திருநெல்வேலிக்கு வடகிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது ராஜ வல்லிபுரம். இங்கு, தாமிரபரணி ஆற்றின் வட கரையில் அமைந்துள்ளது செப்பறை திருக்கோயில். ராஜவல்லி புரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு. செப்பறை என்றால் செம்பினால் செய்யப்பட்ட அறை என்று பொருள்.
இந்தப் பகுதியை ஸ்ரீவல்லபன் எனும் பாண்டிய மன்னன் ஆண்டு வந்ததால் இந்த ஊர், ராஜவல்லவ புரம் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் ராஜ வல்லிபுரம் என மருவியதாம்!
இந்த தலத்தில் மகான்களும் முனிவர்களும் தவமியற்றி இறைவனை வழிபட்டுள்ளனர். தென் சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்தத் தலத் தில், அழகிய கூத்தப் பெருமான் (நடராஜர்), ஸ்ரீநெல்லையப்பர் மற்றும் அன்னை காந்திமதி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
கிருத யுகத்தில், சிவபெருமானை நினைத்து இங்கே கடுந்தவம் புரிந்தார் அக்னி பகவான். அப் போது அவர் இங்கு உருவாக்கிய தீர்த்தம், 'அக்னி தீர்த்தம்' எனப்படுகிறது.
தில்லையை ஆண்ட சிங்கவர்மன் எனும் மன்னன், தனது தோல் நோய் நீங்குவதற்காக இறைவனை பிரார்த்தித்து, காட்டில் தவம் இயற்றி வந்தான்.
ஒரு நாள், தாகம் மேலிட்டதால் நீர் அருந்துவதற் காக ஒரு குளத்துக்கு வந்தான். குளத்தின் அருகே புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் தவம் இருப்பதைக் கண்ட மன்னன், அவர்களை வணங்கி ஆசி பெற்றான். பிறகு அவன், குளத்தில் இறங்கி நீராடினான். மறு கணம், அவனது தோல் நோய் நீங்கியது. மகிழ்ச்சியில் செய்வதறியாது திகைத்த மன்னனிடம், ''மன்னா... இதுதான் தில்லை வனம். இந்தப் பொய்கையின் பெயர் சிவகங்கை. ஆடற் பெருமானின் ஆனந்த தாண்டவம் எங்களை மகிழ்விக்கிறது'' என்று விளக்கினர்.பின்னர், முனிவர்களது ஆசியுடன் இறைவனின் ஆனந்த தாண்டவத்தைக் காணும் பேறு பெற்றான் சிங்கவர்மன். இந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாக, நடராஜப் பெருமானுக்கு ஆலயம் எழுப்ப முடிவு செய்தான்.
அதன்படி, சிற்பிகளை வரவழைத்த மன்னன், இறைவனது திருமேனியை பேரழகுடன் அமைக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.
அவர்களிடம் தாமிரம் தந்து, செப் புத் திருமேனியை உருவாக்கப் பணித் தான். விரைவில், செப்புத் திருமேனி உருவானது. அதன் அழகைக் கண்டு வியந்தான் சிங்கவர்மன். 'தாமிரத் திருமேனியே இந்த அளவுக்கு மிளிர் கிறது என்றால், பொன்னால் சிலை வடித்தால் எப்படி இக்கும்?'என்று எண்ணியவன், சிற்பிகளிடம் பொன் தந்து, பொன்னாலான சிலை செய்ய உத்தரவிட்டான்.
இந்த நிலையில் சிவனாரின் திருவிளையாடல் துவங்கியது! சிற்பிகள் சிலை வடித்துக் கொண்டிருந்த இடத்துக்கு, முதியவராக வந்தார் இறைவன்.சில செப்புக் காசுகளை சிற்பிகளிடம் கொடுத்து, தங்கத்துடன் இதையும் சேர்த்து சிலை வடிக்கும்படி கூறினார்.
'மன்னனின் விருப்பம் இதுவல்லவே...' என்று சிற்பிகள் குழம்பினர். ஆனால், இறைவனாரின் பேச்சுக்கு மயங்கிய சிற்பிகள் ஒரேயரு செப்புக் காசை மட்டும்
தங்கத்துடன் கலந்தனர். இதனால், தங்கத் திருமேனிக்கு பதில் மீண்டும் செப்புத் திருமேனியே உருவானது.
