Sunday 16 July 2017

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை


*வினையை நீக்கும் மலை உருவில் அருளும் சிவன் ; திருஞானசம்பந்தர் தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் இத்தல இறைவ னை குறிப்பிட்டுள்ள மிக மிக அற்புதமான நினைக்க முக்தி தரும் சிவதலம்..*

🔵🔵⚜ *BRS*🔵🔵🔵

மூலவர் :  *அண்ணாமலையார்,  அருணாச்சலேசுவரர்*

அம்மன்/தாயார் :  *அபித குஜாம்பாள், உண்ணாமுலையாள்*

தல விருட்சம் :  *மகிழமரம்* (மகிழ மரத்தடியில் இருந்து பார்த்தால் நவ கோபுர தரிசனம் கிட்டும்.)

தீர்த்தம் :  *பிரம்மதீர்த்தம், சிவகங்கை*

ஆகமம்/பூஜை : * காரண, காமீகம்*

பழமை :  *1000-2000 வருடங்களுக்கு முன்*

புராண பெயர் :  *திருண்ணாமலை*

ஊர் :  *திருவண்ணாமலை*

பாடியவர்கள்:  *அப்பர்,  திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்*

🅱 தேவாரப்பதிகம்:🅱

*உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.* -  திருஞானசம்பந்தர்

🌱 *தேவாரப்பதிகம் பெற்ற நடுநாட்டு தலங்களில் 22வது தலம்..* 🌱

🅱 திருவிழாக்கள் :🅱

🌻 *கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் கார்த்திகை தீபம் 10 நாட்கள் திருவிழா, மாசி மகா சிவராத்திரி*

🌻 *தை மாதம் மாட்டுப்பொங்கல் திருவூடல் உற்சவம் சுவாமி ஊஞ்சல் ஆடும் உற்சவம்.*

 🌻 *மாதா மாதம் இத்தலத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும்.*

🌻 *இங்கு ஆடிப்பூரம் அன்று தீ மிதி திருவிழா அம்மன் சன்னதி முன்பாக நடக்கும் இது போல் வேறு எந்த சிவ தலத்திலும் தீ மிதி திருவிழா நடப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.*

🌻 *தினசரி 6 கால பூஜை.*

🌻 *மாசி மகத்தன்று பள்ளி கொண்டாபட்டு என்ற ஊருக்கு சுவாமி சென்று ஆற்றில் தீர்த்தவாரி செய்து வருவார்.*(சிவபெருமானே வள்ளாள மகராஜனுக்கு பிள்ளையாக பிறந்து அவர் இறந்தவுடன் ஈமக்கிரியை செய்த வரலாற்றைக் குறிப்பது இத்திருவிழா)

🌻 *தை மாதம் 5 ந் தேதி சுவாமி சுற்றுவட்டாரக் கோயில்களில் காட்சி தருவார். அதன்படி தை மாதம் 5ந்தேதி மணலூர் பேட் என்ற ஊருக்கு சென்று சுவாமி காட்சி தருவார்.*

🌻 *தை மாதம் ரதசப்தமி அன்று கலசப்பாக்கம் என்ற ஊரில் அண்ணாமலையார் காட்சி தருவார்.*

🌻 *பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம் 6 நாட்கள்.*

🌻 *வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவது திருவிழா இத்தலத்தில் நடந்த வண்ணமே இருக்கும்.*

🌻 *ஒவ்வொரு மாதமும் பிரதோசம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.*

🌻 *தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்களில் விசேச பூஜைகள்.*

🅱 தல சிறப்பு:🅱

🎭 *மூலவர்  - சுயம்பு லிங்கம் அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.*

🎭 *இறைவன் அருணாச்சல சிவனாகவும், சோணாத்ரி நாதனாகவும் , அருணகிரி யோகியாகவும் விளங்குகிறார்.*

🎭 *இக்கிரி அருணாசலம், அண்ணாமலை, சோணாச்சலம், அருணகிரி என வழங்கப்படுகிறது.*

🎭 *திருவண்ணாமலைக்குச் சென்று இறைவனை ரிசிக்கக் கூட வேண்டாம், நினைத்தாலே முக்தி தருவது என்ற புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில்.*

🎭 *கயிலாயத்திலும் மேருவிலும் அவர் இருந்தாலும் இவ்விடத்தில் அவர் மலையாகவே இருப்பதால் அருணாசலம் கைலாயத்தையும், மேருவையும் விட உயர்ந்தது.*

🎭 *பல பண்டிகைகள் உருவாக காரணமாக இருந்தது அண்ணாமலை.*

  *லிங்கமே மலையாக அமைந்த மலை*

🎭 *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம்.*

  *பஞ்ச பூத தலங்களில் அக்னித்தலமாக விளங்குவது திருவண்ணாமலை. அம்மலையின் மூன்று யோசனை தூரத்தில் (சுமார் முப்பது மைல்) உள்ள அனைவருக்கும் ஆசரு தீக்ஷையின்றி சாயுஜ்யம் பயக்கும் என்பது சிவன் வாக்கு..*

🎭 *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம்.*

 🎭 *நான் என்ற அகந்தை அழிந்த தலம்.*

🎭 *உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம்.*

🎭 *பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். *

🎭 *அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம்.*

  *எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம்.*

  *ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த தற்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த மலை.*

🎭 *சேஷாத்திரி சுவாமிகள், ரமண மக ரிஷி, விசிறி சாமியார் போன்ற எண்ணற்ற ஞானிகள் வாழ்ந்து முக்தியடைந்த தலம்.*

🎭 *ஆறு ஆதாரத் தலங்களில் திருவண்ணாமலை மணிபூரகத் தலமாக விளங்குகிறது. மனித உடலைப் பொறுத்த வரை மணிபூரகம் என்பது வயிற்றைக் குறிக்கும். வயிற்றுக்காகத்தான் இந்த உலகமே இயங்குகிறது. எனவே ஒட்டு மொத்த உலக இயக்கமும் அண்ணாமலையாருக்குள் அடக்கம் என்று சொல்லப்படுகிறது.*

🎭 *திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் இத்தலத்தில்தான்  பிறந்தன.*

🎭 *கிரிவலப் பாதையில் ஜோதி நந்தி உள்ளது. இந்த நந்தி முன் தீபம் ஏற்றி வலம் வந்து மலையை நோக்கி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்தில் கொண்டுள்ளனர்.*

🎭 *கிரிவலப் பாதையில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பார்த்தால், மலையானது, நந்தி ஒன்று படுத்து இருப்பது போன்ற தோற்றத்தில் காட்சித்தரும். அந்த இடத்தை "நந்திமுக தரிசனம்'' என்கிறார்கள்.*

🎭 *வினையை நீக்கும் மலை உருவில் விளங்குவதால் இம்மலைக்கு + ருணன் அதாவது வினையை நீக்குபவன் இங்கு அசலனாக விளங்குகிறான் என்று பொருள்.*

🎭 *தன்னைத்தானே உய்ய அண்ணாமலையாரே கிரிவலம் வந்து காமதகனம் செய்யும் ஒரு தலை சிறந்த சிவாலயம் திருவண்ணாமலையாகும். வருடத்திற்கு இருமுறை - ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின் மூன்றாம் நாளும், தைமாதம் மாட்டுப்பொங்கலன்றும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் கிரிவலம் வருவார்கள். அம்மனுடன் கொண்ட கோபத்தைத் தணித்த திரு ஊடல் உற்சவம் நிகழும் தலமிது.*

🎭 *மாசி மகா சிவராத்திரியில் இரண்டாம் காலம் லிங்கோத்பவராய் காட்சியளித்து அபிஷேகம் ஏற்கும் காட்சியை காணக் கண் கோடி வேண்டும்.*

🎭 *பாரிஜாத மலர் கொணர கிளி உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்த அருணகிரியாரின் பூதயுடல் சில சதிகாரர்களால் (சம்மந்தாண்டான்) எரியூட்டப்படுகின்றது, கிளிவடிவில் வந்து கந்தர் அநுபூதி பாடி, கிளிவடிவத்திலேயே முருகனால் ஆட்கொள்ளப் பட்ட தலம் திருவண்ணாமலை. இங்கு கிளி கோபுரம் மிகவும் பிரசித்தம்.*

🎭 *அருணையில் ஒரு நாள் உபவாசம் பிற தலங்களில் நூறு நாள் உபவாசத்திற்கு சமம்.*

🎭 *சோநாச்சலத்தை பக்தியுடன் பிரதட்சிணம் செய்பவன் சகல லோக நாயகனாகி மேலான பதவியை அடைகிறான்.*
🎭 *கார்த்திகை மாதம் பௌர்ணமியில் ஒரு சிறு தீபம் அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றினால் கொடிய பாவங்களிலிருந்து விடுபட்டு சிவபதம் அடையலாம்.*

🎭 *காசியில் கோடி பேருக்கு அன்னதானம் அளிப்பதும் அண்ணாமலையில் அந்தணன் ஒருவனுக்கு அன்னம் அளிப்பதற்கு சமமாகாது.*

🎭 *சாயங்காலத்தில் தீபம் பார்த்து வலம் வருபவர்களுக்கு ஒவ்வொரு அடிக்கும் ஒரு யாகம் செய்த பலன் உண்டாகும்.*

🎭 *அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும்.*

🎭 *விநாயகரின் ஆறுபடை வீடுகளில் இத்தலத்தில் கிளிக்கோபுரத்தின் கீழ் இடது பக்கம் உள்ள அல்லல் போக்கும் விநாயகர் சன்னதி விநாயகரின் முதல் படை வீடாகும்.*

🎭 *ஆடி மாதம் திருவாடிபூரத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தீ மிதித்தல் நடைபெறும். இதை வேறு எந்த சிவாலயத்திலும் பார்க்க இயலாது.*

🎭 *இத்தலத்தில் தான் முதல்முதலில் லிங்க வழிபாடு துவங்கியது. எனவே இதுவே மஹா சிவராத்திரியின் பிறப்பிடம்.*

🎭 *இங்கிருக்கும் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நவராத்திரி கடைசி நாள் அன்று மகிஷாசுரமர்தினி அலங்காரம் செய்வார்கள்.*

🎭 *இது எல்லாவற்றிற்கும் முத்தாய்பாய் கார்த்திகை தீப திருநாள் விளங்குகிறது. சுமார் ஆறு அடி உயர தாமிர கொப்பரையில் ஏற்றப்படும் மகாதீபம் மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டு மாலை ஆறு மணிக்கு ஏற்றப்படும். பத்து நாட்கள் திருவிழாவிற்கு மகுடமாக விளங்கும் இத்தீபம் ஒரு வாரம் வரை எரியும்.*

🎭 *சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233 வது தேவாரத்தலம் ஆகும்.*

🅱 நடை திறப்பு:🅱

🗝 *காலை 5மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.*🗝

🅱 பொது தகவல்:🅱

🌤 *சமயக்குரவர் நால்வரில் மூவரால் பாடல் பெற்ற தலமிது. சம்பந்தர், அப்பர், மணிவாசகர் இம் மூவராலும் பாடல் பெற்றது. சுந்தரர் பாடியதாகப் பாடல் இல்லை.*

🌤 *சுந்தரர் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருந்த போதிலும் நமக்கு கிடைக்கப் பெற்றவை சில நூறு பாடல்கள் மட்டுமே. அவர் திருவண்ணாமலைக்கு வந்ததற்கான குறிப்புகள் கிடைக்கவில்லையே தவிர பல தலங்களில் பாடிய பாடல்களில் அண்ணாமலையாரை குறித்து பாடியுள்ளார்.* திருபரங்குன்றத்தில் உள்ள இறைவனை பாடும் போது *" அண்ணாமலையேன் என்றீர்"* என்கிறார். அதே போல் துறையூர், ஸ்ரீவாஞ்சியம், திருவாரூர் ஆகி இடங்களில் பாடும் போது *" மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நன்னறியா ஆதி "* என்றும் *" பண்டை மால் பரமன் பிறந்தும், இடந்தும், அயர்ந்தும், கண்டிலராய் அவர்கள் கழல் காண்பதரிதாய பிரான்"* என்றும் அண்ணாமலையாரை நினைத்தே பாடியுள்ளார்.

