Thursday, 3 August 2017

திருக்கோவிலூர்


சேதி நன்னாட்டை ஆண்டு வந்தார் அந்த மன்னர். மலையமான் பரம்பரையில் தோன்றிய அவர், நாட்டு மக்களைப் போற்றிப் பாது காத்தார். அடியவர்களைக் கண்டால், அவர்களுக்குத் தொண்டு செய்து, தனது உடைமையெல்லாம் அவர்களது உடைமையென வழங்கிச் சிறப்பித்தார்.
முத்தநாதன் என்ற அரசன், சேதி மன்னரிடத்தில் பகைமை கொண்டான். பலமுறை போர் தொடுத் தும் ஒரு முறைகூட முத்தநாதனால் வெற்றி பெற முடியவில்லை. 'நேராகச் சென்று போர் தொடுத் தால், சேதி மன்னரை வெல்ல முடியாது. சூழ்ச்சியே சிறந்த வழி!' என்று எண்ணியவன், அதற்கான திட்டம் தீட்டினான். உடல் முழுவதும் திருநீறு பூசி, சடையைத் தூக்கிக் கட்டினான். கையில் சுவடிக் கட்டு ஒன்றை ஏந்தி, அதற்குள் உடைவாளை ஒளித்து வைத்தான். சிவனடியாராகச் சேதி மன்னர் அரண்மனைக்குள் நுழைந்தான்.
அந்த அரண்மனைக்குள், அடியார் பெருமக்கள் எந்த நேரமும் வரலாம் போக லாம் என்பதால், அவனை யாரும் தடுக்க வில்லை. மன்னரது அந்தப்புரத்தில் நுழைய அவன் யத்தனித்தபோது மட்டும், ''மன்னர் உறங்கும் நேரம்!'' என்று அவனைத் தடுக்க முனைந்தான் தத்தன் எனும் காவல் காப்போன். ''உறுதிப் பொருளை உரைக்க வந்தேன், என்னைத் தடுக்காதே!'' என்று கூறிவிட்டு, முத்தநாதன் உள்ளே போனான். மன்னர் உறங்கிக் கொண் டிருந்தார்.

பள்ளிக் கட்டிலில் வீற்றிருந்த அரசி யார், அடியாரைக் கண்டதும் அரசரை எழுப்பினார். அடியாரின் காலில் விழுந்து பணிந்தார் அரசர். அவரிடம், ''சிவபெருமான் முன்னர் தந்த ஆகமங்களுள் ஒன்றைக் கண்டேன். அது, இதுவரை எவரும் காணாதது. அதன் பொருளை உனக்குக் கூற வந்தேன்!'' என்று முத்தநாதன் கூறியவுடன், மகிழ்ச்சி யில் திளைத்த அரசர், அடிபணிந்து நின்றார். ''உனது மனைவி இங்கிருந்தால், ஆகாது. இது, நாம் இருவர் மட்டும் இருக்க உபதேசிக்கப்பட வேண்டும்!'' என்று மேலும் அவன் கூற, அரசியார் அங்கிருந்து அகன்றார். உபதேசம் கேட்க அரசர் பணிய, தான் மறைத்து வைத்திருந்த உடை வாளை எடுத்து, அவரைக் குத்தினான்.
முத்தநாதன் உள்ளே வந்த போதே, அவன் மீது சந்தேகம் கொண்ட தத்தன், பள்ளியறை வாயில் வரை வந்து மறைந்திருந்தான். அரசரது அவலக் குரல் கேட்டதும் உள்ளே ஓடி வந்தான்; முத்தநாதனை தனது வாளால் குத்த முயன்றான். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அரசர் அவனைத் தடுத்தார். “தத்தா, இவர் நம்மவர்; சிவனடியார்!” என்றார். முத்தநாதனுக்கு எந்த ஆபத் தும் வராதவாறு, அவனை ஊர் எல்லையில் விட்டு வரும்படி, தத்தனை பணித்தார்.
அரண்மனையில் அரசருக்கு நேர்ந்த கதி பற்றிய தகவல் காட்டுத் தீயாகப் பரவ, அந்த வேளையிலும் ஆங்காங்கே மக்கள் குழுமி, முத்தநாதனைத் தாக்க முற்பட்டனர். அவர்களிடம் அரசர் கூறியதைக் கூறி, அவனைக் காத்து ஊர் எல்லையில் விட்டுத் திரும்பினான் தத்தன். அவன் திரும்பி வந்து நல்ல செய்தி தரும் வரையில் உயிர் தாங்கியிருந்த அரசர், செய்தி கேட்டு உயிர் துறந்தார். சிவனருள் பெற்று நாயனார் ஆனார்.
சிவ வடிவத்தையும் அடியவர் வடிவத்தையுமே மெய்யான பொருள் என்று கொண்டதால், மெய்ப் பொருள் நாயனார் என்றழைக்கப்படும் இந்த அரசர், அறுபத்து மூவருள் ஒருவர். முத்தநாதனைக் காத்து, தத்தனிடம் அவர் கூறிய, 'தத்தா, நமர்!' எனும் வாசகம், அடியவர்களின் பெருந்தன்மையைக் காட்டுவதற்குப் பயன்படும் மிகப் பிரபல வாசகமாகும்.
சேதி நாடு எங்கே? மெய்ப்பொருளார் ஆட்சி செய்த இடம் எங்கே? வாருங்கள், திருக் கோவிலூர் போகலாம்.
விழுப்புரத்தில் இருந்து மேற்கில் சுமார் 55 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருக்கோவிலூர். திருவண்ணாமலை யில் இருந்து சுமார் 35 கி.மீ. தூரம். சென்னை, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உண்டு. சென்னையில் இருந்தோ திருவண்ணாமலையில் இருந்தோ திருக்கோவிலூர் சென்றால், ஊருக் குள் செல்ல தென்பெண்ணை ஆற்றின் மீது இருக்கும் பாலத்தைக் கடக்க வேண்டும்.
கீழையூர் (கீழூர்), மேலூர் என்று இரு பகுதிகளாக ஊர் உள்ளது. சிவன் கோயில் கீழையூரிலும் (கிழக்குப் பகுதி), பெருமாள் கோயில் மேலூரிலும் (மேற்குப் பகுதி) உள்ளன. பெண்ணையாற்றுப் பாலத்தைத் தாண்டியதும், இடப் பக்கம் திரும்பினால், கீழையூர் செல்லலாம். நேரே சென்றால், ஊருக்குள் (அதாவது மேலூருக்குள்) சென்று விடுவோம். உள்ளூர்க்காரர்களைப் பொறுத்த வரையில், மேலூர்ப் பகுதியை திருக்கோவிலூர் என்றும், சிவன் கோயில் பகுதியை கீழூர் என்றுமே குறிப்பிடுகிறார்கள்.
தென்பெண்ணை ஆற்றின் மீது செல்லும் போதே திருக்கோவிலூரின் பெருமைகள் நினைவில் உலா வருகின்றன.
