை செய்ததால் ஏற்பட்ட பாவமும் தீர, சூரிய பகவான் 16 க்ஷேத்திரங்களில் சிவ பூஜை செய்தார். அதில் ஒன்று சங்கரன்கோவில் என்பர். புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில் முறையே மூன்று நாட்கள் (மார்ச் 21,22,23 மற்றும் செப்டம்பர் 21,22,23) சூரியக் கதிர்கள் ஸ்ரீசங்கரலிங்கத்தின் மீது விழுந்து பூஜிப்பதைக் காணக் கண்கோடி வேண்டும்.
 இந்த சந்நிதியில் வேண்டுதல் பெட்டி ஒன்று உள்ளது. நாகதோஷம் மற்றும் தேள் முதலான விஷ ஜந்துக்களின் தொல்லைகள் நீங்க... வெள்ளி மற்றும் தாமிரத்தாலான அவற்றின் வடிவங்களையும், கண் மற்றும் கை- கால்களில் ஏற்படும் நோய் மற்றும் குறைபாடுகள் நீங்க... வெள்ளி மற்றும் பித்தளையால் ஆன (குறிப்பிட்ட) உடல் உறுப்புகளையும் இறைவனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.
 ஸ்ரீகோமதியம்மனின் சந்நிதி, திருக்கோயிலின் வட புறத்தில் தனிக்கோயிலாக திகழ்கிறது. இங்கும் கொடிமரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன.
 சுற்றுப் பிராகாரங்களுடன் கூடிய அம்மன் சந்நிதிக் கருவறையில் கருணை ததும்பும் முகத்துடன் தவக் கோலத்தில் காட்சி தருகிறாள் ஸ்ரீகோமதி அம்மன். ‘கோ’ என்றால் பசு என்று பொருள். ‘மதி’ என்பது ‘ஒளி நிறைந்த’ என்று பொருள் படும். ஒளி மிகுந்த திருமுகம் கொண்ட இந்த அம்பாள், பசுக்களாகிய தேவர்களைக் காப்பவள். ஆதலால் இவளுக்கு கோமதி என்று பெயர். ஆவுடையம்மன் என்ற பெயரும் இவளுக்கு உண்டு. மதுரை- ஸ்ரீமீனாட்சி, சங்கரன்கோவில்- ஸ்ரீகோமதி, நெல்லை- ஸ்ரீகாந்திமதி மூவரையும் முறையே இச்சா-கிரியா -ஞான சக்திகளாக சித்தரிப்பர்.
 கோமதியம்மை சந்நிதி முன் உள்ள ஸ்ரீசக்கரம் மகிமை வாய்ந்தது. இதை பிரதிஷ்டை செய்தவர், திருவாவடுதுறை ஆதினம் 10-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள். இந்த ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்ட பள்ளத்தில் அமர்ந்து அம்மையை தியானித்து வழிபட்டால், எண்ணிய காரியம் நிறைவேறும். பிணிகள் மற்றும் பில்லி- சூனியம் போன்றவை அகலும் என்பது ஐதீகம். பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் இந்த இடத்தில் அமர்ந்து 11 நாட்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து ஸ்லோகங்கள் கூறி அம்பாளை வழிபட்டால் மகப்பேறு நிச்சயம் கிட்டும் என்கிறார்கள்.
இந்த அம்பாளுக்கு திங்கள் கிழமை, மாலை 5:30 மணிக்கு - பூப்பாவாடை; செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 5:30 மணிக்கு தங்கப் பாவாடை சார்த்தப்படுகிறது. தவிர, தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமைகளிலும் தங்கப் பாவாடை அணிவிக்கப்படுகிறது. பிரதி மாதம் கடைசித் திங்களன்று முழுக் காப்பும், தமிழ் மாதப் பிறப்பன்று இரவு 7:00 மணிக்கு தங்கப் பாவாடை சார்த்து தலுடன் தங்கத் தேர் உலாவும் நடைபெறுகிறது. ப இங்கு, தங்க ஊஞ்சல் கொண்ட பள்ளியறை ஒன்று உண்டு. இந்தப் பள்ளியறையின் உள் பகுதியில் மரகதக் கல் பதிக்கப்பட்டுள்ளது.
 அம்மன் சந்நிதியின் பிராகார வாயு மூலையில் புற்று மண் பிரசாதம் சேமிக்கப் பட்டுள்ளது. இது, சகல தோல் நோய்கள் மற்றும் விஷக் கடிகளுக்கு சிறந்த மருந்தாகும். இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்து நெற்றியில் சந்தனம் போல் இட்டு, குங்குமம் அணிந்தால் கெடு பலன் குறையும். நிம்மதி பெருகும்.
 சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளின் மேற்குப் பிராகாரத்தில் கலைமகளும், திருமகளும் உள்ளனர்.
