Thursday, 6 July 2017

சளி இருமலை போக்கும் தூதுவளை!


‘தூதுவளம்’, ‘அளர்க்கம்’, ‘சிங்கவல்லி’ எனப் பல்வேறு பெயர்களைக்கொண்ட கீரை தூதுவளை. வயல்வெளி ஓரங்கள், ஈரப்பாங்கான புதர்கள், பாழ்நிலங்கள் போன்றவற்றில்  இந்தக் கீரை இயல்பாகக் காணப்படும்.
படரும் கொடி வகையைச் சேர்ந்தது. எனினும் சில இடங்களில் படரும் இடம் இல்லாத பட்சத்தில் செடியாகவும் வளரும். தூதுவளை இலை, பூ, தண்டு ஆகியவற்றில் வளைந்த முட்கள் இருக்கும். இது ஒரு ‘காயகற்ப மூலிகை’ என்கிறது சித்த மருத்துவம்.
சளி, இருமல், காது மந்தம், நமைச்சல், உடல்குத்தல் ஆகியப் பிரச்னைகளைச் சரிசெய்யும் ஆற்றல் கொண்டது.
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு கைப்பிடி தூதுவளை இலைகளைப்  போட்டு, நன்றாகக் கொதிக்கவைத்து, ஒரு டம்ளராகச் சுண்டக்காய்ச்சி அருந்தினால் இரைப்பு, இருமல் பிரச்னைகள் நீங்கும். மழைக்காலம், மற்றும் பனிக்காலத்தில் இதை அருந்துவது மிகவும் நல்லது.
ஒரு கைப்பிடி தூதுவளை இலைகளுடன், சம அளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து,  நல்லெண்ணெய் விட்டு வதக்கி, துவையலாகச் செய்து மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் வரை சாப்பிட்டுவந்தால், இருமல், இரைப்புப் பிரச்னைகள் முழுமையாகக் குணமாகும்.
ஒரு டம்ளர் நீரில் 10 - 15 இலைகளைப் போட்டுக் காய்ச்சிக்  குடிநீராக்கி, நாள் ஒன்றுக்கு 30 மி.லி அளவுக்கு இரண்டு வேளை வீதம், மூன்று முதல் நான்கு நாட்களுக்கு அருந்திவர சளி, இருமல் குணமாகும்.
தூதுவளை  இலை, வேர், காய், வற்றல் ஆகியவற்றை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடல் அரிப்பு நீங்கும், கண் எரிச்சல் முதலான கண் நோய்கள் குணமாகும்.
தூதுவளை கீரையைப் பசுநெய் சேர்த்துக் காய்ச்சிச் சாப்பிட்டுவர, கபநோய்கள் குணமாகும்.
ஆண்கள் தூதுவளை இலையைச் சாப்பிட்டுவந்தால், ஆண்மை பெருகும், உடல் வலுவடையும்.

No comments:

Post a Comment