நடுநாட்டுத் தலம்... சேதி நாட்டுத் தலைநகர்... மெய்ப்பொருள் நாயனார் ஆட்சி நடத்திய ஊர்... சிவனின் அட்ட வீரட்டங்களுள் 2-வது வீரட்டம்... பாரி மகளிருக்கு (பாரி வள்ளலின் மகள்களுக்கு) கபிலர் திருமணம் செய்து வைத்த இடம்; பின்னர், அவர், பாரியை நினைத்து வடக்கிருந்து உயிர் நீத்த பதி... ஒளவையாருக்கு அருள் செய்த விநாயகர் எழுந்தருளியுள்ள சேத்திரம்... முதலாழ்வார்கள் மூவரும் ஓர் இடைகழியில் சந்தித்து, மாலவனின் பெருமையை அனுபவித்த திவ்ய தேசம்... ராஜராஜ சோழனும் அவன் சகோதரன் ஆதித்ய கரிகாலனும் பிறந்த ஊர்... மத்வ சம்பிரதாயத்தின் ஆசார்யரான ரகூத்தம சுவாமிகளது பிருந்தாவனம் அமைந்த இடம்... ஞானானந்தகிரி சுவாமிகளது தபோவனம் அமையப் பெற்ற திருத்தலம்... பாடல்கள் பலவும் பெற்ற; புராண மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர்- 'தட்சிண பினாகினி' எனப்படும் தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள திருக்கோவிலூர்.
தென்பெண்ணையின் தென்கரை யில் உள்ள கீழையூர் வீரட்ட ஆலயத்தை அடைகிறோம். ஆற்றங்கரையில் மிகப் பெரிய வளாகமாக, சுவாமி கோயிலும் அம்பாள் கோயிலும் அருகருகே மேற்குப் பார்த்தபடி அமைந்துள்ளன.
வளாகத்தின் தெற்கு வாயில் வழியாக நுழைந்தால், முதலில் பதினாறுகால் மண்டபம். வளாகத்தின் தெற்குப் பக்கத்தில் மெய்ப்பொருள் நாயனார் கோயிலும் உள்ளது. வடக்குப் பக்கத்தில் பெரிய மண்டபம் ஒன்று; கல்யாண மண்டபம். மேற்குப் பக்கத்தில் வாகனங்களை வைப்பதற்காக மற்றொரு பெரிய மண்டபத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வளாகத்தை வியப்புடன் பார்த்துக் கொண்டே சுவாமி கோயிலின் ஐந்து நிலை ராஜ கோபுரத்தைப் பணிகிறோம்.
சேர- சோழ- பாண்டியர்கள் மூவருக் கும் தோழனாகவும், மூவராலும் வெல்லப்பட முடியாத வனாகவும் இருந்தவன் மலையமான் திருமுடிக்காரி. மூவேந்தர்களுக்கும் இடைப்பட்ட (நடுவில் இருந்த) பகுதியை இவன் ஆண்டான். நடுவில் இருந்ததால் இவனது நாடு, 'நடுநாடு' எனப்பட்டது.
வீரத்தின் விளைநிலமாகப் பிரசித்திப் பெற்ற நடுநாடு, பழங்காலத்தில், 'சேதி நாடு' என்றும் 'மலாட நாடு' என்றும் அழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் திருக்கோவிலூர். 'சேதி நல்நாட்டு நீடு திருக்கோவலூரின் மன்னி மாதுஒரு பாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான்' என்று மெய்ப்பொருள் நாயனாரைப் பற்றிக் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.
திருக்கோவிலூர் வீரட்டமான சுவாமி கோயில் ராஜ கோபுரம் கம்பீரமாக நிற்கிறது. உள்ளே நுழைந்தால், கொடிமரமும் நந்தியும். விசாலமான வெளிப் பிராகாரம். மேற்குச் சுற்றுக்குள்தானே நாம் நுழைந்தோம். அங்கிருந்து வலமாக வடக்குச் சுற்றுக்குள் புகுந்தால், மெல்லிய அசைவுடன் வரவேற்கிறது சரக்கொன்றை மரம். வடகிழக்கு மூலையில் யாகசாலை; கிழக்குச் சுற்றில், பெரிய அரச மரம்; ஆனால், ஏதோ வித்தியாசமாக! அர்ச்சகர் விளக்குகிறார் 20-25 ஆண்டுகள் முன்பு வரை இது பெரிய வில்வமாக இருந்ததாம்; காலப்போக்கில் ஆங்காங்கே பட்டுப்போகத் தொடங்கியிருந்ததாம்; பறவைகள் கொண்டுவந்துபோட்ட விதைகள் ஊன்றி, மெள்ள மெள்ள அரசும் வேம்பும் வில்வத்தின் கிளைகளில் ஊர்ந்துள்ளன. இப்போது வில்வம் இல்லை; ஆனால், பெரிய அரசு... உள்ளுக்குள் சிறியதாக வேம்பு. இயற்கையின் திருப்பங்களை எண்ணி வியந்தபடி வெளிப் பிராகார வலத்தை நிறைவு செய்கிறோம்.
இன்னொன்றையும் அர்ச்சகர் குறிப்பிட்டார் 19ஆம் நூற்றாண்டு வரை, இந்தக் கோயில் நிறைய பிராகாரங்கள் கொண்டதாகவே இருந்திருக்க வேண்டும். 1901-ல் தொடங்கி 1912-ல் கும்பாபிஷேகத் துடன் நிறைவடைந்த திருப்பணியின்போது, காலமாற்றங்களின் வசதி கருதியோ என்னவோ, ஒற்றை வெளிப் பிராகாரத்தை அமைத்துச் செப்பனிட்டுள் ளனர். வெளிப் பிராகாரத்தில் இருந்து உள்ளே செல்ல உள்வாயில் அருகே நிற்கிறோம். ஒரு பெரிய படம், வீரட்டேஸ்வரக் காட்சியை விளக்குகிறது.
காருண்ய மூர்த்தியாக விளங்குகிற சிவபெருமான், சில நேரங்களில் உக்கிர மூர்த்தியாகி துஷ்ட நிக்ரக மும் செய்துள்ளார். சிவனாரது வீரஸ்வரூபம் பெரிதும் வெளிப்பட்ட இடங்களை வீரட்டங்கள் என்றும், அங்குள்ள பெருமான்களை வீரட்டேஸ்வரர் என்றும் அழைக்கிறோம். இத்தகைய தலங்கள் எட்டு. அட்ட வீரட்டத் தலங்களான திருக்கண்டியூர், திருக்கோவிலூர், திருப்பறியலூர், திருவிற்குடி, வழுவூர், திருக்குறுக்கை, திருக்கடவூர், திருவதிகை ஆகியவற்றில், திருக்கோவிலூர் இரண்டாம் இடம் வகிக்கிறது. அந்தகாசுரனை வதம் செய்த இடம் இது!
திருக்கயிலாயத்தில் சிவனும் பார்வதியும் தனித்திருந்த நேரத்தில், அம்பாள் விளையாட்டாக ஐயனின் கண்களைப் பொத்திய கதை நினைவிருக்கிறதா?
அப்போது, அம்பிகைக்கு ஒரு கணமும் தேவர் களுக்கு ஓராயிரம் ஆண்டுகளும் என்ற கணக்கில் ஏற்பட்ட அந்த இருட்டு, ஓர் அரக்கனாக உருவானது (இருட்டு நேரத்தில் அம்பாளின் வியர்வைத் துளி, ஐயனின் நெற்றிக்கண் நெருப்பால் வெப்பமடைந்து அரக்கனாயிற்று என்றும் ஒரு கதை உண்டு). அந்தகாரத் தில் (இருட்டில்) தோன்றியதால் அந்தகாசுரன் ஆனான். இருட்டில் தோன்றியதால், கண் தெரியாதவனாக இருந்தான். அதனாலும் அந்தகாசுரன் (அந்தகன் - பார்வை இழந்தவன்) ஆனான்.
