Saturday 1 July 2017

அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பாம்புரம் - திருவாரூர்


மூலவர் : சேஷபுரீஸ்வரர், பாம்புரேஸ்வரர், பாம்பீசர், பாம்புரநாதர்

உற்சவர் : ஆதிசேஷன்

அம்மன்/தாயார் : பிரமராம்பிகை, வண்டுசேர் குழலி, வண்டமர் பூங்குழலியம்மை

தல விருட்சம் : வன்னி

தீர்த்தம் : ஆதிசேஷ தீர்த்தம்

பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

புராண பெயர் : சேஷபுரி, திருப்பாம்புரம்

ஊர் : திருப்பாம்புரம்

பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்

🅱 தேவாரப்பதிகம் : 🅱

துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடு சோதி எம்பெருமான் நஞ்சுசேர் கண்டம் உடைய என்நாதர் நள்ளிருள் நடம்செயும் நம்பர் மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாட மாளிகை தன்மேல் ஏறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் பாம்புர நன்னகராரே.. - திருஞானசம்பந்தர்

🌱 தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 59வது தலம். 🌱

🅱 திருவிழாக்கள்:🅱

🌻 சிவாலய விழாக்கள் அனைத்தும் நடைபெற்றாலும், மகாசிவராத்திரி மிகவும் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. அதிலும் ஆதிசேஷன் வணங்கிய மூன்றாம் காலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆதிசேஷன் உற்சவராக புறப்பட்டு இறைவன் திருமுன் வந்தபின்பு, அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
ராகு-கேது பெயர்ச்சியன்று விசேஷம்,

🌻 மாசி மாதத்தில் - தீர்த்தவாரி - பஞ்சமூர்த்தி அபிஷேகம் சிறப்புடன் நடத்தப்படுகிறது...

🅱 தல சிறப்பு:🅱

🎭  இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

🎭  பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்ற தலம்..

🎭  இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது..

🎭 ஈசனின் பஞ்ச முகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம்.

🎭 இந்திரன் சாபம் நீங்கிய தலம்.

🎭 கங்கை பாவம் தொலைந்த தலம்.

🎭 சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்டு திருபாம்புரம் ஒரு சிறந்த தலமாக இருக்கிறது.

🎭 ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது.

🎭 திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் “பாம்புர நன்னகர்” என்று குறிப்பிடுகிறார்.

🎭 திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகத்திலும், சுந்தரர் தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

🎭 அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

🎭 இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை.

🎭 நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.

🎭 ஆதிசேஷன், ராகு, கேது மற்றும் அஷ்டமா நாகங்கள், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் இத்தல இறைவனை வழிபட்டு தங்கள் சாபம் நிவர்த்தியாகப் பெற்ற தலம்.

🎭 ஆதிசேஷனுடைய மூலவிக்கிரகமும், உற்சவ விக்கிரகமும் கோயிலில் உள்ள தலம்.

🎭  சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 122 வது தேவாரத்தலம் ஆகும்.

🅱 நடைதிறப்பு :🅱

🗝 காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.. 🗝

ஞாயிறு மற்றும் செவ்வாய் மாலை 2.45 மணி முதல் இரவு 8.00 மணி வரை,

புதன்கிழமை ராகு, கேது பூஜை பகல் 6.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை,

 வியாழகிழமை ராகு, கேது பூஜை பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை.

🔥 பூஜை விவரம் : 🔥

🥀 4 கால பூஜைகள்.

காலசந்தி காலை 9.00 மணி,

உச்சிகாலம் பகல் 12.15 மணி ,

சாயரட்சை மாலை 5.15 மணி ,

அர்த்தசாமம் இரவு 8.00 மணி.

🅱 பொது தகவல்:🅱

🔘 பிரம்மா, இந்திரன், பார்வதி, அகத்தியர், அக்னி, தட்சன், கங்காதேவி, சூரியன், சந்திரன், சுனிதன், கோச்செங்கண்ணன் போன்றோர் பூஜை செய்த தலம்.

🔘 அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன்,சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

🔘  இந்நாள் வரை இவ்வூரில் அகத்திப் பூப்பதில்லை.

🔘 ஆலம் விழுதுகள் தரை தொடுவதுமில்லை.

🐍  இந்த ஊரில் பாம்பு தீண்டி இதுவரை யாரும் இறந்ததில்லை.

🌷 சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோவில் ஒரு பஞ்சலிங்க தலமாகும்.

🌷 சுவாமி சந்நதியை சுற்றி கல் அகழி உள்ளது.

