Monday, 3 July 2017

மகா சிவராத்திரி மகிமை!

ம்பாள் வழிபாட்டுக்கு உகந்தவை நவராத்திரிகள் என்றால், அரனாருக்கு உகந்தது ஒரு ராத்திரி; அதுவே மகிமைகள் பல கொண்ட புண்ணிய சிவராத்திரி. `சிவம் என்றால் மங்கலம் என்று பொருள். ஆக, சர்வ மங்கலங்களையும் அருளும் அற்புதமான திருநாள், சிவராத்திரி' என்பார்கள் பெரியோர்கள்.  இப்படி, சீரும் சிறப்பும் மிகுந்த சிவராத்திரி குறித்து நாமும் விரிவாக அறிந்துகொள்வோமா?
பொதுவாக 15 திதிகளில் 14-வது திதிக்கு அதிபதி ஸ்ரீருத்ரன் ஆவார். அந்த ருத்ரனின் ராத்திரியே சிவராத்திரி ஆகும். அதாவது,  சதுர்த்தசி திதி நாளே சிவராத்திரி ஆகும். இந்த தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால், விசேஷ பலன்கள் கைகூடும்.

சதுர்த்தசி திதி, மாதம் இருமுறை வரும். இந்த இரண்டில் தேய்பிறை சதுர்த்தசி மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதிநாளுக்குக் கூடுதல் மகத்துவம் உண்டு. அந்தத் திருநாளையே நாம் மகா சிவராத்திரி புண்ணிய தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்தத் திருநாளுக்கு அப்படியென்ன மகத்துவம்? இதுபற்றி புராணங்கள் விரிவாகக் கூறுகின்றன!
உமையவள் செய்த சிவ வழிபாடு

ருமுறை பிரளயம் ஏற்பட்டு, படைப்புகள் அனைத்தும் சிவபெருமானுக்குள் ஒடுங்கின. அண்டபகிரண்டத்தையும் இருள் சூழ்ந்த அந்த வேளையில், பார்வதிதேவி நான்கு காலம் சிவபெருமானை வழிபட்டாள்.
மேலும், தன்னைப் போன்று சிவராத்திரி அன்று சிவனாரைப் பூஜிப்பவர்களுக்கு சகல செளபாக்கியங்களும் அருள வேண்டும் என்றும் சிவனாரிடம் வேண்டிக்கொண்டாள் உமையவள். சிவபெருமானும் `அப்படியே ஆகட்டும்' என்று அருள்பாலித்தார். இப்படி, பார்வதிதேவி துவங்கிய சிவராத்திரி புண்ணிய வழிபாடு இன்றைக்கும் தொடர்கிறது.

கண்களை மூடினாள்... உலகம் இருண்டது!

ருமுறை பார்வதிதேவியார் விளையாட்டாகக் கருதி சிவபெருமானின் கண்களைப் பொத்தினாள். ஆகவே, உலகம் இருளால் சூழப்பட்டது. இதனால் உயிர்கள் யாவும் கலங்கித் தவித்தன.

அப்போது ருத்திரர்கள் ஒன்றுசேர்ந்து, உலகின் இன்னல் நீங்க சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டனர். அதன் நினைவாகவே சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதாகச் சொல்வார்கள்.

இதுதொடர்பாக இன்னொரு கதையையும் சொல்வார்கள். பார்வதி தேவியார், சிவனாரின் கண்களைப் பொத்தியதும், அவர் தம்முடைய நெற்றிக்கண்ணைத் திறந்தார். அதனால் உண்டான வெம்மையைத் தாங்க முடியாமல் உலகம் தவித்தது. உடனே பார்வதிதேவியார் சிவனாரை தொழுது பணிந்தாள். அதனால் மகிழ்ந்த சிவனாரும் தம் நெற்றிக்கண்ணால் உண்டான சுடர் ஒளியை குளிர்ச்சி பொருந்தியதாகத் திகழும்படி அருள்செய்தார்.

இப்படி, பார்வதியாள் பூஜித்ததும் சிவனார் அருளியதுமான அந்தத் திருநாளே புண்ணியமிகு சிவராத்திரி என்பர்.

பாற்கடலும் சிவராத்திரியும்


தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைந்த திருக்கதை தெரியும் அல்லவா? அப்போது பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை அருந்திய சிவனார், மயங்கிக் கிடப்பது போல் அருளாடல் புரிந்து, பிறகு சந்தியாகாலத்தில் ஆனந்த தாண்டவமும் புரிந்தார். இது நிகழ்ந்தது ஒரு திரயோதசி தினத்தில். தொடர்ந்து சதுர்த்தசி அன்று இரவு நான்கு ஜாமங்களிலும் தேவர்கள் அவரை வழிபட்டு, துதித்தார்கள். இதுவே சிவராத்திரி என்றும் சில பெரியோர்கள் கூறுவார்கள்.