பிரம்மாவை வேண்டி தவம் செய்த இவன், நிறைய வரங்களைப் பெற்றான். ஆணவம் பெருக, பலரை யும் துன்புறுத்தினான். கொடுமை தாங்காத எல்லோ ரும் திருக்கோவிலூரில் ஒன்று திரண்டு சிவனை வேண்டினர். அந்தகாசுரனுடன் போர் செய்ய, சிவனார் பூதகணங்களை ஏவினார்; பூதகணங்கள் தோற்றன. பிறகு, தனது அம்சமான வடுகதேவரை அனுப்பினார் சிவனார்.
ஒரு முகம்- பத்துக் கரங்களுடன், சூலம், வாள், பாசம், அங்குசம், கபாலம், நாகம், பரிசை, தண்டம் ஆகியவற்றோடு அபய- வரதம் தாங்குகின்ற வடுக நாதர், அந்தகாசுரனுடன் போரிட்டார். அப்போது, அரக்கரின் குருவான வெள்ளி (சுக்கிரன்), மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதி அசுரனுக்குக் கேடு ஏற்படாமல் காப்பாற்றினார். சிவபெருமான், வெள்ளியை மந்திரத்தோடு சேர்த்தெடுத்துத் தனது வடிவத்தில் மறைத்தார். வெள்ளியின் இடையூறு தொலைந்ததும் வடுகதேவர், அசுரனை திரிசூலத்தால் குத்திச் சிவ சந்நி தானம் முன் கொணர்ந்தார். தவறை உணர்ந்த அசுரன், பணிந்து நின்றான்; பூதகணங்களுக்குத் தலைவனாகும் பேற்றை வேண்டினான். அவ்வாறே அவனுக்கு அருள் செய்தார் சிவனார். காசி காண்டத்தில் காணப்படும் இந்த வீரட்ட வரலாறு, சிவமகா புராணத்திலும் இன்னும் சில புராணங்களிலும் சிற்சில மாற்றங்களுடன் இடம் பெறுகிறது.
வடுக அம்சத்துக்கு பதிலாக சிவனாரே நேரடியாகப் போரிட்டார் என்றும், சூலத்தை அசுரன் மீது பதித்து வீரநகை புரிந்தார் என்றும், அவன் மீது காலூன்றிச் சூலத்தை உயர்த்தி நடனமிட்டார் என்றும் சொல்லப்படுகிறது. சிவபெருமானின் இந்த வீரத்தை 'மகாபைரவ பேதம்' என்றும் அவரது நடனத்தை 'அந்தகாசுரவத தாண்டவம்' என்றும் சாத்திரங்கள் வர்ணிக்கின்றன.
சூலத்தால் அரக்கனைக் குத்துகிற நேரத்தில், பூமியில் ஏற்பட்ட அதிர்வுகளின் விளைவாலும், கயிலாயத்தில் தோன்றியவன் ஆனாலும் அந்தகாசுரனது அட்டகாசம் பூமியிலேயே அதிகம் இருந்தது என்பதாலும் அவனை வதம் செய்கிற காலத்தில்... பூமியின் அம்சமாக தோன்றினான் வாஸ்து புருஷன். இனி, அவனுடைய அனுமதி பெறாமல் பூமியைத் தீண்டக் கூடாது எனும் நிலையை இறைவன் தோற்றுவித்தார். அதே நேரத்தில், 36 மாத்ரு கணங்களும், பறவைத் தலை கொண்ட டாகினி தேவதையும் தோன்றினர். அசுரனின் ரத்தம் கீழே சிந்திவிடக் கூடாது என்ப தற்காக காளிதேவி, அதை ஒரு பாத்திரத்தில் தாங்கி னாள். அம்பாள், அருகில் பைரவியாக நின்றார். [வீரத்தால் அந்தகாசுரனை வதம் செய்த சிவ அம்ச மான வீரட்டேஸ்வரரின் தேகத்தில் இருந்தே 64 பைரவர் மற்றும் 64 பைரவி யோஹினி சக்திகளும், சப்த மாதர்களும், டாகினி-யோகினி தேவதைகளும், வாஸ்து புருஷனும் ஆவிர்பவித்ததாகவும் ஐதிகம்.]
முன்னர் குறிப்பிட்டதுபோல, பல நூல்களிலும் இடங்களிலும் வழங்கப்படுகிற இந்த வரலாற்றின் சின்னச் சின்னத் தகவல்களில், சிற்சில மாற்றங்கள் காணப்படுகின்றன. மராட்டிய மாநிலத்தில் புகழ் பெற்ற எல்லோராவில் காணப்படும் அந்தகாசுர ஓவியத்தின் பிரதியே, நாம் இப்போது பார்க்கும் படம்.
திருக்கோவிலூர் வீரட்டத்தின் உள்ளேயும் இந்தக் காட்சியை விவரிக்கும் சிற்பம் உள்ளது. எல்லோரா ஓவியத்துக்கும் கோவிலூர் சிற்பத்துக்கும் சிறுசிறு வேறுபாடுகள் (டாகினி நிற்கும் இடம், அதன் உயரம், பாத்திரத்தைப் பிடித்திருக்கும் காளியின் கை என்பதுபோல) உண்டு.
இருப்பினும், அந்தகாசுர வதம் நடைபெற்ற திருக்கோவிலூர் ஆலயத்தில் நிற்கும்போது, மன இருட்டு மெள்ள விலகி ஒளி தோன்றுகிறது. வீரத்தின் விளைநிலமானதால், இந்தத் தலம் வீரட்டானம் (வீர ஸ்தானம்) ஆனது; சுவாமி அந்தகாந்தான் (அந்தகனை அழித்தவர்) ஆனார். இவர், வீரநகை புரிந்தவர் ஆதலால் வீரட்ட ஹாஸ (சிரிப்பு) நாதர் என்றும் அழைக்கலாம். துன்பப்பட்டவர்களின் வினை களையும் துன்புறுத்தியவனின் வினைகளையும் அழித்தவர் ஆதலால், வினைவென்றார் என்றும் திருநாமம் உண்டு. அந்தகாசுரனின் அஞ்ஞான இருட்டைப் போக்கி ஞானத்தை வழங்கியவரைப் போற்றி ('அந்தகாசுரன் என்பதே, நமது அஞ்ஞான இருட்டு தான்' என்று கொண்டாலும் தப்பில்லை) உள்ளே செல்கிறோம்.
உள் வாயிலில் நின்று நேரே நோக்க, அருள்மிகு வீரட்டேஸ்வரரான மூலவர். உள் பிராகாரத்தில் நிற்கிறோம். வலம் செல்ல வேண்டும்; அதுதான் முறை. இருந்தாலும், சற்றுப் பொறுங்கள். வலப் புறமாகத் திரும்பி, தென்மேற்கு மூலையில் எழுந்தருளியிருக்கும் பெரியானை கணபதியை முதலில் வணங்குவோம்.