 ஸ்வாமி மற்றும் அம்பாள் கோயில்களுக்கு நடுவே ஸ்ரீசங்கர நாராயணர் சந்நிதி தனிக் கோயிலாக உள்ளது. இதுவும் கர்ப்பக் கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்று மண்ட பத்துடன் காட்சி தருகிறது.
இந்த சந்நிதியின் முன், சொற்பொழிவு மற்றும் திருக்கல்யாணம் நடப்பதற்கு ஏற்ற பெரிய மண்டபம் ஒன்று இருக் கிறது. இதன் பிரகாரச் சுவர்களிலும் கண்ணைக் கவரும் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
 வலப் புறம்- கங்கையைத் தரித்த சடா மகுடமும், நாக குண்டலமும், அழகிய திருநீறணிந்த மேனி திகழ சிவனாராகவும்... இடப் புறம்- ரத்தினக் கிரீடம், மகர குண்டலங்கள், கஸ்தூரிப் பொட்டும் திகழ நாராயணராகவும் காட்சி தருகிறார் ஸ்ரீசங்கரநாராயணர். இவரின் சிவ பாகத்தில்- மழு, பாம்பாபரணம், கொன்றை மாலை, புலித் தோல் உடை மற்றும் பாம்புக் கழல் ஆகியனவும் விஷ்ணு பாகத்தில்- சக்கரம், பொற் பூணூல், துளசி மாலை, பீதாம்பரம் மற்றும் பொற்கழல் ஆகியனவும் திகழ்கின்றன. ஸ்ரீசங்கரநாராயணர் உற்சவ மூர்த்தியும் இவ்வாறே காட்சி தருகிறார். அரி-அரன் இணைந்த இந்தத் திருவடிவம், சிவபெருமானின் மகேஸ்வர மூர்த்தங்கள் 25-ல் ஒன்பதாவது மூர்த்தமாகும்.
 சிவபெருமான் அபிஷேகப் பிரியர். ஆனால் ஸ்ரீசங்கரநாராயணரின் ஒரு பாகம் திருமாலுக்கு உரியது ஆதலால் ஸ்ரீசங்கரநாரயணருக்கு அபிஷேகம் கிடையாது. பதிலாக இங்கிருக்கும் ஸ்படிக லிங்கத் துக்கே அபிஷேகம் நிகழ்கிறது. இது ஆதிசங்கரர் வழி பட்ட லிங்கம் என்கிறார்கள். ஸ்ரீசிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகள் பூஜித்த ஸ்படிக லிங்கம் என்றும் கூறுவர்.
 சங்கரநாராயணர் சந்நிதியில் வசனக் குழி என்ற பள்ளம் ஒன்று உள்ளது. தெய்வீக சக்தி மிகுந்தது என்பது ஐதீகம். பேய் மற்றும் பில்லி- சூனியத்துக்கு ஆளான பலர், இந்த வசனக் குழியில் அமர்ந்து பூஜை செய்து பலன் பெறுகிறார்கள்.
  இந்த ஆலயத்தில் ஸ்வாமி சந்நிதிக்கு அருகே ‘பூலித் தேவர் உடலோடு மறைந்த இடம்’ என்று கல்வெட்டு - போர்டுடன் - கூடிய சப்பரம் ஒன்று இருப்பதை இன்றும் காணலாம்.
 சங்கரன்கோவில் ஆலயத்தில் ரிஷபம், மயில், யானை, சிம்மம், காமதேனு, பூதம், மிருகம், கிளி, அன்னம், சப்பரம், பெருச்சாளி மற்றும் பிரதோஷ வாகனம் ஆகிய வெள்ளி வாகனங்கள் உள்ளன.
 இங்கு இரண்டு தேர்கள் உள்ளன. ஸ்வாமியின் தேர் பெரியது; அம்பாளின் தேர் சற்று சிறியது.
சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாள் பெரிய தேரும், ஆடித் தபசு விழாவின் 9-ஆம் நாளன்று ஸ்ரீஅம்பாள் தேரும் இழுக்கப்படுகின்றன.
 இந்தக் கோயிலில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒரு சிறப்பு நாகராஜர் சந்நிதி. இங்கு பாம்பு புற்று உள்ளது. அதைச் சுற்றி கோயில் எழுப்பியிருக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நாகராஜருக்கு பழம், பால் ஆகியவை படைக்கிறார்கள்.
 உமாதேவி வழிபட்ட தலம் என்பதால் சங்கரன் கோவிலில் செய்யப்படும் சிவ வழிபாடு, ஹோமம், பஞ்சாட்சரம் மற்றும் வேதம் ஓதுவதால் பன்மடங்கு பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.
