Friday, 4 August 2017

சௌகார்பேட்டை ஸ்ரீ வேங்கடேச பெருமாள்


சென்னை மாநகரத்தில் வட மாநிலத்தவர் அதிகம் வசிக்கும் பகுதி சௌகார்பேட்டை. ஏகாம்பரேஸ்வரர், கந்தகோட்டம் போன்ற பிரபலமான கோயில்களுடன் மற்றும் பல கோயில்களும் இந்தப் பகுதியில் சாந்நியத்துடன் காணப்படுகின்றன. இவற்றுள் முக்கியமான ஒன்று _ ‘பைராகி மடம் அருள்மிகு திருவேங்கடமுடையான் வேங்கடேச பெருமாள் திருக்கோயில்.’
ஜன சந்தடி மிக்க சௌகார்பேட்டையின் ஜெனரல் முத்தையா முதலி தெருவில் புகழ் மிக்க இந்த வைணவ ஆலயம், பரந்து விரிந்த திருக்குளத்துடன் விஸ்தாரமாக அமைந்திருக்கிறது.
இங்கு ஏராளமான சந்நிதிகள். திருமலை திருப்பதியில் குடிகொண்ட ஏழுமலையானை நினைவுபடுத்தும் ஸ்ரீவேங்கடேச பெருமாளே இங்கு மூலவர்... அருகில் தனிச் சந்நிதியில் அலர்மேல்மங்கை தாயார்... காஞ்சி க்ஷேத்திரப் பெருமாளை நினைவுபடுத்தும் ஸ்ரீவரதராஜ பெருமாள்... ஸ்ரீதேவி- பூதேவியுடன் வேணுகோபாலனாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகண்ணபிரான்... ஸ்ரீவராகப் பெருமாள்... ஸ்ரீலட்சுமி நரசிம்மர்... பூரி ஜகந்நாதர்... மற்றும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் என்று தெய்வ சாந்நித்தியம் நிறைந்து விளங்குகிறது இந்த பைராகி மடம் அருள்மிகு வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்!
சரி... அதென்ன பைராகி மடம் என்ற பெயர், முன்னால் ஒட்டிக் கொண்டிருக்கிறது?
‘பைராகி’ என்றால் சந்நியாசி என்று பொருள். இன்றைக்கு நாம் காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் செல்ல பல்வேறு போக்குவரத்து வசதி இருக்கிறது. உட்கார்ந்த இடத்தில் ஐந்தே நிமிடத்தில் க்ஷேத்திரங்களுக்குச் செல்லும் டிக்கெட்டுகளைப் பெற முடியும். முன் காலத்தில் ஓர் ஊரில் இருந்து இன்னோர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால், நடை பயணம்தான்!
இப்படித்தான் லால்தாஸ் என்ற ஒரு சந்நியாசி (பைராகி), லாகூரில் இருந்து கி.பி.1,800-ஆம் ஆண்டுவாக்கில் சென்னைக்கு வந்தார். சுமார் 420 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, இந்தக் கோயில் இருக்கும் பகுதியில் தங்கினார். அப்போது இந்த வேங்கடேச பெரு மாள் ஆலயத்தில், ராமர் பிரதான தெய்வமாக இருந்ததாக ஒரு தகவல் கூறுகிறது. ஒவ்வொரு நாளும் அதிகாலை நேரத்தில் விழித்தெழுந்து, நீராடி ஆலயத்துக்கு வருவார் லால்தாஸ். அனைவரையும் காத்து ரட்சிக்கும் அந்தப் பரம்பொருளிடம் மனமுருக வேண்டுவார். கண்களை மூடித் தொழுவார். இவரின் அதீத பக்திக்கு இரங்கிய பெருமாள், இவர் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் திருவுளம் கொண்டார்.