கணபதியே யானைதான்... அதென்ன பெரியானை கணபதி? இவர் மகா முக்கியமானவர். இவரை தினமும் வழிப்பட்டாள் ஒளவை. ஒரு நாள் ஒளவைக்கு ஒரு சேதி தெரிந்தது. சுந்தரர் (தேவாரம் பாடிய அதே சுந்தரர் நம்பி ஆரூரர்தான்) கயிலாயத்தில் இருந்து வந்த ஐராவணம் எனும் வெள்ளை யானை மீதும், அவரின் தோழரான சேரமான் பெருமாள் குதிரை மீதும் திருக்கயிலாயம் செல்கிறார் கள் என்பதே அது. 'தான் மட்டும் கயிலாயம் போக முடியவில்லையே!' என்று ஒளவைக்கு வருத்தம்.
வழக்கம்போல் கணபதியை வணங்க வந்தவர், சோக மாகவும் அவசரமாகவும் பூஜை செய்தார். கணபதிக்குத் தெரியும்; இருந்தாலும் காரணம் கேட்டார். ஒளவை சொல்ல... கணபதி சிரித்தார். நிதானமாக பூஜை செய்யுமாறு கூறி, தாமே ஒளவையைக் கயிலாயத்தில் சேர்ப்பதாகவும் வாக்குக் கொடுத்தார். ஒளவைப் பாட்டியும், 'சீதக் களபச் செந்தாமரை' என்று அகவல் பாட்டால் துதிக்க... யானையாக நின்று அப்படியே பாட்டியைத் தம் தும்பிக்கையில் தூக்கிக் கொண்டு போய், சுந்தரருக்கும் சேரமானுக்கும் முன்னதாக கயிலாயத்தில் விட்டார் கணபதி. அதன் பிறகு அங்கே வந்த நண்பர்கள் இருவரும் ஒளவைப் பாட்டியைப் பார்த்து, 'எப்படி வந்தீர்கள்?' என்று கேட்க,
'மதுர மொழிநல் உமையாள் புதல்வன் மலர்ப்பதத்தைமுதிர நினைய வல்லார்க் கரி தோமுகில் போல் முழங்கிஅதிர நடத்திடும் யானையும் தேரும் அதன்பின் வரும்குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னரே'
- என்று அவர் விடை சொன்னார்.
ஒளவையை கயிலாயத்தில் கொண்டு வைக்கும்போது விஸ்வரூபம் எடுத்ததால், பெரியானை கணபதி ஆகிவிட்டார். 'உமை மைந்தனை நம்பினால் நினைத்த தெல்லாம் தருவார்' என்று பாரதியார் சொன்னது நினை வுக்கு வர, இந்த ஐங்கரனைப் பணிகிறோம். இவரது சந்நிதிக்கு அருகில் (அதாவது பிரதட்சிண கதியில்) சோமாஸ்கந்தர் சந்நிதி. சற்றே பெரிய அளவு சோமாஸ்கந்த மூர்த்தம்தான். மாசி மக பிரம்மோற்சவம் மற்றும் தீர்த்த வாரியின்போது இவர் கோலாகலமாக இருப்பாராம்! அடுத்து, வரதராஜ பெருமாள். வணங்கியபடியே மீண்டும் உள்வாயில் வருகிறோம்.
இப்போது முறையாக உள் பிராகார வலம் செல்வோமா? உள் வாயிலை அடுத்து வள்ளி- தெய்வானை உடனாய ஆறுமுகர், 12 கரங்களுடன் காட்சி தருகிறார். திருவாசியுடனும் சேர்த்து ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்டவராம்! அழகு கொஞ்சுகிறது. இவரும் சிறப்புமிக்கவர். சூரபத்மனையும் பிற அசுரர்களையும் முருகப் பெருமான் அழித்தார் இல்லையா? அது தவிர, கார்கேய வம்சத்தைச் சேர்ந்த காலகண்டன், வல்லூரன் போன்ற அரக்கர்களையும் அழித்தார். என்னதான் இருந்தாலும் அதுவும் கொலைதானே! அந்த பாவம் நீங்க, சிவபுரியான இங்கு வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
அருணகிரிநாதர் இந்த முருகனை, கோவை மாநகர் (கோவல் - கோவையானது) முருகன் என்றழைக் கிறார்.
'கோவதா மறையோர் மறையோதும் ஓதம் விழவொலிகோடி ஆகம மாவொலி கோவை மாநகர் மேவிய வீர! வேல் அயில் ஆயுத!கோதை ஆனையினோடு அமர் பெருமாளே'
- என்று திருப்புகழ் வழி நாமும் வழிபட்டு நகர்கிறோம்.
வடமேற்கு மூலையில் கஜலட்சுமி சந்நிதி. வடக்குச் சுற்றில் பஞ்ச மூர்த்திகள் சந்நிதி. அடுத்து நடராஜர் சபை. அடுத்து, தலநாதரான அந்தகாசுர சம்ஹார மூர்த்தி. நான்கு கரங்கள் கொண்டவர்; மான்- மழு மற்றும் திரிசூலம் தாங்கியவர், இவர் அருகில் யோகீஸ்வரியாக நிற்கும் அம்பாள்.
உக்கிரமூர்த்தியாக இருக்க வேண்டிய சிவனார், அனைத்தையும் வசீகரிக்கக் கூடிய அழகுச் சிரிப்போடு தோற்றம் தருகிறார். அந்த மந்தகாசப் புன்னகையே மனதைக் கொள்ளையடிக்கிறது. தொடர்ந்து வரிசையாக வாகனங்கள்.
வடகிழக்கு மூலையில் பைரவர், சேத்திரபாலர். திருக்கோவிலூரில் பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந் தவர். அந்தகாசுரனை வதம் செய்த வடுக கோலமே பைரவராகவும் கருதப்படுவதால் சுவாமி, மகா பைரவ அம்சமாக உள்ளார். எனவே, அஷ்டமி திதி நாட்களில், பைரவரையும் மூலவரையும் வழிபடுவது வெகு சிறப்பு.
வினைத் துன்பங்கள் போக்குவது, திருமணத் தடைகள் மற்றும் வழக்கு வியாஜ்ஜியங்கள் போன்ற துன்பங்களில் இருந்து விடுபட பைரவர் வழிபாடு கண்டிப்பாக உதவும்.
அடுத்து, நவக்கிரக சந்நிதி. திருக்கோவிலூர் வீரட்டானம், கிரக தோஷ நிவாரணத் தலமாகும். வெள்ளியானவர் அந்தகாசுரனை காப்பாற்ற 'சித்து வேலை' செய்து, சிவனாரிடம் சிக்கிக் கொண்டார் அல்லவா? அதன் பின்னர் அவர், சிவனாரிடம் மன்னிப்பு வேண்ட... சிவனார் தமது வடிவத்துள் மறைத்த வெள்ளியை வெண்மை நிறத்துடன் (அஞ்ஞானக் கருமையைப் போக்கி) வெளியே விட்டாராம். இப்படி, சுக்கில நிறத்தில் வெளி வந்ததால், அந்த ஆச்சார்யார், சுக்கிராச்சார்யார் ஆனார். சுக்கிரனுக்கே தோஷம் நீங்கியதால், சுக்கிர தோஷத்துக்கான பரிகாரத் தலம் இது. அந்தகாசுரனுக்கு இருள் நீக்கி ஞானம் கொடுத்ததால், ஞானகாரகனான கேது தோஷமும் இங்கு நீங்கும்.