*தென்னாத்தெனாத் தெத்தெனா என்றுபாடிச்
சில்பூதமும் நீருந் திசைதிசையன
பன்னான்மறை பாடுதிர் பாசூருளீர்
படம்பக்கங்கொட் டுந்திரு வொற்றியூரீர்
பண்ணார்மொழி யாளையொர் பங்குடையீர்
படுகாட்டகத் தென்றுமோர் பற்றொழியீர்
அண்ணாமலை யேன்என்றீர் ஆரூருளீர்
அடிகேள்உமக் காட்செய அஞ்சுதுமே.....*
இது திருவொற்றியூர், திருப்பாசூர், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் போன்ற தலங்களை திருப்பரங்குன்றத்திலிருந்தபடியே  படிய பாடல்.

🍁 *பன்னிரு திருமுறைகளில் பாடி திளைத்தவர்கள் :* 🍁

  ஞானசம்பந்தர் - தாம் பாடிய ஒவ்வொரு பதிகத்திலும் ஒன்பதாவது பாடலில் அண்ணாமலையாரைக் குறிப்பிடுகிறார்.

🎸 அப்பர் தாம் பாடிய திருவண்ணாமலை தேவாரப் பதிகங்கள் நான்கிலும், திருத்தாண்டக பண் இரண்டிலும் அண்ணாமலையாரை பாடியுள்ளார்.

🎸 சுந்தரமூர்த்தி நாயனார் - இவர் பல தலங்களில் பாடிய பதிகங்களில் அண்ணாமலையாரை நினைத்தே தொழுதுள்ளார்.

🎸 மாணிக்கவாசகர் - திருவாசகம் கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது பாடல்கள், மேலும் திருவம்மானை, மற்றும் திருவெம்பாவை ஆகிய நூல்கள்.

🎸 சேந்தனார்  எழுதிய திருப்பல்லாண்டு

  திருமாளிகை தேவர் எழுதிய திருவிசைப்பா

🎸 திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் இரண்டாவது தந்திரம், எட்டாவது அத்தியாயம்.

  நக்கீரர், கபிலர், நம்பியாண்டார் நம்பி, காரைக்கால் அம்மையார்.

🍁 *அத்வைத வேதாந்தத்தில் ஒவ்வொரு மறை இறுதியிலும் ஒவ்வொரு மகாவாக்கியம் உள்ளது.* 🍁

ரிக் வேதம் - பிரக்ஞானம் பிரமம் - தன் உணர்வான ஞானமே பிரமம்

யசுர் வேதம் - அஹம் பிரம்மாஸ்மி - நான் பிரமனாக இருக்கிறேன்

சாம வேதம் - தத்வமசி - அது நீயாக விளங்குகிறாய்

அதர்வண வேதம் - அயமாந்மா பிரமம்- என் ஆன்மாவே பிரமம்

*இந்த நான்கு வாக்கியங்களின் தாத்பர்ய தத்வமாக விளங்குவது அருணாசலம்.*

🌤 *அண்ணாமலையாரை சுற்றியுள்ள கிரிவல பாதை விக்கிரம பாண்டிய மன்னனால் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்டது.*

🌤 *வாயுலிங்கத்திற்கு அருகிலுள்ள இரண்டு மைல்கற்கள் மற்றும் நேர் அண்ணாமலையிலிருந்து சுமார் நூறு மீட்டர் தொலைவிலுள்ள சாலைக் கல் ஒன்றும் மீன் சின்னம் தாங்கியுள்ளது.*

🌤 *சூரிய லிங்கத்திற்கு அருகிலுள்ள பழநிஆண்டவர் கோவில் முன்னால் நின்று அண்ணாமலை, அருணாசலம் என்று அழைத்தால் எதிரொலிக்கும்.*

🌤 *துர்வாசர் ஆஸ்ரமத்திலிருந்து நேர் அண்ணாமலை வரை மலையில் நந்தி தரிசனம் காணலாம்.*

🌤 *அக்னி லிங்கத்திலிருந்து பார்த்தால் அண்ணாமலையார் சிகரம் மசூதி போல காட்சியளிக்கும்.*

🌤 *கந்தாஸ்ரமத்தில் சுனை வரும் இடத்திற்கு அருகே ஒரு பாறை கணபதி வடிவில் தோற்றமளிக்கிறது.*


🌤 *ஆதிசங்கரர் அண்ணாமலையார் மேல் அருணாச்சல அஷ்டகம், சந்னவதி, சஹஸ்ரநாமம் போன்றவற்றை இயற்றியுள்ளார். அவர் அண்ணாமலைக்கு வந்தால் அருணாச்சலத்தொடு ஒன்றிவிடுவோம் வினைபயன்படி தாம் மேற்கொண்டுள்ள செயல்களை செய்ய இயலாது என்று நினைத்து சம்பந்தர் போல அரையணி நல்லூரிலிருந்தே அண்ணாமலையாரை தரிசித்தார்.*

🌤 *அண்ணாமலையான், கண்ணாரமுதன், அதிருங்கழான், தியாகன், தேவராயன், கலியுகத்து மெய்யன், பரிமள வசந்தராஜன், அபிநய புஜங்கராஜன், வசந்தராயன், புழுகணி இறைவன், புழுகணிப் பிரதாபன், மலைமேல் மருந்தன், மன்மதநாதன், வசந்த விநோதன், வசந்தவிழாவழகன், திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், அண்ணாமலை ஆழ்வார், அண்ணாமலை உடையார், அண்ணாமலை நாட்டுடையார் என்பது திருவண்ணாமலையில் உறையும் பேராயிரம் கொண்ட எம்பெருமானின் சில திருநாமங்கள்.*

🌤 *உண்ணாமலை நாச்சியார், திருக்காமக்கோட்டம் உடைய தம்பிராட்டியார், உலகுடைய பெருமாள் நம்பிராட்டியார் என்பது அழகியின் ஆயிரம் நாமங்களில் சில...*

🅱 இக்கோயிலின் சிறப்பைப் பற்றிப் பாடியோரும் நூல்களும் : 🅱

🌱 *நமசிவாய சுவாமிகள் - சார பிரபந்தம்*

🌱 * திருச்சிற்றம்பல நாவலர் - அண்ணாமலையார் சதகம்*

🌱 *பல்லாவரம் (காஞ்சிபுரம்) சோணாசல பாரதியார் - அண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, திருவருணைக் கலிவெண்பா, சோணாசல சதகம்*

 🌱 *வடலூர் இராமலிங்கசுவாமிகள் - திருவண்ணாமலை திருவருட் பதிகம்*

🌱 *புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் - அருணாசலேஸ்வரர் பதிகம்*

🌱 *காஞ்சிபுரம் சபாபதி முதலியார்-அருணாசல பதிகம்*

🌱 *யாழ்ப்பாணம் - நல்லூர் தியாகராஜப் பிள்ளை - அண்ணாமலையார் வண்ணம்.*

🌱 இவையன்றி  - *உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேஸ்வரர் அக்ஷரமாலை, அண்ணாமலை பஞ்சரத்னம் அருணாசல நவமணி மாலை, அருணாசல அஷ்டகம், அருணைக் கலம்பகம், திருவருணை வெண்பா முதலிய நூல்களும் உள்ளன.*

🌤 *உலகம் தோன்றிய காலத்திலிருந்தே இம்மலை உள்ளதாம். கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும் , திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும் , துவாரயுகத்தில் பொன்மலையாகவும் இப்போது கலியுகத்தில் கல்மலையாகவும் உள்ளது.*

🅱 *பிரார்த்தனை:*🅱

🌹 இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும்.கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார்.

🌹 கல்யாண வரம் வேண்டுவோர் , குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர்., வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

🌹 உடல் ரீதியாக பலம் குன்றியவர்கள், பிணி கண்டவர்கள், பிரிந்து வாழும் தம்பதிகள், அண்ணன் தம்பிகள் பிரச்னைகள் என்று அனைத்து தரத்து பிரச்சனைகளையும் போக்கும் தலம்.

🌹 மேலும் இந்த ஈசனை வணங்குவோர்க்கு வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும். குறிப்பாக மன அமைதி வேண்டுவோர் இத்தலத்தல் லட்சக்கணக்கில் பிரார்த்தனை செய்கின்றனர்.இத்தலத்தில் ஈசனை வழிபட்டால் முக்தி கிடைக்கும்.

🅱 *நேர்த்திக்கடன்:*🅱

💥 அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்வோர் தங்கள் நேர்த்திகடனாக மொட்டை போட்டு முடிக் காணிக்கை செலுத்துகின்றனர்.

💥 குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி போடுகின்றனர். இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. தானியங்கள், (துலாபாரம்)எடைக்கு எடை நாணயம்,பழங்கள், காய்கனிகள், வெல்லம் ஆகியவையும் பக்தர்களால் நேர்த்திகடனாக தருகின்றனர்.

💥 சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்துகின்றனர். சுவாமிக்கு நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, மா பொடி, பால், தயிர்,பழ வகைகள், கரும்புச்சாறு, தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ,ஆகியவற்றால் அபிசேகம் செய்கிறார்கள்.

💥 உலர்ந்த தூய வஸ்திரம் சாத்துகிறார்கள்.நெய்தீபம் ஏற்றலாம். சுவாமிக்கு வேட்டியும்,அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள்.

💥 சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திகடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள்.

💥 பிரசாதம் செய்து சுவாமிக்கு படைத்துவிட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள் தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து தங்கள் நேர்த்திகடனை செலுத்துகிறார்கள்.

🅱 *தலபெருமை:*🅱

🔥 கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன.

🔥 கோபுரங்கள் மலிந்த கோயில் இது.


🔥 இக்கோயிலில் உள்ளே ஆறு பிராகாரங்கள் உள்ளன.

🔥 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம் (பால ரமணர் தவம் செய்த இடம்), 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்த கோயில்.

🔥 *கோயிலின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன.*

🅱 *பூஜை விவரங்கள்:* 🅱

*காலை 5.30 மணி  - உஷக் கால பூஜை*

*காலை 8.00 மணி - காலசந்தி பூஜை*

*காலை 11.30 மணி - உச்சிக்கால பூஜை*

*மாலை 5.30 மணி - சாயரட்சை பூஜை*

*இரவு 7.30 மணி - இரண்டாம் கால பூஜை*

*இரவு 9.00 மணி - அர்த்தஜாம பூஜை*

🍁 கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்... 🍁

🔥 *திருவண்ணாமலைக்குச் சென்று இறைவனை தரிசிக்கக் கூட வேண்டாம், நினைத்தாலே முக்தி தருவது என்ற புகழ்கொண்டது திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயில்.*

🔥 *அவ்வளவு சக்தி கொண்ட திருவண்ணாமலையில் உறையும் அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி அமையப்பெற்றுள்ள கிரி எனப்படும் மலையை வலம் வருவதால் பல்வேறு நன்மைகளும், பலன்களும், வீடுபேறும் கிடைக்கப் பெறுவோம் என்பதில் ஐயமேதும் இல்லை.*

🔥 *அதிலும் பௌர்ணமி தினத்தன்று மேற்கொள்ளப்படும் கிரிவலத்திற்கு அத்தனை சிறப்பு உள்ளது என்று முற்றம் உணர்ந்த ஞானிகளும், யோகிகளும் தெரிவிக்கின்றனர்.*

🔥 *ஊழ்வினை நீக்கும் தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை கிரிவலமாக வந்து வணங்கினால் மட்டுமே ஊழ்வினை தீரும் என்பது ஐதீகம்.*

🔥 *"அருணாசலத்தை வலம் வருகிறேன்"* என்று சொன்னாலே பாவம் தீரும். *"வலம் வர வேண்டும்"*  என்று நினைத்த மாத்திரத்திலேயே பிரும்மஹத்திப் பாவமும் நீங்கிப் போகும். மது, மாது, சூது, கொலை, களவு என்ற பாவங்கள் அனைத்தும் கிரிவலம் வருவதால் நீங்கும்.

