சிவபெருமான் மெள்ளத் திரும்பினார். கால் சிலம்புகள் கொஞ்ச நடந்து வந்த அம்பிகை, பெருமானின் தாள் தொட்டு வணங்கினார்.
"என்ன தேவி... என்ன விண்ணப்பம்?"
"ஐயனே... ஐந்தெழுத்து திருமந்திரத்தை, தங்களின் திருவாக்கால் கேட்க வேண்டும் என்று விருப்பம்"- சிவபெருமானுக்கு ஒருபக்கம் சிரிப்பு; மறுபக்கம் வியப்பு! இதென்ன... உமாதேவிக்கு இப்படியோர் ஆசை! பிரம்மஞானம், பராசக்தியின் அங்கம். அப்படியும் ஏதோ தெரியாதவள்போல, ஒவ்வொரு முறையும் பஞ்சாட்சரமான நமசிவாய மந்திரத்தின் பெருமையைச் சொல்லக் கேட்பதில் அவளுக்குச் சொல்லொணா மகிழ்ச்சி. அதுவும் ஈசன் திருவாக்கால் கேட்டால், அத்தனை புளகாங்கிதம். அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் அருள் வழங்கும் அன்னையாருக்கு, ஐயன் வாக்கைக் கேட்கக் கேட்க ஆனந்தம்.
"சரி தேவி. நின் சித்தம் எனது பாக்கியம். எப்போது வேண்டுமோ அப்போது ஆசான் வேடம் தாங்கு கிறேன்."
"தங்களது திருவாக்கைக் கேட்க நாளென்ன பொழுதென்ன? இப்போதே, இந்தக் கணமே உபதேசம் உரையுங்கள் ஸ்வாமி."
தேவியாரின் நிரந்தர விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, நமசிவாய எனும் திரு ஐந்தெழுத்து பற்றிய உபதேசத்தைத் தொடங்கினார் சிவபெருமான். ஐயன் ஆசானாக, அம்மை கைகட்டி வாய்பொத்தி மாணாக்கியாக... நாதப் பெருக்காலும் ஒளி வீச்சாலும் ஒளிரத் தொடங்கியது திருக்கயிலாயம்.
சத்திய லோகத்தில் இருந்த பிரம்மனும் சரஸ்வதியும் கூர்ந்து கவனித்தனர். பாற்கடலில் யோக நித்திரையில் இருந்த திருமால், சற்றே திரும்பிப் படுத்தார். ஸ்ரீதேவியும் பூதேவியும் சிரித்துக் கொண்டனர்.
மான், மயில், சிங்கம், புலி முதலான எல்லாமும் திருக்கயிலாயத்தில் வந்து குவிந்தன. அனைத்து உயிர்களும் சிந்தையெல்லாம் கயிலைநாதனின் உபதேசத்தில் வைத்து, சித்தமெல்லாம் சிவனிடம் வைத்திருக்க... ஐயன் பொன் வானாக பொங்கி மிளிர, அருகில் அம்மை அழகு மேகமாக எழில் சிதற... பார்த்துக் கொண்டிருந்த ஒரேயரு மயில், மந்திரச் சித்தத்தில் இருந்து மெள்ள பிசகியது.
அம்பிகையின் நீலவண்ணத் திருமேனி, அந்த மயிலுக்கு மேகத்தை ஞாபகப்படுத்தியது. தன்னை மறந்த மயில், தோகை விரித்து ஆடத் தொடங்கியது.
அண்டத்தின் அழகுக்குத் தானும் ஏதேனும் சேர்க்க வேண்டும் என்று அந்த உயிர் துடித்ததை அம்மை உணர்ந்தார். பிள்ளையின் பரிதவிப்பு, தாய்க்குத் தானே புரியும்? மெள்ள அடி வைத்து, மெலிதாகத் திரும்பி, விரிந்து பரந்த தோகையை மெள்ள அசைத்து, மென்னகையில் மோகன எழில் காட்டிய மயிலுக்கு, அன்பு வதனத்தால் அருள் கூட்டினார் அம்மை.
ஐயனது பார்வையும் திரும்பியது. எல்லையின்றி விளையாடும் பரம்பொருள், இப்போதும் அருள் திருவிளையாடல் நடத்துவதற்குத் திருவுளம் கூட்டியது.
பார்வை திரும்பிய அதே நேரம், நெற்றிக் கண் துடிக்கத் தொடங்க... அம்மை அச்சம் காட்டினார்.
"ஐந்தெழுத்தை விடவும் ஆடலில் அக்கறை காட்டிய பேதையே! பூவுலகில் மயிலாகப் பிறக்கக் கடவாய்!"
"ஐயனே, அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருளுங்கள்.''
ஸ்வாமியிடமிருந்து அம்பாளுக்கு சாபம் பறப்பதைக் கண்ணுற்ற மயில், தள்ளாடியது. ஒன்றும் அறியாத அந்த உயிரை, கருணைப் பார்வை பார்த்த பரமன், அங்கிருந்து அகன்றார்.
தேவியார் தலை சாய்த்து நகைத்தார்!
"அண்ட பகிரண்டமெல்லாம் அனைத்தும் நீயே. அழகு வடிவங்கள் பலவாக வெளிப்படுபவளும் நீயே. உன்னைப் பலவிதத் திருக்கோலங்களில் காணும் விருப்பத்தை இப்படியெல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அழகு மயிலாக நீ ஆடும்போது, அங்கு வருவதற்கு அருள் தா அன்னையே" என்று பொய்யான பணிவுடன் பரமன் வேண்ட, கணப் பொழுதில் அம்மை காணாமல் போனார்.
ஓங்கி நின்ற அந்தப் புன்னை மரம் பெருமையு டன் கிளைகளை ஆட்டியது. என்ன இருந்தாலும் பராசக்தியே, மயிலுருவம் கொண்டு அதனடியில் பூஜையில் அமர்ந்திருந்தாரே! ஆம்... சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, சுற்றிச் சுற்றி வந்து அந்த மயில் வழிபடும் அழகே அழகு!
தொண்டை மண்டலம் தேடி வந்து மயிலுருக் கொண்டு அம்பிகை சிவ வழிபாடு செய்ய... அம்பிகையைத் தேடி வந்த அகிலநாயகர், மயிலாக நின்றவளை
கற்பகவல்லியாக்கி மணமுடிக்க... 'தான் மயிலாகி நின்ற இடம் 'மயிலை' என்றே அழைக்கப்பட வேண்டும்; வந்து வழிபடுவோருக்கெல்லாம் அங்கு அருள் தர வேண்டும்' என்ற அம்பிகையின் விண்ணப்பத்தை ஐயன் ஏற்க, திருமயிலைத் திருத்தலம் உருவானது.
புன்னாக வனத்து எழில்சேர் கயிலை மலையுமை
மயிலாய்ப் பூசைசெய்யும்
நல் நாமத்தால் மயிலையென விளங்கு மூதூர்
மயிலாய்ப் பூசைசெய்யும்
நல் நாமத்தால் மயிலையென விளங்கு மூதூர்
என்று தல புராணம் பேசுகிறது.
அம்பிகை, மயிலாகி வந்தார் இல்லையா? இப்போது அம்பிகையின் மலர்க் கூந்தல், மயிலின் தோகை போன்றே காட்சி தருகிறதாம். அப்படியா என்கிறீர்களா? அப்படித்தான் தமிழ் தியாகையராக இசையுலகைக் கட்டி ஆண்ட பாபநாசம் சிவன் சொல்கிறார்.