வட மாநிலங்களில் இருந்து இப்படி யாத்திரை வரும் பக்தர்கள் சென்னபுரி பட்டினத்தில் (சென்னை) தங்கி, நல்ல விதத்தில் தரிசித்துச் செல்ல ஒரு மடம் கட்டத் தீர்மானித்துச் செயலில் இறங்கினார் லால்தாஸ். சேவார்த்திகள் தங்கி ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் முறைப்படி வசதிகளை ஏற்படுத்தினார். இதன் பின் இந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு மனம் இல்லாததால், இவரும் இங்கேயே தங்கி இறைப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் ஒரு நாள் இரவு லால்தாஸ் கண்ணயர்ந்து தூங்கும் போது திருமலையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் மலையப்பன் வேங்கடாசலபதி பிரத்தியட்சமாகக் காட்சி அளித்தார்.
கனவில் தரிசனம் தந்த பெருமாளை கண் குளிரக் கண்ட லால்தாஸ், ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்த மாலவனிடம் மனமுருக வேண்டி நின்றார். பக்தனின் பரவசத்தையும் அதீத இறை நம்பிக்கையை யும் கண்டு புளகாங்கிதப்பட்ட வேங்கடா சலபதி, ‘‘பக்தா... உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது’’ என்றார்.
லால்தாஸ் உள்ளம் குளிர்ந்தார். ‘‘சொல்லுங்கள் பெருமாளே... உலகையே காத்து ரட்சிக்கும் உங்களுக்கு என்னால் ஒரு காரியமா? என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள். காத்திருக்கிறேன்’’ என்றார்.
‘‘முதலில் இந்த ஆலயத்தைச் செப்பனிட்டுத் தூய்மைப்படுத்து. நான் என்றென்றும் இங்கேயே தங்கி அருள் பாலிக்க எனக்கு ஒரு சந்நிதியை ஏற்படுத்து. என் உடன் உறை நாயகி அலர்மேல்மங்கை தாயாருக்கும் ஒரு சந்நிதியைக் கட்டு. உன்னால்தான் இதைச் செய்ய முடியும் என்று தீர்மானித்து, யாம் உன்னைத் தேர்ந்தெடுத்தோம்!’’ என்று சொல்லி ஆசீர்வதித்து மறைந்தார் மாதவன்.
‘நாமே ஒரு சந்நியாசி. மிகுந்த பிரயத்தனப்பட்டு இந்த மடத்தைக் கட்டி முடித்தோம். அடுத்து, ஒரு சந்நிதி கட்டு என்று ஆண்டவன் உத்தரவிடுகிறாரே... ஆள் பலத்துக்கும் பொருள் பலத்துக்கும் எங்கே போவேன்?’ என்ற கவலை லால்தாஸை ஆட்கொண்டது. பகவானே பிரத்தியட்சமாகி வந்து ‘எனக்கு ஒரு சந்நிதியைக் கட்டு!’ என்று உத்தரவு பெறும் பாக்கியம் எத்தனை பக்தர்களுக்கு வாய்க்கும்? இந்தப் பெரும் பேற்றை எண்ணி, லால்தாஸ் கவலையை மறந்து பெரிதும் மகிழ்ந்தார். இறைவன் தனக்கு இட்ட உத்தரவைச் சிரமேற்கொண்டு செய்யத் தீர்மானித்தார். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல என்பதைப் பிற்பாடு உணர்ந்தார்.
கோயிலுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் வசித்து வந்த பணக்காரர்களிடம் சென்று, கனவில் வேங்கடாசலபதி வந்து சொன்ன விஷயத்தைத் தெரிவித்துக் கோயில் கட்டு வதற்குப் பணம் கேட்டார் லால்தாஸ். பலரும் இவரை ஏளனம் செய்து திருப்பி அனுப்பினர். பிறகு, தனக்குத் தெரிந்த பஜனைப் பாடல்களைத் தெருவில் பாடி, அதன் மூலம் கிடைத்த சொற்பத் தொகையுடன் திருப்பணிகளை ஆரம்பித்தார். இதனால் ஒரு கட்டத்தில் பணிகள் தேக்கம் அடைந்தன. அந்த நேரத்தில் இறைவன் தனக்கு அருளிய சித்து வேலைகளைச் செயல்படுத்தத் தீர்மானித்தார் லால்தாஸ். சாதாரண உலோகமான செம்பை தகதகக்கும் பொன்னாக மாற்றினார். அதை உரிய வியாபாரிகளிடம் விற்று, அதன் மூலம் கிடைத்த தொகையைக் கொண்டு ஆலயப் பணிகளை விரைந்து முடிக்க முற்பட்டார்.
‘செம்பைப் பொன்னாக்கும் வித்தை தெரிந்தவர் லால்தாஸ்’ என்ற தகவல் அக்கம் பக்கத்து மக்களிடையே மெள்ளப் பரவியது. ‘அடடே... இப்படி ஒரு சாகசம் தெரிந்த அற்புத மகானை நாம் நோகடித்து விட்டோமே!’ என்று வருத்தப்பட்டு, அதன் பிறகு இவரது கோயில் கட்டும் முயற்சிக்குத் தங்களால் ஆன உதவிகளை வலிய முன்வந்து செய்யலானார்கள் பக்தர்கள். கோயில் திருப்பணிகள் விறுவிறுவென நடந்து முடிந்தது.
இந்த நிலையில் பெருமாள் இன்னோர் அற்புதத்தையும் நிகழ்த்தினார். ஆலயம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே பொன்னப்பன் சந்து என்ற பகுதியில் நந்தவனம் ஒன்று இருந்தது. வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கும் அந்த நந்தவனத்தில் பூமிக்கு அடியில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் தான் இருப்பதாக ஒரு நாள் லால்தாஸின் கனவில் சொல்லி மறைந்தார் பெருமாள். இந்தக் கனவு நிகழ்ச்சி பற்றி அந்த நந்தவனத்தைப் பராமரித்து வந்த அன்பரிடம் தெரிவித்து, பெருமாள் விக்கிரகத்தைத் தேடிப் பார்க்கலாம் என்று கிளம்பிய லால்தாஸுக்கு மேலும் திகைப்பு. நந்தவனத்து அன்பரின் கனவிலும் முந்தைய நாள் இரவில் தோன்றிய பெருமாள், பூமிக்குள் தான் புதைந்து கிடக்கும் தகவலைச் சொன்னார்.
அதன் பின் இருவருமாகச் சேர்ந்து தேடி அந்த விக்கிரகங்களைக் கண்டுபிடித்தனர். ஸ்ரீதேவி- பூதேவி சமேதராகக் கிடைத்த அந்த அற்புதமான பஞ்சலோக விக்கிரகங்கள்தான் இன்றும் இந்தக் கோயிலில் பிரதான உற்சவ மூர்த்திகளாக விளங்குகின்றனர்.
ஆலய தரிசனம் செய்வோம்.
கிழக்கு நோக்கிய திருத்தலம். முகப்பில் அறுபதடி உயரத்தில் ஐந்து நிலை ராஜ கோபுரம். ஜூலை 8-ஆம் தேதி கும்பாபிஷேக வைபவம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது (இதற்கு முன் 1994-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடந்துள்ளது). எனவே, பாலாலயம் செய்யப்பட்டுத் திருப்பணி வேலைகள் துவங்கி உள்ளன. இதன் காரணமாக, மூலவர் உட்பட சில சந்நிதிகளைத் தற்போது தரிசிப்பது இயலாத ஒன்று.