 🍁 கிரிவலம் பற்றி அருணாசல புராணம் : 🍁

🔥 *அருணாசலத்தை வலம்வர வேண்டும் என்ற நினைவோடு ஓரடி எடுத்து வைப்பவருக்கு யாகம் செய்த பலன் கிடைக்கும். அது மட்டுமா ? இந்தப் பூமியையே பிரதட்சணம் செய்த பலனும் கிடைக்கும்.*

🔥 *இரண்டடியில் ராஜசூயயாக பலன் உண்டு. சர்வதீர்த்தமாடிய பலனும் வந்து சேரும்.*

🔥 *மூன்றடியில் தான பலன், நான்கடியில் அஷ்டாங்க யோக பலன் உண்டாகும்.*

🔥 *வலமாக வைத்த ஓரடிக்கு முழு பலன்களும் சித்திக்கும். இரண்டடிக்கு லிங்கப் பிரதிஷ்டை பலன் வாய்க்கும். மூன்றடிக்கு கோயில் கட்டிய பேறு கிடைக்கும்.*

🔥 *அருணாசலத்தை வலமாக சிறிது தூரம் நடந்தாலே வெள்ளியங்கிரி வெகு சமீபத்தில் இருக்கும்.*

🔥 *மலையைச் சுற்றி நடந்து சிவந்த பாதங்களைக் கண்டால் நாலாவித பாவங்களும் காணாதொழியும். பாதத்துளிகள் நரகத்தையும் பரிசுத்தப்படுத்தும். கிரிவலம் வருவோரின் காலடித் தூசுபட்ட மனித தேகத்தின் பிறவிப் பிணி நீங்கும் என கிரிவலத்தின் மகிமையை பலவாறு கூறுகிறது அருணாச்சல புராணம்.*

🔥 *முனிவர்களும் ஞானிகளும் சித்தர்களும் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பின் போதும் பிரதோச காலத்திலும் மலை வலம் வந்தார்களாம். எனவே அந்த நாளில் கிரிவலம் சுற்றுவது நல்லது.*

🔥 *சந்திரன் பவுர்ணமி அன்று பூமியில் சூரியனிடமிருந்து சக்திகளை அதிகஅளவில் பெற்று பூர்ண நிலவாக சந்திரன் நிறைந்த உயிர்சக்திகளை தருகிறார்.இதனால் பவுர்ணமி அன்று கிரிவலம் வருதல் நல்லது.*

🔥 *இந்த கோயில் அக்னி கோயில். அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. இந்த கோயிலில் செவ்வாய் கிழமை அன்று மட்டும் சிறப்பு பூஜைகள் நடக்கும்.அன்றும் கிரிவலம் வரலாம்.*

👉🏽 ஞாயிறு சிவபதவிகள் கிடைக்கும்.

👉🏽 திங்கள் இந்திர பதவி கிடைக்கும் .

👉🏽 செவ்வாய் கடன் வறுமை நீங்கும், தொடர்ந்து வரும் ஏழு பிறப்புகளையும் நீக்கி சுபிட்சம் பெறலாம்.

👉🏽 புதன் கலைகளில் தேர்ச்சியும் முக்தியும் பெறலாம்.

👉🏽 வியாழன் ஞானிகளுக்கு ஒப்பான நிலையை அடையலாம் .

👉🏽 வெள்ளி விஷ்ணு பதம் அடையலாம் .

👉🏽 சனி நவகிரகங்களை வழிபட்டதன் பயன் கிடைக்கும்.

👉🏽 அம்மாவாசை மனதில் உள்ள கவலைகள் போகும். மனநிம்மதி கிடைக்கும்.

👉🏽 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை..

🔥 *கிரிவலம் வருவது அக்னிமலையாக விளங்கும் சிவனாரையே வலம் வந்து வழிபடுவதாகும். அதுமட்டுமல்ல, கிரிவலப் பாதையில் நாம் ஐயனின் எட்டு திருவுருவங்களையும் தரிசிக்கலாம். எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே ஐயன் எட்டு லிங்கத் திருமேனிகளாக திருக்காட்சி தருகிறார்.*

🍁 *அஷ்டலிங்கங்களையும் வழிபடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய புண்ணிய பலன்கள்...* 🍁

🅱 *இந்திரலிங்கம்:* 🅱

🔥 கிரிவலப்பாதையில் முதலில் நாம் தரிசிப்பது இந்திரலிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அதிபதி சூரியனும் சுக்கிரனும் ஆவர். இந்திரலிங்கத்தை தரிசித்து வழிபட்டால், லக்ஷ்மி கடாட்சமும், புகழுடன் கூடிய வாழ்க்கையும் அமையும்.

🅱 *அக்னி லிங்கம்:* 🅱

🔥 திருவண்ணாமலை - செங்கம் சாலையில் தாமரைக் குளத்துக்கு அருகில் தென் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது அக்னி லிங்கம். இந்த திசைக்கு அதிபதி சந்திரன். அக்னி லிங்கத்தை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை, மனச் சஞ்சலம் போன்றவைகள் நீங்குவதுடன் நோயற்ற வாழ்க்கையும் அமையும்.

🅱 *யமலிங்கம்:* 🅱

🔥 கிரிவலப் பாதையில் 3-வதாக நாம் தரிசிப்பது யமலிங்கம். கோயிலுக்கு அருகிலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. யமலிங்கம் அமைந்திருக்கும் தென் திசைக்கு அதிபதி செவ்வாய். இங்கு ஐயனை தரிசித்து வழிபட்டால், கடன் தொல்லைகள் விலகும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.

🅱 *நிருதி லிங்கம்:* 🅱

🔥 கிரிவலப் பாதையில் 4-வதாக நாம் தரிசிப்பது நிருதி லிங்கம். நிருதிலிங்கத்துக்கு முன்பு உள்ள நந்திதேவருக்கு அருகில் இருந்து மலையைப் பார்க்கும்போது, மலையில் சுயம்புவாகத் தோன்றியதுபோல் அமைந்திருக்கும் நந்தியை தரிசிக்கலாம். நிருதிலிங்கம் அமைந்திருக்கும் திசை நிருதி திசை எனப்படும் தென் மேற்கு திசையாகும். இந்த திசைக்கு அதிபதி ராகு. நிருதிலிங்கத்தை வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

🅱 *வருண லிங்கம்:* 🅱

🔥 மேற்கு திசையில் அமைந்திருப்பது வருணலிங்கம். கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளது வருண தீர்த்தம். இந்த திசையின் அதிபதி சனி. வருணலிங்கத்தை வழிபட்டால் பொருளும் புகழும் நிறைந்த வாழ்க்கை உண்டாகும். மேலும் தீராத நோய்களில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.

🅱 *வாயு லிங்கம்:* 🅱

🔥 வாயுமூலை எனப்படும் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதால், வாயுலிங்கம் என திருநாமம் கொண்டுள்ளார் ஐயன். இந்த திசைக்கு அதிபதி கேது. வாயுலிங்கத்தை தரிசித்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பொறாமை, கண் திருஷ்டி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

🅱 *குபேரலிங்கம்:* 🅱

🔥 குபேரனுக்கு உரிய வடக்கு திசையில் அமைந்திருப்பதால் சிவனார் குபேரலிங்கம் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இந்த திசைக்கு அதிபதி குரு. குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல்வம் பெருகும். மனதில் சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.

🅱 *ஈசான்ய லிங்கம்:* 🅱

🔥 வடகிழக்கு திசையில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தம் ஈசான்ய லிங்கம் ஆகும். இந்தக் கோயில் தரைமட்டத்தில் இருந்து சற்று கீழே அமைந்திருக்கும். இந்த திசையின் அதிபதி புதன். இங்கு ஐயனை வழிபட்டால், மனம் ஒருமைப்படும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

🅱 *கார்த்திகை தீபத் திருநாள்:* 🅱

🍁 சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மா இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, *""ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்''*  தத்துவம் என்கிறார்கள்.

🍁 *பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும். பின்பு இந்த தீபத்தை மலைக்கு கொண்டு சென்றுவிடுவர். மாலையில் கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் வருவார்.அவர் முன்னால் அகண்ட தீபம் ஏற்றியதும், மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில் அண்ணாமலையார் ஜோதி வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.*

🔥 *அன்னை கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற அந்த நன்னாள் தான் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது .*

 “சீல முனிவோர்கள் செறியு மலை..
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை..
ஞான நெறி காட்டு மலை..
ஞான முனிவோர்கள் நித்தம் நாடு மலை../
அஞ்ஞானக் கங்குல் அகற்று மலை –  அன்பருக்கு
மெய்ஞானச் சோதி விளக்கு மலை
ஞானத் தபோதனரை வா என்று அழைக்கு மலை
அண்ணாமலை” -  *என்றெல்லாம் போற்றப்படும் திருத்தலம் திருவண்ணாமலை எனப்படும் அருணாசலம்.*

🍁 *அருணாசலம் என்றால் அருணம் + அசலம்அருணம் என்றால் நெருப்பு. அசலம் என்றால் மலை. இது நெருப்பு மலை. அண்ணாமலை என்றால் அண்ண முடியாத மலை என்பது பொருளாகும். அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்பது பொருள். ஆக யாவரும் எளிதாய் நெருங்க இயலாத பரம் பொருளே இங்கு அண்ணாமலையாய், அருணாசலமாய் வீற்றிருக்கிறார்.*

🍁 *இம்மலையின் மிக முக்கிய சிறப்பு இங்கு கொண்டாடப்படும் கார்த்திகை தீபத் திருவிழா.*

🔥 *அன்னை கார்த்திகை மாதத்தில் கார்த்திகை விரதம் இருந்து, கார்த்திகை நட்சத்திரத்தில் ஈசனின் இடப்பாகம் பெற்ற அந்த நன்னாள் தான் கார்த்திகை தீபப் பெருநாளாகக் கொண்டாடப்படுகிறது .*

*”எனக்கு நீங்கள் ஒளியுருவாகக் காட்சி தந்து ஆட்கொண்டது போல், வருடா வருடம் இது போல் ஒளியுருவாகத் தோன்றி உலகினரை உய்விக்க வேண்டும்”* என உமை வேண்டிக் கொள்ள, ஈசனும் சம்மதித்தார். அதுவே தீபத் திருநாளாக அன்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

*கார்த்திகைக்குக் கார்த்திகை நாள் ஒரு ஜோதி*

*மலை நுனியில் காட்டா நிற்போம்*

*வாய்த்து வந்த சுடர்காணில்*

*பசிபிணி இல்லாது உலகில் மன்னி வாழ்வார்*

*பார்த்தவர்க்கும் அருந்தவர்க்கும் இடையூறு*

*தவிரும் இது பணிந்தோர் கண்டோர்*

*கோத்திரத்தில் இருபத்துஓர் தலைமுறைக்கு*

*முத்திவரம் கொடுப்போம் என்றார்* – என இதை அருணாசல புராணம் சுட்டுகிறது.

 *“புத்திதரும் தீபம் நல்லபுத்திரசம் பத்துமுண்டாம்*

*சித்திதரும் தீபம் சிவதீபம்சக்திக்கு*

*உயிராகும் சோணமலை ஓங்கிவளர் ஞானப்*

*பயிராகும் கார்த்திகைத் தீபம்* – என்கிறது தீப வெண்பா.

🔥 *‘குன்றத்து உச்சிச் சுடர்’*  என்று சீவக சிந்தாமணி இதன் சிறப்பை விரித்துரைக்கிறது.

