Friday, 4 August 2017

உய்யக்கொண்டான் திருமலை



மிருகண்ட ரிஷியும் அவருடைய மனைவியும் பிள்ளை வரம் கேட்டு, சிவனாரை நோக்கித் தவம் செய்தனர். பிரத்யக்ஷமான சிவனார், 'அசட்டுப் புத்தி கொண்ட நூறு ஆயுசு உடைய பிள்ளை வேண்டுமா, பதினாறே வயசு கொண்ட அல்பாயுசான அறிவாளி வேண்டுமா?’ என்று சிக்கலான கேள்வியைக் கேட்க, அப்போதைய மன நிலையில், அல்பாயுசுப் பிள்ளையையே தேர்ந்தெடுத்துவிட்டனர். குழந்தையும் பிறந்தது.
பிள்ளைக்கு 14 வயதானது. 'பிள்ளை இன்னும் இரண்டு ஆண்டுகள்தானே உயிருடன் இருப்பான்’ என ரிஷியும் அவரின் மனைவியும் தவித்து மருக... எந்தச் சிவனார், தான் பிறப்பதற் கான வரத்தைத் தந்தாரோ, அவரையே பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவோம் எனப் புறப்பட்டான், மகன் மார்க்கண் டேயன்! வடக்கே சென்று தரிசித்தவன், தெற்கேயும் வந்து வழிபட்டான். குறிப்பிட்ட தலத்தை அடைந்ததும், அவனது அபார நம்பிக்கையையும் பக்தியையும் அறிந்த சிவனார், உமையவளுடன் திருக்காட்சி தந்தார்; 'உன்னைக் காப்பாற்று கிறேன்’ என வாக்குத் தந்தார். இதற்குச் சாட்சியாக ஸ்ரீபரமேஸ்வரி நிற்க... திருவடியில் பணிந்திருக்கும் அந்தப் பிள்ளைக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய தலம், திருக்கடவூர். அங்கே சிறுவனின் உயிரைக் கவர்ந்து செல்வதற்காக நெருங்கிய காலனைக் காலால் உதைத்தார், சிவனார்; கால சம்ஹாரமூர்த்தியானார்! சரி... காப்பாற்றுகிறேன் என வாக்குத் தந்து, வாழ்வில் உய்வு தந்தாரே... அவரை எப்படி அழைக்கலாம்? ஆயுள் உய்யக் கொண்டவர் ஆதலால், அவர் உய்யக்கொண்டார்! வாருங்கள், இவரைத் தரிசிக்க உய்யக்கொண்டான் திருமலை செல்வோம்!
காவிரித் தென்கரைப் பதியான உய்யக்கொண்டான் திருமலை, திருச்சி- வயலூர் சாலையில், திருச்சிக்கு அருகிலேயே திகழ்கிறது. சமீபத்திய திருப்பணியில், மலையடிவார மண்டபமும் மதிலும் எடுத்துக் கட்டப்பட்டுள்ளன. இதனால், அடிவாரத்தில் கிழக்குப் பக்கத்திலிருந்து நுழைகிறோம்.
நுழைவாயிலில் இருந்து நீள்கிற மண்டபத்தின் மேற்குக் கோடியில், கிழக்குப் பார்த்தபடி ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேதராக ஸ்ரீஆறுமுகர். மண்டபத்தின் தெற்கில் திருக்குளம்; இதுவே, ஞானவாவி. குளத்துக்கு எதிரில், மண்டபத்துக்கு வடக்கில் பிரதான வாசல். படிகள் ஏறித்தான், மலைமேல் எழுந்தருளியுள்ள ஸ்வாமியைத் தரிசிக்கவேண்டும். முன்னதாக, சிறிதான சந்நிதியில் அருளும் ஸ்ரீவிநாயகரை வணங்கு கிறோம். அப்படியே திரும்பி, முகப்பு வாசலை நிமிர்ந்து பார்த்தால், மார்க்கண்டேயனுக்கு அருள்பாலித்து உறுதியளிக்கிற திருத்தலக் காட்சி, சுதைச் சிற்பமாகப் பதிக்கப்பட்டுள் ளதைக் காணலாம்!  