 ஸ்ரீகோமதி அம்மன் - மதுரை மீனாட்சியம்மனின் சகோதரியாகக் கருதப்படுகிறாள். ஸ்ரீகோமதி அம்மனை தரிசிக்கச் செல்லுமுன், மதுரை- ஸ்ரீமீனாட்சியை தரிசித்து ‘உன் சகோதரியை காணச் செல்கிறேன். எனக்கு நல்லருள் புரிவாய்!’ என்று வழிபட்டுச் செல்வதுடன் கோமதியம்மனை தரிசித்த பின்னர், மீண்டும் மதுரைக்குச் சென்று மீனாட்சியம்மனிடம், ‘உன் சகோதரியை நன்றாக தரிசித்தேன், நன்றி!’ என்றும் கூறி வழிபட வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
 சங்கரன்கோவிலில் அன்னையான கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. இங்கு பிறந்த குழந்தைகளை தத்து கொடுத்து வாங்கும் சடங் கைச் செய்கிறார்கள். மேலும், வேண்டுதல் நிமித்தம் செவ்வரளி மலர்களைப் பரப்பி அதன் நடுவே இரட்டை தீபங்கள் ஏற்றி வைத்தும் இந்த அம்மனை வழிபடுகிறார்கள்.
 சிவாலய வழக்கப்படி விபூதி, விஷ்ணு கோயில் வழக்கப்படி தீர்த்தம் ஆகிய இரண்டும் வழங்கப்படும் திருக்கோயில் இது மட்டுமே.
 அர்த்த ஜாம பூஜை முடிந்து சந்நிதியில் வழங் கப்படும் பிரசாதப் பாலை, தொடர்ந்து 30 நாட்கள் பருகி வந்தால், மகப்பேறு கிடைக்கும் என்பது பலரது நம்பிக்கை.
 தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலச் சாமான் கள், துணி, ஆடு, மாடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் காணிக்கையாக வருகின்றன. இவை ஏலம் போடப்படும். உண்டியலில் ரொக்கப் பணமும், சாமான்களும் வரும்.
 காமிக ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. திருக்கோயிலின் நடை திறப்பு விவரங்கள்: காலை 5:00 மணிக்கு- நடை திறப்பு; காலை 5:30- திருவனந்தல்; காலை 8:30- சிறுகால சந்தி; பகல் 12:00- உச்சி கால பூஜை; பகல் 12:30- நடை அடைப்பு; மாலை 4:00- நடை திறப்பு; மாலை 5:30- சாயரட்சை; இரவு 9:00- அர்த்த சாம பூஜை; பிறகு நடை அடைப்பு.
 ஸ்ரீசங்கரநாராயண தரிசனம் காண்பதற்காக பார்வதி தேவி புரிந்த முதல் தவம் குறித்த விழாவாக ஆடித் தபசும், சிவனாரின் சுயரூப தரிசனம் காண, அம்பாள் புரிந்த இரண்டாவது தவம் குறித்த விழாவாக ஐப்பசி திருக்கல்யாண விழாவும் கொண்டாடப்படுகின்றன.
 கோயில் பூஜைக்கு உக்கிரபாண்டியர் மிகுந்த நிலங்களைக் கொடுத்ததுடன், யானையின் மீது ஏறி பெருங்கோட்டூருக்குச் சென்று பிடிமண் எடுத்து வந்து பெருவிழா நடத்தி மகிழ்ந்தார். இதன் ஞாபகமாக சித்திரை பிரம்மோற்சவத்தில் ஒரு நாள் உக்கிரபாண்டியர் விழா கொண்டாடப்படுகிறது.
 சித்திரைத் திருவிழா முற்காலத்தில் 41 நாட்கள் நடைபெற்றுள்ளது. அப்போது, விநாயகர் மற்றும் அம்மச்சி அம்மன் உட்பட காவல் தெய்வங்களுக்கும் 30 நாட்கள் விழா எடுப்பர். பிறகு, பெருங்கோட்டூர் ஐயனார் எல்லைக்கு சுவாமி எழுந்தருளி, அங்கு தங்க மண்வெட்டியால் புற்று மண் வெட்டி எடுத்து வர... திருக்கோயிலில் காப்புக் கட்டி சித்திரைத் திருவிழா கொண்டாடப்படும்.
இந்த விழாக்கள் தவிர, நவராத்திரி, சூரசம்ஹாரம், தெப்பத்திருவிழா, சிவராத்திரி ஆகியனவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சிவராத்திரி அன்று இங்கு ஏற்றப்படும் லட்ச தீபம் இந்த பகுதியில் பிரசித்தம்.
 நெற்கட்டும்செவலை தலைநகராகக் கொண்டு இந்த பகுதியை ஆட்சி செய்தவன் பூலித்தேவன். ஒரு முறை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இந்த மன்னன் சங்கரன்கோவிலின் புற்று மண் பிரசாதம் உண்டு நோய் நீங்கப் பெற்றாராம். இவர் இந்தக் கோயிலுக்கு செய்த திருப்பணிகள் குறித்தும் வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. வெள்ளையர்கள் இவரை கைது செய்து அழைத்துச் சென்றபோது, அம்மனை வழிபட வேண்டும் என்று கூறி இங்குள்ள சுரங்கப் பாதைக்குள் நுழைந்தவர் பிறகு திரும்பவே இல்லையாம்!
|
No comments:
Post a Comment