Thursday 6 July 2017

நல்ல Vs கெட்ட கார்போஹைட்ரேட்


சாதம், பிரெட், காய்கறி, பழங்கள், குளிர்பானங்கள் என நாம் உட்கொள்ளும் எந்த ஓர் உணவிலும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கார்போஹைட்ரேட் என்றாலே உடலுக்குக் கெடுதி என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. கார்போஹைட்ரேட் என்றால் என்ன, எது நல்ல கார்போஹைட்ரேட், எது கெட்ட கார்போஹைட்ரேட் என்று தெரிந்துகொண்டால், இந்த தவறான எண்ணம் மறையும்; உணவுப் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளலாம்.
காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் - நல்லது
நல்ல கார்போஹைட்ரேட் அல்லது மாவுச்சத்து எனப்படுவது, காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட். இதன் ரசாயனக் கட்டமைப்பு மற்றும் நார்ச்சத்து போன்றவை காரணமாக, நம்முடைய செரிமான மண்டலமானது இதைச் செரிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. இதனால், கலோரியானது நீண்ட நேரத்துக்கு வெளியாகிறது.
இயற்கை வடிவில் உள்ள உணவுப் பொருட்களை நல்ல கார்போஹைட்ரேட் எனலாம்.
முழு தானியங்கள்
பட்டைதீட்டப்படாத அரிசி
பச்சைக் காய்கறிகள்
பழங்கள்
என்ன பயன்?
நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன.
மிகக் குறைவான கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்டது.
மிகக் குறைவான கலோரியிலேயே உட்கொண்ட நிறைவு கிடைக்கும்.
இயற்கையாகவே வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது.
எளிய கார்போஹைட்ரேட் - கெட்டது
எளிதில் செரிமானம் ஆகும் வகையில் உருமாற்றம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ‘எளிய கார்போஹைட்ரேட்’ எனப்படும். இவற்றை உட்கொண்டதுமே செரிமானம் ஆகி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். இப்படி கலக்கப்படும் சர்க்கரையை, நம் செல்கள் உடனடியாகப் பயன்படுத்தாவிடில், இவை கொழுப்பாக மாற்றப்படும்.
பதப்படுத்தப்பட்ட, பட்டைதீட்டப்பட்ட, செயல்பாட்டுக்கு உள்ளான உணவுகள் (Processed food) அனைத்துமே எளிய கார்போஹைட்ரேட் உணவுகள்தான்.
சாக்லேட், இனிப்பு வகைகள்
மைதா பொருட்கள்
சர்க்கரை
கார்பனேட்டட் பானங்கள்
ஏன் கெடுதல்?
ஊட்டச்சத்து மற்றும் நார்ச்சத்து இல்லை.
கிளைசெமிக் இண்டெக்ஸ் அதிகம்.
பயன்படுத்தப்படாத கலோரிகள் கொழுப்பாக மாற்றப்படும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.

No comments:

Post a Comment