Saturday 1 July 2017

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - தூத்துக்குடி



மூலவர் : சுப்பிரமணியசுவாமி

உற்சவர் : சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள்

அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை

தீர்த்தம் : சரவணபொய்கை (மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் நாழிக்கிணறு, வதனாரம்ப தீர்த்தம் இரண்டும் முக்கியமானவை.)

ஆகமம்/பூஜை : சிவாகம் , குமார தந்திரம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : திருச்சீரலைவாய் , ஜயந்திபுரம், கபாடபுரம், அலை வாய், கந்தமாதன மலை, திருச்செந்தில்

ஊர் : திருச்செந்தூர்

பாடியவர்கள்: அருணகிரிநாதர்



 
🅱 திருப்புகழ்:🅱

அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -
அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;
சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -
செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே. - அருணகிரிநாதர்.

🅱 திருவிழாக்கள் :🅱
 
🌻 ஒவ்வொரு மாதமும் விசாகம், கார்த்திகை சஷ்டி போன்ற தினங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடைப்பெறுகிறது.

🌻 வைகாசி விசாகத்தன்று ஸ்ரீஜெயந்திநாதர், வள்ளி, தெய்வயானையுடன் திருவீதியுலா நடைப்பெறும்.

🌻 கந்தசஷ்டி விழா: 🌻

சூரபத்மனை வதம் செய்த இடம் என்பதால் இங்கே கந்தசஷ்டி விழா வெகு விமரிசையாக 7 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முக்கிய வைபவமாகும். இதைக் காண வரும் மக்கள் அலை, கடலலையோடுப் போட்டிப் போடும். 7ம் நாள் தெய்வயானை அம்மனுடன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைப்பெறும்.

🌻 ஆவணி மற்றும் மாசி திருவிழா: 🌻

7ஆம் திருவிழா பச்சை சாத்தி

8ஆம் திருவிழா சிகப்பு சாத்தி

10ஆம் திருவிழா திருத்தேர் ( ஆண்டில் இருமுறை இத்தேர் பவனி வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்).

11ஆம் திருவிழா தெப்பத் திருவிழா (ஆண்டுக்கு ஒரு முறை இத்திருவிழா நடைபெறுகிறது) (மாசி மாதம் மட்டும்)


 
🅱 தல சிறப்பு:🅱
 
🎭  செந்தில் ஆண்டவர், குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய தலம்.

🎭 திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்.

🎭 இரு மூலவர்களில் கருவறையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி தனியாக உள்ளர். சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார்.

🎭 சூரசம்ஹாரம் முடிந்ததும் சிவபூஜை அபிஷேகத்துக்காக தன் கை வேலினால் முருகன் நாழிக்கிணறு ஏற்படுத்தினார். நாழிக்கிணறு தண்ணீர் நோய்களை தீர்க்கும் குணமுடையது.

🎭 திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.

🎭 திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

🎭 மூலவர் பாலசுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்.

🎭 திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள்.

🎭 திருச்செந்தூர் முருகனே போற்றி என்ற தலைப்பில் அருணகிரி நாதர் 85-திருப்புகழ் பாடி உள்ளார். இந்த பாடல்களை பக்தி சிரத்தையுடன் பாடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

🎭 திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது.

🎭 திருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூர்யலிங்கம், சந்திர லிங்கம் உள்ளன.

🎭 திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று பாலசுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

🎭 மகாமண்டபத்தில் உள்ள சண்முகர் சன்னதியில் ஆத்மலிங்கம் உள்ளது.

🎭 சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சூர சம்ஹாரம்’ என்பது பழமொழி. தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மன் மீது படையெடுத்தார். வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்து விட்டு, வீரபாகுத் தேவர் மற்றும் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கினார். அவர் அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில்.

🎭 வியாழ பகவானால் பூஜிக்கப்பட்ட காரணத்தால் இது வியாழ க்ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது.

🎭 வால்மீகி ராமாயணத்தில் ‘கபாடபுரம்’ குறிப்பிடப்பட்டிருப்பதால், ராமாயண காலத்துக்கு முன்பே திருச்செந்தூர் புகழ் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.