அடி-முடி தேடிய திருக்கதை!

பெரும்பாலும் இந்தத் திருக்கதையையே சிவாராத்திரிக்கான காரணக்கதையாகச் சொல்வார்கள்.

ஒருமுறை, மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் இடையே, 'யார் பெரியவர்' என்று வாக்குவாதம் துவங்கி, அது சண்டையாகவே உருமாறியது. அந்தப் போர் முடிவில்லாமல் தொடர்ந்தது. ‘அடுத்து என்னவாகுமோ’ என்று தேவர்கள் கலங்கினார்கள். இந்நிலையில், இருவருக்கும் இடையே ஒளி பொருந்திய பெரியதொரு நெருப்புத் தூணாக நின்றார் சிவபெருமான். அந்தத் தூணின் பிரகாசத்தைக் கண்ட இருவரும் பிரமித்தனர்.
அப்போது திருமால், பிரம்மனை நோக்கி, “நமக்கு இடையில் அதிமகிமை பொருந்திய மூன்றாவது ஒருவரும் இருக்கிறார். அவராலேயே இது உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இதன் அடியையும் முடியையும் முதலில் அறிவோம்’’ என்றார். பிரம்மனும் ஒப்புக்கொண்டார்.

உடனே, திருமால் வலிய கொம்புகளுடைய வராஹ அவதாரம் எடுத்து, பூமியை அகழ்ந்து சென்று அதன் மூலத்தைக் காண முயன்றார். பிரம்மன் அன்னத்தின் வடிவம் எடுத்து உச்சியைக் காணச் சென்றார். ஆண்டுகள் பலவாயின; அவர்களால் எதையும் காணமுடியவில்லை. அவர்களின் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயின.

ஆகவே, இருவரும் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு பழையபடி பூமியை அடைந்தனர்.  இருவரும் நெருப்புத் தூணின் இருபுறமும் நின்று, சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். அவர்களோடு சேர்ந்து தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் எல்லையில்லாச் சிறப்புகளைப் போற்றிப்பாடியும், ஆடியும், நெஞ்சு நெகிழ்ந்து பலவாறு துதி செய்தனர்.
அதைத் தொடர்ந்து, அந்த நெருப்புத் தூணின் மையத்தில் மான், மழு, அபய, வரத முத்திரைகளைத் தாங்கியவராகத் தோன்றினார் சிவபெருமான்.அவர் மகாவிஷ்ணுவையும், பிரம்மனையும் நோக்கி, ‘‘வேண்டிய வரங்களைக் கேளுங்கள்” என்றார்.
அவர்கள் இருவரும் அவரை வணங்கித் தொழுததுடன், தங்களின் படைத்துக் காக்கும் தொழில் ஞானம் பழையபடியே பொலிவுடன் திகழ அருளும்படியும், போரில் வெந்து அழிந்து போன தங்களுடைய ஆயுதங்களை மீண்டும் தர வேண்டுமென்றும் வேண்டினர்.

அப்படியே அருள்பாலித்த சிவனார், ‘‘அன்பர்களே! இன்று நான் உங்கள் முன்னே தோன்றி அருள்பாலித்த நாள் சிவராத்திரியாகும். இதுபோல் முன்னம் ஒரு சிவராத்திரி நாளில் தேவியும் என்னை அர்ச்சித்துப் பேறுபெற்றாள். இந்நாளில் ஆகமங்களில் கூறியுள்ளபடி பூசை செய்தால் நினைத்த நல்லவை யாவும் நடக்கும்.” என்று அருள் புரிந்து மறைந்தார்.

இந்த திருக்கதையை சிவமகா புராணம் பூர்வபாகம், உபமன்யு பக்தவிலாசம், மகா ஸ்காந்தம், நாரதம், லிங்க புராணம் ஆகிய ஞானநூல்கள், சிற்சில மாறுதலுடன் விரிவாக விளக்குகின்றன.

தமிழில் கந்தபுராணம், அருணகிரிபுராணம், சிவராத்திரி புராணம், அருணாசல புராணம் ஆகியவற்றிலும் இந்தத் திருக்கதையைக் காணலாம்.

இக்கதையையொட்டியே, பிரம்மனுக்காக தாழம்பூ பொய்யுரைத்து சாபம் பெற்ற கதையும் கூறப்படுவது உண்டு. பின்னர், தாழம்பூ தனது தவறை உணர்ந்து சிவனாரிடம் விமோசனம் கேட்க, `சிவராத்திரி அன்று மட்டும் தமக்கான பூஜையில் தாழம்பூ இடம்பெறும்' சென்று சிவனார் அருள்புரிந்ததாகவும் ஒரு திருக்கதை உண்டு.