மகாபைரவ ஸ்தானம் என்பதால் சனி, ராகு, கேது தோஷங்களுக்குப் பரிகாரம் தேடலாம். தேவ குருவான வியாழனும் தனது குறைகள் நீங்க இங்கு வழிபட்டார். இதனால், வாக்கு வன்மையும் இஷ்ட காரிய ஸித்தியும் கிடைக்கப் பெற்றார். எனவே இது, குரு பிரார்த்தனைத் தலமும் கூட!
தொடர்ந்து கிழக்குச் சுற்றில் பஞ்ச லிங்கங்கள் காசி விசுவநாதர், சிதம்பரேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர், அகஸ்தீஸ்வரர் மற்றும் சூரியன். சூரியனுக்கு, 'சிவசூரியன்' என்றே பெயர். அந்தகாசுரன் தோன்றிய போது, அனைத்தும் இருள்மயம் ஆனது. சூரியன் மட்டும் வேகமாகத் தனது பிரகாசத்தையெல்லாம் திரட்டிப் பேரொளியாக ஒளிர்ந்தான்.
எல்லோருக்கும் வழிகாட்டும் விதத்தில் சூரியன் இருந்ததால், சிவனாரே அவனைப் பாராட்டி 'சிவசூரியன்' எனும் பெயருடன் நவக்கிரகங்களுக்குத் தலைவன் ஆகும் பேற்றையும் வழங்கினார். எனவே, சூரியன் அருளைப் பெறவும், சூரிய தோஷம் இருந்தால் பரிகாரம் செய்து கொள்ளவும் இதுவே தலமாகும்.
தெற்குச் சுற்றில் திரும்புகிறோம். திருஞானசம்பந்தர். அடுத்து, நரசிங்க முனையரையர், மெய்ப்பொருளார் (இருவரும் அறுபத்து மூவருள் சேர்த்தி. மெய்ப் பொருளாரை ஏற்கெனவே சந்தித்து விட்டோம். நரசிங்கரைச் சந்திக்க இருக்கிறோம்), மீனாட்சி சுந்தரேஸ்வரர். ஜடாமுனி, ஐயனார், வீரபத்திரர், சப்தமாதர்கள், கணபதி, முருகன், வல்லப கணபதி, பால கணபதி, சேக்கிழார். தொடர்ந்து வரிசையாக அறுபத்துமூவர். மீண்டும் நாவுக்கரசர், மாணிக்க வாசகர், ஞானசம்பந்தர், சுந்தரர்.
அப்படியே மீண்டும் பெரியானை கணபதி சந்நிதியை அடைந்து விட்டோம். வலத்தை நிறைவு செய்து, வாயிலில் உள்ள நந்திதேவரை வணங்கி, மூலவர் சந்நிதிக்குள் நுழைகிறோம். அர்த்த மண்டபத்தில் நின்று ஐயனின் திருவடிவம் காணக் காண கொள்ளை ஆனந்தம்! அருள்மிகு வீரட்டேஸ்வரர்... பெயருக்கேற்றபடி கம்பீரமாகக் காட்சி தருகிறார். சுயம்புத் திருமேனியான சிவலிங்கம்.

ல ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற திருப்பணியின் போது, கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் சற்றே உயரமாகவும் கருவறை தாழவும் இருப்பது புரிபட... சிவலிங்கத் திருமேனியையும் சுற்றியுள்ள இடங்களின் அளவுக்கு உயர்த்த முற்பட்டனர். அதற்காக, லிங்கத்தை அடிவரை தோண்டி எடுக்க முயன்றனராம். அவர்தாம் அடிமுடி காட்டாதவர் ஆயிற்றே! 25 அடி ஆழத்துக்கும் அதிகமாக லிங்க பாணம் நீண்டு கொண்டே இருக்க, அப்படியே விட்டு விட்டு, இருந்த நிலையிலேயே ஆவுடையாரை எழுப்பித் திருப்பணியை முடித்தனர்.
படைகொள் கூற்றம் வந்து மெய்ப் பாசம் விட்ட போதின்கண்இடைகொள்வார் எமக்கிலை எழுகபோது நெஞ்சமேகுடைகொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்தனுள்விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே
- என்று ஞானசம்பந்த பெருமான் போற்றிப் புகழும் அருள்மிகு குழகர். ஆம், அதுதான் ஞானசம்பந்தர் இறைவனுக்குச் சூட்டும் பெயர். அதுவும் யார் தெரியுமா இந்தக் குழகர்? மலையமானுடைய மூதாதை.
நெஞ்சம் குழையக் குழைய குழகரை வணங்கி நிற்கிறோம். மலையமானின் அரச வம்சத்தைப் பற்றி ஞானசம்பந்தர் சிறப்பித்து, இறைவனுடன் தொடர்புபடுத்துவதற்குக் காரணம் உண்டு.
கடையேழு வள்ளல்களுள் ஒருவரான பாரி, பறம்பு நாட்டை ஆண்டு வந்தார். அவருக்கு அங்கவை, சங்கவை என்று இரு மகள்கள். மூவேந்தரும் பாரி மீது போர் தொடுக்க, பாரி இறந்து விடுகிறார்.
அவரின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பை ஏற்று, அவர்களைப் பாது காக்கிறார் பாரியின் நண்பரும் பெரும் புலவரு மான கபிலர். தக்கவர்களாக உள்ள அரசகுடி மக்களை அணுகி, பாரி மகளிரை மணமுடிக்கக் கேட்கிறார். ஆனால், மூவேந்தர்களது கோபத்துக்கு பயந்து அனைவரும் ஒதுங்க, கோவல் நாட்டு மன்னர் தெய்வீகன், திருமணத்துக்கு ஒப்புக் கொண்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. தெய்வீகன் யார் என்பதில் ஆராய்ச்சியாளர்களுக்குக் கருத்து வேறு பாடுகள் இருந்தாலும், அவர் நடுநாடான சேதி நாட்டு மன்னர் என்பதில் கருத்து வேறுபாடில்லை.
சங்கப் புலவர்களால் பாராட்டப்பெற்ற மலையமான் திருமுடிக்காரியே தெய்வீகன் என்பார் சிலர். ஆனால், ஒளவை துரைசாமிப் பிள்ளை போன்றோர், காரியின் மூத்த மகன் தெய்வீகன் என்றும், இளைய மகன் கண்ணன் என்றும் குறிப்பிடுவர். சோழன் கிள்ளிவளவன், காரி மக்களைச் சிறை பிடித்து, பின்னர் கோவூர்கிழார் என்னும் புலவரின் அறிவுரையின்படி விடுவித்ததாகத் தெரிகிறது. சங்கப் பாடல்களில் காணப்படுகிற வேறுபட்ட தகவல்களில் இருந்து ஒரு சிலவற்றை உணரலாம்.
பாரி மகளிருக்குக் கபிலர் திருமணம் முடித்து வைத்தார்; ஒரு மகள், மலையமான் வம்சத்து தெய்வீகனை (காரியோ அல்லது அவர் மகனோ) மணந்தாள்; மற்றொரு மகள் அதே அரசரையோ, அதே வம்சத்தாரையோ, தெய்வீகன் தம்பி கண்ணனையோ மணந்தாள்; திருமணம் திருக்கோவிலூரில் நடந்தது; திருமணத்துக்கு மூவேந்தர்க்கும் அழைப்பு அனுப்பினார் ஒளவையார்... இவை உணரப்படும் செய்திகள்.