🎭 நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த தலம்.

🎭 மேற்கு ராஜ கோபுரம், தெய்வானை திருமணம் நடைபெறும்போது மட்டும் திறக்கப்படும்.

🎭 முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

🎭 பிறந்து ஐந்து ஆண்டுகள் வரை ஊமையாக இருந்த குமரகுருபரர் பேச்சாற்றல் பெற்ற இத்திருத்தலத்தில் மூலவர் சன்னதியில் சந்தனமும் நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்ட பன்னீர் இலையில் விபூதியும் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

🎭 ஆதிசங்கரர், ஸ்ரீசுப்ரமணிய புஜங்கம் பாடிய தலம்.

🎭 திருச்செந்தூரில் கருவறைக்கு எதிரில்  இரண்டு மயில்கள் மற்றும் ஒரு நந்தி இருக்கின்றன. அது ஏன் தெரியுமா ?

🎭 முருகனுக்கு ஏற்கனவே ஒரு மயில் வாகனமாக இருந்து வருகிறது. பின்னர் சூரனைப்பிளந்தும், ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவல் கொடியாகவும் ஆனதல்லவாப சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏற்கனவே இருந்த மயிலோடு, இந்த மயிலும் (சூரன்) சேர்ந்து வந்து செந்தூரில் இரண்டு மயில்களாக நின்றுவிட்டன.

🎭 சூரசம்ஹாரத்திற்கு முன்புவரை இந்திரனே முருகனுக்கு மயில் வாகனமாக இருந்தார். முருகன் சூரனை வென்றபின் இந்திரனுக்கு தேவலோக தலைமை பதவியை கொடுத்து அனுப்பிவிட்டு, மயிலாக மாறிய சூரனையே தன் வாகனமாகக் கொண்டார். பஞ்சலிங்ககளை வைத்து முருகன் பூஜை செய்யும் கோலத்தில் சிவனுடன் இருக்கிறார். எனவே, சிவனுக்குரிய நந்தி, மயில்களுடன் சேர்ந்து கருவறைக்கு எதிரே இருக்கிறது.

🎭 ஆவணி திருவிழாவின்போது  முருகப்பெருமான், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூம்மூர்த்திகளின் அம்சமாக காட்சி தருகிறார்.

🎭 திருச்செந்தூரில் தினமும் உச்சிக்கால பூஜை முடிந்த பின்பு ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு, மேளதாளத்துடன் சென்று கடலில் கரைப்பார்கள். இதற்கு கங்கை பூஜை என்று பெயர்.



 
🅱 நடை திறப்பு:🅱
 
🗝 காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.🗝

⚜ திருச்செந்தூரில் முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது.

🅱 பொது தகவல்:🅱

🦋 கோவிலில் 3 கொடி மரங்கள் உள்ளன. இரண்டு தங்க கொடி மரம் ஒன்று  செப்புக்கொடி மரம், திருவிழாவுக்கு செப்பு கொடி மரத்தில் கொடியேற்றுவர்.

🦋 வள்ளி, தெய்வானை திருமணங்களுக்கு எழுந்தருளும் உற்சவமூர்த்தி குமரவிடங்கப் பெருமான். இவருக்கு மாப்பிள்ளைசாமி என்ற பெயரும் உண்டு.

🦋 வீரபாகு தேவருக்குப் படைக்கப்படும் நிவேதனம் பிட்டமுது.

🦋 திருச்செந்தூரில் ஒரு தினஉபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை.

🦋 இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கியபின்னர் தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும்.

🦋 இத்திருக்கோயிலில் பன்னிரு சித்தர்களில் எட்டுச் சித்தர்கள் சமாதியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

🔥 முருகனின் நைவேத்தியங்கள்: 🔥

🦋 முருகனுக்கு தினமும் 9 கால பூஜை நடக்கிறது. இப்பூஜைகளின்போது சிறுபருப்பு பொங்கல், கஞ்சி, தோசை, அப்பம், நெய் சாதம், ஊறுகாய், சர்க்கரை கலந்து பொரி, அதிரசம், தேன்குழல், அப்பம், வேக வைத்த பாசிப்பருப்பு, வெல்லம் கலந்த உருண்டை என விதவிதமான நைவேத்தியங்கள் படைக்கப்படுகிறது.