மலர்த் தோகை நிகர் மலரணி குழலும் மணிமகுடமும்
கமல மலர் பழிக்கும்
வதன பூர்ண சந்திரனும் கருணைபொழி மந்தஹாஸ
நிலவும் அருள் சுரந்த
கயல் கண்களிரண்டும் பவள இதழ் கவிந்த
முத்துப் பல் வரிசையும்
கண்டுகொண்டிருந்தால் பவநோய் அறும்
கண் படைத்த பயனும் அடையலாம்
கமல மலர் பழிக்கும்
வதன பூர்ண சந்திரனும் கருணைபொழி மந்தஹாஸ
நிலவும் அருள் சுரந்த
கயல் கண்களிரண்டும் பவள இதழ் கவிந்த
முத்துப் பல் வரிசையும்
கண்டுகொண்டிருந்தால் பவநோய் அறும்
கண் படைத்த பயனும் அடையலாம்
_ மயிலை கற்பகாம்பிகையைப் பார்த்துக் கொண்டே இருந்தால், கண் படைத்த பயன் கிட்டுமாம். கண் படைத்த பயன் என்ன? பவ நோய் அறும்- அதாவது பிறவிப் பிணி அகலும். உலக வாழ்க்கையின் துன்பங்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கை எடுத்த சிக்கலுக்கே, மயிலாகிய அம்பிகை தீர்வு தருவாள். அந்தத் தாய் இருக்கும்போது, ஏன் கவலைப்பட வேண்டும் என்று நெஞ்சத்திடம் கேள்வி
எழுப்புகிறார். 'நெஞ்சே கல்பக அன்னை இருக்கக் கவலை யேன்' எனும் சுத்த சுமந்தினி ராகப் பாடலின் சரண வரிகள்தாம் மேலே கூறப்பட்டவை.
தொண்டை நாட்டுத் தேவாரத் திருத்தலங்களுள் ஒன்றும், தமிழகத்தின் உலகப் புகழுக்குக் காரணமான திருக்கோயில்களுள் ஒன்றும் அறுபத்துமூவருக்குச் சிறப்பு விழா காணும் ஊர்களுள் ஒன்றுமான மயிலாப்பூருக்குச் செல்லலாம், வாருங்கள்.
சென்னை மாநகரத்தின் பகுதியாக இப்போது விளங்கும் மயிலாப்பூர், பண்டைய பெருமை வாய்ந்தது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் டாலமி என்பவரது குறிப்புகள், மெலியார்ஃபா எனும் பெயரைக் குறிப்பிடுகின்றன. திருமழிசையார், 'மாட மா மயிலை' என்று இங்கு மாட மாளிகைகள் நிறைந்திருந்ததைச் சுட்டுகிறார். திருநாவுக்கரசர் மயிலாப்பில், மயிலாப்பு என்று பேச, சம்பந்தரோ மயிலை என்றழைக்கிறார். இதன் பழைமையைக் காட்டுவதற்காக 'தொல் மயிலை' என்று சுந்தரர் வழங்க... மயிலை, மயிலாபுரி, மயிலாப்பில், திருமயிலை, தொல் மயிலாபுரி, மயிலாப்பூர், மிரோபோலிஸ், மைலாபூரா, மெலியபூர், மிலாப்பூர், மயூரநகரி, மயூரபுரி என்று பலவித மருவல்கள் காணப்படுகின்றன.
மயிலாப்பு எனும் சொல்லைப் பிரித்தால், மயில் ஆதல் என்று பொருள்படும். அம்பிகை மயிலான செயலை இது குறிக்கும். மயில் ஆர்ப்பரித்து ஆடிய இடம் என்பது மயிலார்ப்பில் எனும் பெயரால் கிடைக்கும். மயிலார்ப்பூர் என்பது காலப்போக்கில் மயிலாப்பூர் ஆகிவிட்டது. இதே பொருளைத் தரும்படியான மயூர சப்த பட்டினம் எனும் பெயரும் உண்டு. புன்னைவனம், வேத நகர், சுக்கிரபுரி, பிரம்மபுரம், கந்தபுரி, கபாலீச்சுரம், கபாலி நகர் என்று பல பெயர்களைக் கொண்டுள்ள மயிலாப்பூர், பல்லவர்களின் கல்வெட்டில் மயிலார்ப் பில் என்றே குறிக்கப்படுகிறது.
மயிலார்ப்பின் புகழ் மிக்க கபாலீஸ்வரத் திருக்கோயில் முன் நிற்கிறோம். கிழக்கு ராஜகோபுரம். ஏழு நிலைகள் கொண்டு, அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கண்கொள்ளா காட்சி தருகிறது. ஒன்பது திருக்கலசங்களுடன் ஓங்கி உயர்ந்து நிற்கும் கோபுரத்தை வணங்கி நுழைகிறோம். விசாலமான உள்ளிடம். சந்நிதிகளை மொத்தமாகச் சேர்த்து வலம் வருவதற்கு வசதியான பிராகாரமும் இதுவே! கிழக்கு கோபுரத்துக்கு நேர் எதிரில், கூத்தாடும் விநாயகர் சந்நிதி. நிருத்த விநாயகர், நர்த்தன விநாயகர், நடன விநாயகர் என்று அழைக்கப்படும் இவரது சந்நிதி வாயிலில் எப்போதும் கூட்டம் வழிகிறது.
இந்த விநாயகரே, மயிலையின் தல விநாயகர். சிறிய முன் மண்டபத்துடன் கூடிய சந்நிதி. இந்த விநாயகர் சுயம்பு என்கிறார்கள். நடனமாடுகிற புடைப்புச் சிற்பமாகக் கருங்கல்லில் காட்சி தருகிறார். இவரது சிரிப்பே கொள்ளை அழகு. அத்தனை பேரையும் அப்படியே தும்பிக்கையில் சுருட்டிக் கொள்கிற அழகு!
நாட்டியம், நடனம் என்றெல்லாம் அழைக்கப் படுகிற கலை, அற்புதமானது. காண்போர்க்கும் அனுபவிப்போர்க்கும் இன்பம் தருவது என்பதால் மட்டுமல்ல, நடனக் கலையில் அற்புத நுட்பம் ஒன்றும் உண்டு. சாதாரண மனிதர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தால், என்ன சொல்கிறோம்? 'அப்படியே ஆடணும் போல இருக்கு', 'அப்படியே குதிக்கணும்போல இருக்கு!' என்கிறோம்.மகிழ்ச்சியின் உச்சத்தை அடையும்போது, ஆட வேண்டும் எனும் ஆசை எழுவது இயல்பு; இதுவே இயற்கையும்கூட! இறைமையுடன் இணையும்போது கிடைக்கிற பரமானந்தத்தையே நடனம் குறிக்கும்.
இந்தத் திருத்தலத்தில் உயிர்கள் பரமானந்தம் பெறும் என்பதையே, தல விநாயகர் ஆட்டம் ஆடிப் புலப்படுத்துகிறார். நினைத்ததை நிறைவேற்ற, கூத்தாடு விநாயகருக்கு சிதறு தேங்காய் நேர்ந்து கொள்வது கபாலீஸ்வர சிறப்புகளில் ஒன்றாகும்.
விநாயகரை வழிபட்டு, வலமாக அடுத்த சந்நிதியை அடைகிறோம். இது அருள்மிகு அண்ணாமலையார் சந்நிதி. இதுவும் கிழக்குப் பார்த்த சந்நிதி. சிறிய முன் மண்டபத்தில், தெற்குப் பார்த்தபடி அருள்மிகு உண்ணாமுலையம்மன். இவளை சந்நிதிக்கு வெளியே இருந்தபடியே வணங்குவதற்கு வசதியாக, தெற்குச் சுவரில் சாளரம் ஒன்று.
தெற்குப் பிராகாரம். நடுநாயகமாக, உயர்ந்து தோற்றம் தருகிற விமானம் ஒன்று. நமக்கு இடது பக்கத்தில், பெரிய மண்டபம். விமானத்தையும் அதன் அடிவாரச் சந்நிதியையும் வலமாகச் சுற்றி, சந்நிதியின் முன்பக்கம் வருகிறோம். அருள்மிகு சிங்காரவேலர் சந்நிதி. அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றுடனும், சற்றே நீளமான முக மண்டபத்துடன் கூடிய சந்நிதி. பதினான்கு தூண்கள் கொண்ட முக மண்டபப் பகுதியில்,
சிங்காரவேலருக்கான தனி கொடிமரம், பலிபீடம், மயில் வாகனம். ஆறு முகங்களும் பன்னிரு கரங்களும் கொண்ட இவர் மயில் மீதமர்ந்தவர்; மேற்குப் பார்த்தவர். முருகனின் இருபுறமும் யானை மீது அமர்ந்த நிலையில் வள்ளியும் தெய்வானையும். அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றவர் இந்த முருகப் பெருமான்.
அம்பிகையே மயிலான பதியல்லவா இது! இங்கு, மயிலின் மீதேறி முருகப் பெருமான் வருவது வெகு சிறப்பல்லவா! இதை, அருணகிரிநாதர் எப்படிச் சொல்கிறார் என்று கேளுங்கள்
இமைய மகள் குமர எமதீச
இயலினியல் மயிலை நகரில்
இனிதுறையும்
எமது பரகுரவ பெருமாளே
'எங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டதானதும் விதவிதமான ஆட்டங்கள் ஆடக் கூடியதுமான மயிலின் மீது வருகிற உமை மைந்தரே, எங்கள் தலைவரே, இயலின் (இயல் தமிழ்) இயல் கொண்ட மயிலையில் உறைகிற பெரும் குருவே' என்று சிங்காரவேலரை அழைக்கிறார். இந்த தலத்து முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் பாடியுள்ள பத்து திருப்புகழ் பாடல்களிலும் சிங்கார வேலர் எனும் திருநாமம் காணப்படவில்லை. ஆனால், இப்போது சிங்காரவேலர் என்பதே பிரசித்தம். கபாலீஸ்வரரை வணங்கி வழிபட்டு, சக்தி வேலாயுதத்தை முருகப் பெருமான் பெற்றதாக ஐதீகம். சிங்காரமான வேலைப் பெற்றதால், 'சிங்காரவேலர்' ஆனதாகச் சொல்கிறது தலபுராணம்.
இந்த முருகப் பெருமான் மீது அருணகிரியார் பாடி யுள்ள திருப்புகழ்ப் பாடல்கள், அற்புத நடையழகும் ஆனந்தச் சொல்லழகும் கொண்டவை.
அமுதொத்திடும் அரு மொழியாலே
சயிலத் தெழு துணை முலையாலே
தடையுற்றடியனும் மடிவேனோ
கயிலைப் பதியான் முருகோனே
கடலக் கரைதிரை அருகே சூழ்
மயிலைப் பதி தனில் உறைவோனே
மகிமைக்கு அடியவர் பெருமாளே
எனும் திருமயிலைத் திருப்புகழ் பிரபலமானது.
சிங்காரவேலரை வழிபட்டு, சந்நிதிக்குத் தெற்கே அமைந்துள்ள மண்டபத்தில் நுழைகிறோம். நீளமாக இருக்கும் இந்த மண்டபம், உண்மையில், தெற்குச் சுற்றின் மேற்குக் கோடியில் கட்டப்பட்டுள்ள துவஜாரோஹண மண்டபத்தின் விரிவாகும். இந்த மண்டபம், சற்றே உயரமாக இருக்கிறது. இங்குதான் நவராத்திரி விழா நடைபெறும். அம்பிகையின் கொலு அமைந்திருக்கும். சமய மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகளும் இங்கே நடைபெறுவதால், திருமுறை மண்டபம் என்றும் சொல்வர். கல்யாண மண்டபம் என்று சிலர் பெயர் வைத்திருக்கிறார்கள். எப்படி, என்ன பெயரால் அழைத்தாலும் கோயிலுக்கு வருகிற பக்தர்கள் பலர், அமர்ந்தும் பாடியும் கொண்டிருக்கிற மண்டபம் இது. குழந்தைகள் நிறைய பேர் விளையாடுகின்றனர். மண்டபத்தின் படிகளில், இருபுறமும் அமைக் கப்பட்டுள்ள யானைச் சிற்பங்களின் மீது குழந்தை கள் ஏறி விளையாடிச் சறுக்குவதைக் காணும் போது, நம் ஆலயங்கள் எவ்வாறெல்லாம் கலை மற்றும் பண்பாட்டை வளர்த்திருக்கின்றன எனும் பெருமிதம் ஏற்படுகிறது.
அடுத்து, பழநி ஆண்டவர் சந்நிதி. வடக்கு நோக்கி நிற்கிற ஆண்டி. சந்நிதி வாயிலில், ஒரு பக்கம் இடும்பன்; மறு பக்கம் கடம்பன். இருவரும் காவடி ஏந்தி கம்பீரமாக நிற்கின்றனர்.
பழநி ஆண்டவர் சந்நிதியை அடுத்து, வாயிலார் நாயனார் சந்நிதி. யார் இவர்? இறைவனையே நினைந்து தியானத்தில் ஒருமுகப் பட்டவராக, நீண்ட செவிகளுடன் இவர் காட்சி தருகிறார். அறுபத்துமூவர் விழாவுக்குப் பிரசித்தி பெற்ற ஊர் மயிலாப்பூர் என்பது தெரியும்தானே? வாயிலார் நாயனார், அறுபத்துமூன்று அடியார்களில் ஒருவர். என்ன செய்தார்?
சரி. அந்தக் கோயிலில் என்ன நடந்தது? கோயிலில் குடியிருக்கும் கருணை வள்ளலுக்கு, உணர்வு விளக்கை ஏற்றினார்; ஆனந்தம் என்னும் திருமஞ்சனம் ஆட்டினார்; அன்பு என்பதையே நைவேத்தியம் இட்டார்; அக மலர் (இதய கமலம்) கொண்டு அர்ச்சனை செய்தார். இவ்வாறே இறைவனிடம் இனிமை கொண்டு, சித்தத்தை சிவன் பால் வைத்து, இறையடி சேர்ந்தார்.
அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும் நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே திகழ நெடுநாள்செய்து சிவபெருமான் அடிநீழல் கீழ்ப் புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணியமெய்த் தொண்டனார் |
_ என்று பெரிய புராணத்தில் சேக்கிழாரால், இவரது வரலாறு விளக்கப்படுகிறது.
வாயால் பேசாது, மனதுக்குள்ளேயே ஆலயம் அமைத்த அந்த வள்ளலை அடிபணிந்து வணங்குகிறோம். அறுபத்து மூவரில் பூசலார் (திருநின்றவூர்க்காரர்) நாயனார், மனக் கோயில் கட்டியவர். அதேபோல் மனக் கோயில் கட்டிய மற்றொருவர் வாயிலார் நாயனார்! வாயிலாரை வழிபட்டு வெளியே வருகிறோம்.
துவஜாரோஹண மண்டபத்துக்கும் தெற்காக, கோயிலின் தென்மேற்கு மூலையில், நூலகம். மேற்குத் திருச்சுற்றில் திரும்பினால், அலுவலகப் பகுதி. அடுத்து, சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிராக, அருணகிரிநாதர் சந்நிதி.
அருணகிரிநாதர் சந்நிதியிலிருந்து பார்த்தால், சிங்கார வேலர் சந்நிதி அற்புதமாகத் தெரிகிறது. இங்கிருந்து நோக்கியபடிதான் அருணகிரிநாதர், இந்த முருகனை விதவிதமாகப் பாடினார் போலும்! என்னவெல்லாம் சொல்கிறார்!
துளபமணி மார்ப சக்ரதரன் அரிமுராரி சர்ப்ப துயிலதரன் ஆதரித்த மருகோனே சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவும் உக்ர துரகத கலாபப் பச்சை மயில்வீரா அளகை வணிகோர் குலத்தில் வனிதை உயிர் மீளழைப்ப அருள்பரவு பாடல் சொற்ற குமரேசா அருவரையை நீறெழுப்பி நிருதர்தமை வேரறுத்து அமரர் பதி வாழ வைத்த பெருமாளே |
வரும் வீரா! குபேரனுடைய அழகாபுரி அளவு செல்வம் படைத்த வணிகர் குலத்தில் தோன்றிய பெண்ணின் உயிரை மீட்க அருள்மிக்க பாடலைக் கூறிய குமரா!'
கடைசியில் சொல்லப்படும் கதை, நெஞ்சத்தைத் தொடுகிறதே- அது என்ன சங்கதி?
மயிலாப்பூருக்கே உரித்தான பெருமைகளில் ஒன்றான 'பூம்பாவை கதை'தான் இது!
என்னதான் மனித எண்ணங்கள் திட்டமிட்டாலும், விதி சும்மா இருக்குமா? அது விளையாடியது. விளைவு?
பாம்பு தீண்ட அந்தப் பெண் இறந்து போனாள். மகளது மரணத்தால் மனம் உடைந்த சிவநேசர், 'என்ன இருந்தாலும், இவள் ஞானசம்பந்தருக்கென்று நிச்சயிக்கப்பட்டவள்; எனவே அவருடைய உரிமை' என்று நினைத்து, அவளின் எலும்புகளை ஒரு கலசத்தில் இட்டு வைத்திருந்தார். என்றாவது ஒரு நாள் ஞானசம்பந்தரிடம் ஒப்படைக்கலாம் என்று சிந்தித்தாரோ என்னவோ!
அத்தகையதொரு நாளும் அமைந்தது.வடநாட்டுத் தலங்களை வணங்கி விட்டு, தொண்டை மண்டலப் பகுதியின் திருத்தலங்களை வணங்கி, திருவொற்றியூரில் தங்கியிருந்தார் ஞானசம்பந்தர். இந்தத் தகவல், சிவநேசரை அடைந்தது.
வண் புகழ்பெருவணிகர்க்கு வந்து உரை செய்தார் ஞானசம்பந்தரைப் பற்றிய தகவலைத் தந்தவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்த சிவநேசர், அவரை அழைத்து வருவதற்காக, ஒற்றியூரிலிருந்து மயிலை வரை அழகிய நடைப் பந்தல் அமைத்தார். அதன்மீது அழகிய துணிகளால் விதானம் போன்று கட்டினார். பாக்கு, வாழை மரங்களால் அலங்காரம் செய்யச் செய்தார். மகர தோரணங்களும் மாலைகளும் கட்டச் செய்தார். ஊர்ப் பெரியவர்களுடன் சேர்ந்து, ஞானசம்பந்தரை அழைத்து வரப் புறப்பட்டார்.
அதே வேளையில், ஞானசம்பந்தரும் தொண்டர் புடை சூழ மயிலை நோக்கிப் புறப்பட்டார்.
இரு சாராரும் எதிர் எதிர் சந்திக்க... ஞானசம்பந் தரைக் கண்ட சிவநேசர் அகமும் புறமும் மகிழ... தொண்டர்கள் வழியாக, சிவநேசரைப் பற்றி அறிந்து கொண்ட ஞானசம்பந்தர், மயிலையை அடைந்தார்.
காழி நாடரும் கதிர்மணிச் சிவிகை நின்று இழிந்து சூழ் இரும் பெருந்தொண்டர் முன் தொழுது எழுந்தருளி வாழி மாதவர் வணிகர் செய்திறம் சொலக்கேட்டே ஆழிசூழ் மயிலாபுரித் திருநகர் அணைந்தார் |
மயிலைத் திருக்கபாலீஸ்வரம் அடைந்த ஞானசம்பந்தர், கோயிலை வலம் வந்து, உள் சென்று கபாலீஸ்வரம்
அமர்ந்த ஆதிப் பரமனை வழிபட்டார். பின்னர், திருக்கோயிலின் புறத்துக்குச் சென்றார். சிவநேசரை நோக்கினார். 'இறைவனிடத்தில் உணர்வு ஒடுங்கப் பெற்ற பெருமகனாரே! தங்கள் திருமகளாரின் எலும்புக் கலசத்தைக் கொணருங்கள்' என்று வேண்டினார்.
சிவநேசர், தன் மகளின் எலும்புகளை ஒரு கலசத்தில் இட்டு, அதனை தனது இல்லத்தில், கன்னிமாடத்தில் வைத்திருந்தார். தினந்தோறும், அதற்கு தூப- தீபமும் இட்டு வந்தார். இப்போது ஞானசம்பந்தர் கேட்க, அந்தக் கலசத்தைக் கொணர்ந்து, ஞானசம்பந்தர் முன்பு வைத்தார். ஜடாமுடிநாதரான சிவப்பரம்பொருளைத் தொழுத ஞானசம்பந்தர், 'மட்டிட்ட புன்னை அம்கானல் மடமயிலை' என்னும் பதிகத்தைப் பாடத் தொடங்கினார்.
இந்தப் பதிகத்தின் 10-வது பாடலான 'உரிஞ்சாய வாழ்க்கை' எனும் பாடலைப் பாடும்போது, குடத்துக்குள் பூம்பாவை உயிர்பெற்றாள். பன்னிரண்டு வயதுப் பெண்ணாக எழுந்து வந்தாள். உலகம் வியக்க, பார்த்தோரெல்லாம் புளகாங்கிதம் எய்த, கபாலீஸ்வரத்தில் அற்புதம் நிகழ்ந்தது.
எல்லையில்லாத மகிழ்ச்சியுடன் மகளைத் தழுவிய சிவநேசர், ஞானசம்பந்தரைப் பணிந்து போற்றினார். 'இவள் உங்களுக்காக வளர்க் கப்பட்டவள்; இவளை ஏற்றருளும்' என்று ஞான சம்பந்தரிடம் கையடை கொடுக்க யத்தனித்தார். திருஞானசம்பந்தர் சற்றே திரும்பினார்; சிவநேசரை நேசமுடன் பார்த்தார். ''இவள் தங்கள் மகள். பாம்பு தீண்டி இறந்து போனாள். பின்னர் இறைவன் அருளால், இவளை உயிர்ப்பிக்க இயன்றது. இப்போது, இவள் என் மகளைப் போன்றவள். எனவே தங்களது உரை தகாதது'' என்று கூறிவிட்டு, சிவநேசரும் பூம்பாவையும், பிறரும் கலங்கியும் மயங்கியும் நிற்க, அவர் திருக்கோயிலுக்குள் சென்று விட்டார்.
ஞானசம்பந்தர் மறுத்தபின் வேறு எவருக்கும் தனது மகளை மணமுடிக்க விரும்பாத சிவநேசர், திருக்கோயில் அருகிலேயே கன்னிமாடம் ஒன்று அமைத்து, அங்கேயே மகளை தங்கச் செய்தார்; அவளும் சிவத்தொண்டு புரிந்து வந்தாள்.
திருஞானசம்பந்தர் பாடிய பதிகத்தால் உயிர்பெற்றாள் பூம்பாவை என்பதை சற்றே மாற்றி, அவளை உயிர்ப் பிக்க முருகனே பாடியதாக அருணகிரியார் கூறுகிறார். முருகப் பெருமான், திருஞானசம்பந்தராக அவதரித்ததாக நம்பிக்கை ஒன்று உண்டு. இவரும் இறைவனாரின் செல்ல மகன், அவரும் அப்படியே! இத்தகைய நம்பிக்கையை முன் வைத்துக் கொண்டுதான், அருணகிரியார் இவ்வாறு பாடியிருக்க வேண்டும்.
அருணகிரியாரையும் சிங்காரவேலரையும் வணங்கி விட்டு, பிராகார வலத்தைத் தொடரலாமா? கோயிலின் மேற்குச் சுற்றிலல்லவா நிற்கிறோம்! இங்கிருந்தபடியே நிமிர்ந்தால், எதிரில் சுவாமி சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் முன்பாக உள்ள மண்டபப் பகுதி தெரிகிறது. மண்டபத்துக்குள் போகாமல், பிராகாரத்திலேயே தொடர்ந்தால், அடுத்ததாகக் கோயிலின் மேற்கு வாசல்; வாசலுக்கு எதிரில் கொடிமரம்; வாசலுக்கு அருகில் உயரமாக மணி மண்டபம்; மண்டபத்தில் அழகான மணி.
மேற்கு கோபுரம் அளவில் சிறியது. கோபுரத்தின் வெளிப்புறத்தில் ஒருபக்கம் விநாயகர், மறுபக்கம் முருகப் பெருமான். கபாலீஸ்வரர் திருச்சந்நிதி மேற்குப் பார்த்த சந்நிதி என்பதால், இந்தக் கோபுரம் வழியாகவே பலர் உள்ளே வருகின்றனர். இன்னொன்று... கோயிலின் திருக்குளம், கோயிலுக்கு மேற்காக இருப்பதால், குளத்தில் கால் கழுவி, கோயிலுக்குள் வருவதற்கும் இந்த வாசலே வசதி.
மேற்கு வாசலைத் தாண்டி நமதுவலத்தைத் தொடர்ந்தால், அடுத்து நாம் அடைவது அங்கம் பூம்பாவை சந்நிதி. இவள்தான் ஞான சம்பந்தரால் உயிர்ப்பிக்கப்பட்ட பூம்பாவை; கிழக்கு நோக்கி நிற்கிறாள். இவளுக்கு வலப் பக்கமாக திருஞானசம்பந்தரும் நிற்கிறார்.
மயிலைத் திருக்கோயிலில் நிறைய திருவிழாக்கள் நடப்பது நமக்குத் தெரியும். பூம்பாவைக்காகப் பதிகம் பாடிய ஞான சம்பந்தப் பெருமான், பற்பல விழாக்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். சீகாமரப் பண்ணில் அமைந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒரு விழாவைக் குறிப்பிட்டு, 'அத்தகைய விழாவைக் காணாமல் போவாயோ பூம்பாவை' என்றழைக்கிறார். அதுவும் முதல்
பாடலிலேயே அவர் குறிப்பிடும் விழா சிறப்போ சிறப்பு.
ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்
'பல்வேறு சிவனடியார்களுக்கு அமுது செய்விக்கும் அழகைக் காணாமல் போவாயோ' என்று ஞானசம்பந்தர் வினவுவதே அழகு.
புரட்டாசி மாதம் பூரட்டாதி நாளில் பெருஞ்சோற்று விழா என்று தொடங்கி,
ஐப்பசியில் திருவோணத் திருநாளில் பல்லோரும் வழிபடும் விழா, கார்த்திகையில் பெண்கள் விளக்கீடு நடத்தும் தீபத் திருவிழா, மார்கழியில் ஆதிரைத் திருவிழா, தைப் பூசத்தில் எம்பெருமானுக்கு நெய்ச் சோறு படைக்கும் பெரு விழா, மாசியில் கடலாட்டு காணும்
தீர்த்தத் திருவிழா, பங்குனி உத்திரத் தில் மங்கல மந்திர ஒலிகள் நிரம்பிய விழா, சித்திரை அட்டமித் திருவிழா, வைகாசி ஊஞ்சல் விழா, ஆனிப் பவித்தோற்ஸவமான பெருஞ்சாந்திப் பெருவிழா என்று வரிசையாக இவற்றைக் குறிப்பிட்டு... இவை யாவும் காணாமல் எவ்வாறு பூம்பாவை போவாய் என்று சம்பந்தர் கேட்பதில் இருந்தே இந்த விழாக்களின் சிறப்புகளை உணரலாம்.
இந்தக் காலத்திலேயும், மயிலையின் மங்கல விழாக்களுக்குக் குறைவில்லை. அதுவும் அடியார் களுக்கான விழா என்றாலே மயிலைக்குத் தனி களை வந்து விடும். இப்போதும் மயிலாப்பூர் என் றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது, அறுபத்து மூவர் திருவிழாதான்! பங்குனி மாதம், பெருவிழா என்னும் பிரம்மோற்ஸவம். பத்து நாட்கள் நடை பெறும் விழாவில், நிறைவு நாள் பங்குனி உத்திரமாக அமையும். பிரம்மோற்ஸவத்தின் 8-ஆம் நாள் விழா வெகு சிறப்பானது. அன்று மதியம், சிவநேசருடன் குளக் கரைக்கு எழுந்தருளும் சம்பந்தர், இறைவனிடம் அனுமதி பெற்று, குளக்கரையில் 'மட்டிட்ட' பதிகம் பாடி, பூம்பாவையை உயிர்ப்பிக்கும் வைபவம் நடைபெறும். பின்னர் கபாலீஸ்வரர், பஞ்ச மூர்த்திகளுடனும் அறுபத்துமூவருடனும் காட்சி கொடுப்பார். அன்று மாலை அறுபத்துமூவர் வீதி உலா வருவர். மயிலையின் அறுபத்துமூவர் விழாவைக் காண, ஆண்டு முழுவதும் திட்டமிட்டுக் காத்திருப்பவர்கள் உண்டு.
அடியார்களுக்குச் சிறப்பு செய்யும் இன்னும் சில விழாக்களும் இங்கே தவறாமல் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் சதய நாளில், நாவுக்கரசர்
கட்டமுது உற்ஸவம். திருப்பைஞ்ஞீலி எனும் திருத் தலத்துக்குப் போகும்போது, வழியில் நாவுக்கரசர் பசியால் வாடினார். பொதி சோறு கட்டிக் கொணர் பவராகக் காட்சி தந்து, இறைவனார் அவரது பசியைப் போக்கினார். இதை நினைவுகூரும் உற்ஸவமே,
பேசாத குழந்தையும் பேசும்!
தொண்டை மண்டலப் பகுதிகளில், இன்றளவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. சின்னக் குழந்தைகள், பேச வேண்டிய பருவத்தில் பேசாமல் இருந்தாலோ, சரியாகச் சொற்கள் வராமல் திக்கித் திணறினாலோ அவர்களுக்காக திருக்கபாலீஸ்வரத்தில் இருக்கும் வாயிலார் சந்நிதிக்கு வருவதாக நேர்ந்து கொண்டால், அந்தக் குழந்தைகள் பேசத் தொடங்குவார்களாம்!
அதன் பின் அவர்களைக் கோயிலுக்கு அழைத்து வருவது வழக்கம். சமீப காலங்களிலும் இந்த நம்பிக்கை நடைபெற்று வருவதை, இப்போது 40-45 வயதில் இருக்கும் சிலர், தங்களையே ஆதாரங்களாகக் காட்டி விளக்குகிறார்கள்!
|
கட்டமுது உற்சவம். வைகாசி மாதத்தில் திருஞான சம்பந்தர் திருவிழா. பத்து நாள் விழாவில் சம்பந்தரது
பிறப்பு, வளர்ப்பு, அவர் நிகழ்த்திய அற்புதங்கள், நிறைவாக அவரும், அவருடன் பலரும் ஜோதியில் கலத்தல் முதலான நிகழ்வுகள் நடத்தப் பெறுகின் றன. ஆடித் திங்கள் சுவாதி நன்னாளில்
சுந்தரர் உற்ஸவம். தம் கெழுதகை நண்பரான சேரமான் பெருமாள் நாயனாருடன் வெவ்வேறு வாகனங் களில் சுந்தரர் வீதியுலா வருவார்.
அங்கம் பூம்பாவையின் சந்நிதி முன்பல்லவா நிற்கிறோம்! கன்னி மாடத்தில் இருந்து சிவத்தொண்டு புரிந்த இந்தப் பெண்ணும், எந்த நாளில்... நல்லூர் பெருமணத்தில் ஞான சம்பந்தர் ஜோதியில் கலந்தாரோ, அதே நாளில் கபாலீஸ்வரருடன் ஐக்கியமானாளாம்.
மைப்பூசும் ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் கைப்பூசு நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய் மலிவிழா வீதிமடநல்லார் மாமயிலைக் கலிவிழாக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் பலிவிழாப் பாடல்செய் பங்குனி உத்திரநாள் ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய் |
என்றெல்லாம் சம்பந்தப் பெருமான் பாடிய பாடல்கள், தேவாரத்தின் 2-ஆம் திருமுறையில் உள்ளன. நோய்கள் தீரவும் விஷக்கடி போன்ற துன்பங்கள் அகலவும், இந்தப் பதிகத்தைப் பாராய ணம் செய்வது நலம் தரும். இன்றளவும் எத்தனையோ பக்தர்கள், பூம்பாவை சந்நிதிக்கு அருகிலோ, அம்மன் மண்டபப் பகுதியிலோ அமர்ந்து இவ்வாறு செய் வதைக் காணலாம்.
பூம்பாவை சந்நிதியைக் கடந்து சென்றால், மேற்குப் பிராகாரத்தில் கோயிலின் கிடங்கு அறைகள். வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பு நாட்களிலும், கற்பகவல்லித் தாயை தரிசிப்பதற்காக, இங்குதான் கூட்டம் வளைந்து வளைந்து நிற்கும். அப்படியே நடந்து, வடக்கு பிராகாரத்தில் திரும்புகிறோம். இடப் பக்கத்தில் கோயில் அலுவலகம்; வலப் பக்கத்தில் அம்மன் சந்நியின் சுற்றுச்சுவர்.
சந்நிதிக்கும் புன்னை மரத்துக்கும் அருகில், மயில்கள் வளர்ப்பிடம்; இப்போது மயில்கள் அவ்வளவாக இல்லை; ஆனால், கன்றுக்குட்டிகள் நிறைய உள்ளன. சிறியதொரு நந்தவனம் போல அமைக்கப்பட்டிருக்கும் தோட்டத்தில் துள்ளிக் குதிக்கும் கன்றுகளுக்கு சிறுவர்களும் பெற்றோர்களுமாக வந்து பழம் ஊட்டுவது கண்கொள்ளா காட்சி!
கோயிலைச் சுற்றியுள்ள மயிலாப்பூர் பகுதி வெகு நெரிசலானது; கடைகள், போவோர் வருவோர், வாகனங்கள் என எப்போதும் சலசலத்துக் கொண்டிருக்கும். கூட்ட நெரிசலில் புகுந்து வருவது என்பது பெரிய காரியம். சுற்றிலும் இத்தகைய அமளிதுமளி இருந்தாலும், கோயிலுக்கு உள்ளே சொல்லொணா அமைதி இருப்பது தான் மயிலையின் ரகசியம். கோயிலுக்குள் இருக்கும்போது, வெளியே நாம் பார்த்தது கனவா நனவா என்னும் ஐயமே பலருக்கு வந்துவிடும். கோயில் முழுமையிலும் ஓர் அமைதி உண்டென்றால், புன்னைவனநாதர் சந்நிதி இருக்குமிடம் அமைதியிலும் அமைதி! புன்னைவனநாதர் சந்நிதியில் வழிபட்டு, வடக்குப் பிராகாரத்தில் தொடர்ந்து நடக்கிறோம். இடப் பக்கத்தில் ஆலய அலுவலகம்; தொடர்ந்து யாகசாலை, கல்யாண மண்டபம். வடக்குப் பிராகாரத்தில் இருந்து கிழக்குப் பிராகாரத்துக்கு திரும்புகிற பகுதியில், வடகிழக்கு மூலையில், சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி. தனது வாகனத்துடன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சனிக்கிழமைகளிலும் குறிப்பிட்ட சிறப்பு நாட்களிலும், எள் தீபம் ஏற்றி இவரை வழிபடுவது வழக்கம்.
கிழக்குப் பிராகாரத்தில், நமக்கு வலப் பக்கத்தில்... முதலில்,
சுந்தரேஸ்வரர் சந்நிதி. கிழக்குப் பார்த்த சிவலிங்கம். இந்தச் சந்நிதிக்கு அருகில் மகிழமரம். அடுத்ததாக, நவக்கிரகங்கள். இந்த நாயகர்களைத் தனியாக வலம் வரமுடியும். அடுத்து,
ஜெகதீஸ்வரர் சந்நிதி. இவரும் கிழக்குப் பார்த்த சிவலிங்கம். இதே திருச்சுற்றில், நமக்கு இடப் பக்கத்தில் (அதாவது தனிச் சந்நிதி சனீஸ்வரரை அடுத்து), வாகனங்கள் வீதி உலா சென்று வருவதற்கான பெரிய வாயில். இங்கு ஓர்
அலங்கார மண்டபமும் இருக்கிறது. கிழக்குச் சுற்றின் இந்தப் பகுதியில்தான், பக்தர்கள் கூட்டம் அமர்ந்திருப்பது வழக்கம்.
பிராகாரச் சுற்றை நிறைவு செய்து, கிழக்கு கோபுர வாயில் அருகே, நர்த்தன விநாயகர் சந்நிதிக்கு எதிராக வந்து விட்டோம். ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிக்கும் செல்ல வேண்டுமாயின், பிராகாரத்தில் வலமாகச் சென்று, மேற்கு திருச்சுற்றின் வழியே போக வேண்டும். அப்படியே செல்வோம்.
மேற்குத் திருச்சுற்றில், கொடிமரத்தடியை அடைகிறோம். ஸ்வாமி சந்நிதி மற்றும் அம்மன் சந்நிதிக்கு முன்பாக உள்ள மண்டபங்கள் இணைந்து, பெரிய முன் மண்டப மாகவே இந்த இடம் காட்சி தருகிறது. மயிலாக வந்த அம்பாளுக்கு, 'எப்போதும் கற்பகவல்லியாக இங்கே அருள் தருவாய்' என்று ஸ்வாமி ஆணையிட்டதற்கு ஏற்ப, அருள்மிகு கற்பக வல்லி என்னும் திருநாமத் துடன், மயிலை அம்பாள் வணங்கப் படுகிறார். கேட்டதெல்லாம் தரும் கற்பக வல்லியை வழிபட்ட பின்னரே, ஸ்வாமியை வழிபடும் வழக்கம் இந்தக் கோயிலில் உண்டு. நாமும் அதன்படியே செய்வோமா?
அருள்மிகு கற்பகவல்லி சந்நிதி தெற்கு நோக்கியது. முன்மண்டபத்தில் இருந்து உள்ளே நுழைந்தால், உள்பிராகாரம். அப்படியே நேரே பார்த்தால், மகா மண்டபம், அர்த்த மண்டபம் தாண்டி... அருள்மிகு கற்பகவல்லியின் அழகுக் கோலம். நின்றகோல நாச்சியாரான அம்பாள், கைகளில் அபயமும் வரமும் காட்டி நிற்கிறார். மந்தகாசமும் மங்கல வதனமும் கருணை விழிகளின் தயையும் மிளிர தரிசனம் தரும் கற்பகவல்லித் தாயை வணங்கினால், குறைகள் நீங்கி நலங்கள் நிறையும் என்பதைப் பற் பல பக்தர்கள் கண்கூடாக உணர்கின்றனர்.