  *அருணாசலத்தை கார்த்திகை தீபத்தின் போது வலம் வருவது மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லதாகும். அருணாசலத்தில் தீபம் ஏற்றும் போது அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து விட்டுச் செய்யப்படும் கிரிவலத்தினால் அதுவரை செய்த பாபங்கள் நீங்குவதுடன் மகத்தான புண்ணிய பலனும் கிடைக்கும்.*

🔥 *கிரிவலத்தினை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து செய்வது அவன் அதுவரை செய்த அனைத்து பாவங்களையும் நீக்கி அவனை பரிசுத்தனாக்க வல்லது. பதினோரு நாட்கள் தொடர்ந்து செய்யும் கிரிவலம் அவனுடைய வினைகளை நீக்கி, ஸகல ஸம்பத்துக்களையும் கொடுக்கும்.*

🔥 *கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செய்பவனோ ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலனை அடைகிறான். தீபத்தன்று சிவலிங்கத்தின் முன்னால் நெய் விளக்கு ஏற்றுபவன் வாழ்க்கை ஒளிரும். தீவினைகள் அகலும். அந்த தீபத்தை வலம் வருவனின் ஒவ்வொரு அடிக்கும் அஸ்வமேத யாகம் செய்த பலனுண்டு.*

🔥 *சகல தானம் கொடுப்பதால் ஒருவனுக்கு என்ன பலன் வருமோ, சகல தீர்த்தங்களில் நீராடினால் ஒருவனுக்கு என்ன பலன் வருமோ அது, கார்த்திகை தீபத்தை தரிசனம் செய்தாலே கிடைக்கும். கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நஷத்திரத்தில் சோணாசல ஷேத்திரத்தில் தீபமேற்றினால் சந்தான ப்ராப்தி உண்டாகும்.* – என்றெல்லாம் அருணாசலத் தலவரலாறு மிகச் சிறப்பாக கார்த்திகை தீபமன்று கிரிவலம் வருவதன் சிறப்பை எடுத்துரைக்கின்றது.

🅱 *அர்த்தநாரீஸ்வரர் :* 🅱

🎭 ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. ஜீவராசிகள் இருளில் இன்னல்கள் அடைந்தன. இந்த பாவம் தீர்க்க வேண்டி உமாதேவியார் காஞ்சி மாநகரத்தில் மணலை லிங்கமாக அமைத்து பூஜை செய்துவரும் நாளில் சிவபெருமான் îதான்றி திருவண்ணாமலை சென்று தவமியற்றி தமது இடப்பாகம் பெறுமாறு அருளிச் செய்தார்.

🎭 கம்பை ஆற்றைவிட்டு விட்டு, அண்ணாமலையை நோக்கித் தனது பயணத்தைத் துவக்கினாள் தேவி. வாழைப்பந்தல் என்று தற்போது அழைக்கப்படும் இடத்தை அடைந்த அன்னை, கமண்டல நதி சங்கமிக்கும் இடத்தில், மண்ணினால் சிவலிங்கத் திருமேனியை உருவாக்கி வழிபடத் துவங்கினாள்.

🎭 பூஜைக்குப் புனிதநீர் வேண்டுமே ! அதற்கு எங்கே போவது ! என்றெண்ணி மைந்தன் முருகனை அழைத்தாள். அன்னையின் பூஜைக்குப் புனிதநீர் வேண்டி, முருகப்பெருமான், உமாமகேசுவரர்களை நினைத்து, ஜவ்வாது மாமலையை நோக்கி, தனது வேலை வீசினார். அதன் குறி செங்கண் நோக்கிச் சென்று பாய்ந்தது. மலையைத் துளைத்தது வீரவேல்!

🎭 முருகப்பெருமான் வீசிய வீரவேலும் விரைந்து சென்று, செல்லும் வழியில் இருந்த ஏழு குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையைத் துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்திச் சொருகிக் கொண்டது. அந்த இடமே மேல்குப்பம் என்று இன்று அழைக்கப்படும் சிற்றூர் ஆகும்.

🎭 மலையைத் துளைத்த வேல், புனிதநீரைப் பெருக்கெடுத்திடச் செய்து, நீர்வீழ்ச்சியாக ஓடச் செய்தது. தெய்வத் திருமகன் உருவாக்கிய அந்த ஆறுதான் சேயாறு.

🎭 தென் கயிலாயமான பர்வதமலையையொட்டிப் பெருகி வடக்கு, வடகிழக்கு நோக்கிப் பாய்ந்து, காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாலாற்றுடன் சங்கமித்து, சதுரங்கப்பட்டினத்தில் கடலோடு சேருகிறது.
( மகரவாகினியான கங்கைநதிக்கு நிகராக புனிதமானது சேயாறு என்று அருணாசல புராணம் கூறுகிறது. *"கங்கை நிகராம் சேயாற்றில் காலைச் சந்திக் கடன்கழித்து மங்கை கனகச் சிவிகையின் மேல்  மறைஓ லம்இட வழி கொண்டாள்'*  என்கிறது அந்தச் செய்யுள். அன்னை பராசக்தி சேயாற்றில் புனித நீராடியதால், அது கங்கை நதிக்கு சமமான பெருமையைக் கொண்டுவிட்டதாம்.)

🅱 *பிரம்ம குமாரர்கள் ஏழுபேர் !* 🅱

🎸 முருகப்பெருமான் அறிந்திருக்கவில்லை, அந்த மலையடிவாரத்தில், பாவவிமோசனம் வேண்டி ஏழு அந்தண குமாரர்கள் தவம் செய்து கொண்டிருந்தனர் என்று !

  அனந்தமாபுரத்தைச் சேர்ந்த அந்த எழுவர், முறையே போதவன், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், சோமன், வாமன் என்பவராவர்.

  முருகப்பெருமானின் வீரவேல், மலையைத் துளைத்துச் சென்றபோது, இவ்வேழு அந்தண குமாரர்களின் சிரங்களையும் கொய்து எறிந்துவிட்டது. சேய் உருவாக்கிய ஆறு,  *"செங்குருதியாறு'* ஆகியது.

🎸 வீரவேலினால் அந்தணகுமாரர்களுக்கு முக்தியும், பாவ விமோசனமும் கிட்டியது. ஆனால் முருகப்பெருமானை பிரம்மஹத்திதோஷம் பற்றிக் கொண்டது.

   காமாட்சியம்மை, ஆற்றுநீர் செங்குருதியாகப் பாய்வதைக் கண்ணுற்று திடுக்கிட்டாள். ஞான திருஷ்டியால் நிகழ்வுகளை அறிந்தாள்.

🎸 பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட, உடனே சேயாற்றின் கரையிலேயே ஏழு சிவலிங்கத் திருமேனிகளை அமைத்து, பூஜித்திடுமாறு முருகப் பெருமானுக்கு உணர்த்தினாள் அன்னை.

🅱 *எழுந்தன ஏழு ஆலயங்கள் :*🅱

🎸 அப்படி முருகப்பெருமான் சேயாற்றின் கரையில் வழிபட்ட திருத்தலங்கள் இன்று *"சப்த கரைகண்டம்'*  என்றழைக்கப்படுகின்றன.

  *காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை* ஆகியவையே அவை.

🅱 *காரி உண்டவர் கறை கண்டவராக !* 🅱

🎸 ஆலகால விஷத்தை உண்ட எம்பெருமான் *"நீலகண்டன்'*  என்று திருநாமங் கொண்டார். *"காரி'* என்ற சொல் கருமையைக் குறிப்பதாகும். கருமையானது, நீலநிற நஞ்சையும் குறிக்கும். நீலகண்டனையே *"காரி உண்டிக் கடவுள்'* என்று பழங்காலத்தில் வழிபட்டுள்ளனர். சங்க காலத்தில் பெருவள்ளலாக விளங்கிய சிற்றரசன் நன்னன்வேண்மான். இவனது மலைநாட்டை *"ஏழிற்குன்றம்'* என்று அழைத்தனர். இவன் ஆண்ட பல்குன்றக் கோட்டத்தில், மலையொன்றின் மீது *"காரியுண்டிக் கடவுள்'*  எனும் சிவாலயமும் இருந்ததாம். ( *"பத்துப்பாட்டில்'* இதுபற்றி குறிப்பு உள்ளது.)

🎸 *"காரி'*  உண்ட கடவுளே பிற்காலத்தில் காரி கண்ட ஈசுவரனாகி காரகண்டம், கரைகண்டம் என்று மருவி கரைகண்டேசுவராகி, ஏழு திருத்தலங்களும் *"சப்த கரைகண்டம்'*  என்றே அழைக்கப்படுகின்றன.

🎸 *"காரி'* என்ற பெயர் நிலவியதை உறுதிப்படுத்திட, அருகிலே காரியாறு என்ற சிற்றாறு ஓடுகிறது. காரியந்தல், காரிப்பட்டு, காரிமங்கலம் என்று பெயர் கொண்ட சிற்றூர்களும் அதன் தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.

🎸 தனயனைப் பணிந்து சேயாறு உருவானபோது, ஏழு அந்தணகுமாரர்கள் பலியான தோஷம், தாயை மட்டும் விட்டுவிடுமா ?

🎸 முருகப் பெருமானை ஏவிய செயல், அன்னையைச் சேர்ந்ததால், அன்னையும் அந்த தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டிவந்தது.

🅱 *ஏழுகைலாயங்கள் :* 🅱

🎸 எனவே, அந்ததோஷம் நீங்கிட, காமாட்சியம்மை, சேயாற்றின் தென்கரையில் ஏழு சிவாலயங்களை உருவாக்கினாள். அவை *சப்தகைலாயங்கள்* என்று அழைக்கப்படுகின்றன.

  அவை முறையே *மண்டைகளத்தூர், கரைபூண்டி, தென் பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம் மற்றும் வாசுதேவம்பட்டி* ஆகும்.

🎸 கயிலையிலிருந்து காஞ்சிக்கும், காஞ்சியிலிருந்து  அண்ணாமலைக்குமான பயணத்தை நிறைவு செய்யும் முகமாக, பவழக்குன்று மலையில் பர்ணசாலை அமைத்து கௌதம முனிவரின் உதவியால் தவம் செய்தார். மீண்டும் ஈசனோடு கலந்து ஏகசொரூபமாக, சிவசக்தி சொரூபமாக கலந்துறைய  அருணாசலத்தை நோக்கி மீண்டும் நடக்கத் தொடங்கினாள். மாபெரும் ஒரு மாற்றத்திற்காக அந்த அசலமான மலை காத்திருந்தது. அருணா என்கிற அம்மை அசலேஸ்வரர் எனும் ஈசனோடு கலக்கும் நிகழ்வை அங்குள்ளோர் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

🎸 சிவசக்தி சொரூபமாக இருந்த பரம்பொருள் இப்போது சக்தியாக பிரிந்து  அசலமான ஈசனை அடையபோவதற்கு முன்பு பூமியில் தர்மத்தை ஸ்தாபிக்கும். அப்படியான முக்கிய காரணத்தை நினைவுபடுத்தவே கௌரீ தேவி  எங்கேயென்று தேவர்கள் கூட்டமாக அருணாசல கிரியின் அடிவாரத்திற்கு வந்திறங்கினர். தம்மைத் துன்புறுத்திய அசுரனின் கொடுங்கோன்மையை  ஒரு முடிவுக்குக் கொண்டுவர சக்தியின் அருள் வேண்டி வந்தனர். தொலைதூரத்தே கௌதம மஹரிஷியோடு பார்வதி அமர்ந்திருப்பதை கண்டனர். மெல்ல நடந்து ஆசிரமத்திற்கு வந்தனர்.

🎸 கௌதம மஹரிஷியையும், பார்வதி தேவியையும் வணங்கினர். - *‘‘தாங்கள் இங்கிருப்பதை அறிந்தே வந்தோம். உங்களால் மட்டுமே அவனை அடக்க  முடியும்’’* என்று கூறினார்கள். ‘‘அவன் பெயரென்ன’’ என்று பார்வதி தேவி கேட்க,  *‘‘மகிஷாசூரன்’’*  என்று பதிலிறுத்தனர்பிரம்மம் பூமிக்கு வரும்போது  தர்மத்தை ஸ்தாபிக்கும். மகிஷாசூரனை வதம் செய்தல் என்பது அகற்றப்பட முடியாத, அடக்கப்பட முடியாத அகங்காரத்தை அழித்தலே ஆகும்தர்மத்தை ஸ்தாபித்தலின் ஓர் அம்சமாகும். பிரம்மமே பூமிக்கு வந்தாலும் அதுவும் பந்தத்தை ஏற்கத்தான் வேண்டும்! ஆனால், இங்கு வதம்  வேண்டியல்லவா தேவர்கள் வந்திருக்கின்றனர். அதனாலென்ன, அப்படி ஒரு தர்மத்தையும் நிலைநாட்டிவிட்டு, பிறகு அருணாசலத்தோடு கலப்போம்  என்று தேவி நினைத்தாள். அன்னை, அந்த அகங்காரத்தையே துர்க்கையாக நின்று அழித்தாள்.