ராஜ கோபுரம் தாண்டியதும் பலிபீடம், கொடிமரம். அடுத்து, கருடன் சந்நிதி. இதை ஒட்டி மகா மண்டபம். இந்த மகா மண்டபம் ஒரு திருத்தேரின் முன்புறம் போல் அழகாக அமைந்துள்ளது. சக்கரங்கள் வடிக்கப்பட்ட இந்தத் தேரை இரண்டு பக்கமும் இரு யானைகள் இழுத்துச் செல்வது போல் உள்ளது. உற்சவ காலங்களில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் விக்கிரகங்கள் எழுந்தருள்வதற்காக இங்கே ஓர் அழகான அமைப்பு உள்ளது.
மூலவர் வேங்கடேச பெருமாளின் உயரம் சுமார் ஆறரை அடி. ஜய- விஜய துவாரபாலகர்களைத் தாண்டி கருவறை. திருமலை திருப்பதியில் அமைந்துள்ள பெருமாளின் கோலத்தை நினைவுபடுத்தும் அதே அமைப்பு. பரந்து விரிந்த திருமார்பு. அதில் உறையும் சொர்ண லட்சுமி. சங்கு- சக்கரதாரி. பார்த்தாலே பரவசம் தருகிற அற்புதமான வடிவமைப்பு. திருமலை திருப்பதியில் நடந்து வருவது போலவே அனைத்து உற்சவங்களும் இங்கு நடந்து வருகிறது. ‘‘திருமலையில் நடப்பது போன்றே பிரம்மோற்சவம், பவித்ரோற்சவம், ரதோற்சவம் போன்ற வைபவங்கள் எல்லாமே இங்கு விமரிசையாக நடக்கின்றன. திருமலை சென்று ஸ்ரீவேங்கடாசலபதியை தரிசிக்க முடியாத பக்தர்கள் இங்கே வந்து இவரை தரிசித்து, அவன் அருள் பெற்றுச் செல்கின்றனர்!’’ என்கிறார் ஆலய பட்டாச்சார்யர் ஒருவர்.
பிராகாரம், சற்று விசாலமானது. இங்கு ஏராளமான சந்நிதிகள் இருக்கின்றன. பன்னிரு ஆழ்வார்களும் புகழ் பெற்ற பல ஆச்சார்யர்களும் இங்கு சந்நிதி கொண்டுள்ளனர். இவற்றுள் குறிப்பிட வேண்டிய ஒன்று- திருமங்கை ஆழ்வார் தன் துணைவியார் குமுதவல்லியுடன் காணப்படும் சந்நிதி. தாயார் சந்நிதிக்கு அருகே பெரியநம்பி, திருமலை நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி ஆகியோருக்கு சந்நிதிகள் அமைந்திருப்பது வெகு சிறப்பு. ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்களின் திரு நட்சத்திரத்தின்போது அவர்களின் விக்கிரகங்களுக்கு விசேஷ திருமஞ்சனம் சார்த்தி சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன.
பிராகாரத்தில் பிரதானமாக அமைந்துள்ளது அலர் மேல்மங்கை தாயார் சந்நிதி. முன்பக்கம் உற்சவர் மண்டபம். திருமலையின் அடிவாரத்தில் உள்ள திருச்சானூரில் நடக்கும் உற்சவங்கள் இங்கே தாயாருக்கும் நடந்து வருகின்றன. அவற்றுள், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் பஞ்சமி தீர்த்த உற்சவம் விசேஷம். பஞ்சமி அன்று தீர்த்தவாரியும் மறு நாள் சந்தான லட்சுமி திருக்கோலத்தையும் தரிசிக்கலாம்.
உற்சவ காலத்தில் தாயாருக்கான கருட வாகனம் பெண் சொரூபமாக இருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விசேஷம். சாதாரணமாக கருட வாகனம் என்றால், பிற கோயில்களில் மீசை முறுக்கிய கோலம், திரண்ட தோள்கள் போன்றவற்றுடன் கூடிய வாகனம் இங்கு தாயாருக்கு இல்லை. காதணி, மூக்கணி, புடவை அணிந்த கோலத்தில் பெண் கருட வாகனத்தில் புறப்பாடு நடக்கும். தாயாருக்கான அனுமந்த உற்சவத்தின்போதும் பெண் குரங்கு வாகனத்தில்தான் புறப்பாடு நடக்கும். தவிர ஸ்ரீதேவி- பூதேவி சமேத வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், லட்சுமணன்- சீதை- கோதண்டராமர், ஸ்ரீதேவி- பூதேவி சமேத ஸ்ரீவேணுகோபாலன் (கண்ணன்), ஆண்டாள், வராக பெருமாள், ரங்கநாதர், லட்சுமி நரசிம்மர், பூரி ஜகந்நாதர் என நிறைய சந்நிதிகள்.