🔥 ஆறுபடை : 🔥

🦋  தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதி வழிபடப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி, தனது படைகளுடன் தங்கியிருக்கும் இடம் "படைவீடு' எனப்படும்.

🦋 அவ்வகையில் சூரபத்மனை வதம் செய்யச் சென்ற முருகப்பெருமான், படைகளுடன் தங்கியிருந்த தலம் திருச்செந்தூர் மட்டுமே ஆகும். ஆனால், மற்ற ஐந்து தலங்களையும் சேர்த்து, "ஆறுபடை வீடு' என்கிறோம்.

🦋 வறுமையில் வாடும் ஒருவரிடம், வறுமையை வென்ற ஒரு வர், வள்ளல்கள் இருக்குமிடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு சென்றால் அவரது வறுமை தீரும் என்று சொல்லி அவரை ஆற்றுப்படுத்துவார். இந்த வகையில் அமைந்த நூல்கள் சங்க காலத்தில், "ஆற்றுப்படை' எனப்பட்டது. இவ்வாறு மக்களின் குறைகளைப் போக்கி, அருள் செய்யும் முருகன் இந்த ஆறு இடங்களில் உறைகிறார். அவரிடம் சென்று சரணடைந்தால் அவரது அருள் கிடைக்கும் என்ற பொருளில் நக்கீரர் ஒரு நூல் இயற்றினார்.

🦋 முருகனின் பெருமைகளைச் சொல்லும் நூல் என்பதால் இது, "திருமுருகாற்றுப்படை' (திருமுருகன் ஆற்றுப்படை) என்று பெயர் பெற்றது. பிற்காலத்தில் இந்த ஆற்றுப்படை தலங்களே மருவி, "ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே, ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது.

🦋 செந்தூரில் முருகப்பெருமான் முதலில் தங்கிய இடம் சிங்க கொழுந்தீசர் என்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் உற்சவங்கள் கிடையாது. முருகன் தந்தையைப் பார்ப்பதற்காக இங்கு எழுந்தருள்கிறார்.

🦋 கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் போது கடல்நீர் உள் வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண் ணாடிக்கு அபிஷேகம் நடை பெறும். இதை ‘சாயாபிஷேகம்’ (சாயா- நிழல்) என்பர்.

🦋 ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாளன்று தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன் புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சியளிப்பார்.

🦋 இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் இடம் பெற்றுள்ளது.

🦋 திருச்செந்தூர் கோயில் மடப் பள்ளியில் வேலை பார்த்தவன் வென்றிமாலை. முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான் ! அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய ஓர் அசரீரி, ‘செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்!’ என்றது. அப்படியே செய்தான். அவனிடம், ‘‘சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகன் கட்டளையிட்டிருக்கிறார்!’’ என்றார் சாஸ்திரியார்.

🦋 பிறகு சாஸ்திரியார் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூ ரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை. எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு ஒரு முருக பக்தரிடம் சிக்கியது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது.

🅱 பிரார்த்தனை:🅱
 
🌹 திருமணத்தடை உள்ளவர்கள் இத்தல இறைவனிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

💥 சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
 
🅱 தலபெருமை:🅱

🔥 ஓரெழுத்தந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, நிரோட்டக யமக அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் மாதாந்தக் கலித்துறை, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர்க்கோவை, திருச்செந்தூர் ஷண்முக சதகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம், தசாங்க வகுப்பு, திருச்செந்தூர் தல புராணம், வழி நடைப்பதம், திருச்செந்தில் பதிகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி, திருச்செந்தில் சந்த விருத்தம் என்று திருச்செந்தூர் பற்றிய நூல்கள் ஏராளம்.

🔥 செந்திலாண்டவன் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு- தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துட னும் அமைந்துள்ளது. இதன் பிரதான வாயில் தெற்கு நோக்கியது.

🔥 கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது.