🎸 கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் சோணாசலனான அருணாசலனை வலம் வந்து அமைதியாக அமர்ந்தாள். ஏறிட்டு அசலனாக விளங்கும் ஈசனை கண்டாள். ஈசனான அருணாசலனே எங்கும், எப்போதும், யாவினிலும் இருப்பதை அறிந்தாள். அதுவும் தானும் வேறல்ல என்பதை தனக்குள் தானாகவே உணர்ந்தாள். அன்னியமற்று எங்கும் சுவனும் தானுமாகவே வியாபித்திருப்பதையும் அறிந்தாள். சிவமும் தானும் ஒன்றாகவே இருக்கிறோம், பிரிவதேயில்லை என்ற சுகானுபவத்தில் கரைந்தாள். அருணாசலமே தன் அகமாக மாறிவிட்ட அற்புதத்தில் நெகிழ்ந்தாள். பேரொளியொன்று அசலமான பர்வதத்திற்குள் சென்று ஒடுங்கி, அசலமான ஈசனோடு அருணா என்கிற தேவி கலந்த அந்த வைபவத்தைக் கண்டு அனைவரும் பரவசமுற்றனர். அருணாசலா... அருணாசலா... அருணாசலா... என்று ஓயாது சொல்லியபடி இருந்தனர்.

🎸 இந்த நிகழ்வை எல்லோராலும் அகக்கண்களாலேயே தரிசிக்க முடிந்தது. அருணையிலுள்ள சகல அடியார்களும் சட்டென்று சமாதி நிலையை எய்தினர். மாபெரும் சக்தியொன்று அண்ட பேரண்டமாக விளங்கும் ஈசனோடு ஐக்கியமாகும்போது ஒருகணம் எல்லோரின் மனமும் தானாக உள்முகமாகத் திரும்ப, அகந்தை அறவே அழிந்தது. எந்த முயற்சியுமில்லாது அவர்களுக்கு அது சித்தித்தது. பெருஞ்ஜோதியொன்று பிரகாசமாயிற்று. அகவயமான பார்வையிலிருந்து விடுபட்டவர்கள் மலைமீது பெருஞ்ஜோதி எரிந்து கொண்டிருப்பதை கண்டனர். கௌதம மஹரிஷி கண்களில் நீர் பொங்க தரிசித்தார். பிறகு, சீடர்களிடம் பேசத் தொடங்கினார். ‘‘இந்த நிகழ்வு, யுகம் யுகமாகத் தொடரப் போகிறது. சிவசக்தி சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக சேர்ந்திணைந்த அபூர்வ அனுபூதியை உங்களின் அகப்பார்வையில் கண்டீர்கள் இது இம்மலையின் ரகசியமாகும்.

🎸 இதனைக் குறிக்கும் வகையில் கார்த்திகை தீபத்தன்று மாலை சரியாக 6.00 மணிக்கு அர்த்தநாரீஸ்வர மூர்த்தி எழுந்தருளி காட்சி கொடுப்பது குறிப்பிடத்தக்கது. மகா தீபம் ஏற்றும் வேளையில் மட்டுமே அர்த்தநாரீஸ்வரரைத் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் இவர் சன்னதியை விட்டு வருவதில்லை.

🅱 *அருணகிரிநாதர்:* 🅱

🎸 தமிழ் இலக்கியத்தில் சந்தக்கவிக்கு அடித்தளமிட்டவர் அருணகிரிநாதர் என்றால் அது மிகையாகாது. இவர் 15-ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும், அருணகிரியார் திருவண்ணாமலையைசேர்ந்தவர் என்றாலும் அனைத்து திருத்தலங்களுக்கும் கால்நடையாகச் சென்று திருப்புகழ் பாடி அருளி திருப்புகழ் சித்தர் ஆனார்.

🎸 இவரது தந்தை வெங்கட்டார், தாய் முத்தம்மை. இவர் எப்போது தனது தமக்கையுடன் திருவண்ணாமலைக்கு வந்தார் என்று தகவல் இல்லை.15 - ம் நூற்றாண்டின் மத்தியபகுதி என்று தெரிய வருகிறது. திருவண்ணாமலையில் தனது தமக்கை பராமரிப்பில் செல்லமாக வளர்ந்து வந்தார்.

🎸 தனது இளமை வயதிலேயே தாய், தந்தை இழந்து விட்ட காரணத்தால் தமக்கையே தாயாகவும், தந்தையாகவும் இருந்து திருமணம் செய்துக்கொள்ளாமல் தம்பியை தன் மகனாகவே பாவித்து அன்போடு வளர்த்தார். இருந்த போதும் அருணகிரிநாதருக்கு கெட்ட சகவாசமே மிகுந்து இருந்தது. அவரிடம் இல்லாத கெட்ட சகவாசமில்லை எனலாம். இரவு நேரங்களில் தாசி இல்லம் நாடிச் செல்வதில் மிகுந்த நாட்டமிருந்தது. இரவில் தாசி இல்லம், பகலில் சூது, சீட்டாட்டம் என்று பொழுது கழிந்தது. இதனால் அவரது செல்வம் மெல்ல,மெல்லக் கரைந்தது.

🎸 தாசியின் இல்லமே கதியாக கிடந்த அருணகிரிநாதருக்குக் குஷ்ட நோயும் வந்தது. ,இதனால் முன்பு கவர்ந்த தாசிகள், இப்போது வெறுத்து ஒதுக்கி கதவையும் மூடினார்கள். நோயுடன் காமவேட்கையில் தத்தளித்து மனைவியை நெருங்கிய அருணகிரியை அவரது மனைவியும் வெறுத்து ஒதுக்கினாள். தனது தமைக்கையிடம் தனது வேட்கையைக் கூறி தன்னை தாசி இல்லம் அழைத்துச் செல்ல வேண்டினார். இதனால் வெறுத்துப் போன அவரது தமக்கை தன்னையே பெண்டாளுமாறு கூறினார். தமைக்கையின் இந்த வார்த்தையால் கலக்கமும், நடுக்கமுமடைந்து,மனம் நொந்த அருணகிரிநாதர் தனது வாழ்க்கையை இப்படி வீணடித்தோம், தனது நடத்தையால் குடும்பத்தின் மானமே போனதை எண்ணி நிலையே தடுமாறி வாழ்க்கையின் எல்லையான விரக்தி நிலைக்கு தள்ளப்பட்டார்.

🎸 இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அருணகிரிநாதர் தனது கால் போன போக்கில் சென்றார். வழியில் அவரை ஒரு முதியவர் தடுத்து நிறுத்தி குன்றுதோறும் வாழும் முருக கடவுளின் பெருமைகளைக் கூறி, சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்தையும் அதன் பொருளையும் உபதேசித்தார். அந்த பெரியவர் அண்ணாமலையார் என்றும், முருகக் கடவுள் என்றும் கூறுகின்றனர். முதியவரின் உபதேசத்தை பெற்ற அருணகிரி மனம் தெளிவடைந்தது என்றாலும் சூழ்ந்திருந்த குழப்பம் அவரைச் சாவின் எல்லைக்குத் தள்ளியது.

🎸 நேராக அண்ணாமலையார் கோயில் வல்லாள மகாராஜா கோபுரத்தில் உச்சியை அடைந்து அங்கிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ய முயல்கிறார். கீழே பூமியை நோக்கி வந்த அருணகிரியை திடீரென இரண்டு கரங்கள் தாங்கி நின்று, *“ அருணகிரியே ! நில்! “* என்ற உத்தரவுடன், *“ உனக்கு இங்கு நிறைய பணி காத்திருக்கிறது அந்த பணியினை முடித்து விட்டு எம்மை வந்தடைவாக “* என்று கூறிய வண்ணம் மயில் மேல் அமர்ந்த குமரக்கடவுள் காட்சியளித்தார்.

🎸 பரவச நிலையை அடைந்த அருணகிரியின் நாவில் *சரவணபவ* எனும் ஆறெழுத்து மந்திரத்தை எழுதினார். அத்துடன் யோக மார்க்கங்கள், மெய்ஞானம், சித்தி, கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை அருளி, எம்மைப் பாடுவாயாக! என்று கூறி மறைந்தார். பாடல் புனையும் திறன் தனக்கு இல்லாததை எண்ணித் திகைத்த அருணகிரியை நோக்கிய தமிழ்க் கடவுள் முருகன் *‘’ முத்தைத்தரு பத்தி திருநகை”* என்ற அடியை எடுத்துக் கொடுத்துப் பாடுவாயாக என்று அருளி மறைந்தார். அன்று பிறந்தது தமிழுக்கு சந்தக்கவி என்ற அற்புத நடையிலான பாடல் இலக்கியம்.

🎸 அதன்பிறகு கம்பத்து இளையனார் சந்நிதியை தனது இடமாகக் கொண்ட அருணகிரியார் பெரும்பாலும் கந்தனை நினைந்து தவத்தில் ஆழ்ந்தார். தவம் களையும் வேளையில் அழகிய சந்தப் பாடல்களால் முருகனைப் போற்றிப் பாடினார்.இந்தப் பாடல்களே அருணகிரியின் திருப்புகழாகப் பரிமளித்தது. பரிபூரண யோக நிலையை அடைந்தவர்களுக்கே அருணகிரியின் திருப்புகழ் பாடல்களின் அர்த்தம் புரியும்.

🅱 *முருகப்பெருமான் நேரில் தோன்றுதல்:* 🅱

🎸 அருணகிரியாரின் புகழ் அது முதல் தமிழகம் எங்கும் பரவியது. அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்த விஜயநகர குறுநில மன்னன் பிரபுடதேவராயன், அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் முருகன் காட்சி கிடைக்கும் பாக்கியத்தை பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதுமுதல் அரசனுக்கும் அருணகிரிக்கும் இடையில் அழ்ந்த நட்பு வேர்விட்டது. அப்போது ஆஸ்தான பண்டிதனாக இருந்த தேவி உபாசகர் சம்பந்தாண்டானுக்கு அருணகிரி மீது பொறாமை வளர்ந்தது. மேலும் அருணகிரியின் சீடராக மன்னன் பிரபுட தேவராயன் மாறியதும் எரிகிற நெருப்பில் எண்ணை ஊற்றிய மாதிரி ஆகியது. மன்னன் பிரபுட தேவராயனிடம் சென்று சம்பந்தாண்டான், “ மன்னா..., அருணகிரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. தாசி வீடே கதியென்று கிடந்தவன். அதனால் தன் தமைக்கை, மனைவி, குடும்பத்தார் உறவினர் எல்லோரும் வெறுத்து ஒதுக்கினர். அதன் பின் ஏதோ மாய வேலைகளால் அவனது நோய் மறைந்திருக்கலாம். அதனை மறைத்து தனக்கு முருகன் காட்சி கொடுத்தான், நாக்கில் அட்சரம் எழுதினான் என்று பொய் சொல்லி திரிகிறான். அவனை நம்ப வேண்டாம்என மெய்யைத் திரித்துப் பொய்யைக் கூறினான்.

🎸 மன்னன் அறிவான் எது உண்மையென. பிரபுட தேவராயன் சம்பந்தாண்டானுக்கு அருணகிரியின் பெருமையை உணர்த்தவும், புரிய வைக்கவும் இதுவே சரியான தருணம் என்று தோன்றவே, இருவருக்கும் ஒரு போட்டியை வைத்தார்.யார் தங்கள் யோக,பக்தி பலத்தால் அவரவர் வணங்கும் தெய்வங்களை காட்சி தரச் செய்கின்றனரோ அவரை நான் நம்புகிறேன் என்று கூறினான். இதனை ஏற்று சம்பந்தாண்டான், தேவி பராசக்தியை காட்சி தருமாறு நெஞ்சுருக வேண்டினான். அந்த வேண்டுதலில் செருக்கு இருந்ததை அறிந்தாள் பராசக்தி. இருந்த போதும் பக்தனின் வேண்டுதலைத் தவிர்க்க இயலவில்லை. அதே போன்று அருணகிரி, அண்ணாமலையார் கோயிலின் வடக்கு மண்டல தூணில் முருகனைக் காட்சி தருமாறு நெஞ்சுருக வேண்டினார். சம்பந்தாண்டான் அம்பாளின் பெருமையை புகழ்ந்து பாடலானான். அதே வேளையில் அம்பாள் முருகனை தன் மடியில் இருத்தி, நகரவிடாமல் அணைத்திருந்தாள்.