சுமார் 45 படிகள் ஏறிய பிறகு, வெளிப் பிராகாரத்தை அடைகிறோம். செப்புக் கவசமிட்ட கொடிமரம், பலி பீடம், நந்தி. கொடிமரத்துக்கு முன்னால்...  பாதச் சுவடுகள்! மார்க் கண்டேயனுக்கு அருள்வதற்காக எழுந் தருளி நின்றாரல்லவா?! அப்போது, சிவனாரின் திருப்பாதங்கள் அப் படியே பதிந்துவிட்டனவாம்! இந்த வெளிப்பிராகாரம், மலைப் பரப்பி லேயே உள்ளது. பிரதட்சிணம் வர வசதியாக அமைந்துள்ளது, பாதை!
கொடிமரத்துக்கு அருகில் ஸ்ரீவிநாயகர் சந்நிதி. அருகில் சில படிகள்; ஏறிச் செல்ல, மண்டபம் போன்ற இடத்தை அடைகிறோம். இங்கிருந்து வலப் பக்கமாகத் திரும்பி, துவார விநாயகரை வணங்கி, உள்ளே செல்ல... நேர் எதிரில் அம்பாள் சந்நிதி. மேற்கு நோக்கி அருள்கிறாள் ஸ்ரீஅஞ்சனாட்சி (ஸ்ரீமைவிழியம்மை). இந்த அம்பாளை, 'பழைய அம்பாள்’ என்கின்றனர் ஊர்க்காரர்கள். நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் அருளும் திருமேனியின் கவசத்தை நீக்கிக் காட்டுகிறார் குருக்கள்; அபயம் காட்டி நிற்கிற அம்பிகையின் மேல் திருக்கரத்தில் இருக்கும் மலர், உடைந் திருக்கிறது. கடவுளின் திருமேனி இப்படி பின்னப்பட்டிருக்கக் கூடாதே என வியக்கிறோம். பின்னம் அடைந் திருக்கிற சிலாரூபத்தை நீக்கிவிட்டு, புதிதான அம்பாள் விக்கிரகத்தை நிர்மாணிக்க முடிவுசெய்தனராம். ஆனால், ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன், முக்கியஸ்தர்களின் கனவில் வந்து, தாம் இங்கேயே இருக்க விரும்புவதாகத் தெரிவித்தாளாம்! அதனால், விக்கிரகத்தை அப்புறப்படுத்தாமல், அப்படியே வைத்தனர்; தவிர, புதிய விக்கிரகத்தையும் பிரதிஷ்டை செய்தனர். பழைய சந்நிதிக்குச் சற்றே வடக்கில், மூலவரின் சந்நிதிக்குச் செல்லும் வழியில், கிழக்குப் பார்த்தபடி அருள்கிறாள் புதிய அம்பிகையான ஸ்ரீபாலாம்பிகை!
ஸ்ரீபாலாம்பிகையின் சந்நிதிக்குச் செல்கிறோம். வழியில், வள்ளி- தெய்வானை சமேதராக ஸ்ரீசண்முகர். பாலாம்பிகையின் வதனத்தில், பெயருக்கேற்றாற்போல் இளமைத் துள்ளல் பின்னலிடுகிறது. இதையடுத்து, அருகில் உள்ள வாசல் வழியே மூலவர் சந்நிதிக்குச் செல்லலாம் வாயிலில் நிற்கும்போதே, நேரே எதிரில் கோஷ்ட தட்சிணாமூர்த்தியின் தரிசனம். உள்ளே நுழைந்து, வலம் வருவோமா?
உய்யக்கொண்டான் திருமலை என்பது கடந்த சில நூற்றாண்டுகளாக வழங்கி வரும் பெயர். தேவாரம் பாடிய மூவரும் 'கற்குடி’ என்றே போற்றுகின்றனர். 'கற்குடியில் ஓங்கி நலம் பெருகு மேன்மை திருக்கற்குடியில் சந்தான கற்பகமே’ என்பது வள்ளல் பெருமான் வாக்கு.