இதில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு சந்நிதி ஸ்ரீலட்சுமி நரசிம்மர். கண்கள் சிவக்க உக்கிர கோலத்தில் காட்சி தருகிறார் இந்த நரசிம்மர். மூலவர் விக்கிரகத்துக்குக் கற்பூர ஆரத்தி காட்டும்போது தீப ஒளியில் ஸ்ரீநரசிம்மரின் விழிகள் அனைவரையும் ஊருடுவிப் பார்ப்பது தத்ரூபமாக இருக்கும். இங்குள்ள சங்கு திருமஞ்சன தீர்த்தத்தை நம் முகத்தில் பளாரென்று அறைந்தாற் போல் தெளிக்கிறார் ஆலய பட்டாச்சார்யர். இந்தப் புனிதமான தீர்த்தம் எத்தகைய நோயையும் விரட்டும் தன்மை கொண்டது என்கிறார்கள். தவிர, மன பயம் இருந்தாலும், தீர்த்தத் துளிகள் பட்டதும் அது இருந்த இடம் தெரியாமல் ஓடியே போய் விடுமாம். இந்தத் தீர்த்தத்தைத் தங்கள் மேல் தெளித்துக் கொள்வதற்காகவே பலரும் இந்தத் திருத்தலத்தைத் தேடி வருகிறார்கள்.
பிராகாரத்தை அடுத்து, வராக புஷ்கரணி எனும் திருக்குளம். கண்களுக்குக் குளுமையாக இருக்கிறது. இதன் அருகே பைராகி மடத்தின் வழி வந்தவர்களால் நிறுவப்பட்ட சிவன் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகள் அமைந்துள்ளன. இந்து சமய அறநிலையத் துறையின் மேற்பார்வையில் இயங்கி வரும் இந்த ஆலயத்துக்கு, மஹந்த் துவாரகாதாஸ் என்பவர் பரம்பரை அறங்காவலர்.
சென்னையின் இதயப் பகுதியில் பாங்காக அமைந்திருக்கும் இந்த ஆலயத்தைத் தரிசித்து வேங்கடவனின் அருள் பெறுவோம்!
தகவல் பலகை
தலத்தின் பெயர்: பைராகி மடம் அருள்மிகு திருவேங்கடமுடையான் வேங்கடேச பெருமாள் திருக்கோயில்
மூலவர்: ஸ்ரீவேங்கடேச பெருமாள்
தாயார்: ஸ்ரீஅலர்மேல்மங்கை அமைந்துள்ள இடம்: பாரிமுனையில் என்.எஸ்.சி. போஸ் ரோடு எனப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையை ஒட்டி இருக்கும் ஜெனரல் முத்தையா முதலித் தெருவில். சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி இருக்கும் வால்டாக்ஸ் ரோட்டில் இருந்தும், பூக்கடை போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் இந்தத் திருத்தலத்தை அடையலாம்.
ஆலயத் தொடர்புக்கு:
செயல் அலுவலர், 
பைராகி - மடம் - அருள்மிகு திருவேங்கடமுடையான் 
வேங்கடேச பெருமாள் திருக்கோயில் 
1, ஜெனரல் முத்தையா முதலி தெரு
சௌகார்பேட்டை, சென்னை- 600 079 
போன்: (044) 2538 2142

No comments:

Post a Comment