🎸 இதனை அறிந்த அருணகிரி அம்பாளைப் புகழ்ந்து பாமாலை பாட அதில் அம்பாள் லயித்து இருந்த சமயம் முருகன் நழுவி,தன் பக்தனின் பெருமையினைப் பறைசாற்ற மயில் மீதமர்ந்து வடக்கு மண்டலத் தூணில் காட்சி அளித்தார்.

🎸 இதனால் சம்பந்தாண்டானுக்கு அருணகிரியைப் பழிவாங்க வேண்டும் என்ற குரோத எண்ணம் இன்னும் மேலோங்கி நின்றது. இந்தச் சமயத்தில் மன்னனுக்கு கண் நோய் ஏற்பட்டது. இதுவே சரியான சமயம் என, மற்றும் சிலரையும் கூட்டு சேர்த்து *‘கண் நோய்க்கு’* பாரி ஜாத மலர் கொணர்ந்தால் நோய் தீரும் எனவும், அதனை முடிக்க அருணகிரியால் முடியும் என வேண்ட, பாரிஜாத மலரை கொண்டு வருவதாக அருணகிரியும் வாக்களித்தார். அண்ணாமலையார் கோயிலின் நான்காம் பிரகாரத்தின் கீழ் திசையில் காணப்ப்டும் கோபுரத்தின் மேல் நிலையின் உட்பகுதியில் தனது கூடு விட்டு கூடு மாறும் கலையின் மூலம் தனது உடலை பத்திரமாக ஒரு மூலையில் கிடத்தி அங்கு இறந்து கிடந்த பச்சைக்கிளியின் உடலில் தனது உயிரைச் செலுத்திக் ,கிளி வடிவம் தாங்கி தேவலோகம் சென்று பாரிஜாத மலரை எடுத்து வருவதற்குள் சம்பந்தாண்டானும், சூழ்ச்சிக்காரர்களும் அருணகிரியின் உடலை எரித்து விட்டனர்.

🎸 பாரிஜாத மலருடன் வந்த அருணகிரி தனது உடலை காணாமல் திகைத்து, நடந்த சம்பவத்தை அறிந்து கிளி வடிவாகவே கோபுரத்தில் தனக்கு விதிக்கப்பட்ட காலம் வரை வாழ்ந்தார். இதனால் அந்த கோபுரம் கிளி கோபுரம் என்று தான் அழைக்கப்படுகிறது. கிளி வடிவில் இவர் பாடியது *கந்தர் அநுபூதி* நூலாகும்.

🅱 *இறைவியின் ஊடலும்; இறைவனின் சமாளிப்பும் !* 🅱

திருவண்ணாமலை இறைவனின் ஓர் அற்புதமான திருத்தலம்...

மலையே மகாலிங்கமாகத் திகழும் திருவண்ணாமலையில் கோயில் கொண்டிருக்கும் இறைவன் தம் பக்தர்களுக்காக எண்ணற்ற அருளாடல்களைப் புரிந்திருக்கிறார். அதன் காரணமாக அவர் தான் எத்தகைய சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி இருக்கிறது ?

👉🏽 இங்கே இறைவனுக்கு ஏற்பட்ட ஒரு சங்கடத்தைப் பார்க்கலாமே...

பிருங்கி முனிவருக்காக இறைவன் எதிர்கொண்ட அந்த சங்கடம்...

இந்தப் பிருங்கி முனிவர் ஓர் தீவிரமான சிவ பக்தர். இவர் சுவாமியைத் தான் வணங்குவார். அம்பாளை வணங்க மாட்டார். அந்த அளவு சிவபெருமானிடம் பக்தி கொண்டவர்.

சுவாமியும் அம்பாளும் இணைந்து சங்கமித்திருந்தாலும் *'போனால் போகிறது, இரண்டு பேரையும் சேர்த்து வணங்கி விடுவோமே!'* என்று நினைக்க மாட்டார். வண்டு உருவெடுத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையே புகுந்து, சுவாமியை மட்டுமே வலம் வந்து வணங்கிவிட்டுப் போய்விடுவார். இப்படி ஒரு வைராக்கியம் அவருக்கு.

தன்னை ஒதுக்கிவிட்டு அப்படி சுவாமியை மட்டும் வணங்கும் அந்த பக்தர் மீது அம்பாளுக்குக் கோபம். இருந்தாலும் ஈசன் சாதகமாக இருக்கிறாரே..அதனால் அம்பாள் *'கண்டும் காணாதது'* போலிருந்து விடுவார்.

பிருங்கி முனிவரின் செயலால் சினம் கொண்ட பார்வதிதேவி, இறைவனின் இடப் பாகம் பெற விரும்பி தவம் மேற்கொண்ட திருத்தலம் திருவண்ணாமலை.

இங்கு தான், பிருங்கி முனிவரின் காரணமாக இறைவன் ஒரு தர்மசங்கடமான நிலையைச் சந்திக்க நேரிட்டது.

தை மாதம் இரண்டாம் நாள் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருகிறார்கள். பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு திரும்புகையில் இறைவன் தேவியிடம், *''தேவி, நம்முடைய பக்தர் ஒருவருக்கும் அருள்புரிந்துவிட்டு வரலாமே''* என்கிறார்.

🎠 *"யார் அந்த பக்தர்...?"* - அம்பாள் கேட்கிறாள்!

*"பிருங்கி முனிவர்!"*

*"... அவனா? அவன் நம் பக்தன் இல்லையே! உங்கள் பக்தன் தானே! என்னைக் கண்டாலே அவனுக்கு ஆகாதே! நீங்களே உங்கள் அருமை பக்தனுக்குப் போய் அருள்புரிந்து விட்டு வாருங்கள்!"* என்று ஊடலுடன் கோபித்துக்கொண்டு ஆலயத்துக்குள் பிரவேசித்து தாழிட்டுக் கொண்டாள் அம்பாள்.

🎠 சுவாமி அலங்கார பூஷிதராக தன் அருமை பக்தன் பிருங்கி முனிவர் இருக்குமிடம் சென்று அருள் புரிந்துவிட்டு வந்தார்.

🎠 அம்பாளின் கோபத்துக்கு ஆளான நிலையில், பக்தருக்கு அருள்புரியச் சென்ற சிவபெருமானுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டது. ஒரு வேடன் ஆபரணங்களுடன் வந்த சிவபெருமானை வழிமறித்து ஆபரணங்களை எல்லாம் பறித்துக் கொண்டான். ஆக, தன் ஆபரணங்களைப் பறிகொடுத்து விட்டு ஆலயத்துக்கு வந்தார். போதாதா வினைக்கு ? ஏற்கெனவே அம்பாளுக்குக் கோபம். ஆபரணத்தையும் தொலைத்துவிட்டு *'சிவனே' என்று அந்தச் சிவனார் வந்து நின்றதும் -"* எல்லாம் உங்கள் அருமை பக்தனைத் தேடிப் போனதால் வந்த கஷ்டம்தானே... அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. எப்படியாவது தொலைந்த ஆபரணத்துக்கு ஈடுகட்டிக் கொண்டு வாருங்கள் ! அப்போது தான் உங்களுக்குக் கதவைத் திறப்பேன்!" என்று கூறிவிட்டாள்.

🎠 வேறு வழியில்லாமல் சுவாமி கோயிலை விட்டுப் புறப்பட்டு கலசப்பாக்கம் என்ற கிராமத்துப் பக்கம் யோசனையோடு வந்தாராம். சுவாமியின் நிலையறிந்து அந்த பக்தர்கள் ஆயிரம் பொன் (இப்போது ரூபாய்) எடுத்துக் கொண்டு வந்து அம்பாள் முன் ஈடுகட்டி சுவாமியை அம்பாளோடு சேர்த்து வைத்தார்களாம். என்ன ஒரு சுவையான சம்பவம் பாருங்கள் !

🎠 அம்பாள் ஒருவழியாகச் சமாதானம் ஆவதற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வேறு ரொம்பச் சிரமப்பட்டு சிபாரிசு செய்ய வேண்டியதாகி விட்டதாம்...!

🎠 தனக்காக திருவாரூரில் சிவபெருமான் பரவை நாச்சியாரின் ஊடலைத் தணிக்கச் சென்றார் என்பதால், அந்த நன்றிக் கடனுக்காக இங்கே திருவண்ணாமலையில் சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானுக்காக பார்வதி தேவியிடம் தூது சென்றார் போலும்!

🎠 இந்த நிகழ்வினை நினைவுபடுத்த தான் வருடம் தோறும் செய்யாற்றங் கரையில் எழுந்தருளி உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரியில் பங்கு கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.

🅱 *பிரமாண்டமான மணிகள் :*🅱

🍄 திருவண்ணாமலை ஆலயத்தில் மிகப் பிரமாண்டமான 3 மணிகள் உள்ளன. அதில் 2 மணிகள் அண்ணாமலையார் சன்னதி மண்டபத்தில் உள்ளது. மற்றொரு மணி உண்ணாமுலை அம்மன் சன்னதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த மூன்று மணிகளையும் அடிக்கும் போது அதன் சத்தம் நீண்ட தொலைவுக்கு கேட்குமாம். இந்த மூன்று மணிகளும் நூற்றாண்டை கடந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

🅱 *அம்பாளை பாதுகாக்கும் நந்தி :*🅱

🦋 ஆலயங்களில் அம்பாள் சன்னதி முன்பு சிம்மம்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் திருவண்ணாமலை ஆலயத்தில் உண்ணாமுலை அம்மன் சன்னதியில் நந்தி உள்ளது. அம்பாளுக்குரிய சிம்மம் அங்கு இல்லை. ஈசனிடம் கோபித்துக் கொண்டு பூலோகத்துக்கு வந்த பார்வதி இத்தலத்தில் தவம் இருந்தாள். அவளுக்கு பாதுகாப்பாக நந்தியும் வந்து விட்டார். இதை பிரதிபலிக்கவே உண்ணாமுலை அம்மன் சன்னதி முன்பு நந்தி உள்ளது.

🅱 *ஆலய கட்டமைப்பு அதிசயங்கள்:*🅱

🔥 அண்ணா மலையார் ஆலயம் எத்தனையோ ஆச்சரியங் களையும், அதிசயங்களையும் கொண்டது. இந்த ஆலயம் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய ஆலயங்களில் தனித்துவம் கொண்டதாக இந்த ஆலயம் திகழ்கிறது.

🔥 இந்த ஆலயத்துக்கு 7 பரிகாரங்கள் உள்ளன. 9 பெரிய கோபுரங்கள் உள்ளன. 40-க்கும் மேற்பட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இதில் 4 விநாயகர் சன்னதிகளும், 4 முருகர் சன்னதிகளும் அடங்கும்.

சிலைகள் என்று கணக்கிட்டால் ஆலயம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. 2-ம் பிரகாரத்தில் 63 நாயன்மார்களுக்கு கற்சிலைகளும், வெண்கல சிலைகளும் உள்ளன. 2-ம் பிரகாரத்தில் திரும்பும் திசையெல்லாம் லிங்கங்களை காணலாம்.

🔥 கிழக்குப் பக்கத்தில் வானளாவ நின்று காட்சியளிக்கும் கோபுரம்- ராஜகோபுரம் எனப்படுகிறது. இது 217 அடி உயரமுடையது. பதினொரு நிலைகளை - மாடங்களையுடையது. மாநகருக்குச் சிறப்பு கோவில் கோபுரம்.

🔥 மேற்குக் கோபுரம் பேய்க் கோபுரம் என அழைக்கப்படுகிறது. மேலக் கோபுரம் என்பது மேக்கோபுரமாகி அது நாளடைவில் பேய்க் கோபுரமாக மருவியது.