🅱 பிரார்த்தனை:🅱

👉🏽 போதை பழக்கம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 - 6 ராகு காலத்தில் இத்தல இறைவனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டால் தீய பழக்கங்களில் இருந்து விடுபடலாம். இவ்வாறு செய்து வந்தால் 264 வகையான பாவங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

👉🏽ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம்  இருந்தால், 18 வருட ராகு தசா நடந்தால், 7 வருட கேது தசா நடந்தால், லக்னத்திற்கு 2ல் ராகுவோ, கேதுவோ இருந்து, லக்னத்திற்கு 8ல் கேதுவோ, ராகுவோ இருந்தால், ராகு புத்தி, கேது புத்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், இருபாலருக்கும் திருமணத்தடை இருந்தால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ, தெரியாமலோ பாம்பைக் கொன்றிருந்தால், கடன் தொல்லைகள் இருந்தால் இத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்.

🅱 நேர்த்திக்கடன்:🅱

👉🏽 சுவாமிக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

🅱 தலபெருமை:🅱

🍁 சிவனின் சாபத்தால் விஷத்தை இழந்த ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் பெற்றதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும்.

🍁 ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் கோயிலில் பாம்பு நடமாட்டம் இருக்கும் என்றும் கூறுவர். இவைகள் அந்த நேரத்தில் இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

🍁 இந்த கோயில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற தலம். எனவே இத்தலம் சர்வ தோஷ பரிகார தலம் என புராணங்கள் கூறுகின்றன.

🍁 ஆதிசேஷனுக்கு இங்கு உற்சவர் விக்ரகம் உள்ளது.

🍁 இந்தக் கோயிலில் மொத்தம் 15 கல்வெட்டுகள் உள்ளன. அதில் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டும் ஒன்று. அவரின் காலம் கி.பி.1178 - 1218 என்று இருப்பதால், இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்தது என்று அறிய முடிகிறது. ஆலய அமைப்பு கிழக்கு நோக்கி உள்ளது.

🅱 கோவில் அமைப்பு :🅱

🍁 திருபாம்புரம் கோயில் கம்பீரமான மூன்று நிலைகளை உடைய இராசகோபுரத்தை கொண்டுள்ளது.

🍁 இராசகோபுரத்திற்கு எதிரே ஆதிஷ தீர்த்தம் உள்ளது.

🌺 உள்ளே கொடி மரத்து விநாயகர் கொடி மரத்தின்கீழ் இருந்தபடி கிழக்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறார்.

🍁 கொடி மரத்தோடு பலிபீடமும் நந்தியெம்பெருமானும் காட்சி தருகின்றனர் (கொடிமரம் கால போக்கில் அழிந்து விட்டது).

🌺  இரண்டு பிரகாரங்களை தன்னகத்தே அமையப்பெற்றுள்ளது.

🍁 கோயிலின் தென்புற வளாகத்தில் திருமலை ஈசுவரர் எனப்படும் மாடக்கோயில் காட்சி தருகிறது.

🌺 மலை ஈசுவரர் கோயிலில் படிகக்கட்டுகள் உள்ளன.

🍁 இதில் ஏறி பாம்புரநாதர் கருவறை விமானத்தில் உள்ள சட்டைநதர் சன்னதிக்கு வரலாம்.

🍁 மேற்கு பிரகாரத்தின் கன்னிமூலையில் இராசராச விநாயகரும் இதையடுத்து வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகரும் காட்சியளிக்கின்றனர்.

🍁 அம்மன் வண்டுசேர் குழலி கிழக்கு வாயிலை கொண்டுள்ளார்.  அம்மன் மாமலையாட்டி சதுர்புஜத்துடன் தாமரை, உருத்திராக்கா மாலை, அபய, வரத ஹ்ஸ்தங்களுடன் அருள்பாலிக்கிறார். அம்மை மாமலையாட்டியின் (வண்டுசேர் குழலி) சன்னதி இறைவனின் சன்னதிக்கு இடப்புறமாக வடக்கு பிரகாரத்தில் அமைந்துள்ளது.

🌺 கிழக்கில் பைரவர் , சூரியர் விஷ்ணு, பிரம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிசேடன், இராகுகேது, நாயன்மார் நால்வர்,ஆகியோர் காட்சி தருகின்றனர்.

🍁 பாம்புசேரர் கோயில் கருவறை அர்த்தமண்டபம் மகாமண்டபம் முகமண்டபம் என அமைந்துள்ளது.

🍁 மகாமண்டபத்தில் உற்சவதிருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன.

🌺 சோமஸ்கந்தர், நடராசர,் வள்ளி தெய்வயானையுடன் முருகர் போன்றோர் வீற்றிக்கிரார்கள்.

🍁 இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.

🌺  இறைவன் சன்னதி கருவறையில் பாம்புரேசுவரர் இலிங்க வடிவாய் எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேடன் (உற்சவர்) ஈசனை தொழுதவண்ணம் கருவறையில் எழுந்தருளியுள்ளார்.  இக்கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது.

