Saturday, 5 August 2017

சகல வல்லமையும் தரும் சதுர தாண்டவ நடராஜர்!


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து படவேடு செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது காமக்கூர் திருத்தலம்! ஸ்ரீமுருகப்பெருமான், சந்திரன், அர்ஜுனன் மற்றும் ரதிதேவி முதலானோர் சிவபெருமானை வழிபட்ட தலம் இது! ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்த தலங்களுள் இதுவும் ஒன்றாம்! முக்கியமாக... சிவனார் தாண்டவமாடிய தலங்களில் ஒன்று என்பதால், இந்தத் தலத்தை உப விடங்கத் தலம் என்கிறார்கள்!
சிவனார் ஆடிய 108 தாண்டவங்களில் முதன்மையான சதுர தாண்டவக் கோலத்தில் இங்கே காட்சி தரும் ஸ்ரீநடராஜ பெருமானை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! பரமன், இங்கே சதுர தாண்டவம் ஆடியதாக விவரிக்கிறது காமாத்தூர் புராணம்! (காமாத்தூரே, தற்போது காமக்கூர் என அழைக்கப்படுகிறது!) கால்கள் இரண்டையும் மடக்கி, முன்னும் பின்னுமாக சதுர வடிவில் வைத்தபடி ஆடும் அரிய கோலத்தில் காட்சி தரும் சதுர தாண்டவ நடராஜரை தரிசித்து வணங்குவது சிறப்பான பலனைத் தருமாம்!
நடராஜருக்கு உகந்த ஆறு அபிஷேக காலங்களில் வணங்குவது சிறப்பு. முக்கியமாக, திருவாதிரை நாளில், சதுர தாண்டவ நடராஜரை வணங்கினால், பெரும் வல்லமையும் பேராற்றலும் பெறுவர்; எவரையும் வெல்லும் திறன் அதிகரிக்கும்; கலைகளில் ஆர்வமும் திறனும் ஏற்படும் என்பர். சதுர தாண்டவ மூர்த்தியை தரிசித்து, சகல வல்லமையும் பெறுவோம்!
கோயில் தொடர்புக்கு 94439 63477

No comments:

Post a Comment