சிவராத்திரி வழிபாடு தோன்றியதற்கான காரணக் கதைகளைப் படித்தறிந்தோம். இனி, சிவராத்திரியின் வகைகள் மற்றும் சிவராத்திரி வழிபாடு குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

சிவராத்திரியின் வகைகள்

சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை: நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, மாக சிவராத்திரி.

நித்ய சிவராத்திரி: வருடத்தின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை மற்றும் வளர்பிறைகளில், சதுர்த்தசி திதி இடம்பெறும் நாட்களில் வரும் இரவுகள் நித்ய சிவராத்திரி ஆகும். அதேபோல், தினமும் இரவு அர்த்தஜாம பூஜை நடைபெறும் காலத்தையும் நித்ய சிவராத்திரி என்று சொல்வது உண்டு.

மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு திதிகளை ஒட்டி அனுஷ்டிக்கப்படுவது, மாத சிவராத்திரி ஆகும். இந்த மாத சிவராத்திரி, மாதத்தின் மற்ற திதிகளிலும் வரும். அந்த விவரமும், குறிப்பிட்ட அந்த தினங்களில் வழிபட்டு சிவனருள் பெற்றவர்களின் பட்டியலும் வருமாறு:

சித்திரை - தேய்பிறை அஷ்டமி. இந்த தினத்தில் உமாதேவி வழிபட்டு அருள்பெற்றாள்.

வைகாசி -
 வளர்பிறை அஷ்டமி; சூரியன்.

ஆனி - வளர்பிறை சதுர்த்தசி; ஈசானன்.

ஆடி - தேய்பிறை பஞ்சமி; முருகன்.

ஆவணி - வளர்பிறை அஷ்டமி; சந்திரன்.

புரட்டாசி - 
வளர்பிறை திரயோதசி; ஆதிசேஷன்.

ஐப்பசி - வளர்பிறை துவாதசி; இந்திரன்.

கார்த்திகை - வளர்பிறை சப்தமி மற்றும் தேய்பிறை அஷ்டமி; சரஸ்வதி.

மார்கழி - வளர்பிறை சதுர்த்தசி மற்றும் தேய்பிறை சதுர்த்தசி; லட்சுமி.

தை - வளர்பிறை திரிதியை; நந்தி.

மாசி - தேய்பிறை சதுர்த்தசி; தேவர்கள்.

பங்குனி - வளர்பிறை திரிதியை; குபேரன்.
பட்ச சிவராத்திரி: தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, தொடர்ந்து 13 நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, 14-ம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது, `பட்ச சிவராத்திரி' எனப்படும்.

யோக சிவராத்திரி:
 யோக சிவராத்திரியில் நான்கு வகை உண்டு. அதன் விவரம்:

1. திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல்- இரவு சேர்ந்த அறுபது நாழிகையும் (24 மணி)அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி.

2. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை தேய்பிறை சதுர்த்தசி இருப்பதும் யோக சிவராத்திரி ஆகும்.

3. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணி முதல் 6 மணி வரை) அரை நாழிகைப் பொழுது அமாவாசை இருந்தாலும் அது யோக சிவராத்திரி ஆகும்.

4. 
திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருப்பதும் யோக சிவராத்திரி.
இந்த நான்கு ‘யோக’ சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்பது சாஸ்திரம்.

மாக சிவராத்திரி: 
மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே `மாக' சிவராத்திரி. இதையே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம்.

'ராத்திர' என்ற சொல்லுக்கு யாவும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று சிவபெருமானுக்குள் ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே, இந்த புண்ணிய காலத்தில் சிவநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம். இதனால், இம்மையில் சுகானந்த வாழ்வையும், மறுமையில் சுகப் பேரானந்த வாழ்வையும் பெற்றுச் சிறக்கலாம்.

இனி, மகிமைகள்மிகு மகாசிவராத்திரி புண்ணிய தினத்தில், சிவனாரை வழிபடுவதற்கு உரிய நியதிகள் மற்றும் விரத தாத்பர்யங்கள்  குறித்து விளக்கமாக அறிவோமா?

மகா சிவராத்திரி வழிபாடு!

சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் தவிர்க்கவேண்டும்.

மறு நாள் சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும்போது காலையில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்களை (பூஜைகள் போன்றவற்றை) செய்த பிறகு, சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்து திரும்ப வேண்டும்.

சிவாலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.
அதன் பின் நடுப்பகலில் நீராடி, உச்சி கால அனுஷ்டானங்களை முடித்துவிட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களைச் சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவன் கோயிலில் கொண்டுபோய்க் கொடுத்து, சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர அனுஷ்டானங்களை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் பரமேஸ்வரனை (சிவலிங்கத்தை) வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்ய வேண்டும் அல்லது சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.

சிவராத்திரி புண்ணிய தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும். ஓவ்வொரு கால பூஜைக்கும் சில குறிப்பிட்ட நியதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு காலத்துக்கும் உண்டான நியதிகளைப் பற்றிப் பார்ப்போம்.

முதல் காலம்

மு
தல் காலத்தில் சிவபெருமானுக்கு அனைத்து விதமான திரவியங்களாலும் அபிஷேகம் செய்யவேண்டும். பொதுவாக, சிவராத்திரி புண்ணிய தினத்தன்று நான்குகால பூஜை வேளையிலும், அனைத்துவிதமான திரவியங்களால் அபிஷேகம் செய்யவேண்டும் என்பது சாஸ்திரம். ஆனாலும், ஒவ்வொரு காலத்துக்கும் ஓர் அபிஷேகம் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் முதல் காலத்தில் விசேஷமான திரவியமாக சொல்லப்பட்டு இருப்பது பஞ்சகவ்யம். இந்த பஞ்சகவ்யத்தை தயாரிப்பது பற்றியும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
‘பஞ்சகவ்யம்’ என்பது பசுவிலிருந்து பெறப்பட்ட ஐந்து பொருட்களைக் குறிப்பது ஆகும். பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தையும் முறைப்படி ஒவ்வொரு படி எடுத்துக்கொள்ளவும். பிறகு நடுவில் பசுவின் பாலையும், அதன் கிழக்கே தயிரையும், தெற்கே நெய்யையும், வடக்கே கோமியத்தையும், மேற்கே பசுவின் சாணத்தையும் வைத்து, முறைப்படி நடுவே ஈசானன், கிழக்கே தத்புருஷன், தெற்கே அகோரன், வடக்கே வாமதேவன், மேற்கே ஸத்யோஜாதன் என்பதாக இறைவனின் ஐந்து நாமாக்களையும் கூறி பூஜிக்கவேண்டும். பின்னர் பசுவின் சாணத்தை எடுத்து, கோமியத்தில் இட வேண்டும். அடுத்து இந்தக் கலவையை பசுநெய்யில் சேர்க்கவேண்டும். பிறகு, இந்த மூன்றும் சேர்ந்த கலவையை பசுந் தயிருடனும் கலந்தபிறகு, நிறைவாக அனைத்தையும் பசும்பாலில் கலந்துகொள்ளவேண்டும். இப்படி பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது, ஒவ்வொன்றுக்கும் உரிய மந்திரம் சொல்லி கலக்கவேண்டும். தெரியாதவர்கள், ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தபடி பஞ்சகவ்யம் தயார் செய்யலாம்.

பஞ்சகவ்யம் தயாரானதும், அதில் சிவபெருமானை ஆவாகனம் செய்து, அந்த பொருளை பூஜிக்கப்பட்ட ஒரு விசேஷத் திரவியமாகக் கொள்ள வேண்டும். இந்த பஞ்சகவ்யம் அபிஷேக திரவியங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.

இந்த பஞ்சகவ்யத்தை நாம் வெவ்வேறு வண்ண பசுக்களிடமிருந்து பெற வேண்டும். பால் சிவப்புநிற பசுவிலிருந்தும், தயிரானது வெண்மை நிற பசுவிலிருந்தும், நெய்யானது சாம்பல் நிற பசுவிலிருந்தும், கோமியம் கறுப்பு நிற பசுவிலிருந்தும், பசுஞ்சாணம் பலவர்ணமுடைய பசுவிலிருந்தும் பெறப்பட வேண்டும். ஒருவேளை அப்படி கிடைக்காவிடில், அனைத்தையும் கறுப்பு வண்ண பசுமாட்டிலிருந்து இவற்றைப் பெறலாம்.

முதல் கால அபிஷேகம் முடிந்ததும் ஸ்வாமியின் திருமேனியில் சந்தனம், தேன் கலந்து தடவவேண்டும்.

முதல் காலத்துக்கு உரிய விசேஷ அபிஷேகப் பொருளாக பஞ்சகவ்யம் திகழ்வதுபோன்று, விசேஷ பூக்கள், வஸ்திரம், நைவேத்தியம் முதலானவை குறித்தும் ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவை:

வஸ்திரம்: சிவப்பு வண்ண பட்டு

மாலை:
 வில்வம்

தூபம்: சந்தனக் கட்டைளைத் தூள் செய்து தூபம் போடவேண்டும்.