🔥 முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வயானைக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.

🔥 மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீசுவரர், திருவாதபுரீசுவரர், நாகநாத சோமேசுவரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர இங்கு ஏழுமலையானுக்கும், சந்தான கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.

🔥 இரண்டாம் பிராகாரத்தின் மேற்கில் ஸித்தி விநாயகர், சகஸ்ரலிங்கம், ஆன்மநாதர், மனோன் மணி அம்மை, பானுகேசுவரர், சோமசுந்தரர், மீனாட்சியம்மை, திருமூலநாதர், திருக்காளத்தி நாதர் (வாயு லிங்கம்), உமா மகேஸ்வரி, அருணாசலேசுவரர் (தேயு லிங்கம்), உண்ணாமுலையம்மை, ஜம்புகேசுவரர் (அப்பு லிங்கம்), வன்மீக நாதர் (பிருதிவி லிங்கம்), அருணகிரிநாதர், வல்லப கணபதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

🔥 இதன் தென்பகுதியில், முதல் பிராகாரம் செல்லும் வாசலில் வீரகேசரியும், வீர மார்த்தாண்டரும் காவல் புரிகின்றனர். இங்கு, நவக்கிரகங்கள் கிடையாது. ஆனால், சனி பகவானுக்குத் தனிச் சந்நிதி உண்டு.

🔥 ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை.

🔥 கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்கு கிறார் என்பதை விளக்குவதற்காகவே !

🔥 முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப் பெறும். அஷ்ட லிங்கங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.

🔥 திருச்செந்தூரில் முருகப் பெருமான் ஐம்பெரும் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவருக்கு மஞ்சள் பட்டாடை- மஞ்சள் மலர் மாலை அணிவித்து நான்முகனாகவும், நீல மலர்கள்- நீல வண்ண ஆடைகளை அணிவித்து திருமாலாகவும், சிவப்பு நிற ஆடைகள்- சிவப்பு மலர்களை அணிவித்து அரனாகவும், வெண்பட்டு- வெண் மலர்களால் அலங்கரித்து மகேசனாகவும், பச்சை சார்த்தி சதாசிவனாகவும் போற்றப் படுகிறார். இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடை பெறுகின்றன. மார்கழி மாதம் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.

🔥 மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.

🔥 மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.

🔥 மூலவரின் உற்சவர்- அலைவாய் உகந்த பெருமான். ஐம்பொன் திருமேனி. நவராத்திரி நாள்களில்- பாரிவேட்டை, சிறுத்தொண்டர் திருநாள், தைப் புனர்பூசம், பூசம் ஆகிய நாட்களில் இவர் எழுந்தருளுகிறார். இவரை தோழன்சாமி என்பர். வள்ளி- தெய்வானை இவருக்கு அருகில் உள்ளனர். திருவிழாக்களின்போது சந்திகளில் உலா வருவதால், இவர் சந்திச்சாமி என்றும் அழைக்கப்படுகிறார்.

🔥 இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள்.

🔥 உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடை பெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

🔥 திருவிழாவின் போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராகக் காட்சி தருகிறார் செந்திலாண்டவர்.

🔥 ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.

 🔥 ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களுக்கும் நடை பெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.

🔥 முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பர்.

 🔥 அசுரனை வதம் செய்ததால், திருத்தணி மற்றும் பழநி தலங்களில் உள்ளது போல் க்ஷத்திரிய வடிவில் முருகன் இங்கு காட்சி தருகிறார். எனவே, மேற்குறிப்பிட்ட தலங்களில் தோஷ பரிகாரமாக நடைபெறும் ‘சேவல் விடும்’ நேர்த்திக் கடன் இங்கும் நடைபெறுகிறது.

🔥 மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய் வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர்!

🔥 காயத்ரி மந்திரத்தின் எழுத்துகளே இங்கு 24 தீர்த்தங்களாக விளங்குகின்றன என்பது ஐதீகம்.

 🔥 முருகன் கோயிலுக்கு அருகே, கடற்கரையையட்டி இருக்கும் வள்ளிக் குகை தரிசிக்க வேண்டிய ஒன்று.