🌷 சேடபுரீஸ்வரர் கோயில் கருவறை அதிட்டனத்தில் யாளிவரிசை காணப்படுகிறது.

🔵 அர்த்தமண்டபத்தில் வடக்குக் கோஷ்டத்தில் புதிதாகத் துர்க்கை ஸ்தாபிக்கபட்டுள்ளாள்.

⚜ இராகுவும் கேதுவும் திருக்கோயிலின் ஈசானிய மூலையில் ஏகசரிரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளர்கள்.

🦆 வட நாட்டு மன்னன் சுனீதனுக்கு வலிப்பு நோய் வந்து வாட்டியது. வசிஷ்ட முனிவரின் கூற்றுப்படி (மாயவரம்) மயிலாடுதுறை காவிரியில் நீராடி, பின்னர் பாம்புரம் வந்து தீர்த்தத்தில் மூழ்கிக் கரையேற அவன் நோய் நீங்கியது. அதனால் இந்தத் தலத்தில் அந்த மன்னன் ஓராண்டு தங்கி, நிருத்த மண்டபம், அம்மன் கோயில் திருப்பணி, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றைக் கட்டினான் என்று கல்வெட்டு கூறுகிறது.

🌤 அதே போல் கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் செய்த வினையால், வெண்குஷ்டம் என்னும் நோய் பீடித்து உடல் வெண்ணிறமாகித் தளர்ந்தான். இவனும் வசிஷ்டர் கூறியபடி பாம்புரம் வந்து தீர்த்தத்தில் மூழ்கி, ஈசனை வணங்கி பூஜை செய்ய, அவன் நோய் நீங்கியது. அதனால் மகிழ்ந்து மூன்று ஆண் டுகள் இங்கே தங்கி உயர்ந்த கோபுரங்கள், மண்டபங்கள், படித் துறைகள், நந்தவனம், கோயில் வீதி என நற்காரியங்கள் செய்தான்.

🅱 ராகு, கேது சன்னதி:🅱

💧 பிற கோயில்களில் இருப்பதைப் போல் ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி அருள்பெற்றார்கள். எனவே இத்தலத்து சிவனையும் அம்மனையும் நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

🅱 ராகு, கேது என்னும் கிரகங்களின் வாழ்க்கை வரலாறு: 🅱

🔥 ஆசையில்லாமல் வாழ்க்கையில்லை; அதே நேரம், அதிக ஆசை வாழ்க்கையை அழித்து விடும். ராகு, கேது என்னும் கிரகங்களின் வாழ்க்கை வரலாறு இதை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

🔥 தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த
மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழி வகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள்.

🔥 திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்து கொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள்.

🔥 அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்பதாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப்பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும் போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக் கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது. அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு.

🌻 பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.

🔵 அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டுமென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களையும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான்.

🔥 இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சக்கரத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.

🥀 யார் இந்த சொர்ணபானு ? 🥀

🌷 சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன் தான் இந்த சொர்ணபானு.

💧 துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான்.

🦆 அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம்.

🦆 இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.

💥 இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். மேலும் தினமும் ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி நேரம்) வீதம் சூரியனின் பணியையும், சந்திரனின் பணியையும் செய்ய அனுமதித்தார். இந்த காலமே ராகு மற்றும் எமகண்டம் எனப்படுகிறது..

🅱 தல வரலாறு:🅱

🍄 ஒரு முறை விநாயகர், திருக்கயிலாயத்தில் வீற்றிருக்கும் சர்வேஸ்வரை தரிசனம் செய்வதற்காகச் சென்றார். அங்கு தியான நிலையில் இருந்த, தன் தந்தையான ஈசனை வணங்கினார்.

🌸 அப்போது சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பானது, விநாயகப்பெருமான் தன்னையும் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது.

💐 உலகின் இயக்கங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு, ஒவ்வொரு உயிரின் செயல்களையும் கண்காணித்து வரும் சிவபெருமானுக்கு, தன் கழுத்தில் இருக்கும் நாகத்தின் எண்ணத்தை கணிக்க முடியாமல் போய்விடுமா என்ன?.

🔵  நாகத்தின் எண்ணத்தை அறிந்த ஈசன், நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்கும்படி சாபமிட்டார்.
இதனால் உலகில் உள்ள அனைத்து நாகங்களும் தங்கள் வலிமையை இழந்தன.