தீபம்: விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

நைவேத்தியம்: பருப்பும் நெய்யும் சேர்த்த அன்னம்.

பாராயணம்: 
ரிக்வேதம் மற்றும் சிவபுராணம்
.
இரண்டாவது காலம்

 இரண்டாவது யாமத்தில் அனைத்துவித திரவியங்களால் அபிஷேகம் செய்வதுடன், விசேஷ திரவியமாக பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்யவேண்டும்.

இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று ரச பஞ்சாமிர்தம், மற்றொன்று பழ பஞ்சாமிர்தம். நாம் பார்க்கின்ற இந்த சிவராத்திரியிலே இரண்டாவது காலத்திலே சொல்லப்படுகிற பஞ்சாமிர்தம் ரச பஞ்சாமிர்தம். ரசம் என்றால் திரவநிலை.
சிவப்பு பசுவிலிருந்து பெறப்பட்ட பாலை நடுவில் வைக்கவேண்டும். பின்னர், வெள்ளை பசுவின் பாலில் உருவான தயிரை கிழக்கிலும், சாம்பல் பசுவின் பாலில் பெறப்பட்ட நெய்யை தெற்கிலும், அச்சுவெல்லம் அல்லது தூள்சர்க்கரையை வடக்கிலும், தேனை மேற்கிலும் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு முன்னர் சொன்னதுபோன்று சிவமந்திரம் அல்லது சிவநாமம் சொல்லி பூஜித்து அவற்றை கலந்துகொள்ளவேண்டும். இந்தக் கலவைக்கே ரச பஞ்சாமிர்தம் என்று பெயர். இயலாவிடின், ஐவகை பழங்களைக் கொண்டு பழ பஞ்சாமிர்தத்தால் அபிஷேகித்தும் வழிபடலாம்.

இரண்டாம் கால அபிஷேகம் முடிந்ததும், பச்சைக் கற்பூரம் அரைத்து சுவாமியின் திருமேனியில் பூசவேண்டும்.

வஸ்திரம்: மஞ்சள் வண்ண வஸ்திரம்.

மாலை: குருந்த மர இலைகளால் ஆன மாலை. துளசியால் அர்ச்சனை செய்யலாம்.

தூபம்: சாம்பிராணியும் குங்கிலியமும் கலந்து தூபம் இடவேண்டும்.

தீபம்: இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.

நைவேத்தியம்: பாயசம்.

பாராயணம்: யஜுர் வேத பாராயணமும் எட்டாம் திருமுறையில் கீர்த்தித் திருவகவலும் பாராயணம் செய்யவேண்டும்.

மூன்றாம் காலம் 

மூன்றாம் யாமத்தில் அதாவது காலத்தில், சிவபெருமானுக்கு அனைத்துவிதமான திரவியங்களுடன், விசேஷமாக தேனபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் முடிந்ததும், கஸ்தூரி சேர்த்த சந்தனத்தை ஸ்வாமிக்குப் பூசவேண்டும்.
வஸ்திரம்: வெள்ளை வஸ்திரம்.

மாலை: கிலுவை இலை மற்றும் விளா இலைகளால் தொடுக்கப்பட்ட மாலையும் ஜாதிமுல்லை மாலையும் மூன்றுதள வில்வத்தால் அர்ச்சிக்க வேண்டும்.

தூபம்: குங்கிலிக பூவினால் தூபம் போடவேண்டும்

தீபம்: நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

நைவேத்தியம்: மாதுளை, எள் அன்னம்.

பாராயணம்:
 சாம வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாவது திருமுறையில் திருவண்டகப் பகுதி பாராயணம் செய்யவேண்டும்.

நான்காம் காலம் 


நான்காம் கால பூஜையின்போது, கரும்புச்சாறு அபிஷேகம் செய்யவேண்டும். புனுகு, சந்தனம் சேர்த்துப் பூசவேண்டும்.

வஸ்திரம்: பச்சை அல்லது நீலவண்ண வஸ்திரம்.

மாலை: கருநொச்சியினால் அலங்காரம் செய்து, வெள்ளை நந்தியாவட்டையால் ஆன மாலையை அணிவிக்கவேண்டும். மேலும் நிறைய புஷ்பங்களால் அலங்கரிக்கவேண்டும்.

தூபம்: கற்பூரம் மற்றும் லவங்கப்பட்டையைப் பொடி செய்து தூபம் போடவேண்டும்.

தீபம்: நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

நைவேத்தியம்: வாழை முதலான அனைத்துவகைப் பழங்களும், சர்க்கரைப்பொங்கலும் படைக்கலாம்.

பாராயணம்: அதர்வண வேதம் பாராயணம் செய்வதுடன், எட்டாம் திருமுறையில் போற்றித் திருவகவல் பாராயணம் செய்யவேண்டும்.

ஐந்தெழுத்து மகிமை!

சிவபெருமானை நாள்தோறும் திருவைந்தெழுத்து ஜபித்து வழிபட வேண்டும் என்பது சாஸ்திரம். முறைப்படி தீட்சை பெற்றவர்கள் மட்டுமே திருவைந்தெழுத்து ஜபிக்க முடியும். ஆனால், சிவராத்திரி அன்று மட்டும் முறைப்படி தீட்சை பெறாதவர்களும் பஞ்சாட்சரத்தையோ அல்லது காரண பஞ்சாட்சரத்தையோ ஜபித்து சிவபெருமானை வழிபடலாம்.

நமசிவாய எனும் திருவைந்தெழுத்தில், `சிவ' என்ற இரண்டு எழுத்து காரண பஞ்சாட்சரமாகும். இந்த இரண்டு எழுத்தைச் சொன்னாலும் நமக்கு சிவபெருமானின் அருள் கிடைக்கும்.

ஐந்தெழுத்தைச் சொல்லும்போது, `ஓம்' என்ற பிரணவத்தை முதலிலும், `நம' என்ற போற்றும் பதத்தை நிறைவிலும் சேர்ப்போம். ஆனால், `சிவ' என்று உச்சரிக்கும்போது அவை தேவையில்லையாம். `சிவ' என்ற அந்த இரண்டு எழுத்தை பேச்சுவாக்கில் சொன்னாலும் அதற்கான பலன் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பார்கள் பெரியோர்கள்.

உதாரணத்துக்கு குழந்தை பசியால் அழுகிறது. அதற்கு நாம், ‘பசி வந்துவிட்டது குழந்தை அழுகிறது’ என்கிறோம். அப்படி சொல்லும்போது ‘பசி’ என்ற சொல்லின் இறுதி எழுத்தும் ‘வந்துவிட்டது’ என்ற சொல்லின் முதல் எழுத்தும் சேர்ந்து ‘சிவ’ என்று மாறி, நம் பாவங்கள் விலகிப்போகின்றனவாம்.

திருமூலரும், ‘சிவ சிவ என்கிலர் தீவினையாளர்’ என்று சொல்லி இருக்கிறார். நாமும், எப்போதும் சிவநாமம் கூறி, சிவனருள் பெறுவோம்.

மகிமையைச் சொல்லும் திருக்கதை!

ங்குலன் என்றொரு வேடன் இருந்தான். தரையில் மட்டுமின்றி விருட்சங்களிலும் வலைவிரித்து விலங்குகளைப் பிடிப்பதில் வல்லவன் அவன்.
அழகான மனைவி, அறிவுமிகுந்த குழந்தைகள் என அமைதியாக சென்றது, அங்குலனின் வாழ்க்கை.

ஒரு நாள்... அங்குலன் தனது வழக்கப்படி வலைகளை விரித்து விட்டுக் காத்திருந்தான். பறவைகளோ விலங்குகளோ எதுவும் அவற்றில் சிக்கவில்லை. சின்னஞ்சிறிய அணில்கூடச் சிக்கவில்லை. அங்குலன் வருந்தினான். அவன் வருத்தத்தை மேலும் அதிகமாக்குவது போல, சூரியனும் மறையத் தொடங்கினான். ஆனாலும் வெறுங்கையுடன் வீட்டுக்குத் திரும்ப மனம் இல்லாத அங்குலன், ‘இன்று இரவு இங்கேயே தங்கி, நாளைக்கு ஏதாவது கொண்டுபோக வேண்டும்’ என்று தீர்மானித்தான்.

எனவே, காட்டிலேயே ஒரு குளத்தங்கரையில் இருந்த வில்வ மரத்தின் மீது ஏறி வாகாக உட்கார்ந்தான். இரவில், குளத்தில் நீர்ப் பருக வரும் விலங்குகளை வேட்டையாடலாம் என்று காத்திருந்தான். ஆனால், வெகுநேரம் ஆகியும் விலங்குகள் எதுவும் அந்தப் பக்கம் வருவதாகத் தெரியவில்லை. தூக்கம் வேறு கண்ணைச் சுழற்றியது அங்குலனுக்கு.

`தூக்க கலக்கத்தில் மரத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டால் என்னாவது' என்ற பயத்தில், ஓர் உபாயம் செய்தான். தூக்கத்தைக் கலைக்கும் விதமாக, மரத்தில் இருந்து வில்வ இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழேபோட்டான்.
அவ்வளவு இலைகளும் கீழே இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.

காற்று அதிகமாக வீசாத காட்டுப் பகுதியானதால் ஸ்வாமியின் மீது விழுந்த வில்வ இலைகள் அப்படியே, யாரோ ஒருவர் பொறுப்பாகப் பூஜை செய்து அலங்கரித்ததைப் போல் இருந்தது.

பொழுது விடிந்தது. ஒரு விலங்குகூட அவனுக்குக் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துப்போன அவன், வேறு வழியின்றி வீடு திரும்பினான்.

இரவு முழுவதும் கணவன் வராததால் பரிதவித்துக்கொண்டிருந்த அங்குலனின் மனைவி, காலையில் அவனைக் கண்டதும் நிம்மதி அடைந்தாள்.

அதுசரி! கதையின் முடிவென்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது!

மிக அற்புதமான பலன் கிடைத்தது அங்குலனுக்கு. ஆமாம்! வாழ்நாள் முடிவில் அங்குலன், சிவ கணங்களில் ஒருவராகும் பேறு பெற்றான்.

`எப்படி...' என்கிறீர்களா?

காட்டில் அங்குலன் பகல் பொழுது முழுவதும் சாப்பிடாமல் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, மரத்தின் மேல் இருந்தபடி வில்வ இலைகளை உதிர்த்தது எல்லாமும் நடந்தது ஒரு சிவராத்திரி நாளில். அதன் விளைவாகத்தான் அங்குலனுக்கு சிவ கணங்களில் ஒருவராகும் பேறு கிடைத்தது. அறியாமல் செய்த வழிபாட்டுக்கே இப்படியொரு பலன் என்றால், பலன் அறிந்து பக்தியுடன் செய்யும் வழிபாட்டுக்கான மகிமையைச் சொல்லவும் வேண்டுமா?

இப்படிச் சிவனருள் பெற்ற வேடன் குறித்த கதைகள் வேறுசிலவும் உண்டு.

ஒரு சிவராத்திரி தினத்தில், வேட்டைக்காக வில்வ மரத்தின் கிளையில் காத்திருந்தான் வேடன் ஒருவன். அன்றைய இரவின் மூன்று காலங்களிலும் முறையே இரண்டு பெண் மான்களும், ஒரு ஆண் மானும் அந்த இடத்துக்கு வர, வேடன் ஒவ்வொரு முறையும் வில்லில் அம்பு பூட்டி குறிபார்க்கும் தருணத்தில், மான் ஒவ்வொன்றும் தமது கடமையை நிறைவேற்றிவிட்டு வருவதாகக் கூறிச் சென்றன.

சொன்னபடியே அவை வந்து சேர்ந்ததைக் கண்ட வேடன், மனம் நெகிழ்ந்து அவற்றை கொல்லாமல் விட்டுவிட்டதாகவும், அவர்கள் அனைவருக்கும் சிவதரிசனமும் அருளும் கிடைத்ததாகவும் கதை நீளும்.

அவன் ஒவ்வொரு முறையும் வில்லில் அம்பு பூட்டி குறிபார்த்த வேளையில், அவனுடைய அசைவால் வில்வ இலைகள் உதிர்ந்து மரத்தடியில் இருந்த சிவலிங்கத் திருமேனியில் விழுந்தன என்றும், வேடன் இடையில் கட்டிவைத்திருந்த குடிநீர்க் குடுவையில் இருந்த தண்ணீர் விழுந்து லிங்கத் திருமேனியை அபிஷேகித்தது என்றும் இந்தக் கதை விவரிக்கும்.

இப்படி தன்னையுமறியாமல் வில்வார்ச்சனையும், அபிஷேகமும் செய்த அந்த வேடன், பெரும் புண்ணியம் பெற்றான். ஆம்! அவன் மறுபிறவியில் குகனாகப் பிறந்து, ஸ்ரீராமனே தன் சகோதரனாக ஏற்கும்வண்ணம் பேறு பெற்றான் என்றும் ஒரு திருக்கதை சொல்லப்படுகிறது.

சிவராத்திரியில் `லிங்கோற்பவ' வழிபாடு!

திருவாதிரை தினத்தில் நடராஜப் பெருமானையும், உமா மகேசுவர விரத காலத்தில் உமாமகேசுவரரையும், திரிசூலவிரதத்தின்போது அஸ்திர தேவரையும் வழிபடுவது போன்று, சிவராத்திரி தினத்தில் லிங்கோற்பவ மூர்த்தியை வழிபடவேண்டும்.

சிவராத்திரி புண்ணிய தினத்தில் நான்குகால பூஜைகள் நிகழும். இதில் 3-வது காலம் லிங்கோற்பவ காலம்.

சிவனாரின் திருவடிவங்களில் ஒன்றான லிங்கோற்பவ மூர்த்தி வடிவத்துக்குக் காரணமாக, அயனும் அரியும் அடிமுடி தேடிய திருக்கதையைச் சொல்வார்கள்.