திருமணம் செய்து வைத்த பின்னர், நண்பனின் நினைவாக கபிலர், பெண்ணாற்றின் தென்பகுதியில் தீப்பாய்ந்து உயிர் விட்டதாகக் கல்வெட்டு சொல்கிறது (வடக்கிருந்து உயிர் நீத்ததாகப் பாடல் குறிப்பு உண்டு). எப்படியும், கோயிலுக்கு அருகில்- பெண்ணை யில் 'கபிலக் கல்' என்று ஒரு குன்று உள்ளது. இதுவே கபிலர் உயிர் நீத்த இடம்.
தட்சிண பினாகினி என்று போற்றப்படும் தென் பெண்ணையின் தென்கரையில்தான் திருக்கோவிலூர் உள்ளது. சிவபெருமானுடைய வில்லில் இருந்து (பினாகம்) தோன்றியதால் பினாகினி (உத்தர பினாகினி என்பது வட பெண்ணை; சில நேரம், கிருஷ்ணா நதியையும் அவ்வாறு அழைப்பதுண்டு).
ஒரு காலத்தில் கோயிலின் மூன்று பக்கங்களைச் சூழ்ந்து கொண்டு தென் பெண்ணை ஓடியதாம். பாரி மகளிர் திருமணத்தின்போது, 'நீர் மட்டும் போதாது, தயிரும் நெய்யும் பாலுமாகப் பாய்ந்து வா!' என்று ஒளவை பணிக்க, அதன்படியே பாய்ந்து வந்ததாம்.
'ஒளவை பாடலுக்குத் ததி நெய் பால் பெருகியே அருந்தமிழ் அறிவினால் சிறந்து பௌவ நீராடைத் தரணிமான் மார்பில் பயிலும் உத்தரியமும் போன்றுமொய்வரால் கெண்டை வாளை சேல் மலங்க முதவிய சனம் எதிர்கொள்ளத் தெய்வமா நதிநீர் பரக்கு நாடந்தத் திருமுனைப்பாடி நன்னாடு'
- எனும் பாடலால் இதை அறியலாம். சரஸ்வதி கடாட்சம் பெற்ற ஒளவையின் பாடலுக்குக் கட்டுப்பட்டதால், தென் பெண் ணைக்கு, 'பாரதிநேய தரங்கிணி' என்றே பெயர்.
இந்த ஆற்றில் நீராடி, வீரட் டேஸ்வரரை வணங்கினால், தீராத வினையும் தீரும். ஆறு இப்போது கோயிலைத் தொட்டுக் கொண்டு பாயவில்லை; சில அடிகள் தொலைவிலேயே ஓடுகிறது. இருந்தபோதிலும், கபிலக் குன்றும் ஆற்றங்கரையும் திருக்கோவிலூர் வீரட்டானத்துக்குச் சொல்லொணா அழகு சேர்க்கின்றன.
புகழ் மிக்க மலையமான் பரம்பரையைப் பற்றி யும் தெய்வீகனைப் பற்றியும் தல புராணம் நிறைய பேசுகிறது. சங்க காலத்தில் இந்தப் பகுதி மலை நாடு எனப்பட்டது; மலைநாட்டை ஆண்டவர்கள் மலையமான்கள். மலையமான் நாடு என்பதே மலாடு என்று மருவியது. அருவாநாடு என்றும் ஒரு பெயர் இந்தப் பகுதிக்கு உண்டு. தென் பெண்ணையின் இரு கரைகளிலும் உள்ள நிலம் திருமுனைப்பாடி நாடு என்பார் சேக்கிழார். முனையர் குலத்தவர் ஆண்டதாலோ, அழகான இடம் என்பதாலோ இப்பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். மலையமான்கள், தங்களைச் சேதி ராயர்கள் என்று அழைத் துக் கொண்டனர். எனவே, இது சேதி நாடும் ஆனது. சோழப் பேரரசின் காலத்தில், மலாடு என்பது மிலாடு என்றானது.
தல புராணத்தின்படி தெய்வீகன், யாகத்தின் பயனா கப் பிறந்தவன். காலகேய வம்சத்தைச் சேர்ந்த சூரிய சக்கரன் எனும் அரக்கன், பிள்ளைகள் வேண்டுமென்று பிரம்மா மற்றும் சரஸ்வதியிடம் பிரார்த்தனை செய்தான். அதன்படி அவனுக்குக் காரண் டன், வல்லூரன் எனும் புதல்வர் கள் பிறந்தனர். வலிமை மிக்கவர்களான இவர்கள் பலரையும் துன்புறுத்தினர். அனைவரும் சிவபெருமானை வேண்டி விமோசனம் கேட்ட னர். கயிலாயம் வந்த குக முனி வரை அழைத்த சிவனார், பூமியில் யாகம் செய்து, அதன் பயனாக ஒரு மகனைப் பெற்று, அரக்கர்களை அழிக்கச் சொன்னார்.
'எங்கு யாகம் செய்வது?' என்று முனிவர், முருகப் பெருமானை வேண்டினார். முருகர், தமது வேலை பூமிக்குச் செலுத்தினார். பூமியில் வேல் நின்ற இடம் திருக்கோவிலூர். திருக்கைவேலூர் என்பது, இவ்வாறு மருவியதாம். முனிவர் யாகம் செய்ய, அதன் பயனாகப் பதினாறு வயது இளைஞன், பன்னிரண்டு வகை மலர் மாலைகளை அணிந்து தோன்றினான். தெய்வீக அம்சம் கொண்டதால் தெய்வீகன் என்று அழைக்கப்பட்டான். தமிழ் வேந்தர் மூவரும் தத்தம் நாட்டின் ஒரு பகுதியை அவனுக்குக் கொடுக்க அவன் நடுநாட்டு வேந்தன் ஆனான். அரக்கர் களைக் கொன்றான்; மூவேந்தர் மகள்களை மணந் தான்; அவனே அங்கவை மற்றும் சங்கவையை மணந்தான் என்று கூறுகிற தல புராணம், அவனுக்கு மூன்று மகன்கள், முறையே அவர்கள் நரசிங்க முனையரையர், மெய்ப்பொருள் நாயனார், குலசேகரர் என்றும், மூவரும் நடுநாட்டின் ஒவ்வொரு பகுதியை ஆண்டனர் என்றும் மேலும் சொல்லும்.
வீர வள்ளலாகத் திகழ்ந்த மலையமான் திருமுடிக்காரி, பாரி மகளை மணந்த மலைய வம்சத்து தெய்வீகன், வீரம் செறிந்த மலாட நாடு, நடு நாட்டுப் பகுதியில் மலையர் குலத்தவராக அரசாண்ட மெய்ப்பொருள் மற்றும் நரசிங்க முனையரையர்... என பிரசித்திப் பெற்ற வரலாறுகள் பலவற்றின் சேர்க்கையாக, இந்தத் தல புராணம் பிற்காலத் தில் உருப்பெற்றிருக்க வேண் டும். அதனால்தான், அனைத்து பெருமைகளையும் ஒன்று திரட்ட முயல்கிறது.
லேசான காலக் குழப்பம் இருந்தாலும், நியாயமான பெருமை என்பதால், சுவாரஸ்யமான இந்தக் கதையை வீரட்ட பக்தர்கள் அனுபவித்துச் சுவைப்பதில் தடை இருக்க முடியாது. இத்தகைய சிறப்பு மிக்க மலையமான் குலத்தவரின் மூதாதை என்றே குழகரைக் குறிப்பிடுகிறார் ஞானசம்பந்தர்.