🔥 முருகப்பெருமான், படை வீரர்களின் தாகம் தணிக்க வேலாயுதத்தால் நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தியதாக ‘கந்த புராணம்’ கூறுகிறது. அதை ‘ஸ்கந்த புஷ்கரணி’ என்பர். ஒரு சதுர அடி பரப்பளவில் திகழ்கிறது. ஒரு படியைக் கொண்டு முகக்கும் அளவே நீர் இருப்பதால், ஒருபோதும் வற்றாத இதற்கு நாழிக் கிணறு எனப் பெயர். இதில் நீராடிய பிறகே கந்தபெருமானை தரிசிக்க வேண்டும்.

🔥 மார்கழித் திருவாதிரை- திருமுழுக்கின் போது அபிஷேகத்துக்குப் பிறகு திருச்செந்தூர் நடராஜருக்கு முருகப் பெருமானின் அணி கலன்கள் அணிவிக்கப்படுகின்றன.

🅱 பன்னீர் இலை விபூதி !🅱

🌤 பன்னீர் இலையில் விபூதியை வைத்து   எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.

🌤 இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

🌤 திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீரு திருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.

🌤 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.



🐲 இலை விபூதியின் மகத்துவம் :🐲

🍄 அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவரால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார்.இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார்.

🍄 அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசி உட் கொண்டார்.. சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது. அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது.

🍄 அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட  ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.

🦆 பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். 🦆

🌺 இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது. முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.

🍄 இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.

🌤 நக்கீரனுக்கு அருள்புரிந்த முருகன் :🌤

🏹 முக்கண்ணனான சிவபெருமானோடு எற்பட்ட வாக்குவாதத்தினால்,பெரு நோயால் அவதிப்பட்ட நக்கீரர் தினமும் சிவனைத் தவறாமல் வழிபட்டு வருகின்றார்.

🏹 அவ்வயம், கைலாசம் சென்று சிவனைத் தரிசித்தேத் தீருவது என்ற தீர்மானத்தில் செல்லும் போது திருப்பரங்குன்றத்தில் குளமொன்றினருகில் அமர்ந்து வழிபடத்  தொடங்கினார்.

🏹  அப்போது அங்கிருந்த கல்முகி என்ற பூதம் அவரைச் சோதிக்க அரசமரம் ஓன்றிலிருந்து ஒரு அரச இலையை விழச் செய்தது. அவ்இலையானது கீழே இருந்த தண்ணீரில் விழுந்து,அதன் ஒரு பாதி மீனாகவும் மறு பாதி பறவையாகவும் மாறியது. இக்காட்சியைக் கண்ட நக்கீரர் மெய்மறந்து நின்றார்.

🏹 சிவ பூஜை செய்ய மறந்த நக்கீரனை  கல்முகி பூதம் உடனே கைது செய்து திருச்சீரலைவாயில் [திருச்செந்தூர்] உள்ள குகையொன்றில் சிறை வைத்தது.

🏹 தன்னை விடுவிக்க அத்தனை தெய்வங்களையும் போற்றித்துதித்தும் பயனில்லாததால், தம்மை உற்ற தெய்வம் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் முக்கண்ணனின் மைந்தன் கந்தப் பெருமானே என்பதை உணர்ந்து திருமுருகாற்றுப்படை என்ற நூலை பாடினார்.

🏹 நிறைவாக,
’உன்னைஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரையான் பின் செல்லேன் பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்தில் வாழ்வே’
என்று மனமுருகப் பாடியதும் சக்தி வேலாயுதத்துடன் தோன்றிய முருகன் நக்கீரரை மீட்டார். அவருடன் சிறை  வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர். முருகனின் திருவிளையாடலால் தமிழின் பெருமையை ஆறுபடை வீடுகளின் சிறப்பை உலகிற்கு எடுத்தியம்பும் அற்புதமான சங்க இலக்கியம் தமிழனுக்குக் கிடைத்தது.