கல்லில், அதாவது மலையில் ஆண்டவன் குடியிருப்பதால், கற்குடி. நந்திவர்ம பல்லவ மன்னர், இந்தக் கோயிலைப் பெரியதாகக் கட்டினாராம். இந்தப் பகுதி முழுமைக்குமே, 'நந்திவர்ம மங்கலம்’ எனும் பெயர், பழைய ஆவணங்களில் காணப்படுகிறது. சோழர்கள் காலத்தில், அரசர் வணங் கிய பதி என்பதாலும், வேத பண்டிதர்கள் நிறைந்த இடம் என்பதாலும், ராஜாஸ்ரய சதுர்வேதிமங்கலம் எனப்பட்டது. திருமலைநாயக்க மன்னர் காலத்தில், ஏராளமான திருப் பணிகள் இங்கு நடைபெற்றன. ஸ்வாமியின் மகத்துவம் அறிந்த மன்னர், உய்யக்கொண்டான் எனும் ஸ்வாமியின் அழகிய தமிழ்ப் பெயரைப் பரவலாக்கி, மலையில் குடி கொண்டவர் என்பதைச் சுட்டிக்காட்ட, 'திருமலை’ எனும் அடைமொழியையும் சேர்த்தார். ஊரின் பெயர் உய்யக்கொண்டான் திருமலை ஆனது (மன்னரின் பெயரைச் சேர்த்தாற்போலவும் ஆயிற்று!). ஊருக்கு, உய்யக் கொண்டீஸ்வரம் என்றும் ஒரு பெயர் அமைந்தது.
5 மற்றும் 6-ஆம் நூற்றாண்டு காலத்திலேயே இருந்துள்ள ஆலயம் இது. ராமாயண காலத்துக்கும் முன்னதாக, கரன் எனும் அரக்கன் இங்கு வழிபட்டதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். ராவணனின் ஒன்றுவிட்ட சகோதரனே கரன்; சூர்ப்பணகைக்கு காவலாக ராவணனால் இங்கு அனுப்பப் பட்டவன். சிறந்த பக்திமான். கல்லையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபட்டவன். அப்பேர்ப்பட்ட கரன் வழிபட்ட மலையே இது என்கிறார்கள்; இவனுக்காக கல்லிலேயே குடியெழுந்து அருளினாராம். கரகுடி (கரன் குடி) என்பதே கற்குடி ஆனதாகக் கர்ணபரம்பரைக் கதை (இவனோடு சூர்ப்பணகைக்குத் துணையாக வந்த திரிசிரா என்பவன் வழிபட்ட இடம் திரிசிராபள்ளி (திருச்சி); தூஷணன் வழி பட்டது, திருவெறும்பூர்). கரன் வழிபட்டதாகச் சொல்லப் படும் சிவலிங்கம், இடர்காத்தார் எனும் திருநாமத்துடன், தனிச் சந்நிதியில் வெளிப் பிராகாரத்தில் உள்ளது. மலைப் பரப்புப் பிராகாரத்திலிருந்து இடர்காத்தார் சந்நிதிக்கு வருவதற்குப் படிக்கட்டுகள் உள்ளன அங்கிருந்து அப்படியே அம்மன் சந்நிதிச் சுற்றுக்கு வந்துவிடலாம்.
ஏற்கெனவே உள்பிராகாரத்தை அடைந்தோம் இல் லையா? தெற்கு சுற்றில் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அருகில் நிற்கிறோம். அடுத்து, சைவ நால்வர் பெருமக்கள், வடக்குப் பார்த்தபடி நிற்கின்றனர். மேற்குச் சுற்றில் திரும்பினால், முதலில் வல்லபையுடனாய விநாயகர். அடுத்து, வலப் புறத்தில் மூலவர் சந்நிதியின் அணுக்கன் வாயில். ஸ்ரீஉய்யக் கொண்டார் மேற்குப் பார்த்தவர். மேற்குச் சுற்றுக்கு அப்பால், அதாவது இன்னும் மேற்காக, பெரியதொரு மண்டபம் உள்ளது. ஸ்வாமி சந்நிதிக்கு இது முகமண்டபமாக அமையும்.
வடமொழியில் உஜ்ஜீவநாத ஸ்வாமி என்று வழங்கப்படுகிறார் ஸ்வாமி. இவரும், ஸ்ரீமைவிழிக் கண்ணம்மையும்... இந்தத் தலத்துக்கு மேற்கே வயலூரில் எழுந்தருளியுள்ள மகன்- குமரக்கடவுளுக்கு அருளவே மேற்கு பார்த்தபடி உள்ளார்களாம்.வயலூருக்கு வரும் பக்தர்களை முருகன், 'போய் தாய் தந்தையைச் சேவித்து வாருங்கள்’ என்று அனுப்புவாராம். இப்படியரு சுவாரஸ்யமான செவிவழித் தகவலும் உண்டு!
