Thursday 6 July 2017

ஆரோக்கியமான 5 உணவு பழக்கங்கள்


காய்கறி
காய்கறிகளில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது. சில காய்கறிகளைப் பச்சையாகவே எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகளைப் பிடித்தவை, பிடிக்காதவை எனப் பிரிக்கக் கூடாது. எல்லா காய்கறிகளையும் சாப்பிடப் பழகிக்கொள்ள வேண்டும். தட்டில் சாதத்தைவிட காய்கறிகள்தான் அதிகமாக இருக்கவேண்டும். காய்கறிகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், சர்க்கரை நோய், உடல்பருமன் பிரச்னைகள் வருவதைத் தடுக்க முடியும்.
தண்ணீர்
நமது உடலில் 60 சதவிகிதம் நீர் உள்ளது. ரத்த  ஓட்டம் சீராக இருக்க, மூளை சுறுசுறுப்பாகச் செயல்பட, சிறுநீரகச் செயல்பாடு மேம்பட, சருமம் பொலிவு பெற தண்ணீரின் தேவை இன்றியமையாதது.
‘அனைவரும் தினமும் இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்’ என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் தினமும் சுமார் இரண்டு லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
நட்ஸ்
நட்ஸ் வகையைத் தினமும் சாப்பிடுவதால், உடலுக்கு புரதச் சத்து கிடைக்கிறது. நட்ஸ்களில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. எனவே, தொடர்ந்து சாப்பிட்டுவரும்போது, இதயம் பலம் அடையும்.
நட்ஸ் சிறந்த ஸ்நாக்ஸ். இதனால் பசி அடங்கும். எனவே, உணவு அருந்தும்போது அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியம்.
பழங்கள்
பழங்களை அனைவருமே சாப்பிடலாம். பழங்களில் அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. தினமும் ஏதாவதொரு பழம் சாப்பிட்டுவந்தால், எந்த நோயும் அண்டாது. பழங்களைப் பொறுத்தவரையில் நன்றாகக் கடித்துச் சாப்பிட வேண்டும். தினமும் ஒரே வகை பழத்தைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒரு வாரத்துக்கு நான்கைந்து விதமான பழங்களை உண்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் பரிந்துரையின்பேரில் பழங்களை உண்ணலாம்.
சிறுதானியம்
அரிசி, கோதுமை போன்ற  தானியங்களைத்தான் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் உண்கிறார்கள். இவற்றில் மாவுச்சத்துதான் நிறைந்திருக்கிறது. ஊட்டச்சத்துக்கள் குறைவு. சிறுதானியங்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுகளைத் தினமும் ஒரு வேளையாவது சாப்பிட வேண்டும். சிறுதானியங்களில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன.

No comments:

Post a Comment