🅱 அருணகிரிநாதருக்கு வழி காட்டிய முருகன் : 🅱

🍁 திருவண்ணாமலையில் பிறந்து சராசரி மனிதனாக சிற்றின்பத்தில் வீழ்ந்து நோய்வாய்ப்பட்ட அருணகிரிநாதர் ,மனமுடைந்து திருவண்ணாமலைக் கோபுரத்தில் ஏறி அதிலிருந்து கீழே விழ; முருகப்பெருமான் அவரைத்தாங்கி பிடித்தார்.

🍁 முருகனை நாடி திருப்பரங்குன்றம் வந்தார். மனமுருக வழிபட்ட பின்பு திருச்செந்தூர் புறப்பட்டார். வழி எல்லாம் ஒரே காடாக இருந்தபடியால் அருணகிரி வழி தெரியாமல் திகைத்து நின்றார்.அந்நேரம் மயில் ஒன்று காட்சி தந்து,வழிகாட்டி திருச்செந்தூருக்கு அழைத்து வந்தது.

🍁 திருச்செந்தூரில் முருகனில் சிவனைக் கண்ட அருணகிரியார் ’கயிலை மலையனைய செந்தில்’ என்று சிறப்பித்துப் பாடினார்.

🍁 செந்திலாண்டவனை தம்முடைய தந்தையைப் போல ஆடிக் காட்ட அழைத்தார். முருகப்பெருமானும் திருத்தாண்டவம் ஆடிக்காட்டினார். இக்காட்சியை தற்போது கோயிலில் நடைபெறும் ஏழாம் திருவிழா நாளில் ‘சிவப்புச் சாத்தி’ செய்யப்படும் நாளில் ஆறுமுகப்பெருமான் எழுந்தருளும் சப்பரத்தின் பின்பகுதியில் முருகப் பெருமான் நடராசர் போல ஆடல் காட்சி தருகிறார்.

🅱 குமரகுருபரருக்கு அருளிய முருகப்பெருமான் :🅱

🌤 ஸ்ரீவைகுண்டத்தில் சைவவேளாளர் மரபைச் சேர்ந்த சண்முகசிகாமணி கவிராயருக்கும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் பிறந்த குமரகுருபரர் தமது மூன்று வயதளவிலும் வாய் பேசாமல் ஊமை போலிருந்தார்.

🌤 அது கண்ட பெற்றோர் பெருந்துயரடைந்தனர். இதற்கிடையில் பிறந்த இரண்டாவது குழந்தை வாய் பேசியது. இதனால் மேலும் மனம் வருந்தினர்.

🌤 ஐந்து வயதானது குமரகுருபரனுக்கு, ஊமைக் குழந்தையை தூக்கிக்கொண்டு திருச்செந்தூர் முருகனின் கோயிலுக்கு வந்தனர்.

🌤 முருகனின் சன்னிதி முன்பு குழந்தைக் கிடத்தினர் 40 நாட்கள் விரதமிருந்தனர், தினமும் மனமுருக வேண்டிக்கொண்டனர்.யாதொரு பலனும் தெரியவில்லை.

🌤 மனமுடைந்த தம்பதியர் நாளை ஒரு நாள் பார்ப்போம் முருகன் அருளீயாவிடில் நாமிருவரும் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்ற மனமுறுதியைக் கொண்டனர்.

🌤 காலையில் கடலில் நீராடி கொடிமரத்தடியில் மகனைக் கிடத்தி விட்டு முருகனைத் தரிசிக்கச் சென்றனர். அந்நேரம் முருகன் கோயில் அர்ச்சகர் வடிவில் வந்து குமரகுருபரன் முன்பு ஒரு வெண்டாமரைப் பூவொன்றினைக் காட்டி இது என்ன என்று கேட்டார். அது நாள் வரையிலும் பேசாமலிருந்த ஊமைக் குழந்தை ’பூ’ என்றது. ’சைவம் தழைக்கப் பாடு’ என்று முருகன் கட்டளையிட்டு மறைந்தார்.

🌤 ’பூ மேவு செங்கமலப் புத்தேளும் ' என்ற பாடல் அடியை முதலாகக் கொண்டு கந்தர் கலி வெண்பா நூலைப் பாடி முருகனின் பெருமைக்குப் பெருமைச் சேர்த்தார். ஊமையாய் இருந்தவனை கவி பாடச் செய்து குமரி முதல் காசி வரை பாடலால் உலகம் போற்றச் செய்த அற்புதம் செய்தார் நமது செந்திலாண்டவர்.