'நிணத்திடை யாக்கை பேணி நியமஞ் செய்திருக்க மாட்டேன்மணத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றமென்னுங்கணத்திடை ஆட்டப்பட்டுக் காதலால் உன்னைப் பேணுங்குணத்திடை வாழ மாட்டேன் கோவல் வீரட்டனீரே'
என்று அப்பர் பெருமானும் பாராட்டும் வீரட்டக் குழகரைக் கண்ணார தரிசித்து நிற்கிறோம்.
இந்தக் குழகர், மெய்ப்பொருள் நாயனாருக்கும் நரசிங்க முனையரையருக்கும் மூதாதையர்! மெய்ப்பொருள் நாயனாரை தெரியும், நரசிங்க முனையரையர் யார் என்கிறீர்களா? அவரும் அறுபத்துமூவருள் ஒருவர். திருமுனைப்பாடி நாடு என்று அழைக்கப்பட்ட பகுதியை, திருநாவலூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டவர்.
அதே ஊரில் அந்தணக் குடும்பம் ஒன்றில் பிறந்து வளர்ந்த அழகிய குழந்தையான நம்பி ஆரூரர் (அதுதான், நம்ம சுந்தரர்) எழில் கண்டு, அந்தக் குழந்தையை வளர்க்க ஆசை கொண்டு வளர்ப்புத் தந்தையானவர். திருக்கோவிலூர்- பண்ருட்டி பாதையில், திருக்கோவிலூரில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் இருக்கிறது நாவலூர். மெய்ப்பொருள் நாயனார், சுந்தரர் காலத்துக்குச் சற்று முன்னதாகவும் (7ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதி), நரசிங்கர், சுந்தரருக்குச் சம காலத்தவராகவும் இருந்தனர்.
மலையமான் குலத்துக்கு, இங்கு இன்னுமொரு பெருமையும் உண்டு. தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை எடுப்பித்தவரும், திருமுறை கண்ட சோழன் என்று பெயர் பெற்றவருமான ராஜராஜ சோழனின் தாயார் வானவன் மாதேவி, மலாட (மலையமான்) குல இளவரசி ஆவார்.
சுந்தரச் சோழரை மணந்து சோழப் பேரரசியா னார். அவரது தாய் வீட்டில்தான், அவரின் புதல் வர்கள் பிறந்தனர். சுந்தரச் சோழர் இறந்தபோது, அவருடன் தீப்புகுந்த அந்தப் புண்ணியவதி பெற்ற பிள்ளை- திருக்கோவிலூர் மகவு, பின்னாளில் பெருவுடையார் ஆலயம் எழுப்பி பெருந் தொண்டு புரிந்தது. இப்படியாக ராஜராஜ சோழனுக்கும் திருக்கோவிலூருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மலையமான் குலத்தவர்கள், பிற்காலத்தில் மலை மன்னர் என்று அழைக்கப்படலாயினர்.
மலையர் குலத்துக்கென்ன... ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதி இறைவன்தானே அனைவருக்கும் மூதாதை! அந்த மூதாதையரை, ஆதிக் குழகரை வணங்கி அவர் சந்நிதி விட்டு வெளியே வருகிறோம். கோஷ்டங்களை வணங்க மீண்டும் உள் பிராகார வலம் வருகிறோம்.
கோஷ்ட மூர்த்தங்கள் மட்டுமில்லை, இங்கே கோஷ்டச் சுவரில் காணப்படும் சிறிய சிற்பங் களையும் காண வேண்டும். வடக்குக் கோஷ்டத்தில் எழுந்தருளி இருக்கும் துர்கையைக் காண, கண்கோடி வேண்டும். எட்டுக் கரங்களுடன் கூடிய அஷ்டபுஜ துர்கை. வீரமும் கரிசனமும் ஒருசேர மிளிரும் துர்கையின் விழிகள் அற்புதம்; கல் சிற்பத்திலேயே கருவிழியும், சுற்றிலும் வெள்ளை நிற விழியும் தெரிகின்றன. ராஜராஜனின் தாயார் காலத்துச் சிற்பம் என்கிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இந்த துர்கையை வழிபடுவது, சிறப்பு!
துர்கை கோஷ்டத்தின் அருகிலேயே கருவறை சுவரில் அந்தகாசுர வதத்தைக் காட்டும் சிறிய சிற்பம். வீரட்டநாதரும் யோகீஸ்வரியான அம்பாளும் டாகினி தேவதையும் பரவசப்படுத்துகின்றனர். இன்னொரு சிறிய சிற்பத்தில் சீதா, லட்சுமண சமேத ராமர்; மற்றொன்றில், நரசிங்க அவதாரம். திருக்கோவிலூர் திருக்கோயில் சிறப்புகளில் இதுவும் ஒன்று. மூலவர் கருவறை சுவரில், சிறிய அளவு சிற்பங்கள் பல உள்ளன. அளவில் சிறியவை என்றா லும், ஒவ்வொன்றும் ஒரு கடல் எனும் அளவு சிற்ப நுணுக்கங்கள்; சிற்பத்தில் காட்டப்படும் நுட்பங்கள். சிவபெருமானது அட்ட வீரட்டத் தலங்களில், திருக்கடவூர் வீரட்டம் (எமனை காலால் உதைத்தது), வழுவூர் வீரட்டம் (கஜ சம்ஹார மூர்த்தி), திருவதிகை வீரட்டம் (திரிபுர தகனம்) ஆகியவற்றின் காட்சிகளையும் இந்தச் சிற்பங்களில் காணலாம். சிறிய சிற்பங்களாக இருந்தாலும் எழிலும் துல்லியமும் போட்டி போடுகின்றன.
கங்கா விசர்ஜனர், வாலி- சுக்ரீவன், ஆஞ்சநேய சயனம், ராவணன் கயிலாயத்தைத் தூக்குவது போன்ற சிற்பங்களும் உள்ளன. கிழக்குக் கோஷ்டத் தில் லிங்கோத்பவர்; அடி தேடும் வராகமூர்த்தியின் அழகு சொல்லி மாளாது. தெற்குக் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியும் விநாயகரும். சிற்பங்களை விட்டுக் கண்களை நீக்க இயலாமல் மெள்ள வெளியே வருகிறோம்.
அம்பாள் சந்நிதி, தனிக் கோயிலாகவே உள்ளது. சுவாமி கோயிலுக்குத் தெற்காக, மேற்குப் பார்த்த வாறு அமைந்துள்ளது. முன்காலத்தில், இரண்டு கோயில்களுக்கும் இடையே வழியன்று இருந்ததாம். இப்போது இல்லை. மூன்று நிலை கோபுரமும் பெரிய முன் மண்டபமும் அமைந்த கோயில். மகாமண்டப வாயிலில் உள்ள துவார கணபதியையும் துவார சுப்ரமணி யரையும் வணங்கி உள்ளே செல்கிறோம்.