💧 அதன் காரணமாக உலக உயிர்கள் பலவற்றாலும், நாகங்களுக்கு துன்பங்கள் நேர்ந்தன. இதையடுத்து அஷ்ட மகா நாகங்களும், ராகு, கேதுவும் தங்கள் இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக, மற்றவர்களையும் தண்டிக்க வேண்டாம் என்றும், தவறு செய்த பாம்பையும் மன்னிக்கும் படியும் அனைவரும் ஈசனை வேண்டி நின்றனர்.

🌤 ‘மகா சிவராத்திரி அன்று நாகங்களின் தலைவன் ஆதிசேஷன் தலைமையில் அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடகன், சங்கபாலன், குலிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய நாகங்கள் திருப்பாம்புரம் சென்று என்னை தரிசித்து வேண்டினால் சாபவிமோசனம் பெறலாம்’ என்று சிவபெருமான் வழிகாட்டி அருளினார்.

🐚 அதன்படியே ஆதிசேஷன் தலைமையில் அஷ்டநாகங்களும் திருப்பாம்புரம் சென்று ஈசனை வழிபட்டு தங்கள் சாபம் நீங்கப்பெற்றனர் என்று தல வரலாறு கூறுகிறது.

⚜ இத்தலத்திற்கு மற்றொரு தல வரலாறும் கூறப்படுகிறது.
(அதனையும் இங்கே பார்க்கலாம்.) ⚜

🌤 முன்னொரு காலத்தில் வாயு பகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டது.

🌤 இதனால் வாயு பகவான் தன் வலிமையால், பெரிய பெரிய மலைகளை எல்லாம் புரட்டிப் போட்டது.

🌤 ஆதிசேஷனோ அந்த மலைகளை தன் வலிமையால் தடுத்து நிறுத்தியது.
இருவரும் சமபலத்துடன் இருந்த காரணத்தால், வெற்றித் தோல்வி யாருக்கு என்பதை கணிக்க முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயு பகவான், ஏனைய உயிர்களுக்கு வழங்கும் பிராணவாயுவை நிறுத்தினார். இதனால் உயிரினங்கள் சோர்ந்து, மடியும் நிலை ஏற்பட்டது.

🌤 இதையடுத்து தேவர்களின் வேண்டுகோள் படி, ஆதிசேஷன் போரில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. மேலும் உலக உயிர்கள் துன்பப்பட தானும் ஒரு காரணமாக இருந்ததால், திருப்பாம்புரம் சென்ற ஆதிசேஷன், அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து தன்னுடைய தவறை பொருத்தருளும் படி இறைவனை வேண்டியது.

🥀 இவ்வாறு மற்றொரு தலவரலாறு கதை கூறுகிறது.  🥀

🎭  இத்தலத்தில் வீற்றிருக்கும் இறைவன் சேஷபுரீஸ்வரர் என்றும் பாம்புரேஸ்வரர் என்றும் அழைக்க படுகிறார். அம்பாள் பிரமராம்பிகை என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

🅱 சிறப்பம்சம்:🅱

🎥 அதிசயத்தின் அடிப்படையில்:

🦋 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

🦋  நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

🤹🏼‍♂ குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன், திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது தலமகாத்மியம்.

🤹🏼‍♂ சிவராத்திரி அன்று இரவில், ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும்.

🤹🏼‍♂ சிவபெருமானின் சாபத்தால் நாகங்கள் வலிமையை இழந்ததால், ஆதிசேஷன் இத்தலத்தில் வழிபட்டு மீண்டும் தன்னுடைய இனத்தின் சக்தியை திரும்பப் பெற்றுக்கொடுத்தார். எனவே இந்த தலத்திற்கு வந்து வழிபடுபவர்கள் தாங்கள் இழந்ததை மீண்டும் பெறும் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

🤹🏼‍♂ அடிக்கடி கனவில் பாம்பு வந்தால், தெரிந்தோ தெரியாமலோ பாம்பை கொன்றிருந்தால், கடன் தொல்லைகள் இருந்தால் திருப்பாம்புரம் தலத்திற்கு வந்து பரிகாரம் செய்து ஈசனை வழிபட்டு செல்வது இந்த துன்பங்களில் இருந்து காத்தருளும்.

🤹🏼‍♂ திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்துக்கான இப்பதிகம், முதலாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓதவல்லவர், புகழும் அழகும் மிகுந்தவராய், செல்வத்தால் சிறந்து வாழ்ந்து முடிவில் சிவனடியை அடைவர் என்று தனது பதிகத்தில் கடைசிப் பாடலில் சம்பந்தர் குறிப்பிடுகிறார்.

🅱 இருப்பிடம்:🅱

🚙  மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது.

🚙 கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

தொலைபேசி எண் :  091- 435 246 9555, 09943848107, 94439 43665, 94430 47302.

❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃ ❃
🌿 தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்🌿

No comments:

Post a Comment