சிவராத்திரியில் லிங்கோற்பவ காலத்தில்தான், சிவபெருமான் நெருப்புத்தூண் நடுவில் இருந்து மான், மழு, அபய வரத முத்திரைகளுடன் தோன்றி அருள்பாலித்தார்.

லிங்கம் என்ற சொல்லுக்கு உருவம் என்பது பொருள். அங்ஙனம் உருவம் தாங்கி சிவனார் வெளிப்பட்டு அருள்பாலித்ததால், இது லிங்கோற்பவ காலம் எனப்படுகிறது.

லிங்கோற்பவ திருவடிவில்... லிங்க மூர்த்தியின் மையத்தில் அழல் போன்ற பிளவில் தனித்த சந்திரசேகரமூர்த்தி எழுந்தருளியிருக்க, பிளவினைச் சுற்றி அக்னிச் சுடர்கள் காட்டப்படுகின்றன. பெருமானின் பாதமும், உச்சியும் காட்டப் படுவதில்லை. இதன் மூலம் முதலும் முடிவுமற்ற நிலையில் அவர் இருப்பது உணர்த்தப்படுகிறது.லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் பன்றி வடிவில் திருமாலும், உச்சியில் அன்ன வடிவில் (அல்லது அன்னத்தின் மீது அமர்ந்தவாறு) பிரம்ம தேவனும் பெருமானின் அடிமுடிதேடும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளனர். மேலும் வலப்பகுதியில் பிரம்மதேவனையும் இடப்புறம் திருமாலையும்... இருவரும் சிவனாரை வழிபடும் பாவனையில் அமைப்பதும் உண்டு. இம்மூர்த்தியை புராணங்களும் கல்வெட்டுகளும் ‘லிங்க புராணமூர்த்தி என்றே குறிப்பிடுகின்றன. சிவாலயத்தில் இவருக்கான இடம் கருவறையின் பின்புறம் அமையும் மாடமாகும். ஆலயத்தின் மற்ற இடங்களில் லிங்கோற்பவ மூர்த்தியை வைக்கும் வழக்கம் இல்லை.

‘லிங்கபுராணத் தேவரான’ லிங்கோற்பவரை கல் திருமேனியாக எழுந்தருளி வைப்பதே வழக்கமாகும். என்றாலும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் மனைவியால் செய்து அளிக்கப் பட்ட உலோகத் திருமேனியிருந்ததை கல்வெட்டு குறிக்கின்றது.
லிங்கோற்பவ வழிபாடும் தலங்களும்...

சிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் இந்த மூர்த்திக்கு நெய்பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளித் துணிகள் அணிவித்து தாழைமடல்களால் அலங்கரித்து, எள்ளன்னம் நிவேதிக்க வேண்டும் என்பர்.

ஆகமங்களில் சொல்லப்பட்ட வகையில் லிங்கோற்பவரை, பல்லவர்கள் கண்ட காஞ்சிக் கலைக்கோயில்கள் அனைத்திலும், வட ஆற்காடு மாவட்டம் குடிமல்லூரிலும் காணலாம்.

லிங்கோற்பவ மூர்த்தம் திருவண்ணாமலைத் தலத்தோடு தொடர்பு உடையதால் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேசுவரர், ஏகாம்பரேசுவரர் ஆலயங்களில் இந்த மூர்த்தத்தைச் சற்று கலைநயத்துடனும் காவியநயத்துடனும் அமைத்துள்ளனர்.இக்காட்சியில் பின்னணியில் அண்ணாமலையும், அதன் மீது தீபமும் காட்டப்பட்டுள்ளன. அதிலிருந்து வெளிப்பட்டு தேவியுடன் கூடியவாறு இடபம் பின் நிற்க பெருமான் காட்சியளிக்கின்றார். இத்தகைய அமைப்பான லிங்கோற்பமூர்த்தியை எங்கும் காண முடியவில்லை.

பிள்ளையார்பட்டியில் உள்ள லிங்கோற்பவர், இரண்டு கரங்க ளுடன் காட்டப்பட்டிருக்கிறார்.

பொதுவாக லிங்கோற்பவ மூர்த்தியில் உள்ள சிவபெருமானை நான்கு கரங்களுடன் அவற்றில் மான், மழு, அபய, ஊரு முத்திரைகள் கொண்டவராகவே அமைப்பது வழக்கம். ஆனால் காஞ்சிபுரம் கயிலாசநாத கோயிலில் எட்டு கரங்களுடன் கூடிய லிங்கோத்பவரைக் காண்கிறோம். இவ்வடிவமும் வேறெங்கும் இல்லாததாகும்.

No comments:

Post a Comment