ஸ்வாமி மேற்குப் பார்த்தவராக இருக்கிறார். இருந்தாலும், வெளிப் பிராகாரத்தில் கொடிமரம் தெற்குச் சுற்றில் அமைந்துள்ளதே, அது ஏன்? இங்குதான், எமனிடமிருந்து காப்பதாக மார்க்கண்டேயனுக்குச் சிவனார் அருளினார். 'வரும் காலன் உயிரை மடியத் திருமெல்விரலால் பெரும் பாலன் தனக்காய்ப் பிரிவித்த பெருந்தகையே’ என்றே சுந்தரர் பாடுகிறார். எமனுடைய திசை தெற்கு. எமனிடமிருந்து காப்பதாகக் கூறிய சிவபெருமான், எமனுடைய வழிக்கே சென்று, அவனை வரவிடாமல் தடுக்கிறார். அப்படியும் அசட்டுத் துணிச்சலோடு வந்த எமனைத் திருக்கடவூரில் எத்தி உதைக்கிறார். பகவானின் காலடியில் பணிந்துவிட்டால், துன்பம் வரும் வழிக்கே சென்று அதை அடைத்துவிடுவார்.சிவனார் தென்திசை அதிபதியிடமிருந்து, அதாவது எமனிடமிருந்து காப்பாற்றுகிறார் என்பதைக் காட்டவே, கொடிமரமும் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
பிறவியின் உய்வுக்கு மாத்திரம் அல்லாமல், அன்றாடப் போராட்டங்களுக்கும், அருள்மிகு உய்யக்கொண்டார் வழிகாட்டுவார். ராஜராஜ சோழ மாமன்னரின் சகோதரியான குந்தவை, இந்தத் தலத்தில் தவறாமல் அன்னதானம் செய்வாராம். அந்தப் புண்ணியமே, சோழ குலத்தையும் சக்ரவர்த்தியையும் நாட்டையும் காப்பாற்றுவதாக அவருக்கு அபரிமிதமான நம்பிக்கை. ராஜராஜன் காலத்திலும் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும், சோழ சாம்ராஜ்ஜியம் எவ்வாறு ஓங்கி வளர்ந்து கோலோச்சியது என்பதை வரலாற்றில் படிக்கும் போது, குந்தவை நாச்சியாரின் அன்னதான மகிமை புரிகிறது. இப்போதும், வேலை கிடைக்க, நல்ல மதிப் பெண்கள் பெற, நோய் நொடிகள் தீர, வருமான மும் வசதிகளும் பெருக, இந்தத் தலத்தில் பலரும் அன்னதானம் செய்கிறார்களாம்.
உள்பிராகாரத்தைத்தானே வலம் வந்து கொண்டிருக்கிறோம்... மூலவர் வாயிலுக்கு அடுத்தபடியாக, பிராகாரத்தில் வள்ளி- தெய்வானை உடனாய முருகப் பெருமான்.
'தடத்து உற்பவித்துச் சுவர்க்கத் தலத்தைத்
தழைப்பித்த கொற்றத் தனிவேலா
தமிழ்க்குக் கவிக்குப் புகழ்செய் பதிக்குத்
தரு கற்குடிக்குப்  பெருமாளே’
- என அருணகிரிநாதர் இந்த முருகனைப் பாடுகிறார். சனீஸ்வரருக்கு தனிச் சந்நிதியும் உண்டு. வட கிழக்குப் பகுதியில், பைரவர், சூரியன், காக வாகனத்துடனான சனீஸ்வரர் சந்நிதிகள். உள்பிராகாரத்தை முழுமையாகச் சுற்றி வந்து, மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம்.
மேற்குப் பார்த்த ஸ்ரீஉய்யக்கொண்டார். உஜ்ஜீவநாதர், முக்தீசர், கற்பகநாதர், உச்சிநாதர் (மலைமேல் எழுந்தருளியவர் என்பதால்) என்றெல்லாம் திருநாமங்கள் கொண்டவர்.