இதையறிந்த மன்னன் கோபமடைந்து, சிற்பிகளை சிறையிலிட்டான். அன்றிரவு, மன்னனின் கனவில் தோன்றிய இறைவன் நடந்ததைக் கூறி, ''உன் கண்களுக்கு மட்டும் நான் பொன்மேனியாகக் காட்சி தருவேன்'' என அருளினார். அத்துடன், 'முதலில் வடித்த செப்புத் திருமேனியுடன் சிற்பிகளை தென்திசை நோக்கி போகச் சொல். எந்த இடத்தில் அதிக பாரமாகத் தோன்றுகிறதோ அங்கே, சிலையை இறக்கி வைக்கச் சொல்' என்றார்.
இதையடுத்து மன்னனது உத்தரவுப் படி, செப்புத் திருமேனியுடன் தென்திசை நோக்கி பயணமானார்கள் சிற்பிகள். அவர்கள், தாமிரபரணி கரையை அடைந்த போது சிலையின் கனம் அதிகரித்தது போல் உணர்ந்தனர். அங்கேயே சிலையை இறக்கி வைத்து விட்டு, களைப்பு மிகுதியால் உறங்கிப் போனார்கள் சிற்பிகள்.
சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது, சிலையைக் காணவில்லை. கலங்கிய சிற்பிகள், அந்தப் பகுதியை ஆண்ட முழுதுங்கண்ட ராம பாண்டியனிடம் முறையிட்டனர்.
மணப்படை நகரை ஆட்சி செய்த இந்த மன்னன், சிவ பக்தியில் சிறந்தவன். தினமும் நெல்லைக்குச் சென்று நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் வழிபட்ட பின்னரே உணவு உட்கொள்வது வழக்கம்!
முன்னதாக ஒருநாள்... இவனது பக்தியை சோதிக்க எண்ணினார் இறைவன். அதன் விளைவால் தாமிர பரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது; மன்னனால் நெல்லையப்பரை தரிசிக்க செல்ல முடியவில்லை. கலங்கித் தவித்த மன்னன், அன்றிரவு உணவு உட்கொள்ளாமலே உறங்கிப் போனான். அவனது கனவில் தோன்றிய இறைவன், 'வனத்துக்குப் போ. ஓரிடத்தில் காற் சிலம்பொலி கேட்கும்; எறும்புகள் சாரை சாரையாகத் திரியும். அங்கே... என் வடிவைக் காண்பாய். எறும்பு காட்டுகிற இடத்தில் கோயில் எழுப்பு' என்று அருளி மறைந்தார்.
இந்த நிலையில்தான்... தில்லை சிற்பிகள், 'சிலையைக் காணோம்' என இவனிடம் முறையிட்டனர். காவலர்கள் சூழ சிலையைத் தேட காட்டுக்குச் சென்றான் முழுதுங்கண்ட ராமபாண்டியன்.
ஓரிடத்தில், தாரை- தப்பட்டை, சங்கு, சேண்டி மற்றும் தேவதுந்துபி முழக்கத்துடன் சிலம் பொலியும் கேட்டது. எங்கிருந்து வருகிறது ஒலி? எனும் திகைப்புடன் நின்ற மன்னன், சாரை சாரையாக எறும்புகள் ஊர்ந்து செல்வதைக் கண்டான். அவற்றைப் பின்தொடர்ந்தான். குறிப்பிட்ட ஓர் இடத்தில்... ஆனந்தக் கூத்தாடும் இறைவனைத் தரிசித்தான். அந்த இடத்திலேயே கோயில் எழுப்பினான். அதுவே செப்பறை ஆனந்தக் கூத்தர் திருக்கோயில்!
கருவறையில் அழகியகூத்தர்! மூன்று கண்கள், நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார் இறைவன். பிறை சூடிய ஜடாமுடியும், கங்கா தேவியும், மேனியில் தவழும் நாகங்களும்... ஆஹா தெய்வீக தரிசனம். அதுமட்டுமா? இடக் காதில் தோடு, வலக் காதில் குண்டலம் திகழ, புலித்தோல் ஆடை, பூணூல், பாதத்தில் கிங்கிணி, முயலகன் மீது ஊன்றிய பாதம் என அற்புதமாகக் காட்சி தருகிறார் ஆடல்வல்லான்! கருவறையை ஒட்டி தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோரை தரிசிக்கலாம்.
திருவாதிரை நட்சத்திர திருநாட்கள், சித்திரை திருவோணம், திருக்கார்த்திகை தீபம், ஆனி உத்திரம் போன்ற விழாக்கள் சிறப்புற நடை பெறுகின்றன. இங்கு எலுமிச்சை, புட்டமுது, பழம் ஆகியவை படைக்கப்படுகின்றன.
புலவர்கள் பலரும் போற்றும் செப்பறை கூத்தப் பெருமானை, நாமும் தரிசித்து திருவருள் பெறுவோமே!
|
Wednesday, 9 August 2017
செப்பறையில் அருளும் ஆனந்த நடராஜர் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment