Friday, 11 August 2017

வடகுரங்காடுதுறை




நீலமா மணிநிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில்ஏலமொடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்திஆலியா வருபுனல் வடகரை அடை குரங்காடுதுறையே
- என்று திருஞானசம்பந்தர் போற்றுகிற திருத் தலமான வடகுரங்காடுதுறைக்குப் போகலாமா?
எங்கே இருக்கிறது வடகுரங்காடுதுறை?
இந்தப் பெயரைச் சொல்லிக் கேட்டால், பலருக்கும் தெரியாது. ஆடுதுறை பெருமாள்கோவில் என்பதே புழக்கத்தில் உள்ள பெயர். கும்பகோணம்- திருவையாறு சாலையில் சென்றால் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் ஆகிய ஊர்களைத் தாண்டிய பின்னர், உள்ளிக்கடை எனும் ஊர் வரும். அதற்கடுத்து உள்ளது ஆடுதுறை. கும்பகோணத்தில் இருந்து சுமார் 22 கி.மீ; திருவையாறில் இருந்து சுமார் 5 கி.மீ.!
ஆடுதுறை என்ற பெயரிலேயே இன்னொரு தலம் இருப்பதாலும், இந்தத் தலத்துக்கு அருகில் பெருமாள்கோவில் என்றோர் ஊர் இருப்பதாலும், இரண்டையும் வேறுபடுத்து வதற்கு, நாம் இப்போது இருக்கும் தலத்துக்கு ஆடுதுறை பெருமாள்கோவில் என்ற பெயர் வழங்குகிறது.
சிறிய ஊர். சாலையோரத்திலேயே, சற்றே உள்ளடங்கினாற் போல் கோயில் தென்படுகிறது.
ஐந்து நிலை கிழக்கு ராஜ கோபுரமே தலைவாயில். உள்ளே நுழைந்தால், வலப் பக்கம் பழைய வாகன மண்டபம். அதற்கு மேற்காக, நவக்கிரகச் சந்நிதி. சமீபகாலப் பிரதிஷ்டை. அதற்கும் மேற்காக, அம்பாள் சந்நிதி.
மூலவர் கோயிலுக்குப் போகும் உள் வாயிலுக்கு எதிரே நந்தி. இவரே பிரதோஷ நந்தி. இவற்றைத் தவிர, இந்த வெளிப் பிராகாரத்தில் சந்நிதிகள் ஏதும் இல்லை. வெளிப் பிராகாரத்தின் ஒரு பகுதியில் பசு மடம். உள் வாயிலில் நுழைந்தால் உள் பிராகாரத்தை அடையலாம்.
கி.மு 700-600 காலத்திய கோயில் இது என்கிறார்கள். கி.பி, 7-ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் வரும்போது, நல்ல பெரிய கோயிலாக இருந்துள்ளது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இந்தக் கோயில், கிட்டத்தட்ட 93 ஆண்டுகள் குடமுழுக்கு காணாமல், பின்னர் ஊர்க்காரர்கள்- பக்தர்களது பெருமுயற்சியால், 2001 ஆகஸ்ட் மாதம் குடமுழுக்கு கண்டது.
சுவாமிக்கு அருள்மிகு தயாநிதீஸ்வரர் என்பது பிரதான திருநாமம் என்றா லும், குலைவணங்கீசர் என்பது பண்டைய திருநாமம். அதென்ன குலைவணங்கீசர்?
கர்ப்பிணிப் பெண் ஒருத்தி, இந்தப் பக்கமாகச் சென்று கொண்டிருந்தாள். காவிரிக்கரை என்றாலும், இந்தப் பகுதியெல்லாம் வெயில் கொளுத்தும். வயிற்றுச் சுமையோடு நடந்த அவளுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் தருவார் எவரும் இல்லை. கூப்பிடு தூரத்தில் ஓடினாலும்... வெயில் கொடுமையில், காவிரி வரை நடக்கவோ, அப்படியே நடந்தாலும் வயிற்றுப் பிள்ளையுடன் குனிந்து நீர் எடுக்கவோ அவளுக்குத் திராணியில்லை. தவித்த வாய்க்குத் தண்ணீர்?
அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகருக்கு, அந்தப் பெண்ணின் பரிதவிப்பு புரியாதா என்ன? செல்ல மகளைச் சாய்ந்து குனிய வைக்காமல், தென்னை மரத்தைச் சாய்த்துக் குனிய வைத்தார்; பெண்ணின் வாய்க்கு அருகே சாய்ந்து வந்தது தென்னங்குலை. குலையை வளைத்துக் கருணை புரிந்ததால், குலை வணங்கீசர்.
குலைவணங்கீசரின் கருணையைச் சிலாகித்துக் கொண்டே, உள் பிராகாரத்தை வலம் வருகிறோம். கிழக்குச் சுற்றுக்குள்தானே நுழைந்தோம்... தென் கிழக்கு மூலையில் கோயில் மடப்பள்ளி. தெற்குச் சுற்றில் செடி- கொடிகள். தென்மேற்குப் பகுதியில், மஹா கணபதி சந்நிதி. அடுத்து, கோயில் உள்மதிலை ஒட்டினாற் போல், சுப்பிரமணியர் சந்நிதி. ஒரு திரு முகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டவரான வள்ளி- தேவசேனா சமேத சுப்பிரமணியரை, அருணகிரிநாதரும் பாடினார்.
திரைக்கரம் கோலி நவமணிகொழித்திடும் சாரல் வயலணிதிருக்குரங்காடு துறையுறை பெருமாளே
என்று அருணகிரிநாதர் வணங்கிய பெருமானை வணங்கி நகர்கிறோம். அடுத்து காசிவிஸ்வநாதரும் கஜலட்சுமியும். வடக்குத் திருச்சுற்றில் திரும்பி நடந்து, வடகிழக்குப் பகுதியை அடைந்தால், தலமரமான தென்னை. வடகிழக்கு மூலையில், தெற்குப் பார்த்த நடராஜர் சபை. வடகுரங்காடுதுறையின் நடராஜர், மற்ற தலங்களின் நடராஜரிலிருந்து வேறுபட்டவர். எப்படி? பிற தலங்களின் நடராஜரை நினைத்துப் பாருங்கள். செப்பு, ஐம்பொன் என்று இப்படி ஏதாவதோர் உலோகச் சிலையாக இருப்பார். இங்கே எழுந்தருளி ஆனந்தத் தாண்டவம் ஆடுகிற மூர்த்தி, ஆதிமூர்த்தி; எனவே, மூலவராக, சிலாரூபமாக (கற்சிலை) காட்சியளிக்கிறார். சிவகாமி அம்மையும் நடராஜரும் மூலவர்களாக தரிசனம் தருவது வெகு விசேஷம்.
கிழக்குச் சுற்றில் திரும்பினால், சனி பகவான். அடுத்து பைரவர். தொடர்ந்து சூரியன், நாகர். அடுத்து, நால்வருக்கு பதிலாக மூவர்; ஆமாம், தேவாரம் பாடிய மூவர். அவர்களையட்டி, எந்தப் பெண்ணுக்காகத் தென்னங்குலையை சிவனார் வளைத்தாரோ, அந்தச் செட்டிப் பெண்.
பிராகார வலம் நிறைவடைந்து, மூலவர் சந்நிதிக் குச் செல்ல யத்தனிக்கிறோம். வாயிலில், இடப் பக்கம், விநாயகர். அருகில், பூரண- புஷ்கலை; ஐயனார். வணங்கி உள்ளே புகுகிறோம். முக மண்டபம். தூண்களின் அமைப்பு, கோயிலின் தொன்மைக்குச் சான்று பகர்கின்றன. வலப் பக்க தூண் ஒன்றில், சிவலிங்கத்தை வழிபடும் ஆஞ்ச நேயர். அனுமன், சிவலிங்க வழிபாடு செய்த ஐந்து முக்கிய சிவத்தலங்களில், வடகுரங்காடு துறையும் ஒன்று. இந்தத் தூண் ஆஞ்சநேயர்- பிரார்த்தனா மூர்த்தி. இவரிடம் என்ன நேர்ந்து கொண்டாலும், உடனடியாக நிறைவேற்றி வைப்பார். நேர்த்திக் கடன்காரர்கள் நிறைய பேர், அவரைச் சுற்றியிருக்கும் இடங்களிலும், கம்புகளிலும், பிரார்த்தனைத் துணிகளைக் கட்டி முடிச்சுப் போட்டிருக்கிறார்கள்.
'மாண்புறு மாருதியே, உன் தாள் சரணம்' என்று சொல்லிக் கொண்டே, அடுத்துள்ள மண்டபத்துள் நுழைகிறோம். மூலவருக்கு எதிரில், நந்தி. வலப் பக்கம், பாதுகாப்பு அறை. பக்கவாட்டு வாயில். இடப் பக்கத்தில், ஏதோ சாளரம் போலிருக்கிறது. அர்ச்சகர் சொன்ன பின்னால், உற்று கவனிக்கிறோம். விஷயம் புரிகிறது. இங்கு முற்காலத்தில் சுரங்கம் இருந்ததாம். தஞ்சாவூர் அரண்மனைக்கோ, தஞ்சை பெருவுடையார் கோயிலுக்கோ போகும் பாதையாக இருந்திருக்க வேண்டும். சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூடி விட்டார்களாம். ஆனால், வெகு காலத்துக்குச் சுரங்கத்தின் தொடக்கப் படிக்கட்டுகள் வெளியில் தெரியும்படிதான் இருந்துள்ளது.
சுரங்கத்தில் இருந்து கவனத்தைத் திருப்பி, மூலவர் சந்நிதிக்குள் செலுத்துகிறோம். வாயில் அருகே உள்ள விநாயகரையும் துவாரபாலகர்களையும் வணங்கி,உள்ளே அர்த்தமண்டபம் தாண்டிப் பார்வையைச் செலுத்த... அருள்மிகு தயாநிதீஸ்வரர். இவர்தாம் குலை வணங்கீசர். அது மட்டுமா? இவரே சிட்டி லிங்கேசர்; இவரே வாலீசர். காரணப் பெயர்கள் கொண்டவரான சர்வலோக காரணன். சிட்டுக்குருவி ஒன்று இவரை தினந்தோறும் வழிபட்டது... எனவே, சிட்டிலிங்கேசர் ஆனார்.
இந்தத் தலத்துக்குக் குரங்காடுதுறை என்றுதானே பெயர்; எந்தக் குரங்கு இங்கே ஆடியது?
காவிரிப் பகுதியிலேயே, இரண்டு ஆடுதுறைகள் இருக்கின்றன. இரண்டும் குரங்குகள் நீராடி வழிபட்ட தலங்கள். ஆடுதுறை என்று எல்லோருக்கும் பிரபலமாகத் தெரிவது, திருவிடை மருதூருக்கு அருகில் உள்ள தென் குரங்காடுதுறை. அது, சுக்ரீவன் வழிபட்ட இடம். நாம் இப்போதிருக்கும் வட குரங்காடுதுறை, வாலி வழிபட்ட தலம்.
அதனால், சுவாமிக்கும் வாலீசர் எனும் காரணத் திருப்பெயர். 'கோலமா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபடப் பொருந் தினார்' என்று வாலி வழிபட்டதைக் குறிப்பிட்டு, ஞான சம்பந்தர் பாடுகிறார். வட்ட வடிவ ஆவுடையாருடன், சற்றே குட்டையான பாணம் கொண்டவராக அருளும் மூலவ ருக்கு, அழகு சடைமுடிநாதர் என்றும் ஒரு பெயர் உண்டு.
சடாமுடிதாரியாக சிவனை வணங்குவது பழைய மரபு. 2 மற்றும் -3- ஆம் நூற்றாண்டுகளில் சடாமுடி சிவ வழிபாடுதான், மிக அதிகமாகப் பரவியிருந்தது என்பதைக் கொண்டு நோக்கும்போது, இந்தக் கோயிலின் தொன்மை விளங்கும்.
ஆடுதுறை ஐயனை வணங்கி வந்து, மீண்டும் உள் பிராகார வலம் புகுகிறோம். இப்போது... பிராகாரத்தில் நின்று பார்க்கும்போது, மூலவர் கருவறையும் மண்டபங்களும் கிழக்கு மேற்காக- வெகு நீளமாக அமைந்திருப்பது புரிகிறது. சுற்றி வரும்போது தெற்குச் சுற்றில், மூலவர் மதிலில் சற்றே நீட்டிக் கொண்டிருக்கும் இடம் நமது கவனத்தை ஈர்க்கிறது. முன்னரே பார்த்தோமே, சுரங்கப் பாதைப் பகுதி... அதன் நீட்சி இது.
இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் கூட, கோயிலுக்கு வருபவர்கள், முதலில் பிராகாரச் சுற்றுக்கு வந்து இங்குள்ள விநாயகரை வழிபட்டு, சுரங்க வாயிலையும் தொழுது, பின்னர் உள்ளே போவார்களாம். நாமும் விநாயகரை வேண்டுகி றோம். மனச் சுரங்கத்தில் கொலு வீற்றிருக்கும் பரம்பொருள் நாதனின் பரம கருணைக்கு வழி காட்டும்படி வேண்டுகிறோம்.
தொடர்ந்து நடந்தால், கோஷ்ட மூர்த்தங்களின் தரிசனம். தெற்குக் கோஷ்டத்தில், விநாயகர்; அடுத்து தட்சிணாமூர்த்தி. ஆதி மௌன குருவாக அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் காலடியில், வழக்கமாக சனகாதி முனிவர்கள் நால்வர் அமர்ந்து உபதேசம் கேட்பார்கள் இல்லையா? சற்று கவனமாகப் பாருங்கள்... கூடுதலாக நான்கு பேர்; கந்தர்வர்கள், கிம்புருடர்கள். ஆஹா! குரு, சொல்லாமல் சொல் வதைக் கேட்க, எல்லாரும் வந்தார் போலும்!
மூலவர் சந்நிதியின் தெற்குச் சுற்றுச் சுவரும் மேற்குச் சுற்றுச் சுவரும் சந்திக்கிற இடத்தில், வாலி வழிபடுவதைக் காட்டும் சிறிய சிற்பம்.
மூலவர் பின்புறக் கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர். வழக்கமாக இந்தக் கோஷ்டத்தில் லிங்கோத்பவர் இருப்பார். அர்த்தநாரீஸ்வரர் இருப்பது சிறிது அரிதானது. அதுவும் இந்த அர்த்தநாரீஸ்வரர் அழகோ அழகு. கொவ்வைச் செவ்வாயின் குமிழ்சிரிப்பும், வாம பாகத்து ஒய்யாரமும், திருப்புருவ கம்பீரமும் கண்கொள்ளாப் பேரழகு! பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டுக் கொண்டே நகர்ந்தால், வடக்குக் கோஷ்டத்தில் பிரம்மா, துர்கை. அஷ்டபுஜ துர்கை பிரயோகச் சக்கரத்துடன் தரிசனம் தருகிறாள். சோழநாட்டுத் திருக்கோயில்கள் பலவற்றில், அஷ்ட புஜ துர்கையை, அதிலும் பிரயோகச் சக்கரம் தாங் கிய துர்கையை தரிசிக்கலாம். தங்களது படைத் தலைவியாகவே இத்தகைய துர்கையைச் சோழ மன்னர்கள் வழிபட்டுள்ளனர். வடக்குச் சுற்றில், தனி மண்டபத்தில் சண்டேஸ்வரர்.
சுற்றி வந்து மீண்டும் தயாநிதீஸ்வரரை வணங்குகிறோம். குரங்கு, சிட்டுக்குருவி போன்ற சின்னஞ்சிறிய ஜீவன்களுக்கும் அருள்பாலிப்பவராக இருப்பதால், இவர் பரம தயாளு.
மூலவர் சந்நிதி சுற்றுச்சுவர்களில் நிறைய கல்வெட்டுகள். குரங்காடுதுறை ஆழ்வார், குரங் காட்டுமாதேவர் என்றெல்லாம் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிற தயாநிதீஸ்வரர் திருக்கோயிலுக்குப் பல்லவர்களும் சோழர்களும் திருப்பணிகள் செய்துள்ளனர்.
சுவாமி மட்டுமல்ல, இந்த இடத்தில் பாயும் காவிரியும் பரம கொடையாளி என்றும் பாடுகிறார் ஞானசம்பந்தர்.
கோங்கமே குரவமே கொழுமலர்ப் புன்னையே கொகுடி முல்லை வேங்கையே ஞாழலே விம்மும் பாதிரிகளே விரவி எங்கும்ஓங்குமா காவிரி... ... ... ...முத்துமா மணியடு முழைவளர் ஆரமும் முகந்து உந்தி எத்துமா காவிரி ... ... ... ...
முத்து, மணி, சந்தனம், இன்னும் யானைக் கொம்புகள், அகில், பழங்கள் என்று பலவும் ஏந்தி வரும் காவிரி.
மூலவரை வணங்கி விட்டு, அம்மன் சந்நிதியை அடைகிறோம். முக மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் ஆகிய அமைப்புகளுடன் கூடிய சந்நிதி. மகா மண்டபத்தில் சிறிய நந்தி. அருள்மிகு அழகுசடைமுடியம்மை எனும் திருநாமம் கொண்ட அம்பாள், நின்ற கோல நாயகியாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். ஜடாமகுடேஸ்வரி என்பது வடமொழிப் பெயர். அம்பாளும் பிரார்த்தனா சக்தி; கேட்டதெல்லாம் தருபவள். பிள்ளை வரம் வேண்டுபவர்கள் பௌர்ணமி நாட்களில், மடியில் பாலிகை கட்டி வந்து, அம்மனுக்கு மஞ்சள் மாலை சார்த்தினால், பிள்ளைப் பேறு ஸித்திக்கும். அம்மனுக்கு
மஞ்சள் இட்டு, மருதாணி அரைத்துப் பூசி, அவள் பெயரால் வருகிற பெண்களுக்கு மருதாணி அரைத்து இட்டால், தடைப்பட்ட திருமணங்கள் கூடி வரும்.
காவல் தெய்வமான மதுரவீரன் (மதுரைவீரன் இல்லை... மதுர- மதுரமான), பல நாட்கள் கவனிப்பாரற்றுக் கிடந்த நிலையில், பெரியவர் ஒருவரது நெஞ்சில் தோன்றி, தன்னைக் கவனிக்கச் சொன்னாராம். ஈசான மூலையில் மதுரவீரனுக்கு முறையான பிரதிஷ்டையும் பூஜைகளும் நடைபெற்ற பின்னரே, வெகு நாட்களாகத் தடைப்பட்டிருந்த தயாநிதீஸ்வரர் கும்பாபிஷேகம் நடைபெற வழி கிடைத்ததை, ஊர்ப் பெரியவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆதி காலத்தில், மதுரவீரன் ஸ்தாபித்த சிவலிங்க மூர்த்தமே தயாநிதீஸ்வரர் என்றும் கர்ணபரம்பரை கதையும் நிலவுகிறது.
அருள்மிகு அழகு சடைமுடியம்மை உடனாய அழகு சடைமுடிநாதராம் பரம கருணை வள்ளலை வழிபட்டு வெளியே வருகிறோம். பரம்பொருளின் கருணை மனமெல்லாம் ஆட்கொள்ள, காவிரியின் குளிர்காற்று மெள்ளத் தழுவுகிறது.

No comments:

Post a Comment