🔥 தெற்குக் கோபுரம் திருமஞ்சன கோபுரம் என்ற பெயரைத் தாங்கி மங்கலமாக நிற்கிறது.

🔥 வடக்குக் கோபுரம்- அம்மணி அம்மன் கோபுரம் அம்மணி அம்மாள்- இவர் திருவண்ணாமலைக்கு மேற்கில் உள்ள செங்கம் வட்டம் சென்ன சமுத்திரத்தை சேர்ந்த இவர் வீடு தோறும் சென்று பொருள் ஈட்டி வடக்குக் கோபுரத்தைக் கட்டி முடித்தார். அதனால் இவ்வம்மையார் பெயரால் அம்மணி அம்மன் கோபுரம் என்று விளங்குகிறது.

🔥 வடக்குத் தெற்காக உள்ள கோவில் மதில் சுவரின் நீளம் 700 அடிகள். தென் மதில் 1479 அடி நீளம். வடக்கு மதில் 1590 அடி நீளம்.

தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய திசைகளில் இரண்டு இரண்டு கோபுரங்களாக உள்ளன. ராஜ கோபுரம் மட்டும் ஒற்றையாய் அமைந்துள்ளது.

🅱 *360 தீர்த்தங்கள் :*🅱

இத்தலத்தில் அம்பிகை, கணேசர், முருகன், வயிரவர், பிரம்மன், திருமால், இலக்குமி, கலைமகள், சூரியன், சந்திரன், சப்த கன்னிகைகள், அஷ்ட வசுக்கள் முதலியோர் அமைந்தனவும், மூழ்கிப்பேறு பெற்றனவுமாகிய அவரவர் பெயரால் வழங்கப்பெறும் முன்னூற்று அறுபது புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் மிகச் சிறந்தவை சிவகங்கையும், பிரம்ம தீர்த்தமும், சக்கர தீர்த்தமும், இந்திர தீர்த்தமும் அக்கினி தீர்த்தமும் ஆகும். இந்திர தீர்த்தத்தில் தெப்போற்சவம் நடைபெறும்.

🅱 *அபிதகுசாம்பாள் சன்னதி :*🅱

இத்திருக்கோவிலில் சதுர் புஜத்துடன் வீற்றிருக்கும் அபிதகு சாம்பாள் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள். இந்த அம்பிகை தெற்கு முகமாக வீற்றிருந்து சாந்தமாக தினம் ஒரு விதமான முகத் தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பகல் வேலையில் சிறப்பு பூஜையும், அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் மகளிரால் செய்யப்படுகிறது.

வெள்ளிக் கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் சிறப்பு வழிபாடும், கூட்டுப் பிரார்த்தனையும், கோ பூஜையும் வெகு விமரிசையாக நடைபெற்று வரப்படுகிறது.

அவ்வப்போது அம்பாளுக்கு பூச்சொரிதல், சந்தனகாப்பு, 108 பால்குட அபிஷேகம், நிறை பணி காட்சி போன்ற வைபவங்கள் பக்தகோடிகளால் செய்து வரப்பட்டு அம்மனின் பரிபூர்ண அருளை பெற்றுவருவதாக நம்பப்படுகிறது.

காஞ்சி ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகள் 1967-ல் இத்தலத்துக்கு வருகை புரிந்து ஸ்ரீ சக்கரத்தினை அபீதகு சாம்பாள் சன்னதியில் பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

வியாபாரத்திலும், தொழிலிலும் சிறந்த லாபங்களை பெற்று வளமடைய அதிர்ஷ்ட தேவியாக இத் திருத்தலத்தில் உள்ள அம்பாள் விளக்குகிறாள்.

இந்த அம்பாளை மனம் உருகி வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் மேம்படவும், குடும்பத்தில் அதிர்ஷ்டம், ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம் முதலிய னவற்றை பெறலாம்.

🅱 *எட்டுக்கை கால பைரவர் :*🅱

🌺 திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக் கரையில் கால பைரவர் சந்நிதி இருக்கிறது. இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் சுமார் 6 அடி உயரத் துக்கு வடித்திருக்கின்றனர். எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார். தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது.

🌺 திருஷ்டி, பயம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். தேய்பிறை அஷ்டமி நாளிலும் ஞாயிறு ராகு காலத்திலும் இவரை வழிபடுவது சிறப்பு.

இந்தியாவில் உள்ள கால பைரவர் சிலைகளில் இந்த சிலையே உயரமானது.

🅱 *அருணாச்சலேஸ்வரர் கோயில் கட்டமைப்பு :*🅱

🌼 திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இந்த கட்டமைப்பானது உலகளவில் போற்றும்படி அமைந்துள்ளது. கடந்த 1000 ஆண்டு காலமாக நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் இக்கோயிலை மிக சிறந்த ஸ்தானத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்த கோயிலை பற்றி தமிழ் இலக்கணத்தில் முன்னணி கவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ள காவியங்கள் இன்றும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது.

🌼 மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாரை பற்றி ஒரு தமிழ் மகாகவியான அருணகிரிநாதர் அவருடைய படைப்பில் சிறப்பாக எழுதியுள்ளார். *‘ திருப்புகழ் ‘* என்ற மகா கவிதை இங்கு தான் எழுதி அற்பணிக்கப்பட்டது.

🌼 மற்றொரு தமிழ் கவிஞர் மகாகவி முத்துசாமி தீட்சிதர் இங்கு தான் அவருடைய படைப்பான கீர்த்தி அருணாச்சலம் என்ற கவிதையை எழுதி வெளியிட்டார். இக்கோயிலில் இன்றைய காலகட்டத்தில் மொத்தமாக ஐந்து பிரகாரங்கள் உள்ளன

🌼 இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அருணாச்சலரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.

🌼 ஐந்தாவது பிரகாரத்தில் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவைகள் *திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம், மற்றும் ராஜா கோபுரம்.*

🌼 ராஜகோபுரம் 217 அடி உயரம் மற்றும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாகும்.

🌼 விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியுடன் கட்டப்பட்ட இக்கோபுரம் தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகும். இத்துடன் ஐந்தாவது பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் அத்துடன் சேர்ந்த சிவகங்கா தெப்பகுளம் இவை யாவும் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பாடும். குறிப்பாக இங்கு இருக்கும் ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் சிறந்த கைவினைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

🌼 இம்மண்டபம் திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் நாள் அன்று திருமஞ்சனம் நடைபெறுவதற்காக உபயோகிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அருணாசலேஸ்வரரை சேவிக்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள். இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது. இங்கு சிவ லிங்கம் உள்ளது. பாதாளலிங்கம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ஸ்ரீ ரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார்.

🌼 இந்த பிரகாரத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி. இந்த சிறப்பான சன்னதியை மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டினார். இங்கே நான்கு அறைகள் உள்ளன. பிரார்த்தனை செய்வதற்காக முன்றாவது அறை பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காவது அறையில் முருக கடவுளின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.முதலாவது அறையில் பல அரிய வேலைபாடுகள் நிறைந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் இரண்டாவது அறைக்கு செல்ல முடியும். மேலும் சிவாகங்கா, விநாயகர் சன்னதி, கம்பாட்டு இளையநார் சன்னதிக்கு பின்புறமும் ஆயிரம்கால் மண்டபம் முன்புறமும் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விமானம் மிகவும் சிறப்பாக பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

🦋 இங்குள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அருணகிரிநாதர் நின்றபடி முருக பெருமானை பிராத்தனை செய்கிறார். இந்த சன்னிதியை கோபுரதில்லையனர் சன்னதி என்று அழைக்கப்படுகிறது. இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சன சன்னதியாகும். இச்சன்னதி தெற்குபுரத்திலிருந்து பல்லால மகாராஜா கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது.

🌼 இங்கு ஒரு கல்யாண மண்டபம் கல்யாணம் நடத்த வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சன்னதியில் லிங்கம், நந்தி, மற்றும் தேவியின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

🌼 பல்லாலா மகாராஜா கோபுரம் மன்னர் பல்லாலாவால் கட்டப்பட்டது. அதனால் தான் பல்லாலா மன்னர் இறந்த பின்னர் சிவனடியாரே இறுதி சடங்குகள் செய்தார் என புராணம் கூறுகிறது. இம்மன்னருக்கு வாரிசு இல்லை என்றதால் அருணாச்சலேஸ்வரரே பல்லாலாவின் மகனாக உருவெடுத்து கடமைகளை செய்தார்.கோயிலின் நாலாவது பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. பல்லாலா கோபுரத்தின் கிழக்குப்புறத்தில் மன்னர் பல்லாலாவின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

🌼 மூன்றாவது பிரகாரத்தில் 12ம் நூற்றாண்டு காலத்து லிங்கம், சிலைகள், நிறுவப்பட்டுள்ளது. இத்துடன் கோபுர நுழைவாயிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு புறத்தில் கொடிகம்பமும் வடக்கு புறத்தில் உண்ணாமலை அம்மன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிபலிக்கும் அணைத்து உருவங்களும் மற்ற தெய்வங்களும் இருக்கிறது. இந்த பிரகாரம் தான் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.

🅱 *திருவெம்பாவை ஒலித்த ஊர்:* 🅱

🍁 மதுரை திருவாதவூரில் அவதரித்த மாணிக்கவாசகர், அண்ணாமலையாரை வணங்க வருமாறு அழைத்த பாடல்களே மார்கழி மாதத்தில் பாடப்படும் திருவெம்பாவை ஆகும். 20 பாடல்கள் கொண்ட இந்த பாவை பாடப்பாட தித்திக்கும். மார்கழியில் வீட்டுக்கு வீடு பாடும் இந்தப் பாடல் அண்ணாமலையாரைச் சிறப்பிக்கின்றன. குறிப்பாக அண்ணாமலையார் அடிக்கமலம் சென்றிறைஞ்சும் என்ற பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத்தக்கது.

Ⓜ *கார்த்திகையன்று தீபமேற்றும் பழக்கம் வந்தது எப்படி ?*Ⓜ

🌷 சிவன் மீது தீவிர பக்திகொண்ட பக்தர் ஒருவர் கணம்புல் என்ற ஒருவகைப் புல்லை அறுத்து, அதை விற்றுக் கிடைத்த பணத்தில் திருவிளக்கேற்றி வந்தார். புல் விற்பனையாகாத சமயங்களில், அந்தப் புல்லையே திரிபோல் திரித்து விளக்கேற்றினார். ஜாமகால பூஜை வரை கோயில்களில் விளக்கு எரிய வேண்டும். ஆனால், ஒரு சமயம் கணம்புல் சீக்கிரம் அணைய இருந்தது. இதனால் தன்னுடைய தலைமுடியையே திரியாக்கி விளக்காக எரிக்க முயன்றார். தன் பக்தனை மேலும் சோதிக்க விரும்பாத சிவபெருமான், அவருக்கு காட்சியளித்து கைலாய பதவி வழங்கினார். அந்தப் பக்தருக்கு கணம்புல்லர் என்ற பெயர் ஏற்பட்டது. நாயன்மார்கள் வரிசையில் அவர் இடம் பெற்றுள்ளார். கோயில்களில் தீபமேற்றுவதற்கு எக்காலத்திலும் முக்கியத்துவம் தரப்பட்டது. அதற்காக, ஒரு விழாவே உருவாக்கப்பட்டது.

🅱 *அரோஹரா - விளக்கம்:*🅱

💐 ஒருவர் இன்னொருவருக்கு பணத்தைக் கடனாகக் கொடுத்து அது திரும்பி வரவில்லை என்றால் உன் பணம் அரோஹரா தான் என்று விளையாட்டாக சொல்வது வழக்கம்.

🌹 அரோஹரா என்ற சொல்லுக்கு போய்விட்டது என்று பொருள். *ஹர ஹர* என்ற சொல் தமிழில் அரோகரா என திரிந்தது. சிவ நாமங்களில் அர என்ற சொல் உயர்ந்தது. அரஹர என்றால் பாவங்கள் போய்விட்டது என்று பொருள் கொள்ள வேண்டும். இதை இடைவிடாது உச்சரித்தால் நம் பாவங்கள் யாவும் ஒழிந்து விடும். அதனால் தான் அண்ணாமலையில் அரோஹரா என்ற சொல் வேத மந்திரமாக ஒலிக்கிறது.