'வானவனை வானவர்க்கு மேலானனை
வணங்கும் அடியார் மனத்துள் மருவிப் புக்க
தேனவனை தேவர் தொழு கழலான்தன்னைச்
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லை
விடையேற்றினானைக்
குழல் முழவம் இயம்பக் கூத்தாடவல்ல
கானவனைக் கற்குடியில் விழுமியானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’
என்று அப்பர் போற்றும் பெருமான் இவர். சுயம்புவான சிவலிங்கம்; அழகான பாணம்; சதுரபீட ஆவுடையார். பல்லவ மன்னர் இங்கு திருப்பணி செய்தபோது, சந்நிதியின் கல்பகுதியைக் குடைய முடியாமல் தடங்கல் வர, பிள்ளையார்பட்டிக் குடைவரைப் பிள்ளையாரை வேண்டிக் கொண்டதாகவும், அவரருளால் திருப்பணி செவ்வனே நிறைவேற, இந்த ஸ்வாமியையும் கற்பகநாதர் என்றே அழைத்ததாகவும் சொல்கிறார் கள். ஸ்வாமியைப் பார்க்கப் பார்க்க, மனம் அப்படியே கட்டுண்டு சுருள்கிறது. புலன் களும் மனமும் உணர்வும் உயிரும் ஒன்றிப்போய் நிற்கும்போது, உய்யக்கொண்டார் ஓங்கி ஆட்கொள்கிறார்.
ஸ்வாமி சந்நிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில், நடராஜ சபை; உற்ஸவ மண்டபம். சந்திர சேகரர், பிட்சாடனர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஆகிய உற்ஸவத் திருமேனிகள் அழகு! பங்குனி பிரமோற்ஸவத்தில் வகைவகையான புறப்பாடுகள் இருக்கும். தைப்பூசமும் இங்கு விசேஷம். ஆதிகுமாரரான வயலூர் முருகனுடைய நாளல்லவா! அப்போது சந்திர சேகரர் அருகிலுள்ள சோமரசம்பேட்டைக்கு எழுந்தருள்கிறார்.
கற்குடி திருத்தலத்தில் மார்க்கண்டேயர் தவிர, நாரதர், உபமன்யு முனிவர் ஆகியோரும் வழிபட்டுள்ளனர். ஈழ நாட்டரசர் ஒருவர், உச்சிக் காலத்தில் வந்து இங்கு வழிபட, அதனால் முக்தி பெற்றாராம். சோழர் காலத்தில், செம்பியன்மாதேவி பிராட்டியார் மிகவும் போற்றிய தலம்; அருணகிரியாரும் இங்கு வழிபட்டுள்ளார்; 'கைத்தல நிறைகனி’ திருப்புகழை இங்குதான் அவர் இயற்றினாராம். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள், 'கற்குடி மாமலை மாலை’ என்றே நூறு தோத்திரப் பாடல்களைக் கொண்டதொரு நூல் இயற்றியுள்ளார். தலமரம் வில்வம்.
இங்கே, ஐந்து தீர்த்தங்கள்... 1. பொன்னொளி ஓடை- இது ஆலயத்துக்கு வெளியே உள்ளது; 2. குடமுருட்டி ஆறு- இந்தப் பெயரில் சொல்லப்பட்டாலும் (தஞ்சைக்கு அருகில்தான் பிரபலமான குடமுருட்டி பாய்கிறது; அது வேறு), காவிரியின் கால்வாய்களில் ஒன்றான இது, அருகில் ஓடுகிறது; சர்ப்ப நதி, உய்யக்கொண்டான் வாய்க்கால் போன்ற இன்னும் சில பெயர்கள் கொண்ட இதன் கல்வெட்டுப் பெயர், வைரமேக வாய்க்கால்; 3. ஞான வாவி- கோயிலின் முன் உள்ள குளம்; முக்தி தீர்த்தம் என்றும் பெயர்; 4. எண்கோணத் தீர்த்தம்; 5. நாற்கோணத் தீர்த்தம் - இவை இரண்டும் கோயிலுக்குள் உள்ளன; பின்னதிலிருந்து அபிஷேக நீர் பெறப்படுகிறது.
தருமை ஆதீன ஆளுகைக்கு உட்பட்ட இந்தக் கோயில், வெகு நேர்த்தியாகப் பராமரிக்கப்படுகிறது. நகரத்தின் பரபரப்புக்கு இடையே இருந்தாலும், உள்ளார்ந்த அமைதியைத் தருகிறது, ஆலயம்.

No comments:

Post a Comment