அர்த்த மண்டபத்தில் சிறிய நந்தி. அம்பாள் அருள்மிகு பெரியநாயகி, நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக் கோலத்தில் காட்சி தருகிறார். பிருகந் நாயகி, சிவானந்த வல்லி என்றும் திருநாமங்கள் உண்டு. அம்பாளுக்கு, சக்கரங்களைத் தாடங்கங்களாக (காதணி) அணிவித்திருக்கிறார்கள். அபய- வரம் தாங்கிய அம்பாள், மற்ற இரு கரங்களில் தாமரை மொட்டுகள் தாங்கி நிற்கிறார். வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு தரிசித்தால், கண் கொள்ளாப் பேரழகு!
சிவபெருமானது கண்களைப் பொத்திய தவறுக்குப் பரிகாரம் தேடும் விதமாக, அம்பாள் இங்கு சிவானந்த லயத்தில் தவம் செய்தார். இவற்றுடன் அறையணி நல்லூரிலும், திருவண்ணாமலையிலும் கூட அம்பாள் யோகத்தில் அமர, இவற்றின் பயனாக இறைவனின் வாம பாகமாக (இடப் பாகம்) துலங்கும் பேறு பெற்றார்.
அகன்ற கோயில் வளாகத்தின் தெற்கு மூலையில், மெய்ப்பொருள் நாயனாருக்கும் ஒரு தனிச் சந்நிதி. வளாகத்தின் ஒரு பக்கத்தில், வாகனங்களை வைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
சிவன் கோயிலில், மாசி மாதம் பிரம்மோற்சவம் நடைபெறும். 6-ஆம் நாள் மாலை, அந்தகாசுர வதம் நடைபெறும். சித்திரை- வசந்தோற்சவம், சஷ்டி- லட்சார்ச்சனை ஆகியவை சிறப்பானவை. வளாகத்தில் நின்று சுற்றுமுற்றும் பார்க்கும்போது, திருக்கோவிலூர் பெருமைகள் இன்னும் பெரிதாகப் புலப்படுகின்றன. சிவபெருமான் மகிழ்ந்து வாசம் செய்வதால்- சிவபுரி, கண்ணுவ ரிஷி பூஜித்ததால்- கண்ணுவபுரம், கபிலர் வழிபட்டதால்- கபிலபுரி, காமனான மன்மதன் பூஜித்ததால் காமபுரம் என்றெல்லாம் இத்தலம் பெயர் பெறும். திருக் கோவிலூருக்குக் கிருஷ்ணாரண்யம் என்றும் பெயர் உண்டு.
மேலூர் பகுதியில், பிரபல வைணவ திவ்வியத் தேசத் தலமான உலகளந்த பெருமாள் கோயில் உள்ளது. முதலாழ்வார்களான பொய்கையாரும், பூதத்தாரும், பேயாரும் இந்தத் தலத்தில்தான் சந்தித்தனர்; பிரபந்தப் பாடல்களைப் பாடத் தொடங்கினர். எனவே, நாலாயிர பிரபந்தத்தின் பிறப்புத் தலம் என்று திருக்கோவிலூரைச் சிலா கிக்கலாம்.
சிவன் கோயில் அமைந்துள்ள கீழையூர் பக்கத்திலேயே, ஞானியார் சுவாமி மடாலயம் உள்ளது. இந்தத் திருமடத்தின் முதல் மூன்று மடாதிபதிகளும் திருக்கோவிலூரில் வாழ்ந்து சமாதி அடைந்தனர்.
ஊரின் வடக்கு வீதியில் குகை நமசிவாயர் சமாதி உள்ளது. திருவண்ணாமலையில் ஒரு குகையில் வாழ்ந்தவர் இவர். மலையையே அண்ணாமலையாக வழி பட்ட மகான்.
பெண்ணாற்றின் வடகரையில், திருக் கோவிலூரின் புறப் பகுதியில், ஞானானந்தகிரி சுவாமிகளது தபோவனம் அமைந்துள்ளது. அமைதியான இடம்.
மேற்குக் கரையில், கர்நாடக மாநிலத்தில், கோகர்ணம் எனும் ஊருக்கு அருகிலுள்ள மங்களபுரி என்ற கிராமத்தில் தோன்றிய சிறுவன், பண்டரிபுர விட்டலனால் ஈர்க்கப்பட்டார். பின்னர், ஆதிசங்கரர் நிறுவிய ஜ்யோதிர்மட பீடாதிபதியான சிவரத்னகிரி சுவாமிகளிடம் தீட்சை பெற்றார்.
தம் ஆச்சார்யர் முக்தி அடைந்த பின்னர், ஜ்யோதிர்மட பீடாதிபதியும் ஆனார். சில காலத்துக்குப் பின், பீடாதிபதி நிலைமையை உதறித் தள்ளி விட்டு, இமயமலைச் சாரலிலும் வேறு பல இடங்களிலும் தவ வாழ்க்கை வாழ்ந்தார். நிறைவாக, பெண்ணாற்றங்கரையைத் தேர்ந்தெடுத்து, தபோவனத்தை உருவாக்கி, அங்கேயே தங்கினார். ஐந்து மாமரங்களின் அடிவாரத்தில், ஆதியில் மிருகண்டு முனிவர் தவம் இயற்றியதாகக் கருதப் படுகிற தபோவனத்திலேயே, 1974-ல் ஞானானந்த கிரி சுவாமிகள் சமாதி அடைந்தார்.
பெண்ணையின் தென்கரையில் இருக்கும் திருக்கோவிலூரில் இருந்து ஆற்றைக் கடந்து வடகரையை அடையும்போது, நமது கருத்தைக் கவர்வது ரகூத்தம பிருந்தாவனம்.
துவைத சம்பிரதாய ஆச்சார்யரான மத்வரின் மரபில் வந்தவர் ரகூத்தமர் (இந்தப் பெயரே ரகோத்தமர் என்றானது). மத்வ பீடங்களுள் ஒன்றான உத்தராதி மடத்தின் ஆச்சார்யராகத் திகழ்ந்தவர்; 16- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மத்வ மரபில் மிகுந்த மதிப்புக்குரியவரான ரகூத்தமர், இந்தப் பகுதியில் தமது இறுதிக் காலத்தைக் கழித்து, பெண்ணாற்றங்கரையில் முக்தி அடைந்தார். அவரது பிருந்தாவனமே ஆற்றின் வட கரையில் உள்ளது.
பெண்ணாற்றின் வடகரையில், ரகூத்தம பிருந்தா வனத்துக்கு அருகில் உள்ள பகுதி, மணம்பூண்டி என்று அழைக்கப்படுகிறது. காரணம் என்ன தெரியுமா? பாரிமகளிருக்குத் திருமணம் நடை பெற்ற இடமாம்!
இன்னும் சற்றுத் தள்ளி, பாடல் பெற்ற தேவாரத் தலங்களுள் ஒன்றான அறையணிநல்லூர். அத்வைத, விசிஷ்டாத்வைத, துவைத, சைவ, வைணவ, நாமசங்கீர்த்தன மரபுகள் அனைத்தும் சங்கமிக்கும் திருக்கூடலாகத் திகழும் திருக்கோவி லூரில் இருந்து விடைபெற யத்தனிக்கிறோம்.
படைகள்போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும்விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும்இடையிலேன் என்செய்கேனான் இரப்பவர் தங்கட்கென்றும் கொடையிலேன் கொள்வதே நான் கோவல் வீரட்டனீரே
- என்று அப்பர் பெருமான் பாடிய குரல், உள்ளத்தில் எதிரொலிக்க மெள்ள நகர்கிறோம்.

No comments:

Post a Comment