பாடகர்களும் இசை வல்லுநர்களும் கற்பகவல்லி யைப் பலவிதமாகத் துதித்துள்ளனர். திருமகளும் கலைமகளும்கூட மயிலைக் கற்பகத்தைப் பாடி நிற்கிறார்களாம்.
சிற்பர யோகியர் சித்தர்கள் ஞானியர் திருவுடை அடியவர் கருதும் வரம் உதவும் திருமகளும் கலைமகளும் பரவு திருமயிலைக் கற்பகமே கடைக்கண் பாராய் |
கற்பகவல்லி அம்பா - அம்மா கண்பார்த்தருள் செய்ய வேணுமம்மா (கற்பகவல்லி) சிற்பர நாயகன் கபாலி சிந்தை மகிழ்ந்திடவே நற்றவம் மாமயிலாய் நன்கு நடாத்தியதோர் (கற்பகவல்லி) கற்பகம் போல் அருளும் கற்பகத்தாய் என்றே கருதி நான் வந்தடைந்தேன் கமலப் பொன்தாள் பிடித்தேன் முற்பவ வினையெல்லாம் முடித்திட நோக்குவாய் மோன மெய்ஞான நிலை அடிமைக்கு இங்காக்குவாய் |
_ என்று பெரியசாமி தூரன், அம்மையை வணங் கினார். 'அம்மா உன் அடித் தாள் பிடித்தோம், அருள் தாராய்' என்ற வேண்டுகோளுடன் கற்பகாம்பாளை வணங்கி, ஸ்வாமி சந்நிதிக்குச் செல்வோமா?
அருள்மிகு கபாலீஸ்வரர் சந்நிதி. மேற்குப் பார்த்த சந்நிதி. அம்மன் சந்நிதியில் இருந்து வெளி வந்தால், இரண்டு சந்நிதிகளுக்கும் சேர்த்தாற் போன்ற முன் மண்டபப் பகுதியை அடைகிறோம். இங்கிருந்து ஸ்வாமி சந்நிதிக்குச் செல்லலாம். ஸ்வாமி சந்நிதியின் உள்பிராகாரம். சந்நிதிக்குள் நுழையும்போதே, நேரே கபாலீஸ்வரர் தரிசனம். வணங்கிக் கொண்டே பிராகார வலம் வந்துவிடலாமா? மேற்குச் சுற்றின் இறுதியில், கிழக்கு நோக்கியவராக வள்ளி- தெய் வானை சமேத ஆறுமுகர்; அடுத்து உற்ஸவ மூர்த்தங் கள்; சந்திரசேகரர், சுக்கிரவார அம்மன், ஆறுமுகர், அஸ்திரதேவர், விநாயகர், வீரபாகு, பிட்சாடனர், ஏன், குண்டோதரனும் உண்டு.
தொடர்ந்து, கிழக்குப் பார்த்தவர்களாக சரஸ்வதி, துர்கை, லட்சுமி. இன்னும் தொடர- நாகர், சிவலிங்கம். வடகிழக்கு மூலையில், தெற்கு நோக்கிய பைரவர் சந்நிதி. அப்படியே கிழக்குச் சுற்றில் திரும்பினால் விநாயகர், வீரபத்திரர்; தொடர்ந்து சிவலிங்கங்கள். மூலவர் சந்நிதிக்கு நேர் பின்புறமாக, சைவ நால்வர்கள்... சுந்தரர், ஞான சம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர் என்ற வரிசையில் நிற்கின்றனர். அடுத்து விநாயகர். பிறகு கிழக்குச் சுற்றிலிருந்து நீண்டு தெற்குச் சுற்றுக்குள்ளும் தொடர்கிற அறுபத்துமூவர் மூலவர்கள்.
அடுத்ததாக பெரிய நிலைக்கண்ணாடி. எதிரில், அதாவது வடக்குச் சுற்றில் எழுந்தருளியிருக்கும் நடராஜரை, இந்தக் கண்ணாடியில் கண்ணாரக் கண்டு தரிசிக்கலாம். பின்னர், கற்பகாம்பாள் உற்ஸவ மேனி. அடுத்து சோமாஸ்கந்தர். மீண்டும் மேற்குச் சுற்றில் திரும்ப, விநாயகர். பிராகார வலத்தை நிறைவு செய்து, சுவாமியின் திருமுன்னர் வந்து நிற்கிறோம். துவாரபாலகர்களை வணங்கி, மகா மண்டப, அர்த்த மண்டபங்களைத் தாண்டி... அருள்மிகு கபாலீஸ்வரர். மயிலைக் கபாலி, கபாலி நாதர், கற்பகக் காபாலி, மயிலைக் கயிலேசர் எல் லாம் இவர்தாம்! எடுப்பான சிவலிங்கத் திருமேனி; ஆர்த்தி பெற்ற மாது மயிலாய்ப் பூசித்தார். 'மயிலை கீர்த்தி பெற்ற நல்வேத கீதமே' என்று ராமலிங்க வள்ளலார் பாடிப் போற்றும் கபாலி யைக் கைகூப்பித் தொழுது நிற்கிறோம். அது சரி, அதென்ன பெயர் கபாலி?
தொடக்கத்தில் பிரம்மாவுக்கு ஐந்து தலைகள். சிவனுக்கும் தனக்கும் ஒரே மாதிரியாக ஐந்து தலைகள் என்கிற ஆணவத்தில் பிரம்மா மதர்ப்பு கொள்ள, ஆணவத்தை அழிக்க, அவரின் ஒரு தலையைச் சிவனார் கொய்து விட்டார். பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் உயர்ந்த வர் என்று போட்டி வந்தது. இதில் இடையில் நின்ற தீப்பிழம்பை இருவரும் கண்டனர். போட்டி திசை மாறியது. பிழம்பின் எல்லையை யார் முதலில் காண்கிறார்களோ அவரே உயர்ந்தவர் என்ற கணிப்புக்கு வந்தனர். ஒருவர் அன்னமாகி (பிரம்மா) முடி தேடிப் புறப்பட்டார்; மற்றவர் (திருமால்) வராகமாகி அடி தேடிப் புறப்பட் டார். கண்டுபிடிக்க முடியாமல் வராகம் திரும்பியது. கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், வழியில் சந்தித்த தாழம்பூவுடன் ஒப்பந்தம் போட்டது
அன்னம். பிரம்மா திருமுடிக்கு வந்தார் என்று தாழம்பூ பொய்சாட்சி சொன்னது. பொய் சொன்ன பிரம்மாவுக்கான தண்டனையாக, அவருடைய ஒரு தலை கொய்யப்பட்டது. பிரம்மாவின் தலை போனதற்கான வரலாறு இப்படியும் சொல்லப் படுவது உண்டு. பிரம்மாவின் கபாலத்தைக் கையில் தாங்கிய சிவ வடிவமே பிரம்ம சிரச்சேத மூர்த்தம். கபாலத்தைத் தாங்கியதால், கபாலி என்றும் காபாலி என்றும் இந்தத் திருமேனிக்குப் பெயர்.
பிரம்ம கபாலத்தை ஏந்தியபடி, தாருக வனத்து முனிவர்களின் இல்லம் சென்று பிட்சையேற்றார் என்பதால் பிட்சாடனர் எனும் நாமமும் உண்டு.
மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன்மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் |
_ என்று சேக்கிழார் பாடுவதில் இருந்து பிட்சாடன மூர்த்திதான் கபாலி என்றும் கொள்ளலாம்.
தலை நரைப்பதற்கு முன்னராவது, இல்லையா... இருமல் வாட்டுவதற்கு முன்னராவது மயிலைக் கபாலியை நினைத்துவிட வேண்டும். இல்லையெனில், பின்னர் வாய் திறந்து மனம் இளைத்துக் கிடக்க வேண்டியதுதானாம். யார் சொன்னார்கள்?