🅱 முருக தத்துவத்திற்கு சிறப்பான தனித்தன்மை: 🅱

🌱 சூரசம்காரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில், சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் “”வைதாரையும் வாழவைப்பவன் முருகன்” என்று போற்றி வழிபடுவர்.

🌱 முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் வென்று ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. அதே சமயம் இவ்விழாவிற்கு வேறு காரணங்களும் இருப்பதாக மகாபாரதம், கந்தபுராணம் கூறுகிறது.

🌱 முனிவர்கள், ஒரு ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று வேள்வி வளர்த்து யாகம் துவங்கினர். ஆறு நாட்கள் நடந்த அந்த யாககுண்டத்தில் எழுந்த தீயில் இருந்து, ஒவ்வொருநாளும் ஒரு வித்து வீதமாக ஆறு வித்துக்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வித்துக்கள் ஆறாம் நாளில் ஒன்றாக சேர்ந்து முருகப்பெருமான் அவதரித்தார்.

🌱 இவ்வாறு முருகன் அவதரித்த நாள் கந்தசட்டி என மகாபாரதம் கூறுகிறது. கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருளச்செய்து, அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள்செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது என்கிறார்.

🅱 தல வரலாறு:🅱

⛱ புராணங்களில் திருச்சீர் அலைவாய் என்று போற்றி புகழப்பட்டுள்ளது இத்திருத்தலம். முன்னொரு காலத்தில் தேவர்கள் அனைவரும் இந்திரனின் தலைமையில் ஒன்று கூடி சிவபெருமானையும், பார்வதி தேவியையும் காணச் சென்றனர் கைலாயத்திற்கு. தங்களை அசுரர்களிடம் இருந்து காக்க வேண்டும் என மன்றாடினர். அச்செயலைப் புரிவதற்கு ஒரு சிறந்த வீரனைத் தந்தருளும் படி கேட்டனர்.

⛱ அவர்களது வேண்டுகோளை ஏற்ற சிவபிரான், சத்யோஜாதம், வாமதேவம், சத்புருஷம், ஈசானம், அகோரம், ஆகிய ஐந்துமுகங்கள் மட்டுமல்லாது, ஞானிகளுக்கு மட்டுமே புலப்படும் அதோ முகத்தினையும் சேர்த்து ஆறுமுகங்களோடு காட்சி அளித்தார். அத்தருணத்தில் அவரது ஒவ்வொரு திருமுகத்திலும் இருந்த ஒவ்வொரு நெற்றிக் கண்ணிலிருந்தும் ஒரு ஜோதி உருவானது. இவ்வண்ணம் தோன்றிய ஜோதிப் பொறிகளை ஒன்றுசேர்த்து, ஓர் அக்னிப் பிழம்பாக ஆக்கி வாயு தேவனிடமும், அக்னி பகவானிடமும் தந்து கங்கா தேவியிடம் சேர்த்துவிடும்படி பணித்தார்.

⛱ எல்லையற்ற ஆனந்தத்துடன் அதனை ஏற்ற கங்காதேவி, இமயமலையில் உள்ள சரவணப்பொய்கையில் கொண்டு சேர்த்தார். கற்பனைகளை மீறிய அழகுடன் திகழ்ந்த குழந்தைகளாகத் தெரிந்தன, அந்த அக்னிக் குஞ்சுகள் விஷ்ணு பகவானுக்கு. கார்த்திகை நட்சத்திரங்களாக விளங்கும் கார்த்திகைப் பெண்களை அழைத்து அந்த தெய்வீகக் குழந்தைகளுக்குப் பாலூட்டுமாறு கூறினார். இவ்வாறு கார்த்திகைப் பெண்களின் அன்பில் வளர்ந்து வந்த இக்குழந்தைகளை சிவனும், பார்வதியும் வந்து பார்த்தனர். அன்பின் மிகுதியால் பார்வதி அக்குழந்தைகளை எடுத்து அணைத்தபோது ஆறு குழந்தைகளும் ஒன்று சேர்ந்து, ஆறு முகங்களுடனும், பன்னிரண்டு கரங்களுடனும், ஓர் உருவத்தில் காட்சி தந்து கந்தன் என்ற பெயருடன் விளங்கினார். முருகனது அருமை, பெருமைகளை கந்தபுராணம் என்ற நூல் அழகாக விளக்குகிறது.

⛱ கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததினால் கார்த்திகேயன் என்ற பெயரையும் பெற்றார்.

⛱ காசியப முனிவருக்கு சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்ற மூன்று மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். அசுர குணத்துடனேயே பிறந்த இவர்கள் தங்களது குருவின் சொல்படி கடும் தவங்கள் புரிந்து பல்வேறு சக்திகளைப் பெற்றனர். இத்தகைய பொல்லாத சக்திகளைக் கொண்டு மூவுலகிலும் எல்லா மக்களையும் ஆட்டிப் படைத்தனர். சூரியன், சந்திரன், எமன், குபேரன், இந்திரன், அக்னிதேவன், தேவர்கள் போன்றோர் சூரபத்மனுக்கு அடிமைகள் போல செயல்பட வேண்டியிருந்தது.

⛱  இதனைக் கண்டு பொறுக்காமல், சிவன், முருகனை அழைத்து இவ்வுலகத்தை தீய சக்திகளிடம் இருந்து காக்கும்படி ஆணையிட்டார். தனது தந்தையின் ஆணைப்படி தனது படைகளுடன், மாயபுரிக்குச் சென்ற கந்தபிரான் தன் படைத் தளபதி வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினார். தூதுவனையும் தூற்றி அனுப்பினான் அந்த அசுரன்.

⛱ கார்த்திகேயன் படைப் பரிவாரங்களுன் தங்கி இருந்த இடமே திருச்செந்தூர். தேவர்களை சிறைபிடித்த சூரபத்மன், அவர்களை விடுவிக்குமாறு முருகன் எத்தனை கேட்டும் செய்யவில்லை. அவர்களைக் காக்க இறைவன் அசுரர்கள் மீது படையெடுத்து போர்புரிந்த இடமும் இந்த திருசெந்தூர் தான். நீண்ட போருக்குப் பின் தர்மத்தை வென்றார் முருகன்.

⛱ கடம்பன், கதிர்வேலன் வீசிய வேல் சூரபத்மனின் தேகத்தை இரு கூருகளாக்கியது. இவ்வாறு பிளவுபட்ட சூரனது உடலின் ஒரு பகுதி சேவலாகவும், மறுபகுதி மயிலாகவும் உருமாறியது. கருணைக் கடலான கந்தன் சேவலை தனது கொடியிலும், மயிலைத் தனது வாகனமாகவும் கொண்டு சூரனை ஆட்கொண்டார்.

🅱 சிறப்பம்சம்:🅱
 
Ⓜ அதிசயத்தின் அடிப்படையில்:

♻ முத்துக்குமரனின் திருப்பாதங்கள் பட்ட இடம் தான் இந்த திருச்செந்தூர்.

♻ முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூசை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார்.

♻ தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும்.

♻ சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் “பஞ்சலிங்க’ சன்னதியும் இருக்கிறது.

♻ பல அரிய நம்மால் காணமுடியாத சூட்சுமங்களைக் கொண்ட பகுதி இந்த திருச்செந்தூர் கடற்பகுதி.

♻ இத்தலத்தில் கார்த்திகேயன் ''ஞானகுரு'' வாக விளங்குவதால், குருபெயர்ச்சி விழாவும் இங்கே சிறப்பாக நடைபெறுகிறது.

♻ வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை- என்று புறநானூறும், சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்- என்று சிலப்பதிகாரமும் திருச்செந்தூரைப் போற்றுகின்றன.

🅱 இருப்பிடம்:🅱

✈ திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.

✈ தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்தும் திருச்செந்தூருக்கு மிக எளிதாக வந்து விடலாம்.

No comments:

Post a Comment