🅱 *குகை நமசிவாயர்:*🅱

🌻 அண்ணாமலையில் குகைகள் அநேகம். அதில் குடியிருந்து தவம் செய்த பல மகான்களில் ஒருவரே குகை நமசிவாயர். அவர் பெருமை அறியாத அவ்வூர் மக்கள் அவருக்கு இழைத்த துயரங்கள் அதிகம்!
🌻 அவமானப்படுத்தும் ஆர்வத்தில் அவருடன் மோதியவர் அநேகம்!

🌻 அத்தனையும் கடந்து அனலாக அமர்ந்தவர் குகை நமசிவாயர்.

🌻அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளில் இருந்து சம்பவம் ஒன்று சொல்வார்கள். ஆடு வளர்க்கும் இடைக்குலத்தார் ஒருவரது சினையாடு இறந்துவிட்டது. அதன் வயிற்றில் இரண்டு குட்டிகள் இருந்தன.

🌻 குட்டிகளைப் பிரசவிக்கு முன் சினையாடு இறந்துவிட்டதால், இடையருக்குப் பெருநஷ்டம். எனவே, யாராவது அதன் மாமிசம் விரும்பி வாங்குவாரா என்று விலை பேச முயன்றார்.

🌻 அந்த ஊர் மக்களில் வம்பன் ஒருவன், குகை நமசிவாயரைக் கேவலப்படுத்த நினைத் தான்.

🌻 மலைமேல் உள்ள சாமியார் மாமிசப் பிரியன். ஆட்டை அவனுக்கு நல்ல விலைக்கு விற்கலாம் என்றான்.

🌻ஆடு மேய்ப்பவரும் அறியாமையுடன் குகை நமசிவாயரிடம் ஆட்டை விற்க வந்தான். வந்தவனது அறியாமையை உணர்ந்த நமசிவாயர், நாளை வந்து ஆட்டின் விலையை வாங்கிக் கொண்டு போ ! என்று அனுப்பினார்.

🌻 அண்ணாமலையார் ஆக்ஞை இல்லாமல் இறந்த ஆடு தம்மிடம் கொண்டு வரப்படவில்லை என்று உணர்ந்த குகை நமசிவாயர், கருணைக் கடலாகிய அண்ணாமலையாரை நினைத்து வெண்பா பாடினார்.

🌻 விபூதியை இட்டார். துள்ளி எழுந்தது தாய் ஆடு. குட்டிகளை ஈன்றது. அதைத் தடவிக் கொடுத்து இலைதழைகளை உணவாக இட்டார் நமசிவாயர்.

🌻 மறுநாள் ஆட்டின் விலை வாங்க வந்த இடையர் ஆனந்தக் கண்ணீர் விட்டார். குட்டிகளைத் தோள்மேல் சுமந்துகொண்டு தாயாட்டுக்குத் தழைகள் போட்டபடி ஊருக்குக் கூட்டி வந்தார்.

🌻 ஊரே அதிசயம் உற்றது. ஆனால், இடையரைச் சுவாமிகளிடம் ஏவிவிட்ட வம்பனுக்கு இது வருத்தம் அளித்தது. சுவாமிகளை மட்டம்தட்ட அடுத்து ஒரு திட்டம் போட்டான். தனக்கிணையான வம்பர் ஏழெட்டு பேரைத் திரட்டிக்கொண்டு ஒரு நாடகம் நடத்தினான். ஆரோக்கியமான வாலிபன் ஒருவனை இறந்த மாதிரி பாடையில் படுக்க வைத்தான். சுவாமிகள் முன்வைத்து அவன் இறந்த மாதிரி அழுது நடித்தான். ஆட்டை எழுப்பிய மாதிரி இவனையும் எழுப்பித் தரவேண்டும் என்று வேண்டினான். அவ்வளவும் நாடகம். அவனைச் சுவாமிகள் எழுப்பியதும், அவன் சாகவே இல்லை என்பதைச் சொல்லி சுவாமிகளைக் கேவலப்படுத்த நினைத்தான்.

🌻 பச்சை ஓலையில் படுத்திருந்த இளைஞனைப் பார்த்த குகை நமசிவாயர் அனைத்தையும் உணர்ந்தார். அலட்சியமாக, போனவன் போனவன்தான்... யார் இவனை எழுப்ப முடியும் ? என்று கைகளைத் தட்டிவிட்டு நகர்ந்துவிட்டார். ஹே! என்று அவரைக் கேலி செய்துவிட்டு எழுந்திரு... எழுந்திரு... இவன் சாகவே இல்லை!என்று கூத்தாடினான் வம்பன். அந்தோ... படுத்தவன் படுத்தவன்தான்... எழுந்திருக்கவே இல்லை. சுவாமிகள் வாக்கின்படி போயே விட்டான்!

🌻 இப்படிப் பலர் குகை நமசிவாயர் மனம் நோக நடந்தபோதும் அண்ணாமலையை விட்டு நீங்க அவருக்கு மனம் வரவில்லை.

🌻 ஒரு நாள் சீண்டல் அதிகமாகவே அந்த ஊர் மீது கோபம் வந்து, பாவிகள் வாழும் ஊர். கொலை செய்தாலும் கேள்வி கேட்க ஆள் இல்லாத கொடுமையான ஊர். வலிமைமிக்க இளைஞர்கள் கூட அழுது புலம்பும் ஊர். பாதகர் வாழும் ஊர் என்று திட்டித் திட்டிப் பாடிவிட்டு அழியும் ஊர் அண்ணாமலை என்று பாட அடியெடுத்தார் குகை நமசிவாயர்.

🌷 சிவபெருமானோ குறுக்கிட்டு, அடேய்... நாம் இவ்வூரில் இருக்கிறோம்... பார்த்துப் பாடு ! என்று குரல் கொடுத்ததும், உருகிப் போய் மனம் கசிந்து பாட்டை மாற்றி அழியா ஊர் அண்ணாமலை என்று பாடினார்.

*கோளர் இருக்குமூர், கொன்றாலும் கேளா ஊர்*
*காளை யரே நின்று கதறும் ஊர் நாளும்*
*பழியே சுமக்கும் ஊர். பாதகரே வாழும் ஊர்*
*அழியா ஊர் அண்ணா மலை..*

🅱 *எட்டு திசை காவல் தெய்வங்கள்:*🅱

🦋திருவண்ணாமலையை கிரிவலம் வரும் போது நாம் எட்டு லிங்கங்களை வழிபடலாம். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைகளுக்கும் காவல் தெய்வங்களாகவும், அதிபதியாகவும், நாயகர்களாகவும் திகழ்கின்றனர். இந்திரலிங்கம் கிழக்கு திசை காவல் தெய்வம், அக்கினி லிங்கம் தென்கிழக்கு திசைக்கு அதிபதி, எமலிங்கம் தென்திசைக்கு அதிபதி, நிருதிலிங்கம் தென்மேற்குத் திசைக் காவல் தெய்வம், வருணலிங்கம் மேற்கு திசைக்கு அதிபதி, வாயு லிங்கம் வடமேற்கு திசைக்கான காவல் தெய்வம், குபேரலிங்கம் வடக்குத்திசை நாயகன், ஈசான்ய லிங்கம் வடகிழக்கு திசைகளின் தெய்வமாகும்.

🅱 *தல வரலாறு:*🅱

படைக்கும் பிரம்மாவும், காக்கும் விஷ்ணுவும் யார் உயர்ந்தவர் என்று சண்டையிட்டுக் கொண்டனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் இருவரையும் அழைத்து தனது அடியையோ அல்லது முடியையோ காண்பவரே சிறந்தவர் எனக் கூறி ஜோதியாக மாறி ஓங்கி உயர்ந்து நின்றார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து அடியைக் காண முயற்சி செய்தார். பிரம்மா அன்னப் பறவையாக மாறி முடியைக் காண பறந்தார். இருவராலும் அடியையும் முடியையும் காண இயலவில்லை.

பிரம்மா ஒரு தாழம்பூவை அழைத்து தான் முடியைக் கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூறச் சொன்னார். அதுவும் அப்படியே செய்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவுக்கென்று இந்த உலகத்தில் தனியே கோவில் வைக்கக்கூடாது என்றும், தாழம்பூவை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் சபித்தார்.

சிவபெருமான் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஜோதியாக காட்சியளித்த இடமே திருவண்ணாமலை ஆகும். பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் சிவலிங்கமாக காட்சியளித்த இடத்தில் தான் தற்போது அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.

அண்ணா என்றால் *'நெருங்கவே முடியாது'* என்று அர்த்தம். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்கமுடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்தது. அத்துடன் மற்றொரு வரலாறும் இத்தலத்திற்கு உண்டு.

பிருங்கி முனிவர் தியை வணங்காமல் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். அவருக்கு, சிவமும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன் அம்பிகையை பிரிவது போல ஒரு லீலை நிகழ்த்தினார். அவள் இத்தலத்தில் அவருடன் மீண்டும் இணைய தவமிருந்தாள்.

அவளுக்கு காட்சி தந்த சிவன், தனது இடது பாகத்தில் ஏற்று, அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். பிருங்கி உண்மையை உணர்ந்தார். இந்நிகழ்வு ஒரு சிவராத்திரி நாளில் நிகழ்ந்தது. இவ்வாறு சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் இது.

🅱 *சிறப்பம்சம்:*🅱

Ⓜ *அதிசயத்தின் அடிப்படையில்:*

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

லிங்கமே மலையாக அமைந்த மலை தென்னிந்தியாவலேயே 2 வது உயரமான கோபுரம்(217 அடி) கொண்ட அற்புத அழகு கொண்ட தலம்.


இந்த மலையை கீழ் திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். இது ஏகத்தை குறிக்கும்.

மலை சுற்றும் வழியில் இரண்டாக தெரியும்.இது அர்த்தநாரீசுவரரை குறிக்கும்.
மலையின் பின்னால் மேற்கு திசையில் பார்த்தால் மூன்றாக தெரியும். இது மும்மூர்த்திகளை நினைவு படுத்தும்.

மலை சுற்றி முடிக்கும்போது ஐந்து முகங்கள் காணப்படும். அது சிவபெருமானின் திருமுகங்களை குறிக்கும்.

உலகிலுள்ள சிவ தலங்களில் 68 மிக சிறப்புற்று விளங்குகின்றன. இவற்றுள் உத்தமோத்தம தலங்கள் நான்கு. அவை
*திருவாரூரில் பிறக்க முக்தி*
*சிதம்பரத்தில் இருக்க முக்தி*
*காசியில் இறக்க முக்தி*
*திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி*

குருநாமசிவாயர், குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில் வாழ்ந்த அருளாளர்கள்.

நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ், சம்ஸ்கிருதம், கன்னட மொழிகளில் உள்ளன. (கல்வெட்டுக்களின் விவரத்தை ஆலயத்தலவரலாற்று நூலில் விரிவாகக் காணலாம்.)

அமரர்கள் அண்ணாமலையானை ஏற்றி வழிபட்ட நாள் மாசி சிவராத்திரியாகும். அதுவே லிங்கோத்பவ காலம். அண்ணாமலையான் ஜோதி தம்பமாக எழுந்த நாள் ஆருத்ர தரிசனமாக கொண்டாடப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கும் போது சுவாமி அவ்வாசல் வழியாக வெளியே வருவது வழக்கம். ஆனால், சிவத்தலமான இங்கு ஜோதி ரூபத்தில் பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். சிவன் சன்னதிக்கு பின்புறம் பாமா, ருக்மணியுடன் வேணுகோபாலர் சன்னதிஇருக்கிறது. இவர் அருகில் கருடாழ்வார், ஆஞ்சநேயர் இருக்கின்றனர்.



👉🏽 *திருவண்ணாமலையைப் பற்றி எழுதினால் இப்பிறவி போதாது...*

No comments:

Post a Comment