அறுபத்துமூவரில் ஒருவர் ஐயடிகள் காடவர் கோன். பல்லவ அரசரான இவர், தன் மகனிடம் அரச போகத்தை ஒப்புவித்துவிட்டு, துறவு வாழ்க்கை வாழ்ந்தார். காடவர் என்பது பல்லவர்களின் பட்டப் பெயர்.
குயிலொத்து இருள்குஞ்சி கொக்கொத்து இருமல் பயிலப் புகாமுன்னம் நெஞ்சே -- மயிலைத் திருப்புன்னை அங்கானல் சிந்தியாய் ஆகில் இருப்பின்னை அங்காந்து இளைத்து |
'குயில் வண்ணத்துக்கு ஒப்பான கேசம்... கொக்கு போன்று வெண்மை ஆவதற்கு முன்னும், பயின்று பயின்று இருமல் வருவதற்கு முன்பு, திருமயிலைச் சிவபிரானை நினைந்துவிடு நெஞ்சே! இல்லையானால், பின்னர் ஆ என்று வாய் பிளந்து மனம் இளைத்துப் போ!' என்று ஐயடிகள் கூறுவது காதுகளில் ரீங்கரிக்க, கபாலீஸ்வரரைக் கண்டு நிற்கிறோம். மீண்டும் மூலவர் கருவறையை வலம் வருகிறோம். கோஷ்ட மூர்த்தங்களாக துர்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, செல்வ கணபதி. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர். மூலவர் மேற்குப் பார்த்தவர் என்பதால், கோஷ்ட மூர்த்தங்களும் சண்டேஸ்வரரும் இடம் மாறியிருக்கிறார்கள்.
இவர் மேற்கு பார்த்தவரல்லவா?
சிவனாரின் தலங்களிலேயே மேற்கு பார்த்த தலங்களுக்குக் கூடுதல் சிறப்பு உண்டு. சிவனாருக்கு ஐந்து முகங்கள்! ஈசானம்- மேலே நோக்கியது; தத் புருஷம்- கிழக்குப் பார்த்தது; அகோரம்- தென்திசை காண்பது; வாமதேவம்- வடக்காகத் திரும்பியது... என்று இருக்க, சத்யோஜாத முகம் மேற்கு நோக்கி அருள்வது! இந்த சத்யோஜாத மூர்த்தமாக, மேற்கு நோக்கிய ஈசனை வழிபடுவது, கோடி சிவலிங்கங் களை ஒருசேர வழிபடுகிற பலனைத் தரும்.
கபாலியை விட்டுப் பிரிய மனமின்றி, திரும்பித் திரும்பி பார்த்தபடியே வெளியில் வருகிறோம். ஸ்வாமி-அம்மன் சந்நிதிகளுக்கு முன்பாக உள்ள மண்டபப் பகுதியில் எப்போதும் பக்தர் கூட்டம். பிரதோஷ நாயகர் எழுந்தருளும் பிரதோஷ மண்ட பம், அம்பாள் எழுந்தருளும் அலங்கார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் ஆகியவை இங்கே உள்ளன.
மயிலைத் திருத்தலத்துக்கு வரலாற்றுச் சிறப்பு களும் உண்டு. இப்போதிருக்கும் கோயில் பிற்காலத் தது என்றும், முந்தைய கோயில் இன்னும் கிழக்காகக் கடற்கரையில் இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. 'கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே' என்று அருணகிரிநாதர் பாடுகிறார். மயிலாப்பூர் பகுதி கடலால் கொள்ளப்பட்ட குறிப்புகள் உள்ளன.
எனவே, அப்போது கடற்கரைக் கோயில் சிதைவு அடைந்திருக்கலாம். போர்த்துகீசியரின் வருகையின் போது, பழைய கடற்கரைக் கோயில் அழிக்கப்பட்டது என்றும் கருத்து ஒன்று நிலவுகிறது. எப்படியாயினும், இப்போதிருக்கும் இந்தக் கோயில், 16ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. படையெடுப்பு சண்டைகளின்போது, 17-ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சுப் படைகள் கோயில் பிராகாரத்தில் ஒளிந்திருந்ததற்கான குறிப்பு கள் காணப்படுகின்றன.
கோயிலின் கட்டுமானம், குறிப்பாக ஸ்வாமி சந்நிதி கட்டுமானத்தின் மீது கவனத்தைச் செலுத்துகிறோம். கும்ப அமைப்பு உடைய தூண்கள், மெருகேறிய நுட்பம், சோழர் பாணியும் விஜயநகர பாணியும் இணைந்த தன்மை முதலானவை இந்தக் கோயிலில் நிறைய திருப்பணிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.
மேற்கு கோபுர வாயிலுக்கு மேற்கில் உள்ள அழகான நீராழி மண்டபத்துடன் கூடிய திருக்குளம்; மயிலையின் மகத்துவம். கபாலி தீர்த்தம் எனப்படும் இந்தக் குளம், பழைய குறிப்புகளில், புண்டரீகப் பூந்தடம் (புண்டரீகம்-தாமரை; தாமரைத் தடாகம்) என்று பேசப்பட்டுள்ளது. தாமரைக் கொடிகள் நிறைந்து இருந்திருக்கலாம். 18-ஆம் நூற்றாண்டின் சென்னைப் பட்டண வரைபடத்தில், இந்தக் குளம்
காட்டப்பட்டுள்ளது. சக்தி கங்கை, முக்தி தீர்த்தம் ஆகிய பெயர்களையும் கொண்ட இந்தக் குளத்தின் ஆற்றல் அளப்பரியது. கலிங்க இளவரசன் சாம்ப வன் என்பான், பஞ்சமா பாதகங்கள் புரிந்து, வேறெங்கும் பரிகாரம் கிடைக்காமல், கடைசியில் கபாலீஸ்வரரை வணங்கி, கபாலி தீர்த்தத்தில் மூழ்கி, முக்தி அடைந்ததாகத் தல புராணம் விவரிக்கிறது. பௌர்ணமி, ஞாயிற்றுக்கிழமைகள், ஐப்பசித் திருவோணம் ஆகிய நாட்களில், கபாலி தீர்த்தத்தில் மூழ்கி, கபாலிநாதரை வழிபட்டால், பாவங்கள் தொலைந்து முக்தி கிட்டும்.
கிழக்குக் கரையில் அம்மன் நீராட்டு மண்டபம், தெற்குக் கரையில் ஞானப்பால் மண்டபம், மேற்குக் கரையில் எண்கால் மண்டபம் மற்றும் சம்பந்தர்- சிவநேசர் அபிஷேக மண்டபங்கள், வடமேற்கு மூலையில் முக்கால் மண்டபம், வடக்குக் கரையில் சிவலிங்க மண்டபம் என்று சுற்றிலும் நிறைய மண்டபங்கள் புடைசூழ, மயிலாப்பூருக்கே குளுமையைத் தருகிறது கபாலி தீர்த்தம். சமய நல்லிணக்கத்துக்கு அடையாளமாக, மொகரம் காலத்தில், ஒரு நாள்... குளத்தைப் பயன்படுத்தும் உரிமை, இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படுகிறது.
மயிலாப்பூர் கோயிலில் ஆண்டு முழுவதும் பற்பல விழாக்கள்; அதேபோல் இந்தக் கோயில் ஸ்வாமி- அம்பாள் மீது இயற்றப்பட்டுள்ள பற்பல நூல்கள்- மயிலையின் பெருமைகள், அளந்துவிட முடியாத அருட்கடலாக விரிகின்றன.
'காபாலி இருக்க வீண் கலக்கமேன் உனக்கு?என்று கேட்டார் பாபநாசம் சிவன். கபாலியையும் கற்பகாம்பாளையும் தரிசித்து வெளியில் வரும்போது, அந்த வினாவின் உண்மை புரிகிறது!
No comments:
Post a Comment